ராஜா ராணி 2
![]()
“இதற்கு கொஞ்சமும் குறை இல்ல எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி. அப்பாவும் மகளும் என் பேச்ச கேட்டா தான . பொம்பள பிள்ளைக்கு ஒரு அளவுக்கு கொடுக்கனும் செல்லம். இப்படி எல்லாத்துக்கும் செல்லம் கொடுத்து வச்சி குட்டிச்சுவராக்கிட்டு இருங்க. கட்டிக்க போறவன் வீட்டில என்னைய தான் சொல்லுவாங்க. பொண்ணா லட்சனமா வளர்க்காம தின்னி பண்டாரமா வளர்த்து வச்சி இருக்கேன் னு” என்ற அர்ச்சனையை தினமும் வாங்கி பழகியவளுக்கு இப்போது அடுத்த தோசை கவளம் வாயில் இறங்க மறுத்தது. இப்போதும் அந்த குரல் காதில் விழுவது போல் இருக்க கண்ணை கரித்துக் கொண்டு வந்தது அஸ்வினிக்கு. கடந்த நான்கு வருடங்களாக நடப்பது தான்.
சாப்பாட்டின் பாதியில் எழுந்து சென்றவளை தடுத்து உண்ண வைக்க அங்கு அவளுக்கென்று யாரும் இல்லை. வேலை செய்பவர்கள் மட்டும் தங்கி இருக்கும் ஒரு தனியார் விடுதி அது. எல்லாம் இயந்திரகதியில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு ஓடிக்கொண்டிருந்தனர். தன் சாப்பாட்டை பாதியில் முடித்தவள் மதிய உணவை மட்டும் எடுத்துக் கொண்டு தன் பணியை நோக்கி சென்றாள்.
அஸ்வினி, ஊரில் சிறந்த வழக்கறிஞரான புதுமைப்பித்தனின் கீழ் ஜீனியராக வேலை செய்கிறாள். அவளின் திறமைக்கு தனியாக வழக்கில் செயல்பட்டு வெற்றி பெற முடியும். அதில் அவளுக்கு விருப்பம் இல்லை. புதுமைப்பித்தன் தானாக சில வழக்குகளை அவளிடம் கொடுத்து செயல்பட வைப்பார் . அவரால் முடிந்தது இது மட்டுமே. தனியாக செயல்பட பிடிக்காமல் கடைசிவரை புதுமைப்பித்தன் கீழே இருந்து விட நினைத்தாள். தனியாக அஸ்வினி விரும்பாத வரை அனுப்ப முடியாத நிலை வேறு . அதனால் அவரும் தன் மகளை போல் உடன் வைத்துக் கொண்டார். இருந்தும் அவளது திறமைகளை வெளிக்கொணர அவர் தவறியதில்லை.
புதுமைப்பித்தன் ஜீனியர் அஸ்வினியை தெரியாதவர்கள் யாரும் அந்த நீதிமன்றத்தில் இருக்க முடியாது. ஆனால் யாரும் அவளுக்கு சொந்தமில்லையே.
வேலைக்கு வந்து விட்டால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு வேலையில் மூழ்கி விடுவாள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வழக்கும் சவால் தான். உண்மை இருக்கும் பக்கத்தை மட்டுமே கையில் எடுப்பாள். கிரிமினல் வழக்கில் புதுமைப்பித்தன் தோற்றதாக சரித்திரம் இல்லை. முதலில் தன் தனி திறமையால் வென்றவர் தற்போது அஸ்வினியையும் இணைத்துக் கொண்டார். இப்போதெல்லாம் அஸ்வினி பார்த்து சரி என்று கணிக்கும் வழக்குகளை மட்டுமே கையில் எடுக்க தொடங்கி இருந்தார். அவ்வளவு நம்பிக்கை அஸ்வினியின் மேல். பார்த்த நிமிடத்தில் கணித்து விடுவாள் யார் எப்படி என்று. எல்லாம் தொழிலில் தான் . வாழ்க்கையில்? ?
அன்று புதுவிதமான ஒரு வழக்கு . தன் தந்தையை கொன்ற மகனை விடுவிக்க சொல்லி வந்து இருந்தார் அந்த பையனின் மாமா. அவரை பார்த்ததும், அவர் பாசத்தின் பெயரில் வரவில்லை உண்மை யின் அடிப்படையில் வழக்கை கொண்டு வந்திருக்கிறார் என்பது அஸ்வினிக்கு புரிந்து விட்டது. அவரிடம் முழுவதுமாக விசாரித்து பார்த்தவளுக்கு மிகவும் சிக்கலாகவே அந்த வழக்கு தெரிந்தது.
இறந்தவர் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல. சமூகத்தில் முக்கியமான இடத்தில் இருப்பவர். அவர் மகன் தான் கொன்று விட்டான் அதுவும் பணத்திற்காக. கொல்லப் பயன்படுத்திய கத்தியில் அவனின் ரேகைகள் தெளிவாக பதிவாகி இருப்பது தான் பிரச்சனை. அதைவிட பெரிய பிரச்சனை அவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது தான். “நான் தான் அப்பாவ கொன்னுட்டேன்” என்று திரும்ப திரும்ப புலம்பும் அவனின் புலம்பல் வேறு அவனை குற்றவாளியாக்கியது. மனநலம் பாதிக்கப்பட்டதால் இப்போதைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தான்.
“என் மருமகன் அப்படி பண்ணி இருக்க வாய்ப்பே இல்ல மேடம். அவனுக்கு அப்பா னா உயிர். எங்க எல்லாத்தையும் பகைச்சுக்குவான் அவன் அப்பாவுக்காக. எந்த இடத்திலும் அப்பாவ மட்டும் விட்டு குடுக்கவே மாட்டான். அம்மா கூட ரெண்டாவது தான். அப்பா பைத்தியமா இருந்தவன் வெறும் பணத்துக்காக கொன்னுட்டான்னு சொல்லிட்டு இருக்காங்க. பணவிசயத்துல என் மச்சான் கண்டிப்பா தான் இருப்பார். ஆனா அதுக்காக என் மருமகன் இப்படி பண்ண மாட்டான். நீங்க தான் மேடம் இத சார் கிட்ட சொல்லி என் மருமகன வெளிய எடுக்கனும். ” என்று அந்த மனிதர் வேண்ட,
அஸ்வினி சில வினாடிகள் யோசித்தாள். பிறகு சரி என்று கூறிவிட்டாள். அஸ்வினி சம்மதித்தால் புதுமைப்பித்தன் சம்மதம் கிடைத்தது போல் தான். முறை படி வழக்குக்கு தேவையான அனைத்தும் தயாரித்து விட்டு புதுமைப்பித்தனிடம் சென்றாள்.
*.*.*.*.*.*.*.*.*.*
நடக்கும் எதும் நம் கையில் இல்லையென்றாலும் முடிந்த அளவு போராடி பார்ப்பது நம் கடமையே.. அப்படி தான் அந்த இடத்திலும் உச்சி வெயிலை பொருட்படுத்தாது அந்த கட்டிடத்தில் வேலை மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது. அத்தனை பேரின் உழைப்பை உள்வாங்கிக் கொண்டு கம்பீரமாக எழுந்து கொண்டிருந்தது அந்த புதிய சோரூம். கண்ணில் வெயிலுக்கு அணிந்து இருந்த கண்ணாடி சரி செய்து கொண்டே தன் காரியதரிசி சொல்வதை காதில் வாங்கிகொண்டே நடந்தான் வரதன். அவன் கண் வேலை செய்து கொண்டு இருப்பவர்களை எடை போட்டுக் கொண்டே வர அங்கிருந்த ஒருவன் மீது நொடிக்கும் அதிகமாக நிலைத்தது. எப்போதும் தன் முதலாளியின் கண் பார்த்து பணி புரியும் சீனு, வரதன் பார்வைக்கு சரியான அர்த்தம் உணர்ந்து வேலை செய்தவனின் பெயரை சொல்லி அழைத்தான்.
அழைத்த வேகத்தில் மேலுக்கு பவ்யமாய் வந்து நின்றவனின் கண்ணத்தில் இடியாய் இறங்கியது வரதனின் கை. அவன் அரண்டு நிற்க மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். “இங்க வேலை பார்க்க வந்தியா பொண்ணுங்க பின்னாடி சுத்த வந்தியா?” என்று அந்த இடமே அதிரும்படி ஒலித்தது வரதனின் குரல். அடி வாங்கியவன் தலை குனிந்து நிற்க “இவனை வேலைக்கு வச்ச அந்த காண்ட்ராக்டர கூப்பிடு” என்று சீனுக்கு கட்டளை விடுக்க சீனு அவனை போனில் பிடித்து இருந்த இடத்தை கூறி வர சொன்னான்.
மூன்று நிமிடத்தில் அங்க வந்து சேர்ந்த காண்ட்ராக்டருக்கு புரிந்து விட்டது. பக்கத்தில் தலை குனிந்து நின்றவன் ‘தன் பிழைப்பில் மண் அள்ளி போட்டு விட்டான்’ என்று .
“இவன நீ தான வேலைக்கு வச்ச?” என்று கேட்க அவன் தலை மட்டும் லேசாக அசைந்தது ‘ஆமாம்’ என்று. “வேலைக்கு வச்சுட்டு நீ உன் வேலைய பார்க்க போயிட்டியாக்கும். இங்க எவன் என்ன பண்ணுறான் னு கவனிக்குறதுலாம் இல்ல. இவனை போல ஆளுங்க இனி என் கண்ணுல பட்டாங்க காண்ட்ராக்ட்ட அடுத்த நிமிசமே கேன்சல் பண்ணிடுவேன் மைண்ட் இட்” என்று கூறியவன் சீனு பின் தொடர அந்த இடத்தை விட்டு வெளியேறினான். அந்த காண்ட்ராக்டர் தன் பங்குக்கு அவனை திட்டி விட்டு வேலையை விட்டு துரத்தினார்.
காரில் பின் இருக்கையில் அமரந்த படி “இந்த தடவை அந்த **** பெயிண்ட் கம்பெனி கூட எந்த காண்ட்ராக்ட்டும் வேணாம். ரெண்டு இடத்துல இருந்து கம்ப்ளயிண்ட் வந்துடுச்சு. அவங்க வேலை சரி இல்ல னு . சோ அந்த நீயூ கம்பெனி ***** கலர்ஸ் க்கு குடுக்கலாம் . அடுத்து பர்னிச்சர் எல்லாம் **** பர்னிச்சர் க்கே குடுத்துடலாம். இன்னும் இருக்க சில வேலைகளை லிஸ்ட் போட்டு ஈவ்னிங்க குள்ள ரெடி பண்ணிடு” என்று மடமடவென பேசியவாரே தன் மடிக்கணினி யில் குனிந்து இருந்தான் வரதன். சீனு சொன்னவற்றை எல்லாம் குறிப்புகளாக எழுதிக் கொண்டான். வேலையை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு வந்தவனின் கவனத்தை கலைத்தது அவன் கைபேசி. குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வர எடுத்து பார்த்தான் “எங்கே இருக்கிறாய்? ” என்பது சுத்த ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டு இருந்தது. வேலையை அப்படியே விட்டு விட்டு தான் இருக்கும் இடத்தையும் சென்று கொண்டிருக்கும் இடத்தையும் சேர்த்தே அனுப்பி வைத்தான். பதிலாக சில குறுஞ்செய்தி வர படித்து விட்டு மொபைலை ஒரு ஓரமாக வைத்து விட்டு மீண்டும் வேலையில் மூழ்கி விட்டான்.
வரதன், இன்றைய பணபலம் படைத்தை உலகில் அவனுக்கு என்று தனி இடத்தை பிடித்து தக்க வைத்துக் கொண்டவன். தந்தையின் பல தொழில்களில் அவனுக்கு பிடித்தது கட்டிடம் கட்டும் கண்ஸ்ட்ரக்சன் தொழில் மட்டுமே . பல கட்டிடங்கள் சிறு சிறு செங்கல் மணல் சிமெண்ட் மூலம் உயர்ந்து நிற்பதை பார்க்க அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். பெற்றோர்கள் அன்பு அவனுக்கு முழுமையாக கிடைத்தது இல்லை. அவர்களின் இளமைக்காலம் முழுவதும் பணத்தின் பின் ஓடி பெற்ற பிள்ளையை கவனிக்க தவறினர். அப்போதும் அவன் பண்பாளனாக தான் வளர்ந்தான். காரணம் அவனுக்கு கிடைத்த சிறந்த தோழி.
மிகவும் நேர்மையானவனாக இருந்தாலும் தொழிலில் வெற்றி பெற்றுவிட முடியாது என்று சரியாக தொழில் உலகத்தின் நாடிபிடித்து வைத்திருந்தான். அதுவே அவனுக்கு குறுகிய காலத்தில் வெற்றி கிடைக்க வலுவான காரணமாக அமைந்தது. பல பெண்களின் ஆர்வமான பார்வையை தவிர்த்தவனும் ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறான்.
*.*.*.*.*.*.
காலை உணவை கொறித்துக் கொண்டு இருந்த யுவராணியின் பக்கத்தில் வந்து அமர்ந்தார் சீதாராமன். “குட் மார்னிங் யுவா” என்ற தந்தைக்கு “குட் மார்னிங் பா” என்று பதில் சொல்லியபடி சாப்பிட்டு முடித்தாள். “இன்னும் கொஞ்சம் சாப்பிடு யுவா” என்ற அன்னை சரண்யா விடம் “போதும் மா” என்று எழுந்து கொண்டாள். “பா இன்னைக்கு அந்த டீல் ஃபைனைல் ஆகிடும் அண்ட் வரதன் கிட்ட இன்னைக்கு டீடெய்ல்ஸ் எல்லாம் குடுத்துடுவேன்.” என்று கூறி தன் கைபேசியை எடுத்தவாறு சொல்லும் மகளை கவலையுடன் பார்த்தார். அவளோ கண்டு கொள்ளாமல் “வரேன் மா வரேன் பா” என்று கிளம்பி விட்டாள்.
இப்போது அவள் எங்கு செல்கிறாள் என்பது அவருக்கு தெரியும்.
வேலையில் பிழை வந்தால் கூட பொறுத்து போகும் யுவராணி துரோகத்தை மன்னிக்க மாட்டாள். தண்டனையை அவள் முடிவு செய்தாள் என்றால் வரதன் அச்சு பிசகாமல் நிறைவேற்றி விடுவான். சில காலமாக தன் தொழிற்சாலையில் ஏதோ குளறுபடி இருப்பது யுவராணி க்கு தெரிந்தாலும் அதை கண்டு பிடிக்க படாதபாடு பட்டு விட்டாள். எதிரி அவ்வளவு தெளிவாக இருந்தான். யுவராணி யின் வலையில் சிக்காமல் சாமர்த்தியமாக தன் வேலையை செய்து வைத்து இருந்தான். இறுதியில் தன் இடத்தில் இருக்கும் குள்ளநரியை கண்டுபிடித்து வரதன் உதவியோடு அடித்து துவைத்து விட்டாள். இப்போது அவன் உண்மையை சொல்ல ஒப்புக் கொண்டதாக செய்தி வர அங்கு விரைந்தாள்.
கண் ,வாய், மூக்கு, கை, கால் என உடல் முழுவதும் காயம் ஆனால் ஒரு இடத்தில் கூட ரத்தம் வரவில்லை. வரதனின் ஆட்கள் கவனிப்பு அப்படி. துவண்டு கிடந்தவனை நாற்காலி யில் அமர வைத்து இருந்தனர். தன் செருப்பு “டக் டக் ” என அந்த இடம் முழுவதும் ஒலி எதிரொலிக்கும் படி வந்து நின்றாள் யுவராணி. சுத்தி இருப்பவர்கள் விலகி நிற்க இடது கால் செருப்பை ஒரு முறை தரையில் தட்டினாள். அமர்ந்து இருந்தவன் மெல்ல நிமிர்ந்து பார்க்க யுவராணிக்கு ஒருவன் நாற்காலியை கொண்டு வந்து போட்டான். அதில் அமர்ந்து எதிரில் இருப்பவனை உற்றுப் பார்த்தாள். அந்த பார்வை அவனை எச்சிலை கூட்டி விழுங்க வைத்தது.
ஒருவன் வந்து தண்ணீரை கொடுக்க வாங்கி மடமடவென குடித்து முடித்தான். தனது போனை கையில் எடுத்து எதையோ பார்த்துக் கொண்டே “சொல்” என்பது போல் தலையசைக்க தொண்டையில் சிக்கிய வார்த்தைகளை கஷ்டப்பட்டு வெளியில் கொண்டு வந்தான்.
“ஆதீபரமேசுவரன் சார் தான் மேடம் இத செய்ய சொன்னது” என்று அவன் மென்று விழுங்க பட்டென தலையை நிமிர்த்தினாள். அவள் கண்களிலோ “பொய் சொன்ன உயிரோட போக மாட்ட ” என்று எச்சரிக்கை இருக்க அரண்டு போனான்.
“மேடம் நம்புங்க மேடம். அவர் தான் செய்ய சொன்னது. என் வீட்டம்மா அக்கவுண்ட் ல எனக்கு தர வேண்டிய பணத்தை எல்லாம் அவரோட ஆளுங்க மூலமா போட்டு ஆதரமே இல்லாம இதை என்ன வைச்சு செய்ய வச்சார் .” என்று இழுக்க யுவராணி ஒரு புருவத்தை உயர்த்தி ‘இன்னும் என்ன’ என்பது போல் பார்க்க “மிஸ்ஸான எல்லா டீல்ஸூம் ஆதி சார் கம்பெனியோட டைஅப் வச்சிருக்க கம்பெனி க்கு தான் போயிருக்கு. இப்பவாது நம்புங்க மேடம் ” என்று அவன் நம்பாமல் மேலும் அடிப்பார்களோ என்ற பயத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
கண்ணில் கனல் பறக்க நாற்காலியில்இருந்து எழுந்தவள் “நம்புறதா .. அதுவும் உன்னயா. .?” என்று நக்கலாக கேட்டு விட்டு “இவன் சொன்னதை விசாரிச்சு முடிக்குற வரை எதுவும் பண்ண வேணாம் . தண்ணி மட்டும் குடுங்க. அண்ட் குட் ஜாப் பாய்ஸ்” என்று பாராட்டும் விதமாக சொல்லி விட்டு வெளியில் வந்தாள்.
காரில் அமர்ந்தவள் வரதனுக்கு எங்கே இருக்கிறாய் என்று குறுஞ்செய்தி அனுப்ப அவன் இருந்த இடத்தோடு அவளை பார்க்க வந்து கொண்டிருப்பதாக கூற இவள் கட்டிவைத்து இருப்பவன் உளறியதையும் ஆதிபரமேசுவரன் இடத்துக்கு வருமாரும் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வைத்தாள்.
வரதன் வந்து ஆதிபரமேசுவரன் வீட்டின் முன் காரை நிறுத்த சொல்லி காத்திருக்க இரண்டாவது நிமிடம் யுவராணி யின் வேய்ரான் அந்த தெருவில் நுழைந்தது.
அவளே தன் காரை வழக்கம்போல் ஓட்டி வர சீனுவும் வரதனும் இறங்கி நின்றனர்.
சீனு சென்று அங்கிருந்த காவலாளியிடம் விவரம் கூற அவன் கதவை திறந்தான். இருவரின் காரும் அடுத்தடுத்து உள்ளே வந்து நின்றது. தன் காரிலிருந்து இறங்கிய யுவா தன் போனை பார்த்துக் கொண்டே நடக்க வரதன் தன் சாதாரண கண்ணாடியை கழற்றி விட்டு கூலரை அணிந்து இருந்தான்.
சுற்றி பார்வையால் எடை போட்டபடி இருவரும் ஒன்றாக ஆதிபரமேசுவரன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
