அத்தியாயம் 7

Loading

மிதுனன் சொன்னது போலவே, அனைத்து வேலைகளையும் ஒப்படைத்து விட்டு விலகி விட, ஜோவிதாவிற்கு கோபம் தான்.

“ஏன் இப்படி சொன்னீங்க? என்ன இருந்தாலும் இது குடும்ப சொத்து. இப்படி விட்டுக் கொடுக்கனுமா? ஹனிமூன் தான போனோம்? அதுல உங்க அண்ணனுக்கு என்ன பிரச்சனையாம்? ஏன் அவர் போகலயா?”

“அவன் அதெல்லாம் போகல. அவன விடு. எல்லாம் எனக்கு தான் தெரியும்னு பேசுறான்ல? அவனே பார்த்துக்கட்டும். நான் வேலை தேடிக்கிறேன்”

“சொந்த பிஸ்னஸ விட்டுட்டு ஏன் வேலை தேடனும்?”

“எனக்கு பிடிக்கல ஜோ. நான் என்ன படிச்சுருக்கேன்? அதுக்கு சம்பந்தமில்லாத ஒரு வேலைய பார்த்துட்டு இருந்தேன். அதுவும் அப்பா இறந்தப்பறம் தான்.

அம்மா வந்து.. சமர் தனியா பார்க்குறான். அவன் கோபத்துக்கு என்ன பண்ணுவான்னு தெரியாது. நீயும் கூட இருந்தா தான் நல்லா இருக்கும். அப்படி இப்படினு நிறைய பேசுனாங்க. அவங்களுக்காக தான் பார்த்துட்டு இருந்த வேலைய விட்டுட்டு, இத பார்த்தேன்.”

“அப்ப நிஜம்மாவே பிடிக்கலயா?”

“ம்ஹூம்.. இனி எனக்கு பிடிச்ச வேலைய பார்த்துக்க வேண்டியது தான்”

“வேலை கிடைக்கனும்ல?”

“அதெல்லாம் கிடைக்கும். அதுவரை கிடைக்கிற கேப்ல நாம ஃப்ரீயா இருக்கலாம்”

“ஆசை தான்”

“ஆனா நீ ஒன்னும் கவலை படாத ஜோ.. என் கிட்ட பேன்க் பேலன்ஸ் நிறைய இருக்கு. வேலை கிடைக்கிற வரை ஜாலியா செலவு பண்ணலாம்” என்று கண்ணடித்தான்.

“என்ன ஒரு ரெண்டு மூணு கோடி இருக்குமா?”

“கோடியா? அதெல்லாம் ஒரு காசா? அதுக்கும் மேல வச்சுருக்கேன்”

“ஆஹான்” என்று இழுத்தவளை, மடியில் வைத்து கொஞ்ச ஆரம்பித்து விட்டான்.

இரவு வேதா கலைப்புடன் திரும்பிப் படுத்தாள். சமரும் தன் தேவை முடிந்தது என்று, திரும்பி படுத்து தூங்கி விட்டான்.

வேதாவிற்கு தூக்கம் வரவில்லை. கணவனை திரும்பிப் பார்த்தாள்.

சீரான மூச்சுடன் நிம்மதியாக உறங்கினான்.

இவன் அவளது கணவன். திருமணம் முடிந்து, இன்னும் சில மாதங்களில் ஐந்து வருடங்கள் நிறைவு பெற்று விடும். இத்தனை வருட வாழ்க்கையில் அழகான பக்கங்கள் எது என்று கேட்டால், வெற்றுக்காகிதம் தான் பதில்.

சிறியதாய் ஒரு சிரிப்பு.. ரகசிய பேச்சுக்கள்… கொஞ்சல்கள்.. ஏன் பார்வை பரிமாற்றம் கூட அவர்களது மண வாழ்வில் இல்லை.

என்னவோ இப்போதெல்லாம் வேதாவிற்கு வாழ்வு சலித்துக் கொண்டே வந்தது.

பணம் நிறைய இல்லாத போதும், அவளின் தந்தை தாயை அன்பாய் தான் பார்த்துக் கொள்வார். ஏகப்பட்ட பிரச்சனைகள் வாழ்வில் இருந்த போதும், அருகருகே அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்வார்கள்.

அப்படி ஒரு கணவன் வேண்டும் என்பதை தவிர வேதாவிற்கு பெரிய ஆசைகள் எதுவுமில்லை. ஆனால் கிடைத்தது என்ன?

பணத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் மனம்? அவளை பற்றி அவனுக்கு எதாவது தெரியுமா?

புதுமணத் தம்பதிகளாக இருக்கும் போதே, அவளை பற்றித் தெரிந்து கொள்ள அவன் ஆர்வம் காட்டியதே இல்லை.

அவளிடம் தான் இப்படி என்றால், இன்று சொந்த தம்பியை கூட ஒதுக்கி விட்டானே?

வாழ்வு இது தான் என்று ஏற்றுக் கொண்ட போதும், அவளால் வலியை பொறுக்க முடியவில்லை. பல நாட்களுக்கு பிறகு கண்கலங்க, அப்படியே படுத்திருந்தாள்.

அடுத்த ஒரு வாரம் கடந்திருக்க, அன்று மாலை மிதுனன் சந்தோசமாக வீட்டுக்குள் நுழைந்தான்.

ஹாலில் அமர்ந்து தொலைகாட்சியில் கண்ணை பதித்திருந்த ஜோவிதா, அவனை பார்த்ததும் வேகமாக எழுந்தாள்.

ஒரு நொடி யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்ட மிதுனன், மனைவியை தூக்கி சுற்றினான்.

“ஜோ.. ஐம் ஹாப்பி..”

“இறக்கி விடுங்க.. வேலை கிடைச்சுருச்சா?”

“எஸ். நான் நினைச்ச வேலையே கிடைச்சுருச்சு”

“வாவ்..” என்றவள், சந்தோசமாக அவனை கட்டிக் கொண்டாள்.

“ஓகே ஓகே தள்ளு யாராவது வந்துட போறாங்க. அம்மா எங்க?”

“பக்கத்துல கோவில்ல எதோ பூஜையாம். சஷியோட போயிருக்காங்க. நான் போகல”

“அண்ணி ரூம்லயா? கூப்பிடு.. அவங்களுக்கும் விசயத்தை சொல்லலாம்”

உடனே இருவரும் வேதாவை தேடிச் சென்றனர்.

கதவை தட்டியதும், வேதா திறந்தாள்.

“அண்ணி.. எனக்கு வேலை கிடைச்சுடுச்சு” என்று சந்தோசமாக கூற, வேதாவின் முகம் மலர்ந்து போனது.

“கன்கிராட்ஜ் மிது.. உனக்கு வேலை பிடிச்சுருக்கா? எல்லாம் ஓகேவா?”

“எல்லாமே ஓகே தான். முதல்ல பார்த்த அதே வேலை தான். பட் வேற கம்பெனி”

“ஓகே ஓகே. எதாச்சும் ஸ்வீட் பண்ணவா?”

“வேணாம் அண்ணி. வெளிய போறோம். சேர்த்து வாங்கிட்டு வந்துடுறோம்”

வேதா தலையாட்ட, மிதுனன் உடை மாற்ற அறைக்குள் சென்று விட்டான். ஜோவிதாவிற்கு சட்டென ஒன்று தோன்றியது.

“நீங்களும் எங்க கூட வாங்க அக்கா. இங்க தனியா இருந்து என்ன செய்ய போறீங்க?”

“நீங்க போயிட்டு வாங்கமா. ரொம்ப டயர்டா இருக்கு. தூங்க போறேன்”

“ஓஓ.. சரி ரெஸ்ட் எடுங்க. எல்லா நேரமும் வேலை பார்த்துட்டே இருக்கீங்க” என்று விட்டு, தங்களது அறைக்குள் சென்றாள்.

வேதா கதவை அடைத்து விட்டாள்.

“ஏங்க..”

“ம்ம்..?”

“அக்காவ நம்ம கூட கூட்டிட்டு போகலாமா?”

ஒரு நொடி மிதுனனின் கை நின்று விட, திரும்பி மனைவியை பார்த்தான்.

“அவங்கள மட்டும் வீட்டுல தனியா விட்டுட்டு, நாம மட்டும் போனா நல்லா இருக்காதுல?”

“கூப்பிட்டு வேணா பாரு. ஆனா வர மாட்டாங்க”

ஜோவிதா சிறு அதிர்ச்சியோடு பார்த்தாள்.

“ஆமா. ஏன்?”

“அவங்க எங்கயுமே வர மாட்டாங்க. குடும்பமா போறதுக்கு.. இல்லனா ரொம்ப ரொம்ப முக்கியமான வேலைனா மட்டும் தான் வருவாங்க. நம்மல மாதிரி படத்துக்கு பார்க்குக்கு, எதுக்கும் வர மாட்டாங்க. கூப்பிட்டா டயர்டா இருக்கு.. தலை வலிக்குது.. தூக்கம் வருதுனு காரணம் சொல்லுவாங்க”

ஜோவிதாவின் கண்கள் அகல விரிந்தது.

“ஏன்? ஏன் வந்தா என்ன?”

“அவங்க இப்படித்தான். அவங்க அம்மா வீட்டுக்கு கூட போக மாட்டாங்க தெரியுமா? அது ஒரு இஸ்யூ ஆகிடுச்சு. அப்ப இருந்து அவங்க எங்கயும் போறது இல்ல. சமரும் அவங்கள கூட்டிட்டுப் போக மாட்டான். பார்த்தல..? ஹனிமூன் போறதே ஊர் சுத்துறதுனு சொல்லுறவன். சும்மா போவானா? அவனும் எங்கயும் கூட்டிட்டு போக மாட்டான். அவங்களும் தனியா போக மாட்டாங்க.”

“இதெல்லாம் ரொம்ப டூ மச்” என்றவளுக்கு மனம் பொறுக்கவில்லை.

முதலில் எல்லாம் இருவரும் புதுமணத்தம்பதிகளாக இருந்தனர். தனியாக கணவனோடு வெளியே போவது தான் அப்போது பிடித்திருந்தது. அதனால் வேதாவை ஜோவிதா அழைக்கவில்லை.

இப்போது அவளை தனியாய் விட்டுச் செல்ல மனமில்லாமல் கேட்டவளுக்கு, இப்படி ஒரு அதிர்ச்சி கிடைத்தது.

கோவிலுக்கு கூட, சஷியை அனுப்பி விட்டு வேதா வீட்டில் தானே இருக்கிறாள்?

“அவன் அப்படினா அண்ணி இப்படி. நாங்க எவ்வளவு நினைச்சாலும் மாத்த முடியல. அப்படியே விட்டோம். சரி நீ கிளம்பு. நாம போயிட்டு அண்ணிக்கும் எதாவது வாங்கிட்டு வரலாம்”

மனைவியை கிளப்பி, தானும் கிளம்பி, வேதாவிடம் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான்.

வேதா வீட்டிலேயே இருக்க, சங்கரி கோவில் பிரசாதத்தை கொண்டு வந்து கொடுத்தார்.

“மிதுக்கு வேலை கிடைச்சுருச்சு அத்த. சொல்லிட்டு வெளிய சாப்பிட போயிட்டாங்க”

“அப்படியா? ரொம்ப நல்லது. இந்த சமர் பையன் சொல்லி அவன் வேணாம்னு போனதுல இருந்து மனசே கேட்கல வேதா”

“விடுங்க அத்தை. மிதுவும் பிடிக்காம தான பார்த்துருக்கான். இப்ப படிச்ச வேலையவாச்சும் சந்தோசமா பார்க்கட்டும்”

“அதைச்சொல்லு.. அவனாச்சும் சந்தோசமா பார்க்கட்டும். பொண்டாட்டி வேற இருக்கா. அவளையும் அவன் பார்க்கனும்ல?”

“ம்ம்”

அதன் பிறகு இருவரும் வேறு பேச ஆரம்பித்து விட்டனர்.

இரவு சமர் மட்டும் அமர்ந்து சாப்பிட, மற்ற யாரும் சாப்பிடவில்லை. சமரும் அதை கண்டு கொள்ளவில்லை.

அவன் சாப்பிட்டு முடியும் நேரம், வெளியே பைக் சத்தம் கேட்டது.

“சித்தப்பா வந்தாச்சு…” என்று எழுந்து ஓடினாள் சஷி.

சஷியை தூக்கிக் கொண்டு ஜோவிதா உள்ளே வர, மிதுனன் உணவோடு பின்னால் வந்தான்.

“சித்தப்பா.. ஃபிரைட் ரைஸ் வாங்கிட்டு வந்தீங்களா?” என்று சஷி ஆவலாக கேட்டாள்.

“எல்லாம் வாங்கிட்டு தான் வந்துருக்கேன்”

“ம்மா… சித்தப்பா வாங்கிட்டு வந்துட்டாங்க” என்று கத்தினாள் சஷி.

“அப்பா.. என்னா சவுண்டு…” என்று காதை குடைந்து ஜோவிதா சிரிக்க, சஷியும் சிரித்தாள்.

“இந்தாங்க அண்ணி..” என்று மிதுனன் வெளியே வந்த வேதாவிடம் கொடுத்து விட்டு, அறை பக்கம் சென்று விட்டான்.

வேதாவும் உணவைகளை பிரித்து வைத்தாள்.

“போய் பாட்டிய கூப்பிடு. சாப்பிட்டும்” என்றதும், சஷிகா வேகமாக ஓடினாள்.

நடப்பதை எல்லாம் சமர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜோவிதா, “நீங்க உட்காருங்க அக்கா. நான் எடுத்து வைக்கிறேன்” என்றாள்.

“வேணாம்மா.. நீ போய் டிரஸ்ஸ மாத்திட்டுவா” என்று அனுப்பி வைத்தாள்.

வேதாவே உணவை எல்லாம் பிரித்து சாப்பிட ஏதுவாக அடுக்கினாள்.

“உங்களுக்கு?” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த சமரை கேட்க, மறுப்பாய் தலையசைத்து உடனே எழுந்து விட்டான்.

சங்கரியும் சஷியும் வர, மூவரும் சாப்பிட அமர்ந்தனர். அதற்குள் ஜோவிதா உடை மாற்றி கீழே வந்து விட்டாள்.

வேதா மகளுக்கு ஊட்டியபடி சாப்பிட ஆரம்பிக்க, “நீங்க சாப்பிடுங்க கா. நான் ஊட்டுறேன்” என்று சஷியை தூக்கிக் கொண்டாள்.

“ஃப்ரைட் ரைஸ் கேட்டல.. ஒழுங்கா சாப்பிடுற.. நாலு வாய்ல போதும் சித்தினு சொன்ன பிச்சுடுவேன்” என்று செல்லமாக மிரட்டியபடி ஊட்ட ஆரம்பித்தாள்.

வேதாவும் சங்கரியும் தங்களுக்கு வாங்கி வந்ததை சாப்பிட்டு முடித்தனர்.

சோபாவில் அமர்ந்து, தொலைகாட்சியில் ஒரு கண்ணும் இவர்களின் மீது ஒரு கண்ணும் வைத்திருந்தான் சமர்.

இயல்பாய் அவர்கள் ஹோட்டல் உணவுகளை சாப்பிட்டது, அவனை புருவம் சுருங்க வைத்தது.

‘நிறைய ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுவாங்களா? நமக்கு தெரியாதே?’ என்று நினைத்தவனுக்கு, என்னவோ பிடிக்கவில்லை.

வேலை எல்லாம் முடிந்து மனைவியும் மகளும் அறைக்கு வரும் வரை காத்திருந்தான். சஷிகா சீக்கிரமே தூங்கி விட, அவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு தன் வேலையை பார்த்தாள் வேதா.

“வேதா..”

திரும்பிப் பார்த்தாள்.

“எப்பவும் இப்படித்தானா?”

“எது?”

“ஹோட்டல் சாப்பாடு வாங்கி சாப்பிடுறீங்களே.. அத கேட்டேன்”

“அப்பப்ப சாப்பிடுவோம்”

“எனக்கு இது வரைக்கும் தெரியாதே?”

“உங்களுக்கு பிடிக்காதுனு அத்தை சொன்னாங்க. அதான் உங்களுக்கு வாங்குனது இல்ல”

“ஓஹோ.. இது மட்டும் தானா? இல்ல இன்னும் இருக்கா?”

“எது?”

“ஹோட்டல் சாப்பாடு வாங்கி மட்டும் தான் சாப்பிடுவீங்களா? இல்ல ஹோட்டலுக்கும் போவீங்களா?”

வேதா அவனை இமைக்காமல் பார்த்தாள். அவன் முறைத்தான்.

“எனக்கு தெரியாம வீட்டுல நிறைய இருக்கும் போலயே.. என்ன புதுசா வந்த அந்த பொண்ணு பழக்கி விட்டுச்சா? ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுங்கனு. அது உடம்புக்கு எவ்வளவு கெட்டதுனு தெரியாதா?”

“இப்ப என்ன சொல்ல வர்ரீங்க?”

“இனிமே இப்படி சாப்பிடாதீங்க. அவங்க ரெண்டு பேரும், ஊர் சுத்துறது பத்தாதுனு கண்டத சாப்பிட்டு என்னமோ செய்யட்டும். நீ, அம்மா, சஷி ஏன் சாப்பிடுறீங்க? உங்களுக்குமா அறிவில்ல?”

ஒரு நொடி மூச்சை இழுத்து விட்டவள், “எனக்கு ஹோட்டல் சாப்பாடு ரொம்ப பிடிக்கும்” என்றாள்.

குரலில் உணர்ச்சியே இல்லை. கோபமாகவும் சொல்லவில்லை. குற்றம் செய்தது போலவும் பேசவில்லை. அறிவிப்பாகவே சொன்னாள்.

“உனக்கு புடிக்குமா?”

“ஆமா”

“உனக்கு எல்லாமே வித்தியாசமா தான் பிடிக்குமா? சேலை கட்ட சொன்னா சுடிதார் பிடிக்கும்னு சொல்லுற.. சீக்கிரம் சாப்பிடச்சொன்னா லேட்டா சாப்பிடுற.. இப்ப ஹோட்டல் சாப்பாடு வேற.. என்ன ஹேபிட் இது?”

“ஆனா எனக்கு அதான் பிடிக்கும்”

“மாத்திக்க”

அவன் பட்டென சொல்ல, வேதாவின் பொறுமை எல்லையை நெருங்கியிருந்தது.

“ஏன்?” என்று ஒரே வார்த்தையில் நிறுத்தினாள்.

“ஏன்னா? உடம்புக்கு நல்லது இல்ல”

“என் உடம்ப பத்தி என்ன புதுசா அக்கறை?” என்று கேட்டவளுக்குள் கோபம் குமிழிட ஆரம்பித்திருந்தது.

தொடரும்.

Leave a Reply