சாரா 31

Loading

சிவராஜ் தொப்பியை கழட்டி வைத்து விட்டு, கால்மேல் கால் போட்டுக் கொண்டு எதிரே இருந்தவளை அளவெடுப்பது போல் பார்த்துக் கொண்டிருக்க, அனுபமாவிற்கு எரிச்சலாக வந்தது.

கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவள், “உங்கள எதுக்கு கூப்பிட்டுருக்கேன் தெரியுமா?” என்று கேட்டாள்.

“அத நீங்க தான் சொல்லனும்”

நக்கலாகவே பதில் வந்தது.

“உங்க அப்பா மேல கேஸ் இருக்கு. அதுவாது தெரியுமா?”

“என்ன கேஸ்?”

கேள்விக்கு பதில் சொல்லும் பழக்கம் எல்லாம், காணாமல் போய் விட்டது அவனிடமிருந்து. அறையில் அடைந்து கிடந்த போது இருந்த சிவா இப்போது இல்லை. அதனால் பதிலுக்கு கேள்வி தான் கேட்டு வைத்தான்.

“மிஸ்டர்.. ஒழுங்கா பேசுங்க”

“இப்ப என்ன ஒழுங்கில்லாம பேசிட்டேன்?”

“உங்கப்பா மேல இருக்க கேஸ் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?”

“கேஸ் போட்டது நீங்க தான? எனக்கு தெரியுமானு கேட்டா என்ன அர்த்தம்?”

“வைரவர் மேல கடல்ல இருக்க சில பவளங்கள சட்ட விரோதமா வெளிநாட்டுக்கு வித்துட்டதா கேஸ் இருக்கு”

“ஓஹோ.. கேஸ் மட்டும் தான் இருக்கா? இல்ல ஆதாராமும் இருக்கா?”

“ஆதாரமும் இருக்கு”

“சரி அதுக்கு நான் என்ன பண்ணனும்?”

“வைரவர் பேருல இல்லீகலா இருபது போட் சுத்திட்டு இருக்கு.”

“அதுல டிரிப் எதுவும் போகனுமா என்ன?”

“இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா உன் மேல கேஸ் போட வேண்டி வரும்”

“என்னனு?”

“விசாரணைக்கு கோ ஆப்ரேட் பண்ண மாட்டேங்குறனு”

“உட்கார்ந்து பேசிட்டு தான இருக்கேன்? இல்ல எந்திரிச்சு ஓடிட்டனா? இதுக்கு மேல என்ன கோ ஆப்ரேஷன் வேணும் உனக்கு?”

“வைரவர் பேர்ல இல்லீகலா போட்ஸ் இருக்கு. அதோட டீடைல்ஸ் என் கிட்ட இருக்கு. கடல்ல எடுக்குற பல பொருள அவர் சட்டவிரோதமா வித்துட்டு இருக்க ஒரு அக்யூஸ்ட் வைரவர். அது போக ஏகப்பட்ட பினாமி பேர்ல சொத்து வச்சுருக்கானாம். இதுக்கெல்லாம் நீ என்ன பதில் சொல்லுற?”

“நான் ஏன் சொல்லனும்?”

“வைரவர் பெத்த பிள்ளைதான நீ?”

“அதுல எதுவும் சந்தேகமா?”

“அப்ப இந்த கேஸ்ல நீ தான் வருவ. உங்கப்பா செஞ்ச தப்புக்கு நீ தான் தண்டனை அனுபவிக்கனும்”

“அது தப்பா இல்லையானு கோர்ட் தான சொல்லனும்? நீ போலீஸ் தான? ஜட்ஜ் இல்லையே”

“இருக்க அத்தனை ஆதாரத்தையும் சேர்த்து கோர்ட்ல கொடுத்து, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாம பண்ணிடுவேன். ஞாபகம் வச்சுட்டு ஒழுங்கா பேசு”

“முதல்ல கொடு. அப்புறம் நிரூபி. அப்புறமா வந்து இப்படி பேசு”

சிவா அத்தனைக்கும் அசராமல் அமர்ந்திருக்க, அனுபமாவிற்கு கோபம் தான் வந்தது. சிவராஜ் என்பவன் எவ்வளவு அமைதியானவன். இப்போது தலைகீழாய் மாறி இருக்கிறானே?

கிட்டத்தட்ட சாணக்கியராஜ்ஜின் சாயல் அவனிடம் வர ஆரம்பித்திருந்தது.

“அப்ப கோர்ட் ஹியரிங்ல உன்னை பார்த்துக்கிறேன். ஆனா கேஸ் முடியுற வரை உள்ளூர்ல தான் இருக்கனும். வெளிய தப்பிச்சு போக நினைச்சா, உடனே அரெஸ்ட் பண்ணுவேன்”

“கவலையே படாத. நீயே துரத்துனா கூட போக மாட்டேன். ஏன்னா.. நிறைய வேலை இங்க இருக்கு. உன் கேள்வி முடிஞ்சதா?”

அனுபமா அவனை முறைத்தபடி தலையை தான் ஆட்டினாள். அதுவும் வெளியே போகும்படி.

ஆனா சிவா வெளியே செல்லவில்லை.

சட்டென எழுந்து சோம்பல் முறித்தான். அவனை கூர்ந்து பார்த்தாலும், அனுபமா இடத்தை விட்டு அசையவே இல்லை. அவளது முறைப்பை பார்த்த சிவா புன்னகைத்தான். பிறகு தொப்பியை எடுத்து போட்டுக் கொண்டான்.

புன்னகை குறையா முகத்துடன் மேசையை தாண்டி அவளருகே வந்து, மேசையில் பாதி அமர்ந்து கொண்டு நாற்காலியில் இருந்தவளை சுவாரஸ்யமாக பார்த்தான்.

அனுபமா அவனது செயலில் முகம் இறுக எழுந்து விட்டாள்.

“ஏய் எந்திரி மேன்” என்று மிரட்ட, நக்கலாக சிரித்தவன் திடீரென அவளது கழுத்தை பிடித்தான்.

ஒரு நொடி அதிர்ந்தவள், அடுத்த நொடி எச்சரிக்கை அடைந்து, அவனது கையை தட்டி விடப்பார்க்க, முடியவில்லை.

உடனே துப்பாக்கியை தூக்கி அவனது வயிற்றில் வைத்தாள்.

“கைய எடு” என்று மிரட்ட, அதற்கு கொஞ்சமும் பயப்படாமல் அவளது கழுத்தை தடவிப்பார்த்தவன், “இத இப்படியே நெறிச்சு கொன்னுடலாம் போல இருக்கு” என்றான்.

துப்பாக்கியை அவனது வயிற்றில் இருந்து எடுத்து, அவனது நெற்றியில் வைத்தாள்.

“எடுடா கைய” என்று மேலும் அதிகாரம் நிறைந்த குரலில் கூற, சிவா அதைப்பற்றி கவலையே படாமல், அடுத்த கையையும் அவளது கழுத்தில் வைத்தவன், இரண்டு பெருவிரலாலும் கழுத்தை தடவவும் செய்தான்.

அந்த நிமிடமே, அவனை சுட்டுப்பொசுக்கும் ஆவேசம் வரத்தான் செய்தது அவளுக்கு. ஆனால் அப்படி செய்ய முடியாதே. இருப்பது காவல்நிலையம் அல்லவா? சுட்டு விட்டு என்ன பதில் சொல்வது?

ஆனால் கோபம் பொங்க, அவனது கையை வேகமாக தட்டி விட்டாள். இம்முறை அவள் தட்டிய உடன், கையை எடுத்து விட்டான் சிவா.

தன்னை தொட்ட பின்பு அவனை சும்மா விடுவதா? என்ற கோபம் கொப்பளிக்க, அடிப்பதற்காக கையை தூக்கினாள்.

உடனே அந்த கையை பிடித்த சிவா, அதிலிருந்த விரல்களை வலுக்கட்டாயமாக பிரித்து தன் விரல்களை கோர்த்துக் கொண்டான்.

“அடிக்கிற அளவு தைரியம் இந்த யூனிஃபார்ம் கொடுத்ததுல? நல்லா தான் இருக்கு உனக்கு. ஆனா என் கிட்ட ஓடி ஓடி வந்து பேசுவியே.. அந்த அனுசயா தான் எனக்கு பிடிச்சுருந்துச்சு”

“விடுடா..” என்றவள் அடுத்த கையை ஓங்கினாள். அதை தட்டி விட்டான்.

கோபத்தில் அவளது முகம் சிவக்க ஆரம்பிக்க, அதைக்கண்டு சிவாவிற்கு சிரிப்பு வந்தது.

“என்ன டார்லிங் இவ்வளவு வெட்கப்படுற? முகமெல்லாம் சிவக்குற அளவுக்கு? ஓஓ.. கோபமா? ஏன்? நீ என்னை லவ் பண்ணுறமா.. நான் உன் லவ்வர். மறந்து போச்சா?” என்று கேட்டு வைத்தான்.

அவனிடமிருந்து கையை பிரிக்க முடியாமல் போராடியவள், வெளியே திரும்பி ஆட்களை அழைக்கப்போக, அவளது வாயை உடனே மூடி இருந்தான்.

“யாரையாவது கூப்பிட்டனு வையேன், அவங்க முன்னாடியே எதாவது செய்வேன். அப்புறம் ஏசிபி மரியாதை காத்துல பறக்கும்” என்றவன் கையை சுழட்டி, அவளை திருப்பி பின் புறமிருந்து அணைப்பது போல் நிறுத்தினான்.

அவள் உடனே பின்பக்கமாக காலால் அவனை உதைக்கப்பார்க்க, சுலபமாக அதிலிருந்து தப்பியிருந்தான்.

இன்னும் அவளது வாய் மூடித்தான் இருந்தது. அவள் விடுபட எடுத்த போராட்டத்தை எல்லாம் சுலபமாக தடுத்தவன், “திமிர் உனக்கு மட்டும் சொந்தமில்ல அனுபமா. எனக்கும் இருக்கு. என்னை பத்தி இனி தெரிஞ்சுப்ப. தெரிய வைக்கிறேன்” என்றவன் அவளது வாயை விட்டு மீண்டும் கழுத்தை பிடித்தான்.

“இனி ஒரு தடவ என் முன்னாடி என் அப்பாவ மரியாதை இல்லாம பேசக்கூடாது. பேசுன.. இந்த அழகான தொண்டையில இருந்து வார்த்தை வர முடியாதபடி பண்ணிடுவேன்” என்றதோடு அவளை விட்டவன், எதுவும் நடக்காதது போல் விலகி நின்றான்.

அனுபமாவின் முகம் தீயென ஜொலிக்க, அதைப்பற்றிக் கவலைப்படாமல் திரும்பி நடந்தவன், “அப்புறம்.. உயிர் வாழ ஆசை இருந்தா, சாரா கண்ணுல பட்டுறாத. ஃப்ரீ அட்வைஸ்” என்றவன், நக்கலாக சிரித்தபடி வெளியேறி இருந்தான்.

அனுபமா நடந்ததை ஏற்க முடியாமல் மேசையை பிடித்தபடி நின்று விட்டாள். அவன் ஒன்றும் ஆசையில் தொடவில்லை தான். ஆனால் தொட்டு விட்டான் அல்லவா?

அவளது அலுவலகத்தில், அவளிடமே இப்படி நடந்து விட்டு கூலாக செல்கிறான். அவளால் அவனை சுட்டுப்பொசுக்க முடியவில்லை. நினைக்கும் போது வெறுப்பாக இருக்க, இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

*.*.*.*.*.*.*.*.

அன்று முழுவதும் சாரா வேலையில் இருக்க, இரவும் வீட்டுக்கு வரவில்லை. ஏகாம்பரத்திற்கும் எதோ வேலை இருந்ததால் அவனும் கிளம்பிச் சென்று விட, ராகவி தனியாக வீட்டில் இருந்தாள்.

வீட்டை சுற்றி சுற்றி வந்தவளுக்கு, மனம் கனத்துப்போயிருந்தது. இந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரம் முடியவில்லை. ஆனால் என்னவோ பல நாட்கள் இங்கேயே வாழ்ந்தது போல் இருந்தது.

ஏகாம்பரத்தை பிரிவது வருத்தமாக இருந்தாலும், சாராவை பிரிவதும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் திருமணம் வேண்டாம் என்பது மட்டும் அவளுக்குள் உறுதியாய் இருந்தது. அதனால் வீட்டை விட்டு போவது என்ற முடிவுக்கு வந்தவள், அறையில் சும்மா இருக்க பிடிக்காமல் தொலைகாட்சியை போட்டு விட்டு அமர்நதிருந்தாள்.

ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை. சாராவை பற்றிய எண்ணங்கள் சுழன்று வர, அவன் முத்தமிட்டதும் நினைவு வர, வெட்கம் சூழ முகத்தை மூடிக் கொண்டாள்.

‘எவ்வளவு தைரியமா கிஸ் பண்ணுறாங்க’ என்று நினைத்தவளுக்கு, கோபமே வரவில்லை.

‘நானும் வாங்கிட்டு கம்முனு தான இருந்தேன். தள்ளி கூட விடல. அய்யோ!’ என்று நினைத்தவள், தலையில் அடித்துக் கொண்டாள்.

சாராவை பற்றிய யோசனையிலும் தனிமையிலும் அந்த நாளே கடந்து போனது.

அடுத்த நாள் விடிந்ததுமே, குறிஞ்சி அழைத்து விட்டாள்.

“ராகவி.. என்னமா பண்ணுற?”

“அது தெரியாம தான் உட்கார்ந்துருக்கேன். வீட்ட எல்லாம் க்ளீன் பண்ணிட்டு சாப்பிட்டு முடிச்சுட்டேன். அடுத்து என்னனு தெரியல”

“என் கூட வர்ரியா? கோவிலுக்கு போகலாம்”

“நீங்க என்ன பக்கத்துலயா இருக்கீங்க?”

“நான் கார்ல வந்து உன்னை கூட்டிட்டு போறேன்”

“சரி” என்றவள் தயாராகி காத்திருக்க, குறிஞ்சியின் கார் வாசலுக்கு வந்தது.

வாட்ச்மேனிடம் சொல்லி விட்டு குறிஞ்சியுடன் கிளம்பி விட்டாள்.

“உனக்கு எந்த சாமி பிடிக்கும்?”

“எல்லாமே சாமி தான? அதுல என்ன தனியா ஒன்னு பிடிக்கிறதுக்கு?”

“அதுவும் சரி தான்.”

“ஏன் உங்களுக்கு எந்த சாமி பிடிக்கும்?”

“ஆஞ்சனேயர்”

“அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணீங்க?”

“இதே மாதிரி தான் எல்லாரும் கேட்குறீங்க” என்று குறிஞ்சி முகத்தை சுருக்க, ராகவி சிரித்தாள்.

“கல்யாணம் பண்ணுறதும் பண்ணாததும் நம்ம கையிலயா இருக்கு? அது விதிப்படி தான் நடக்கும்” என்று குறிஞ்சி கூற, “நீங்க எப்பவும் புடவை தான் கட்டுவீங்களா?” என்று கேட்டாள் ராகவி‌.

“ஏன்?”

“நேத்து கட்டிட்டு வந்தது நல்லா இருந்தது. இதுவும் நல்லா இருக்கு. என் கிட்ட சேலை எல்லாம் இல்ல. அம்மாவோடது தான் இருக்கு. அதையும் எப்பவாவது தான் கட்டுவேன்.”

“நாம வாங்கிடலாம் அப்போ. உன் ஒல்லி உடம்புக்கு சேலை நல்லா இருக்கும்”

“அப்படிங்கிறீங்க?”

“ஆனா நீ ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்க? நல்லா சாப்பிட மாட்டியா?”

“நல்லா இருந்தா தான நல்லா சாப்பிட? நான் சமைக்கிறது எப்படி நல்லா இருக்கும்?”

அவள் கையை விரித்து கேட்க, குறிஞ்சி சிரித்து விட்டு, “நம்ம வீட்டுக்கு போனதும் உன் வெயிட்ட ஏத்தி ஹெல்தியாக்குறது தான் முதல் வேலை” என்று கூறினாள்.

இருவரும் நிறைய பேசியபடி கோவிலுக்குச் சென்று விட்டு, சாப்பிங்கும் சென்றனர்.

“நான் காசு எதுவும் எடுத்துட்டு வரல.” என்று ராகவி மறுக்க, “வாங்க போறோம்னு யார் சொன்னா? விண்டோ சாப்பிங் போவோம்” என்று கூறி இழுத்துச் சென்று விட்டாள்.

சும்மாவே அலைந்து விட்டு, இரண்டு ஐஸ்கிரீம் மட்டும் வாங்கி சாப்பிட்டனர்.

“உங்கண்ணன் கூட வந்தேன்னு வையேன் ஐஸ்கிரீம கண்ணுல காட்ட மாட்டாரு”

“ஏன் உங்களுக்கு சேராதா? அப்ப சாப்பிடாதீங்க. உள்ள பாப்பா இருக்குல?” என்று கேட்டவள் அவள் கையிலிருந்து பறிக்க வர, குறிஞ்சி தள்ளி பிடித்தாள்.

“நீ என்ன உன் அண்ணன மாதிரியே இருக்க? ஒரு ஐஸ் தான ஒன்னும் ஆகாது”

“உங்களுக்கு விளையாட்டா இருக்கா? பாப்பாவுக்கு சேரலனா?”

“பாப்பா என்ன ஐஸ அப்படியேவா சாப்பிடுது? ரத்தம் தான போகும். ஒன்னும் ஆகாது”

“இருந்தாலும்..”

“எம்மா.. உங்கண்ணன் தான் போலீஸ் ஆபிஷர். ரூல்ஸ் பேசுறாருனா.. நீயுமா? ஒன்னும் ஆகாது விடுமா”

“ஆகலனா சரி தான். ஆனா எதாவது ஆச்சு.. அண்ணன் கிட்ட சொல்லி…”

“ஜெயில்ல போடச்சொல்லு. இப்ப போகலாம் வா” என்றவள், அவள் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.

ஒன்றும் ஆகாது என்று கூறிய குறிஞ்சி, அடுத்த நாளே அதீத காய்ச்சலில் விழுந்து விட, ராகவி இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்.

Leave a Reply