லாவண்டர் 1

Loading

(அவளெனும் பூங்கவிதை பார்ட் 2)

உச்சி வெயிலில் சாலைகள் பழுக்க காய்ச்சிய இரும்பாக கொதித்துக் கொண்டிருந்தது. கோடைக்காலத்தின் உக்கிரம் அப்போதே ஆரம்பித்திருக்க, அனல் காற்று முகத்தில் பட்டதும் எரிச்சலோடு கார் கதவை அடைத்தாள் ஜாக்ஷி.

அடிக்கும் வெயிலை தாண்டிய கோபம் உள்ளத்தில் கொதித்தாலும், முகம் என்னவோ அமைதியாக தான் காட்சியளித்தது.

விறுவிறுவென உள்ளே சென்றவளை எதிர் நோக்கி வரவேற்றான் கந்தசாமி. அவனை பார்த்ததும், “என்ன இதெல்லாம்?” என்பது பார்த்து வைத்தாள்.

அவன் பதில் சொல்லாமல் பெருமூச்சு விட, அவனை தாண்டிக் கொண்டு உள்ளே சென்றாள்.

அந்த தொழிற்சாலை ஜானகிக்கு ஜாக்ஷி எழுதிக் கொடுத்தது. அதை உடன் இருந்து கவனிக்க கந்தசாமியையும் அனுப்பி விட்டாள்.

ஒரே மாதத்தில் பிரச்சனை. சமாளிக்க முடியாமல் கந்தசாமி ஜாக்ஷியை அழைத்து விட்டான்.

அவளும் ஒரு வேலையை முடித்து விட்டு காலையில் தான் விமானத்தில் இருந்து இறங்கினாள். விசயத்தை கேட்டதும் மற்ற வேலைகளை பார்க்காமல், வீட்டுக்குச் சென்று குளித்து கிளம்பி விட்டாள்.

வீராவிடம் சொல்லக்கூட அவளுக்கு நேரமில்லை. எரிச்சலோடு தான் வந்திருந்தாள். கிடைப்பவர்களை ஒரு வழி செய்யும் ஆத்திரம் இருந்தாலும் அமைதியாக காட்டிக் கொண்டாள்.

தொழிற்சாலையின் ஒரு பகுதியில் அங்கு வேலை செய்பவர்கள் எல்லோரும் அமர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்திருந்தனர். அந்த இடத்தில் இருந்த மேசைகளை தள்ளி போட்டு விட்டு, எல்லோரும் அங்கு அமர்ந்திருந்தனர்.

வேலையை நிறுத்தி விட்டு பிரச்சனை செய்து கொண்டிருந்தனர்.

ஜாக்ஷி உள்ளே நுழைந்ததும், எல்லோரும் அவசரமாக எழுந்து நின்றனர். ஜாக்ஷி யாரையும் அமரச் சொல்லவில்லை.

அங்கே முன்னால் இருந்த மேசையில் சென்று நின்று சாய்ந்து கொண்டாள். கால்கள் வலித்தது. தூங்க வேண்டும் என்ற ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டு வந்தவள் சாய்ந்து இலகுவாக நின்றாள்.

எல்லோரும் அவளையே பார்க்க, “என்ன பிரச்சனை?” என்று கேட்டு வைத்தாள்.

ஜானகியும் அங்கே தான் இருந்தாள். அவளோடு கந்தசாமியும் மேனேஜரும் இருந்தார்.

மூவரையும் பார்க்காமல் மற்றவர்களை பார்த்து கேட்டாள்.

சிலர் முணுமுணுக்க, “உங்களுக்குள்ள பேசுனா எனக்கு எப்படி கேட்கும்? முணுமுணுப்ப விட்டுட்டே நேரா விசயத்த சொல்லுங்க” என்று கேட்டாள்.

“மேடம்.. அதான் அவங்களே சொல்லி தான கூப்பிட்டுருப்பாங்க?” என்று ஒருவனின் குரல் கேட்டது.

“அவங்க சொன்னாங்களா இல்லையானு கேட்கல? உங்களுக்கு என்ன பிரச்சனை? அத நீங்க தான் சொல்லனும். இருந்தா சொல்லுங்க. இல்லனா நான் என் வேலையை பார்ப்பேன்”

அவள் அசால்டாக சொல்ல, மீண்டும் சின்ன முணுமுணுப்பிற்கு பிறகு ஒருவன் வாயைத்திறந்தான்.

“மேடம் நாங்க சம்பளம் ஏத்தி கேட்டோம். தரமாட்டேன்னு சொல்லுறாங்க”

“முதல்ல முன்னாடி வாங்க. என்னால எட்டி பார்க்க முடியல” என்றதும் முன்னால் வந்து நின்றான்.

“சம்பளம் ஏத்தி கேட்டீங்களா?”

“ஆமா மேடம். தர முடியாதுங்குறாங்க”

“மேடம்.. நாங்க உழைச்ச காச தான கேட்டோம்? சொத்த கொடுக்க கேட்ட மாதிரி முடியவே முடியாதுங்குறாங்க.”

“அதான… எங்க உழைப்புல நீங்க காரு பங்களானு வாழுறீங்க. கொஞ்சம் ஏத்தி சம்பளம் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க?”

“நாங்க ஒன்னும் கார் வாங்குற அளவு காசு கேட்கல. எங்க குடும்ப செலவுக்கு தான் காசு கேட்குறோம். அத கொடுக்க முடியாதுனா?”

“நாங்க எல்லாம் வேலை செஞ்சு செஞ்சு ஒரு காசு சேர்த்து வைக்கல. ஆனா நீங்க எல்லாம் கார் பங்களானு வாழுறீங்க. நாங்க வேலை பார்க்காம போனா தான் அருமை தெரியும்”

இதை கேட்ட பிறகு சில நொடிகள் அங்கிருந்த யாருமே பேசவில்லை. ஜாக்ஷி மற்றவர்களையும் பார்த்தாள்.

“வேற யாருக்கும் எதுவும் சொல்லனுமா?”

“எங்களுக்கு சேர வேண்டிய பணத்த மட்டும் வாங்கி கொடுங்க மேடம் போதும். மத்த எதுவும் நாங்க கேட்கல”

ஜாக்ஷி கந்தசாமியிடம் திரும்பினாள்.

“காயின்ஸ் வச்சுருக்கியா?”

எந்த கேள்வியும் கேட்காமல், உடனே தன் பர்ஸை திறந்து தன்னிடமிருந்த சில்லறைகளை தேடி எடுத்து நீட்டினாள்.

என்ன பேச வேண்டும் என்று அந்த இடைவேளையில் ஜாக்ஷியின் மூளை தீர்மானித்து விட்டது. கந்தசாமி கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டவள், மற்றவர்களை பார்த்து விட்டு நிமிர்ந்து நின்றாள்.

மேசையை சுற்றிக் கொண்டு பின்னால் சென்றாள்.

“இங்க பல வருசமா வேலை செய்யுறவங்க யாரெல்லாம் இருக்கீங்க? ஏழு.. எட்டு வருசமா..?”

ஜாக்ஷி கேட்டதும் அவர்கள் கை தூக்க, “முன்னாடி வாங்க” என்று அழைத்தாள்.

எல்லோரும் வந்து நின்றனர்.

“இங்க எத்தனை வருசமா வேலை செய்யுறீங்க?”

“ஏழு வருசமா மேடம்”

“ஏழு வருசத்துல வருசத்துக்கு ரெண்டு தடவ சேலரி இன்க்ரிமெண்ட் இருக்கும் தான? கிடைச்சதா?”

அவர் ஒரு நொடி தயங்கி விட்டு, “கிடைச்சது மேடம்” என்றார்.

“நீங்க சொல்லுங்க.. மிக முக்கியமான பண்டிகைக்கு உங்களுக்கு தர வேண்டிய போனஸ் பணம் எல்லாம் வருசம் தவறாம வரனுமே.. வந்துச்சா?”

அவரும் ஒரு முறை தயங்கி விட்டு தலையாட்டினார்.

“வந்துச்சு மேடம்”

“உங்களுக்கு மெடிக்கல் செலவு வந்தா லோன் அப்ளை பண்ணுற ஆப்ஷன் இருக்கே. அத யூஸ் பண்ண எதாவது தடையிருக்கா?”

எல்லோரும் ஒன்றாக இடவலமாக தலையாட்டினர்.

“குட். ஒவ்வொரு கம்பனிக்கும் இதான் ரூல்ஸ்னு சொல்லிட்டு தான் வேலைக்கு சேர்க்குறோம். இந்த ஃபேக்டரி ரூல்ஸ் படி நடக்க வேண்டியது எல்லாமே தன்னால நடந்துட்டு இருக்கும் போது இதென்ன திடீர்னு சம்பளம் கூட வேணும்னு? கொடுக்குற பணத்துல பாதிய தரலனா கேள்வி கேட்கலாம். கொடுத்ததெல்லாம் போக இன்னும் கொடுனு கேட்டா என்ன அர்த்தம்?”

அவளது கேள்விக்கு முணுமுணுப்பு எழ மேசையில் ஓங்கி அடித்தாள். அந்த சத்தத்தில் அத்தனை பேரும் அதிர்ந்து நின்றனர்.

“பேசும் போது என் கிட்ட பேசுங்க. உங்களுக்குள்ள பேசிக்கிறதுனா நான் ஏன் இங்க வந்து நிக்கிறேன்? எனக்கு வேற வேலை இல்லையா?”

“எங்களுக்கும் வேலை இருக்கு மேடம். நாங்க வேலை பார்த்த காசு தான் கேட்குறோம். விலைவாசி கூடிப்போச்சு மேடம். நீங்க ஏத்தி கொடுக்குற ஐயாயிரம் பத்தாயிரத்துல கார் பங்களா எல்லாம் வாங்க முடியாது. எதோ நாலு புதுத்துணி வாங்கலாம். அவ்வளவு தான். அத கொடுக்க இவ்வளவு இழுக்குறீங்க?”

“நல்ல கேள்வி தான்.. ஆனா அந்த ஐயாயிரமும் பத்தாயிரமும் நான் ஏன் கொடுக்கனும்னு தான் இன்னும் புரியல”

“நாங்க தான உழைக்கிறோம்? நாங்க உழைக்காம இந்த ஃபேக்டரி நடந்துருமா? இல்ல நீங்க இப்படி ஏசில சொகுசா வாழத்தான் முடியுமா?”

“ஓ..” என்று இழுத்தவளுக்கு சிரிப்பு கூட வந்தது.

“சினிமா வசனமா? கேட்க நல்லா இருக்கு. சரி உங்களுக்கு தானா புரியாது. புரிய வச்சுட்டே போறேன்” என்றவள் முன்னால் நின்றிருந்தவரை அழைத்தாள்.

“நீங்க தான இங்க ஏழு வருசமா வேலை பார்க்குறது? இங்க வந்து நின்னு… இந்த வரிசையில மூணாவது இருக்கே அந்த மிஷன கொஞ்சம் பாருங்க.”

சொன்னதும் எட்டிப் பார்த்தார்.

“பார்த்தாச்சா? அந்த மிஷன் என்ன விலை இருக்கும்?”

“என்ன ஒரு… அம்பது அறுபது லட்சம்..”

“ஒன்றரை கோடி.. அத வாங்கும் போதே அதோட விலை ஒன்றரை கோடி. வாங்கி எத்தனை வருசம் ஆகுது?”

“மூணு வருசம்” என்றவரின் குரலில் ஒரு தடுமாற்றம்.

“இந்த மிஷன் மாதிரி இத விட பெருசு.. இத விட முக்கியமான மிஷன் எல்லாம் இந்த ஃபேக்டரில இருக்கு. மொத்தமும் எவ்வளவு கோடி தெரியுமா?”

அங்கிருந்த அத்தனை பேரையும் பார்த்து கேட்டு வைத்தாள்.

‘அதுக்கு நாங்க என்ன பண்ணனும்? எங்க காச கேட்டா மிஷன் விலைய சொல்லிட்டு இருக்க’ என்று ஒருவன் எரிச்சலாக நினைத்தாலும் வாயைத்திறக்கவில்லை.

சொல்லி இருந்தால் அவன் ஒரு வழியாகி இருப்பான். நல்ல வேலையாக தப்பினான்.

“இங்க இருக்கதுலயே மிக முக்கியமான ஒரு மிஷன்.. அதோட விலையெல்லாம் நீங்க யாரும் நினைச்சு கூட பார்க்க முடியாது.” என்றவள் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு விசயத்திற்கு தாவினாள்.

“இப்ப.. உங்க பிரச்சனைய சொல்லிட்டீங்கள்ள.. நான் ஒரு பிரச்சனைய சொல்லுறேன். அதுல நீங்க உங்க கருத்த சொல்லுங்க” என்றவள் தன்னிடமிருந்த நாணயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

“இங்க இருக்க நிறைய பேர் சொந்தமா பிஸ்னஸ் ஆரம்பிக்க ட்ரை பண்ணிருக்கலாம். இப்பவும் பண்ணிட்டு இருக்கலாம். அவங்களுக்கு எல்லாம் தெரியும். ஒரு தொழில ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நாம பணத்த போடனும். உழைப்பு ரெண்டாவது பட்சம். பணம் தான் முதல்ல தேவை. இங்க நான் போட்டுருக்க பணம் எவ்வளவு தெரியுமா?”

அமைதியே நிலவியது.

“அத நீங்க தெரிஞ்சுக்க வேணாம். அந்த மொத்த பணமும் இந்த ஒரு காயின்னு வச்சுக்கலாம். இது என்னோட சொந்த பணம். அதாவது இந்த நிமிஷம் உங்க பாக்கெட்ல இருக்கே அது மாதிரி முழுக்க முழுக்க எனக்கும் என் குடும்பத்துக்கும் சொந்தமான பணம் இது.

இத நான் போட்டாலும் இதால மட்டுமே நான் ஒரு ஃபேக்டரிய ஆரம்பிச்சு ஓட்ட முடியது. அதுக்கு பேன்க்ல லோன் வாங்கனும். அந்த பேன்க் லோன், போய் கேட்டதும் வச்சுக்கோனு தூக்கி கொடுத்துடுவாங்களா? அதுக்கு என்ன என்ன செய்யனும்னு தெரியுமா? நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்கும் தான?

அப்படி நான் கஷ்டப்பட்டு போராடி வாங்குன லோன் இது. இன்னொரு காயின்.”

சத்தமெழ மேசையில் பட்டென வைத்தாள்.

“இது ரெண்டையும் வச்சு இருக்க மிசன எல்லாம் தேடிப்பிடிச்சு வாங்கி, அது போக ரா மெட்டீரியல் எல்லாம் வாங்கி குவிச்சா… அதுக்கப்புறம் தான் நீங்க வர்ரீங்க. நீங்க என்ன செய்வீங்க? வாங்கி வச்சுருக்க மெடீரியலயும், வாங்கி வச்சுருக்க மிசனையும் வச்சு ப்ராடெக்ட்ட உருவாக்குவீங்க. உருவாக்கி அடுக்கிட்டு, வீட்ட பார்த்து போயிட்டே இருப்பீங்க.

ஏன்? ஏன்னா… ரா மெட்டீரியல் உங்க பணத்துல வாங்கல. இங்க இருக்க மிஷனுக்கு நீங்க லோன் வாங்கல. அதனால செஞ்சு வச்ச ப்ராடெக்ட்ட விக்கிறதும் உங்க வேலை கிடையாது. இது எல்லாம் பண்ணது நான். அதுனால விக்க வேண்டியது என் வேலை. உங்களுக்கு அத பத்தி எந்த கவலையும் கிடையாது.

காச கோடி கோடியா செலவு பண்ண நான், அத கூவி கூவி விக்கனும். கொண்டு போன பொருளுக்கு சரியான பணம் வந்து சேருமா சேராதானு நான் தான் தவிக்கனும். உங்களுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”

கையை விரித்து கிண்டலாக சொன்னவள், பார்வையில் அனல் பறக்க ஆரம்பித்தது.

“இப்ப அந்த ப்ராடெக்ட்ட கஷ்டப்பட்டு நான் வித்துட்டேன்னு வச்சுப்போம். இதோ லாபம். நான் போட்ட முதல விட ரெண்டு மடங்கு லாபம்.” என்றவள் அடுத்த நாணயங்களை மேசையில் அடித்து வைத்தாள்.

அந்த சத்தம் பலருக்கு பீதியை கொடுத்தது.

“இந்த லாபமும் நான் போட்ட முதல் பணமும் சேர்த்து என் கிட்ட மூணு காயின் இருக்கு. இந்த காயின்ல தான் நான் மிசன் வாங்கிட்டேனே.” என்றவள் ஒன்றை தூக்கி கந்தசாமியிடம் ஏறிய அவன் அலட்டாமல் பிடித்துக் கொண்டான்.

“இந்த மூணும் தான் இப்ப என் கிட்ட இருக்க பணம். ஒன்னு நான் போட்ட முதல். இத எடுத்து நான் கார் பங்களானு வாங்குனா.. அந்த நிமிஷமே ஃபேக்டரிய இழுத்து மூடனும். அதனால இத நான் தொடக்கூடாது. இது அடுத்து மூலப் பொருள் வாங்க மட்டும் தான் நான் யூஸ் பண்ணனும்”

அடுத்ததையும் கந்தசாமியிடம் எறிந்து விட்டு, கடைசியாக இரண்டு நாணயங்களை வைத்திருந்தாள்.

எல்லோரின் பார்வையும் அந்த நாணயத்தின் மீதும் அவளின் மீதும் தான் இருந்தது.

“இது தான் லாபம். இதுல.. இந்த ஒரு காயின்.. நான் லோன் வாங்குனேன் பாரு.. அந்த பேன்க்ல நான் வட்டி கட்ட கொடுக்கனும். ஒவ்வொரு மாசமும் இங்க இருக்க மிஷனுக்கு எவ்வளவு வட்டி கட்டுறோம்னு தெரியுமா? பாதி மிஷனுக்கு மேல வட்டி கட்டி முடிக்கல. இதுல இடையில பிரச்சனை ரிப்பேர்னு வரும். அதையும் நான் இந்த பணத்துல தான் சமாளிக்கனும். அதுனால இதுவும் எனக்கு சொந்தமில்ல”

மற்றொன்றை எடுத்து கந்தசாமியை பார்க்க, அவன் காசை பிடிக்க தயாராக நின்றான். அவள் போட்டதும் சட்டென பிடித்துக் கொண்டான்.

“இப்போ கடைசியா என் கிட்ட இருக்கது இது தான். என்னோட ஒரே லாபம். இந்த லாபத்துல.. பாதிய வச்சு நான் வொர்க்கர்ஸுக்கு சம்பளம் கொடுக்கனும். போனஸும் கொடுக்கனும். இதுல மீத பாதி தான் எனக்கு. நான் வீட்டுக்கு எடுத்துட்டு போறது”

“வொர்க்கர்ஸுக்கு பாதி.. உங்களுக்கு பாதியா? நாங்க நூறு பேரும்.. நீங்க ஒரு ஆளும் ஒன்னா?”

“ஆமா ஒன்னு தான்.. நீங்க நூறு பேரும் கோடி கணக்குல பணம் போடல. நீங்க அந்த பொருள் வித்தாலும் இல்லனாலும் சரியான தேதிக்கு சம்பளம் வாங்குறீங்க. நான் போட்ட காசு திரும்பி வருமா வராதானு ராப்பகலா முழிச்சு வேலை பார்க்குக்ஷ மாதிரி நீங்க பார்க்கல. உங்க வேலை நேரம் முடிஞ்சதும் கிளம்பி போயிடுவீங்க. பணத்த போட்ட நான் எல்லா லாபத்தையும் உங்களுக்கே தூக்கி கொடுக்க நான் என்ன தர்ம சத்திரமா நடத்துறேன்?”

குரல் உயர்த்தி அவள் கோபமாக கேட்க, சிலருக்கு உடலே நடுங்கியது.

“எப்படி எப்படி? கோடி கோடியா பணத்த போட்டு இருபத்தி நாலு மணி நேரமும் உழைப்பையும் போட்டு, வேலை பார்க்குற நான் லாபத்த எடுக்கவே கூடாதா? அதுல நான் கார் பங்களானு வாழுறேன்னு வேற சொல்லுறீங்க? எல்லா பணத்தையும் உங்களுக்கே கொடுக்கனுமா? என்ன கேட்டீங்க? நீங்க உழைச்ச காச கேட்டீங்களா? நீங்க உழைச்சத தான மாசம் மாசம் வாங்குறீங்க. உங்க உழைப்பு கூடும் போது அதுக்கான பணத்த சேர்த்து தான கொடுக்குறோம். அப்புறம் என்ன எங்க கார் வீடு மேல கண்ணு? என்ன சொல்ல வர்ரீங்க நீங்க எல்லாம்?

சினிமா பார்த்துட்டு முதலாளி எல்லாருமே கெட்டவங்க.. வேலை செய்யுறவங்க உழைப்பை சுரண்டி ஏசில சந்தோசமா வாழுறாங்கனு நினைச்சுட்டு இருக்கீங்க. நீங்க உழைச்சதுக்கு கூலி வாங்கிட்டீங்க. அப்ப நாங்க உழைச்சதுக்கு கூலி எங்களுக்கு வரவேணாமா? நாங்க ஒன்னும் உட்கார்ந்த இடத்துல முதலாளி ஆகல. பணத்த கொட்டிருக்கோம். ஒரு தொழில ஆரம்பிக்கிறது எவ்வளவு பெரிய வேலை தெரியுமா? அதுக்காக எவ்வளவு போரட்டத்த சந்திக்கனும் தெரியுமா? அத்தனையும் சந்திச்சு போராடி தான் ஒரு தொழில நடத்துறோம்.

பலர் அதுல தோத்து போய் ஊர விட்டே ஓடுறாங்க. அவங்க எல்லாம் முதலாளியா கால் மேல கால் போட்டு உட்கார்ந்துட்டு மத்தவங்க கிட்ட வேலை வாங்கி சொகுசா வாழலாம்ல? ஏன் வாழ முடியல? உங்களுக்கு எட்டு மணி நேர வேலை. எங்களுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் வேலை தான். அத்தனைய செய்யுற நாங்க எங்க இஷ்டத்துக்கு வாழாம? எல்லாத்தையும் தானமும் தர்மமும் பண்ணுனு கேட்க நீங்க யாரு?”

கந்தசாமிக்கு விசில் அடிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் இருக்கும் இடம் கருதி வாயை மூடிக் கொண்டு நின்றான்.

“யாரோ சொன்னீங்களே.. உங்க காசு.. இந்த மிஷன் வாங்க நீங்க ஒரு கோடி கொடுத்தீங்களா? இல்ல நீங்க பிஸ்னஸ் பார்ட்னரா? செய்யுற ஒவ்வொரு பொருளையும் விக்க ஏற்பாடு பண்ணீங்களா? இல்ல விக்க முடியாம நஷ்டமா கிடக்கும் போது உங்க சம்பளம் வேணாம்னு சொல்லிட்டு போனீங்களா? வந்து சொல்லுங்களேன். லாபத்த முழுசா எங்களுக்கு கொடுனு கேட்குறீங்க.. நஷ்டம் வந்தா சம்பளமே இல்லாம வேலை செய்யுறேன்னு ஒருத்தர் சொல்லுங்க பார்ப்போம்? உங்க உழைப்புக்கு உங்களுக்கு ஊதியம் வேணும்ல? அப்ப நான் போட்ட பணம்? என் உழைப்பு? நான் அடைஞ்ச நஷ்டம்? இதெல்லாம் யாரு பார்க்குறது?”

பதில் எதுவும் வரவில்லை.

“உங்களுக்கு கொடுக்குற இன்க்ரீமண்ட் சரியா வரலனா கேளுங்க. இல்ல உங்களோட வேலைய மதிக்கலனா கேளுங்க. அத விட்டுட்டு சும்மா கார் பங்களானு பேசிட்டு இருக்கீங்க… இப்ப உங்களுக்கு என்ன? வந்த ஒரே மாசத்துல ஜானகி கார் வாங்கிருக்கா. கார்ல போயிட்டு வர்ரா. அதான பிரச்சனை?”

எல்லாம் முடிந்து முக்கியமான இடத்திற்கு வந்து விட்டாள்.

எல்லோருமே இதில் பம்ம ஆரம்பித்தனர்.

“அவள மட்டும் பார்க்குறீங்க? அவள பெத்த அப்பா தான் இந்த ஃபேக்டரிய ஆரம்பிச்சது. அவர் கார்ல வந்து போனப்போ உங்களுக்கு இப்படி பிரச்சனை வந்தது இல்லையே.. இப்ப மட்டும் என்ன? புதுசா வந்துருக்கவ.. நம்ம இஷ்டத்துக்கு அவள பயமுறுத்தி பார்க்கலாம்னு நினைப்பா? செஞ்சு பாருங்களேன். இன்னுமும் இங்க நான் பார்ட்னர் தான். பொறுத்து பார்ப்பேன். பிடிக்கலயா இழுத்து மூடிட்டு இருக்க எல்லா மிஷனையும் வித்துட்டு, மிச்சம் இருக்க லோன அடைச்சுட்டு வேலைய பார்த்துட்டு போயிட்டே இருப்பேன். பார்க்கலாமா?”

சவாலாக கேட்க, எல்லோரின் முகத்திலும் பீதி தெரிந்தது.

“யாருக்கு வேலை போனா எனக்கு என்ன? நேரா போய் நீங்க கேட்டப்போ எல்லாம் சம்பளம் ஏத்தி கொடுக்குற ஒரு முதலாளியா பார்த்து வேலையில சேருங்கனு சொல்லிட்டு நடைய கட்டிருவேன். எனக்கு இது மாதிரி நூறு வேலை இருக்கு. கிளம்புங்கனு முடிச்சுட்டா சந்தோசமா இருக்குமா?”

“மேடம்…”

“மேடம் தான்.. நான் மட்டும் இல்ல. இவளும் மேடம் தான். இதோ நிக்கிறானே இவனும் சார் தான். இவங்க எல்லாரும் இருபத்தி நாலு மணி நேரமும் உழைக்கிறவங்க. நடு ராத்திரி ரெண்டு மணிக்கு கந்தசாமிக்கு கால் பண்ணி, அந்த கம்பெனி கொடுக்க வேண்டிய செக் வந்துச்சா இல்லையானு கேட்டா, கால் அட்டன் பண்ணி செக் பண்ணி பதில் சொல்லிட்டு தூங்குவான். நீங்க செய்வீங்களா? நான் கால் பண்ணி கேட்டா அந்த செக் பத்தி உங்களுக்கு தெரியுமா?

அதோ மேனேஜர்.. ஏன் சார் மெடீரியல் இன்னும் வரலனு கேட்டா.. லாரி ஸ்ட்ரைக் மேடம்.. வேலைய ஆரம்பிக்கலனா கோடிக்கணக்குல நஷ்டமாகும். எப்படியாவது நம்ம சொந்த வண்டிய அனுப்பி எடுக்க பார்த்துட்டு இருக்கேன் மேடம்னு பரபரப்பா பதில் சொல்லிட்டு, அவசரமா அவசரமா வேலைய பார்க்க ஓடுவாரு. நீங்க ஓடுவீங்களா? மாட்டீங்க தான? கொண்டு வந்து கொடுத்தா செஞ்சு வைக்கிறேன். இல்லயா எனக்கு தெரியாதுனு போயிடுவீங்க.

இதோ இங்க நிக்கிறாளே… ஒரு நாளைக்கு ஒரு நேரம் தான் நிம்மதியா சாப்பிட நேரமிருக்கு அவளுக்கு. அத்தனை பிரச்சனைய சமாளிக்கனும். ஆட்டோல போய் வர்ர நேரத்த விட, கார்ல போனா போர வர்ர நேரம் கூட நாலு வேலைய சேர்த்து பார்ப்பேன்னு வாங்கிருக்கா. அது உங்க கண்ண உறுத்திடுச்சு. அப்படிதான?”

கந்தசாமி ஜானகியை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான்.

“இப்ப சொல்லுறேன் கேளுங்க. நீங்க கேட்குற மாதிரி என்னால சம்பளம் தர முடியாது. அதே போல நான் எடுக்குற லாபத்த.. அதாவது நான் கார் வாங்குறேன் பைக் வாங்குறேன் பங்களா கட்டுறேங்குறத கேட்க உங்களுக்கும் உரிமை கிடையாது. நான் பணம் போட்டேன். லாபம் எடுத்தேன். நீங்க உழைப்ப போட்டீங்க சம்பளம் வாங்குனீங்க அவ்வளவு தான். கந்தசாமி..”

திட்டவட்டமாக சொல்லி விட்டு கந்தசாமியை அழைத்தாள்.

“மேடம்..”

“இவங்க எல்லாம் வேலை பார்த்தா பார்க்கட்டும். இல்லயா கிளம்பட்டும். எத்தனை பேர் போறாங்களோ அத்த வேகன்ஷி போடு. புது ஆள எடுத்துக்கலாம். அதையும் மீறி பேசுனா சொல்லு.. இந்த ஃபேக்டரி தலை வலியே எனக்கு வேணாம். வேற நிறைய வேலை இருக்கு எனக்கு. இத கட்டிட்டு என்னால அழ முடியாது”

கந்தசாமி தலையாட்டி வைத்தான்.

“என்ன சொன்னது கேட்டுச்சா? வேலைய பார்க்குறதுனா பாருங்க. இல்லையா கிளம்புங்க. நியாயம் இல்லாம உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால வந்து நிக்க முடியாது. கிளம்புங்க…”

எல்லோரும் தங்களுக்குள் பேசியபடி நகர, “நில்லுங்க.. இத்தனை வருசமா இல்லாம இப்படி ஒரு பிரச்சனைய உங்களுக்குள்ள கிளப்பி விட்டது யாரு?” என்று கேட்டாள்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, கடைசியாக ஒருவனின் பக்கம் பார்வையை திருப்பினர்.

“நீ தானா? இங்க வா.. நீங்க கிளம்புங்க” என்று விட்டாள்.

அவன் சற்று திமிராக முன்னால் வந்தான். என்ன செய்து விட முடியும்? என்ற திமிர்.

“எத்தனையாவது வேலை இது உனக்கு?”

இந்த கேள்வியை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவனும் தான்.

“அ..”

“என்ன?”

“மூணு..”

“பொய் சொல்லாத.. இது உன்னோட பத்தாவது வேலையா இருக்கும். போற இடத்துல எல்லாம் இப்படி பிரச்சனைய இழுத்து வேலைய கெடுத்துட்டு இருக்கியா நீ?”

“மேடம்.. நான் உண்மைய தான் சொன்னேன். நீங்க தான் அப்படி இப்படினு பேசி எல்லாரையும் கலைச்சு விட்டீங்க. பணக்காரங்க புத்தி”

“அப்படியா? அப்ப எனக்கு பதிலா நீ லோன் கட்டுறியா? நான் கட்ட வேண்டிய கோடிக்கணக்கான பணத்த வெறும் எட்டு மணி நேரம் வேலை பார்த்து நீ கட்டுறீயா?”

“அத ஏன் நான் கட்டனும்? நானா வாங்குனேன்?”

“அதான.. உன் வேலை அடுத்தவங்கள தூண்டி விட்டு அவங்க வேலைய கெடுக்குறது தான? கந்தசாமி.. போலீஸ்க்கு ஃபோன் பண்ணு. இவன பிடிச்சுட்டு போய் உள்ள வச்சா தான் அடங்குவான்”

காவல்துறை பெயரைக்கேட்டதும் அவன் ஓடப்பார்க்க, கந்தசாமி எட்டிப்பிடித்து விட்டான்.

“ஓடுறான்? அப்ப க்ரிமினலா நீ?” என்றவள் உடனே காவல்துறையினரை அழைத்து விட்டாள்.

அங்கிருந்த அத்தனை பேரும் வேடிக்கை பார்க்க, “என்ன வேடிக்கை? ஏற்கனவே வீணாக்குன நேரம் போதாதா? போய் வேலைய பாருங்க. இவ்வளவு நேரம் தேவையில்லாம நேரத்த செலவழிச்சதுக்கும் சேர்த்தும் இன்னைக்கு வேலைய முடிக்கிறீங்க. மேனேஜர்.. முடிக்காம யாராச்சும் கிளம்புனா அவங்கள அப்படியே வீட்டுக்கு போயிட சொல்லுங்க. திரும்ப வர வேணாம்” என்றதும் எல்லோரும் உடனே களைந்து விட்டனர்.

காவல்துறையினர் உடனே வந்து விட, அவனை பிடித்து ஒப்படைத்தனர்.

“மேடம்.. நான் முதல்ல வேலை பார்த்த ஊர்ல இவன ஒரு செயின் அறுப்பு கேஸ்ல தேடிட்டு இருந்தோம் மேடம். தப்பிச்சு இங்க வந்து வேலை பார்க்குறானா?” என்று கேட்டவர் பளாரென அறைந்து இழுத்துச் சென்று வண்டியில் ஏற்றினார்.

“முடிஞ்ச வரை வெளிய வர விடாதீங்க” என்றதும் சம்மதித்து விட்டு கிளம்பி விட்டனர்.

அங்காங்கே இருந்து பார்த்தவர்களுக்கு பகீரென்றது.

“ஒரு திருட்டுப்பய பேச்ச நம்பியா நம்ம வேலைய விடப்பார்த்தோம்?” என்று தங்களுக்குள் பேசியவர்களுக்கு எதை நம்புவது என்றே புரியவில்லை.

ஜாக்ஷி விறுவிறுவென அலுவலக அறைக்குள் சென்றாள்.

கந்தசாமி அவளை பின் தொடர ஜானகியும் சென்றாள்.

கதவை அடைத்த அடுத்த நொடி, “ஏய்.. உனக்கு அறிவில்லையா?” என்று கத்தியிருந்தாள் ஜாக்ஷி.

ஜானகி அதிர்ந்து நிற்க, “பிரச்சனைனா பேச மாட்டியா? வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற?” என்று எகிறினாள்.

“நான் பேசுனேன். அவங்க கேட்கல”

“கேட்குற‌ மாதிரி பேசனும். இங்க பிஸ்னஸ் பண்ண வந்துருக்க. பிஸ்னஸ கத்துக்க வரல. நீ கத்துட்டு வந்து பார்க்குற வரை இது அப்படியே இருக்கும்னு நினைப்பா?”

ஜானகிக்கு கண்கள் கலங்கி விட்டது.

“நீயும் தான்.. ரூல்ஸ் படி தர முடியாது. இருந்தா பாரு. இல்லனா வெளிய போனு துரத்தி விட வேண்டியது தான?”

“மேடம்.. நான் பேசுனா.. நீயும் எங்கள மாதிரி வேலைக்காரன் தான? எங்களுக்கு சப்போர்ட் பண்ணுனு மாத்திடுறாங்க. என்னால உடனே மாத்தியும் பேசவும் முடியல.‌ மாத்தி பேசுனா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்”

“அப்ப நீ தான் செஞ்சுருக்கனும்” என்று ஜானகியிடம் மீண்டும் திரும்பினாள்.

“உன்னை பெத்தவரோட ரத்தம் தான உன் உடம்புலயும் ஓடுது? ஊருக்குள்ள விசாரிச்சு பாரு. அந்தாளு பிஸ்ன்ஸ்ல எவ்வளவு பெரிய கேடினு. அவருக்கு பிறந்த நீ அழுதுட்டு நிக்கிற? இங்க பாரு.. இது அந்தாளு ஆரம்பிச்சது. எனக்கு வச்சுக்க பிடிக்கலனு உன் கிட்ட தூக்கி கொடுத்தேன். உனக்கு பார்க்க முடியலயா? வித்துடு. என் பணத்த வாங்கிட்டு நான் போறேன். இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான் வந்து நிக்கனும்னா நீ இங்க எதுக்கு?”

ஜானகி வாயை திறக்கவில்லை. வாயைத்திறந்தால் உடனே அழுது விடுவோம் என்று பயம்.

“இன்னொரு தடவ இப்படி வந்துச்சு.. நடக்குறதே வேற.” என்று விட்டு வேகமாக கதவை திறந்து வெளியேறினாள்.

கந்தசாமி ஜானகியை ஒரு நிமிடம், பார்த்து விட்டு ஜாக்ஷியின் பின்னால் சென்றான்.

காரின் அருகே வந்தவள் கந்தசாமி பின்னால் வருவதை பார்த்து விட்டு நின்றாள்.

“என்ன?”

“சாரி மேடம். என்னால கண்ட்ரோல் பண்ண முடியலனு தான் உங்கள கூப்பிட்டேன்.”

“இனிமே அவளயே சமாளிக்க சொல்லு. சமாளிக்க பழகட்டும். இதெல்லாம் பிரச்சனையா? இதுக்கு மேல வரும். அழுதுட்டு நிக்கிறா. இவள நம்பி கொடுத்தது தப்போனு நினைக்க வச்சுடாம நீ பார்த்துக்குற. இல்லயா இத விட்டுட்டு நம்ம ஆஃபிஸ்க்கு வந்துடு. இதான் என்னோட முடிவு சொல்லி வை”

கந்தசாமி தலையாட்டியதும் காரில் ஏறி கிளம்பி விட்டாள்.

4 Comments

  1. வணக்கம் ஹனி மேடம்.

    லாவண்டர் மலரே 2 இணைப்பை click செய்தால் வரவில்லை. மற்ற கதைகளில் இந்தப் பிரச்சனை இல்லை.

    என்னவெனப் பார்த்து செய்யுங்களேன்.

    நன்றி!

Leave a Reply