அத்தியாயம் 1

Loading

பளபளவென பொழுது விடிந்து கொண்டிருந்த வேளை. தூக்கம் கலைந்து, அந்த மண்டத்தில் இருந்த எல்லோரும் எழுந்தனர். ஏழு மணிக்கு தான் முகூர்த்தம். அதற்குள் குளித்துக் கிளம்ப வேண்டும்.

அறையில் மணப்பெண்ணிற்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. அவள் கண்மணி. பெயருக்கேற்றார் போல் மிகவும் அழகிய கண்கள் அவளுக்கு. உணர்ச்சிகளின் வாயில் கண்கள் தான் என்பது, அவளது கண்களுக்கு பொருந்தும்.

சிரிக்கும் போது சேர்ந்தே சிரிக்கும் கண்கள். அந்த கண்ணிற்கு மை தீட்டிக் கொண்டிருந்தாள் அழகுநிலைய பெண்.

கண்மணி கண்ணாடியில் அலங்காரங்களை சரி பார்த்துக் கொண்டிருக்க, திடீரென உள்ளே நுழைந்தார் கண்மணியின் அத்தை குமாரி.

“அடி கண்மணி.. மாப்பிள்ளை ஓடிப்போயிட்டானாம்டி” என்று பெருங்குரலெடுத்து கத்தி வைத்தார்.

அவரது குரலே அப்படித்தான். ஆனால் இப்போது வேண்டுமென்றே கத்துவது போல் கத்தினார்.

உள்ளே எரிந்து கொண்டிருந்த வயிறு குளிர்ந்தது காரணமாக இருக்கலாம்.

பின்னே? நூறு பவுன் நகை போட்டு, சொந்தமாக வீடும் கொடுத்து யாரோ ஒருவனுக்கு தன் தம்பி மகளை திருமணம் செய்து வைத்தால் வயிறு எரியாதா என்ன?

தனக்கு ஒரு மகன் இருக்கும் போது, அவனை மதிக்காமல் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததே தவறு. அது போதாதென்று, அவனுக்கு போய் லட்சம் லட்சமாய் பணத்தை கொட்டுவது மகா தவறு அல்லவா?

எதோ சிறிய நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு, இவ்வளவு பணமும் நகையும் கொடுக்க வேண்டுமா?

குமாரியின் வயிறு பற்றி எரியத்தான் செய்தது. ஆனால் அந்த எரிச்சலே, மாப்பிள்ளையை துரத்தியடித்து விட்டது போலும்.

சந்தோசத்தை மறைத்துக் கொண்டு வந்து, ஊருக்கே கேட்கும் படி கூவினார்.

“அடியே.. உன் வாழ்க்கை இப்படியா போகனும்?” என்று வராத கண்ணீரை துடைத்து, ஒப்பாரி வேறு வைத்தார்.

முதலில் கேட்ட விசயத்தை கண்மணி ஜீரணித்து முடிக்கும் முன்பே அவர் ஒப்பாரி வைக்க, ஒரு வழியாக கண்மணி சுதாரித்தாள்.

“அத்த.. என்ன உளறிட்டு இருக்கீங்க?” என்று கேட்டவள் கோபமாக நாற்காலியிலிருந்து எழுந்து விட, “இப்படியாகி போச்சேடி..” என்று மீண்டும் ஒப்பாரி தான் வைத்தார்.

கண்மணி அவரை எரிச்சலோடு பார்த்தாலும், “நீங்க வெளிய இருங்க” என்று அழகு நிலைய பெண்ணை அனுப்பி விட்டாள்.

அளள் சென்றதும், பதட்டத்தோடு உள்ளே வந்தனர் கண்மணியின் பெற்றோர்.

“ம்மா.. என்ன சொல்லிட்டு இருக்காங்க இவங்க?” என்று அன்னையை பார்த்துக் கோபமாகக் கேட்டாள் கண்மணி.

கண்மணியின் அன்னை பாலமணி, வெளிறிப்போன முகத்துடன் மகளை பார்த்தார். நடந்தது அவரையும் தான் கலவரப் படுத்தியிருந்தது.

நேற்று வரை நன்றாக பேசிக் கொண்டிருந்த மாப்பிள்ளை பையனை, திடீரென காலையில் காணவில்லை என்றால்?

அவனது கைபேசியும் கூட அறையில் தான் கிடக்கிறது. எல்லா இடமும் தேடிப்பார்த்தும், யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

“ப்பா?” என்று கண்மணி தந்தையை பார்க்க, “ஆமாமா” என்றார் அவர்.

ராஜகுமார் கண்மணியின் தந்தை. அவரது முகமும் வியர்த்திருந்தது.

‘பிரஷ்ஷர் கூடி இருக்கு’ என்று பார்த்ததும் புரிந்து கொண்ட கண்மணி, உடனே தன் பதட்டத்தை குறைத்தாள்.

“ம்மா.. அப்பாவ உட்கார வை. வேர்க்குது பாரு” என்றதும், உடனே அவரை அமர வைத்தனர்.

“அய்யோ.. என் தம்பிக்கு என்னமாவது ஆகிடுமோ…” என்று குமாரி ஒரு பக்கம் ஒப்பாரி வைக்க ,கண்மணிக்கு எரிச்சலாக வந்தது.

“கொஞ்சம் வாய மூடுறீங்களா?” என்று கத்தி விட்டாள்.

“என்னடி கத்துற? துக்கத்த நினைச்சு அழக்கூட கூடாதா?”

“இங்க என்ன செத்தா போயிட்டாங்க?” என்று அவள் கத்த, “வேணாம்மா” என்று தடுத்தார் ராஜகுமார்.

“அய்யோ ராஜாவாட்டம் இருந்த என் தம்பிய இப்படி உட்கார வச்சுட்டு ஓடிட்டானே.. அவனெல்லாம் நல்லா இருப்பானா? நாசமா போவான்”

குமாரி சாபம் விட்டுக் கொண்டிருக்க, தண்ணீர் பாட்டிலை தந்தையிடம் கொடுத்து விட்டுத் திரும்பினாள் கண்மனி.

“முதல்ல வாய மூடுங்க அத்த. எங்க மாப்பிள்ளையோட அக்காவும் அத்தானும்?”

“ஓடிப்போனவன தேடிப்போயிருக்காங்க” என்ற குமாரிக்கு, சந்தோசத்தை மறைக்கும் வழி தெரியவில்லை. அதனால், முடிந்தவரை கோபமாக இருப்பது போல் காட்டிக் கொண்டார்.

நெருங்கிய சொந்தம் சிலரும், விசயம் தெரிந்து வந்து விட்டனர்.

சில நிமிடங்கள் ஆளாளுக்கு பேசுவதும் கையை உதறுவதுமாக இருக்க, மாப்பிள்ளையின் அக்காவும் அவளது கணவனும் வந்தனர்.

கண்மணி, கனல் கக்கும் விழிகளோடு அவர்களை திரும்பிப் பார்த்தாள். மற்றவர்களும் அவர்களை கோபமாக பார்த்து, மாப்பிள்ளையை பற்றிக் கேட்க ஆரம்பித்தனர்.

மனதை திடப்படுத்திக் கொண்டு, “எங்கள மன்னிச்சுடுங்க” என்று இருவரும் கையெடுத்து கும்பிட்டனர்.

எல்லோரும் எதுவும் பேசாமல் அவர்களை முறைக்க, “இப்படி நடக்கும்னு நாங்களும் எதிர்பார்க்கல” என்றாள் அக்கா விநோதா.

“சொல்லுவமா சொல்லுவ. நல்லவ மாதிரி மன்னிப்பு கேட்க வந்துட்ட.. உன்னை மன்னிச்சுட்டா எங்க குடும்பத்துக்கு கிடைச்ச அவமானம் போயிடுமா? இல்ல கண்மணிக்கு கல்யாணம் தான் நடந்துடுமா?” என்று குமாரி சண்டைக்கு கிளம்பினார்.

“எங்க தப்பு தான். நாங்க இப்ப என்ன செய்யனும்னு நீங்களே சொல்லுங்க” என்று வருத்தமான முகத்துடன் கேட்டான் விநோதாவின் கணவன் வேலன்.

“ஓடிப்போன உன் மச்சான கூட்டிட்டு வந்து நிப்பாட்டனும். செய்யுறியா?” என்று குமாரி எகிற, “அத்த.. உங்கள பேச வேணாம்னு சொன்னேன்” என்று அதட்டினாள் கண்மணி.

“இல்ல கண்ணு..”

“பேசாதீங்கனு சொல்லுறேன்ல?” என்று அதட்டியவள், விநோதா பக்கம் திரும்பினாள்.

“உங்க தம்பி எங்க போனாரு?” என்று புயலை உள்ளடக்கிய குரலில் கேட்டாள்.

“இன்னும் என்னடி அவரு…? அதான் ஓடிட்டானே..” என்று குமாரி நடுவில் வர, கண்மணி திரும்பி முறைத்தாள்.

“ஒரு தடவ சொன்னா புரியாதா? பேசாம நிக்கிறதுனா நில்லுங்க. இல்லனா வெளிய போங்க” என்று கண்மணி கத்தி விட, குமாரி வாயை மூடிக் கொண்டார்.

எப்படியாவது இவளை தன் மகனுக்கு கட்டி வைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார். கண்மணியின் கோபத்தை சம்பாதித்தால் அது நடக்குமா? அதனால் வாயை மூடி விட்டார்.

“எங்க போனாரு?” என்று அவள் மீண்டும் விநோதாவை பார்த்து கேட்க, “தெரியலமா” என்றாள் அவள். கண்களும் குளம் கட்டியிருந்தது.

அவள் முகத்தை ஆராய்ந்தவள், “உங்க தம்பிக்கு பிடிச்சு தான இந்த கல்யாணத்த ஏற்பாடு பண்ணீங்க?” என்று கேட்டாள்.

“சம்மதம்னு தான் சொன்னான்”

“அப்புறம் ஏன் இப்படி நடந்துச்சு?”

“தெரியலயே..”

சில நொடிகள் அமைதியாக இருந்தவள், தந்தையின் பக்கம் திரும்பினாள்.

“இப்ப என்னபா செய்யலாம்?” என்று கேட்டாள்.

அவருக்கும் அடுத்து என்ன என்ற யோசனை தான். ஆனால் பாலமணி சட்டென முடிவெடுத்தார்.

“நம்ம ரவி இருக்கானே?” என்று குமாரியின் மகனை கை காட்டி விட்டார்.

குமாரிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. அவருக்கு எப்போதுமே பாலமணியை பிடிக்காது. காரணம், பணம் நிறைய வைத்திருந்தும் கடன் கேட்டால் தரமாட்டார்.

“கடன் மனஸ்தாபத்த கொண்டு வந்துடும் அண்ணி” என்று ஒரேடியாக மறுத்துவிடுவார்.

அதனால் குமாரிக்கு பாலமணியை எப்போதுமே பிடிக்காது. ஆனால் இப்போது, அந்த அவருக்கு கோவிலே கட்டலாம் என்று நினைத்தார் குமாரி.

‘சரியான நேரத்துல மூளை கரெக்ட்டா வேலை செஞ்சுருக்கு’ என்று குதூகலித்தவர், திரும்பி மகனை பார்த்தார்.

ரவி ஓரமாக நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் இது தான் நடக்கும் என்ற கணிப்பு இருந்தது. சுற்றி முற்றி முறைப்பையன் தன்னிடம் தான் வருவார்கள் என்று எதிர்பார்த்தான்.

அவனுக்கு கண்மணியை பிடிக்கும். அழகானவள். ஆனால் கண்மணி அவனை மதித்ததே இல்லை. அதிகம் படித்த திமிர். நிறைய பணம் இருக்கும் திமிர். அழகாய் பிறந்த திமிர்.

அதையும் மீறி, ஒரு முறை குமாரி பேச்சுவாக்கில் சொல்வது போல், கண்மணிக்கும் ரவிக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றி பேச, கண்மணி தடுத்து விட்டாள்.

“சொந்தத்துல கல்யாணமா? அதுவும் உங்க புள்ளையா? நான் என்ன படிச்சுருக்கேன் தெரியுமா? பத்தாவது பாஸாகாத அவன நான் கட்டனுமா? போய் வேற வேலை இருந்தா பாருங்க அத்த” என்று எடுத்தெறிந்து பேசி விட்டாள்.

அப்போதிலிருந்தே அவள் மீது வன்மம் தான். கண்மணியின் திருமணத்திற்கு வர அவனுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. ஆனால் குமாரி தான் கஷ்டப்பட்டு இழுத்து வந்திருந்தார்.

இங்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. குமாரி சந்தோசமாக பார்க்கவும், அவரிடம் கண்ணை காட்டி விட்டு, “அய்யோ அத்த.. சொந்தத்துல கல்யாணம் பண்ணுறது உங்க மகளுக்கு பிடிக்காது.. என்னை இழுக்காதீங்க” என்று வீம்பு பிடித்தான்.

எல்லோரும் அவனிடம் கெஞ்ச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. முக்கியமாக கண்மணி கெஞ்ச வேண்டும். அவனை வேண்டாம் என்றவள், தானாய் வந்து காலில் விழ வேண்டும் என்று நினைத்தான்.

அவன் நினைத்தது நடந்தது. பாலமணி கெஞ்சினார். குமாரி கூட மகனை சம்மதிக்க வைப்பது போல் போராடினார். ஆனால் கண்மணி அசரவில்லை.

நடப்பதை எல்லாம் நன்றாக பார்த்து ஆராய்ந்தவள், ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.

“என் கூட வாங்க விநோதா” என்றவள், விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினாள்.

“எங்க போற..? கண்ணு நில்லுமா” என்று பதறிக் கொண்டு மற்றவர்கள் பின்னால் வர, யாரையும் கவனிக்காமல் வேகமாக நடந்தாள்.

என்னவென்று புரியாவிட்டாலும், விநோதாவும் வேலனும் உடன் சென்றனர்.

கண்மணி வேகமாக மேடையில் ஏறி விட்டாள்.

சொந்த பந்தங்கள் அப்போது தான் வந்து அமர்ந்து, மாப்பிள்ளை இல்லாததை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ஐயரும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வியோடு அமர்ந்திருந்தார்.

திடீரென மணப்பெண் மேடையில் தோன்றவும், எல்லோரும் அவளை கவனித்தனர்.

“கண்மணி.. என்ன பண்ணுற நீ? வா..” என்று கையைப்பிடித்து இழுத்த அன்னையின் கையை தள்ளி விட்டவள், முன்னால் வந்து நின்றாள்.

விநோதாவை பார்த்து, “மன்னிப்பு கேளுங்க. உங்க சொந்தம் மட்டும் இல்ல. எங்க சொந்தம் முன்னாடியும் நடந்ததுக்காக மன்னிப்பு கேளுங்க” என்றாள்.

விநோதாவிற்கு அவமானத்தில் கண்கலங்கி விட்டது. ஆனால் வேலனுக்கு அப்படித்தோன்றவில்லை போலும். உடனே முன்னால் வந்து கை கூப்பினான்.

“எங்க வீட்டு பையன் மேல தான் தப்பு. அவன் பண்ண தப்புக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம்” என்று மன்னிப்பை வேண்டினான்.

விநோதா கண்ணீர் வடிய கைகூப்பி நின்றாள். எல்லோரும் அவர்களது மன்னிப்பில் சலசலக்க, குமாரிக்கு திருப்தியாக இருந்தது.

இனி மேடையில் மகனை அமர்த்தி விடலாம் என்று பார்க்க, கண்மணி அடுத்த வெடியை வீசினாள்.

“வந்ததுக்கு எல்லாருக்கும் நன்றி. சாப்பிட்டு போங்க. ஏன்னா சாப்பாடு ஏற்கனவே செஞ்சுட்டாங்க. அத வேஸ்ட் பண்ணுறது மகா பாவம். இந்த கல்யாணம் நின்னுடுச்சு. நின்னது நின்னது தான்” என்று முடித்து விட்டாள்.

எல்லாரும் ஆளுக்கொன்றை பேசிக் கொண்டிருக்க, பாலமணி அதிர்ந்து போனார்.

“ஏன்டி இப்படி சொல்லுற?” என்று அவளைப் பிடித்து இழுக்க, “ம்மா.. நீங்க தான் புரியாம பேசிட்டு இருக்கீங்க. கல்யாணம் நின்னுடுச்சுனா நின்னுடுச்சுனு தான் சொல்ல முடியும். அத விட்டுட்டு என்னை பிடிச்சு கிணத்துல தள்ள பார்க்குறீங்க? என்னால எல்லாம் ரவிய கட்டிக்க முடியாது.” என்று வேண்டுமென்றே எல்லோருக்கும் கேட்பது போல பேசினாள்.

குமாரி நெஞ்சை பிடிக்காத குறையாக நின்று விட்டார். எல்லோருக்கும் விசயம் தெரிய வேண்டும் என்று அவர் கத்தியது போலவே, கண்மணியும் எல்லோரின் முன்பும் விசயத்தை உடைத்து விட்டாள்.

அழுத அன்னையையும் அதிருப்தியோடு பார்த்த தந்தையையும் விட்டு விட்டு, விநோதாவை பார்த்தாள் கண்மணி.

விநோதாவும் வேலனும் எப்போதோ மேடையிலிருந்து இறங்கி, வாசலை கடந்து சென்று கொண்டிருந்தனர். உடனே மேடையை விட்டு இறங்கியவள், அவர்களை பின் தொடர்ந்து சென்றாள்.

விநோதாவும் வேலனும், அவர்களது சொந்தங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டு நின்றிருந்தனர்.

“இப்ப எதுக்கு கூட்டம் போட்டுட்டு இருக்கீங்க?” என்று கண்மணி வந்து சத்தம் போட, எல்லாரும் திரும்பிப் பார்த்தனர்.

“பந்தி ஆரம்பிச்சுடுச்சு போய் சாப்பிடுங்க”

“இருக்கட்டும்மா.. நாங்க கிளம்புறோம்”

“ஏற்கனவே சொன்னேன்ல? சாப்பாட வேஸ்ட் பண்ணாதீங்கனு? உங்க எல்லாருக்கும் சேர்த்து தான் சமைச்சாங்க. கல்யாணம் நின்னது போதாதுனு சாப்பாட்டையும் வேஸ்ட் பண்ணனுமா? எனக்கு உங்க மேல எல்லாம் கோபம் இல்ல. இவங்க மேல கூட கோபம் இல்ல. எதையும் நினைக்காம சாப்பிட்டுட்டு கிளம்புங்க. யார் என்ன பேசுனாலும், கண்மணி எங்கள சாப்பிடச் சொல்லுச்சுனு சொல்லுங்க. உள்ள போங்க” என்று படபடவென பேசினாள்.

இவ்வளவு நல்ல பிள்ளையை போய் விட்டுச் சென்றானே? என்று வருந்தினாலும், அவளுக்காகவே சொந்தங்கள் சிலர் உள்ளே சென்றனர்.

மற்றவர்கள் கிளம்பி விட்டனர்.

எல்லோரையும் அனுப்பி விட்டு, கண்மணி அழுது கொண்டிருந்த விநோதாவை பார்த்தாள்.

“விநோதா” என்று பெயர் சொல்லியே அழைத்தாள்.

அண்ணி விநோதாவாகி விட்டது.

“இப்ப ஏன் அழுறீங்க? அழுதா எதுவும் மாறிடாது. ஒரு முக்கியமான விசயம் கேட்கனும். உங்க தம்பி எதுக்காக போனாரு? யாரையும் லவ் பண்ணுறாரா?”

“இல்லமா.. அவனுக்கு அப்படி எந்த லவ்வும் இல்ல. அவங்க ஃப்ரண்ட்ஸ் கூட இல்லனு தான் சொல்லுறாங்க”

“அப்படினா.. உங்க தம்பி தான் எனக்கு புருஷன்.” என்று உறுதியாக கூறினாள்.

விநோதா மட்டுமல்ல வேலனும் அவனது பெற்றோரும் கூட அவளை அதிர்ந்து பார்த்தனர்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டு ஓடிப்போயிட்டா? விட்டுட்டு போயிடுவேன்னு நினைப்பா? உலகத்துல எந்த மூலைக்கு உங்க தம்பி போயிருந்தாலும், கண்டு பிடிக்காம விட மாட்டேன். என்னை விட்டுட்டு எவளுக்காச்சும் தாலி கட்டி இருந்தா, அவர் கைய வெட்டவும் தயங்க மாட்டேன். நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க. இப்ப அழாம கிளம்புங்க. உங்க வீட்டுக்கு வருவேன். அப்புறம் மிச்சத்த பேசுறேன்” என்றவள், விறுவிறுவென வந்த வேகத்திலேயே உள்ளே சென்றாள்.

விநோதா அழுகையை கூட மறந்து திகைத்து நின்றிருக்க, வேலனுக்கு சம்பந்தமில்லாமல் சிரிப்பு வந்தது.

“இப்ப ஏன் சிரிக்கிறீங்க?”

“உன் தம்பி நிலைமைய நினைச்சேன். சிரிச்சேன்”

“அவன நினைச்சா சிரிப்பு வருதா? எனக்கு ஆத்திரமா வருது. இனிமே அவன் எனக்கு தம்பியும் இல்ல. நான் அவனுக்கு அக்காவும் இல்ல” என்றவள், கண்ணை துடைத்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்து விட்டாள்.

உள்ளே சென்று சேலையை மாற்றி, அலங்காரங்களை எல்லாம் களைந்து கொண்டிருந்த கண்மணி மனதில் அமுதன் தான் எழுந்தான்.

‘அமுதா.. உலகத்துல நீ எங்க இருந்தாலும் சரி. எனக்கு பதில் சொல்லாம தப்பிக்க முடியாது. வர்ரேன் இருடா’ என்று நினைத்துக் கொண்டாள்.

தொடரும்.

Leave a Reply