அத்தியாயம் 15
![]()
மனதில் வந்ததை எல்லாம் அழுகையோடு கொட்டி விட்டு, விறுவிறுவென கிளம்பிச் சென்று விட்டாள் வேதாஸ்ரீ.
ஆட்டோவில் செல்லும் போதும் அழுகை நிற்காமல் வந்தது. கண்ணை துடைத்துக் கொண்டே தான் சென்றாள். வீட்டில் சென்று இறங்கியதும் பணத்தை கொடுத்தவள் கண்ணில், சமரின் கார் வந்து நிற்பது தெரிந்தது.
ஆனாலும் நிற்காமல் உள்ளே சென்று விட்டாள். வீட்டில் தனியாக இருந்த வேதாவின் அன்னை மல்லி, மகள் அழுதபடி வந்து நிற்கவும் பதறி விட்டார்.
“வேதா? என்னமா?” என்று அவர் பதட்டத்தோடு கேட்க, அவளுக்கு கண்ணீர் அதிகரித்தது.
இப்படி பாசமாய் அவளுக்காக பதறுபவரை தான், சமர் ஒதுக்கி வைக்க சொல்லி குதிக்கிறான். கண்ணீரோடு மல்லியை பார்த்தவளுக்கு, வார்த்தை வரவில்லை.
“ஏன் அழுற? தனியாவா வந்த?”
பதில் சொல்லாமல் நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டாள். மல்லிக்கு ஒன்றும் புரியவில்லை. திடீரென மகள் அழுது கொண்டு வந்து நின்றால் அவர் என்ன செய்வார்?
உடனே வேதாவின் பின்னால் சென்றார். வேதா முகத்தை மறைத்து படுத்துக் கொண்டு விசும்பினாள்.
“பிள்ளையோட இப்படி அழாத வேதா.. என்னனு சொல்லு? மாப்பிள்ளை எதுவும் சொல்லிட்டாரா? சண்டை போட்டியா?”
எதற்கும் பதில் வராமல் போக, பெற்ற மனம் துடித்தது.
அவளது தலையை வருடி விட்டவர், “எதையாவது சாப்பிட்டியா? நான் டீ போட்டு எடுத்துட்டு வர்ரேன். தூங்கிடாத” என்றவர் உடனே எழுந்து சென்றார்.
அடுப்பில் பாலை வைத்து விட்டு, கணவனை அழைத்து விசயத்தைக்கூறினார்.
“அழுதுட்டு வந்து படுத்துருக்காங்க. கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்றவர், தேநீர் வார்த்து எடுத்துச் சென்றார்.
வேதா விசும்பல் குறைந்து படுத்திருக்க, “இந்தா.. இதைக்குடிச்சுட்டு படு. இப்படியே தூங்குனா தலை தான் வலிக்கும்” என்றவர், அவளை எழுப்பி அமர வைத்து கொடுத்தார்.
அழுகை குறைந்ததில் உண்மையில் தலை வலிக்க ஆரம்பித்திருந்தது. முழுமையாய் குடித்து முடித்து விட்டு படுத்துக் கொண்டாள்.
வேறு எதுவும் கேட்காமல் மல்லி அவளை தட்டிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தார்.
அந்நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க, எழுந்து சென்றார். வாசலில் பழங்களோடு சமர் நின்றிருந்தான். மருமகனை பார்த்ததும் விழிகள் விரிய, “வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்றார்.
“இத மறந்துட்டு வந்துட்டா. கொடுத்துடுங்க” என்று மொத்த பழங்களையும் நீட்டினான் அவன்.
“உள்ள வாங்க மாப்பிள்ளை”
“எனக்கு வேலை இருக்கு. அப்புறமா..” என்றவன் கையிலிருந்து பழங்களை வாங்கிக் கொண்டார்.
வேதாவை ஒரு நொடி கண்களால் தேடி விட்டு, உடனே கிளம்பி விட்டான்.
வேதாவின் தந்தை வர, அவரிடம் எல்லாம் சொல்லி புலம்பினார் மல்லி.
“இப்ப எங்க?”
“தூங்குறா”
“சரி எந்திரிக்கட்டும் பேசலாம்”
“சம்பந்தி கிட்ட சொல்லுவோம்ங்க. இவ இங்க இருக்கது அவங்களுக்கு தெரியுமோ? தெரியாதோ?”
“போன் போடு”
உடனே சங்கரியை அழைத்து விசயத்தைச் சொன்னார். முழுதாய் கேட்ட சங்கரிக்கு, பெருமூச்சு தான் வந்தது.
“அங்கயே ரெண்டு நாள் இருக்கட்டும் சம்பந்தி. நல்லா உடம்ப தேத்தி அனுப்புங்க.”
“மாப்பிள்ளை கோபமா இருப்பாரோ? உள்ள கூட வரல”
“அதான் அவளுக்கு பழம் வாங்கிக் கொடுத்துருக்கானே. கோபமெல்லாம் இருக்காது. நீங்க வேதாவ பாருங்க” என்று சமாதானம் கூறினார்.
அதே நேரம் அலுவலகத்தில் அமர்ந்திருந்த சமருக்கு, ஒரு வேலையும் ஓடவில்லை. வேலை பார்க்கத் தான் வந்தான். ஆனால் மனம் முழுவதும் வேதா பேசியது தான் நிறைந்திருந்தது.
அவள் இது வரை இப்படி எல்லாம் பேசியது இல்லை. கோபப்பட்டால் கூட, முறைத்தது இல்லை. பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்வாள். அடுத்த நாள் அவளே அதை விட்டு விட்டு பேச ஆரம்பித்து விடுவாள்.
அவனும் அப்படித்தான். கோபத்தை அவளிடம் பிடித்து வைத்துக் கொண்டு சுற்ற தெரியாது. அவள் பேசும் போது, முகத்தை திருப்பவும் அவனுக்கு வராது.
அப்படியே காலம் போயிருக்கலாம். ஆனால் திடீரென வேதா அவனை ஒதுக்கித்தள்ளினாள். அவன் பக்கம் பார்வையே திருப்பவில்லை. எப்போதும் போல் அன்றைய கோபத்தை அவள் மறக்கவில்லை. ஏனென்று சமருக்கு புரியவில்லை.
பேச வைக்கும் முயற்சியும், பேசி பார்க்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அவளது அழுகை என்னவோ செய்தது.
வேதா அவர்களது திருமணத்தின் போது அழுதாள். அதன் பிறகு சஷி பிறக்கும் போது. இடைப்பட்ட காலத்தில் அவள் அழுதோ கண்கலங்கியோ அவன் பார்த்தே இல்லை.
ஆனால் அவள் அழுதிருக்கிறாள். ஜோவிதா சொன்னாளே. கண்கலங்கியதாக. அவன் தான் கவனிக்கவில்லையா? வேறு எப்போதெல்லாம் அழுதிருக்கிறாள்? அவனுக்கு தெரியவில்லையே?
அன்று மொட்டை மாடியில் தனியாக ஆதரவில்லாமல் அவள் அழுததே, அவனது மனதை பிசைய செய்ய, இப்போது வெடித்து கதறி விட்டுச் சென்றிருக்கிறாள்.
அவள் பேசியது எல்லாம், மூளைக்குள் வார்த்தை மாறாமல் ஓடிக் கொண்டே இருந்ததது. அவளது பெற்றோரிடமிருந்து அவளை பிரித்து விட்டதாக குற்றம் சாட்டி விட்டாள்.
அப்படித்தானோ? அவர்கள் தன்னை மதிக்கவில்லை. அதனால் தன் மனைவியும் அவர்களை விட்டு ஒதுங்க வேண்டும் என்று தான் சமர் நினைத்தான். ஆனால் அவர்கள் வேதாவை பெற்று வளர்த்தவர்கள் என்பதை மறந்து போனான்.
அவர்கள் இல்லாவிட்டால், வேதா என்ற பொண்டாட்டி சமருக்கு ஏது? அதை பற்றிய எண்ணம் அவனுக்கு வரவே இல்லையே? அவர்களை பார்க்கும் போதெல்லாம், தன்னை வரதட்சணை கேட்கும் முட்டாள் கணவனாக நினைத்தவர்கள் என்ற கோபம் தான் அவனுக்கு வரும். அதனால் பேசவும் மாட்டான்.
ஆனால் அது அவமானம் அல்லவா? வேதா அதை சொல்லி தானே குமுறி விட்டு சென்றிருக்கிறாள்.
“உங்க அம்மாவ பார்க்காம பேசாம ஒதுக்கிவைனு நான் சொன்னா நீங்க இருந்துடுவீங்களா?” என்ற கேள்விக்கு அவன் என்ன சொல்வான்?
சங்கரியை ஒதுக்க அவனால் முடியுமா? அதட்டி உருட்டி அவனை கட்டுப்படுத்தும் ஒரே ஆள் சங்கரி தான். அவரிடம் மரியாதையையும் பயமும் கலந்தே தான் அவனுக்கு இருந்தது. ஆனால் அவரை ஒதுக்க முடியுமா?
வேதா போல் அவரை பார்க்காமலே தன்னால் இருந்து விட முடியுமா? முடியவே முடியாது. ஆனால் வேதா அவனுக்காக இருந்திருக்கிறாள்.
அவள் பிறந்த வீட்டுக்கு அவளாக சென்றது இல்லை. அலைபேசி அழைப்பு நல விசாரிப்போடு முடிந்து விடும். அவனுக்கு பிடிக்கவில்லை என்று, பெற்றோரை விட்டு ஒதுங்கி வலியை சுமந்திருக்கிறாள்.
அதைக்கூட சமர் உணரவே இல்லையே? எத்தையோ சண்டைகளில், சம்பந்தமில்லாமல் வேதாவின் தாய் தந்தையை இழுத்துப்பேசி இருக்கிறான். அப்போதும் அவள் பொறுமையாக பதில் சொல்லி விட்டு, முடியாத பட்சத்தில் அமைதியாகி விடுவாள். அதெல்லாம் இப்போது ஒவ்வொன்றாக கண் முன்னால் வந்தது.
ஜோவிதா பேசியதும் வேதாவின் கேள்விகளும் அவன் தலைக்குள் சுற்ற, தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
......
வேதா நன்றாக தூங்கி விட்டாள். மனதில் இருப்பதை கொட்டி, அழுது பாரத்தை இறக்கி விட்டதாலோ என்னவோ, ஆழமான தூக்கம் தான்.
புரண்டு புரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் தூங்கி, தானாகவே கண் விழித்தாள்.
எழுந்து பார்க்கும் போது அறையில் மெல்லிய வெளிச்சம் தான் தெரிந்தது. மனம் சஷியை தேடியது. பார்வை இருக்கும் இடத்தை புரிந்து கொள்ள, எழுந்து அமர்ந்தாள்.
கலைந்த உடை, தலை எதை பற்றியும் அவளுக்கு கவலை இருக்கவில்லை. அப்படியே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவளுக்கு, சமரிடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் மனதில் வர ஆரம்பித்தது.
“ப்ச்ச்” என்று சலித்துக் கொண்டாள்.
‘இப்படியா பேசி வைக்கனும்? அழுததுக்கு எதையாவது சொல்லி வைப்பாரு.. கோபம் வந்தா கோபமா பேச முடியாம, இந்த கருமம் புடிச்ச அழுகை ஏன் தான் வருதோ?’ என்று கடுப்பாக நினைத்துக் கொண்டு எழுந்தாள்.
கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தாள். நலுங்கி கலைந்த உருவம்.
“காலேஜ் படிக்கிற வரை, எல்லாம் மேட்சிங்கா இருக்கனும்னு அவ்வளவு மெனக்கெடுவேன். இப்ப.. ரெண்டு பிள்ளை வந்துட்டா வாழ்க்கையே முடிஞ்ச மாதிரி இருக்கு” என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டாள்.
குளியலறை சென்று வேலைகளை முடித்து வெளியே வர, மல்லி வந்து விட்டார்.
“எந்திரிச்சுட்டியா? சாப்பிடுறியா? மதியம் சாப்பிட எழுப்புனா எந்திரிக்கல”
“டீ போடுங்க குடிக்கிறேன்”
“சும்மா சும்மா டீ குடிக்க கூடாது வேதா. பால காய்ச்சி தர்ரேன். இப்ப தான் உன் அப்பாவ ஹார்லிக்ஸ் வாங்க அனுப்புனேன். குடிச்சா தெம்பா இருக்கும்”
மல்லி வேறு எதையும் கேட்காமல் சமையலறை பக்கம் செல்ல, அவளும் பின்னாலேயே சென்றாள்.
“நான் ரெண்டு நாள் இங்கயே இருக்க போறேன்மா”
“நாலு நாள் கூட இரு”
“ஏன் அழுதேன்னு கேட்க மாட்டீங்களா?”
“இப்ப தான் எந்திரிச்சுருக்க.. கேட்டா மறுபடியும் அழுகை தான் வரும். பால குடிச்சுட்டு பேசலாம்.”
“ம்ம்..” என்றவளுக்கு அன்னையின் பாசம் மனதை நிறைத்தது.
“ஃப்ரிட்ஜில மாதுளம் பழம் இருக்கு பாரு. எடுத்து உரிச்சு போடு. சாப்பிடுவ”
உடனே கதவை திறந்தவள், அது இருந்த கவரை பார்த்து விட்டு புருவம் சுருக்கினாள். அது சமரோடு அவள் வாங்கியது தான். எல்லா பழங்களுமே அங்கு தான் இருந்தது.
‘வந்து கொடுத்துட்டு போயிருக்காரு’ என்று நினைத்தவள், ஒரு பழத்தை எடுத்து உரித்து உதிர்த்து தட்டில் போட்டாள்.
முருகன் மகளுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி வந்து விட்டார். பாலை கலந்து அவள் கையில் கொடுத்து விட்டு, மற்ற இருவரும் தேநீர் எடுத்துக் கொண்டனர்.
மூவரும் ஹாலில் அமர்ந்து, தொலைகாட்சியில் பார்வையை பதித்தனர். எதோ ஒரு சிரிப்பு படம் ஓடிக் கொண்டிருக்க, எல்லோரின் முகத்திலும் புன்னகை.
அதை பார்த்தபடி ஊர் கதைகளை பேசிக் கொண்டிருந்தனர். மகள் நிதானத்துக்கு வந்து விட்டாள் என்று புரிய, மல்லி கணவனுக்கு சைகை காட்டினார்.
“வேதாமா”
“ம்ம்”
“மாப்பிள்ளை கூட சண்டையா?”
புன்னகை தொலைய, மேலும் கீழும் தலையாட்டினாள்.
“அதுக்காக இப்படி கோச்சுட்டு வரலாமா?”
“கோவிச்சுட்டு எல்லாம் வரலபா”
“அப்புறம் ஏன் அழுத?”
“சண்டையில அழுதேன் தான். அதான் உங்க மாப்பிள்ளை வந்து ஃப்ரூட்ஸ் எல்லாம் கொடுத்துட்டு போனாரே. அப்புறம் என்ன?”
“நீ அழுதியே.. அதான் இப்ப கவலையா இருக்கு”
“சண்டைனு வந்தா முதல்ல அழுகை தான் வருது. அதான் அழுதுட்டே வந்துட்டேன்”
“நீ ஆட்டோல வந்தியாம். மாப்பிளளை கார்ல வந்தாராம். எதிர் வீட்டு பொண்ணு சொல்லுச்சு” – மல்லி
“ஆமாமா. அப்படித்தான் வந்தேன்”
வேதா அமைதியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ரொம்ப பெரிய பிரச்சனையா? புள்ளைதாச்சி இப்படி வந்து பிறந்த வீட்டுல இருக்கது சரியில்லமா”
“தெரியும்மா.. ஆனா பிரச்சனையே இங்க நான் வரக்கூடாதுங்குறதுல தான்”
மீண்டும் கண் கலங்குவேன். குரல் உடைவேன் என்று பயமுறுத்த, மாதுளை மணிகளை அள்ளி வாயில் போட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“என்னடா சொல்லுற? மாப்பிள்ளை வர வேணாம்னு சொன்னாருனு கிளம்பி வந்துருக்கியா?”
“இல்ல. நான் அப்படித்தான் போவேன். முடிஞ்சா தடுத்துக்கனு வந்தேன்”
இருவரும் அதிர்வோடு பார்க்க, “அவரோட வறட்டு பிடிவாததுக்கு நான் பெத்தவங்கள விட்டு கொடுக்கனுமா? இதே மாதிரி நான் சொன்னா மருமக கொடுமைனு ஊரே பேசாது? நான் இங்க தான் ரெண்டு நாள் இருப்பேன். இனிமே எப்ப தோனுதோ, அப்பலாம் இங்க வந்து தான் இருப்பேன். என்ன பண்ணுறாருனு பார்க்கிறேன்” என்றாள்.
கோபமாக பேசிய மகளை, என்ன சொல்வது என்று இருவருக்கும் தெரியவில்லை. மகள் வராதது அவர்களுக்கும் வருத்தம் தான். ஒற்றை பிள்ளை தான் அவர்களுக்கு. அவளை பார்க்க முடியாமல் தவிப்பது அவர்களது மனதுக்கு தான் தெரியும். அதற்காக இப்படி கோபித்துக் கொண்டு வருவதும் சரியில்லையே?
“வேதா..”
“விடுங்கமா.. இத அப்புறம் பேசலாம். நைட் நான் மாத்திரை சாப்பிடனும்பா. அத்தை கிட்ட கேட்டு அதோட ஃபோட்டோ அனுப்ப சொல்லுறேன். வாங்கிட்டு வந்துடுவாங்க. அங்க போனதும் அங்க இருக்கத சாப்பிட்டுக்கிறேன்” என்று முடித்து விட்டு, படத்தை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
தொடரும்.
