அத்தியாயம் 6

Loading

மிதுனனும் ஜோவிதாவும் தேன் நிலவு சென்று இரண்டு நாட்களாகி இருக்க, மில்லில் பிரச்சனை வந்தது.

வேலை என்றால் எப்போதும் பிரச்சனை வருவது தான். ஆனால் இந்த முறை பிரச்சனை வந்த போது, சமருக்கு தம்பியின் மீது தான் கோபம் வந்தது.

“அக்கறையே இல்லாம விட்டுட்டு ஊர் சுத்த போயிட்டான். இடியட்” என்று திட்டிக் கொண்டே, சமர் பிரச்சனையை சமாளித்துக் கொண்டிருந்தான்.

பிரச்சனை தீரும் வரை மிதுனனை திட்ட மறக்கவில்லை.

அவனுக்கு அழைத்தாலும், அழைப்பையும் ஏற்கவில்லை.

சமரின் அழைப்பை தான் மிதுனன் ஏற்கவில்லையே தவிர, வேலையை அவன் விசாரித்துக் கொண்டு தான் இருந்தான்.

அவன் வர வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தான் வரவில்லை. ஆனால் அது சமருக்கு தெரியாதே. கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தான்.

பத்து நாட்களுக்கு பிறகு இருவரும் வரும் போது, பிரச்சனை முழுதாய் முடிந்து விட்டது. ஆனால் சமருக்கு அப்படியே விட மனமில்லை.

இனி ஒரு முறை, வேலையை போட்டு விட்டு மிதுனன் மனைவியோடு ஊர் சுற்றக் கூடாது. அதை தடுத்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

வீட்டுக்கு வந்ததுமே மிதுனனை பிடித்துக் கொண்டான்.

“இத்தனை நாள் இங்க இல்லையே.. வேலை என்ன ஆச்சுனு அக்கறை இருக்கா உனக்கு?” என்று ஆரம்பித்து விட, சங்கரி யோசனையோடு வந்து பார்த்தார்.

“இப்ப என்ன வேணும் உனக்கு?” என்று மிதுனன் கேட்க, “உன்னால அங்க ஏகப்பட்ட பிரச்சனை.. நீ நல்லா ஊர் சுத்திட்டு வந்துருக்க” என்றான்.

“என்னால பிரச்சனையா? நான் வரவே இல்லையே?”

“அதான் பிரச்சனை” என்றவன், பிரச்சனைகளை மொத்தமாய் அடுக்கினான்.

பொறுமையாய் எல்லாம் கேட்டு முடித்த மிதுனன், “இப்ப இதெல்லாம் தான் முடிஞ்சுருச்சுல? அப்புறம் என்ன?” என்று கேட்டு வைத்தான்.

“எல்லாம் முடிஞ்சுட்டா? நடந்ததுக்கு யாரு பொறுப்பு?”

“நான் பொறுப்பேத்துக்கனும்ங்குறியா? நோ சான்ஸ். அதுல என் தப்பு எதுவும் இல்ல”

“உன் தப்பு தான். நீ இருந்து சரி பார்த்துருந்தா இப்படி ஏன் நடக்குது?”

“நான் பார்த்தா மட்டும் போதுமா? ஒரு வாரம் நான் இல்லனா உடனே பிஸ்னஸ் மூழ்கி போயிடுமா? நீ எதுக்கு இருக்க? முக்கியமா நீ தான் இதுல மெயின். நீ பார்க்க வேண்டியது தான?”

“அப்ப நீ பண்ண தப்ப ஒத்துக்க மாட்ட?”

“தப்பே பண்ணாம நான் ஏன் ஒத்துக்கனும்?”

“நீ இல்லாததால தான இவ்வளவும் நடந்துச்சு? அப்போ உன் தப்பு தான்”

“ஒருத்தர் இல்லனா தொழிலே மூழ்கி போகும்னு சொல்லுறதே முதல்ல முட்டாள்தனம் சமர். யாரு இல்லனாலும் அது சரியா நடக்கனும். நடக்க வைக்கனும்.”

“அப்போ நீ இல்லனாலும் வேலை நடக்கும்னா, நீ வரமாலே இருந்துடுவியா? இப்படி ஊர் சுத்திட்டு?”

“இன்னொரு தடவ ஊர் சுத்துறேன்னு சொல்லாத. அப்புறம் எனக்கு பொறுமை போயிடும்.‌ நான் படிச்சதே வேற. அம்மா, நீயும் சமரும் தான் இத பார்க்கனும்னு சொன்னதால, செய்யுற வேலைய விட்டுட்டு வந்து இத பார்த்துட்டு இருக்கேன். எல்லாம் நம்ம குடும்ப சொத்தாச்சே.. அம்மா சொன்னாங்களேனு அக்கறைல தான். சும்மா உனக்கு மட்டுமே எல்லாத்துலயும் அக்கறை இருக்கதா பேசிட்டு இருக்காத. போய் வேற வேலை இருந்தா பாரு”

மிதுனன் பேச்சு முடிந்தது என்று நகர, “நில்லு.. அப்ப உனக்கு இந்த வேலை பிடிக்கல?” என்று கொக்கி போட்டு நிறுத்தினான்.

மிதுனன் ஒரு நொடி புருவம் சுருக்க, சமர் எங்கே வருகிறான் என்று சங்கரிக்கு புரிந்து விட்டது.

“இப்ப எதுக்கு மாத்தி மாத்தி பேசுறீங்க? அதான் பிரச்சனை தீர்ந்துடுச்சுல.. இனி நடக்காம பார்த்துக்கோங்க” என்று இடையே வந்து பேசினார் தாய்.

“இருங்கமா.. நான் அவன் கிட்ட பேசிட்டு இருக்கேன்ல?” என்ற சமர், மிதுனன் பக்கம் திரும்பினான்.

“சொல்லு.. உனக்கு பிடிக்கல.. அப்படித்தான?”

“பிடிக்கலனா என்ன செய்யுறதா உத்தேசம்?”

மிதுனன் கையை கட்டிக் கொண்டு கேட்க, “பிடிக்கலனா விலகிடு. இவ்வளவு கஷ்டப்பட்டு நீ செய்ய வேணாம்” என்றான் சமர்.

இதை கேட்டிருந்த மூன்று பெண்களுமே அதிர்ந்தனர்.

‘இவருக்கு இப்படித்தான் பேச தெரியும். கடவுளே.. குடும்பத்துல சண்டை வராம மிது தான் காப்பாத்தனும்’ என்று வேண்டிக் கொண்டாள் வேதா.

‘என்ன இது? இப்படி பேசுறாரு? ஒரு பிரச்சனைக்காக தம்பிய தூக்கி எறிவாரா?’ என்று அதிர்ந்து நின்றாள் ஜோவிதா.

‘சொல்லிட்டான்.. இவன வச்சுக்கிட்டு..’ என்று பல்லைக்கடித்தார் சங்கரி.

ஆனால் அதிர வேண்டிய மிதுனோ, புருவம் உயர்த்தி பார்த்தான்.

“விலகனுமா?” என்று திருப்பிக் கேட்டான்.

“ஆமா.. உனக்கு தான் பிடிக்கலயே..” என்றான் சமர் நக்கலாக.

அப்படிச்சொன்னால், கோபப்பட்டுக் கொண்டு தம்பி சரியாக நடப்பான் என்ற எண்ணம் சமருக்கு.

‘மொத்தமா இதான் சாக்குனு வேணாம்னு போயிடுவானோ?’ என்ற பயம் சங்கரிக்கு.

இடையே புக நினைத்தார். ஆனால் அதற்குள் மிதுனன் பேசினான்.

“அதெப்புடி சமர் விலக முடியும்? நான் பத்து நாள் இல்லாததுக்கே இம்புட்டு பிரச்சனை.. விலகிட்டா மொத்தமா கவுந்துடாது? அதுவும் பாட்டி வளர்த்த பிஸ்னஸ். நான் இல்லாம முழுகி போச்சுனு நீ இதே மாதிரி என் கிட்ட வந்து கத்துவியே.. எப்படி விலகுறது நீயே சொல்லேன்?’

மிதுனனும் நக்கலாகவே கேட்க, ஜோவிதாவிற்கு சிரிப்பு வந்தது.

வேதா, ‘அய்யோ வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கு நிக்கிறாங்களே.. எந்த பிரச்சனையும் வராம முடிக்க மாட்டாங்களா?’ என்று பயந்து கொண்டு நின்றிருந்தாள்.

“அத நான் பார்த்துக்கிறேன்” என்ற சமர் பல்லைக்கடித்தான்.

‘இவன் இல்லனா பிஸ்னஸ் மூழ்கிடுமாமே?’ என்றவனின் ஈகோ பெரிதாய் எழுந்தது.

“அதெப்புடி சமர் முடியும்? நீ தான இந்த பத்து நாள் இருந்த.. உன்னால சமாளிக்க முடியலனு தான் இப்ப என் கிட்ட வந்து புலம்புற.. இப்ப நீயே திருப்பி பேசுனா எப்படி?” என்று கேட்ட கணவனுக்கு, கை தட்ட வேண்டும் போல் இருந்தது ஜோவிதாவிற்கு.

வேதாவிற்கே சிரிப்பு வந்து விட்டது. அவனது வார்த்தையை வைத்து அவனையே திருப்பி அடிக்கிறானே.

‘பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கிறதே இல்ல’ என்று சலிப்பாய் நினைத்துக் கொண்டாள்.

சமருக்கு கோபம் மேல் கோபம் அடங்காமல் ஏறிக் கொண்டிருந்தது. தான் ஒன்று சொல்ல, அதை மொத்தமாய் திருப்பி விட்டான் அல்லவா?

“நான் சொன்னது பொறுப்ப செய்யுறேன்னு சொல்லி ஏத்துட்டு, நீ செய்யாம போனத பத்தி. நீ இல்லனா அந்த வேலைக்கு வேற பொறுப்பான ஆள போட்டுப்பேன்.”

“அப்போ நான் விலகிடனும்னு ஆசைப்படுற?” என்று கேட்டவனை, சமரே அதிர்ச்சியாக தான் பார்த்தான்.

‘உனக்கு பிடிக்கலனா விலகிடு’ என்றவனை அப்படியே திருப்பி, மிதுனன் விலக வேண்டும் என்று சமர் ஆசைப்படுவதாக வந்து நிறுத்தி விட்டான் அல்லவா?

பேச்சு சாதுர்யம் மிதுனனுக்கு அதிகம். அதை விட சமரிடம் எப்படிப்பேச வேண்டும் என்பது அவனுக்கு இடக்கை பழக்கம். சாதாரணமாக திசை திருப்பி விட்டுருந்தான்.

“என்ன பேச்ச அப்படியே மாத்துற? உனக்கு பிடிக்கலனு சொல்லிட்டு இப்ப நான் உன்னை துரத்துற மாதிரி பேசுற?” என்று சமர் எகிற, “எனக்கு பிடிக்கலனு உனக்கு ஏன் இவ்வளவு அக்கறைனு கேட்கிறேன்?” என்று மிதுனன் திருப்பிக் கேட்டான்.

“பிடிக்காம செஞ்சு, இந்த மாதிரி பல பிரச்சனைய இழுத்து வைக்க பார்ப்ப. யாரு பொறுப்பாகுறது?”

“எனக்கு இப்ப இல்ல.. என் வேலைய விடும் போதே பிடிக்கல தான். அப்ப இருந்து நான் பிரச்சனைய மட்டும் தான் இழுத்துட்டு வந்துருக்கனா?”

மிதுனன் திருப்பிக் கேட்க, வேதா சங்கரியை பார்த்தாள்.

‘எதாச்சும் பண்ணுங்க’ என்று ஜாடை காட்ட, உடனே அவர் இடையில் புகுந்தார்.

“இப்ப எதுக்குடா முடிஞ்சத பத்தி ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க? வேற வேலை இல்லையா உங்களுக்கு? நீ இப்ப தான வந்த? ரூம்க்கு போ” என்று மிதுனனை துரத்த பார்க்க, அவன் அசைய வில்லை.

“இல்லமா.. இதுக்கு ஒரு முடிவு கட்டி தான் ஆகனும். இவனுக்கு மட்டுமே எல்லாத்துலயும் அக்கறை இருக்கு. எனக்கு இல்லனு பேசுறான். கேட்டுட்டு அமைதியா எப்படி இருக்கது? பிஸ்னஸ்னா பிரச்சனை வர தான் செய்யும். பிரச்சனையே இல்லாத ஒன்ன காட்ட சொல்லுங்க பார்ப்போம். நான் இல்லனாலும், ஏன் யாரு இல்லனாலும் பிரச்சனை வந்தா, அதுவே தீர்ந்து அடுத்த வேலை ஓடனும். அதான் சக்ஸஸ்ஃபுல்லா பிஸ்னஸ் நடத்துறதோட ட்ரிக்கு. இப்ப நான் இல்ல.. வேலை நின்னுடுச்சா? தீர்ந்து அது பாட்டு நடந்துச்சுல? அங்க இருந்து, நானும் போன்ல என்னால முடிஞ்சத செஞ்சு தீர்த்து வைக்க தான் பார்த்தேன். எல்லாத்தையும் செஞ்சுட்டு, நான் தான் செஞ்சேன்னு இவன மாதிரி சொல்லி காட்ட எனக்கு பிடிக்காது. எல்லாத்தையும் தூக்கி தலையில வச்சுக்கவும் என்னால முடியாது. இவன மாதிரி இல்லனா எங்களுக்கெல்லாம் அக்கறையே இல்லனு பேசுவானா?”

மிதுனன் மூச்சு விடாமல் பொறிந்து கொட்டி விட்டான். ஜோவிதாவிற்கு இடையில் புகுந்து பேச ஆசை தான். ஆனால் வேதாவே சும்மா நிற்கும் போது, தான் பேசுவது சரி வராதோ? என்ற யோசனையில் நின்றிருந்தாள்.

“இப்ப என்ன சொல்ல வர்ர? நீ இப்படி தான் ஊர் சுத்துவ. வேலை அது பாட்டுக்கு நடக்கனும். நீ வந்து தலையிடவும் மாட்ட. அதான?”

சமர் ஆரம்பத்துக்கே வந்து நின்று விட, வேதா, ஜோவிதாவிற்கு சலித்து விட்டது.

“அப்படித்தான்னு வச்சுக்க. இப்ப அதுக்கென்ன?” என்று பொறுமை பறக்க கேட்டிருந்தான் மிதுனன்.

“அப்படி நீ வந்து வேலை பார்க்க முடியலனா மொத்தமா போயிடுனு சொல்லுறேன்”

சங்கரி பதறி வாயைத்திறக்க, “ரொம்ப சந்தோசம்” என்று விட்டான் மிதுனன்.

“மிது…” என்று வேதாவும் சங்கரியும் பதறி அழைக்க, “இனிமே அந்த வேலைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. உன் பிஸ்னஸ். நீயே கட்டி மேய்ச்சுக்க. நான் வரல. எனக்கு எங்க போனாலும் வேலை கிடைக்கும். அத பார்த்துக்கிறேன்” என்றவன், விருட்டென திரும்பி படியேற ஆரம்பித்தான்.

ஜோவிதாவும் ஒரு நொடி நின்று விட்டு, அவனோடு சென்று விட்டாள்.

வேதாவிற்கு கோபம் கோபமாக வந்தது. சமர் எப்போதும் தன்னை பற்றி மட்டும் யோசிக்கும் ரகம் தான். அதற்காக தம்பியை இப்படி ஒதுக்கி விட்டானே? தலை வலி வந்து விட, சமையலறை பக்கம் சென்று விட்டாள்.

மிதுனன் பேசியதும் சமருக்கு கோபம் தான் வந்தது. தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, இனி இப்படி போக மாட்டேன் என்று சொல்வான் என்று பார்த்தால்? மொத்தமாய் கை கழுவி விட்டானே?

“போதுமா? இப்ப சந்தோசமா?” என்று கேட்டார் சங்கரி.

“நீங்களும் என்ன என்னை குறை சொல்லுறீங்க? அவன் தான்…”

“நிறுத்துடா.. இப்ப என்ன அவன் தான் தப்பு அதான? ஆமா அவன் தப்பு தான். இனி நீயே மொத்தமா பார்த்துக்க. அவன் வர மாட்டான். ஆனா எதாச்சும் நடந்துது… உன் பாட்டி உன்னை மன்னிக்க மாட்டாங்க சொல்லிட்டேன்” என்றவர், விறு விறுவென வேதாவை தேடிச் சென்றார்.

அவள் தேநீர் வார்த்து மாமியாருக்கு நீட்டினாள்.

“தலை வலி வந்துடுச்சு தான? குடிங்க” என்று நீட்ட, ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டார்.

சமர், அறைக்குள் சென்று குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.

“இவன் இல்லனா? என்னால பார்க்க முடியாதாமா? எதாவது நடக்குமாமே? நான் இருக்கும் போது எப்படி நடக்குதுனு பார்க்குறேன்” என்றவனுக்குள், ஈகோ தான் மலையளவு வளர்ந்தது.

தொடரும்.

Leave a Reply