மழை 5
![]()
சுபானந்தி முகிலனை பற்றி அருணாவிடம் கேட்க முடிவு செய்திருந்தாள். அருணா மட்டும் தான் எல்லாவற்றையும் பேசக் கூடியவளாக இருந்தாள். வேறு யாரிடமும் சுபானந்தி நன்றாக பழகவில்லை. அருணாவிடம் கேட்டால் போதும். அனைத்தையும் சொல்வாள் என்றே நம்பினாள்.
“அவர் எந்த டிப்பார்ட்மெண்ட்?” என்று நல்ல பிள்ளையாக கேட்டு வைத்தாள் சுபானந்தி.
“அவர் எகனாமிக்ஸ். ஆனா இப்பலாம் அவர் பாடம் எடுக்குறது இல்ல. இந்த காலேஜோட ஓனரே அவங்க குடும்பம் தான். நான் வந்தப்போ எவ்வளவு ஜாலியா இருந்தாரு தெரியுமா? ம்ம்.. எல்லாம் போச்சு. இப்பலாம் இந்த பக்கம் வர்ரதே இல்ல. முக்கியமான மீட்டிங் எதாவது இருந்தா வருவாரு. உடனே கிளம்பி போயிடுவாரு”
‘இங்க இருக்க மாட்டாரா? அதான் பார்க்கவே இல்லையா நாம?’ என்று நினைத்தவள், “ஏன்? இப்ப என்ன ஆச்சாம்?” என்று கேட்டாள்.
“இப்ப இல்ல.. ஒரு வருசமா வர்ரது இல்ல”
‘அப்ப கல்யாணம் முடிஞ்சதுல இருந்தா? ஏன் பொண்டாட்டியோட வேற ஊர்ல செட்டில் ஆகிட்டாரா?’ என்று அவள் யோசனை போக, அருணா தொடர்ந்தாள்.
“உங்களுக்கு ஒரு விசயம் சொல்லுறேன். பெருசா யாரு கிட்டயும் காட்டிக்க கூடாது சரியா?”
“என்ன விசயம்?”
“முகிலன் சார பத்தி தான்”
“சொல்லுங்க” என்று ஆர்வமானாள்.
“ஒரு வருசத்துக்கு முன்னாடி அவருக்கு கல்யாணம் நிச்சயமாச்சு.”
‘அதான் தெரியுமே. அங்க தான நான் இம்ப்ரஸ் ஆனேன்!’ என்று நினைத்துக் கொண்டாள்.
“ஆனா அந்த கல்யாணம் நடக்கல” என்று அருணா வருத்தமாக சொல்ல, “வாட்?” என்று அதிர்ந்தாள்.
‘அந்த கல்யாணம் நடக்கலயா? ஏன்? அன்னைக்கு அவ்வளவு சந்தோசமா பேசிட்டு இருந்தான். அந்த பொண்ணும் கூட நல்லா பேசுச்சே. ரெண்டே நாள்ல கல்யாணம்னு தான பேசுனாங்க. நடக்கலனா? என்ன அர்த்தம்?’ என்று அவள் மனம் வேகமாக யோசிக்க, அருணா அதை அறியாமல் சோகமாக தலையாட்டி வைத்தாள்.
“எவ்வளவு ஆசையா இருந்தோம் தெரியுமா? எங்க எல்லாருக்குமே பத்திரிக்கை வச்சாங்க.”
“ஏன்? என்னாச்சு?” என்று கேட்டவளுக்கு பதட்டத்தை மறைக்க கடினமாக இருந்தது.
“அந்த பொண்ணு மகிளினி.. அவரோட சொந்தக்கார பொண்ணாம். ஆனா வேற ஸ்டேட்ல இருந்துருக்காங்க. கல்யாணத்துக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி அவங்க ஊர்ல எதோ பிரச்சனை.. கட்சி தகராறுனு சொன்னாங்க. அதுல இந்த பொண்ணு மாட்டிக்கிச்சு”
சுபானந்திக்கு பதட்டத்தை மறைக்க முடியாமல் போக, அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அந்த பொண்ணு அன்னைக்குனு பார்த்து கடைசி நேர ஸ்டிச்சிங்க்கு அவ ஃப்ரண்டோட தனியா போயிருக்கு. நம்ம ஊர்ல கல்யாணம் நிச்சயமானா வெளியவே விட மாட்டாங்க. இந்த பொண்ணு போயிருக்கு. போயிட்டு ரிட்டன் வரும் போது, அவங்க வந்த ஆட்டோவ அடிச்சு நொறுக்கி அந்த பொண்ணையும் அடிச்சுருக்காங்க கலாட்டா பண்ணுறவங்க. இது மாதிரி நடந்துட கூடாதுனு தான் நம்ம ஊருல வீட்டுல பூட்டி வைக்கிறாங்க போல”
“அய்யோ” என்று சன்னமாக அலறி சுபானந்தி பதட்டத்தோடு இரண்டு கைகளாலும் வாயை மூடிக் கொண்டு விழியகல பார்த்தாள். அருணா அவளது அதிர்ச்சியை கவனித்தாலும் அவளுக்கும் வருத்தமிருந்ததால் பெரிதாக நினைக்கவில்லை. எல்லோருக்கும் வரும் அதிர்ச்சி என்று நினைத்தாள்.
“பயங்கரமான அடியாம். ஆட்டோ டிரைவர் ஆன் தி ஸ்பாட் செத்துட்டான். ஆட்டோவ கொழுத்தி அந்த பொண்ணு மேல தள்ளி விட்டுட்டு போயிட்டாங்க. பயங்கர கலவரம். அந்த பொண்ணும் அவ ஃப்ரண்ட்டும் பயங்கரமா மாட்டிக்கிட்டாங்க. ரொம்ப நேரமா தேடி தான் அவங்கள கண்டு பிடிச்சுருக்காங்க அவங்க அப்பா அம்மா.”
சுபானந்திக்கு கண்கலங்க பார்க்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
“போலீஸ் அந்த கலவரத்த கட்டுப் படுத்தி, அந்த பொண்ணயும் அடிபட்ட எல்லாரையும் ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காங்க. கூட இருந்த பிரண்ட் பொழைச்சுட்டா. ஆனா கல்யாண பொண்ணு பிழைக்கல. செத்துட்டா” என்று பெருமூச்சு விட்டாள் அருணா.
சுபானந்தியின் கண்ணீர் சட்டென கன்னத்தில் இறங்கி விட, உடனே துடைத்துக் கொண்டாள்.
“கல்யாணம் நின்னு போச்சுனு எங்களுக்கு நியூஸ் வரும் போது ரொம்ப சாக் ஆனோம். அந்த பொண்ணு ஃபோட்டோ பேப்பர்ல எல்லாம் வந்துச்சு. கல்யாணத்துக்கு போகனும்னு ஆசையா இருந்த எல்லாருமே இத கேட்டு கலங்கிட்டோம்னா.. மாப்பிள்ளை அவரு என்னாகி இருப்பாரு? ஒன்னு தெரியுமா? அந்த பொண்ண போஸ்ட் மார்டம் முடிச்சு கரெக்ட்டா என்னைக்கு கல்யாண நாள் குறிச்சுருந்தாங்களோ அன்னைக்கு தான் கொடுத்துருக்காங்க. கல்யாணம் நடக்க வேண்டிய நாள்ல அந்த பொண்ணோட கருமாதி தான் நடந்துச்சு. அன்னைக்கு நாங்க எல்லாம் எவ்வளவு புலம்புனோம்னு எங்களுக்கு தான் தெரியும். காலேஜே ஒரு வாரம் சோகத்துல இருந்துச்சு. எல்லாருக்கும் பிடிச்சவர் முகிலன் சார். அவரு வாழ்க்கையில போயா இப்படி நடக்கனும்னு நொந்து போயிட்டோம்.”
அருணா முடித்த போது அழுதுவிடாமல் இருக்க சுபானந்தி போராடினாள்.
அதற்குள் யாரோ உள்ளே வர, அருணாவின் கவனம் அவரிடம் திரும்பியது. சுபானந்தி சட்டென எழுந்து கழிவறைக்குள் நுழைந்து விட்டாள்.
கதவை அடைத்து விட்டு கண்ணாடியின் முன்னால் நின்றவளுக்கு கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிந்தது.
“ரெண்டு நாள்ல என் கூட இருப்ப” என்றவன் குரல் இப்போதும் காதில் ஒலித்தது. பட்டென இரண்டு கையாலும் காதை மூடிக் கொண்டாள்.
அவளோடு வாழப்போகும் நாட்களுக்காக காத்திருந்தவன் அதே நாளில் அவளது இறுதி ஊர்வலத்தை பார்த்திருக்கிறான்.
அவள் ரசித்த ஒரு ஜோடி ஜோடியாகவே இல்லையாம். அவனது அந்த காதல் கானல் நீரானதாம். அவர்கள் வாழவில்லையாம். அவனது தூய்மையான அன்பு சேர வேண்டிய இடத்தில் சேரவில்லை.
சுபானந்தியின் மனம் வலியில் துடித்தது. அவனது மொத்த பாசமும் வீண். அவளுக்காக அவன் வாங்கிய பொருட்கள் சொல்லும் அவனின் அன்பின் அளவை. அத்தனையும் வீண். எதையும் அனுபவிக்காமல் அவள் உயிரை விட்டிருக்கிறாள்.
அவளை பறி கொடுத்து விட்டு அவன் எப்படி வாழ்கிறான்? அவன் திருமணம் முடிந்து எங்கோ நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று எத்தனை முறை கற்பனையில் நினைத்திருக்கிறாள்?
அவன் வாழவே இல்லையாம். அவளை இழந்து தனியாக நிற்கிறானாம்.
கண்ணீர் மேலும் பொங்கி வர, அவளால் வேறு எதுவுமே யோசிக்க முடியவில்லை.
அப்படி சில நிமிடங்கள் நின்றவள் வெளியே கேட்ட பேச்சுக் குரலில் நிதானத்துக்கு வந்தாள். இருக்கும் இடத்தை உணர்ந்தவள், தன் சோகத்தை ஓரம் கட்டி விட்டு முகத்தை கழுவிக் கொண்டாள்.
இங்கிருப்பவர்களிடம் சோகத்தை காட்ட முடியாது. பல கேள்விகள் வரும். அதனால் முகத்தை சரி செய்து கொண்டு வெளியே வந்தாள்.
அருணாவைக் காணவில்லை. வேறு ஒருவர் மட்டும் இருக்க, அவளும் பெரிதாய் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பி விடலாம் என்பதால் அமைதியாக அமர்ந்து விட்டாள்.
கல்லூரி நேரம் முடிந்ததும் முதல் ஆளாக கிளம்பி விட்டாள். அதற்கு மேல் அவளால் ஒன்றுமே நடக்காதது போல் நடித்துக் கொண்டு அமர முடியவில்லை.
•••
முகிலன் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.
இப்போதெல்லாம் அவன் கல்லூரியில் பாடம் நடத்துவது இல்லை. புது மனிதர்களை சந்திப்பது இல்லை. அமைதியாக கல்லூரி சம்பந்தமான வேலைகளை முடித்து விட்டு அவர்களுக்கு சொந்தமான ரெஷார்ட்டில் சென்று அமர்ந்து விடுகிறான்.
ஊருக்கு வெளியே அமைந்திருக்கும் அழகிய ரெஷார்ட் அது. எத்தனை நபர்கள் இருந்தாலும் மிகவும் அமைதியாகத்தான் காட்சியளிக்கும்.
அங்கு சென்று கணக்கு வழக்குகளை முடித்து விட்டு அந்த இடத்தை சுற்றி வருவான். மனம் அதன் போக்கில் எதையாவது யோசித்துக் கொண்டே இருந்தாலும் கண்கள் அந்த இடத்தை ரசிக்க தான் செய்யும்.
பல மணி நேரங்களை இப்படி வீண் விரயம் செய்வது அவனுக்குப்பிடிக்கவில்லை தான். ஆனால் இப்படி தனிமையில் இருப்பது பிடித்திருக்கிறது.
மகிளினி சென்ற துக்கமா என்றால்? இல்லை. அவளுக்கு மனதிலிருந்து விடை கொடுத்து விட்டான். சொர்க்கத்தில் நிம்மதியாக இருப்பாள். அதைத்தாண்டி எதையும் யோசிக்கவில்லை.
ஆனால் மனம் பழைய நிலைமைக்கு போக விடவில்லை. இந்த அமைதியும் பிடித்திருந்தது.
இன்றும் ரெஷார்ட்டை கவனித்து விட்டு திரும்பி வர, வாசலில் தரகரை பார்த்து விட்டான்.
அவர் நலம் விசாரிக்க, பதிலளித்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டான்.
“இப்படியே இருக்கான். ஒரு பொண்ண பார்த்து கட்டி வச்சுட்டா பழையபடி மாறிடுவான்னு பார்க்குறேன்” என்று சியாமளா பெருமூச்சு விட, “அத பத்தி தான்மா பேச வந்தேன். ஒரு பொண்ணு வீட்டுல நம்ம தம்பிய கேட்க முடியுமானு கேட்டாங்க. ஆனா..” என்று இழுத்தார்.
“ஆனா? என்ன?”
“அவங்க தம்பிய அவங்களோட கூட்டிட்டு போகனும்னு பார்க்குறாங்க. அவங்களுக்கு ஒரே பொண்ணு. மருமகன் தான் எல்லாத்தையும் பார்க்கனும். உங்களுக்கு சமமான வசதி இருக்கவங்க தான். ஆனா இப்படி வீட்டோட கூட்டிட்டு போறது கேட்குறது தான் எனக்கு யோசனையா இருக்கு”
“ஓஹோ.. அவன் இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டானே?”
“நானும் சொல்லி பார்த்தேன். அவங்க தான் விடாம கேட்டுப் பாருங்கனு சொல்லிட்டாங்க. எனக்கே இது பிடிக்கல தான். சம்பந்தம் சரிசமமான இடத்துல வேணும். ஆனா மாப்பிள்ளையும் வீட்டோட வேணுமாம். தம்பிய எங்கயோ பார்த்து பிடிச்சு போயிருக்கு. அதான் என் உசுர வாங்கிட்டாங்க”
“இல்ல தரகரே.. அப்படிலாம் நாங்க அவன அனுப்ப முடியாது. அவனும் ஒத்துக்க மாட்டான். நீங்க பக்கத்துல இருக்க பொண்ணாவே பாருங்க. அவனுக்கு பிடிச்சா மட்டும் போதும்”
“சரிங்கமா” என்று கிளம்பினார்.
•••
மனவலியோடு மூன்று நாட்களை கடத்திய சுபானந்தி அன்றும் அமைதியாக அமர்ந்திருக்க, ஜமுனாவிற்கு மனம் கேட்கவில்லை.
“என்ன எப்ப பார்த்தாலும் எதையோ பறி கொடுத்த மாதிரியே இருக்க?” என்று கேட்டு விட, பெருமூச்சு விட்டாள்.
“ஒரு வருத்தம்மா”
“என்னாச்சு?” என்று கவலையோடு கேட்டார்.
“எனக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தருக்கு கஷ்டம். அதான் எனக்கும் கஷ்டம்”
“யாரு உன் ஃப்ரண்ட்டா?”
மறுப்பாக தலையசைத்தாள்.
பெருமாள் அப்போது தான் வந்தார்.
“இங்க பாருங்களேன். இவளுக்கு எதோ வருத்தமாம்”
“என்னமா?”
“அது ஒரு பெரிய கதைபா”
“சொல்லேன். கேட்போம்”
“போன வருசம் நாங்க காலேஜ்ல இருந்து இந்த ஊருக்கு டூர் வந்தோம் ஞாபகம் இருக்கா?”
“ஆமா”
“அப்படி வந்தப்போ…” என்று ஆரம்பித்து நடந்ததை எல்லாம் சொன்னாள்.
“அவருக்கு கல்யாணம் ஆகி சந்தோசமா இருப்பாருனு நினைச்சேன்பா. அவர போல ஒரு கேரக்டர் தான் வேணும்னு ஆசை பட்டேன்”
“அதான் பார்க்குற மாப்பிள்ளைய எல்லாம் வேணாம்னு சொன்னியா?” – ஜமுனா.
“இல்லமா.. அட்லீஸ்ட் கொஞ்சம் அவர போல இருந்தா போதும்னு நினைச்சேன்.”
“சரி இப்ப என்ன ஆச்சு?”
“அந்த கல்யாணம் நடக்கலயாம். அந்த பொண்ணு இறந்துடுச்சாம்”
“அச்சோ” என்று வருத்தப்பட்டார் ஜமுனா.
“எப்படி?”
“அவங்க இருந்த ஸ்டேட்ல எதோ கலவரம். அதுல அந்த பொண்ணும் அவ ஃப்ரண்டும் மாட்டி.. இறந்து போச்சாம். கல்யாண நாள் அன்னைக்கு தான் அந்த பொண்ணுக்கு கடைசி காரியம் பண்ணிருக்காங்க. கேட்டதுல இருந்து மனசே சரியில்ல”
“அடப்பாவமே!”
“கல்யாண நாள் அன்னைக்கா? ரொம்ப கொடூரமா இருக்கே” – ஜமுனா
“அவரு யாரு தெரியுமா? எங்க காலேஜ் சேர் மேன் பையன். நம்ம பக்கத்து வீடு தான். காலேஜ்ல ஒரு பொண்ணு சொல்லுச்சு இதெல்லாம்.”
“ஓஹோ..”
“ப்ச்ச்.. அத மைண்ட்ல இருந்து எடுக்க முடியாம தான் சுத்திட்டு இருக்கேன்.” என்று பெருமூச்சு விட்டவள், அதன் பிறகு அதை பற்றிப் பேசவில்லை.
அன்று மாலை அறைக்குள் அமர்ந்து வேலை செய்தவள் சன்னல் கதவுகளை திறந்து வைத்திருந்தாள். திடீரென முகிலன் பேச்சு சத்தம் கேட்க ஓடிச் சென்று பார்த்தாள் வெளியே பார்த்தாள். அவனது குரல் தான் அவளுக்கு நன்றாக தெரியுமே!
அவர்களது வீட்டு பக்கம் செடிகள் வைத்திருந்தனர். அதனால் மறு பக்கம் அவள் நிற்பது சரியாக தெரியாது. ஆனால் அவர்கள் பேசுவது அவளுக்கு நன்றாகவே கேட்டது. அவன் வீட்டுக்குள் சென்றதும் திரும்பப் போனவள் தரகர் பேச்சைக்கேட்டு விட்டு அப்படியே நின்று விட்டாள்.
‘அடுத்த கல்யாணமா? பொண்ணு பார்க்குறாங்களா?’ என்று யோசித்தவளுக்கு என்னவோ தோன்றியது.
என்னவென்று அவள் யோசிக்க, “உன் க்ரஸ்ஸ வேற ஒருத்திக்கு கட்டி வைக்க போறாங்களாம். கேட்டியா?” என்று மூளை எடுத்துக் கொடுத்தது.
“ஆமா.. பொண்ணு பார்த்தா கல்யாணம் நடக்க தான செய்யும்?”
“ஆமா ஆமா.. ஆனா இந்த மாதிரி புருஷன் கிடைக்க கொடுத்து வைக்கனும். உனக்கு அந்த கொடுப்பினை இல்ல போ”
“ஹான்?”
“ஆமா.. முதல் கல்யாணம் நடக்கல. இப்ப வேற பொண்ண பார்க்குறாங்க. நீ கடைசி வரை இவர மாதிரி புருஷன் வேணும்னு கேட்டுட்டு ஓரமா நில்லு. உனக்கு எல்லாம் கிடைக்காது”
சட்டென நிமிர்ந்தாள்.
‘இவர மாதிரி புருஷன் ஏன்? இவரே கிடைச்சா?’ என்று நினைத்தவளின் உதடுகள் மெல்ல புன்னகைத்தது.
முதலில் அவனுக்கு திருமணமானதால் அவனே வேண்டும் என்று நினைக்கும் அளவு அவள் போனதில்லை. ஆனால் இப்போது ஏன் விட வேண்டும்? முயற்சித்தால் அவளே அவனுக்கு மனைவியாகலாமே? அவனது அந்த அன்பை அவள் அனுபவிக்கலாம். அவன் மகிளினியை காதலித்தது போல் அவளை காதலிப்பானா? என்று தெரியாது. ஆனால் அவனுடைய குணம் அது அவளுக்கு போதும்.
அவசரமாக தன் நினைவுகளை தாண்டி அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டாள். தரகர் சென்ற பிறகு அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்.
‘நாம லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு அவர் முன்னாடி போய் நிக்க முடியாது. அக்சப்ட் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா மொத்தமும் முடிஞ்சது. பேசாம அரேன்ஜ் மேரேஜ் ஆக்கிட்டா? ஆனா அதுலயும் சிக்கல் இருக்கே. குடும்பம் தெரிஞ்ச குடும்பம் இல்ல. சோ… அதுக்கு இந்த தரகர் தான் வழி. ஒரு ப்ளான போடுறோம். அவன தூக்குறோம். திகழ் முகிலன் எனக்குத்தான்னா அத எவனாலயும் மாத்த முடியாது. மிஸ்டர் திகழ் முகிலன்… உங்களுக்காக இந்த சுபானந்திய காலம் அனுப்பி வச்சுருக்கு. பாத்துட்டு இருந்த வேலைய விட்டுட்டு உங்க காலேஜ்க்கு வந்தேன். ஊருக்குள்ள இருக்க அத்தனை வீட்டையும் விட்டுட்டு உங்க வீட்டு பக்கத்துல வந்துருக்கேன். உங்க வீட்டுக்குள்ளயும் மனசுக்குள்ளயும் வர்ரதா கஷ்டமா இருக்கும்? வந்து காட்டுறேன்.’ என்று முடிவு செய்து விட்டாள்.
‘சுபா.. உனக்கு கூட லவ் பண்ண தெரியுதுடி. ஹய்யோ..’ என்று நினைத்தவளுக்கு வெட்கமும் வர முகத்தை மூடிக் கொண்டு சந்தோசமாக சிரித்தாள்.
