லாவண்டர் 14
![]()
கந்தசாமி வந்ததும், “இன்னைக்கு ஃபேக்டரிக்கு போகனும்” என்று கவலையாக சொன்னாள் ஜானகி.
இன்னும் யாருக்கும் இந்த திருமண விசயம் தெரியாது. தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்று கவலையாக இருந்தது.
“ஏன் பயமா இருக்கா?”
“என்ன நினைப்பாங்கனு தான் யோசிக்கிறேன்”
“யாரும் உன்னை கேள்வி கேட்க மாட்டாங்க. என் கிட்ட தான் பேசுவாங்க. நான் பார்த்துக்கிறேன்”
“நாமலே சொல்லிடலாமா? புரளி பரவுரத விட, நாமலே நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு ஒரே வரில சொல்லிடலாம்.”
கந்தசாமிக்கு அவள் சொல்வதும் சரியாக இருந்தது.
அவன் ஒப்புக் கொண்ட போது கைபேசி இசைத்தது. ஜெகனின் பெயரை பார்த்து விட்டு உடனே எடுத்தாள்.
“க்கா.. கார அங்க அனுப்பிருக்கேன். பார்த்துக்க” என்று சொல்லும் போதே, பின்னால் மேனகா கத்தும் சத்தம் கேட்டது.
“அந்த பிச்சைகாரனுக்கு இவ மட்டும் போதாதா? காரும் வேணுமா?” என்று அவர் கத்திக் கொண்டிருக்க, “என்னடா இது?” என்று ஜானகி புரியாமல் பார்த்தாள்.
“அம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சு. கார் வந்தா அங்கயே நிப்பாட்டிக்க. நான் காலேஜ் கிளம்புறேன். அப்புறம் பேசலாம்” என்று வைத்து விட்டான்.
“ஏன்டா.. உன் அக்காவ கட்டுனவனுக்கு, கார் சீரா அனுப்பி வைக்கிற அளவு என்னடா இருக்கு?” என்று மேனகா விடாமல் கேட்க, “அந்த காருக்கு டியூ கட்டுறது அக்கா தான். இங்க இருந்தா நீயும் நானும் தான் கட்டனும். உன் கிட்ட காசிருக்கா? இல்லல? அப்ப பேசாம போமா” என்று விட்டு கிளம்பும் வேலையை பார்த்தான் அவன்.
மேனகாவின் மனம் கொளுந்து விட்டு எரிந்தது. அவரால் இதை எல்லாம் ஜீரணிக்க முடியவில்லை. அவரது அத்தனை கனவுகளிலும் மண்ணள்ளி போட்டு விட்டுச் சென்ற மகளையும், அவளை கட்டியவனையும் எதாவது செய்ய வேண்டும் என்று மனம் துடித்தது.
இப்போது காரும் அவர்களது வீட்டுக்கு போய் விட, வன்மம் வளர்ந்தது.
உடனே அறைக்குள் சென்று கதவை அடைத்தவர், விக்னேஷனை அழைத்தார்.
விக்னேஷனும் அப்போது ஜானகிக்காக வாங்கிய அனைத்தையும் முன்னால் வைத்து, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது வாழ்வில் நினைத்ததை எல்லாம் நடத்திக் கொண்டு தான் பழக்கம். ஜானகி விசயத்தில் மட்டும், அவனுக்கு தொடர்ந்து தோல்வி தான் கிடைக்கிறது.
அவளை பார்த்ததுமே பிடித்தது. அதனால் தான் திருமணம் செய்து கொள்ள கேட்டான். அவள் மறுத்தாள். தாயிடம் சென்றான். மேனகாவின் பேராசையை கண்டு பிடித்து சுலபமாக பயன்படுத்திக் கொண்டான்.
திருமணம் மட்டும் முடிந்து விட்டால், மேனகாவை துரத்துவது சுலபமான காரியம்.
அதற்காக அவன் பல ஏற்பாடுகளை செய்திருக்க, ஜானகி இப்படி கைநழுவி போவாள் என்று எதிர்பார்க்கவில்லை.
ஆனால் திடீரென உடன் வேலை செய்பவனை ஏன் திருமணம் செய்து கொண்டாள்? அவனை காதலித்தாளா? அப்படியென்றால் விசயம் தெரிந்திருக்குமே? அவளது இடத்தில் அவன் வைத்திருந்த ஆள் இதைப்பற்றி சொல்லவே இல்லை.
அவள் யாரிடமும் அதிகம் பேச மாட்டாள் என்று தான் சொல்லி இருந்தான். கந்தசாமியை பற்றி நினைக்க எதுவுமே இல்லை.
கந்தசாமியின் திருமணத்தின் போது நடந்த கலாட்டா தாமதமாகத்தான் தெரிந்தது. அதுவும் விவரமாக இன்னும் தெரியவில்லை. கந்தசாமி கட்ட இருந்த பெண், வேறு யாரையோ காதலித்து இருக்கிறாள். அவன் வந்து கலாட்டா செய்ய, அவனையே திருமணம் செய்து கொண்டு சென்று விட்டாள்.
அடுத்ததாக திடீரென ஜானகியை மணப்பெண்ணாக அமர வைத்திருக்கின்றனர். யாருமே எதிர்பாராமல் திருமணம் செய்து கொண்டனர்.
எதனால் இந்த திருப்பம்? என்று இன்னமும் கூட புரியவில்லை. இருவருக்கிடையே காதல் இருந்தால், தெரியாமல் போகாது. வேறு என்னவாக இருக்கும்? என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
ஜானகியின் காதலை அவள் யாரிடமும் சொன்னது இல்லை. கந்தசாமி பலவருடமாக மனதை மறைத்து வாழ்ந்து கொண்டிருந்தான். அதை பற்றி அறியாமல் விக்னேஷன் குழம்பி விட்டான்.
அவர்கள் யாரிடமும் சொல்லி இருந்தால் அல்லவா, அவனுக்கு விசயம் தெரியும்?
மேனகாவின் பெயரை கைபேசியில் பார்த்தவன், சலிப்போடு எடுத்தான்.
“சொல்லுங்க”
“மாப்பிள்ளை..”
நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தான்.
“உங்க மாப்பிள்ளை கந்தசாமில?”
“அவன் எனக்கு மாப்பிள்ளையா? எனக்கு மாப்பிள்ளையா இருக்க அவனுக்கு எந்த தகுதியும் கிடையாது”
மேனகா பொங்க, விக்னேஷனுக்கு அதை கேட்கவெல்லாம் பிடிக்கவில்லை.
“இப்ப எதுக்கு கால் பண்ணீங்க?”
“இந்த கல்யாணம் நிலைக்க கூடாது மாப்பிள்ளை.. ஜானகிய அவன் கிட்ட இருந்து பிரிங்க” என்றதும் விக்னேஷின் முகத்தில் குரூரமாக ஒரு சிரிப்பு வந்தது.
அவனும் அதைத்தான் நினைத்திருந்தான்.
“பிரிக்கனுமா?”
“ஆமா.. என்னை மீறி அவ கல்யாணம் பண்ணிருக்கா. அந்த கல்யாணம் நிலைக்க கூடாது. அவளையும் அவனையும் பிரிச்சு இழுத்துட்டு வந்து நீங்க கல்யாணம் பண்ணுங்க”
“சொல்ல நல்லா தான் இருக்கு.. ஆனா.. உங்க மக ஒத்துக்க மாட்டாளே. முக்கியமா உங்க மகன்.”
“அவன பத்தி கவலைப்படாதீங்க. தேவைப்பட்டா அவன வீட்டுக்குள்ள போட்டு பூட்டி வைக்கவும் நான் தயங்க மாட்டேன். எனக்கு ஜானகி வந்து என் கால்ல விழனும். அந்த பிச்சைக்காரன் கூட வாழக்கூடாது. அவ்வளவு தான் வேணும்”
“இத நான் பண்ணா?”
“ஜானகிய நீங்க கல்யாணம் பண்ணதும், ஃபேக்டரிய உங்களுக்கே கொடுத்துடுறேன்”
இது போதுமே அவனுக்கு சந்தோசமாக தலையாட்டியவன், “நான் யோசிக்கிறேன்” என்று விட்டு வைத்து விட்டான்.
“ஜானகி.. ஜானகி… என்னோட ஜான்.. உன்னை எப்படி என் கிட்ட கொண்டு வர்ரேன்னு மட்டும் பாரு” என்றவன் அவளுக்கு வாங்கியிருந்த புடவையை தடவினான்.
இதைக்கட்டி அவள் கழுத்தில் கூடிய சீக்கிரமே தாலி கட்ட வேண்டும் என்று முடிவு செய்தான்.
முதல் வேலையாக ஒருவனை அழைத்து, கந்தசாமியின் குடும்பத்தை பற்றி விசாரிக்க சொன்னான்.
கந்தசாமியை அகற்றுவது சுலபம். ஆனால் அவனை வைத்து தான் ஜானகியை தன் காலில் விழ வைக்க வேண்டும். பழைய கால வில்லன் போல் அவனை கொன்று விட அவனால் முடியும். ஆனால் அவனுக்காக ஜானகி துடிக்க வேண்டும். அவனை விட்டு அவளாக பிரிய வேண்டும்.
அவளாக வந்து அவன் காலடியில் விழுந்தால் மட்டும் தான், அவன் நினைத்தது நடக்கும். அதற்கான திட்டத்தை அப்போதே யோசிக்க ஆரம்பித்தான்.
எவ்வளவோ அவன் யோசித்திருக்க, அவன் மறந்த ஒன்று விதியாக நின்று சிரித்தது.
•••
ஜானகியும் கந்தசாமியும் ஒன்றாக அலுவலகம் கிளம்பிச் சென்றனர். இனி ஒன்றாக சென்று வருவது தான் சரி வரும் என்று அடம் பிடித்து, கந்தசாமியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் ஜானகி.
கார் நின்றதும் மனம் படபடவென அடித்துக் கொண்டது. எப்படி விளக்கப்போகிறாள்? அவளது வாழ்வை பற்றி மற்றவர்கள் பேசுவார்களே?
பலவருடமாக, தந்தையை வைத்து ஜாக்ஷி அவளை அசிங்கப்படுத்தியதை அவளால் மறக்க முடியவில்லை. பார்ப்பவர்கள் எல்லோரும் அவளை பற்றியும், அவளுடைய தாய் தந்தையை பற்றியும் மட்டுமே பேசுவது போல் பிரம்மை எழுந்தது.
அதிலிருந்து போராடித்தான் தேறினாள். அதேபோல், இப்போதும் பேசுவார்களோ? என்று பயம் வந்தது.
ஜானகியின் கையைப்பிடித்த கந்தசாமி, தட்டிக் கொடுத்து விட்டு கீழே இறங்கினான்.
உள்ளே சென்றதும் ஜானகி பதட்டத்தை அடக்க போராட, “எல்லாரும் வரட்டும் பேசிடலாம். அது வரை ரிலாக்ஸா இரு” என்று விட்டு கந்தசாமி அப்போதைய வேலையை பார்த்தான்.
“கந்தசாமி சார்… நேத்து கல்யாணம் பண்ணிட்டு இன்னைக்கு இங்க வந்து நிக்கிறீங்க?” என்று சிலர் ஆச்சரியமாக கேட்க, “சொல்லுறேன்” என்று விட்டு வேலையை தொடர்ந்தான்.
எல்லோரும் வந்து சேர்ந்து விட, அனைவரையும் ஒன்றாக கூட்டி விட்டு ஜானகியை தேடிச் சென்றான்.
“போகலாம்.. சொல்லனும்ல?”
“எதாவது பேசுவாங்களோ?”
“அதுக்கு பயப்படனும்னு இல்ல ஜானகி.. பேசுறவங்க பேச தான் செய்வாங்க. நாம தப்பா எதுவும் செய்யல. சோ வா சொல்லிடலாம்” என்றவன், கையைப்பிடித்து இழுத்துச் சென்றான்.
இருவரும் கை கோர்த்து வருவதை பார்த்து, எல்லோருமே அதிர்ந்தனர்.
“நேத்து எனக்கு கல்யாணம்னு பலருக்கு தெரியும். நான் கல்யாணம் பண்ண பொண்ணு இவங்க தான்” என்று அவன் உடைக்க பலர் தங்களுக்குள் முணுமுணுத்தனர்.
“அன்னைக்கு வேற பொண்ண காட்டுனியேபா?”
“ஆமா.. அந்த பொண்ணோட கல்யாணம் நடக்கல. ஜானகி மேடம தான் கல்யாணம் பண்ணிருக்கேன்”
“இது என்ன புது திருப்பம்? அந்த பொண்ணு என்னாச்சு? ஏன் இப்படி மாத்துன?”
“அத பத்தின டீடைல் எல்லாம் கேட்காதீங்க. அந்த பொண்ண பத்தி நான் பேச விரும்பல. நீங்களும் பேசக்கூடாது. ஜானகி மேடம் என்னோட மனைவி. முறைப்படி சொந்த பந்தம் முன்னாடி கல்யாணம் நடந்துச்சு. அத பத்தி சொல்ல தான் எல்லாரையும் கூப்பிட்டேன். எங்க வாழ்க்கைய பத்தி புரணியோ புரளியோ வரக்கூடாது. நேரடியா சொல்லிட்டோம். இதுக்கு மேல எதுவும் கதை கட்ட மாட்டீங்கனு நம்புறேன்”
“கல்யாணம் திருட்டுத்தனமா நடக்கல. சொந்தபந்தத்தோட நடந்துருக்கு. அதுனால தேவையில்லாத விசயங்கள் எதுவும் என் காதுல விழக்கூடாது. என் வாழ்க்கைய பத்தி மத்தவங்க பேசுறது எனக்கு பிடிக்காது. நீங்களும் பேசக்கூடாது. இனி எல்லாரும் அவங்க வேலைய பார்க்க போகலாம்”
ஜானகி சொன்னதும், குழப்பமாக இருந்தாலும் எல்லோரும் எழுந்தனர்.
“வாழ்த்துக்கள் மேடம்.. வாழ்த்துக்கள் சார்” என்று வயதில் பெரிய ஒருவர் மனதார வாழ்த்த, இருவரின் முகத்திலும் புன்னகை வந்தது.
மற்றவர்களும் வாழ்த்தி விட்டு வேலையை பார்க்கச் சென்றனர். பேசக்கூடாது என்று விட்டாலும், பேசாமல் இருக்க முடியவில்லை. ஆனால் குறைவாக பேசினர்.
யார் வாழ்வில் என்ன நடந்தால் நமக்கென்ன? என்று பலர் சாதாரணமாக விட்டு விட்டனர்.
ஜானகிக்கு கந்தசாமி பேசிய விதம் பிடித்திருந்தது. அதை ரசித்தவள், வெளியே காட்டிக் கொள்ளாமல் வேலையை பார்த்தாள்.
கந்தசாமி வேலை முடிந்ததும் ஜாக்ஷியை அழைத்தான். அவளும் அழைப்பை ஏற்றாள்.
“சொல்லு கந்தசாமி”
“மேடம்.. விசயம் கேள்வி பட்டுருப்பீங்க தான?”
“ம்ம் தெரியும்.. பட் வாழ்த்துக்கள்”
“நன்றி மேடம்.. ஆனா விருந்துக்கு வர முடியாது”
“ஏன்?”
“உங்களுக்கும் ஜானகிக்கும் பெருசா ஆகாது. இருக்க பிரச்சனையே போதும். புது பிரச்சனைய இழுத்துக்க வேணாம்னு பார்க்குறேன்.”
“ஓகே நோ ப்ராப்ளம்.. மேனகா ரொம்ப பண்ணுதோ?”
“ஜெகன போட்டு அடிச்சுட்டு இருக்காங்க”
“அவனா தப்பிச்சுக்குவான். நீ அவள பாரு” என்றதும் சம்மதித்து விட்டு வைத்து விட்டான்.
நேற்று ஜாக்ஷி வேலை முடிந்து வந்த போது, விசயத்தை கேட்டு அதிர்ந்தாள். அவளால் இதை நம்பமுடியவில்லை.
“ஜானகிய ஜெகன் தான் வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சுருக்கான்” என்று கேட்ட போது ஆச்சரியமாக இருந்தது.
மற்ற விவரங்களை கேட்டவளுக்கு, கந்தசாமியை விருந்துக்கு அழைத்ததை நினைத்து இப்போது கவலை வந்தது.
அவளுக்கு ஜானகியை வீட்டுக்கு அழைக்க சுத்தமாக விருப்பமில்லை. அந்த குடும்பத்தில் யாரையும் பிடிக்காது. போலியாக கூட அவர்களிடம் அவளால் சிரிக்க முடியாது.
அழைத்தவனை எப்படி மறுப்பது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க, அவனே வர மறுத்தது அவளுக்கு திருப்தியளித்தது.
‘கந்தசாமி அறிவாளி தான்’ என்று நினைத்ததோடு அந்த விசயத்தை விட்டாள்.
