அத்தியாயம் 5

Loading

அமர் விசிலடித்தபடி வீட்டுக்கு வர, அவனை உடனே பிடித்தார் கீழ் வீட்டுக்கார்.

“அமர்..” என்று சத்தம் கொடுக்க, ‘கரெக்ட்டா வந்துட்டான்’ என்று வாய்க்குள் திட்டியபடி, அமர் திரும்பிப் பார்த்து புன்னகைத்தான்.

“இன்னைக்கு சம்பளம் வரும்னு சொன்ன?”

“பாருங்க மறந்தே போயிட்டேன்” என்றவன், அவரிடம் வாங்கிய கடனுக்கு வட்டியும் சேர்த்து கொடுத்தான்.

பணத்தை எண்ணி பார்த்து விட்டு, “நீ கொடுத்துருவனு தெரியும். திரும்ப தேவைப்பட்டா கேளு” என்று வேறு சொன்னார்.

‘உனக்கு வட்டி வருதுனு என் கடனாளாளியாவே வச்சுருப்ப போல’ என்று நினைத்தவன், “உங்கள விட்டு வேற யாரு கிட்ட கேட்க போறேன்” என்று சிரித்து விட்டு மேலே சென்றான்.

வீட்டை திறந்து உள்ளே சென்றான். ஒரே ஒரு அறை கொண்ட ஃப்ளாட் அது. அதுவும் அவன் வாடகை கொடுக்கும் அளவு சாதாரண ஃப்ளாட். பல நேரம் வீட்டில் இருப்பதே இல்லை என்பதால், அவனுக்கு இதுவே போதுமானது தான்.

சட்டையை கழட்டி விட்டு மெத்தையில் விழுந்தவன், அப்படியே உறங்கி விட்டான்.

*.*.*.*.*.

கண்மணி தாமதமாக எழுந்தாள். முதல் வார இறுதி. விடுமுறை நாளில் என்ன செய்வது என்று யோசித்த படி, தன் வேலைகளை முடித்தாள்.

அவளோடு தங்கியிருப்பவள் வெளியே சென்று விட, கண்மணியும் ஊரை சுற்றிப் பார்க்கக் கிளம்பினாள்.

அருகே இருந்த கோவில், தெருக்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, ஆட்டோவில் அருகே இருந்த மால் ஒன்றுக்கு சென்றாள்.

கூட்டம் சற்று அதிகமாக இருக்க, கண்மணி வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள். கண்ணில் பட்டது, தேவையானது எல்லாம் வாங்கிக் கொண்டு செல்ல, “கண்மணி” என்று யாரோ கூப்பிடுவது காதில் விழுந்தது.

சுற்றி சுற்றி அவள் தேட, அவளை நோக்கி வந்தான் யாழ்வேந்தன்.

“வேந்தன் சார்.. என்ன இந்த பக்கம்?”

“தியேட்டர்க்கு ஃப்ரண்டோட வந்தேன். நீ இங்க தான் இருக்கியா?”

“பக்கத்துல தான்.”

“தனியா ஏன் வந்த? ரூம் மெட் கூட வரலாம்ல?”

“அவ பாய் ஃப்ரண்ட் கூட டேட்டிங் போயிட்டா. நான் சிங்கிள் அதான் தனியா வந்தேன்”

“சரி தான். சீக்கிரம் ஃப்ரண்ட்ஸ் பிடிச்சுக்க”

“உங்க ஃப்ரண்ட் எங்க?”

“பசிக்குதுனு பர்கர் வாங்க போயிருக்கான்.”

“படம் பார்த்தாச்சா? இல்ல இனி தானா?”

“பார்த்தாச்சு.. செம்ம போர் படம். தூக்கம் தான் வந்துச்சு”

“அதான் நானும் இப்பலாம் படம் பார்க்குறதயே விட்டேன்”

இருவரும் பேசியபடி சற்று தள்ளி வந்திருக்க, “யாழ்” என்று ஒரு பெண் பின்னாலிருந்து அழைத்தாள்.

குரலை கேட்டதுமே, யாழ்வேந்தனின் முகம் சலிப்பை தான் காட்டியது.

“யாரோ உங்கள தான் கூப்பிடுறாங்க”

“தெரியும்..” என்று சலிப்போடு திரும்பிப் பார்த்தான்.

வெள்ளை ரோஜா போல் பளபளவென வந்து நின்றாள் ஒரு பெண். அங்கிருந்த எத்தனையோ முகங்களில், அவள் முகம் தனித்து தெரிந்தது. அத்தனை அழகான முகம் இப்போது சற்று சிவந்து இருந்தது. கோபமும் இல்லாமல் முறைப்பும் இல்லாமல் கண்மணியை ஒரு பார்வை பார்த்தாள்.

பிறகு வேந்தனிடம் திரும்பினாள்.

“தெரிஞ்சவங்களா?” என்று கண்மணி ரகசியமாய் கேட்க, “ஏன்டா தெரிஞ்சுக்கிட்டேன்னு வருத்தப்படுற ஆளு” என்று சிரிப்போடு பதில் சொன்னான்.

அதற்குள் அவள் அருகே வந்து விட்டாள்.

“யாழ் ஏன் என் ஃபோன அட்டன் பண்ண மாட்டேங்குறீங்க?” என்று ரித்திகா கேட்க, “பிசி” என்றான் அவன்.

ரித்திகா முகம் சுருங்க கண்மணியை பார்த்தாள். அறிமுகம் செய்து வைப்பான் என்று நினைத்தாள்.

“நீங்க தனியாவா வந்தீங்க ரித்திகா?”

“இல்ல ஃப்ரண்ட்ஸ்…”

“அப்ப அவங்க தேடுவாங்க போங்க.” என்று அவளிடம் ஹிந்தியில் சொல்லி விட்டு, “நாம போகலாம்” என்றான் கண்மணியிடம்.

கண்மணி அதிர்ச்சியாய் பார்க்கும் போதே வேந்தன் நடக்க ஆரம்பிக்க, கண்மணியும் அகன்றாள்.

“ஏன் இப்படி பண்ணீங்க? பாவம் அவங்க” என்று கண்மணி பொறுக்காமல் கேட்டு விட, “நானும் பாவம் தான்” என்றான்.

“ஒன் சைட் ஆ?”

“ம்ம். இன்ட்ரஸ்ட் இல்லனா விட மாட்டேங்குறாங்க”

“ஏன்? அழகா இருக்காங்க. பார்த்தா நல்லா படிச்சவங்களா இருக்காங்க.”

“தமிழ் இல்லையே.. வடமாநில பொண்ண கூட்டிட்டு போனா, எங்கம்மா என்னை வீட்டுக்குள்ளயே விட மாட்டாங்க.”

“ஓஓ.. அம்மா பையனா நீங்க?”

“நீங்க மட்டும் டாட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ்ஸ பெருமையா சொல்லுறீங்க. அம்மா பையன்னா மட்டும் கசக்குதா?”

“ஹப்பா.. ரொம்ப சூடா இருக்கே. நான் ஜஸ்ட் ஜாலிக்கு சொன்னேன்பா.. கூல்”

வேந்தன் சிரித்து விட்டான்.

“பட் எனக்கும் தமிழ் பொண்ணு தான் வேணும். மத்த பொண்ணுங்கள ரசிக்கலாம். ஆனா லவ் பண்ணி வாழுறது என்னால முடியாது”

“உலகத்துல தமிழ் பொண்ணுங்களுக்கா பஞ்சம்? ஒருத்தர பிடிச்சு லவ் பண்ணுறது?”

“அதுவும் எங்கம்மா கையில விட்டேன். அவங்களே பொண்ண பார்த்து சொல்லட்டும். அப்ப தான் பின்னாடி சண்டை வந்தா, நீங்க பார்த்து கட்டி வச்சது தானனு பழிய தூக்கி அவங்க மேல போட்டுட்டு எஸ்கேப் ஆக முடியும்”

“நல்ல முடிவு..”

“உனக்கு கல்யாணம் பேசலயா உன் வீட்டுல?”

“பேசுனாங்க. கல்யாணம் வரை வந்துச்சு. ஆனா கல்யாணத்தன்னைக்கு மாப்பிள்ளை ஓடிப்போயிட்டான்.”

“வாட்?”

“சோ கல்யாணம் நின்னு போச்சு”

“ரீல் சுத்தாத”

“நிஜம்மாவே அதான் நடந்துச்சு”

“அப்ப உண்மையிலயே ஓடிட்டானா? ஏன் லவ்வா?”

“யாருக்கு தெரியும்? எங்க போனான் என்ன ஆனான் எதுவும் தெரியல.”

“சீரியல் கதை மாதிரி இருக்கு. அப்ப கல்யாணம் நின்னதும் உன்னை விட்டாங்களா? வேற எவனையும் பிடிச்சு கட்டி வைக்கலயா?”

“ட்ரை பண்ணாங்க. எனக்கு தான் பிடிக்கல. குளத்துல தப்பி கிணத்துல விழ முடியாது. ஆள விடுங்கனு சொல்லிட்டு கல்யாணத்த நிறுத்திட்டேன்”

“சோ பேட்”

“நான் தான?”

“உன் அப்பா அம்மாவ சொன்னேன். ஆசையா கல்யாண வேலை பார்த்துருப்பாங்க. நிறைய செலவு பண்ணிருப்பாங்க. எல்லாம் வேஸ்ட்டாகிடுச்சுனு எவ்வளவு வருத்தமிருக்கும்? இதுல நம்மாளுங்க ஒரு விசயம் நடந்துட்டா விடவே மாட்டாங்க. பேசிட்டே இருப்பாங்க. செலவும் பண்ணி நல்லதும் நடக்காம.. ரொம்ப கஷ்டம்ல?”

அவன் சொல்லும் போது தான் அவளுக்கும் இப்படி யோசிக்கவே தோன்றியது.

ரவியை கட்டி வைக்க பார்க்கிறார்களே என்ற கோபம் அவளுக்கு. அதனால் அவர்களிடம் முகம் திருப்பினாள். ஆனால் அவர்களும் எவ்வளவு ஆசையாய் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

பணமும் நேரமும் வீணாய் விரையமானதே தவிர, ஒன்றுமே நடக்கவே இல்லையே.

“ம்ம்.. கஷ்டம் தான்”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வேந்தனின் நண்பன் அழைக்க, எடுத்துப்பேசி விட்டு, “ஓகே நான் கிளம்புறேன். நீயும் பார்த்து போ” என்றான்.

கண்மணி தலையாட்ட, அங்கிருந்து சென்று விட்டான்.

கண்மணியும் அங்கிருந்து சென்று, தேவையானதை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள்.

வீட்டில் நுழைந்ததும், முதல் வேலையாக பெற்றோருக்கு அழைத்தாள். எதையும் விசாரிக்காமல், அரைமணி நேரம் பழையபடி அரட்டை அடித்த போது அவளுக்கு மனம் இலகுவானது.

பாலமணி பல பத்திரங்களை சொல்லி விட்டு வைத்து விட்டார்.

அவரது சோகம் இப்போது இன்னும் தெளிவாக புரிய, அதற்கு காரணமானவனை எதாவது செய்யும் வேகம் வந்தது.

குறித்து வைத்திருந்த பைக்கின் எண்ணை எடுத்தவள், தன்னுடைய நண்பனை அழைத்தாள். அவன் தான் ஐபி அட்ரஸை கண்டு பிடித்து கொடுத்தவன்.

“என்ன கண்மணி.. உன் ஆள பார்த்தியா?”

“பார்த்தேன். ஆனா ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறியிருக்கான்.”

“அது சரி. ஏன் ஓடுனானாம்?”

“அது தெரியல.‌ நான் பேசல. அதுக்கு முன்னாடியே ஓடிட்டான்.”

“இப்ப என்ன பண்ண போற?”

“அவன் போன பைக் நம்பர் நோட் பண்ணேன். ஆனா அது அவன் பைக் இல்லனு நினைக்கிறேன். அவன் கூட இருந்தவன் தான் ஓட்டுனான்”

“நம்பர சொல்லு”

கண்மணி சொல்ல, “அது அந்த ஸ்டேட்ல ரிஜிஸ்டர் ஆன நம்பர்ல? அதோட இன்ஃபர்மேஷன் தேடுறது கொஞ்சம் கஷ்டம் தான்” என்றான்.

“இப்ப என்ன பண்ணலாம்?”

“எனக்கு ஒரு ஃப்ரண்ட் இருக்கா. பிரஃபஷனல் ஹேக்கர். அவள வேணா காண்டாக்ட் பண்ணுறேன். ஆனா நிறைய பணம் கேட்பா”

“பரவாயில்ல. அவனோட டீடைல்ஸ் மட்டும் வேணும்”

“ஓகே டன். நான் பேசிட்டு அவ இன்ஃபர்மேஷன் அனுப்புறேன்”

அவன் வைத்து விட, கண்மணி தன் வேலையை பார்த்தாள்.

இரவு உணவு முடிந்து அறைக்கு வரும் போது, அவளது நண்பனிடமிருந்து விவரங்கள் வந்தது. அதிலிருந்த எண்ணுக்கு உடனே அழைத்தாள்.

“ஹாய் ஐம் ரியா” என்று அவள் சொல்ல, கண்மணி தன்னை அறிமுகம் செய்து கொண்டு விசயத்தை சொன்னாள்.

“பண்ணிடலாம். பட் நிறைய செலவு ஆகும்”

“எவ்வளவுனு சொல்லுங்க. அனுப்புறேன்”

“வேலைய முடிச்சுட்டு சொல்லுறேன். அனுப்பிடுங்க”

“எப்ப முடியும்?”

“ரெண்டு நாள் ஆகலாம்”

“ஓகே”

அவள் வைத்து விட, கண்மணி இரண்டு நாள் காத்திருக்க முடிவு செய்தாள்.

*.*.*.*.*.*.*.*.

இரவு நேரம் அமர் வழக்கம் போல் வண்டியை எடுக்க வந்திருக்க, அவனை தேடி வந்தார் க்ரூணால்.

“சர்மா சாப்.. என்ன இந்த பக்கம்?”

“உன் கிட்ட ஒரு விசயம் சொல்லனும். உள்ள வா” என்றவர் முன்னால் நடக்க, அமர் அவர் பின்னால் சென்றான்.

“என்னாச்சு?”

“நம்ம விசயம் எப்படியோ லீக் ஆகிடுச்சு. நேத்து அனுப்புன சரக்கை அந்த ராயுடு ஆளுங்க மடக்கியிருக்காங்க”

“என்னது? எப்படி லீக் ஆச்சு? யாரு பண்ணது?”

“தெரியல. அத இனிமே விசாரிக்கலாம். ஆனா இப்ப நீ போய் அந்த சரக்க மீட்கனும்”

அமர் ஒரு நொடி யோசித்து விட்டு, “எங்க வச்சுருக்காங்கனு தெரியுமா?” என்று கேட்டான்.

“அதையும் நீ தான் கண்டு பிடிக்கனும்”

உதட்டை குவித்து மூச்சை வெளி விட்டவன், “ஓகே பார்த்துக்கிறேன்.” என்று விட்டு திரும்பினான்.

“அமர்.. நீ அங்க போறது யாருக்கும் தெரிய வேணாம்”

“ஏன்?”

“வேணாம்”

தலையாட்டி விட்டு வெளியே வந்தவன் யோசித்தபடி நடக்க, மணீஷ் வந்து சேர்ந்தான்.

“அமர்.. எங்க கிளம்பிட்ட?”

“வீட்டுக்கு தான். காலையிலயே கடன அடைச்சுட்டேன். அதுனால நேரா போய் தூங்க வேண்டியது தான்” என்றவன் உடலை வளைத்து முறுக்க, மணீஷ் சிரித்தபடி தலையாட்டி விட்டு, வேறு பக்கம் சென்று விட்டான்.

அவன் சென்றதும் விறுவிறுவென கிளம்பியவன், மறைந்து கிடந்த பைக்கை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான்.

பறவைகளும் பட்சிகளும் உறங்கிக் கொண்டிருக்க, பூச்சிகள் மட்டும் இருளின் பயத்தில் சத்தமெழுப்பிக் கொண்டிருந்தது. எங்கும் சூழ்ந்த இருளில், ஊர்ந்து சத்தமில்லாமல் அந்த காட்டுக்குள் நுழைந்தான் அமர்.

இருள் நன்றாக பழகி இருக்க, வானில் தெரிந்த நிலாவும் அவ்வப்போது வெளிச்சத்தை காட்டிக் கொண்டிருந்தது.

நிலா மறையும் நேரம் இருளில் மறைந்து நடந்து, நிலா தெரியும் நேரம் சுற்றியும் வேடிக்கை பார்த்து, அவதானித்த படி பத்து நிமிடமாக அந்த காட்டை நன்றாக அலசி முடித்தான்.

காட்டின் ஒரு மூலையில் ஆட்கள் நடமாட்டம் தெரிந்தது.

‘தெரியும். இங்க தான் வச்சுருப்பான்னு’ என்று நினைத்தவன், ஒரு மரம் மீது நொடிப்பொழுதில் ஏறி உட்சத்தில் அமர்ந்து நோட்டம் விட்டான்.

காட்டுக்கு நடுவே இருந்த இடத்தில், கண்டெய்னர் இருந்தது. அதை எந்த வழியாக எடுத்து வந்திருப்பார்கள்? என்று தேடினான். ஏனென்றால் திரும்பி அதே வழியில் தான் அவனும் எடுத்துச் செல்ல வேண்டும்.

வழியை கண்ணால் அலசி முடித்தவன், கூட்டத்தை பார்க்க அதில் ஐந்து பேர் இருந்தனர்.

ஒருவன் இங்கும் அங்கும் பார்த்தபடி எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருந்தான். மற்றவர்களிடம் அவ்வளவு எச்சரிக்கை இல்லை. சாதாரணமாக நின்று கதை பேசிக் கொண்டிருந்தனர்.

“எனக்கு பசிக்குது” என்றான் ஒருவன்.

“எனக்கும் தான்”

“பாஸ் சாப்பாடு அனுப்பவே இல்ல”

“சாப்பிட்டா தூங்கிடுவோம்னு அனுப்பல”

“சாப்பிடலனா மயங்கி விழுந்துடுவோம்டா”

“எனக்கு ரொம்ப பசிக்குது”

நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்க, நடந்து கொண்டிருந்தவன் அவர்களை திரும்பிப்பார்த்து முறைத்தான்.

“நீங்க நல்லா சாப்பிட்டு தூங்கி எழுறதுக்கு இங்க வரல. இத பத்திரமா பார்த்துக்க தான் வந்துருக்கீங்க” என்று கோபமாக சொல்ல, “நட்ட நடு காட்டுல வந்து நிறுத்தியிருக்கோம். காட்ட தாண்டி இங்க வந்து, இத கையிலயா தூக்கிட்டு போக முடியும்? அப்படி ஓட்டிட்டு கூட போக கூட முடியாம தான, டயர பஞ்சர் பண்ணி வச்சுருக்கோம். வந்தா பார்த்துக்கலாம். இப்ப பசிக்குது. அதுக்கு வழி சொல்லு”

“நான் வரும் போது அத்திப்பழம் மரம் பார்த்தேன். அத போய் சாப்பிடலாம்” என்று ஒருவன் சொல்ல, மற்றவன் உடனே கிளம்பினான்.

“நாங்க மூணு பேரும் போய் உங்களுக்கும் பறிச்சுட்டு வர்ரோம்” என்று கூறி விட்டு அவர்கள் சென்று விட, மற்ற இருவரும் காவலுக்கு நின்றனர்.

இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்காது. ஆனால் டயர் பஞ்சர். என்ன செய்வது என்று யோசித்தான்.

அடித்து சண்டை போட்டால், மற்றவர்களும் வந்து விடுவார்கள். இருவரையும் கட்டிப்போட்டு தான் டயரை சரி செய்ய வேண்டும்.

எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்த மயக்க மருந்தை எடுத்து, துணியில் ஊற்றியவன் அதை எடுத்துக் கொண்டு மெல்ல அவர்களை நெருங்கினான்.

நடந்து கொண்டிருந்தவன் பின்னால் பாய்ந்து, அவன் மூக்கில் வைத்து அழுத்த, இரண்டு நிமிடத்தில் மயங்கிச் சரிந்தான்.

அடுத்த ஆள் வாகனத்திற்குள் அமர்ந்திருந்தான். கொட்டாவி விட்டுக் கொண்டு அவன் அரை தூக்கத்தில் இருக்க, அவனை மடக்குவது இலகுவாகவே இருந்தது.

இருவரையும் ஒன்றாய் கயிற்றில் கட்டி, மயக்க மருந்து தெளித்த துணியை அவர்களது வாயில் அடைத்து வைத்தான். முழிப்பு வந்து விட்டாலும் கத்தி விடக்கூடாதே.

டயரை தட்டிப்பார்த்தான். அப்படி ஒன்றும் பெரிய பஞ்சர் இல்லை. இங்கு கொண்டு வரும் போது பஞ்சராகி இருக்க வேண்டும். சமாளித்து விடலாம் என்று தோன்ற, உடனே வண்டியில் ஏறி அமர்ந்து கிளம்பினான்.

விளக்கு போடாமல், சத்தமில்லாமல் வண்டியை ஓட்டி வெளியே எடுத்து வரும் முன், அரை மணி நேரமாகி விட்டது.

அவன் சாலைக்கு வரவும், பின் பக்கம் அந்த மூன்று பேர் ஓடி வரவும் சரியாக இருந்தது.

இனி வண்டியை அப்படியே கொண்டு செல்ல முடியாது என்பதால், வண்டியை நிறுத்தி சண்டைக்கு தயாரானான்.

அடுத்த பத்து நிமிடங்கள் அடிதடியில் கடந்தது. பல காயங்களுடன் மூவரையும் அடித்துப் போட்டவன், அவனது கைபேசியை எடுத்து விவரத்தை தெரிவித்து விட்டு, அப்படியே அமர்ந்து விட்டான்.

க்ரூணால் ஆட்களை அனுப்பி இருக்க, அவர்கள் மிச்சத்தை கவனித்தனர்.

தொடரும்.

Leave a Reply