சாரா 48

Loading

வீடு வந்து சேர்ந்த ராகவி, பல மணி நேரம் அறையில் தனியாக அமர்ந்திருந்தாள்.

சாராவுடனே இருக்கப்போவதாக சொன்னவள், திடீரென வந்து அறைக்குள் அடைந்து விட்டதை குறிஞ்சி புரியாமல் பார்த்தாள்.

நேற்று கிளம்பும் போது அவளை தடுக்கத்தான் குறிஞ்சிக்கும் விருப்பம். ஆனால், தடுக்கும் வரை நிற்க கூட அவளால் முடியவில்லை.

வந்தாள். சொன்னாள். கிளம்பியிருந்தாள். விசயத்தை கேள்விப்பட்ட கந்தன் தான், தாண்டவமாட தயாராக இருந்தான்.

“நிறுத்த மாட்டியா நீ?” என்று குறிஞ்சியை கேட்க, “நிறுத்துனா நிக்கிறவளா அவ? அவ பாட்டு எடுத்துட்டு சொல்லிட்டு கிளம்பி போயிட்டா. அண்ணன் வரட்டும்னு சொன்னா, அண்ணன் கிட்ட சொல்லிடுங்கனு சொல்லிட்டு போறா. என்னை ஏன் கேட்குறீங்க?” என்று குறிஞ்சி பாய்ந்தாள்.

அவள் மீது கோபத்தை காட்ட முடியாமல், கந்தன் தான் கடுப்போடு சுற்றினான். ராகவியை அழைத்துப் பார்த்தும், அவள் அழைப்பை ஏற்கவில்லை.

இரவெல்லாம் அப்படி இருந்து விட்டு, காலையில் அவன் அலுவலகம் கிளம்பிச் சென்று விட, ராகவி வந்து நிற்கிறாள்.

“அண்ணனும் தங்கச்சியும் என்ன விளையாடிட்டு இருக்காங்களா?” என்று குறிஞ்சி இடுப்பில் கை வைத்து முறைக்க, அவளுடைய அம்மா, “போன வேகத்துல திரும்பி வந்துட்டாளே.. முகமும் சரியில்ல. அழுத மாதிரி போனா” என்றார்.

“வெளிய வரட்டும் பேசிக்கிறேன்.” என்ற குறிஞ்சி, பல மணி நேரம் காத்திருந்தாள்.

கடைசியாக அவளாக வெளியே வர மாட்டாள் என்று புரிய, தானே சென்று கதவை தட்டினாள்.

“இந்தாமா.. ராகவி.. கதவ திற” என்று தட்ட, சில நொடிகளில் வந்து கதவை திறந்தாள்.

அழுததில் முகம் சிவந்து போயிருந்தது. திட்ட வாய் திறந்த குறிஞ்சிக்கு, அந்த முகத்தை பார்த்து விட்டு வார்த்தை கூட வரவில்லை.

“ஏய்.. ஏன் இப்படி இருக்க? என்னாச்சு?” என்று பதட்டத்தோடு கேட்க, ராகவி அவளை அணைத்துக் கொண்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

குறிஞ்சியும் அவளுடைய அன்னையும், அவளை சமாதானம் செய்து விசயத்தை கறந்தனர்.

சுடிதாருக்குள் கிடந்த தாலியை எடுத்துக் காட்டிய போது, இருவருக்கும் மூச்சே நின்று விட்டது. அவர்களுக்கு ஜாதக விவரம் தெரியுமே.

“என்னமா இப்படி ஆகிடுச்சு?” என்று குறிஞ்சி அன்னையிடம் கேட்க, அவருக்குமே சற்று திக்கென்று தான் இருந்தது.

ராகவி வேறு விடாமல் அழுது கண்ணீரை துடைத்துக் கொண்டே இருந்தாள்.

அவளை மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்த குறிஞ்சிக்கும், இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

சாரா யாரோ ஒருவனாக இறந்து போயிருந்தால் கூட, பெரிதாக வருத்தப்பட்டிருக்க போவதில்லை.

“அச்சோ” என்று உச்சு கொட்டி விட்டு, ராகவியை சமாதானபடுத்தி விடலாம்.

இப்படி தாலியை கட்டி கணவனாகி, தன் உயிரை தானே பணயம் வைத்ததை என்ன சொல்வது?

“தாலிய கட்டுனதும் கோச்சுட்டு வந்துட்டியா?”

“ம்ஹும். அவரே தான் கொண்டு வந்து விட்டாரு” என்று அழுகையுடனே பதில் சொன்னாள் ராகவி.

“ஏன்டி? கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்து விடுறாரு? என்ன தான் நினைச்சுருக்காரு?”

“தெரியல அண்ணி. ஆனா பயமா இருக்கு அண்ணி” என்றவள் மடியில் படுத்தபடி தேம்பினாள்.

குறிஞ்சியின் அன்னை தீவிரமாக யோசித்து விட்டு, “அந்த பையனயே ரெண்டாவது தாலியும் கட்ட சொன்னா என்ன?” என்று கேட்டார்.

குறிஞ்சியும் ராகவியும் அவரை நோக்கி பார்வையை திருப்ப, “எப்படியும் உனக்கு ரெண்டு கல்யாணம்னு தான சொல்லிருக்காங்க. அதுவும் எப்ப சொன்னது? உன்னோட இருபது வயசுல. இப்ப ஜாதகத்துல எதாவது மாறியிருக்கலாம்ல? இல்லனா எதாச்சும் பரிகாரம் இருக்கும்” என்று கூறி அவளை தேற்ற பார்த்தார்.

“பரிகாரமெல்லாம் பொய் அத்த. கடவுள் இது தான் நடக்கும்னு விதில எழுதி தான அனுப்பிருப்பாரு. அப்புறமும் பரிகாரம் பண்ணிட்டேன்னு சொன்னா?”

“தப்ப கண்டு பிடிச்ச கடவுள் தான், மன்னிப்பையும் கண்டு பிடிச்சுருக்காரு. மனசார மன்னிப்பு கேட்டு திருந்துனா, எந்த ஜென்ம பாவத்தையும் மன்னிச்சுடுவார். நீ எந்த தப்பும் பண்ணல. ஆனா உனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குனா? அதுக்கு ஒரு தீர்வும் இருக்கும்”

“எனக்கு நம்பிக்கையே இல்ல.”

“எனக்கு இருக்கு. உன் ஜாதகம் எங்க?”

“அந்த வீட்டுல இருக்கு”

“அத எடுத்துட்டு போய் திரும்ப பார்க்கலாம். நிச்சயமா கடவுள் ஒரு வழி கொடுத்துருப்பாரு” என்று கூறி அவளது அழுகையை நிறுத்தி விட்டு, அவளை விட்டு விட்டு முகவரியை வாங்கிக் கொண்டு கிளம்பினார்.

ராகவி இருந்த பழைய வீட்டில், அவளது ஜாதகத்தை தேடி எடுத்துக் கொண்டு வந்தார்.

அடுத்த நாளே, ஊருக்கு சென்று அவருக்கு தெரிந்த ஜோசியரை பார்த்து வருவதாக கூறிச் சென்றார்.

இங்கு ராகவி நிமிஷத்துக்கு ஒரு முறை சாராவிற்கு என்னாகுமோ? என்று பயந்து செத்துக் கொண்டிருந்தாள்.

அவளால் நிம்மதியாக மூச்சு கூட விட முடியவில்லை. ஒரு நாள் முழுவதும் பயத்தில் கடக்க, அடுத்த நாள் பயம் அதிகமாகி மூச்சு திணறி, பேனிக் அட்டாக் வர, குறிஞ்சி பயந்து போனாள்.

கந்தன் அன்று வேலையை பார்க்கக் கிளம்பவில்லை. நடந்ததை நினைத்து அவனும் குழம்பிக் கொண்டிருந்தான். அவன் முன்னாலே ராகவி மூச்சு திணறி மடங்கி அமர, பயந்து போய் தண்ணீரை கொடுத்து அசுவாசபடுத்தினர்.

அவள் தெளிந்தும் தெளியாமலும் இருக்க, உடனே மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.

தூக்கத்திற்கு மருந்தை கொடுத்து தூங்க வைத்த மருத்துவர், இரத்த அழுத்தத்தை சோதித்து பார்த்து விட்டு, ஏகத்திற்கும் உயர்ந்திருப்பதாக கூறினார். ஓய்வு தேவை என்றதும், அங்கேயே இருந்தனர்.

“ஏங்க.. சாராவுக்கு சொல்லுங்க”

“எதுக்கு? அவன்னால தான் இப்படி கிடக்குறா”

“அதுக்காக? அவர் இவளோட புருஷன். சொல்லித்தான் ஆகனும். சொல்லுங்க”

குறிஞ்சி அதட்டவும், வேண்டாவெறுப்பாய் சாராவை தொடர்பு கொண்டான். சாரா அழைப்பை எடுக்கவில்லை.

“எடுக்கல”

“அப்ப மெஸேஜ் பண்ணி விடுங்க.”

“ரொம்ப அவசியமா?”

“சொல்லித்தான் ஆகனும். உங்க தங்கச்சி கழுத்துல தாலி கட்டுனாலும், அவள அப்படியே திருப்பி கொண்டு வந்து விட்டுருக்காரு. அதுலயே தெரிய வேணாம் அவருக்கு உங்க தங்கச்சி மேல எவ்வளவு பாசம் இருக்குனு. தாலிக்கு வேற எதுவும் காரணம் இருக்கும். ஆனா இப்ப இத சொல்ல வேண்டியது நம்ம கடமை. ஒழுங்கா மெஸேஜ் போடுங்க”

குறிஞ்சி அழுத்திச் சொன்னதும், கந்தனும் செய்தியை மட்டும் அனுப்பி வைத்தான்.

இரண்டு மணி நேரம் கழித்தே அதை பார்த்த சாரா, உடனே அழைத்தான்.

“இப்ப எப்படி இருக்கா?” எடுத்த எடுப்பில் பதட்டத்துடனே கேட்டான் அவன்.

“தூங்கிட்டு இருக்கா”

“அவள பத்திரமா பார்த்துக்கோங்க எஸ்பி”

“நீ வரல?”

“நான் வேற வேலையா வெளில இருக்கேன்”

“ஓஹோ..”

“அவள முழிச்சுட்டா சொல்லுறீங்களா?”

“ம்ம்..”

“நான் வச்சுடுறேன். ரொம்ப முக்கியமான வேலையில இருக்கேன்” என்று விட்டு உடனே வைத்து விட்டான்.

“இது தான் அக்கறையா?” என்று கந்தன் சலிப்பாக குறிஞ்சியிடம் கேட்க, “அவரும் எதாவது வேலையில இருந்துருக்கலாம். சும்மா எல்லாத்துக்கும் குறை சொல்லாதீங்க” என்றாள் குறிஞ்சி.

ராகவி கண் விழித்த பின்பும் அவளது இரத்த அழுத்தம் குறையவே இல்லை. சதாசர்வகாலமும் சாராவின் உயிரை நினைத்து அவனது இதயம் படபடத்துக் கொண்டே இருந்தது.

இரத்த அழுத்தம் அதிகமாகவே இருப்பதால், மருத்துவமனையிலேயே தங்கும் படி ஆகி விட, கந்தன் தான் துணைக்கு இருந்தான். குறிஞ்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டான்.

இரவு தூக்கம் வராமல், பயங்கர நினைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாள் ராகவி.

அவ்வப்போது அழுகை வேறு வந்தது. தவறாக நினைக்க கூடாது என்று புத்தி எடுத்துச் சொன்னாலும், மனம் கேட்கவில்லை. கண்டபடி யோசித்து கலங்கிக் கொண்டிருந்தது. கொடுத்திருந்த தூக்க மருந்தும் கூட வேலை செய்ய முடியாமல் போனது.

இது தான் நடக்கும் என்று தெரிந்த பிறகு, அவளால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

அழுகையோடு போராடி, மெத்தையில் புரண்டு அவள் ஒவ்வொரு நொடியையும் கடக்க போராடிக் கொண்டிருக்க, கந்தன் அவளிடம் தன் கைபேசியை கொடுத்தான்.

“சாரா தான் பேசு. நான் வெளிய இருக்கேன்” என்று கொடுத்து விட்டு சென்று விட்டான்.

காதில் வைத்தவளுக்கு வார்த்தை வரவில்லை. தேம்பல் தான் வந்தது.

“கவி…”

“…”

“இப்ப ஏன் அழுது உடம்ப கெடுத்துக்கிற?”

“பண்ணுறதையும் பண்ணிட்டு ஏன்னு கேள்வி வேறயா?”

“இங்க பாரு.. நடக்குற எல்லாத்தையும் நம்ம கண்ட்ரோல்ல எடுக்க முடியாது”

“அப்புறம் ஏன்யா தாலி கட்டுன?”

“எனக்கு நீ தான் பொண்டாட்டி. உன்னை எவனுக்கும் கொடுக்க எனக்கு இஷ்டமில்ல. அதான் கட்டுனேன்”

“கட்டிட்டு….” என்று ஆரம்பித்தவளுக்கு, சொல்ல முடியாமல் அழுகை தான் வந்தது.

“இப்ப ஏன் நீ பயந்து சாகுற? நேத்து தைரியமா தான பேசுன? எனக்கு எதாச்சும் ஆச்சுனா நீயும் உயிரோட இருக்க மாட்டேன்னு சொன்னல? சொன்னியா இல்லையா?”

“ம்ம்”

“அப்புறம் என்ன பயம்?”

“….”

“ஒன்னு இங்க வாழுவோம். இல்லனா செத்து மேல போய் வாழுவோம். அவ்வளவு தான? மேல இடம் இல்ல போங்கடானு கடவுள் துரத்தி விட்டா, பேயா உலகத்த சுத்துவோம். அவ்வளவு தான? அதுக்கு போய் பயந்து பேனிக் அட்டாக் வர வைப்பியா நீ?”

அவனது பேச்சில் கோபம் வருவதற்கு பதில், புன்னகை வந்தது அவளுக்கு.

“எப்படியும் ஒரு நாள் சாகப்போறோம். இப்பவே செத்துட்டா ஆவியாகி எப்பவும் யங்கா இருக்கலாம். அதுனால அத பத்திலாம் நினைச்சு கவலை படாத கவி. ஃபிரியா விடு”

“சாகுறது உங்களுக்கு ஈசியா இருக்கா?”

“ஒரு வேளை நான் செத்து நீ சாகலனா தான், நான் தனியா சுத்தனுமேனு வருத்தப்படனும். அதான் நீ என் பின்னாடியே வந்துடுவியே. அதுனால சாகுறது கூட எனக்கு ஈசி தான். ஆமா என் கூட வந்துடுவேல?”

“மாட்டேன் போயா”

“அப்ப ஆவியா வந்து உன் உடம்புல புகுந்துடுவேன் பார்த்துக்க.”

“ஆசை தான்.”

“கொள்ள ஆசை தான். உன் கூட வாழனும்னு. அப்படி வாழமுடியாம செத்தா கூட, உன்னை விட மாட்டேன். புரியுதா?”

“ம்ம்”

“இதுக்கும் மேல எதையாச்சும் யோசிச்சு உங்க அண்ணன அழ வைக்காம தூங்கு. என் தங்கச்சிய அழ வச்சுட்டடானு உன் அண்ணன் உன்னை விட அதிகமா கண்ணை கசக்குறாரு.. பார்க்க முடியல”

“ஹலோ என்ன அண்ணன கிண்டல் பண்ணுறீங்க?”

“பார்ரா.. பாசமலர் தங்கச்சிய.. நான் கிணடல் பண்ணல. நிஜத்த சொன்னேன். இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு தூங்கு. நான் வேலைய முடிச்சுட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்.”

“எப்படி?”

“உயிரோ இருந்தா கார்ல.. இல்லனா ஆவியா பறந்து போவோம். என்ன இப்போ?”

அவனது கேள்வியில் மெல்ல புன்னகை படர்ந்து அவள் முகத்தை நிறைத்தது.

மனதில் ஒரு உறுதியும் வந்தது. சாவதென்றால் அதை நினைத்து ஏன் பயந்து சாக வேண்டும். விதியின் வழி இது தான் என்றால், சிரிப்புடனே ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

“இப்ப எங்க இருக்கீங்க?”

“வெளியில..”

“ஓஓ வரமுடியாதா?”

“வந்தா உன் கிட்ட வந்துடுறேன். கவலைப்படாம தூங்கு”

“ம்ம்.. குட் நைட்” என்று கூறியவள் சில நொடிகள் அமைதியாக இருக்க, “என்னமா?” என்றான்.

“ஐ லவ் யூ பாஸ். ரொம்ப ரொம்ப.. என் கிட்ட நீங்க வருவீங்கனு நம்புறேன். உங்களுக்காக வெயிட் பண்ணுவேன்” என்றவளுக்கு தொண்டை அடைக்கும் போல் இருக்க, சரி செய்து கொண்டாள்.

“நான் நேர்ல வந்தே இதுக்கு பதில் சொல்லுறேன்” என்றவன், அதற்கு மேல் பேசாமல் வைத்து விட்டான்.

மனதில் இருப்பதை கொட்டி, அதற்கொரு முடிவும் கிடைத்து விட்டதால், ராகவிக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

“அண்ணா..” என்று கந்தனை அழைக்க, உடனே வந்தான்.

“பேசிட்டேன்” என்று நீட்ட, வாங்கிக் கொண்டே அவளது முகத்தை பார்த்தான்.

நன்றாக தெளிந்திருந்தது.

‘அத்தனை ஆறுதல் சொன்னோம். அசரல. அஞ்சு நிமிஷம் அவன் கிட்ட பேசிட்டு எவ்வளவு மாறிட்டா!’ என்று ஆச்சரியமாக பார்த்தான்.

“நான் தூங்குறேன்ணா.. நீங்க வீட்டுக்கு போறதுனா போங்க”

“இல்லமா.. இங்க இருக்கலாம்னு சொன்னாங்க”

“இங்க தான் என்னை பார்க்க நர்ஸ் இருக்காங்களே. அங்க அண்ணி தனியா இருக்காங்க. நீங்க போய் அங்க இருங்க. எனக்கு எதுவும் வேணும்னா பட்டன அழுத்தி அவங்கள கூப்பிட்டுப்பேன்”

“இருந்துப்பியா?”

மேலும் கீழும் தலையாட்டி அவனை அனுப்பி வைத்தவள், சாராவுடன் பேசியதை நினைத்தபடியே தூங்கி விட்டாள்.

தொடரும்.

Leave a Reply