சாரா 47
![]()
காலையில் விடிந்தது. ராகவி கண் திறக்க, அவள் கண் முன்னால் சாரா தூங்கிக் கொண்டிருந்தான்.
இரவு அழுதவள் அப்படியே தூங்கியிருந்தாள். அவளோடு சாராவும் தூங்கியிருந்தான்.
இரவு பேசியது எல்லாம் நினைவு வர நாக்கை கடித்துக் கொண்டவள், மெல்ல அவனது அணைப்பிலிருந்து விலகி எழுந்தாள்.
‘என்னவெல்லாம் பேசி வச்சுருக்கோம்.. அடியே ராகவி..’ என்று நினைத்து சத்தமில்லாமல் தலையில் தட்டிக் கொண்டு, மெத்தையை விட்டு இறங்கி அறையை சுற்றிப் பார்த்தாள்.
சாராவின் அறைக்கு அவள் வந்தது இல்லை. இன்று தான் பார்த்தாள். பெரிதாக ரசிக்கும் படி எதுவும் இல்லை என்றாலும், அறை நன்றாகவே இருந்தது.
சுற்றியும் பார்த்து விட்டு, சாராவையும் பார்த்தவளுக்கு புன்னகை அரும்பியது.
கப்பலில் வைத்து லிவ் இன் வாழ்க்கைக்கு கூட சம்மதம் என்று சொல்லி கலவர படுத்தியவன், இன்று அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கிறான்.
‘பாஸ் ஏன் பாஸ் இப்படி என் மனச கொள்ளையடிக்கிறீங்க? நீங்க நிஜம்மாவே கொள்ளை கூட்டத்தலைவன் தான் பாஸ்’ என்று நினைத்தவள், சத்தமில்லாமல் பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பி விட்டு, அறையை விட்டு வெளியே வந்தாள்.
குளித்து முடித்து உடையை மாற்றிக் கொண்டு வர, ஏகாம்பரம் வந்து சேர்ந்தான்.
ராகவியை பார்த்தவன் அவள் முகம் எப்போதும் போலவே இருக்க, ‘இவங்க ஒரு முடிவுக்கு வந்தாங்களா இல்லையா?’ என்று குழம்பி விட்டான்.
“நல்லா தூங்குனியா?”
“ம்ம்.. என்ன வாங்கிட்டு வந்துருக்கீங்க?”
“சமைக்க நான் வெஜ்”
“வாவ்..! எனக்கும் சொல்லிக் கொடுங்க”
“சரி எப்ப கல்யாணம்?”
“யாருக்கு?”
“உனக்கும் பாஸுக்கும் தான்”
“அத ஏன் ஏகா கேட்குறீங்க? எல்லாம் கலைச்சு போட்ட இடியாப்பம் மாதிரி ஆகி போச்சு”
“இப்ப புதுசா என்ன பிரச்சனை?”
“புதுசெல்லாம் இல்ல. பழைசு.. அதுவும் ரொம்ப பழைசு”
“அப்படி என்னனு சொல்லேன். நான் வேணா தீர்க்க முடியுதானு பார்க்குறேன்”
ராகவி ஜாதக விசயத்தை விளக்கி முடிக்க, ஏகாம்பரம் முகத்தில் ஈயாடவில்லை.
“அடிப்பாவி.. அப்ப நிஜம்மாவே பாஸ சாகத்தான் கூப்பிட்டியா நீ?”
“ஆமா.. அதுனால தான் கடைசியில நானே வேணாம்னு சொல்லிட்டேன்”
“ஓஹோ”
“பாஸ் கூட வேணாம்னு சொல்லிட்டாரு”
“எதே? அவரு எப்ப இருந்து ஜாதகத்த நம்ப ஆரம்பிச்சாரு?”
“அவரு அத நம்பல. அவரால எனக்கு பிரச்சனை வர கூடாதுனு வேணாம்னு சொல்லுறாரு”
“என்னடா இது..? ஆளுக்கொரு பக்கம் இழுக்கிறீங்க?”
“அதான் இப்ப பிரச்சனையே”
“சரி.. உன் ஜாதகத்துக்கு பரிகாரம் எதுவும் இல்லையா?”
“இருந்துச்சே.. என் பாட்டி கேட்காமலா இருக்கும்?”
“என்னாது?”
“அதான் வாழைமரத்துக்கு தாலி கட்டி அத வெட்டிப்போடுறது”
“குட் ஐடியா.. அப்படி வெட்டிரலாம்ல?”
“முதல்ல அது மூட நம்பிக்கை. அப்படியே பண்ணாலும், அது கடவுளயே ஏமாத்துறது இல்லையா?”
“கடவுள ஏமாத்துறதா?”
“இது தான் நடக்கும்னு என் விதில எழுதினப்புறம்.. அவர ஏமாத்துற மாதிரி, எதையோ வெட்டினா கடவுள் கண்ண மூடிப்பாரா?”
“உனக்கு ஏன் திடீர்னு மூளை இருநூறு பர்ஸன்ட் வேலை செய்யுது?”
“பதில் சொல்லுங்க”
“நியாயமா தான் பேசுற”
“அதான் வேற வழி இல்லாம உட்கார்ந்துருக்கேன்”
“வேணும்னா ஒன்னு பண்ணலாமா?”
“என்னாது?”
“நீங்க தாலியே கட்ட வேணாம். சும்மாவே இருந்துடுங்களேன்”
“அத சொன்னதுக்கு தான், உங்க பாஸ் என்னை கழுத்த பிடிச்சு வெளிய தள்ள ரெடியா இருக்காரு”
“இருந்தாலும் பாஸ் இவ்வளவு நல்லவரா இருக்க வேணாம்”
“பட் அதான் எனக்கு பிடிச்சுருக்கு” என்று சொல்லி ராகவி சிரிக்க, “அது சரி” என்றான் அவன்.
சமையலை செய்து கொண்டே, இதற்கென்ன தீர்வு என்று ஏகாம்பரமும் யோசித்தான்.
“இப்படி பண்ணி பார்க்கலாமா?”
“எப்படி?”
“நீங்க மோதிரம் போட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்ப தாலியே இருக்காதுல?”
“யோவ் இதுவும் கடவுள ஏமாத்துற வேலை தான்யா.. தாலி கட்டுனாலும், மோதிரம் போட்டாலும், இது எதுவுமே போடாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணாலும் கூட, எனக்கு வர போற முதல் புருஷன் செத்து போயிடுவான். புரியுதா இல்லையா?”
ராகவி கடுப்பாக கூற, “அடப்போமா.. இதுக்கு வழியே இல்லாம போயிட்டு இருக்கு” என்று எரிச்சலாக சொன்னான்.
“ஒன்னு நாங்க பிரிஞ்சு போயிடனும். இல்லனா கல்யாணம் பண்ணாம வாழனும்”
“ரெண்டுமே கஷ்டம்ல?”
“ரொம்ப.. ரெண்டு பேருக்குமே இது கஷ்டம் தான்”
ஏகாம்பரம் தீவிர யோசனையுடன் வேலைகளை செய்தான். அவனுக்கு உதவிக் கொண்டிருந்தாள் ராகவி. சமையல் வேலைகள் முடிந்ததும், “பாஸ கூப்பிடு.. சாப்பிடலாம்” என்றான்.
ராகவி சென்று பார்க்க, சாரா அறையில் இல்லை.
“இவர் எப்ப எந்திரிச்சு போனாரு?” என்ற கேள்வியோடு ஏகாம்பரத்திடம் வந்தாள்.
“பாஸ் ரூம்ல இல்ல”
“வெளிய கார் இருக்கா பாரு” என்றதும் அதையும் பார்த்தவள், “இல்லையே” என்றாள்.
“எங்கயாவது அவசரமா போயிருப்பாரு. வருவாரு. நாம சாப்பிடுவோம்” என்றான்.
“சேர்ந்தே சாப்பிடலாம். வெயிட் பண்ணலாம்”
“அப்படி எல்லாம் வெயிட் பண்ணா, நாளைக்கு வர வெயிட் பண்ணனும். ஒழுங்கா சாப்பிடு” என்று ஏகா அதட்டவும், அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
பாதி சாப்பாட்டில் இருக்கும் போது, சாரா வேகமாக வந்தான்.
“பாஸ்.. காலையிலயே எங்க போனீங்க? சாப்பிடலாம் வாங்க” என்று ராகவி அழைக்க, வேகமாக அவளிடம் வந்தவன் அவளது கையைப்பிடித்து எழுப்பினான்.
என்னவென்று புரியாமல் உணவை போட்டு விட்டு அவள் எழ, கையோடு கொண்டு வந்திருந்த தாலியை அவளது கழுத்தில் கட்டி, மூன்று முடிச்சும் போட்டு விட்டான்.
“பாஸ்….” என்று அவள் அலறி கையை தட்டி விட, அசராமல் முடிச்சை போட்டு விட்டே கையை எடுத்தான்.
ராகவிக்கு அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. ஏகாம்பரம் அதிர்ந்து எழுந்து விட்டான்.
குனிந்து தாலியை பார்த்தவளுக்கு, கண்கலங்கி விட்டது. அதையே பார்த்துக் கொண்டு அவள் நிற்க, “பாஸ்.. என்ன பண்ணி வச்சுருக்கீங்க?” என்று ஏகாம்பரம் தான் அதிர்ச்சியை மீறி கேட்டான்.
“தாலி கட்டியிருக்கேன் ஏகா.”
சாரா சாதாரணமாக சொல்ல, ராகவி கோபத்தோடு நிமிர்ந்தாள். அவளது கண்களில் கண்ணீர் உருண்டோட அவனை முறைத்தாள்.
சாரா அவளையே பார்க்க, வேகமாக தாலியை கழட்டப்போனாள். சாரா அவள் கையைப்பிடித்து தடுத்தான்.
“இப்ப நீ கழட்டிப் போட்டாலும் தாலி தாலி தான்” என்றான் அழுத்தமாக.
“ஒரு தாலிய கொண்டு வந்து மூணு முடிச்சு போட்டா அது கல்யாணம் ஆகிடுமா?” என்று கத்தினாள் அவள்.
“ஆகாதா? தாலியே கட்டாம கல்யாணம் பண்ணாலும், அது கல்யாணம் தான்”
ராகவிக்கு அதீத கோபத்தில் மூச்சு வாங்கியது. கண்ணீர் ஒரு பக்கம் உருண்டோடியது.
இந்த நொடியிலிருந்து சாராவின் உயிருக்கு ஆபத்து என்று புரிந்து கொண்ட அவளது இதயம், படுவேகமாக துடித்தது.
அழுகையில் அப்படியே அமர்ந்து விட்டாள்.
ஏகாம்பரத்திற்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.
“ஏன் பாஸ் இப்படி பண்ணீங்க?” என்று கேட்டவன், அதிருப்தியோடு அங்கிருந்து சாப்பிடாமலே சென்று விட்டான்.
சாரா ராகவியை எழுப்பினான். அவள் அவன் கையை தட்டி விட, வழுக்கட்டயமாக எழுப்பி நாற்காலியில் அமர வைத்தான்.
ராகவி கழுத்தில் கிடந்த தூக்குக் கயிறையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாரா கையை கழுவி விட்டு வந்து, அவளது தட்டில் இருந்ததை எடுத்து அவளிடம் நீட்ட, தீயாய் முறைத்தாள்.
“வேணாமா?” என்று கேட்டவன், உடனே தான் சாப்பிட ஆரம்பித்தான்.
ராகவிக்கு கண்ணீர் நிற்காமல் கொட்டியது. சாரா பொறுமையாக சாப்பிட்டு முடித்து விட்டு, கையை கழுவிக் கொண்டான்.
ராகவியையும் கைகழுவ வைத்து விட்டு அழைத்துச் செல்ல, அவன் கையை வெடுக்கென உதறினாள்.
“இப்ப ஏன் கோபம்?”
“என்ன காரியம் பண்ணி வச்சுருக்கீங்க?”
“கல்யாணம் தான்”
“யார கேட்டு தாலி கட்டுனீங்க?”
“உன்னை கேட்டா வேணாம்னு சொல்லுவியே. அதான் கேட்கல”
“யோவ்..”
“நானும் யோவ்வா?”
“டேய்..”
“இதுக்கு யோவ்வே பரவாயில்ல”
“இதுனால உனக்கு தான்யா பிரச்சனை வரும்”
“இருக்கட்டுமே”
“அடேய்…” என்றவளுக்கு கோபத்தில் தொண்டை அடைத்தது.
அவளது கண்ணீரை துடைத்து விட்டவன், “இங்க பாரு.. எப்படி பார்த்தாலும் நாம தான் கல்யாணம் பண்ணிக்கனும். கல்யாணமே பண்ணாம வாழுற வாழ்க்கை மேல எனக்கு இஷ்டமில்ல. அதுனால கல்யாணம் முடிஞ்சு போச்சு” என்றான்.
“எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு…”
“என்னை கொல்லனும் போல இருக்கா? அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க. நீ இப்ப கிளம்பு” என்றான்.
“எங்க?”
“உன்னை எஸ்பி வீட்டுல விட தான்”
“எதே?” என்று கேட்க, “இனி நீ அங்க தான் இருக்கனும்” என்றான்.
“லூசாயா நீ? கல்யாணமும் பண்ணிட்டு போனு சொல்லுற?”
“காரணமா தான் சொல்லுறேன். கிளம்பு” என்றவன், அவளை இழுத்து வந்து காரில் ஏற்றினான்.
ராகவிக்கு தலை வலியே வந்திருந்தது. தலையை பிடித்துக் கொண்டு, நடந்ததை ஜீரணிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
“ரொம்ப யோசிக்காத கவி..”
“பேசாம போங்க. இல்லனா அவ்வளவு தான்”
“கூல்”
“கடுப்பேத்தாதீங்க. யோசிக்காம எவ்வளவு பெரிய தப்ப பண்ணி வச்சுருக்கீங்க தெரியுமா?”
“ப்ச்ச்.. சொல்லுறத கேளு. நீ எஸ்பி வீட்டுல இரு. நான் சில வேலைகளை முடிச்சுட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன். சரியா?”
“அப்படி என்ன வேலை?”
“சில வேலைகள் இருக்கு. நான் எதுவும் யோசிக்காம செய்யல. யோசிச்சுட்டு தான் இந்த முடிவ எடுத்தேன்”
“போயா அங்குட்டு”
“இனி போறதா இல்ல. நான் எல்லாத்தையும் முடிச்சுட்டு உன் கிட்ட வருவேன். அது வரை வெயிட் பண்ணு போதும்”
ராகவிக்கு பேசவும் விருப்பிமில்லாமல் போக, முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“கவி..”
“என்ன?”
“என்னை நம்பலயா நீ?”
“நம்பல”
“கொஞ்சமாவது யோசிச்சு பதில் சொல்லாம்ல”
“முடியாது”
“இருந்தாலும் உனக்கு இவ்வளவு தைரியம் வந்துருக்க கூடாது. பட் சாரா பொண்டாட்டி தைரியமா தான் இருக்கனும்” என்று கூறி சிரித்தான்
அந்த வார்த்தை சந்தோசத்தை விட பயத்தையே அவளுக்கு அளித்ததால், வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
கார் போலீஸ் குவாட்டர்ஸ் வாசலில் வந்து நின்றது. அவள் கையில் ஒரு புது கைபேசியை வைத்தான் சாரா.
அவள் புரியாமல் பார்க்க, “இந்த போன்ல மட்டும் என்னை கூப்பிடு. வேற யாருக்கும் இதோட நம்பர கொடுக்காத. எஸ்பிக்கு கூட சொல்லாத. நான் முக்கியமான வேலை பார்க்க போறேன். முடிஞ்சதும் நானே இதுல கூப்பிடுவேன். அதுவரை வெயிட் பண்ணு” என்றான்.
ராகவிக்கு உள்ளே தடக் தடக்கென இதயம் குதிக்க, அவன் கையைப்பிடித்துக் கொண்டாள். அவன் அவள் கையை தட்டிக் கொடுத்தான்.
சில நிமிடங்கள் இருவருமே அமைதியாக இருந்தனர். ஒரு பெருமூச்சை விட்ட சாரா, “இறங்கி உள்ள போ” என்றான்.
ராகவி அவனை பார்த்து விட்டு, ஒரு முடிவுக்கு வந்தவள் போல் நிமிர்ந்தாள்.
“நீங்க ஒரு விசயத்த பண்ணிட்டீங்க. சரி அத மாத்த முடியாது. ஆனா நானும் ஒன்னு சொல்லுறேன். உங்களுக்கு ஒரு வேளை எதுவும் ஆகிட்டா, அடுத்த தாலி என் கழுத்துல ஏறுறதுக்கு நான் உயிரோட இருக்க மாட்டேன். ஞாபகம் வச்சுக்கோங்க” என்று கூறி விட்டு, இறங்கிச் சென்று விட்டாள்.
அவள் சென்ற சில நொடிகள், அவன் காதில் அவள் பேசியது ஒலித்திக் கொண்டே இருந்தது.
பிறகு மெல்ல புன்னகைத்தவன், “அந்த விதியா நானானு பார்த்துடுறேன்” என்று விட்டு கிளம்பி விட்டான்.
*.*.*.*.*.*.*.*.*.
கருணா தனக்கு வந்த வேலைமாற்றல் ஃபேக்ஸை படித்து விட்டு, கமிஷ்னருக்கு அழைத்தான்
“உங்களுக்கு நேத்து வந்த மாதிரி.. இன்னைக்கு எனக்கும் வந்துடுச்சு” என்றான்.
“இத பத்தி கேட்டா மும்பையில பெரிய பிரச்சனை நடக்குது. அதுக்கு திறமையான ஆள் வேணும்னு என்னை அனுப்புறதா சொன்னாங்க..”
“பின்ன அனுப்ப சொன்னவன் பேரவா சொல்லுவாங்க?”
“இப்ப என்ன பண்ணலாம்?”
“சிவா கையில அடி பட்டுருக்கு. நாமலும் டிராண்ஸ்ஃபர்ல போயிட்டா, சாராவ யாரும் கவனிக்க இருக்க மாட்டாங்க.”
“சோ என்ன பண்ணலாம்?”
“போறதுக்கு முன்னாடி அவனுக்கு எதாவது பண்ணனும்” என்றவன், யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
அதன் முடிவு, அடுத்த இரண்டு நாட்களில் சாராவின் சொத்துக்கள் மீது வருமானவரி சோதனை ஒன்று நடந்தது.
தொடரும்.
