அத்தியாயம் 12

Loading

ஜோவிதா கைபேசியை எடுத்து, உடனே சங்கரிக்கு அழைத்து விட்டாள்.

நள்ளிரவு நேரம் அழைப்பு வரவும், சங்கரி பதட்டத்துடன் எழுந்து அழைப்பை ஏற்றார்.

“அத்த..”

“என்னமா இந்த நேரத்துல?”

“சஷிக்கு நைட் சாப்பிட்டது சேரல அத்த. வாமிட் பண்ணிட்டே இருக்கா. வயிறு வலிக்குதுங்குறா”

“அப்படி என்ன சாப்பிட்டா? வாந்தி எடுத்தா விட்டுருங்க. வயித்துல இல்லாம எல்லாமே வெளிய வந்துட்டா நல்லது தான். வயிறு வலிக்கு மருந்துடப்பால மாத்திரை இருக்கும். அத சுடு தண்ணில போட்டுட்டு படுத்தா சரியா போகும்” என்றவர் மருந்து இருக்கும் இடத்தை கூற, ஜோவிதா தேடி எடுத்தாள்.

சஷி வயிற்றில் இருப்பதை எல்லாம் வெளியே தள்ளி விட்டு, ஓய்ந்து போய் அழவும் தெம்பில்லாமல் விசும்ப, வேதா அவள் முகத்தை கழுவி உடை மாற்றினாள்.

மிதுனன் உதவிக் கொண்டிருக்க, சமருக்கு தான் என்ன செய்வதென்று புரியவில்லை.

“ஏங்க.. போய் கொஞ்சமா தண்ணிய சூடு பண்ணி எடுத்துட்டு வாங்க” என்று ஜோவிதா மிதுனனை அனுப்பி விட்டாள்.

சஷி வேதாவின் மடியை விட்டு இறங்காமல் இருக்க, “சஷி சித்தி கிட்ட வாடா. அம்மா சுடிதார மாத்தட்டும்” என்று ஜோவிதா அழைத்த போதும், சஷி அசையவில்லை.

“விடு. இவ தூங்குனதும் மாத்திக்கிறேன்” என்று வேதா அமைதியாக சொல்ல, ஜோவிதா விட்டு விட்டாள்.

மிதுனன் தண்ணீரோடு வர, சஷியை கெஞ்சி மாத்திரையை முழுங்க வைத்தனர். சஷி சினுங்கலுடன் வேதாவின் மடியிலேயே இருக்க, வேதா அவளை தட்டிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள்.

“எனக்கு இப்ப பசிக்குது. பால் இருக்காகா?”

வேதா தலையாட்ட, “அப்ப எல்லாருக்கும் கொஞ்சமா காய்ச்சி கொண்டு வர்ரேன்” என்று விட்டு எழுந்து சென்றாள்.

மிதுனனும் அவள் பின்னால் சென்று விட்டான்.

சமர் வேதாவின் அருகே அமர்ந்தான். அவள் அவனை திரும்பிப் பார்க்கவில்லை.

சஷியின் தலையை வருடியவன், “இன்னும் வலிக்குதா?” என்று கேட்க, அவள் சினுங்களோடு தலையாட்டினாள்.

“மாத்திரை போட்டல? சரியாப்போகும்” என்றதும், சஷி கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தாள்.

வேதா மகளை மடியில் போட்டு தட்டிக் கொடுப்பதை நிறுத்தவில்லை.

“அவ தூங்கிட்டா. கீழ படுக்க வை” என்ற சமருக்கு பதிலும் சொல்லவில்லை.

ஜோவிதா பாலோடு வர, சமர் எழுந்து நின்றான்.

“குடிங்க” என்று வேதாவின் கையில் திணித்து விட்டு, சஷியை தூக்கி மெத்தையில் படுக்க வைத்தாள் ஜோவிதா.

“குடிச்சுட்டு டிரஸ்ஸ மாத்திட்டு தூங்குங்க. நாங்க மேல போறோம்” என்று கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து விட்டு, மிதுனனோடு சென்று விட்டாள்.

மனைவியை பார்த்து விட்டு மகளையும் பார்த்தான் சமர். இருவரையும் விட்டு விட்டு தான் மட்டும் மேலே செல்வதா?

விறுவிறுவென மாடியை நோக்கிச் சென்றான்.

வேதா பாலை குடித்த பின்பு தான் தெம்பாய் உணர்ந்தாள். மகளை நினைத்து வந்த கவலையில் கண்ணீரும் விட்டிருந்தாள். முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, மகளை பார்த்தாள். சற்று நேரத்தில் எவ்வளவு போராட்டம்? பெருமூச்சு விட்டு நிதானித்துக் கொண்டாள்.

அவளது உடை மேலே இருக்கிறது. மகளை தனியாக விட்டு செல்ல யோசித்துக் கொண்டிருக்க, சமர் வந்து நின்றான்.

“மாத்திக்க”

அவளுக்காக எடுத்து வந்த உடையை நீட்ட, நிமிர்ந்து பார்க்காமல் வாங்கிக் கொண்டு மாற்றச் சென்றாள்.

கையோடு கொண்டு வந்த பாயை தரையில் விரித்தவன், தலையணை போட்டு படுத்துக் கொண்டான்.

உடை மாற்றி வெளியே வந்த வேதா, விளக்கை அணைத்து விட்டு மகளோடு படுத்துக் கொண்டாள்.

மூவரும் சில நிமிடங்களில் உறங்கி விட்டனர். வேதா மட்டும் அடிக்கடி தூக்கம் கலைந்து மகளை பார்த்து விட்டு படுத்தாள்.

அடுத்த நாள் காலையிலேயே சங்கரி வந்து நின்றார்.

“இப்ப எப்படி இருக்கா? தூங்கிட்டு இருக்காளா?”

“நைட்டெல்லாம் முழிச்சது. இன்னும் தூங்குறா”

“சரி தூங்கட்டும். நல்லா தூங்குனா சரியா போகும்”

“நைட்டே அக்கா சொன்னாங்க. நிறைய சாப்பிடாத வேணாம்னு. கேட்காம சாப்பிட்டு படுத்திட்டா”

ஜோவிதா பதில் சொல்லிக் கொண்டிருக்க, சமர் தன் அறைக்கு சென்று குளித்து கீழே வந்தான்.

வேதாவும் சஷியும் இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருந்தனர். எல்லோரும் அவர்களை தொந்தரவு செய்யாமல், தங்கள் வேலையை பார்த்தனர்.

சமரும் மிதுனனும் கிளம்பிச் சென்ற‌ பின்பு தான் வேதா எழுந்தாள்.

அவள் பின்னால் சஷியும் எழுந்து விட, அவளை கவனித்தாள். வலியெல்லாம் பறந்து போனதால் சஷி எப்போதும் போல் மாறி விட்டாள்.

ஆனால் வேதா மற்றும் மிகவும் அமைதியாக இருந்தாள். எதுவுமே பேசவில்லை.

“இப்ப நீ ஏன் இப்படி இருக்க? சாப்பாடு சேரல. வாந்தி எடுத்துட்டா. அவ்வளவு தான? சின்ன பிள்ளைங்கனா இதெல்லாம் நடக்குறது தான்” என்று சங்கரி சமாதானம் செய்ய, வேதா தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

அன்று இரவு சமர் வந்த போது, வேதா அவனை பார்க்காமல் அறைக்குள் இருந்து கொண்டாள். அவனும் வழக்கம் போல் அவளை தேடாமல், மகளை மட்டும் பார்த்துப் பேசி விட்டு, வேலையை பார்க்க சென்று விட்டான்.

இதுவே இரண்டு நாட்களுக்கு தொடர, அப்போது தான் அவனுக்கு வித்தியாசமே புரிய ஆரம்பித்தது. வேதா அவனிடம் பேசவே இல்லை.

முகத்தை கூட காட்டவில்லை என்பதே இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் அவனுக்குப் புரிந்தது.

“வீட்டுல தான் இருக்காளா?” என்ற சந்தேகமே வந்து விட, அவளைத்தேடிச் சென்றான்.

சமையலறையில் ஜோவிதாவும் சங்கரியும் இருக்க, அறைக்குள் சென்றான்.

வேதா தன் கைபேசியை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“வேதா.. என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டுக் கொண்டு சமர் நிற்க, வேதா வேகமாக எழுந்து அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.

சமர் ஒரு நொடி மலைத்து நின்றான். பிறகு கோபம் வந்து விட்டது.

‘இப்ப எதுக்கு இப்படி மூஞ்சிய திருப்பிட்டு போறா?’ என்று கோபம் வர, வேகமாக வெளியே வந்து பார்த்தால் அவன் சமையலறைக்குள் சென்று விட்டாள்.

‘இவளுக்கு இப்ப என்ன பிரச்சனை?’ என்று எரிச்சலாக நினைத்துக் கொண்டான்.

ஆனால் அதற்கு மேல் மனைவியோடு கண்ணாமூச்சி ஆட நேரமில்லாமல், வேலையை பார்க்கச் சென்று விட்டான்.

அடுத்த ஒரு வாரம் இது தான் நடந்தது. சமர் இருக்கும் பக்கமே வேதா வரவில்லை. இரண்டு முறை பேச முயற்சித்து விட்டு, அவனும் முறைத்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்து விட்டான்.

இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த சங்கரி, வேதாவிடமே வந்து நின்றார்.

“உங்களுக்குள்ள சண்டையா? நானும் புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல வர வேணாம்னு பார்க்குறேன். ஆனா நீங்களா சரியாக மாட்டேங்குறீங்களே?”

“சண்டை எல்லாம் இல்ல அத்த”

“பின்ன ஏன் அவன பார்க்காம ஒளிஞ்சுட்டு இருக்க?”

வேதா மௌனமாக இருந்தாள்.

‘பிடிக்கல.. பார்க்கவும் பிடிக்கல. பேசவும் பிடிக்கல’ என்று மனம் குமுறியது.

ஆனால் அதை அத்தையிடம் சொல்லாமல், மௌனமாக இருந்து விட்டாள்.

“இப்படி இருக்கப்ப தொட்டதுக்கெல்லாம் கோபம் வரும் தான். அதுக்காக இப்படியே இருந்துடுவியா? ஒழுங்கா பேசி தீர்க்கப்பாரு” என்று முடித்து விட்டார் சங்கரி.

ஆனால் அது முடியவே இல்லை. ஒரு மாதம் வரையிலும் இது தான் நடந்தது. மனைவி சமரை விட்டு தள்ளிப்போக, மகள் அவனிடம் நெருங்க ஆரம்பித்தாள்.

வேதாவோடு தூங்காத நேரமெல்லாம், மகள் கதை கேட்பாள். வாய்க்கு வந்ததை அவன் சொல்ல, கேட்டுக் கொண்டே தூங்கி விடுவாள்.

இருவரின் நெருக்கமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்க, சஷி தந்தையிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.

அவனும் வேலையின் பிரச்சனைகளை வீட்டுக்கு கொண்டு வருவதை நிறுத்தி இருந்தான். ஜோவிதா அன்று கோபமாக கேள்வி கேட்டாலும், நியாயமாகத்தானே கேட்டாள்?

ஜோவிதாவும் கோபம் மறந்து சமரிடம் இயல்பாய் நடந்து கொண்டாள். எல்லோரும் மறந்து விட்டனர். வேதாவை தவிர.

அவளால் மறக்கவும் முடியவில்லை. கடக்கவும் முடியவில்லை. எத்தனையோ விசயங்களை அவனுக்காக பொறுத்துப்போனவளுக்கு இதை ஏற்கவே முடியவில்லை.

பச்சை பிள்ளை அழும் போது அதை ஏன் என்று கேட்கவில்லை. வேலை செய்ய முடியாதது தான் அவனுக்குப் பெரிதாக இருக்கிறதாம்.

அப்படி என்றால் அந்த வேலையையே திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். எதற்கு மனைவியும் பிள்ளையும்?

வேதா மட்டும் சமரை முழுதாக ஒதுக்கி வைத்து விட்டு சுற்றிக் கொண்டிருந்தாள். தானாக தீரும் என்று பொறுத்துப்பார்த்த சங்கரிக்கே பொறுமை போய் விட்டது.

மாதக்கணக்கில் பிரிந்து இருப்பது நல்லதல்லவே?

இம்முறை மகனை பிடித்தார்.

“என்னடா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?”

“ஏன்மா? என்ன விசயம்?”

“சொல்லுறது ஒன்னு செய்யுறது ஒன்னா இருக்கு. என் கிட்ட என்ன சொன்ன? உன் பொண்டாட்டிய நீயே பார்த்துக்கிறேன்னு தான சொன்ன? இப்ப என்னடானா அவ இருக்க பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்குற? அவ உடம்ப பார்த்தியா? மெலிஞ்சுட்டே போறா. இப்படியே போனா பிள்ளைய எப்படி ஒழுங்கா பெத்தெடுப்பா? பெருசா பார்த்துக்குவேன்னு பேசிட்டு இப்படி பண்ணிட்டு இருக்க”

சங்கரி கத்தாத குறையாக கேட்க, சமருக்கு பெருமூச்சு தான் வந்தது.

அவனாலும் வேதாவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை தான். எத்தனையோ சண்டைகள் வந்திருக்கிறது. ஆனால் எல்லா நேரமும் வேதா அதை கடந்து பேசி விடுவாள். அவனுக்கானதை எல்லாம் செய்யாமல் விட மாட்டாள்.

அவன் தான் கோபத்தில் கத்தி விட்டு,‌ பிறகு வருந்துவான். ஆனால் அவள், கோபம் வந்தால் கூட சண்டை போட மாட்டாள். அமைதியாய் விட்டு விடுவாள்.

இப்போது எல்லாம் மாறி விட்டது. அவன் முகத்தை கூட பார்க்காமல் தவிர்க்கிறாள். ஒரே வீட்டுக்குள் அவனை மட்டும் தவிர்க்கும் அவளை, எப்படி அணுகுவது என்று அவனுக்கு புரியவில்லை.

சாதாரண கோபமாக இருந்தாலே, ஒரே அறைக்குள் படுத்து கண்ணை மூடிக் கொண்டாள் என்றால், என்ன பேசினாலும் திரும்ப கண்ணை திறந்து பேச மாட்டாள். அவ்வளவு தான். இதற்கு மேல் பேசாதே என்ற செய்கை அது.

இப்போது தனித் தனி அறை. பேச்சும் சுத்தமாய் இல்லை. தானாய் பேசப்போனால் எழுந்து சென்று விடுகிறாள். என்ன செய்வான்?

“அவளுக்கு தான் இந்த மாதிரி நேரத்துல எதுக்கெடுத்தாலும் கோபம் வரும். அழுகை வரும். நீ இறங்கி போனா குறைஞ்சா போயிடுவ?”

“ம்மா.. அவ தான் பேச மாட்டேங்குறா”

“காரணம் சொல்லாத. நீ போய் பேசு. அவள பேச வை. சும்மா ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் திரும்பிட்டு நிக்காதீங்க” என்று அதட்டி விட்டு சென்றார்.

சமருக்கும் அதுவே சரியாக பட, மனைவியிடம் பேசும் முயற்சியில் இறங்கினான்.

ஆனால் விளைவு தான் எதிர்பாராமல் கிடைத்தது.

தொடரும்.

Leave a Reply