சாரா 26

Loading

‘வைரவரின் வழக்கை எந்த பக்கம் கொண்டு செல்வது?’ என்று தீவிரமாக யோசித்தபடி அமர்ந்திருந்தான் சாரா. அவனது யோசனையை தடை செய்ய வந்தது அந்த அழைப்பு.

எடுத்து காதில் வைத்ததுமே இடி தான் விழுந்தது. வைரவருக்கு ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது.

விசயத்தை கேட்ட சாராவிற்கு வேறு எதுவுமே ஓடவில்லை. பதறியடித்து கீழே ஓடி வந்தவன், காசியிடமிருந்து சாவியை பறித்தான்.

“என்னாச்சு?” என்று அவன் கேட்டதற்கு, “அப்பா.. அப்பா இறந்துட்டாங்க” என்றான்.

“எப்போ?” என்று காசி கேட்க, “இப்ப தான் அந்த கான்ஸ்டபிள் சொன்னான். நீ சிவாவுக்கு இன்ஃபார்ம் பண்ணு” என்றவன் காரில் ஏறிக் கிளம்பி விட்டான்.

சிவாவிற்கு அழைத்து விசயத்தை சொல்லியபடி, காசியும் ஏகாம்பரமும் ராகவியுடன் மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.

அங்கு, வாசலில் காவல்துறையினரை பார்த்து விட்டு காசியும் ஏகாம்பரமும் எச்சரிக்கை அடைந்தால், ராகவி மட்டும் எதையும் பார்க்காமல் வேகமாக இறங்கி உள்ளே ஓடியிருந்தாள்.

அதுமட்டுமில்லாமல், சாராவிடம் செல்லாமல் அங்கு வந்த அனுபமாவை நோக்கிச் செல்ல, பின்னால் அவளை பிடிக்க வந்தான் ஏகாம்பரம்.

“துரோகி.. ஏன்டி அவர கொன்ன?” என்று அவள் கத்த, “நீ யாரு என்னை கேள்வி கேட்க?” என்று அலட்சியத்துடன் கேட்டாள் அனுபமா.

ராகவி வாயைத்திறக்கும் முன், ஏகாம்பரம் வந்து அவளது கையைப்பிடித்து இழுத்தான்.

“ராகவி.. வா போகலாம்”

“இவ தான் ஏகா அவர கொன்னுட்டா. இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப”

“வாயமூடிட்டு போறியா? இல்ல போலீஸயே மிரட்டுறனு உன்னை தூக்கி உள்ள வைக்கட்டுமா?”

“இது உன் பழக்கமில்லயே. நல்லவ மாதிரி நடிச்சு அப்புறமா தான தூக்கி ஜெயில்ல போடுவ. அப்புறம் கொலையும் பண்ணுவ.”

“ராகவி..” என்று அதட்டிய ஏகாம்பரம், அனுபமாவை வெறுப்போடு பார்த்து விட்டு, “இவங்க கிட்ட உனக்கென்ன பேச்சு? பேசாம வா” என்றவன், பிடித்து இழுத்துக் கொண்டு சாராவை நோக்கிச் சென்றான்.

காவல்துறையினர் வந்து அவர்களது வழியை மறித்தனர்.

“நீங்க போகக்கூடாது” என்று அவர்கள் தடுத்து நிற்க, அனுபமா அவர்களை பார்த்து நக்கலாக சிரித்தபடி கடந்து சென்றாள்.

தூரத்தில் இருந்து ராகவியை பார்த்த சாரா, பேசிக் கொண்டிருந்தவர்களை விட்டு விட்டு, ராகவியை நோக்கி வந்தான். எதிரே வந்த அனுபமாவை கண்டு கொள்ளாமல் நேராக ராகவியிடம் வந்தவன், “ஏகா.. நீயும் காசியும் சிவாவ கூட்டிட்டு வாங்க” என்று கூறி அனுப்பி விட்டு, ராகவியின் கையைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான்.

ராகவி அவன் முகத்தை பார்த்தாள். அழவில்லை. ஆனால் முகம் முழுவதும் உணர்ச்சியற்று வெளிறிப்போயிருந்தது. ராகவி அவன் கையைப்பிடித்துக் கொண்டு பின்னால் சென்றாள்.

வைரவரின் உடலை அப்போது தான் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

“சிவா வந்தப்புறம் பண்ணலாம். அதுவரை வெயிட் பண்ணுங்க” என்று சாரா சொல்லி விட, அமைதியாக இருந்து விட்டனர்.

காவல்துறையினருக்கு மட்டுமே விசயம் தெரிந்ததால், இன்னும் மீடியா எதுவும் கூடவில்லை.

சிவா வரும் வரை சாரா அங்கேயே அமர்ந்திருந்தான். ராகவியின் கையைப்பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும், அவனால் வாய்த்திறந்து எதுவும் பேசமுடியவில்லை. ராகவியும் அமைதியாக தான் இருந்தாள்.

இருவரும் கையைப்பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை ஒரு நொடி கடுப்போடு பார்த்த அனுபமா, அடுத்த நொடி அலட்சியமாக சென்று விட்டாள்.

அரை மணி நேரம் கழித்து சிவா ஓடி வந்தான். அவனது கண்கள் சிவந்து போயிருந்தது. சாரா அவனை பார்த்ததும் எழ, ராகவியும் எழுந்து நின்றாள்.

சிவா ராகவியை கவனிக்காமல் சாராவை மட்டும் பார்க்க, அவன் வைரவர் இருந்த பக்கம் கண்ணை காட்டினான்.

கால்கள் தள்ளாட சிவா உள்ளே சென்றான். கட்டுப்படுத்திக் கொண்டு வந்த கண்ணீர், தந்தையின் உயிரற்ற உடலை பார்த்ததும் உடைப்பெடுத்தது.

அவரது கையை எடுத்து பிடித்துக் கொண்டவனுக்கு, அடுத்து என்ன? என்று கூட புரியவில்லை. தந்தையின் தொழில் பிடிக்காது தான். அவர் மீது அவனுக்கு கோபம் தான். ஆனால் அவனுக்கென இருந்த ஒரே உறவு அவரல்லவா?

இனி வாழ்க்கையில் அவனுக்கு என்ன இருக்கிறது? என்ற கேள்வியை தாங்கி எதிர்காலம் நிற்க, அதை நினைக்கவும் மனமில்லாமல் வைரவரின் கையைப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்தான்.

அவன் பின்னால் வந்து நின்றான் சாரா. அவனால் அப்போது அழவும் முடியவில்லை. சிவாவின் தலையை தடவிக் கொடுத்தபடி, அங்கேயே நின்றிருந்தான்.

சில நிமிடங்களுக்கு பிறகு அனுபமாவும் அவளோடு வேறு சிலரும் வந்தனர். வைரவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அவர்கள் எடுத்துச் செல்ல, சிவாவை அழைத்துக் கொண்டு சாரா வெளியே வந்தான்.

ஏகாம்பரமும் காசியும் தள்ளி நின்று இதை வேடிக்கை பார்த்தனர். உள்ளே செல்ல அவர்களை அனுமதிக்கவில்லை.

விசயத்தை வெளியே சொல்ல வேண்டும் என்பதால் காசியை அருகே அழைத்த சாரா, பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான்.

“நியூஸ் கொடுத்துடு”

“என்னனு?”

“எதுவும் சொல்லாத.”

புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவன் தலையாட்டி விட்டு செல்ல, சாரா தன் கைபேசியை அணைத்துப் போட்டான்.

ராகவி, மௌனமாக கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்த சிவாவையும் சாராவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு எழுந்து சென்றவள், ஏகாம்பரத்திடம் பேசி விட்டு வந்தாள். சில நிமிடங்களில் அவன் தண்ணீரோடு வந்தான்.

ஒரு பாட்டிலை வாங்கி சாராவின் கையில் திணிக்க, அவன் கேள்வியாக பார்த்தான்.

சிவா பக்கம் கண்ணை காட்டி, “குடிக்கச் சொல்லுங்க” என்றாள்.

சிவாவின் தோளை தொட்டு தண்ணீரை நீட்ட, அவன் மறுப்பாக தலையசைத்தான்.

“கொஞ்சம் குடிங்க. அப்ப இருந்து அழுறீங்க. தொண்டை வரண்டுரும்” என்று ராகவி கூற, சிவா அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அவள் சாராவை பார்க்க, அவன் சிவாவின் கையில் பாட்டிலை திணித்து விட்டான்.

அவன் குடித்ததும், ராகவி சாராவின் அருகே அமர்ந்து கொண்டாள்.

“எங்கம்மா செத்தப்போ இப்படி தான் அழுதுட்டே இருந்தேன். ரொம்ப அழுததுல ரெண்டு நாள் பேசக்கூட முடியல. திடீர்னு அனாதையாகுறது ரொம்ப வலிக்குதுல?” என்று பேசிக் கொண்டே வந்தவள், கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டாள்.

“பாட்டி செத்தப்போவும் இப்படி தான். எதுவுமே இல்ல. இனி வாழ்க்கையில என்ன செய்வோம்? எதுக்கு வாழுறோம்னே தெரியாம நாலு நாளா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு”

அவள் போக்கில் பேச, சாரா அவளை இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டான்.

இருவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர். மருத்துவர் வந்து சாராவிடமும் சிவாவிடமும் கையெழுத்து வாங்கிக் கொள்ள, அதோடு கிளம்பினர்.

“அப்பாவ தர மாட்டாங்களா?” என்று ராகவி கேட்க, “நாளைக்கு தான் தருவாங்க” என்றான் சாரா.

மூவரும் வாசலுக்கு வரும் போதே மீடியா குவிந்து கிடக்க, காசி வந்து பின் பாதையை காட்டினான்.

அதுவழியாக கிளம்பி விட, அனுபமா தான் செய்தியாளர்கள் முன்னால் நின்றிருந்தாள்.

“எதுனால மேடம் வைரவர் இறந்தாரு?”

“ஹார்ட் அட்டாக்”

“இவ்வளவு நாளா நல்லா இருந்தவரு, நீங்க அரெஸ்ட் பண்ணவும் செத்துருக்காரு. அத பத்தி என்ன சொல்லுறீங்க?”

“என்ன சொல்லனும்னு நினைக்கிறீங்க?”

“உங்க பாதுகாப்புல இருக்க கைதி இறந்துருக்காரு மேடம். பொறுப்பே இல்லாம பேசுறீங்க?”

“பொறுப்பு என்னனு நீங்க எனக்கு லெசன் எடுங்களேன்”

“மேடம்.. உங்க பாதுகாப்புல இருந்தவரு இறந்துருக்காரு. இத பத்தி உங்களுக்கு விசாரணை கமிஷன் வைப்பாங்களா?”

“நீங்க தான் ஏற்கனவே வச்சு நல்லா விசாரிக்கிறீங்களே. இனியும் வைக்கனுமா?”

“மேடம் நீங்க ரொம்ப திமிரா பேசுறீங்க”

“நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னா அது திமிரா?”

“உங்க கட்டுப்பாட்டுல இருந்தவர் இறந்துருக்காரு. நீங்க தான் கொன்னுட்டீங்கனு மக்கள் நினைப்பாங்க”

“நினைக்கட்டுமே. நான் செஞ்சுருந்தா தான பயப்படனும்? இப்ப உங்க கேள்விய முடிச்சுட்டா, நான் போய் மத்த கேஸ பார்ப்பேன். இல்லனா ஏசி சரியில்ல. ஒரு கேஸ் உருப்படியா பார்க்கலனு அதுக்கும் என் பேர தான் எழுதுவீங்க. அப்படி எழுதுனாலும் பரவாயில்ல. இப்ப வழிய விடுங்க” என்றவள் உடனே அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.

*.*.*.*.*.*.*.*.*.*.

வைரவரின் வீட்டில் ஆட்கள் நிறைந்து வழிந்தனர். எல்லோரும் அமைதியாய் வந்து மாலை மலர்வளையம் வைத்து விட்டுச் செல்ல, வெளியே பாதுகாப்புக்கு நின்றிருந்த அனுபமாவுக்கு எரிச்சலாக இருந்தது.

‘ஒரு அக்யூஸ்ட் செத்துருக்கான். இந்த மரியாதை ஒன்னு தான் குறைச்சல்’ என்று அவள் நினைத்தபடி நிற்க, உள்ளே இருந்த ராகவிக்கு அனுபமா அங்கு நிற்பதே எரிச்சலாக இருந்தது.

‘பண்ணுறதையும் பண்ணிட்டு நிக்கிறா பாரு. பாவி.. துரோகி’ என்று அவளை மனதார திட்டிக் கொண்டே இருந்தாள்.

சம்பந்தபட்டவர்கள் அனைவரும் வந்து பார்த்து விட்டு செல்ல, உறவினர்கள் கடைசி காரியத்தை செய்ய கிளம்பினர்.

சிவா மொட்டை அடித்திருந்தான். சாராவும் மற்றவர்களும் சென்று விட, வீட்டுப்பெண்கள் வீட்டை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினர்.

பலருக்கு ராகவி யாரென்று தெரியவில்லை. விசாரித்தாலும் அவள் பதில் சொல்லவில்லை.

“வேலைக்காரி” என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.

எல்லோருமாக வீட்டை சுத்தம் செய்து விட்டு கிளம்பி விட, சாராவும் சிவாவும் வீடு வந்தனர்.

சிவா வந்ததும் குளித்து விட்டு அறைக்குள் சென்று விட, சாரா ராகவியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் தலையிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. வீடு வந்து குளித்த அடுத்த நொடியே கிளம்பி விட்டான்.

ராகவி அவனை திரும்பிப் பார்த்து விட்டு, முன்னால் இருந்த டிஸ்யூவை எடுத்து துடைத்து விட்டாள்.

சில நிமிடங்கள் அந்த காரில் மௌனம் தான் இருந்தது. ஆளில்லா சாலையில் காரை ஓரமாக நிறுத்தி விட்ட சாரா, சீட் பெல்ட்டை அவிழ்த்து விட்டு, சீட்டை பின்னால் சாய்த்து படுத்துக் கொண்டான்.

ராகவி அவனை புரியாமல் பார்த்தாள். கை கண்ணை மறைத்திருக்க, ராகவி ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு காரை விட்டிறங்கி பின்னால் சென்று அமர்ந்தவள், அவன் தலையை வருடிக் கொடுத்தாள்.

“தூக்கம் வருதா பாஸ்?” என்று கேட்டு வைக்க, அவனிடம் பதில் இல்லை.

“பாஸ் பசிக்கிதா?”

அப்போதும் அமைதியாக இருந்தான்.

“பாஸ் மயங்கிட்டீங்களா?”

அதற்கும் பதில் இல்லாமல் போக, “அயய்யோ பாஸு மயங்கிட்டாரு.. இப்ப என்னா பண்ணனும்?” என்று கையை உதறியவள், அவனது நெஞ்சை போட்டு அழுத்தினாள்.

“அய்யோ பாஸ் எந்திரிங்க.. உங்கள என்னால ஹாஸ்பிடல்லாம் தூக்கிட்டு போக முடியாது. காரு கூட ஓட்ட தெரியாது” என்றவ,ள் முடிந்த மட்டும் அவனது நெஞ்சை அழுத்தி வைத்தாள்.

பட்டென அவள் கையைப்பிடித்தவன், கண்ணை திறந்து முறைத்துப் பார்த்தான்.

“முழிச்சுட்டீங்களா? அப்பாடா..!”

“எதுக்கு இப்படி போட்டு அழுத்துற?”

“சிபிஆர் பாஸ். இப்படி தான் பண்ணுவாங்க”

“மயக்கம் போட்டா சிபிஆர் பண்ணுவாங்களா?”

“பண்ண மாட்டாங்களா?”

“நீ அழுத்துனதுல என் எலும்பு உடைஞ்சுருக்கும். இதுக்கு பேரு சிபிஆர்?”

“அப்படி அழுத்துனா தான் பாஸ் பொழைப்பாங்க. இப்ப நீங்க முழிச்சீங்களே அப்படி”

“சிபிஆர் இது மட்டும் கிடையாது”

“பின்ன?”

அவள் தலைக்குப்பின்னால் கையை கொண்டு சென்றவன், அருகே இழுத்து இதழில் இதழ் பதித்தான்.

தொடரும்.

Leave a Reply