அத்தியாயம் 18
![]()
சஷி கதையை கேட்டுக் கொண்டே தூங்கியிருந்தாள். பெரியவர்கள் தான் தங்களது விவாதத்தில் ஈடுபட்டிருக்க, அவளுக்கு ஒரு கவலையும் இல்லை.
வேதா கதையை முடித்த போது, மிதுனனுக்கு கூட ஆச்சரியம் தான். அத்தனை ஓட்டைகளையும், சரியான பதிலை கொண்டு அடைத்து விட்டாள் அல்லவா? அதனால் வெற்றிகரமாக தோல்வியை ஒப்புக் கொண்டான்.
அங்கேயே அமர்ந்து கதையை கேட்டிருந்த சமரும் கூட, வேதாவின் சாமர்த்தியத்தில் ஆச்சரியம் அடைந்தான்.
“நிஜம்மாவே இப்படி எழுதனவங்க கூட நினைச்சுருக்க மாட்டாங்க” என்று சொல்லி வைத்தான்.
வேதா அவனை திரும்பிப் பார்த்து விட்டு, “இது என் பாயிண்ட்” என்று விட்டாள்.
“பட் இந்த மாதிரி சொல்லும் போது, எல்லாமே சரினு தோணுது அக்கா”
“எல்லா விசயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சா, உலகத்துல பாதிய புரிஞ்சுக்கலாம். நமக்கு என்ன தெரியுமோ அதான் எல்லாமேனு நினைக்கிறது முட்டாள்தனம்” என்று மறைமுகமாக சமரை தான் சொன்னாள்.
“அதான? நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கும்னு சும்மாவா சொன்னாங்க?”
“ஆனா அந்த பக்கத்த பத்தி யோசிக்க யாருக்குமே விருப்பமில்ல. தான் நினைக்கிறது தான் சரி. அடுத்தவங்களுக்கு மூளையில்லனு நினைப்பு. இந்த கதையில நாமலே சில விசயங்கள புரிஞ்சு, லாஜிக் போட்டுக்கலாம். அப்படி செஞ்சுட்டா, அந்த கதையோட அழகு கெடாது. ஆனா அதை செய்யாம, எங்கடா குறை இருக்கும்? எப்ப குறை சொல்ல வாய்ப்பு கிடைக்கும்னு தேடி அலைய வேண்டியது” என்று மனதில் இருந்ததை உடைத்து விட்டாள்.
சமருக்கான தாக்குதல் தான். நேற்றும் எதோ ஒரு சண்டையில் வேதா அவனை இதையே தான் சொல்லி பேசினாள். அதன் பிறகு அதை விட்டு விட்டாள். ஆனால் இன்று நேரடி தாக்குதல் தான்.
அவனுக்கு நான்கையும் யோசிக்கும் பக்குவம் இல்லை என்று விட்டாளே! அதிர்ச்சியோடு கோபமாக பார்த்து வைத்தான்.
ஆனால் சங்கரி, அவனை இன்னும் அதிர வைத்தார்.
“நாலையும் யோசிச்சு நாலு பேர் மனச அறிஞ்சு, ஊர் உலக நடப்பையும் அறிஞ்சா, உலகத்துல இருக்க எல்லாரு பக்கமும் இருக்க ஒரு நியாயமும் புரியும். கிணத்து தவளை மாதிரி வரட்டு வரட்டுனு கத்திட்டு இருந்தா எதுவும் புரியாது.” என்று சங்கரி சொல்ல, “கரெக்ட் அத்த” என்று விட்டாள் வேதா.
‘ம்க்கும்’ எனறு சலித்துக் கொண்டான் சமர்.
“பேசுனது போதும் நேரமாகுது. போய் தூங்குங்க. சஷிய கொடு” என்று தூக்க வர, “நான் தூக்கிக்கிறேன்மா” என்று சமர் தடுத்தான்.
“ஹலோ ஹலோ.. நில்லுங்க. என்ன உடனே கிளம்புறீங்க? இவர் தோத்து போயிட்டாரு. அக்கா இன்னும் விஷ் கேட்கவே இல்ல..” என்று ஜோவிதா தடுத்தாள்.
“எவ்வளவு பாசம் உனக்கு என் மேல? புல்லரிக்குது” என்று மனைவியை கிண்டலடித்த மிதுனன், “சொல்லுங்க அண்ணி. இல்லனா விட மாட்டா” என்று கேட்டான்.
வேதா யோசித்து விட்டு, “எனக்கு எதுவும் வேணாம். ஜோவிதாவோட எதாவது ஒரு விஷ்ஷ நிறைவேத்தி வை. போதும்” என்று விட்டாள்.
மிதுனன் அதிர, ஜோவிதா வாய்விட்டு சிரித்தாள்.
“மாட்டுனீங்களா?’ என்று கேட்டு சிரித்தவளை பார்த்து, மிதுனன் விழித்தான்.
“அய்யோ அண்ணி.. நீங்க என்ன வேணா சொல்லுங்க. இவ கிட்ட மாட்டி விடாதீங்க. சிக்கினா சிக்கன் பிரியாணி தான்” என்று போலியாய் பதறினான்.
“நான் சொன்னா செய்வனு சொல்லிட்ட. அவ விருப்பத்த நிறைவேத்து. அவ்வளவு தான்”
“என் மேல எம்புட்டு நாளா அண்ணி இந்த காண்டு? நல்லா பண்ணிட்டீங்க. இந்தாமா மனைவியாரே.. உங்க கோரிக்கைய சொல்லுங்க. செய்யுறேன்” என்று சலிப்பாக வருத்தமாக கேட்டான்.
ஜோவிதா யோசிக்க, “பலம்மா ஒன்னு வரப்போகுது” என்று புலம்பினான்.
“நாம எல்லாம் ஆன்மீக டூர் மாதிரி போகலாமா? வேணாம் அதுக்கு நிறைய நாள் தேவைப்படும். நாம திருச்செந்தூர், பழனி ரெண்டு ஊருக்கும் போவோமா? முருகன் கோவிலுக்கு”
அவளது கோரிக்கை கேட்டு, எல்லாரும் புருவம் உயர்த்தினர்.
“ஏன்?”
“முருகன்னா அக்காவுக்கு ரொம்ப பிடிக்கும். நாம ஃபேமிலியா எங்கயும் போனது இல்ல. அக்காவுக்கு திருச்சந்தூர் போகனும்னு ஆசைனு கூட சொன்னாங்க. போயிட்டு வரலாம்.”
“அப்ப பழனி?”
“அக்காவுக்கு முருகன பிடிக்கும். எனக்கு பஞ்சாமிர்தம் பிடிக்கும்”
சொல்லி விட்டு அவள் தோளை குலுக்க, வேதாவும் மிதுனனும் சிரித்து விட்டனர்.
“பஞ்சாமிர்தத்துக்கா?”
“ஆமா. அக்காவுக்காக திருச்செந்தூர் போகலாம். எனக்காக பழனி”
“உங்களுக்கு திருச்சந்தூர் போகனுமா அண்ணி?”
வேதா தலையை ஆட்டி வைத்தாள். அவள் வேண்டுதல் அது. அதை அவள் யாரிடமும் சொல்லவில்லை. பிறந்த வீட்டுக்கு சென்று வரும் பாக்கியம் கிடைத்தால், திருச்செந்தூர் வந்து தரிசிப்பதாகவும், காணிக்கை கொடுப்பதாகவும் வேண்டுதல்.
ஆனால் அதை பற்றி சமரிடம் பேசினால், அவன் என்ன செய்வான் என்றே தெரியாது. வேண்டுதலை பற்றிய விவரத்தை சொல்லாமல், பேச்சு வாக்கில் அந்த கோவிலுக்கு போகும் ஆசையை மட்டும் தான் சொல்லியிருந்தாள்.
ஆசையை நிறைவேற்றிய முருகன், வேண்டுதலை நிறைவேற்றவும் வழி சொல்வார் என்ற நம்பிக்கை அவளுக்கு. இதோ அவள் கேட்காமலே நடக்கிறது.
“அப்ப போயிடலாம். ஒரு நாள் அங்க போயிட்டு அடுத்த மாசம் பழனி. ஓகே?” என்று மிதுனன் கூறவும், அப்போதே முடிவானது.
சமர் வேதாவின் மடியில் இருந்து சஷியை தூக்கிக் கொள்ள, “சமர் நீயும் தான். குடும்பமா தான் போகனும். பிரிப்பேர் பண்ணிட்டு சொல்லுறேன். அந்த நாள ஃப்ரீ பண்ணிக்கோ” என்று மிதுனன் கூற, சமர் தலையாட்டி வைத்தான்.
மனைவியின் ஆசை அது. மறுத்து வைத்தால் அவளது தாண்டவத்தை பார்க்க வேண்டும். அதனால் அமைதியாக மகளோடு மேலே சென்று விட்டான்.
“எப்படி போறது?” என்று சங்கரி கேட்க, “அதெல்லாம் உங்க புள்ளை பார்த்துப்பாரு அத்த. எல்லா செலவும் பொறுப்பும் அவரோடது தான். நாம கிளம்பி மட்டும் போயிட்டு வருவோம்” என்றாள் ஜோவிதா.
வேதா அவர்களை பார்த்து புன்னகைத்து விட்டு, எழுந்து கொண்டாள். எல்லோரும் அறைக்குள் சென்று அடைந்து கொண்டனர்.
“நான் கூட விஷ் கேட்டப்போ, பிள்ளை வேணும்னு கேட்டுருவியோனு பயந்துட்டேன்” என்றான் மனைவியை அணைத்து நெற்றியில் முட்டிய மிதுனன்.
“நான் கூட அதான் நினைச்சேன். ஆனா அத எல்லாரு முன்னாடியும் கேட்க முடியாது. இது நம்ம சொந்த விசயம். அங்க ஜெயிச்சது அக்கா. அக்கா விட்டுக் கொடுத்தாலும், அவங்க ஆசை தான் முக்கியம்”
“அதுவும் சரி தான்”
“ஒரு வேளை.. அக்கா ஒரு வேளை உங்கள மறுபடியும் நம்ம மில்லுக்கு போனு சொல்லியிருந்தா? என்ன செய்வீங்க?”
“அண்ணி ஏன் அப்படி சொல்ல போறாங்க?”
“சொல்லியிருந்தா?”
“அப்படிலாம் சொல்ல மாட்டாங்க. அண்ணிக்கு, எனக்கு அந்த வேலை பிடிக்கலனு நல்லா தெரியும். சாப்பாட்டுல கூட அண்ணி எனக்கு பிடிக்காதத திணிக்க மாட்டாங்க. பிடிக்கலனா வேற சாப்பிடு மிதுனு தான் சொல்லுவாங்க. நம்ம ஃபர்ஸ்ட் நைட் அப்போவே சொல்லிருக்கேன்ல? அண்ணி யாரையும் ஃபோர்ஸ் பண்ண மாட்டாங்க. இப்ப கூட பாரு.. அண்ணி மட்டும் தான் அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க. சமருக்கு பிடிக்கல. அவன நீயும் வா வந்து இருந்தே ஆகனும்னு கம்ப்பல் பண்ணல தான? அவனுக்கு பிடிக்கலனா வர வேணாம்னு விட்டாங்க.”
“உண்மை தான். அக்கா பிடிக்கலனு சொல்லிட்டா, அத நல்லா மனசுல வச்சுட்டு அதை செய்ய சொல்ல மாட்டேங்குறாங்க”
ஜோவிதாவும் ஒப்புக் கொண்டாள்.
அறையில் படுத்திருந்த சமருக்கு தான் மனைவியின் குத்தல் பேச்சு காதில் ஒலித்தது.
“வர வர நேரடியாவே குத்திப்பேச ஆரம்பிச்சுட்டா” என்று சலிப்பாக சொல்லிக் கொண்டான்.
திருச்செந்தூர் செல்லும் வேலை உடனே ஆரம்பமானது. முதலில் வசதியான மூன்று நாட்களை எடுத்துக் கொண்டனர். மிதுனன் நல்ல நிறுவனம் ஒன்றில் வேன் ஒன்றை புக் செய்து விட்டான்.
“மூணு நாள் எதுக்கு?” என்று சங்கரி கேட்க, “அங்க போயிட்டு திரும்பி வர வேணும்மா. ஒரே நாள்ல போயிட்டு திரும்பி வர்ரது எல்லாம், அண்ணிக்கு ஒத்துக்காது. நல்லா ஊரையும் சுத்தி பார்த்துட்டு வருவோமே? எப்பவாச்சும் தான் இப்படி சான்ஸ் கிடைக்குது” என்றான் மகன்.
அது எல்லோருக்குமே சம்மதமாக தான் இருந்தது.
“நீ மூணு நாளும் எந்த வேலையும் இல்லாத மாதிரி ஒதுக்கிக்கோ சமர்” என்க, அவன் தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.
நிகழ்ச்சி நிரல்கள் மிதுனாலும் ஜோவிதாவாலும் வகுக்கப்பட்டது. குடும்பமாய் சேர்ந்து திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்க, சமரால் வாயை திறக்க முடியவில்லை. சும்மா ஊர் சுற்றலாம் என்றால், முதல் ஆளாக மறுத்திருப்பான். இது கோவில், சாமி தரிசனம். அதுவும் மனைவி விரும்பியது. வாயை பசை போடாத குறையாக ஒட்டி வைத்து விட்டான். அவனிடம் மறுப்பு வராததே, பெரிய வெற்றியாக தோன்றியது மற்றவர்களுக்கு.
“எல்லாம் ஓகே. இன்னொரு முக்கியமான விசயம்.. நாம மட்டும் போகப்போறது இல்ல. என் மாமா அத்தை.. அண்ணியோட அம்மா அப்பா எல்லாரையும் கூட்டிட்டு போகலாம்னு தான் ஐடியா.” என்று மிதுனன் சொன்னதும், பெண்கள் மூவரின் முகமும் மலர்ந்து விட்டது.
“அவங்களுமா?” என்று ஜோவிதா ஆர்வமாக கேட்க, “ஆமா.. அவங்களுக்கு நம்மல விட வேறு யாரு நெருங்குன சொந்தம்? அப்புறம் நாமலும் ஜோடியா வெளிய போயிட்டா, அம்மாவுக்கு போரடிக்கும். இதே ரெண்டு அத்தையும் இருந்தா அம்மாவுக்கு நல்லா இருக்கும்” என்றான்.
சங்கரிக்கும் இந்த திட்டம் பிடித்து விட்டது. என்ன தான் ஆன்மீகம் கருதி சென்றாலும், இருவரும் இளம் தம்பதிகள். அவர்களுக்கென சில தருணங்கள் தேவைப்படும். அவருக்கும் ஓய்வு தேவைப்படும். தான் தனியாய் இருக்கவும் முடியாது. இதுவே ஒத்த வயதினர் என்றால், பொழுது நன்றாக போகும்.
வேதாவை கேட்கவே வேண்டாம். அவர்களுக்காக தானே வேண்டுதல்? அவர்களே உடன் வருவதை விட, வேறு என்ன சந்தோசம் வேண்டும்.
ஜோவிதா துள்ளி குதித்து பெற்றவர்களை அழைத்துச் சொல்ல, வேதாவும் பெற்றவர்களிடம் சொன்னாள்.
இரு பக்கமும் வரத்தயாராக, அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடந்தது. காலையிலேயே குடும்பங்கள் எல்லாம் வந்து விட, எல்லோரும் வேனில் ஏறி கிளம்பி விட்டனர்.
சஷிக்கோ கொண்டாட்டம். எல்லோரின் மடியிலும் தாவி விளையாடிக் கொண்டிருந்தாள். இடையிடையே நிறுத்தி, சில நிமிடங்கள் வேதாவை நடக்க வைத்து விட்டு தான் சென்றனர்.
நேராக ஹோட்டல் சென்று சேர, பெரிய பெரிய அறைகளாக இரண்டு அறைகள் தான் எடுத்திருந்தனர். அது சமரின் திட்டம்.
எல்லோருக்கும் தனித்தனி அறை என்றால், முதலில் செலவு அதிகம். ஆனால் அதை விட முக்கியமான ஒன்று பாதுகாப்பு. தனித்தனி அறையில், யார் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அதனால் ஆண்களுக்கு ஒரு அறை, பெண்களுக்கு ஒரு அறை என்று எடுத்து விட்டனர்.
பெண்கள் மொத்தமாய் பெரிய அறையை எடுத்துக் கொள்ள, அடுத்த அறை ஆண்களுக்கு கொடுக்கப்பட்டது.
இளைப்பாறி, ஹோட்டலை சுற்றிப்பார்த்து, இரவு சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கி விட்டனர்.
அடுத்த நாள் கோவிலுக்குச் சென்று, வேண்டுதலை நிறைவேற்றினர். வேதா காணிக்கையை செலுத்தி விட்டு, மனதார நன்றி தெரிவித்தாள்.
‘வாழ்க்கையில வேற எந்த பெரிய ஆசையும் இல்ல முருகா. இந்த குடும்பம் கடைசி வரை இப்படியே நிறைவா இருந்தா அதுவே எனக்கு போதும். எல்லாரையும் ஆரோக்கியமா வச்சுக்கபா’ என்று வேண்டிக் கொண்டாள்.
ஜோவிதா, ரகசியமாக ஒரு வேண்டுதலை வைத்தாள்.
‘உன்னோட இந்த வீட்டுக்கு திரும்ப வருவனானு தெரியாது. ஆனா உன்னோட இன்னொரு வீட்டுக்கு, நான் என் பிள்ளையோட வரனும். அதுக்கு நீ தான் அருள்புரியனும்’ என்று வேண்டிக் கொண்டாள்.
வேண்டுதல்கள் முடிந்து கோவிலை விட்டு கிளம்பும் போது, எல்லோருமே கலைத்துப்போயிருந்தனர்.
சமர் எல்லோருக்கும் தேவையானதை வாங்கிக் கொடுத்தான்.
பழச்சாறு ஒன்றை வாங்கி வேதாவிடம் கொடுக்க, குடித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன வேண்டுதல்?” என்று கேட்டு விட்டான்.
காணிக்கை எனும் போது, வேண்டுதலுக்காக தான் என்று எல்லோருக்கும் தெரிந்தது. இருந்தும் யாரும் எதுவும் கேட்கவில்லை. ஆனால் சமர் கேட்டான்.
கடைசி மிடறை வாயில் ஊற்றி, கைகுட்டையில் வாயை துடைத்துக் கொண்டவள், பட்டுச்சேலையிலும் முகம் முழுவதும் இருந்த பூரிப்பிலும் ஜொலித்தாள்.
“நான் பிறந்த வீட்டுக்கு சுதந்திரமா போய் வரனும்னு வேண்டிக்கிட்டேன். நடந்துடுச்சு” என்ற போது அவளது முகம் ஜொலித்த ஜொலிப்பு, சமரை அசர வைத்தது.
‘இவ்வளவு ஏக்கமா? வேண்டுதல் வைக்கும் அளவுக்கு?’
மனதில் தோன்றியதை கேட்காமல், தலையை ஆட்டி விட்டு மகளை பார்க்க ஆரம்பித்தான்.
ஜோவிதாவின் அன்னை சாவித்ரி, “நீயும் பிள்ளை பெத்துக்க வேண்டியது தான?” என்று கேட்டு வைத்தார்.
மகள் சஷியுடன் விளையாடுவதை பார்த்து, அவளுக்கும் ஒரு பிள்ளை வேண்டும் என்ற ஆசை அவருக்கு.
“பெத்துக்கலாம்மா.. இப்ப என்ன அவசரம்? அதான் சஷி இருக்காளே.. இப்ப அது போதும்”
கணவனை விட்டுக் கொடுக்காமல், தனக்குள் இருந்த ஏக்கத்தையும் சொல்லாமல் பதில் சொன்னதை, மிதுனன் கேட்டுக் கொண்டிருந்தான்.
கோவிலில் இருந்து ஹோட்டலுக்கு வந்து, பெரியவர்களை ஓய்வெடுக்க சொல்லி விட்டு, ஜோடியாக கிளம்பி விட்டனர். ஜோவிதாவும் மிதுனனும் ஒரு பக்கம் போக, சமரும் மனைவியோடு மகளை தூக்கிக் கொண்டு கிளம்பினான்.
“அப்பா அது… இது..” என்று எல்லாவற்றையும் கை காட்டி சஷி கேட்டுக் கொண்டே வர, வேதாவும் முடிந்தவரை மகளை சமாளித்துக் கொண்டே வந்தாள்.
வெளியே இருந்த உணவகத்தில் சாப்பிட்டு, சில பல பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பும் போது, வேதாவுக்கும் சமருக்கும் இடையில் இருந்த அத்தனை பூசல்களும் காணாமல் போயிருந்தது. மனதால் மிகவும் நெருங்கி விட்டது போல் உணர்ந்தான்.
‘இது கூட நல்லா தான் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டான்.
“ஆமா இன்னைக்கு வெளியவே சுத்திட்டு இருக்கோமே.. உங்களுக்கு கோபம் வரல?” என்று சிரிப்போடு வேதா கேட்க, “எதுக்குமா? நான் கோபப்பட்டு எதையாவது கேட்க போய் இதான் சாக்குனு என் தலைய பிடிச்சு நீ பேயோட்டுறதுக்கா? இந்த ஆட்டத்துக்கு நான் வரல” என்று கையை தூக்கினான்.
அவனது பயத்தில் வேதா வாய் விட்டு, சிரிக்க, முதல் முறையாக தன்னிடம் பேசி சிரிக்கும் மனைவியை ரசித்து வைத்தான் சமர்.
தொடரும்.
