அத்தியாயம் 11

Loading

சமர் சங்கரி அடுக்கிய விசயங்களை கேட்டு மலைத்துப்போனான். இவ்வளவும் செய்வதென்றால்?

“ம்மா.. கொஞ்சமா சொல்லுங்க. என்ன லிஸ்ட்டே கொடுக்குறீங்க? இதையே தான் இவ சஷிக்கும் பண்ணாளா? இல்லயே?”

“அதான்டா பிள்ளைய பெக்கும் போது ஆப்ரேஷன் வரை போச்சு. அப்புறம் கடவுள் புண்ணியத்துல நல்லாவே பெத்தா” என்று சங்கரி சொல்லி வைக்க, வேதாவுக்கு அன்றைய நாட்கள் நினைவில் வந்தது.

அப்போது தான் வீட்டின் குடும்பத்தலைவனை இழந்திருந்தனர். எல்லோரின் முகத்திலும் சோகம் தான் இருந்தது. அவள் கருத்தரித்தது பெரிய விசயமாக படவில்லை.

சங்கரிக்கும் கணவனை இழந்த துக்கம் மனதில் நின்றிருந்தது. சமர் சும்மாவே மனைவியை பற்றி கவலை கொள்ள மாட்டான். மிதுனனும் அப்போது தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, சமரோடு வேலைக்குச் சென்றான்.

வேதாவை கவனிக்க ஆட்களே இல்லை. அவளே அவளை பார்த்துக் கொண்டாள். மயக்கம் வந்தால் தானாகவே சமாளித்தாள். மேலும் எதாவது செய்தால், அன்னைக்கு அழைத்து கேட்டு விசாரித்துக் கொண்டாள். அவளாக தான் தன்னை தேற்றினாள்.

அதை எல்லாம் பார்த்து விட்டுத்தான், சங்கரி மகனை சமாளித்து அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

அங்கு வேதா எதை பற்றியும் கவலை கொள்ளவில்லை. எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்ய பெற்றோர் இருந்தனர்.

இப்போது மீண்டும் அதே நிலை தான் என்று நினைத்திருக்க, சங்கரி அப்படியே விடவில்லை. ஒன்று மகன் பார்க்க வேண்டும். இல்லை என்றால் அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும்.

சங்கரியே அவளை கவனிக்கலாம். ஆனால் மகன் அதில் வழிக்கு வர மாட்டான். அதனால் ஒன்றுமே தெரியாது என்று கையை விரித்து விட்டார்.

“எல்லாம் பாருங்குறீங்க. ஆனா கீழ இருப்பாங்குறீங்க. எப்படி பார்க்குறது?” என்று சமர் குற்றப்பத்திரிகை வாசித்தான்.

“இந்த வீட்டுல தான இருக்கா? அவ அம்மா வீட்டுக்கு போனா கூட, போன் பண்ணி பேசனும்னு சொல்லலாம். ஒரே வீட்டுல தான இருக்கீங்க?”

சங்கரி தான் அவனை பெற்றவர் என்று காட்டி விட்டு, மருமகளிடம் திரும்பினார்.

“உன் மருந்தெல்லாம் மேல தான இருக்கு?”

வேதா தலையாட்ட, “போய் எடுத்துட்டு வந்து கொடு சமர். கீழயே வச்சுப்போம். நீ வாங்கி போட்டுட்டு வந்து தூங்கு” என்றவர் அறை பக்கம் சென்று விட்டார்.

சமர் வேதாவை பார்த்தான். அவள் சூடாய் வைத்திருந்த பாலை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.

“எந்த மாத்திரை வேணும்?” என்று கேட்க, “எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க.” என்று விட்டாள்.

சமர் எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கி போட்டுக் கொண்டாள்.

“சஷி நீ இல்லாம முழிச்சா என்ன செய்ய?” என்று கேட்டு நின்றான் சமர்.

அவனுக்கு, மனைவியே மேலே தான் இருப்பேன் என்று சொல்ல வேண்டும் என்ற ஆசை. ஆசை கணவனாக இருந்திருந்தால் சொல்லலாம். அக்கறை இல்லாதவன் எதிர்பார்ப்புக்கு அவள் என்ன செய்வாள்?

“அப்படி எல்லாம் அவ நடுவுல எந்திரிக்க மாட்டா”

சொன்னதோடு மருந்துகளை எடுத்துக் கொண்டு, சங்கரியின் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

சமர் ஒன்றும் செய்ய முடியாமல் அறைக்கு சென்று படுத்தான். மகளுக்கு மறுபக்கம் இருந்த வெறுமை அவனை எரிச்சல் படுத்த, கண்ணை மூடிக் கொண்டான்.

அதே நேரம் எதிர் அறையில் இருந்த ஜோவிதா, கணவனிடம் குழந்தைக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

“மரியாதையா ஓடிப்போயிருங்க. பேபிக்கு எப்ப ஓகே சொல்லுறீங்களோ அப்ப தான் எல்லாம்” என்றவள், அவனை பிடித்துத் தள்ளி விட்டாள்.

“ஜோ.. இப்ப ஏன் பேபிக்கு என்ன அவசரம்?”

“எனக்கு போரடிக்குது. அதுனால ஒரு பாப்பா பெத்து அது கூட விளையாட போறேன்”

அவளது காரணத்தைக் கேட்டு, மிதுனன் சிரித்து விட்டான்.

“போரடிக்குறதுக்கு பிள்ளையா?”

“ஆமா”

“உலகத்துல எவனும் இப்படி ஒரு காரணம் சொல்லிருக்க மாட்டான்”

“எல்லாருக்கும் வேற காரணம் இருக்கும். எனக்கு இதான் காரணம்”

“ஜோ பிள்ளை வளர்க்குது பெரிய பிராஸஸ். நானே இப்ப தான் வேலைக்கு சேர்ந்துருக்கேன். கொஞ்சம் செட்டில் ஆகிடுறேன். அப்புறமா பெத்துக்கலாம். என்ன?”

“சரி.. அது வரை தரையில படுங்க” என்று தலையணையை தூக்கி கீழே போட்டாள்.

“அடிப்பாவி”

“குட் நைட்”

ஜோவிதா திரும்பி படுத்து விளக்கை அணைத்து விட, மிதுனனுக்கு சிரிப்பு வந்தது.

சில நொடிகள் நின்றவன், வேகமாக அவளருகே வந்து அவளை அணைத்துக் கொண்டு படுத்தான்.

“கைய எடுங்க.. தள்ளுங்க” என்று ஜோவிதா அவனை தள்ள பார்க்க, அசையவே இல்லை.

“உஸ்ஸ்.. எனக்கு நாளைக்கு மீட்டிங் இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாம தூங்கு” என்றவன் கண்ணை மூடிக்கொண்டான்.

‘அடப்பாவி! நான் டிஸ்டர்ப் பண்ணுறனா?’ என்று அவள் தான் அதிர்ந்தாள்.

ஆனால் மிதுனன் அமைதியாக உறங்க ஆரம்பிக்க, ஜோவிதாவும் தூங்கி விட்டாள்.

சங்கரியோடு படுத்திருந்த வேதாவிற்கு, சிரிப்பு அடக்க முடியாமல் வந்தது. வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன தனியா சிரிக்கிற?”

“உங்க ஆக்டிங் செம்ம அத்த. நான் வீக்கா இருக்கனா?”

“அப்படிலாம் சொன்னா தான் அவன் உன் கூட சண்டை போட மாட்டான்”

“அப்படினு யார் சொன்னா? அதெல்லாம் உங்க மகன் கோபத்த தடுக்காது”

“அதுக்கு தான் இங்க தூங்குனு சொன்னேன். எந்த நேரமும் கூடவே இருந்தா அருமை புரியாது. கொஞ்ச நாள் கண்டுக்காம விடு.”

“இந்த மாதிரி எல்லாம் முதல்லயே பண்ணி அவர சரி பண்ணிருக்கலாம்ல?”

“அவன் குணமே இதான் வேதா. எல்லாருக்கும் அடிப்படையா சில குணங்கள் இருக்கும். அதெல்லாம் கடவுளே நினைச்சாலும் மாத்த முடியாது. சமர் எங்க கிட்ட எப்படி வேணா நடந்துக்கட்டும். ஆனா உன் கிட்டயும் அவன் அப்படியே இருக்கான். நீயும் அவனுக்கேத்த மாதிரி வாய மூடிட்டு போற”

“வாயத்திறந்தா உங்க புள்ள பேச விட்டுருவாராக்கும்? கம்முனு போறதால இவ்வளவாச்சும் நல்லா இருக்கு. இல்லனா பெரிசா வெடிச்சு வாழ்க்கையே சொதப்பிருக்கும்”

“அவன நீயும் மாத்தல நாங்களும் மாத்தல. அவனோட குணமும் மாறப்போறது இல்ல. ஆனா அவனுக்கு புரிய வச்சா புரிஞ்சுப்பான். மிது கல்யாணத்துல கூட என்னென்ன பேசுனான்? என் கல்யாணம் என் இஷ்டம்னு மிது சொல்லவும் உடனே விட்டுட்டான்ல? அப்படித்தான். நாம விருப்பத்த சொல்லிட்டா அதை ஏத்துட்டு அமைதியா இருந்துடுவான். நீயும் உன்னை கொஞ்சம் புரிய வைக்க பாரு. இப்ப பேசாம தூங்கு. நேரமாச்சு”

சங்கரி திரும்பிப் படுத்து தூங்க ஆரம்பிக்க, வேதா கண்ணை முடியபடி யோசனையில் இருந்தாள்.

அடுத்த நாள் காலையில் சஷி விழித்ததும் கீழே இறங்கிவிட, சமர் கிளம்ப ஆரம்பித்தான்.

வேதா அறைக்கு வர, சமரின் புருவம் உயர்ந்தது.

அவளோ அவனை கண்டு கொள்ளாமல், உடையை எடுத்து குளிக்கச் சென்று விட்டாள்.

வெளியே வரும் போதும் சமர் அங்கேயே இருந்தான்.

“இப்படி குளிக்க மட்டும் தான் மேல வருவியா?”

“ம்ம்”

“இப்படி அலையுறதுக்கு..”

“டிரஸ்ஸ எடுத்துட்டு போய் கீழ வச்சுக்கவா? அத்தையும் அதான் சொன்னாங்க”

“வேணாம் வேணாம். நான் இப்படி அலையுறதுக்கு இங்கயே இருக்கலாம்லனு கேட்க வந்தேன்”

“சரி வராதுனு தான அத்த சொன்னாங்க. நீங்க அவங்க கிட்டயே பேசிக்கோங்க”

வேதா கீழே சென்று விட்டாள். சமர் சலித்துக் கொண்டு இறங்கி வந்தான்.

வேதா சமைக்கவில்லை. எல்லாம் சங்கரி செய்தார்.

“இந்த சட்னி வேணாம். எனக்கு பிடிக்காது”

சமர் தள்ளி வைக்க, “நீ என்ன பச்ச குழந்தையா? இது பிடிக்கல அது பிடிக்கலனு சொல்லிட்டு இருக்க? இருக்கது தான் சாப்பாடு. பிடிக்கலனு சாப்பிடாம வேஸ்ட் பண்ணுற. காச கரியாக்கனுமா?” என்று கேட்டாரே பார்ப்போம்.

வேதாவிற்கு பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு.

‘அவரு வார்த்தை அவருக்கே வருதே’ என்று நினைத்தவளுக்கு சிரிப்பு குறையவில்லை.

சமர் மனைவியை தேடி சமயலறையில் எட்டிப்பார்த்தான். அவள் அவனுக்கு பிடித்ததை செய்து கொடுப்பாள் என்று. ஆனால் வேதா வெளியே எட்டிக் கூட பார்க்கவில்லை. வேறு வழியில்லாமல் பிடிக்காததை எடுத்து அவன் சாப்பிட ஆரம்பிக்க, இட்லி பொடியை தூக்கி வந்து கொடுத்தாள்.

“இத போட்டு சாப்பிடுங்க” என்றதும், சமரின் முகம் மலர்ந்து விட்டது.

சந்தோசமாக அதையே சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டான்.

அடுத்தடுத்த நாட்கள் நன்றாகத்தான் கடந்தது. மனைவி இல்லாமல் சமரும் ஒருவாறு நேரத்தை தள்ளிக் கொண்டிருக்க, அவனுக்கும் வேதாவிற்கும் இருக்கும் இடைவெளியை பெரிதாக்க நடந்தது ஒரு சம்பவம்.

அவனது அலுவலகத்தில் பெரும் பிரச்சனை ஒன்று உருவானது. அவனே எதிர்பார்க்காத பக்கமெல்லாம் பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. திண்டாடிப்போனான்.

உதவ மிதுனனும் இல்லாத நேரம். அவனாகவே போராட வேண்டியிருந்தது. தூக்கம் மறந்து, நேரம் மறந்து அவன் வேலையில் மூழ்கிப்போயிருந்தான்.

சஷியும் கூட, வேதாவோடு சங்கரி அறையிலேயே படுத்துக் கொண்டாள்.

சமர் வீட்டிற்கு தமாதமாக வந்து, காலையில் சீக்கிரமே கிளம்பிக் கொண்டிருந்தான். வேதாவிற்கே அவனை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

“என்ன பிரச்சனைனு கேட்டு நீங்க எதாவது சொல்லலாம்ல அத்த?” என்று சங்கரியிடம் தான் வந்து நின்றாள்.

“கேட்டேன்மா. ஆனா அதுல அவன் தான் யோசிச்சு செய்யனும். நானும் யோசனை எல்லாம் சொல்லிட்டேன். பார்க்கலாம்” என்று விட்டார்.

அவன் பிரச்சனைகளில் உழன்று கொண்டிருக்க, சொந்தத்தில் ஒரு துக்க செய்தி வந்தது. வேதாவின் திருமணத்திற்கு வந்த ஒரு பெரியம்மா தவறியிருந்தார்.

துக்க செய்தியை கேட்டதும் சங்கரி உடனே கிளம்பியிருந்தார். உடன் செல்ல நினைத்த மிதுனை தடுத்து விட்டார்.

“உங்கண்ணன் வேலைய கட்டிட்டு அழுறான். நீயாச்சும் வீட்ட பார்த்துக்க. நான் பத்திரமா போயிட்டு வர்ரேன்” என்று கூறி தனியாகவே கிளம்பி விட்டார்.

அன்று மாலை வேதா சமைக்க கிளம்ப, “வேணாம்கா. நாம வேணும்னா வெளிய வாங்கிக்கலாம்” என்று விட்டாள் ஜோவிதா.

சமைப்பது மூன்று பேருக்கு மட்டும் தான் என்பதால், வேதாவும் சரியென்றுவிட்டாள்.

மிதுனன் வாங்கி வந்த உணவுகளை தான், இரவு சாப்பிட்டனர். சஷி அசைவ உணவை நிறைய சாப்பிட, வேதா தடுத்தாள்.

“வேணாம்.. உனக்கு சேராது..” என்று கூறிப்பார்த்தும், கேட்காமல் ஆசையில் நிறையவே சாப்பிட்டு விட்டாள்.

இரவு தாமதமாக வந்த சமர், வெறும் காபியை மட்டும் குடித்து விட்டு அறைக்குள் சென்று விட்டான்.

நள்ளிரவு தான் ஆரம்பித்தது பிரச்சனை. சஷி வாந்தி எடுத்து விட்டாள். வயிறு வலிக்கிறது என்று அழ ஆரம்பித்தவள் வாந்தி எடுத்து விட, பயத்தில் மேலும் அழுது கரைய ஆரம்பித்தாள்.

“ஒன்னும் இல்லடா.. சரியா போகும்” என்று வேதா மகளை சமாதானம் செய்து கொண்டிருக்க, சத்தம் கேட்டு ஜோவிதாவும் மிதுனனும் வந்து விட்டனர்.

“என்ன ஆச்சு? ஏன் அழுற? சஷிமா..” என்று ஜோவிதா தூக்க வர, அவளிடம் போகாமல் வேதாவின் கையிலிருந்தபடியே அழுதாள் மகள்.

“சாப்பிட்டது சேரல. வாமிட் பண்ணிட்டா” என்ற வேதாவிற்கு என்னமோ கண்கலங்கியது.

அவளது ஹார்மோன்கள் அவளை சோகப்படுத்தி கலங்க வைத்திருந்தது.

“எதாவது டானிக் கொடுக்கலாம்ல? என்ன பண்ணுறது?” என்று கேட்ட ஜோவிதாவிற்கும் ஒன்றும் தெரியவில்லை. மிதுனனுக்கும் புரியவில்லை.

சஷி வேறு வாய் மூடாமல் அழுது வைத்தாள். அவளை சமாதானம் செய்வதற்கே வேதா போதும் போதுமென்று ஆகிப்போனாள்.

“என்ன சத்தம்? இப்ப ஏன் அழுதுட்டு இருக்க? வேதா.. அவள வாய மூடச்சொல்லு.. மனுசனால நிம்மதியா வேலை பார்க்க முடியுதா?” என்று திடீரென வந்து கத்தினான் சமர்.

அவன் குரலில் வேதாவே பயந்து போக, சஷியை கேட்கவே வேண்டாம். வீறிட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

ஜோவிதாவிற்கு சட்டென கோபம் வந்து விட்டது.

“மாமா.. இங்க உங்க புள்ளை வலில அழுது. உங்களுக்கு உங்க வேலை தான் பெருசா இருக்கா?” என்று ஜோவிதா கேட்க, “விடு ஜோ” என்றான் மிது.

“நீங்க சும்மா இருங்க. அவளே அழுறா. அக்காவும் அழுறாங்க. அத பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லாம, வேலை பார்க்க முடியலனு பேசுறாரு. வேலைய போய் ஆஃபிஸ்ல வச்சு பார்க்க வேண்டியது தான? நீ எல்லாம் நமக்கு பிள்ளை பிறந்து இப்படி பண்ண.. நேரா டைவர்ஸ் தான்”

சமரையும் பேசி மிதுனனையும் அவள் பேச, மிதுனன் அதிர்ந்தான்.

“நான் ஏன்டி இப்படி பண்ண போறேன்? நான் என்ன லூசா? நீ போய் ஃபோன எடுத்துட்டு வா. அம்மாவுக்கு போன் பண்ணி என்ன பண்ணலாம்னு கேட்போம்” என்றதும் சமரை முறைத்துக் கொண்டே சென்று, மிதுனனின் கைபேசியை எடுத்து வந்தாள்.

சமர், ஜோவிதா பேசியதில் சில நொடிகள் அதிர்ந்து நின்று விட்டான். பிறகு ஒருவாறு சுதாரித்து விட்டுப் பார்க்க, வேதா சட்டென வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு மகளை தேற்றிக் கொண்டிருந்தாள்.

மீண்டும் ஒரு முறை சஷி வாந்தி எடுக்க, அதை பார்த்து விட்டு சமர் வேகமாக இறங்கி வந்தான்.

ஆனால் அவன் வரும் முன்பே, மிதுனன் வேதாவிற்கு உதவ ஆரம்பித்து விட்டான்.

வயிற்றில் இருந்த எல்லாம் வெளியே சென்றாலும், சஷி அழுது கொண்டே இருந்தாள். வேதாவும் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்.

2 Comments

Leave a Reply