லாவண்டர் 18
![]()
விக்னேஷின் கோபம் எல்லையை கடக்க, கையில் கிடைத்ததை தூக்கிப்போட்டு உடைத்தான்.
“அந்த ஜாக்ஷி எதுக்கு வர்ரா? அவளுக்கும் ஜானகி குடும்பத்துக்கும் தான் பகையாச்சே” என்று கத்தினான்.
“தெரியாது சார்.. ஆனா அவங்களே நேரடியா கால் பண்ணிருக்காங்க. எனக்கு செம்ம திட்டு. யாரு கம்ப்ளைண்ட் பண்ணானு கேட்டு ஒரு வழியாக்கிட்டாரு கமிஷ்னர். உங்க பேர சொல்லாம அனாநிமஸ் கால்னு சொல்லி தப்பிச்சேன்”
“சரி.. இதுக்கு மேலயும் என் பேரு வரக்கூடாது” என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.
அவனது திட்டம் எதுவும் சரிவராமல் போக, கடைசியாக நினைத்ததை செய்ய முடிவு செய்தான்.
அவனது ஒரே நோக்கம் கந்தசாமியை கொன்று விடுவது தான். ஜானகி அவனுக்கு இரண்டாவது மனைவியாக வர தயங்குகிறாள். அதனால் அவன் அவளுக்கு இரண்டாவது கணவனாக மாற முடிவு செய்து விட்டான்.
“என்னை மாதிரி நீயும் மாறிட்டா எனக்கு பொருத்தமா இருப்பல?” என்று கேட்டு வாய் விட்டு சிரித்தான்.
அடுத்த நிமிடம் எப்போது கந்தசாமியை கொல்ல வேண்டும் என்று முடிவும் செய்து விட்டான்.
•••
“அவன் தானா? அறிவு கெட்டவன்” என்று ஜானகி பொங்க, “என்ன தான் இளமையா காட்டிக்கிட்டாலும் அவன் ப்ளான் எல்லாம் ரொம்ப பழசா இருக்கு மாமா..” என்று ஜெகன் கிண்டலடித்தான்.
அவனுக்கு கந்தசாமியை கொல்ல நினைப்பது தெரியாது. சற்று முன்பு நடந்த பிரச்சனைக்கான காரணம் மட்டுமே சொன்னார்கள்.
“அவனுக்கு புதுசா யோசிக்க தெரியலனாலும்.. நம்மல தொல்லை பண்ண தான செய்யுறான்?”
“ஒவ்வொரு பிரச்சனையிலயும் ஜாக்ஷி தான் வந்து சால்வ் பண்ண வேண்டியிருக்கு. நம்மனால ஏன் மாமா எதுவும் பண்ண முடியல?”
ஜெகன் பொறாமையோடு கேட்க, கந்தசாமிக்கு சிரிப்பு வந்தது.
“சில விசயங்கள சிலர் ஹேண்டில் பண்ணுறது தான் நல்லது ஜெகன்.”
“நாமலும் இப்படி கெத்தா வேலை செய்யுற நிலைமை வரும்னு நினைக்கிறீங்க?”
“வராது ஜெகன்”
இருவருமே அவனை அதிர்ச்சியோடு பார்த்தனர்.
“ஏன்? நாமலும் பெருசா வேலை பார்த்து நிறைய சொத்து வச்சுருந்தா…”
“வச்சுருந்தாலும் ஜாக்ஷி மேடம் இடத்த தொட முடியாது. இந்த விக்னேஷன் சாதாரண ஆளா? அவனுக்கு இருக்க பலத்துக்கு போலீஸ நம்ம இடத்துக்கு அனுப்பி வைக்க முடியும். ஆனா ஜாக்ஷி மேடம் ஒரே கால் அவன மொத்தமா சாய்ச்சுடும். ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. சிலரெல்லாம் பிறக்கும் போதே ஆளுமையோட பிறப்பாங்க. அதெல்லாம் நமக்கு வராது. வரவும் வேணாம்”
“ஏன்?” – ஜானகி.
“அந்த மாதிரி ஆளுமை இருக்கவங்க வாழ்க்கையில நூறு பிரச்சனை சோதனை வரும். அத்தனையும் சமாளிச்சு தான் அவங்க அந்த இடத்துக்கு போயிருப்பாங்க. நாம எல்லாம் அவங்கள மாதிரி எல்லா நேரமும் பிரச்சனையோட வாழ முடியாது. நமக்கு நிம்மதி தேவை.”
“இருந்தாலும் உழைச்சா முன்னுக்கு வரலாம் தான?” என்று ஜெகன் விடவில்லை.
“வரலாம். எவ்வளவோ உழைச்சு மேல வரலாம். ஆனா சந்தோசத்த தார வார்ப்பியா?”
ஜெகன் மறுப்பாக தலையசைத்தான்.
“ஆனா.. அதுக்காக ஜாக்ஷி சந்தோசமா இல்லனு சொல்ல முடியுமா?” என்று ஜானகி கேட்டாள்.
“நான் அவங்க சாப்பிடுற நேரத்துல கால் பண்ணி, இப்படி போலீஸ் வந்துருக்காங்கனு சொன்னேன். பத்து நிமிஷத்துல வேலைய முடிச்சாங்க. நான் வச்சதுக்கு அப்புறம், ஆஃபிஸ்ல இருந்து அடுத்த பிரச்சனைய கால் பண்ணி சொல்லுவாங்க. அடுத்து ஒன்னு வரும். எப்பவும் எதாவது ஒரு வேலை இருந்துட்டே இருக்கும். சாப்பிடவோ தூங்கவோ நேரம் சரியா கிடைக்காது. அந்த மாதிரி வாழ முதல்ல தைரியம் வேணும். அப்புறம் கலங்காத மனசு வேணும்.”
இருவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர். பிறகு ஜெகன் மெல்ல தலையாட்டினான்.
“ஆமா மாமா.. ஜாக்ஷி மாதிரி என்னால எல்லாம் பிரச்சனைய தாங்க முடியாது. சின்ன வயசுல அப்பா அடுத்த பொண்ணோட போயிட்டாரு.. அம்மா அப்பா டைவர்ஸ் வாங்கிட்டாங்கனு தெரிஞ்சும் தாங்கிட்டு வாழ்ந்துருக்காங்க. அப்புறமும் பெத்தவங்க ரெண்டு பேரும் வேற வேற குடும்பத்தோட வாழும் போது, அத தனியா நின்னு வேடிக்கை பார்க்க எவ்வளவு தைரியம் வேணும்? எங்கப்பா போயி.. எங்கம்மா இப்படி எங்கள கொஞ்சம் கூட மதிக்காம இருக்கதயே, என்னால தாங்க முடியல. உங்க கல்யாணம் முடியுற வரை நைட் தூக்கம் கூட வராம இருந்தேன்.”
கந்தசாமி அவனது தோளில் ஆதரவாக தட்டினான். இந்த வயதில் அவன் இவ்வளவு பொறுப்பாக இருப்பதே அவனுக்கு பிடித்திருந்தது.
“விடுடா.. அதான் சரியாகிடுச்சே” என்று சமாதானம் சொன்னான்.
ஜானகிக்கு தான் இருவரையும் பார்த்து கவலையாக இருந்தது. தம்பியால் நிம்மதியாக வாழ முடியவில்லை. கந்தசாமியின் உயிருக்குப் பின்னால் ஒருவன் அலைகிறான்.
அவளுக்கு முக்கியமான இரண்டு ஆண்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி கடவுளிடம் வேண்டினாள். கடவுள் அவளது கோரிக்கையை ஏற்றாரா? இல்லையா? என்பது மட்டும் தெரியவில்லை.
•••
அடுத்த நாள், கந்தசாமி ஜாக்ஷியின் அறையில் கதவை தட்டி விட்டு எட்டிப் பார்த்தான்.
ஜாக்ஷி கைபேசியில் பேசியபடி திரும்பிப் பார்க்க, “வாயா புது மாப்பிள்ளை” என்று குரல் வந்தது.
கந்தசாமி உடனே உள்ளே வந்தான். வீரபத்திரன் அவனை அழைத்த விதத்தில் அவனுக்கு வெட்கம் வந்து விட, “வந்து உட்காரு” என்று விட்டு வீரா சன்னலில் சாய்ந்தபடி கையில் இருந்த ஃபைலை புரட்டினான்.
கந்தசாமி என்று அமர, ஜாக்ஷி பேச்சை நிறுத்தவில்லை. சில நிமிடங்களில் அவள் பேசி முடிக்க, வீராவும் அருகே வந்தான்.
“என்ன நடந்தது? என்ன பிரச்சனை?” என்று ஜாக்ஷி எடுத்த எடுப்பில் விசயத்துக்கு வர, கந்தசாமியும் நடந்ததை எல்லாம் ஒப்பித்தான்.
“அந்த விக்னேஷன் ஒரு சைக்கோவாச்சே.. அவன் பார்வை எப்படி ஜானகி மேல விழுந்துச்சு?” என்று வீரா சந்தேகமாக கேட்க, “நீ எங்க அவன பார்த்த?” என்று ஜாக்ஷி கேட்டாள்.
“அத அப்புறமா சொல்லுறேன். இப்ப அந்த விக்னேஷுக்கு நீ வேணுமா? இல்ல உன் உயிர் வேணுமா?”
“உயிர் தான்” என்று கந்தசாமி சலிப்பாக சொல்ல, “அவன கொன்னுடுவோமா பதிலுக்கு?” என்று சிரித்தபடி கேட்டு வைத்தாள் ஜாக்ஷி.
“நீ செஞ்சாலும் செய்வ.. கொஞ்சம் சும்மா இரு..” என்று அதட்டிய வீரா, “அவன என்ன பண்ணலாம்னு எதாவது ஐடியா வச்சுருக்கியா?” என்று கந்தசாமியிடம் கேட்டான்.
“எனக்கு எந்த ஐடியாவும் இல்ல. அவன் பணபலம் பெருசு. என்னை கொல்ல பார்க்குறான். அதுல இருந்து தினமும் தப்பிச்சு வாழனும். அதான் கொஞ்சம் கடுப்பா இருக்கு”
“என்னடா நீ.. உன்னை நம்பி அக்காவ தூக்கி கொடுத்துருக்கான் ஜெகன். நீ இப்படி பொறுப்பில்லாம பேசுற?”
“சார்.. நீங்க வேற ஏன் சார்? நானே வீட்டை விட்டு வெளிய வந்தா, கொலைகாரன் மாதிரி நாலு பக்கமும் பார்த்துட்டு தான் வர்ரேன். குற்றவாளி கூட இவ்வளவு பயப்பட மாட்டான்”
“இதெல்லாம் பொண்ண கட்டுறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கனும். கட்டிட்டல? அப்ப நீ தான் ஹீரோ.. அவன சமாளிச்சு தான் ஆகனும் கந்தசாமி” என்று அவன் தோளில் தட்டிக் கொடுப்பது போல் ஓங்கி அடித்தான் வீரா.
கந்தசாமி பெருமூச்சு விட, ஜாக்ஷிக்கு சிரிப்பு வந்தது.
“ஆமா.. எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியல.. நீ ஜானகிய லவ் பண்ண தான? திடீர்னு ஏன் மனசு மாறி வேற பொண்ண கல்யாணம் பண்ண போன?”
கந்தசாமி அதிர்ந்து வீராவை பார்க்க, “ஆமா.. நானும் கேட்கனும்னு இருந்தேன். அன்னைக்கு நீ பத்தரிக்கையோட வந்து நிக்கும் போது எனக்கும் சாக் தான். என்ன திடீர்னு மாறிட்ட?” என்று ஜாக்ஷியும் கேட்டாள்.
கந்தசாமிக்கு மூச்சு திணறி பேச்சே வரவில்லை. இருவரையும் அதிர்ச்சியோடு பார்த்து வைத்தான்.
“என்னடா? பதில் சொல்லு”
“சார்.. உங்களுக்கு யார் சொன்னா நான் ஜானகிய…”
“இத தனியா வேற சொல்லனுமா? உன் மூஞ்சிய பார்த்தாலே போதும்.”
“அந்தாளு உசுரோட இருக்கப்போ இருந்தே, நீ ஜானகிய பார்க்குற பார்வைய நான் கவனிச்சுருக்கேன். சோ இல்லனு சொன்னா நம்பவும் மாட்டேன்” என்று ஜாக்ஷி சொல்ல, கந்தசாமிக்கு நம்பவே முடியவில்லை.
இருவர் கண்ணிலிருந்து எதுவுமே தப்பாதா என்ன?
“அது… ரெண்டு பேரோட ஸ்டேட்டஸும் தான் காரணம். அதான் விட்டுரலாம்னு முடிவு பண்ணி… அம்மா வேற பொண்ணு பார்த்ததும் சரினு சொல்லிட்டேன்.”
“ஓஹோ.. சார் எவ்வளவு பெரிய தியாகி பார்த்தியா?” என்று ஜாக்ஷியிடம் கேட்டவன், “அப்புறம் ஏன்டா சான்ஸ் கிடைச்சதும் ஜானகி கழுத்துல தாலிய கட்டுன? அப்ப மட்டும் ஸ்டேட்டஸ் தடுக்கலயா?” என்று கிண்டலாக கேட்டு வைத்தான்.
“அப்ப எமர்ஜென்ஸி.. கடவுளா பார்த்து வாய்ப்பு கொடுக்கும் போது வேணாம்னு சொல்ல கூடாதுல?”
“இந்த அறிவு உசுர காப்பாத்துறதுலயும் இருக்கனும் கந்தசாமி.. அவ அவ்வளவு தைரியமானவ கிடையாது. அவளையும் அவ தம்பியையும் நீ தான் பார்க்க வேண்டியிருக்கும். அந்த விக்னேஷன என்ன பண்ணுறதுனு முதல்ல யோசி”
“எனக்கு தெரியல மேடம். அவன மொத்தமா எங்கள விட்டு துரத்தனும். அதுக்கு எதாவது நீங்க ஐடியா கொடுங்களேன்”
“அவள போய் கேட்குற? அவ கொலை பண்ண ஐடியா கொடுப்பா” என்ற வீராவை அடித்து விட்டு முறைத்தாள் ஜாக்ஷி.
“இவ இதுக்கு சரி பட மாட்டா.. நீ ஜாக்கிரதையா இரு. நான் வேணா எதாவது கிடைக்கிதானு யோசிக்கிறேன்”
“ஆமா இவரு பெரிய இவரு.. யோசிச்சுடுவாரு.. வாய மூடு… இங்க பாரு கந்தசாமி.. இது உங்க பிரச்சனை.. நீங்களே உங்க கையால முடிக்கனும். வேலையில பிரச்சனைனா நான் வரலாம். வாழ்க்கையில பிரச்சனைக்கு நீ தான் முடிவு பண்ணனும். ஹெல்ப் வேணும்னா பண்ணுறேன். அவ்வளவு தான். அதுக்கு மேல நாங்க தலையிட முடியாது”
வீராவும் அதை ஒப்புக் கொள்ள, கந்தசாமிக்கு அப்போதைக்கு எதுவுமே தோன்றவில்லை.
மூன்று பேரும் அமர்ந்து அடுத்த அரை மணி நேரத்திற்கு வேலையை பற்றிப்பேசினர். ஜாக்ஷியும் தொழிற்சாலையில் நடப்பதை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டாள்.
“எதாவது யோசிச்சா சொல்லு..” என்று இருவரும் சொல்லியே அனுப்பி வைத்தனர்.
கந்தசாமி எதை எதையோ யோசித்தபடி தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தான்.
ஜானகி அவன் வரும் வரை அடிக்கடி வாசலை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் இல்லாமல் அவன் தனியாக வெளியே போனால், அவளுக்கு பயம் வந்துவிடும்.
அவன் திரும்பி வரும் வரை பதட்டத்துடனே இருப்பாள். இப்போதும் அவன் பத்திரமாக வந்த பிறகே நிம்மதியாக மூச்சு விட்டாள்.
அந்த நிம்மதி பல மணி நேரம் நீடிக்கவில்லை. அடுத்த நாள் கந்தசாமி தனியாக வெளியே சென்றிருக்க, அவன் சென்ற கார் நடுசாலையில் நொறுங்கிக் கிடந்தது.
செய்தியை கேட்டு ஜானகி அதிர்ந்து கீழே விழுந்து விட, தெய்வநாயகி பதறியடித்து அவளிடம் விசயத்தை கேட்டார்.
ஜானகி கண்ணீர் விட, அவருக்கு பாதி உயிர் போனது.
“அத்த.. அவர.. அவருக்கு.. ஆக்ஸிடென்ட்டாம்” என்றவளுக்கு மூச்சு திணறியது.

🥰🥰🥰🥰