லாவண்டர் 3

Loading

ஒரு வாரம் கடந்திருந்தது..

“மேம்.. இன்னைக்கு நான் அங்க வர முடியாது. நீங்களும் போக வேண்டாம். ஃபேக்டரில இருங்க. நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன். நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று கந்தசாமி சொல்ல ஜானகி குழம்பினாள்.

“ஏன்? ஏன் வரல?”

“வீட்டுல சின்ன விசேஷம்”

“ஓ.. அப்ப நான் மட்டும் போய் மெட்டீரியல பார்த்துட்டு வந்துடுறேன். இப்ப பார்க்கலனா லேட் ஆகிடும்”

“அதெல்லாம் ஆகாது. நீங்க போய் நின்னா அவன் சும்மா இருக்க மாட்டான். அதையும் மீறி அவன் பேச்ச சகிக்க முடியும்னா தாராளமா போயிட்டு வாங்க. நான் நாளைக்கு பேசுறேன்”

பட்டென வைத்து விட்டான். ஜானகி அதிர்ச்சியோடு கைபேசியை பார்த்தாள்.

‘அடப்பாவி! நான் தான்டா உனக்கு பாஸ். நீ என்னடா எப்பவும் என்னை அதிகாரம் பண்ணிட்டே இருக்க?’ என்று கோபமாக வந்தது.

அதோடு அவள் மீது எந்த அக்கறையும் இல்லாமல், அந்த வழிசலிடம் சென்று பேசவும் சொல்கிறானே.

“அவன் போகாதனு தான் சொன்னான். நீ தான் பொறுப்பா பேசுறேன்னு வாய விட்ட. அதான் போனா போனு சொல்லிட்டு வச்சுட்டான்” என்று மனசாட்சி பதில் சொல்ல அதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை.

‘நான் எப்படி போனாலும் இவனுக்கு அக்கறை இல்லையாமா?’ என்று கோபம் வந்தது.

இந்த ஒரு வருடத்தில் ஜானகி தொழிலை கற்றுக் கொண்டாளோ இல்லையோ.. ஆண்களின் சபல புத்தியை நன்றாக அறிந்து கொண்டாள்.

அவளுடைய தந்தையின் வரலாறு தெரிந்த பலர், அவளையும் மேனகாவை போல் வாழும் படி பல மிரட்டல்களோடு அழைத்தனர்.

சிலர் அத்து மீறினர். பலருக்கு அவளது சொத்தின் மீது கண். சிலருக்கு அவளது அழகின் மீது கண்.

கந்தசாமி உடனிருந்தால் மட்டுமே அந்த சூழ்நிலையில் இருந்து தப்ப முடிந்தது. வேலையை தவிர ஒரு வார்த்தை அதிகம் பேசினாலும் கந்தசாமிக்கு பிடிக்கவே பிடிக்காது.

அவனை எப்படியாவது அகற்றி விட்டு ஜானகியிடம் வழிய பார்ப்பார்கள். முடிந்தவரை அவளும் போராடத்தான் செய்தாள்.

முதல் இரண்டு முறை வீட்டிற்கு வந்து யாருக்கும் தெரியாமல் அழுதாள். கோபமாக வந்தது. அவளை இப்படி கேட்கிறார்களே அதே சிற்றம்பலத்தின் மகன் தான் ஜாக்ஷி. அவளிடம் இப்படி பேசுவார்களா? என்று கோபமாக நினைப்பாள்.

போகப்போக ஜாக்ஷியிடம் இப்படி பேச தைரியம் வராததற்கு காரணம் என்ன என்று புரிந்து கொண்டாள். அவளிடம் இது போல் பேசினால், அடுத்த வார்த்தை சொல்லும் முன்பு நாக்கை வெட்டிக் கொடுத்து விடுவாள்.

அந்த தைரியத்தை தானும் வளர்க்க வேண்டும் என்று நினைத்தாள் ஜானகி.  பாடாய் பட்டு வளர்க்கவும் செய்தாள்.

“நீ பேசுறத பார்த்தா இந்த டீல் உனக்கு வேணாம் போல இருக்கே” என்று மிரட்டலோடு அவளை படிய வைக்க பார்த்தான் ஒருவன்.

“எந்த வித காரணமும் இல்லாம.. பொய் சொல்லி இந்த டீல கேன்சல் பண்ணா… ஜகதீஸ்வரி என்கிற ஜாக்ஷிக்கு போய் பதில் சொல்ல வேண்டி வரும். சொல்லிக்கிறீங்களா சார்?”

“அவ உன் பின்னாடி இருக்கானு தான இவ்வளவு தைரியம்”

“ச்சே ச்சே.. அவ என் பின்னாடி கிடையாது. உன் முன்னாடி இருக்கா. முடிஞ்சா எதிர்த்துக்கோ. இது ஒன்னும் என்னோட ஃபேக்டரி கிடையாது. நான் சம்பளம் வாங்குற சாதாரண ஆள். பூசுனாப்ல சொன்னா வொர்கிங் பார்ட்னர். பிரச்சனை வந்தா ஜாக்ஷி இத இழுத்து மூடிருவா. நானும் இத தூக்கி போட்டுட்டு படிச்சதுக்கு ஒரு வேலைய பார்த்துட்டு போயிட்டே இருப்பேன். டீல முடிக்கிறதும் தடுக்குறதும் உன் இஷ்டம்” என்று விட்டு கிளம்பி விட்டாள்.

அந்த திமிரை அடக்க வேண்டும் என்ற வெறியோடு டீலை முறித்தான் அவன். ஜாக்ஷிக்கு ஆயிரம் வேலை இருக்க, இதையா கவனிக்கப்போகிறாள் என்ற எண்ணம்.

ஆனால் ஜாக்ஷியின் பிஏ விடமிருந்து நேரடியாக அழைப்பு வந்ததும், நடுங்கிப்போனான். எதெதோ சமாளித்து ஜானகியிடம் ஒப்பந்தத்தை கொடுத்து விட்டான்.

‘இத முன்னாடியே செஞ்சுருக்கலாம்’ என்று நினைத்தாலும் ஜானகி பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை‌

இது போல் இரண்டு முறை நடந்த, பிறகு இப்போது தான் சற்று நிம்மதியாக இருக்கிறாள்.

கந்தசாமி அவளை பற்றி அக்கறை இல்லாமல் பேசுவது கோபத்தை கிளப்பியது.

‘ஜாக்ஷியா இருந்தா தனியா எவனையும் சமாளிப்பா. நான் எப்ப தான் அவள மாதிரி தைரியமா வர போறனோ தெரியல’ என்று பெருமூச்சு விட்டாள்.

அவளை அறியாமலே ஜாக்ஷி அவளுக்கு முன்னுதாரணமாக மாறி இருந்தாள். ஜாக்ஷியின் பெயரையே வெறுப்பவளின் மனதில், அவள் மீது ஒவ்வொரு நாளும் மதிப்பு கூடியது.

அந்த ஒரு தொழிற்சாலையையே சமாளிக்க அவள் பாடாய் படும் போது, பல நிறுவனங்களை அசால்டாக நடத்துபவளின் மீது மரியாதை தானாக வந்தது.

‘சரி இருக்க வேலைய பார்ப்போம். இந்த கந்தசாமி தான் வர மாட்டானே’ என்று நினைத்தவள் வேலையில் மூழ்கினாள்.

•••

அடுத்த நாள் காலையில் ஜானகி உள்ளே நுழையும் போது, கந்தசாமியை பார்த்து விட்டாள்.

முன்னால் நடந்து கொண்டிருந்தவனை பிடிக்க நினைத்து அருகே செல்ல, மேனேஜர் அவனை நிறுத்தினார்.

“சார்.. எல்லாம் ஓகேவா? பொண்ணு பார்த்தாச்சா? பிடிச்சுருந்ததா?” என்று கேட்க, கந்தசாமி புன்னகையுடன் தலையாட்டினான்.

“பேசியாச்சு. இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்”

“ரெண்டு வாரமா? என்ன இவ்வளவு அவசரம்?”

“நிறைய பேருக்கு சொல்லப்போறது இல்ல. ஜஸ்ட் ஃபேமிலி மட்டும் போதும்னு முடிவு பண்ணோம்”

“என்ன சார்? அப்ப எங்களுக்கு பத்திரிக்கை இல்லையா?”

“எல்லாருக்கும் வைக்க முடியாது சார். ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ் சிலருக்கு வைக்கனும். பெருசா பண்ண வேணாம்னு முடிவு பண்ணிருக்கோம்”

“வாழ்க்கையில ஒரு தடவ தான் கல்யாணம் நடக்கும் சார். அத இவ்வளவு சிம்பிளா பண்ணா நாளைக்கு ஃபீல் பண்ண மாட்டீங்களா?”

“ரெண்டு பக்கமும் ஆகுற செலவ நினைச்சா சந்தோசம் தான் படுவோம் சார். ஊரையே கூப்பிட்டு வச்சு செய்ய நாம என்ன லட்சத்துலயா புரண்டுட்டு இருக்கோம்?”

“அதுவும் சரி தான். கல்யாணத்துக்குனு கடன வாங்கிட்டு கடனோட குடும்பம் நடத்த வேண்டியதா இருக்கும்”

“அதே தான். அதுக்கு தான் சிம்பிளா முடிச்சு நிம்மதியா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்”

ஜானகி அவர்களை கடந்து சென்று விட, இருவரும் கவனித்து விட்டு வேலையை பார்க்கச் சென்றனர்.

கந்தசாமி முதலில் தன் வேலைகளை கவனித்தான்.

தெய்வநாயகி பெண் பார்த்ததும், அவனிடம் சம்மதம் கேட்டார்.


“பொண்ணு பார்க்க போகனும் தம்பி.. நான் வீட்டுல வேணாம் கோவில்ல வச்சு பார்த்துக்கலாம்னு சொல்லிருக்கேன்”

“நல்லது தான்மா”

“நீ வேலைக்கு லீவ் போடுறியா?”

உடனே விடுமுறை எடுத்துக் கொண்டான்.

நேற்று கோவிலில் வைத்து இரண்டு வீட்டார்களும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் பேசியதும், கந்தசாமி மணப்பெண் பவானியிடம் பேசினான்.

அவனை அதிகம் நிமிர்ந்து பார்க்காமல் பெற்றோர் முடிவே தன் முடிவு என்று விட்டாள் அவள்.

அதோடு திருமண பேச்சு ஆரம்பிக்க, இரண்டு வாரத்தில் இருக்கும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் நிச்சயமானது.

இனி எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தவன், வேலையில் மூழ்கினான்.

ஜானகியிடம் வந்து, “மேடம் போகலாமா?” என்று கேட்டு நின்றான்.

எதோ ஒரு ஃபைலில் மூழ்கி இருந்தவள், சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

“எங்க?”

“நேத்து மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணியிருந்தோமே.. அங்க தான்”

“அவ.. அது அடுத்த வாரம் வர சொல்லிட்டான். இன்னைக்கு எங்கயும் போறது இல்ல”

“ஓஹோ.. அப்போ நான் போய் மெடீரியல பார்த்துட்டு வர்ரேன். குடோன்க்கு வந்துடுச்சு”

ஜானகி தலையாட்டியதும் வெளியேறி விட்டான்.

அதுவரை கையில் பத்திரமாக வைத்திருந்த ஃபைலை தூக்கிப்போட்டவள், கண்ணை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் அமர்ந்து விட்டாள்.

மாலை வீட்டுக்கு செல்ல, மேனகா அவளை ஆர்வமாக பார்த்தார்.

“என்ன?”

“என்ன என்ன? நேத்து பேசுனது மறந்து போச்சா? இன்னைக்கு அவர பார்த்துட்டு முடிவு சொல்லுறதா பேசிருந்தோமே”

“அது நீங்களா பேசிக்கிட்டது. நான் எதுவும் சொல்லல” என்றவள் கோபத்தோடு அறைக்குள் சென்றாள்.

“என்னடி திமிரா? ஒரு நல்ல வரன் வந்துருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கலாம்னா..”

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கதவை ஓங்கி அடித்து அடைத்து விட்டாள்.

மேனகா கோபத்தோடு அமர்ந்திருந்தார். ஜெகன் வரும் வரை ஜானகி வெளியே வரவில்லை.

அவன் வந்ததும் கதவை திறந்து வெளியே வந்தவள் சமையலறைக்குள் செல்ல, மேனகா கையைப்பிடித்து நிறுத்தினார்.

“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? பெத்த அம்மாங்குற மரியாதை இல்லாம கதவை அடைக்கிற.. அவ்வளவு திமிரா போச்சா?”

கையை வெடுக்கென உதறியவள், தாயை முறைத்தாள்.

“ஒழுங்கு மரியாதையா கல்யாணத்துக்கு ஒத்துக்கோ சொல்லிட்டேன்”

“முடியாது. அந்த கிழவன என்னால கல்யாணம் பண்ண முடியாது.”

“அடிச்சேன்னா.. அவர் கிழவன் கிடையாது”

“ம்மா.. ஏன்மா இப்படி பண்ணுற? அக்கா தான் பிடிக்கலனு சொல்லுதுல?” என்று ஜெகன் பேசினான்.

“நீ வாய மூடுடா.. உன் கிட்ட நான் பேசல. இங்க பாருடி.. அவர தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும் சொல்லிட்டேன்”

“முடியாது. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க.”

“ஏன்டி இப்படி அடம்பிடிக்கிற? அவருக்கென்னடி குறைச்சல்? பணம் இல்லையா? இல்ல தொழில் இல்லையா?”

“ரெண்டும் இருந்தா போதுமா? அவனுக்கு நான் ஏன் ரெண்டாந்தாரமா போகனும்? எனக்கு என்ன குறைச்சல்?”

“குறைச்சல் இருந்தா தான் ரெண்டாந்தாரமா போகனுமா? ஏன் நான் ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கெட்டா போயிட்டேன்”

“உங்க வாழ்க்கைய பத்திலாம் பேசாதீங்க. நீங்க அப்பா கூட வாழ்ந்த வாழ்க்கைய என்னால வாழ முடியாது”

“ஏன்டி? எங்க வாழ்க்கைக்கு என்ன குறைச்சல்? அவர் இருந்த வரை என்ன நல்லா தான் வச்சுருந்தார்”

“ஆமா.. நீ நல்லா தான் இருந்த. நாங்க தான் உன் தப்புக்கு பாவத்த சுமக்குறோம்” என்று ஜானகி கத்தி விட்டாள்.

ஜெகன் கூட அதிர மேனகா முறைத்தார்.

“உன் வாழ்க்கையில என்னடி குறைஞ்சது?” என்று மேனகாவும் கத்தினார்.

“என்ன குறைஞ்சதா? உன் அம்மா மாதிரி நீயும் எனக்கு வப்பாட்டியா வானு தினம் தினம். எத்தனை பேரு கூப்பிடுறான் தெரியுமா? எல்லாம் யாரால? உன்னால.. நான் என்ன தப்பு பண்ணேன்னு என்னை வப்பாட்டியா கூப்பிடுறானுங்க? எல்லாம் நீயும் அப்பாவும் செஞ்ச தப்பு. தினம் தினம் செத்துட்டு இருக்கேன். நீயும் என்ன சாகடிக்க பார்க்குற. ஒரேடியா கழுத்த நெறிச்சு கொண்ணுடு செத்தாவது போறேன்”

ஜானகி கத்தினாலும் அவளது கண்கள் கண்ணீரை கொட்டியது. அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அவ்வளவு தூரம் காயப்பட்டிருந்தாள்.

“அக்கா..” என்று ஜெகன் அருகே வந்தான். அவனது கண்களும் கலங்கி விட்டது. அக்கா இவ்வளவு கஷ்டத்தை வெளியே சந்திப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

மேனகா மகளது பேச்சில் அமைதியாக நின்றார்.

“முடியலடா.. ஒவ்வொருத்தனும் என்ன என்ன பேசுவான் தெரியுமா? அவனுக்கு பொண்டிட்டி இருக்கும் போதே என்னை கூப்பிடுவான். கேட்டா உங்கம்மா மட்டும் காசுக்காக உங்கப்பன வளைச்சு போடலயா? நீயும் வா என் கிட்டயும் காசு இருக்குனு பேசுறானுங்கடா. இன்னும் பச்சை பச்சையா எல்லாம் பேசுறானுங்க. தினம் தினம் வெளிய போய் எத்தனைய பார்க்குறேன் தெரியுமா? அத்தனையும் சமாளிச்சுட்டு சம்பாதிச்சு வந்து கொட்டுனாலும் இவங்களுக்கு போதலையாம். என்னை அந்த பணக்கார கிழவனுக்கு வித்து அவன் கொடுக்குற காச வாங்குனா தான் திருப்தியாவாங்க போல”

அவள் கதற, ஜெகனுக்கு தாயின் மீது வெறுப்பு வந்தது.

“நீயெல்லாம் ஒரு அம்மாவா?” என்று தாயை பார்த்து கத்தினான்.

மேனகா அமைதியாக இருக்க, “க்கா.. நீ அழாத.. அப்படி பேசுனவன் யாருனு சொல்லு. அவன் வாயை உடைக்கிறேன்” என்று கோபம் கொண்டான் தம்பி.

“முடியாதுடா.. எல்லாரு வாயையும் ஒன்னு ஒன்னா உடைச்சுட்டே இருந்தா நாம நிம்மதியா வாழவே முடியாது. இவங்க செஞ்ச தப்பால நான் நரகத்துல வாழுறேன். இதுக்கும் மேல என்னடா செய்யுறது?” என்று அழுதாள்.

அவளது அழுகையை தாங்காமல் தோளில் சாய்த்துக் கொண்டான் ஜெகன்.

மேனகா சில நிமிடங்களுக்கு பிறகு பெருமூச்சு விட்டார்.

“இங்க பாரு ஜானகி.. நீ இதெல்லாம் தாங்குனது எனக்கு தெரியாது. ஆனா இதுவே ஒரு நல்ல காரணம் தான். மாப்பிள்ளை பணக்காரரு. அவரோட முதல் பொண்டாட்டி செத்து போச்சு தான். ஆனா அவருக்கு பெருசா வயசாகிடல. நீ அவர கல்யாணம் பண்ணிட்டா ஒரு பையன் உன்னை பார்த்து இப்படி பேச மாட்டான். எல்லாத்தையும் அவரே பார்த்துப்பாரு. நம்ம ஃபேக்டரிய கூட அவரே பார்த்துப்பாரு. நீயும் இப்படி கஷ்டப்பட வேணாம். என்னை எல்லாம் என்ன என்ன பேசுனாங்க தெரியுமா? உங்கப்பாவ கல்யாணம் பண்ணப்புறம் எல்லாரும் என்னை பார்த்தாலே பயந்தானுங்க. சொல்லுறத கேளு”

ஜானகி தாயை வெறுப்பாக பார்த்து விட்டு மீண்டும் அறைக்குள் புகுந்து கதவை அடைத்து விட, ஜெகனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

இவ்வளவு சொல்லியும் அதிலேயே நிற்கிறாரே என்ற கோபம்.

“ஏன்மா உனக்கு அறிவே இல்லையா? நீ வாழ்ந்த வாழ்க்கைய அக்காவுக்கும் திணிக்க பார்க்குற? மூளை கெட்டுப்போச்சா?”

“டேய் என்ன ஓவரா பேசுற?”

“ஓவரா பேசுறனா? பெத்த தாயாச்சேனு பார்க்குறேன்.. இல்லனா நடக்குறதே வேற…”

ஜெகன் கத்துவது மெலிதாக காதில் விழ, அதை கூட கேட்க பிடிக்காமல் தலையணையை வைத்து காதை மூடிக் கொண்டு படுத்த ஜானகி அழுது கொண்டே இருந்தாள்.

தொடரும்.

Leave a Reply