எனது – 1
![]()
அதிகாலை ஐந்து மணி. ஊர் இன்னும் விடிந்திருக்கவில்லை. அந்த ஊரின் குளிருக்கு எல்லோரும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க, அவன் மட்டும் ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தான். அவன் ஹரிஹரன். அல்லது ஆர்லோ டேவிட்.
இரண்டும் அவனது பெயர் தான். இந்திய வம்சாவளியில் வந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன். அவர்களது வீட்டில் எல்லோருக்கும் தமிழ் பெயர் உண்டு. அழைத்தால் மட்டும் அவனுக்கு பிடிக்காது. தாத்தாவை தவிர.
ஓட்டத்தை நிறுத்தி வேகத்தை குறைத்து, மெல்ல நடந்தவனின் வியர்வை உடலில் சொட்டியது. அவன் அணிந்திருந்த வெள்ளை நிற பிராண்ட்டட் பனியன், மறைப்பதை விட அதிகம் எடுத்துக் காட்டும் ரகம்.
தண்ணீரை எடுத்துக் குடித்தவனுக்கு சலிப்பாக இருந்தது. இது தான் அவனது பிரச்சனை. அவனது வீட்டை விட்டு வெளியே தங்கினால், தூக்கம் வராது. அது மூன்று நாட்களாக இருந்தாலும் சரி.
இன்றும் தூங்காமல் விழித்து வேலை பார்த்து விட்டு, காலையிலேயே அந்த ஹோட்டலின் ஜிம் பகுதிக்கு வந்து விட்டான்.
தண்ணீரை முழுவதுமாக காலி செய்து விட்டு, உதட்டோரம் வழிந்த நீரை புறங்கையால் துடைத்துக் கொண்டான்.
மணியை பார்த்தான். இனி அறைக்குச் சென்று குளித்து கிளம்பலாம் என்று முடிவு செய்து, மொத்தமாய் இயந்திரத்தை நிறுத்தி விட்டு திரும்பினான்.
அதே நேரம் கதவைத்திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அவள். ப்ரீதா.. அல்லது ப்ரீதா கபூர்.
இந்தியப்பெண் என்று எதில் அடித்தும் சத்தியம் செய்ய முடியாத தோற்றம் அவளுடையது.
ஹரியின் பார்வை வழக்கமாக அவளது உடலை எடை போட்டது.
‘இது இவ சைஸ் இல்லையே?’ என்று அளவுக்கு மீறி யோசித்து அவளது உடையை ஆராய்ந்தான்.
அவளை அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்திருப்பவன் அவன் மட்டுமே. ஆனால் இருவரும் எதிரிகள்.
உடற்பயிற்சிக்கான உடை தான் அணிந்திருந்தாள் ப்ரீதா. கருப்பு நிறத்தில் இருந்த உடை அவளை கச்சிதமாக பிடித்துக் கொண்டது.
இடை முழுவதும் வெளியே தெரிய கீழே கருப்பு நிற கால்சராய் மிச்சத்தை மறைத்திருந்தது. அவளது இடுப்பை பார்த்தவன், சென்ற மாதம் பார்த்ததை விட எடை குறைந்திருக்கிறாள் என்று நினைத்தான்.
பார்வை அவளை வட்டமிட, ஒன்றுமே நடக்காதது போல் போட்டிருந்த பனியனை கழட்டி கையில் எடுத்துக் கொண்டான்.
தன் கையில் இருந்த கருவியில் நேரத்தை செட் செய்தபடி வந்தவள், அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்ததும் அவளது முகத்தில் சலிப்பு தான் வந்தது.
‘இவனும் இதே ஹோட்டல்ல வந்து தங்கிருக்கத மறந்துட்டேன்’ என்று எரிச்சலாக நினைத்தவள், அவனை மேலிருந்து கீழ் பார்த்தாள்.
அழகிய படிக்கட்டு தேகம். அதை அவன் ஒரு நாளும் குலைய விட்டது இல்லை. தலை முடி மொத்தமும் கலைந்து வியர்வையில் குளித்து நிற்பவனை பார்த்து எந்த பெண்ணும் மயங்குவாள்.
அவளும் பெண் தான். அவன் எதிரியாக இல்லாவிட்டால் மயங்கி இருப்பாள்.
“குட் மார்னிங்?” என்று வாழ்த்துவதற்கு பதில் கேள்வி கேட்டான்.
அவளுக்கு பதில் சொல்ல பிடிக்கவில்லை.
உடனே அங்கிருந்து நடந்து சென்று ஒரு டிரெட்மில்லில் ஏறினாள். சிறிது நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு செல்ல வந்ததால், முதலில் நடக்க ஆரம்பித்தாள்.
அவள் பதில் சொல்லாமல் போனது அவனது முகத்தில் புன்னகையை வரவழைக்க, கீழுதட்டை பல்லில் இழுத்தபடி அவளருகே சென்றான்.
கையிலிருந்த பனியனை தன் பையின் மீது போட்டு விட்டு, ப்ரீதா நடந்து கொண்டிருந்த கருவியின் அருகே சென்று நின்றான்.
“ஒரு குட் மார்னிங் கூட கிடையாதா?” என்று ஆரம்பித்தான்.
அவனை திரும்பிப் பார்த்தவள், “உனக்கு குட் மார்னிங்கா இருக்க போறது இல்ல. எதுக்கு சொல்லி வேஸ்ட் பண்ணிக்கிட்டு?” என்று கேட்டு வைத்தாள்.
அவன் தலையை ஆட்டி சிரிப்பை அடக்கினான்.
“எனக்கு உன் கிட்ட பிடிச்சதே இந்த நம்பிக்கை தான். எத்தனை தடவ அடிச்சாலும்.. திரும்பி எந்திரிச்சு நின்னு இப்படி பேசுற பாரு! ஐ ஜஸ்ட் லைக் இட்”
அவனது குரலில் இருந்த கேலியும் சிரிப்பும் அவளை உசுப்பேற்றி விட, நடப்பதை நிறுத்தி விட்டு அவன் பக்கம் திரும்பினாள்.
இயந்திரத்தின் மீது நிற்பதால், அவனை விட சற்று உயரமாக தெரிந்தாள்.
“இது வரை நடந்தது எல்லாம் உனக்கு ஃபேவரா இருக்கலாம் கேங்ஸ்டர்.. இன்னைக்கு நடக்கப்போறது உனக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சியா இருக்கும். பிரிப்பேர் ஆகிக்கோ”
அவள் கிண்டலாக சொல்ல, அதை பற்றி துளியளவும் அக்கறைப்படாமல் அருகே தெரிந்தே முகத்தை ரசித்தான்.
அதை விட அவள் சொன்ன, “கேங்ஸ்டர்” அந்த வார்த்தையை அவள் சொல்லும் போது மட்டும் வயிறு புரள்கிறது. சொல்லும் இதழ்களை சொந்தம் கொண்டாட ஆசை துடிக்கிறது.
“ஒரு வேளை இந்த தடவையும் நானே ஜெயிச்சுட்டா?” என்று கேட்டு புருவம் உயர்த்தினான்.
அவளது இதழ்களில் சிரிப்பு மலர்ந்தது. இடவலமாக தலையசைத்தாள்.
“முடியாது..”
“பெட்?”
“உன் கிட்ட நான் ஏன் பெட் கட்டனும்?” என்று கிண்டலாக கேட்டவள், மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.
இயந்திரத்தை உடனே அணைத்தவன், “ஏன் தோத்துடுவனு பயமா?” என்று சீண்டி விட பார்த்தான்.
அவனது கையைப்பிடித்து தள்ளி விட்டாள்.
“தோக்குறதுக்கு பயந்தா உன் கூட போட்டிக்கு நிப்பனா?” என்று கேட்டு விட்டு மீண்டும் நடந்தாள்.
அவளது அந்த தைரியத்தை இரசித்தவனுக்கு, அவள் மீது இருந்த இரகசிய ஆசை பெருகியது.
“ஒரு வேளை.. ஒரு வேளை நீ தோத்துட்டா? என்ன செய்வ?”
“இந்த தடவ நான் தோத்துட்டா அடுத்த தடவல இருந்து பெட் கட்டுறேன்.” என்றவள் நடையை வேகமாக்கினாள்.
“தென் பீ ரெடி” என்றவன் அவளது கிண்டல் சிரிப்பை பார்த்து விட்டு விலகி வந்தான்.
தன் துண்டை எடுத்து வியர்வையை துடைத்துக் கொண்டவன், அவளை மீண்டும் ஒரு முறை இரசித்து விட்டு வெளியேறினான்.
ஹரி குளித்து முடித்து தயாராக, அவனது செகரட்டரியிடமிருந்து செய்தி வந்தது.
சட்டையின் கையில் இருந்த பட்டனை பூட்டிக் கொண்டே செய்தியை படித்தான்.
மீட்டிங் தொடங்குவதற்கான நேரம் விவரம் எல்லாம் வந்திருந்தது. பார்த்து முடித்து விட்டு கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டான்.
முழு கருப்பு நிற உடை. வேலை என்று வந்தால் இது போன்ற உடை தான் அதிகம் அணிவான். அது ஒரு மரியாதையை தானாக கொடுக்கும்.
கைபேசியை எடுத்து செக்கரட்டரியை அழைத்து மற்ற விவரங்களை கேட்டுக் கொண்டு வைத்தான்.
கைகடிகாரத்தை மாட்டும் போது, ப்ரீதா பேசியது நினைவில் வந்தது.
‘அவ்வளவு நம்பிக்கையா? என்ன செய்யுறனு நானும் பார்க்குறேன்’ என்று நினைத்தவன், உதட்டோர வளைவோடு கிளம்பினான்.
கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்து விட்டு, வேலை சம்பந்தமான பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
அன்று அந்த ஹோட்டலில் முக்கியமான மீட்டிங் நடக்கவிருக்கிறது. மிகப்பெரிய நிறுவனம் ஒன்று தங்களது முக்கியமான வேலைக்காக பங்குதாரரை தேடிக் கொண்டிருந்தது.
அதற்காக தான் நிறைய நிறுவனத்தின் முதலாளிகள் நேரடியாக வந்திருந்தனர். அதில் ப்ரீதாவும் ஹரியும் அடக்கம்.
ஹரிஹரனுக்கு இந்த தொழில் இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது. உண்மையில் அவனது தொழில் வேறு. அது பற்றித் தெரிந்தவர்கள் வெகு சிலர் தான்.
அப்படி கண்டு கொள்ளாத இந்த தொழிலை பற்றி இப்போதெல்லாம் அதிகம் யோசிக்கிறான். அதற்கான காரணம், அவன் முன்னால் வெள்ளை நிற ஃபார்மல் உடையில் மிடுக்கோடு அமர்ந்திருந்தது.
காலையில் கூந்தலை அள்ளி மொத்தமாக கொண்டை போட்டிருந்தவள் இப்போது அழகாக தோளில் புரள விட்டிருந்தாள். கருப்பு நிற கூந்தலில் இவ்வளவு அழகிருக்கும் என்று அவனுக்கு அவளை பார்த்த பிறகு தான் தெரிந்தது.
ப்ரீதாவிற்கு அவனது பார்வை தன்னிடம் இருப்பது நன்றாக தெரியும். ஆனாலும் அவன் பக்கம் கண்ணை திருப்பவில்லை.
கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் முக்கியமான செய்திகள் வந்திருக்க படித்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களில் அங்கே ஒருவர் வந்து நின்றார். அவரை பார்த்ததும் எல்லோரும் மரியாதை செய்ய, அதற்கு பதில் சொல்லி விட்டு பேச்சை ஆரம்பித்தார்.
அங்கிருந்த அனைவரும் உலகத்தரம் பெற்ற உடை அணிகலன்கள் தயாரிப்பாளர்கள். அவர்களது நிறுவனத்தில் வெளிவரும் உடைக்கு உலகம் காத்திருக்கும்.
அவர்களை எல்லாம் விட விரல் விட்டு எண்ணக்கூடிய ப்ராண்ட் ஒன்றின் ஒப்பந்தத்திற்காக எல்லோருமே காத்திருந்தனர். அங்கிருந்த அனைவரும் அவர்களது பிரப்போஸலை அனுப்பி விட்டனர்.
முடிவு சொல்வதற்காக எல்லோரையும் அழைத்திருந்தனர். யாருக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்கும்? என்ற பதட்டம் எல்லோருக்கும் இருந்தது.
இருவரைத்தவிர. ஒன்று ஹரி. அவனுக்கு தெளிவாக தெரியும். ஒப்பந்தம் அவன் கையை விட்டுப் போக வாய்ப்பில்லை. அடுத்தது ப்ரீதா. அவளுக்கும் முடிவு தெளிவாக தெரியும்.
சில நொடிகளில் ஹரிஹரனின் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி விட்டு, கை நீட்டினார் அவர்.
வயிறு எரிந்த போதும் எல்லோரும் கை தட்டி வாழ்த்தை தெரிவித்தனர். கை குலுக்கி வாழ்த்தை பெற்ற ஹரியின் பார்வை ப்ரீதாவை வெற்றியோடு பார்த்தான்.
அவளது முகம் வாடியிருக்கும் என்று எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக, அவளது இதழ்களில் கேலி புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.
அது அவனுக்கு யோசனையை கொடுத்தது.
அவன் மீண்டும் இருக்கையில் அமர்ந்ததும், அடுத்த அறிவிப்பு வந்தது.
நேற்று ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையொப்பம் இட பட்டதாக சொன்னவர், ப்ரீதாவின் நிறுவனத்தோடு அந்த ஒப்பந்தம் போட்டதாக சொல்ல, அங்கிருந்த அத்தனை பேருக்குமே அதிர்ச்சி தான்.
ப்ரீதா எழவும் அவளுக்கும் கை தட்டி வாழ்த்தை தெரிவித்தனர். ஒரு நொடி புருவம் சுருங்கினாலும், அடுத்த நொடி அமைதியான முகத்தோடு கை தட்டினான் ஹரி.
அவள் வாழ்த்தை பெற்றுக் கொண்டு அமர்ந்ததும், அன்று மாலை இருக்கும் பார்ட்டியில் சந்திப்பதாக சொல்லி விடை பெற்றார்.
எல்லோரும் ஹரிக்கும் ப்ரீதாவிற்கும் வாழ்த்து சொல்லி விட்டு இடத்தை காலி செய்தனர்.
ப்ரீதா அங்கிருந்த ஒருவரோடு பேசியபடி நிற்க, ஹரி மீண்டும் அவளை இரசித்தான். பார்வை அங்குலம் அங்குலமாக அளந்தது அவளை.
அவள் அந்த இடத்தை விட்டு அசையமாட்டாள் என்று புரிய, அருகே சென்றான். அவனை பார்த்ததும் பேசிக் கொண்டிருந்தவர் விடை பெற்றுச் சென்றார்.
ப்ரீதா அவனை கிண்டலாக பார்த்தாள்.
“வாழ்த்துக்கள்?” என்க அவளுக்கு சலிப்பு வந்தது.
‘எல்லாத்தையுமே கேள்வியா தான் சொல்லுவானா?’ என்று நினைத்தவள், “உனக்கும் தான். ஆனா நீ இப்ப டிஸபாயிண்ட் ஆகிருக்கனுமே?” என்று கேட்டு வைத்தாள்.
அவன் புருவம் உயர்த்த, “இந்த தடவ நீ ஜெயிக்கல” என்று சொன்னவள் தன் கூலிங் கிளாஸை எடுத்தாள்.
“நீ ஜெயிச்சுட்ட..” என்று ஒப்புக் கொண்டான்.
“இப்ப உன் மனசுல என்ன ஓடுது சொல்லவா? இவளால எப்படி முடிஞ்சதுனு தான?” என்று கேட்டவளின் குரலில் எல்லையில்லா திமிர்.
அவன் முகத்தில் சிரிப்பு பரவியது.
அருகே இருந்த மேசையில் கையை ஊன்றி அவளருகே குனிந்தவன், “என் மனசுல உண்மையா என்ன இருக்குனு தெரிஞ்சா நீ தாங்க மாட்ட. தெரிஞ்சுக்கனுமா?” என்று சவாலாக கேட்டான்.
இருவரின் முகத்துக்கு இடையே இருந்த இடைவேளையை குறைத்தவள், “அவசியமில்ல.. நீயும், உன் நினைப்பும்” என்றவள், கண்ணாடியை மாட்டிக் கொண்டு அவனிடமிருந்து விலகிச் சென்றாள்.
அவளது வாசம் அவனை நிறைத்திருக்க, திரும்பிப் பார்த்தவன், ‘அவசியமாக்குறேன்’ என்று நினைத்துக் கொண்டான்.
“சீ யூ அட் பார்ட்டி மிஸ்டர்” என்று பார்ட்டியில் சந்திப்பதாக திரும்பிப் பார்க்காமல் சொல்லி விட்டு சென்று விட்டாள்.
