சாரா 27
![]()
கார் வீட்டில் வந்து நிற்க, உடனே இறங்கி உள்ளே சென்றாள் ராகவி. சாரா காரை ஓரம் கட்டி விட்டு, தானும் நுழைந்தான்.
ஏகாம்பரமும் காசியும் இல்லை. இருவரையும், சிவாவிற்கு துணையாக அங்கேயே விட்டு வந்திருந்தனர். ராகவி அறைக்குள் நுழைய, சாராவும் பின்னால் வந்தான்.
அதை உணர்ந்து அதிர்ந்தாலு,ம் அவனை கேள்வியாக பார்த்தாள். காரில் நடந்ததை நினைத்து வெட்கம் உள்ளே நிறைந்திருக்க, வாய் பூட்டி இருந்தது.
முத்தமிட்டு விட்டு, ஒன்றும் நடவாதது போல் சாரா காரை ஓட்ட ஆரம்பித்து விட்டான். ராகவிக்கு தான் இதயத்துடிப்பு சரியாக நேரமெடுத்தது.
வீடு வந்த பிறகு அறைக்குள்ளும் வர, ராகவி புரியாமல் நின்றாள்.
“சாப்பிட்டியா?” என்று கேட்க, “டீ குடிச்சேன்” என்றாள்.
“எனக்கு பசிக்குது. வா சாப்பிடலாம்” என்றவன் அவள் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.
சமையலறையில் நுழைந்ததும், “எனக்கு சமைக்கத்தெரியாது பாஸ். உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“எனக்கும் தெரியாது”
“அப்ப என்ன சாப்பிடுறது?” என்று யோசித்து சமையலறையை ஒரு முறை வலம் வந்தவள், “ஏகா மாவு வச்சுருக்காரானு பார்க்கலாம்” என்று குளிர்சாதன பெட்டிக்குள் தலையை விட்டாள்.
“மாவு இருக்கு பாஸ்” என்று குதூகலமான குரலோடு வெளியே எடுத்தவள், “ஆமா இது தோசை மாவா? இட்லி மாவா?” என்று தலையை சொறிந்தாள்.
“உனக்குத் தெரியாதா?”
“எப்படித் தெரியும்? எல்லாம் வெள்ளையா இருக்கே”
“அதுக்கு என்ன பண்ணலாம்?”
“எதுவா இருந்தா என்ன? தோசை ஊத்துவோம். வந்த வரை சாப்பிடுவோம். அப்புறம் தோசை பிஞ்சு போனா என்னை திட்டக்கூடாது.”
“சரி” என்றவன், அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.
தவாவை அடுப்பில் வைத்தவள், “இதுக்கு எத வச்சு சாப்பிட?” என்று கேட்டு மீண்டும் தலையை சொறிந்தாள்.
சாரா அவளையே பார்த்தவண்ணம் இருக்க, “கண்டு பிடிச்சுட்டேன். இட்லி பொடி இருக்கும்ல?” என்றாள்.
உடனே அங்கும் இங்கும் ஓடி தேடிக் கொண்டே, இரண்டு தோசைகளை சுட்டு அவனுக்கு வைத்து விட்டு, பொடியும் எண்ணெய்யும் வைத்தாள்.
“சாப்பிடுங்க”
“உனக்கும் சுட்டுட்டு வா” என்றதும், அவளுக்கும் இரண்டு தோசைகளை ஊற்றிக் கொண்டு வந்தாள்.
இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்தனர்.
சாரா சாப்பிட்டு விட்டு கையை கழுவிக் கொள்ள, ராகவி பயன்படுத்தியதை எல்லாம் கழுவ ஆரம்பித்தாள்.
“எனக்கு சமைக்க தான் வராது பாஸ். ஆனா பாத்திரம் நல்லா கழுவுவேன்”
“ஏன்?”
“எங்க வீட்டுல அம்மா வேலைக்கு போவாங்க. பாட்டியும் வேலைக்கு போவாங்க. நான் ஸ்கூலுக்கு போவேன். மூணு பேரும் போயிடுவோம். ஆனா பாட்டி சமைச்சு வச்சுட்டு தான் போவாங்க. காலையில சமைச்சு எடுத்துட்டுப் போயிடுவோம்.
சாயந்தரம் நான் தான் முதல்ல ஸ்கூல் விட்டு வருவேன். அதுனால இருக்க எல்லா பாத்திரத்தையும் கழுவி, வீட்ட எல்லாம் க்ளீன் பண்ணிடுவேன். எல்லாம் பண்ணி முடிச்சுட்டா, பாட்டி வந்து அம்மாவுக்கும் எனக்கும் டீ போட்டு கொடுப்பாங்க. அதான் பல வருச எக்ஸ்பீரியன்ஸ்”
“உங்கம்மா ஏன் இறந்தாங்க?”
“மூளையில எதோ கட்டியாம். எங்கம்மாவுக்கு முதல்லயே தெரியும் போல. ஆனா அதுக்கு செலவழிக்க பணம் இல்லனு எங்க கிட்ட சொல்லவே இல்ல. திடீர்னு மூக்குல இரத்தமா கொட்டிருச்சு.
அத கேட்டதுக்கு என்னமோ சொல்லி சமாளிச்சாங்க. அப்புறம் பாட்டி தான் வம்படியா ஹாஸ்பிடல்க்கு இழுத்துட்டு போனாங்க. முத்திடுச்சு. டிரீட்மெண்ட் பார்த்தாலும் வீண் செலவு தான்னு டாக்டர் சொல்லிட்டாங்க.
காசு இல்லாம, எங்கம்மா கொஞ்சம் கொஞ்சமா சாகுறத வேடிக்கை தான் பார்த்தோம். சாகப்போறோம்னு தெரிஞ்சதாலயே, என் கிட்ட நிறைய பேசுவாங்க. என் கைய பிடிச்சுட்டு… எப்பவும் பாட்டி கூட இருக்கனும். யாரு இருந்தாலும் இல்லனாலும் தைரியமா வாழனும். உன்னை நீ தான் நல்லா பார்த்துக்கனும்.. இப்படி நிறைய சொல்லுவாங்க
ஒரு நாள் நைட் படுத்தவங்க தான். எப்ப உயிர் போச்சுனு கூட தெரியல. ரொம்ப அழுதேன். நானும் பாட்டியும் அனாதை ஆகிட்டோம். ஆனா பாட்டி என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. எனக்கு தெரியக்கூடாதுனு நைட் தான் அழுவாங்க. நானும் அம்மாவ நினைச்சு அழுவேன்.”
“உங்க சொந்தக்காரவங்க யாரும் ஹெல்ப் பண்ணலயா?”
“எங்க கிட்ட காசு இருந்தா கடன் கொடுனு வேணா கேட்டு வருவாங்க. மத்தபடி உதவிக்கு எவனும் வர மாட்டான்”
“உன் அம்மா போனப்புறம் என்ன செஞ்சீங்க?”
“நான் ஸ்கூல் முடிச்சுட்டேன். காலேஜ் படினு எல்லாரும் சொன்னாங்க. காசு? வருசத்துக்கு ஒரு லட்சமாச்சும் செலவாகும். எங்க போறது? அதான் காலேஜ் போகல. சும்மா வேலைக்கு போயிட்டு இருந்தேன்.
பாட்டி தான் எதையாவது படிச்சா தான் வேற பெரிய வேலை பார்க்க முடியும்னு சொன்னாங்க. அதுனால காசு சேர்த்து, சில கோர்ஸ் படிச்சேன். ரெண்டு மூணு இடத்துல வேலை பார்த்துருக்கேன். கடைசியா தான் அந்த முருகன் கடையில வேலை பார்த்தேன்.”
“உனக்கு மேல படிக்க ஆசையிருக்கா?”
“ச்சீ ச்சீ..”
“ச்சீயா?”
“ஆமா எனக்கு படிப்பு அவ்வளவு எல்லாம் வராது”
“வாய் மட்டும் பேச வருமோ?”
“அது நல்லா வரும்”
“உனக்கு படிக்க ஆசை இருந்தா சொல்லு. நான் படிக்க வைக்கிறேன்”
“இத்தனை வயசுலயா?”
“படிப்பு எப்ப வேணா படிக்கலாம்”
“வேணாம். இருக்க ரெண்டரை லட்ச கடனயே எப்ப அடைப்பேனோ? எங்கம்மா எனக்கு சொன்ன முக்கியமான வார்த்தையே யாரு கிட்டயும் கடன் வாங்காத. பட்னியா இருந்தா கூட பரவாயில்ல. கடன் வாங்காதனு தான் சொல்லிருக்காங்க.”
“உன் பாட்டி?”
“அவங்க நம்ம சொந்தகாரவங்கள நம்பாதனு சொன்னாங்க. பாட்டி போனப்புறம், ஒரு அத்தை என்னை அது வீட்டுக்கு கூப்பிட்டுச்சு. அது ஒன்னும் அவ்வளவு நல்ல ஆள் கிடையாது. எங்கம்மாவ எப்பவும் கேவலபடுத்துற மாதிரி தான் பேசும். அத நம்பி போயிருந்தா, என்னை அதோட வீட்டு வேலைக்காரி ஆக்கியிருக்கும். அதுனால வர முடியாதுனு சொல்லிட்டேன்”
“இங்க கூட நீ அப்படி தான இருக்க?”
“இது வேற. நீங்க என் உயிர காப்பாத்தி இருக்கீங்க. அவ்வளவு மருந்து வாங்கி கொடுத்துருக்கீங்க. என் காயம் எல்லாமே சரியாகிடுச்சு. கூடவே ஒரு நர்ஸ் இருந்து என்னை பார்க்குறதுனா சும்மாவா? அதுக்கு நீங்க செலவு பண்ணத நான் திருப்பிக் கொடுக்குறேன். அவ்வளவு தான்”
“ஆனா அஞ்சு லட்சமெல்லாம் ஆகல. நான் சும்மா சொன்னேன்”
“எதே..?” என்று அதிர்ந்தவள், வேகமாக அவனிடம் வந்தாள்.
“அஞ்சு லட்சம் ஆகலயா?”
“அத இன்னுமா நம்பிட்டு இருக்க?”
“பின்ன? பொய் சொன்னீங்களா?”
“அறிவுக் கொழுந்துடி நீ”
“டி எல்லாம் சொல்லாதீங்க பாஸ். எனக்குப் பிடிக்காது. அப்ப உண்மையா எவ்வளவு செலவாச்சு?”
“கம்மி தான். ஆனா அதையும் இந்த தோசை சுட்டுக் கொடுத்ததுக்காக கழிச்சுட்டேன்”
“சத்தியமா?”
சாரா தலையை ஆட்ட, “ஹப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு” என்றாள்.
“இனி நீ இங்க இருந்து வேலை பார்க்கனும்னு அவசியம் இல்ல. உன் வீட்டுக்குப் போகலாம்”
“ஹான்?”
அதிர்ச்சியும் குழப்பமுமாக பார்த்தாள் ராகவி.
‘வீட்ட விட்டு போனு சொல்லுறாங்களா?’ என்று நினைத்தவள், “என்னை போனா சொல்லுறீங்க?” என்று கேட்டு விட்டாள்.
“இனி நீ கடன அடைக்கிறதுக்காக இங்க இருக்க வேணாம்னு சொல்லுறேன்”
“ரெண்டும் ஒன்னு தான?”
“நீ எப்படி வேணா எடுத்துக்கலாம். இனி நான் உனக்கு பாஸ் இல்ல. நீ என் கிட்ட கடன்பட்டவளும் இல்ல” என்றவன், எழுந்து சென்று விட்டான்.
ராகவி, தலையும் இல்லா வாலும் இல்லா விசயத்தை பற்றி யோசிக்க முயற்சித்தாள்.
மாலை கடந்து இரவும் வந்தது. ராகவிக்கு இந்த வீட்டை விட்டு போக மனமில்லை. ஆனால் இனி என்ன சொல்லி இருப்பது?
கடனடைக்க வேலை செய்தாள். அதுவும் வேலை செய்வதாக சொல்லி, எதையும் அவள் செய்தது இல்லை. ஏகாம்பரத்திற்கு உதவியதோடு சரி.
இப்போது கடனும் இல்லை. இருக்கவும் தேவையில்லை என்று விட்டான். அதன் பிறகும் இங்கிருப்பது சரி வருமா?
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவளுக்கு, ஒன்றும் தோன்றவில்லை.
“ராகவி.. ராகவி ராகவி.. உனக்கு என்ன தான்டி பிரச்சனை?” என்று கேட்டு தலை முடியை கலைத்து விட்டு, மெத்தையில் பொத்தென அமர்ந்தாள்.
“இங்க வரும் போது எப்படி வந்த? எப்படா இங்க இருந்து போகலாம்னு துடிச்ச. இப்ப அவரே போ….னு சொல்லிட்டாரு.. ஆனா கிளம்பிப்போக மனசு வரமாட்டேங்குதே” என்று புலம்பியவள், மெத்தையில் குப்புற விழுந்தாள்.
“இங்க இருந்து போனா, பழைய படி நைட் தூக்கம் வராம பயந்துட்டு இருக்கனும். அந்த மெஸ் சாப்பாடு சாப்பிடனும். ஏசி இல்லாத ரூம்ல தான் இருக்கனும்.” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள், மீண்டும் எழுந்து அமர்ந்தாள்.
“ஆனா இதெல்லாம் கூட பரவாயில்ல. ஏகாம்பரம் இல்லாம எப்படி பொழுது போகும்? பாஸ் இல்லனா கூட வருத்தம் தான். ஆனா நான் ஏகாம்பரத்த தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று தனக்குத்தானே கஷ்டப்பட்டு சொல்லி, நம்ப வைத்துக் கொண்டாள்.
“இப்ப நமக்கு கிடைச்ச ஒரே ஆளு ஏகா தான். அவர கேட்கலாமா?” என்று முடிவெடுத்தவள், மெத்தையிலிருந்து குதித்து ஹாலுக்கு ஓடினாள்.
அங்கு தொலைபேசி இருக்க, அதை எடுத்து விட்டு, “ஏகா நம்பர் தெரியாதே” என்று தலையை சொறிந்தாள்.
“ஒரு நம்பர கூட கேட்டு வைக்கல ராகவி. நீ ஒரு லூசு” என்று கண்ணாடி பார்த்து திட்டியவள், அங்கிருந்த டைரியை எடுத்து புரட்டினாள்.
அதில் எல்லோருடையதும் இருந்தது. சாரா, ஏகாம்பரம், காசியின் எண்ணைத்தவிர.
“அடப்போங்கயா” என்று போட்டு விட்டு, சாரா இருக்கும் அறையை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
அது அடைத்துக் கிடக்க, நன்றாக எட்டிப் பார்த்தாள்.
“அதுக்குள்ள தூங்கிட்டாரோ? இந்த பாஸுக்கு இதான் வேலை. அன்னைக்கு கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி என்னை புலம்ப விட்டுட்டு, அவர் மட்டும் நிம்மதியா இருந்தாரு. இன்னைக்கு வெளிய போனு சொல்லிட்டு, தூங்க போயிட்டாரு. நாம மட்டும் புலம்பி சாகனும்” என்றவள், தலையை பிடித்துக் கொண்டு சோபாவில் சில நிமிடங்கள் அமர்ந்தாள்.
என்ன யோசித்தும், அவளுக்கு இந்த வீட்டை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. ஆனால் என்ன சொன்னால் சாரா இங்கிருக்க சம்மதிப்பான்? என்ற கேள்வி தான் அவளை குடைந்தது.
“அவன கல்யாணம் பண்ணிக்க. கடைசி வர இங்கயே இருக்கலாம்” என்று வாசகர்களின் பிரதியாக அவளது மனமே எடுத்துச் சொன்னது.
ஆனால் அவளது மூளைக்கு அது பிடித்தால் தானே?
“கல்யாணமா? நோ நோ நோ… அவர என்னால கல்யாணம் பண்ண முடியாது. மாஃபியா பொண்டாட்டிய எல்லாம் டீவில, படத்துல பார்க்க தான் நல்லா இருக்கும். வாழ்க்கையில எப்ப வேணா செத்துப்போவோம்னு வாழ முடியுமா?” என்று திடீரென்று அறிவாக பேசி வைத்தாள்.
அவளால் அது முடியாது தான். அதற்காக சாராவை விட்டு, அவளே நம்புவது போல் ஏகாம்பரத்தை விட்டுப் போவதும் நடக்காத காரியம்.
இப்படிக் குழம்புவதை விட, ஏகாம்பரத்திடம் பேசுவது தான் சரி என்று முடிவு செய்தவள், உடனே சாராவின் அறையை நோக்கிச் சென்றாள்.
கதவை தட்டிய சில நொடிகளில் சாரா திறந்தான். தூங்கியிருப்பான் போலும். முடி கலைந்து, கண்ணில் தூக்கத்தோடு அவளை பார்த்தான்.
‘நிஜம்மாவே தூங்கியிருக்காரு.. அடப்பாவி!’ என்று மனதில் நினைத்துக் கொண்டு அவள் மெய் மறந்து நிற்க, “என்ன?” என்று சாரா கேட்டான்.
அவனது கேள்வியில் சுதாரித்தவள், “ஏகா வேணும். ச்சீ ஏகாம்பரம் நம்பர் வேணும்” என்றாள்.
எதற்கு கேட்கிறாள்? என்று தெரிந்ததால், சாரா உள்ளே சென்று கைபேசியை எடுத்தான். ராகவி வாசலிலேயே நின்று கொண்டாள்.
ஏகாம்பரத்திற்கு அழைப்பு விடுத்தபடி சாரா கைபேசியை நீட்ட, “கால் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டவள், “பேசிட்டு தர்ரேன்” என்றதோடு நகர்ந்து சென்றாள்.
“ஹலோ பாஸ்” என்று ஏகாம்பரம் ஆரம்பிக்க, “பாஸில்ல ராகவி” என்றாள்.
“என்ன ராகவி? என்ன விசயம்?”
“வீட்டுல லேன்ட் லைன் இருக்குல, அதுக்கு கால் பண்ணுங்க ஏகா”
“எதுக்கு?”
“வொர்க் ஆகுதானு பார்க்குறதுக்கு. அடச்சொன்னா கால் பண்ணேன்யா”
“ஓவர் அதிகாரமா இருக்கே. சரி வை” என்றவன் வைத்து விட, கைபேசியோடு சாராவிடம் வந்தாள்.
அவன் கதவை திறந்து வைத்து விட்டு உள்ளே நின்றிருந்தான்.
கதவை ஒரு முறை தட்டியவள், “இந்தாங்க பாஸ்” என்று நீட்டினாள்.
‘அதுக்குள்ள பேசிட்டாளா!’ என்று ஆச்சரியப்பட்டாலும், அமைதியாய் வாங்கிக் கொண்டான்.
“தூங்கிட்டு இருந்தீங்களா பாஸ்?”
“ம்ம். தலை வலி”
“காபி வேணுமா பாஸ்? மாத்திரை?”
“போட்டுட்டு தான் படுத்தேன்”
“அப்ப டின்னருக்கு எழுப்பவா?”
“வேணாம். சாயந்தரம் சாப்பிட்டதே போதும்”
“ஓஓ நல்லா தூங்குங்க பாஸ். குட் நைட்” என்றவள், அவன் தலையாட்டியதும் வேகமாக கீழே இறங்கினாள்.
சாரா கதவை அடைத்து விட்டு, எப்போதும் தானாகவே பதிவாகி விடும் அழைப்பில், ராகவி பேசியதை கேட்டான். அன்றைய நாளில் முதல் முறையாக அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
‘பார்ரா.. லேண்ட் லைன்ல பேசுனா எனக்கு தெரியாதுனு நினைப்பா?’ என்று நினைத்துக் கொண்டான்.
ஏகாம்பரமும் சொன்னது போல் தொலைபேசியில் அழைக்க, ராகவி எடுக்கும் முன் யோசித்தாள்.
‘இதுக்கு மூணு கனெக்ஷன் இருக்கே. ஒன்னு கிட்சன்ல ஒன்னு பாஸ் ரூம்ல, இன்னொன்னு ஏகா ரூம்ல கூட இருக்குல. இதுல பேசுனா அவர் கேட்பாரோ?’ என்று யோசித்தவள், உடனே வேறு முடிவோடு எடுத்துக் காதில் வைத்தாள்.
“என்ன ராகவி?”
“சாப்பிட்டீங்களா ஏகா?”
“எதே! இத கேட்கவா கூப்பிட்ட?”
“ஆமா சொல்லுங்க”
“இன்னும் இல்ல”
“நேரத்துக்கு சாப்பிடுங்க ஏகா”
“இப்ப எதுக்கு ஃபோன் பண்ணி ஐஸ் வச்சுட்டு இருக்க? என்ன மேட்டர்?”
“என் ஃபோன ரிப்பேர் பண்ண சொல்லி கொடுத்தேன்ல. நீங்க கூட கடையில கொடுத்தீங்களே. அது எப்ப வரும்?”
“நேத்தே வந்துடுச்சு. இங்க இருந்த நிலைமையில அத உன் கிட்ட கொடுக்க மறந்துட்டேன். என் ரூம்ல தான் இருக்கும். எடுத்துக்க”
“ஏகா… நீங்க என் வாழ்க்கையில கிடைச்ச தெய்வம் ஏகா தெய்வம்” என்று அவள் உணர்ச்சிவசப்பட்டு பொங்க, அங்கு ஏகா தான் புரியாத பாசையை கேட்டது போல் விழித்தான்.
“என்ன ஆச்சு உனக்கு திடீர்னு?”
“அத விடுங்க. உங்க நம்பர சொல்லுங்க. எழுதிக்கிறேன்”
“எதுக்கு?”
“கேள்வி கேட்காத மேன். சும்மா எதுக்கு? என்னத்துக்கு? ஏன்? எப்படினு.. கேள்வியா கேட்குறதால தான் எனக்கு எக்ஸாம கூட பிடிக்காது தெரியுமா?”
“இல்லனா மட்டும் மேடம் அப்படியே படிச்சு கிழிச்சுருப்ப”
“இப்ப என் வரலாறு முக்கியமா? நம்பர சொல்லுயா” என்றவள், அவன் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டாள்.
“சரி வைங்க. அந்த போன் வொர்க் ஆகுதானு பார்க்க அதுல இருந்து கூப்பிடுறேன்” என்று விட்டு வைத்து விட்டாள்.
“இவ என்ன லூசாகிட்டாளா?” என்று தன் கைபேசியை பார்த்து தனக்குத்தானே பேசிக் கொண்ட ஏகாம்பரம், “கூடிய சீக்கிரம் நம்மலயும் இவ மாதிரி ஆக்கிடுவா போல” என்று ஆருடம் கூறிக் கொண்டான்.
தொடரும்.
