அத்தியாயம் 6

Loading

கண்மணியின் நாட்கள் அமைதியாக சென்றது. வேலை முடிந்தால் வீடு. வீடு வந்தால் பெற்றோரிடம் பேசி விட்டு, தன் வேலையை பார்ப்பது என்று இரண்டு நாட்களை கடத்தியிருக்க, ரியாவிடமிருந்து செய்தி வந்தது.

அந்த பைக்கின் சொந்தக்காரனின் விவரங்கள் கிடைத்து விட்டதாக.

பரபரப்புடன் அவள் அனுப்பிய விவரங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்தாள். பைக் வேறு ஒருவன் பெயரில் இருந்தது. அவனது வீட்டு முகவரியிலிருந்து கைபேசி எண் வரை எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்திருந்தாள் ரியா.

உடனே ரியாவை அழைத்தாள் கண்மணி.

“இவன் நிச்சயமா அவனோட ஃப்ரண்டா தான் இருப்பான். அவன் ஃபோன ஹேக் பண்ண முடியுமா?”

“பண்ணலாம். அதுக்கு ஒரு லின்க் அனுப்பி விட்டா வேலை முடிஞ்சது”

“அவனோட காண்டாக்ட் லிஸ்ட் மட்டும் எடுத்துக் கொடுங்க போதும்.”

“ஓகே” என்றவள், அடுத்த ஒரு மணி நேரத்தில் எடுத்துக் கொடுத்திருந்தாள்.

அதில் பதிந்துள்ள படங்களை பார்த்தவள், அமுதன் படத்தில் அமர் என்ற பெயரோடு எண் பதிவாகி இருந்தது.

“இவன் தான். இவன தான் தேடுறேன்”

“லவ்வரா? இல்ல எதையாச்சும் திருட்டிட்டு ஓடிட்டானா?”

“ரெண்டும் இல்ல. என்னை மணமேடையில நிப்பாட்டிட்டு ஓடிட்டான். இவன் அட்ரஸ் தான் வேணும். முடியுமா? மொத்தமா அமௌண்ட் சொல்லிடுங்க. அனுப்பிடுறேன்”

“இவனும் லின்க் தொட்டா கிடைச்சுடும். ட்ரை பண்ணலாம்” என்ற ரியா லின்க்கை அனுப்பி விட்டு காத்திருந்தாள்.

கண்மணி அவளுக்கான தொகையை அனுப்பி விட்டு, அமரின் எண்ணை பதிவு செய்து கொண்டாள்.

படுத்துக் கொண்டே அமரின் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாள்.

அது சமீபமாக எடுத்த புகைப்படம் அல்ல. பலவருடங்களுக்கு முன்பு எடுத்திருக்க வேண்டும் என்று பார்த்ததுமே புரிந்தது.

‘இவன் யாரு? இவன் அமுதன் தானா? இல்ல தப்பா நினைக்கிறோமா?’ என்று வழக்கமான கேள்விகளோடு அவள் படுத்திருக்க, நள்ளிரவு அவளது கைபேசிக்கு ஒரு புகைப்படம் வந்தது.

ரியா தான் அனுப்பி இருந்தாள். அமரின் நண்பனின் கைபேசியில் இருந்து எடுத்த படம். இருவரும் எதோ ஒரு சலூனில் இருக்கும் போது எடுத்த படம்.

அந்த கடையின் பெயரும் தெளிவாக இருந்தது.

“இந்த இடத்துல தேடிப்பாரு” என்ற ரியாவின் அறிவுரையை உடனே ஏற்றுக் கொண்டாள்.

அடுத்த நான்கு நாட்களுக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறது. அதனால் அதை பார்த்து விட்டுத்தான் இவனை தேட வேண்டும் என்று முடிவு செய்து, படுத்து உறங்கி விட்டாள்.

..........

அமர் இரண்டு நாட்களாக வேலையை பார்க்காமல் வீட்டில் இருந்தான். அடி வாங்கிய காயம் ஆறும் வரை, வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

ஓரளவு சரியானதும் தான் மீண்டும் கிளம்பினான்.

அவன் வேலை செய்வது ஒரு கடத்தல் கும்பலிடம். ஆனால் அவனது வேலை வாகனங்களை ஓட்டுவது தான். கார், லாரி, டெம்போ, கண்டெய்னர் லாரி என எதுவாக இருந்தாலும் சர்வசாதாரணமாக ஓட்டக்கூடியவன்.

க்ரூணால் தான் அவனை அந்த கூட்டதில் வேலையில் சேர்த்து விட்டார். அவருக்கு அமரை ரொம்பவுமே பிடிக்கும். புத்திசாலி. பார்வைக்கும் அழகானவன்.

ஆனால் சற்றே ஜாலிப்பேர்வழி. குடிக்க மாட்டான். சிகரெட் தவிர வேறு எதுவும் பெரிதாய் கெட்டபழக்கம் இல்லை. அவனை தன் மகளுக்கு கட்டி வைக்க க்ரூணாலுக்கு மிகவும் ஆசை. ஆனால் அவன் முடியாது என்று விட்டான்.

காயங்கள் ஆறி வேலைக்குத் திரும்பியவனை, க்ருணால் சந்தோசமாக வரவேற்றார்.

“நீ எடுத்துட்டு வந்துட்ட.. அந்த ராயுடு அங்க கொதிச்சுப்போய் இருக்கான். எப்படி விட்டீங்கனு எல்லாரையும் போட்டு காய்ச்சிட்டு இருக்கானாம்” என்றவர் முகத்தில், சிரிப்பு தான் இருந்தது.

“நம்ம பொருள தூக்குனா விட்டுருவோமா?” என்று கேட்டு அமர் காலரை தூக்க, அப்போது மணீஷ் வந்தான்.

“அமர் இங்கயா இருக்க?”

“மணீஷ்.. நீங்க என்ன இங்க?”

“நீ வரலனு நான் தான் ரெண்டு நாளா வந்தேன். இதென்ன காயம்?”

“அது.. ஒரு அடிதடி.. அத விடுங்க. வேலை முடிஞ்சதுனா ஒன்னா கிளம்புவோம்”

“ம்ம்..” என்றவன் க்ரூணாலை ஒரு முறை பார்த்து விட்டு வெளியேறினான்.

அமரும் விடை பெற்று வெளியே வந்தான்.

“சர்மா சாப் கூட ரொம்ப பழக்கமோ?” என்று மணீஷ் கேட்க, “அப்படினு சொல்ல முடியாது. ஏன்?” என்றான்.

“சிரிச்சுட்டு இருந்தியேனு கேட்டேன்”

“சும்மா எதோ பேசுனோம்.”

“ரெண்டு நாளா ஏன் வரல?”

“இந்த காயத்தோட வெளிய வர பிடிக்கல. நம்ம பர்ஸ்னாலிட்டிக்கு டேமேஜ் ஆகிடும்ல?”

மணீஷ் அவனை மேலும் கீழும் பார்த்தான்.

“பர்ஸ்னாலிட்டிய வச்சு என்ன பண்ண போற?”

“என்ன பண்ணுவனா? மாதுரி மணிஷா ஊர்மிளா மாதிரி அழகான பொண்ணுங்கள மடக்கனும்ல?”

“அந்த மூணு பேருமே இப்ப வயசானவங்க.. ஆண்ட்டிஸ் பின்னாடியா அலையிற?”

“மணீஷ்…” என்று பல்லைக்கடித்தவன், “என் அழகிங்கள ஆண்ட்டினு சொல்லாதீங்க. அப்புறம் ஃப்ரண்டுனு பார்க்க மாட்டேன்” என்றான்.

“இல்லனா மட்டும் நீ என்னை ஃப்ரண்டா நினைச்சுட்டா இருக்க?”

அமர் அதை கவனிக்காதது போல், யாரோ ஒருவனை அழைத்தபடி அங்கிருந்து வேறு பக்கம் சென்றான்.

..........

அடுத்த நாள் காலை கண்மணி வேலையில் இருக்க, வேந்தன் வந்து நின்றான்.

“குட் மார்னிங்” என்று புன்னகையுடன் வந்தவன், “இந்தா” என்று ஒரு டப்பாவை வைத்தான்.

“என்ன இது?”

“ஊர்ல இருந்து அம்மா வந்தாங்க. எப்பவும் எதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொண்டு வருவாங்க. இது குழலாப்பாம்னு சொல்லுவோம். சாப்பிட்டு பாரு”

“இப்படி ஒன்னு இருக்கா என்ன?” என்று கேட்டபடி எடுத்து சாப்பிட்டவளுக்கு, மிகவும் பிடித்து விட்டது.

“சூப்பரா மொறு மொறுனு இருக்கு”

“வச்சுக்கோ. உனக்கு தான்.”

“மத்தவங்களுக்கு கொடுத்தீங்களா?”

“ம்ம். எப்பவும் சேர் பண்ணுவேன்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான்.

கண்மணி புன்னகையுடன் டப்பாவை வைத்துவிட்டு வேலையை பார்த்தாள்.

மாலை வேலை முடிந்ததும், உடனே பாலமணியை அழைத்தாள்.

“ம்மா.. நீங்க ஏன் இங்க வந்துட்டு போக்கூடாது? அங்கயே இருந்து டென்சனா தான இருக்கும்?” என்று அழைத்தாள்.

அவர்களது முகத்தை பார்க்காமல், பேச்சை கேட்டாமல் கிளம்பி வந்தவள், அவர்களை அழைக்கும் அளவு மாறி விட்டாள்.

“அங்க போனதும் எங்கள கண்டுக்க மாட்டன்னு நினைச்சேன். தூரமா இருக்கும் போது தான் அருமை தெரியுதா உனக்கு?” என்று கேட்டார் பாலமணி.

கண்மணிக்கு வேந்தன் நினைவு வந்தது. அவன் தானே பெற்றோர்களை பற்றி நினைக்க வைத்துக் கொண்டே இருக்கிறான்.

“அப்படியும் சொல்லலாம்”

“அப்ப வேலைய விட்டுட்டு இங்க வா. தரகர் கூட…”

“ம்மா.. போதும். எனக்கு இந்த வேலை பிடிச்சுருக்கு. இப்போதைக்கு இத விட மாட்டேன். நீங்க இங்க வாங்க”

“வேலை இங்கயே கூட பார்க்கலாம்ல?”

“எனக்கு இதான் பிடிச்சுருக்கு”

“சரி விடு. அங்க வந்து பேசிக்கிறேன்” என்றவர், உடனே மகளை பார்க்கக் கிளம்பினார்.

ராஜகுமாரும் பாலமணியும் அந்த வார இறுதியில், பலவித பலகாரங்களோடு சென்று சேர, கண்மணி வந்து அழைத்துச் சென்றாள்.

பயணத்தை பற்றிப் பேசியபடி டாக்ஸியில் செல்ல, சாலை ஓரம் கூட்டமாக இருந்தது.

கண்மணி கூட்டத்தை திரும்பிப் பார்க்க, அங்கு அமர் இருந்தான். இன்று அடிதடி இல்லாமல், எதோ பஞ்சாயத்து மட்டும் செய்து கொண்டிருந்தான். அதையும் கூட சிலர் வேடிக்கை பார்த்ததால் தான் அந்த கூட்டம்.

கண்மணி அவனை பார்த்து விட்டு திரும்பிக் கொள்ள, மற்ற இருவரும் கவனிக்கவில்லை.

வீடு சென்று சேர்ந்தனர். பெங்காலி பெண் அவர்களிடம் பேசி விட்டு வேலைக்கு கிளம்பி விட்டாள். மூவர் மட்டுமே வீட்டில் இருக்க, கண்மணியின் நலம் விசாரித்து அவளுக்கென கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விட்டு, பேசிக் கொண்டிருந்தனர்.

“இப்படி தனியா வந்து இருக்கனுமாமா?” என்று ராஜகுமார் கேட்க, “கொஞ்ச நாள் போகட்டும்பா” என்றாள்.

“கல்யாணம் முடிஞ்சுருந்தா புருஷன் வீட்டுக்கு போயிருப்பா. இப்ப இங்க தனியா உட்கார்ந்துருக்கா.” என்று சலித்த பாலமணி, “வயசு போகுது கண்மணி. அந்த அமுதன் போனா போறான். நாம வேற பையன பார்க்கலாம். மேடையில வந்து கல்யாணம் நின்னா, அடுத்து அந்த பொண்ணுக்கு கல்யாணமே நடக்காதுனு சொல்லுறதெல்லாம் அந்த காலம். இப்ப எத்தனையோ கல்யாணம் நிச்சயமாகி கேன்சல் ஆகிட்டு இருக்கு. நாங்களும் இந்த தடவ நல்ல பையனாவே பார்க்குறோம்” என்று நயமாக பேசினார்.

முதலில் என்றால் கடுப்போடு பதில் சொல்லியிருப்பாள். ஆனால் வேந்தன் அவர்களது நிலைமையை சொன்ன பிறகு, அப்படி எடுத்தெரிந்து பேசத் தோன்றவில்லை.

“நடந்தத எல்லாரும் மறந்து போகட்டும்மா. யோசிக்கும் போது, அதெல்லாம் ஒரு விசயமே இல்லனு தோனுற வரை வெயிட் பண்ணுங்க. நானும் ரெடியாகிடுவேன்” என்றவள் மனதில் அமரின் தோற்றம் வந்தது.

‘அவன் அமுதனாவே இருந்தாலும், அவன கல்யாணம் பண்ணுறது சந்தேகம் தான்’ என்று நினைத்துக் கொண்டாள்.

“தூரமா வந்தப்புறம் ரொம்ப மாறிட்ட கண்மணி. இல்லனா எவன் பேசுனா எனக்கென்னனு கேட்ப. இப்ப எல்லாரும் மறந்து போகட்டும்னு பேசுற?” என்று பாலமணி ஆச்சரியப்பட, “எல்லாம் எங்க எம்டி சொல்லிக் கொடுத்தது தான்” என்றாள்.

“எம்டி வேலைய சொல்லிக் கொடுத்தாரா? இல்ல இப்படி பேச சொல்லிக் கொடுத்தாரா?”

“அவர் தமிழ்நாட்டு ஆளுமா. நானும் தமிழ்னு தெரிஞ்சதும் நல்லா பேசுறார். ஒரு நாள் என் கல்யாணம் நின்னு போச்சுனு சொன்னேன். அப்ப அவர் நிறைய சொன்னார். அதுனால பொறுமையா இருக்கது தப்பில்லனு தோனுச்சு.”

“எம்.டினா? வயசானவரா?”

“இல்ல இல்ல.. முப்பது இல்லனா முப்பத்திரண்டு இருக்கும்.”

“கல்யாணமாகிடுச்சா?”

அன்னையை மேலும் கீழும் பார்த்தவள், “இல்ல” என்றாள்.

“நல்ல சம்பளமா?”

“ஏன் நீங்க பொண்ணு கொடுக்க போறீங்களா?”

“உனக்கு பிடிச்சுருந்தா சொல்லு. நாங்க பேசுறோம்”

“எம்புட்டு அவசரம் உங்களுக்கு? நான் தான் பொறுங்கனு சொல்லுறேன்ல? பொறுமையே பெருமை மாதாஜி. இப்ப நீங்க கொண்டு வந்த ஸ்னாக்ஸ்ல ரெண்ட எடுங்க. சாப்பிட்டு வெளிய போகலாம்.” என்ற அவரை திசை திருப்பி விட்டாள்.

ஆனால் பாலமணிக்கு யாழ்வேந்தன் மனதில் தங்கி விட்டான். மீண்டும் அவரை பற்றி விசாரித்தால், மகள் கோபித்துக் கொள்வாள் என்பதால் அமைதியாக இருந்தார்.

அடுத்த நாள் காலை அவர்கள் கிளம்பி விடுவர். இரவு வெளியே சென்று வாங்கி வந்த அனைத்தும், சமைக்கும் பக்குவத்திற்கு மாற்றப்பட்டு பத்திரபடுத்தப்பட்டது.

எதை எப்படி சமைக்க வேண்டும் என்று வரிசையாக பாலமணி கூற, கண்மணி தலையாட்டிக் கொண்டாள்.

“அந்த பொண்ணு எப்ப வரும்?”

“நைட் ரெண்டு மணிக்கு மேல ஆகும்.”

“நடு ராத்திரி பத்திரமா வந்துடுமா?”

“வந்துடும். பழகுன ஏரியா தான?”

ஆனால் பாலமணி தான் தாயாயிற்றே. மகளில்லாவிட்டாலும் சிறு பெண் இரவு வருவதை நினைத்து பயந்து கொண்டே இருந்தார். ஆனால் அவள் நல்லபடியாக வந்து விட்டாள்‌.

காலையில் கண்மணி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க, அவளது பெற்றோரும் கிளம்பினர்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவளிடம், “உன் எம்டி பேரென்ன?” என்று கேட்டார்.

கண்மணி அவரை முறைத்துப் பார்த்தாள்.

“தெரிஞ்சுக்க தான் கேட்டேன்”

“நான் இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனி ஸ்டாஃப் பத்தி விசாரிக்கவே இல்லையே?”

“அங்க உன் ஃப்ரண்ட்ஸ் நிறைய பேரு இருந்தாங்க. இங்க அப்படியா? சொல்லு”

“வேந்தன்” என்று விட்டு எழுந்து கொண்டாள்.

ஒரு பக்கம் பெற்றோர்கள் கிளம்ப, மறுபக்கம் கண்மணி கிளம்பினாள்.

அலுவலகம் நோக்கி கண்மணி இருந்த டாக்சி நகர்ந்து கொண்டிருக்க, அதில் வந்து விழுந்தான் ஒருவன்.

விழுந்தவனை பார்த்து, டாக்ஸி டிரைவர் பிரேக்கை அழுத்தி விட்டார். கண்ணாடியை திறந்து அவன்னை திட்ட போகும் முன், விழுந்தவன் எழுந்து ஓட ஆரம்பித்தான்.

அன்று அமரோடு கண்மணி யாரை பார்த்தாளோ, அவன் ஓடியவனை துரத்திக் கொண்டு சென்றான். அவனை பார்த்ததும் டாக்ஸி டிரைவர் உடனே பம்மி விட்டார்.

“இவங்க யாரு? ஏன் இப்படி ஓடுறாங்க?”

“ஊருக்கு புதுசா?”

“ரீசண்ட்டா இவங்கள ரெண்டு இடத்துல பார்த்துட்டேன் அதான் கேட்டேன். ரவுடிங்களா?”

“ரவுடிங்களா? இல்ல இல்ல இவங்க பாபு பையா ஆளுங்க”

“யாரு பாபு பையா?”

“பஜார்ல இருக்க நூறு கடைக்கு சொந்தக்காரர். கடனும் கொடுப்பார். ஆனா அவரோட முக்கியமான தொழிலே கடத்தல்னு தான் பேசிக்கிறாங்க”

“பார்ரா! அப்படி என்ன கடத்துவாங்க?”

“தெரியல சொல்லிக்கிறாங்க”

“ஆனா அதுக்காக இப்படி ஒருத்தர ரோட்டுல போட்டு அடிக்கலாமா? பாவமில்ல?”

“போலீஸே அவங்க பக்கம் தான்.”

“அவ்வளவு டெரர்ரா அவரு?”

“அதுவும் எல்லாரும் சொல்லுறது தான். ஆனா இது வரை யாருமே பாபு பாய பார்த்ததே இல்ல”

“வாட்? பார்த்ததே இல்லையா?”

“பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி எதோ பெரிய அட்டாக் நடந்துச்சாம். அதுல தப்பிச்சப்புறம், பாய் யாரையும் பார்க்குறதே இல்லையாம்”

“நீங்க பார்த்துருக்கீங்களா?”

“நான் பத்து வருசமா தான் இங்க இருக்கேன்.”

“அவரு உயிருக்கு நிறைய ஆபத்தோ?”

“அப்படி தான் சொல்லிக்கிறாங்க” என்றவன் அவளது அலுவலகம் முன்னாள் வந்து நிறுத்தினான்.

பணத்தை கொடுத்து விட்டு கண்மணி இறங்கிக் கொண்டாள்.

‘அப்போ இந்த பாபு கிட்ட அமுதன் வேலை செய்யுறானா? இல்ல அவனோட இவனுக்கு எதாவது சம்பந்தம் இருக்குமா?’

கேள்வியோடு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

தொடரும்.

Leave a Reply