லாவண்டர் 20 (final)
![]()
அடுத்த நாள்..
காலையில் ஜானகி கந்தசாமியிடம் சொல்லாமல் எங்கோ கிளம்பிச் சென்றாள். அவளது மனதில் அவ்வளவு கோபம். அதை எல்லாம் அந்த விக்னேஷனை எரிப்பதற்காக பயன்படுத்த நினைத்து சென்றாள்.
அவளுடைய தந்தை இருந்த போது, இருந்த டிரைவரை காரோடு வர முடியுமா? என்று கேட்க, அவர் அப்போது சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டிக் கொண்டிருந்ததால் உடனே வந்தார்.
அவன் வீட்டின் முன்னால் கார் வந்ததும், கதவு தானாக திறந்தது. விக்னேஷன் மட்டும் தான் அந்த வீட்டில் இருக்கிறான். கதவை திறக்கும் கட்டுப்பாடு அவன் கையில் தான் இருந்தது.
அவளது கார் அவன் வீட்டுப்பக்கம் வருவதாக விசயம் தெரிந்ததுமே, அவளை சந்திக்க சந்தோசமா தயாராகி விட்டான்.
நேற்று நடந்த விபத்தில் கந்தசாமி தப்பி விட்டான். அது வருத்தம் தான். ஆனால் அதை பார்த்து பயந்து ஜானகி தன்னிடம் ஓடி வருவது வெற்றியல்லவா?
அந்த வெற்றியை சந்தோசமாக ஏற்றுக் கொண்டு, அவளுக்காக காத்திருந்தான் அவன்.
காரை விட்டு இறங்கிய ஜானகி, விறுவிறுவென உள்ளே சென்றாள்.
“மை ஜான்… வெல்கம் ஹோம்.. உன்னை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கல”
ஆர்பாட்டமாக வரவேற்றவனை முறைத்துப்பார்த்தாள்.
“என் பொண்டாட்டியா தான் நீ இந்த வீட்டுக்கு வருவனு நினைச்சேன். பரவாயில்ல.. இப்ப வந்ததும் எனக்கு சந்தோசம் தான்”
“ஏன்டா இப்படி பண்ணுற? பைத்தியமாடா நீ?” என்று ஜானகி கத்த, “உன் மேல பைத்தியமாகிட்டேன் ஜான்” என்றான் அவன்.
“பைத்தியம் பிடிச்சா போய் ஹாஸ்பிடல்ல சேரேன். ஏன் என் உயிர வாங்குற?”
“எனக்கு உன் உயிர் வேணாம் ஜான். உன்னோட முதல் புருஷன் உயிர் தான் வேணும்.. அத எடுத்துட்டா நீயும் என்னை மாதிரி ஆகிடுவ. அப்புறம் நமக்குள்ள பொருத்தம் சரியா இருக்கும்ல?”
“அப்படி ஒரு நினைப்பு இருக்கா உனக்கு? அவர எதாவது பண்ணிட்டா, நான் உன்னை கல்யாணம் பண்ணுவேனா? உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போவேனே தவிர நீ நினைக்கிறது நடக்காது”
“அதயும் பார்க்கலாமே. முதல்ல நான் அவன கொன்னுடுறேன். அப்புறமா…”
ஜானகி அவசரமாக அங்கே இருந்த கண்ணாடி பொருட்கள் ஒவ்வொன்றையும் தூக்கி அவன் மீது எறிய ஆரம்பித்தாள்.
அவன் நகர்ந்து கொள்ள, எல்லாம் தரையில் விழுந்து சிதறியது.
“அவரு ஏன்டா சாகனும்? நீ செத்துப்போடா.. செத்துப்போ” என்றவள் கண்ணாடி பொருட்களை மட்டுமே எடுத்து உடைத்தாள்.
உள்ளே வரும் போதே, எதுவெல்லாம் கண்ணாடியாக இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே தான் வந்தாள். அதை எல்லாம் ஒன்று விடாமல் எடுத்து உடைத்தாள்.
விக்னேஷன் அவளது கோபத்திற்கு அசராமல் நின்றாள்.
“உனக்கு உடைக்கனும்னு தோனுறத எல்லாம் உடை. இது உன் வீடு ஜான்”
கடைசியாக ஒன்றை கையில் தூக்கியவள், அவனை தீயாக முறைத்தாள்.
“என்ன பார்க்குற? நீ திரும்பி வரும் போது.. அதாவது என் மனைவியா வரும் போது, இது மாதிரி ஆயிரம் வாங்கி வைக்கிறேன். நீ தினமும் உடைச்சு விளையாடலாம். உனக்கு என்ன தேவையோ அத நான் தான் கொடுக்க முடியும் ஜான். அந்த பிச்சைக்காரன் கந்தசாமியால முடியாது.. அது தெரியாம..”
“பேசாதடா.. அவர பத்தி பேசாத..” என்று கடைசி பொருளையும் போட்டு உடைத்தாள்.
“இங்க பாரு.. நீ என்ன பண்ணாலும் நான் உனக்கு கிடைக்க மாட்டான். ஆனா என் புருஷன் மேல இன்னொரு தடவ ஒரு கீறல் விழுந்துச்சு?” என்றவள், கீழே கிடந்த கண்ணாடியில் பெரிய துண்டாக எடுத்தாள்.
“உன்னை இங்கயே கொன்னுட்டு போயிடுவேன்” என்றவள் கண்ணாடியை அழுத்திப் பிடிக்க, அவளது கைகளில் இருந்து இரத்தம் வந்தது.
“ஏய்.. ஜான்.. பார்த்து… இரத்தம் வருது” என்ற விக்னேஷன் நடுவில் இருந்த கண்ணாடியை பொருட்படுத்தாமல் நடந்து வந்து விட்டான்.
அவனது காலில் நுழைந்து விட்ட கண்ணாடியை பற்றி அக்கறை படாமல், அவன் ஜானகியின் அருகே வந்து விட, அடுத்த நொடி கையில் இருந்த கண்ணாடியால் அவனை குத்தப்போனாள்.
சட்டென அவளது கையை பிடித்து தடுத்தான் அவன். அவள் அவனது கையிலிருந்து வெடுக்கென தன் கையைப் பிடுங்கி கண்ணாடி இருந்த பகுதியில் அவனை தள்ளி விட்டாள்.
கால்களில் இருந்த காயம் அவனை நிலை கொண்டு நிற்க விடவில்லை.
விழுந்த வேகத்தில் அவனது கன்னத்தில் கண்ணாடிகள் இறங்கி, அவனது முகத்தில் பல இடங்களில் இரத்தம் சொட்ட வைத்தது.
காலில் கண்ணாடி குத்தும் போது அலறாதவன், முகத்தில் குத்தியதும் பேயாக அலறினான்.
அது தான் அவளுக்கும் வேண்டும். தன் கையை பார்த்தாள். இரத்தம் வந்திருந்தது. கண்ணாடியை தூக்கி கீழே எறிந்தவள், அலறியவனை பற்றி கவலைப்படாமல் ஓடிச் சென்று காரில் ஏறினாள். கேட்டை மூடவிடாமல் குறுக்காக காரை நிறுத்தச் சொல்லி இருந்தவள், இப்போது காரில் ஏறி ஓடி விட்டாள்.
“அம்மா.. கையில இரத்தம்..”
“நிக்காம போங்க.. அவன் பைத்தியம்.. வந்துட போறான்” என்றதும் கார் வேகமெடுத்தது.
கைக்குட்டையால் கையை கட்டிக் கொண்டாள். வந்த காரியம் முடிந்து விட்டது. கந்தசாமி விக்னேஷனின் பலவீனத்தில் அடிக்க நினைத்தான். ஆனால் ஜானகிக்கு அவனது பலத்தை உடைக்க தோன்றியது.
அழகில் கர்வம் கொண்டிருந்தவன் விக்னேஷன். அவன் முகத்தில் சிறு கீறலாவது போட்டு விட வேண்டும் என்று நினைத்து தான் வந்தாள். அதற்காக தான் கண்ணாடி பொருட்களை எடுத்து உடைக்கவும் செய்தாள்.
அவன் அருகே வந்தால் அவனது முகத்தில் கிழித்து விட நினைத்தாள். ஆனால் கோபம் கண்ணை மறைக்க, நினைத்ததை விட்டு விட்டு அவனது வயிற்றில் குத்தப்போனாள். அது நடக்காமல் உதறியவள், அவன் தானாக கண்ணாடிக்குள் விழுந்து அலறவும், ஓடி வந்து விட்டாள்.
மருத்துவமனை சென்று கையில் கட்டுப் போட்டு விட்டு சென்றவள், தெய்வநாயகியிடம் வேலை செய்யும் போது அடிபட்டு விட்டதாக சமாளித்து விட்டாள்.
அன்று ஜானகி இரவு நேரம், அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்க, கந்தசாமி நள்ளிரவுக்கு தான் வீடு திரும்பி வந்தான்.
நேரம் பனிரெண்டை தொடும் வரை, ஜானகி வேலை செய்வது போல் விழித்திருந்து கணவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
ஒரு கையில் வேலை பார்ப்பது வேறு கடுப்பாக இருந்தது. கந்தசாமி பைக்கை நிறுத்தி விட்டு கதவை தட்டியதும், ஓடிச் சென்று திறந்தாள்.
“இவ்வளவு நேரமா எங்க போயிருந்த?” என்று எடுத்த எடுப்பில் முறைக்க, “அம்மா எங்க தூங்கிட்டாங்களா?” என்று கேட்டான்.
“தூங்கிட்டாங்க..”
எட்டிப் பார்த்தவன், “அப்ப நீ வா” என்று அவளது கையைப்பிடித்து இழுத்துச் சென்றான்.
“என்ன?” என்று கேட்டாலும் இழுத்த இழுப்புக்குச் சென்றாள்.
அறைக்குள் வந்து கதவை அடைத்ததும், ஒரு பரிசை எடுத்து நீட்டினான்.
“கரெக்ட்டான நேரத்துக்கு வந்துட்டேன். ஹாப்பி பர்த்டே” என்று நீட்ட, ஜானகி அதிர்ச்சியோடு பார்த்து வைத்தாள்.
சில நாட்களாக நடக்கும் பிரச்சனையில், அவளது பிறந்த நாள் கூட மறந்து போனது.
சிறு பெட்டியும் பூங்கொத்தும் அவன் கொடுக்க, சந்தோசமாக வாங்கினாள்.
அவளது முகத்தையே பார்த்திருந்தவன், அவளது கையை அப்போது தான் கவனித்தான்.
“ஹேய்.. இது என்ன? ஏன் கட்டு போட்டுருக்க?”
“இப்ப சந்தோசமா இருக்கேன்.. இத பத்தி அப்புறமா சொல்லுறேன்” என்றவள், பூங்கொத்தை முகர்ந்து பார்த்தாள்.
“லாவண்டர் பூ தான?”
“ஆமா.. இது கிடைக்காம நான் அலைஞ்சது எனக்கு தான் தெரியும்”
“லாவண்டர் ஏன்?”
“அதுவா.. முதல்ல கிஃப்ட்ட பிரி சொல்லுறேன்” என்றவன், அவளை அருகே அமர வைத்துக் கொண்டான்.
ஒரு கையால் பிரிக்க முடியாமல் அவள் போராட, உதவிக்கு வந்தான். ஆர்வமாக பிரித்து எடுத்தவள், உள்ளே இருந்த வாசனை திரவியத்தை பார்த்து மேலும் ஆச்சரியப்பட்டாள்.
முகர்ந்து பார்த்தவள், “இதுவும் லாவண்டர் சென்ட்டா?” என்று கேட்டாள்.
“ஆமா..”
“ரொம்ப நல்லா இருக்கு” என்று சந்தோசமாக சொன்னவள், அவன் மீது அடித்து விட்டு முகர்ந்து பார்க்க, அவன் தான் மயங்கி விட்டான்.
“எல்லாம் லாவண்டர்.. ஏன்?”
“ஏன்னா.. உன்னோட கேரக்டருக்கு லாவண்டர் பூ தான் பொருந்தும் அதான்”
“ஹான்?”
“இந்த பூக்கு அர்த்தம் என்ன தெரியுமா? இதோட மணம் மன அமைதிய கொடுக்கும். நிம்மதிய கொடுக்கும். சாந்தமானது. நீயும் அப்படித்தானே.. ரொம்ப அமைதியான கோபமே படத்தெரியாத ஜானகிக்கு இது தான் பொருத்தம்.. பிடிச்சுருக்கா?”
ஜானகி தலையாட்டி விட்டு, அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“இப்ப இந்த கைக்கு என்னாச்சு சொல்லுறியா?” என்று கேட்டவன், அவளது கையை மென்மையாக பற்றினான்.
அவள் சந்தோசமாக இருக்கிறேன் என்று சொன்ன வார்த்தைக்காக வாயை மூடிக் கொண்டவன், அதற்கு மேல் பொறுக்காமல் கேட்டான்.
“கண்ணாடி கிழிச்சுடுச்சு”
“அத ஏன் எடுக்குற? எப்ப கிழிச்சது?”
“நீ சொன்னியே.. எனக்கு கோபமே வராதுனு.. இன்னைக்கு வந்துச்சு”
அவளை நிமிர்த்தி முகத்தை பார்த்தான்.
“என்ன சொல்லுற?”
நடந்ததை சொன்னாள்.
“வந்த கோபத்துக்கு அவன அங்கயே கொன்னுருப்பேன். அவன் மூஞ்சிய நானே கிழிக்கலாம்னு தான் பார்த்தேன். ஆனா அவனா கண்ணாடில விழுந்துட்டான். ஓடி வந்துட்டேன்”
கந்தசாமி இமைக்க மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன? தென்றல் மாதிரி இருந்த ஜானகி ஜாக்ஷி மாதிரி புயலாகிட்டானு தோனுதா?”
கந்தசாமி மறுப்பாக தலையசைத்து விட்டு, சில நொடிகள் யோசித்தான்.
“நீ செஞ்சது ஓகே. அங்க இருந்து நீ தப்பிச்சு வந்ததே போதும். ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.. ஏன் அடிக்கடி உன் பேச்சுல ஜாக்ஷி மேடம் பேரு வருது? ஜெகனும் அப்படித்தான் செய்யுறான்.”
“ஜெகன் பேசுறான்னா, அதுக்கு எங்கப்பா தான் காரணம். அவள உதாரணம் காட்டாம அவருக்கு பேசவே வராது”
“அப்ப நீ பேசுறது?”
“அதுக்கு நீ தான் காரணம். சாக் ஆகாத.. இந்த ஃபேக்டரிய வாங்குனப்போ, எத்தனை தடவ ஜாக்ஷிய பத்தி பெருமையா பேசிருக்க. என் கிட்டயே ஜாக்ஷி மாதிரி யாரும் வர முடியாதுனு எவ்வளவு தடவ சொல்லுவ. அவள பெருமையா பேசிட்டு, அதே வாயால என்னை திட்டுவ. அப்பலாம் இவன் வாயால நாமலும் பாராட்டு வாங்கடனும்னு எப்படி உழைச்சுருக்கேன் தெரியுமா? சின்னதா ஒரு விசயத்துல நான் பண்ணது தான் சரினு நீ சொல்லிட்டா போதும், அன்னைக்கு முழுக்க வானத்துல பறக்குற மாதிரி இருக்கும். அது அப்படியே வளர்ந்து எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருச்சு”
“அப்புறம்?”
“ஆனா சொல்ல தோணல. உனக்கு ஜாக்ஷி மாதிரி பொண்ணுங்கள தான் பிடிக்கும்னு நினைச்சேன். அவள பத்தி நீ ஓவரா புகழுறதால, என்னைலாம் உனக்கு பிடிக்காதுனு நினைச்சுட்டேன். நானே என் மனச மாத்திக்கலாம்னு முடிவு பண்ணி… ஆனா எலலாம் ஜெகனால மாறிடுச்சு. அவன் என்னை கண்டு பிடிச்சுட்டான். அதான் நம்ம கல்யாணத்த பண்ணி வச்சுருக்கான்.”
“ஜாக்ஷி மேடம் மாதிரி பொண்ணுங்கள தான் எனக்கு பிடிக்கும்னு நீயே நினைச்சுக்கிட்டியா?”
“ஆமா.. அவள தான புகழ்ந்து தள்ளுவ? அப்ப அப்படித்தான் நினைக்க முடியும்? ஆனா கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒன்னு சொன்னியே.. அவள மாதிரி இருக்க தேவையில்ல. நாம சந்தோசமா நிம்மதியா இருந்தா போதும்னு.. அப்ப தான் லைட்டா நம்பிக்கையே வந்துச்சு. சரி இவன் அவள மாதிரி வேணும்னு ஆசைப்படலனு”
அவளை தூக்கி மடியில் வைத்து கட்டிக் கொண்டவன், “அவங்க மேல எனக்கு இருக்கது மரியாதை. பிரம்மிப்பு. உன் மேல இருக்கது காதல். ரெண்டையும் எப்படி குழப்புற நீ?” என்றான்.
“இப்ப இப்படி சொல்லுற.. அப்போ..”
“நான் உன்னை எவ்வளோ நாளா லவ் பண்ணுறேன் தெரியுமா?”
“ஒரு வாரமா? இல்ல ரெண்டு வாரமா?” என்று கிண்டலாக கேட்டாள்.
“ஏழு வருசமா”
ஜானகி காதுகளை நம்ப முடியாமல் அதிர்ந்து பார்க்க, அவனது காதல் கதையை எல்லாம் சில பல முத்தங்களோடு சொல்லி முடித்தான்.
“நீ எனக்கானவ அதான் என்னென்னவோ நடந்தாலும் என் கிட்ட வந்து சேர்ந்துட்ட” என்றவன் மனைவியை கொஞ்சினான்.
அவன் மீது வீசிய லாவண்டர் மலரின் மணம், அவள் மீதும் வீச ஆரம்பித்தது.
காலையில் தெய்வநாயகி ஜானகியை வாழ்த்தி பணம் கொடுத்தார்.
“ஹை… இது தான் பெஸ்ட் கிஃப்ட் அத்த” என்று குழந்தையாக துள்ளியவளை பார்த்து சிரித்து விட்டு, “கோவிலுக்கு போயிட்டு வாங்க. நான் சாப்பாடு பண்ணி வைக்கிறேன்” என்ற விட்டுச் சென்றார்.
“காசு பெஸ்ட் கிஃப்ட்டா..? நேத்து ராத்திரி முழுக்த நான் கொடுத்தது?” என்று ரகசியமாக கேட்டான் கணவன்.
“ஏய் கோவிலுக்கு போகும் போது என்ன பேசுற?”
“ஏன்மா முத்தத்த பேசுறது தப்பா?”
“நீ எதையும் பேச வேணாம் சாமி.. கந்தசாமி.. பேசாம வா” என்று இழுத்துக் கொண்டு சென்றாள்.
சாமி கும்பிட்டு விட்டு வெளியே வர, ஜெகன் வந்து விட்டான்.
“ஹாப்பி பர்த்டே கா” என்று அவன் பங்குக்கு ஒரு பரிசை நீட்டினான்.
“வீட்டுக்கு வாடா.. இங்க வச்சு கொடுக்குற?”
“காலேஜ்க்கு லேட்டாச்சு. ஈவ்னிங் வர்ரேன். ஒரு முக்கியமான விசயம்.. வந்து சொல்லுறேன்.” என்று விட்டு கிளம்பி விட்டான்.
கந்தசாமி ஜானகியோடு வீட்டை நோக்கி நடந்தான்.
“இவன பாரு.. கண்ணாடி வாங்கி கொடுத்துருக்கான்” என்று சிரித்தவள், உடனே கண்ணில் மாட்டிக் கொண்டாள்.
“கூலிங் கிளாஸா?”
“ஆமா.. காலேஜ் படிக்கும் போது நிறைய வாங்குவேன். ஆனா எல்லாத்தையும் அவன் தூக்கிப்பான். இப்ப அவனே வாங்கிட்டு வந்து கொடுத்துருக்கான்.. வளர்ந்துட்டான்”
“எல்லாரும் நல்ல கிஃப்ட்டா கொடுக்குறாங்க.. நான் நிறைய உழைக்கனும் போல”
“நீ கொடுத்த பர்ஃபியூம் கூட எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு தான்.”
“அது மெயின் கிஃப்ட் இல்லையே’
“பின்ன என்ன கிஸ்ஸா? அத பத்தி பேசுன அவ்வளவு தான்”
கந்தசாமி சிரித்து விட்டு, “அதுவும் இல்ல” என்றான்.
“வேற என்ன?”
“வீட்டுக்கு போயி காட்டுறேன்”
இருவரும் வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையாக தொலைக்காட்சியை உயிர்பித்தான்.
“பிரபல தொழிலதிபரின் மறுபக்கம். தொழிலதிபர் விக்னேஷன் ஒரு சைக்கோவா? மனைவியை சித்திரவதை செய்து தற்கொலைக்கு தூண்டினாரா?” என்று செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.
“என்ன இது?” என்று ஜானகி அதிர, “நான் சொன்னேன்ல? என் ஃப்ரண்ட்ட வச்சு அவன் கம்பெனி சீக்ரெட் பர்ஸ்னல் விசயம் எல்லாம் கிளறுனேன். ஜாக்ஷி மேடம் தான் ஹெல்ப் பண்ணாங்க. அவன் வீட்டுல அவன் பொண்டாட்டி செத்தப்போ எழுதுன சூசைட் நோட் கிடைச்சது. அத அழிக்காம ஏன் வச்சுருந்தான்னு தெரியல. நான் தூக்கி போலீஸ் கிட்ட கொடுத்துட்டேன்”
ஜானகி தொலைகாட்சியை பார்த்தாள். முகத்தில் மாஸ்க் அணிந்து விக்னேஷனை கைது செய்து கொண்டு சென்றனர். அவள் செய்த வேலையில் அவனது அழகு பறிபோயிருக்க, கந்தசாமி செய்த வேலையில் அவனது புகழ் பணம் அனைத்தும் பறிபோனது.
சற்று முன்பு தான் கடவுளிடம் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் படி கேட்டு விட்டு வந்தாள். அது நடந்து விட்டது.
சந்தோசமாக கணவனை அணைத்துக் கொண்டாள்.
மாலை ஜெகன் வந்தான். அவனுக்கு பரம திருப்தி.
“அந்த கிழவன் அப்படியே ஜெயில்ல செத்து போகட்டும்” என்று சபித்தான்.
“அவன் இனி வர மாட்டான். ஃப்ரீயா விடு. நீ சொல்லு.. எதோ சொல்லிட்டு போன?” என்று கந்தசாமி கேட்டான்.
“அம்மாவ எதாவது முதியோர் இல்லத்துல சேர்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் மாமா”
“டேய்.. ஏன்டா?”
இருவருமே அதிர்ந்தனர்.
“இல்ல மாமா.. அவங்க உங்கள கொல்ல பார்த்துருக்காங்க. எனக்கு அக்கா வாழ்க்கையும் உங்க உயிரும் தான் பெருசா தெரியுது. அவங்க இது வரை பண்ணதே போதும். போய் முதியோர் இல்லத்துல இருக்கட்டும். அப்ப தான் உறவோட அருமை புரியும்”
“ஆனாலும்.. உங்க அம்மாடா..”
“அந்த பாசமெல்லாம் செத்து போயிடுச்சு மாமா”
“அவங்க போக மாட்டேன்னு சொன்னா?”
“அதெல்லாம் ஜாக்ஷி பார்த்துக்குவாங்க”
“எதே?” என்று ஜானகி அதிர்ந்தாள்.
“கார் நொறுங்குன அன்னைக்கே, ஜாக்ஷிக்கு கால் பண்ணேன். முதல்ல உனக்கு ஏன்டா நான் பண்ணனும்னு கேட்டாங்க. அப்புறம் கந்தசாமிய கொல்லுறதுக்கு இதுவும் ஒரு காரணமா? உனக்காக இல்லனாலும் அவனுக்காக செய்யலாம்னு சொல்லிட்டாங்க.”
கந்தசாமி மனைவியை பார்த்தான்.
‘நல்ல மேடம்.. நல்ல எம்ப்ளாயி’ என்று உதட்டை சுளித்தாள் அவள்.
“அம்மா போயிட்டா நீ தனியா என்னடா செய்வ?”
“நான் ஹாஸ்டல் போறேன்கா. காலேஜ் முடியுற வரை.. அப்புறம் வீட்டை வாடகைக்கு விடலாமானு யோசிக்கிறேன். நீ என்ன சொல்லுற?”
“ஏன் ஹாஸ்டல்? இங்க எங்க கூட இரேன்”
“இல்ல மாமா.. அது சரி வராது. அக்கா மட்டும் தான் உங்களுக்கு. இலவச இணைப்பா நான் வர மாட்டேன். நான் சுதந்திரமா வாழனும் ஆசைப்படுறேன். அதுல தலையிடாதீங்க” என்று விளையாட்டாக சொன்னான்.
“பெரிய சுதந்திரம்” என்று அவன் தலையில் தட்டினாள் ஜானகி.
சாப்பிட்டு விட்டு ஜெகன் கிளம்பி விட, “நாம இந்த வீட்ட பெருசா கட்டலாமா?” என்று தாயிடமும் மனைவியிடமும் பொதுவாக கேட்டான் கந்தசாமி.
“உனக்கு தோனுச்சுனா செய்.. ஆனா காசு தான் செலவாகும். நீ என்னமா சொல்லுற?”
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. காசுக்கு… லோன் கூட போட்டுக்கலாம். ஆனா ஏன் திடீர்னு?”
“ரொம்ப நாளா தோனுச்சு”
“பண்ணலாம்பா.. உங்கப்பாவோட பணம் கூட இருக்குல.. எடுத்து கட்டலாம்” என்று தெய்வநாயகி அனுமதி கொடுத்தார்.
ஜானகி கணவனிடம் கேள்வி கேட்க, “குடும்பம் பெருசாகிடுச்சுல..” என்றான் அவன்.
“நான் ஒரு ஆள் இருக்கது பெருசா?”
“இல்ல.. ஜெகன் தனியா தங்குறான்ல.. அவன கூட்டிட்டு வந்து நம்மலோட வச்சுக்கனும். அப்புறம் நமக்கு பிள்ளைங்க பிறக்கும்.. அது வளரும் போது குடும்பம் பெருசு தான?”
ஜெகனுக்காக யோசித்ததை கேட்டு சந்தோசம் வர, குழந்தை பேச்சில் வெட்கம் வந்தது.
“ஆமா நாளைக்கே பிள்ளை வருதாக்கும்?”
“என்ன இப்படி சொல்லிட்ட? காலையில தான் மதுசூதனன் கால் பண்ணிருந்தாரு. அவரு வொய்ஃப் பிரக்னெண்ட் ஆகிட்டாங்கனு சொல்லுறாரு. நம்ம கூட கல்யாணம் பண்ணவங்க அவங்க.. நாம மட்டும் பின் தங்கலாமா?”
“எதுல போய் போட்டி போடுற?” என்று சிரித்தவளின் வாசம் பிடித்தான். அவன் வாங்கிக் கொடுத்த வாசனை திரவியம் அவனையே மயக்கியது.
“ஸ்மெல் அள்ளுது..” என்றவன் அவளையும் அள்ளிக் கொண்டான். அந்த அறையில் ஜானகியின் சிரிப்போடு லாவண்டர் மலரின் மணமும் நிறைந்தது.
நிறைவு.

அதெப்படி.. முன்ன நாள் தானே ஜானகியோட
காருக்கு ஆக்சிடண்ட் ஆகி, சர்வீஸ்க்கு விட்டிருந்தாங்க..
அதுக்குள்ள ரெடி பண்ணி விக்னேஷ் வீட்டுக்கு கொண்டு போய் அவன் பண்ண தப்புக்கு பதிலுக்கு திருப்பி பொடுத்துட்டு வந்தாளா…?
சரி, கதைக்கு லாஜிக் கிடையாது என்கிறதால அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம் ஓகேவா..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
இது வேற காரு வேற டிரைவரு.ஆனா சொல்ல மறந்துட்டேன். அத ஆட் பண்ணுறேன். நன்றி
Athikulla mudinjuducha
ஆமா.
Nice 👌👌
What is next . Any new novel ?
அடுத்த மாசம் வரும்.