அத்தியாயம் 8

Loading

அமுதனின் முகவரியை தேடிப்போய் நின்றாள் கண்மணி. அப்பார்ட்மெண்ட்டாக வீடுகள் இருக்க, எந்த வீட்டில் அவன் இருப்பான் என்று தெரியாது. இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.

முதல் முகவரியாக சலூன் கடை இருந்த பகுதியை தான் தேர்வு செய்தாள். அங்கு தான் அமுதன் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

முகவரியை கையில் எடுத்துக் கொண்டு, உள்ளே நடந்தாள். விடுமுறை நாள் என்பதால் ஆட்கள் நிறையவே தென்பட்டனர்.

ஒருவர் ஓரமாக தன் காரை கழுவிக்கொண்டிருந்தார்.

‘இவரு இங்க தங்கியிருக்க ஆளா தான் இருக்கனும்’ என்று முடிவு செய்தவள், அவரிடம் சென்று அமுதனின் படத்தை காட்டினாள்.

“இவர தெரியுமா?” என்று கேட்க, “அமர்.. என் வீட்டு மேல தான் இருக்கான். நீ யாரு?” என்று கேட்டார்.

‘அமரா!’ என்று ஆச்சரியப்பட்டவள், “இவர தேடி தான் வந்தேன். எந்த வீடுனு சொல்லுறீங்களா?” என்று கேட்டாள்.

“நீ யாருனு சொல்லலயே?”

“நான்.. என் கிட்ட கடன் வாங்கியிருக்கார். திருப்பி கேட்க வந்தேன்” என்று விட்டாள்.

நண்பன் தெரிந்தவன் என்றால், அவனது வீட்டை தெரியாதா? என்ற கேள்வி வரும். அதனால் சம்பந்தமில்லாத ஒன்றை சொல்லி வைத்தாள்.

“உன் கிட்டயும் வாங்கிட்டானா? அவனுக்கு இதே வேலை தான். போன வாரம் தான் சம்பளம் வந்துச்சுனு என் கடன கொடுத்தான். உனக்கு தரலயா?”

இதுவும் அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அமுதன் அதாவது அமர் ஒரு ரௌடி. கடத்தல் கும்பலில் வேலை செய்கிறான். ஊரெல்லாம் கடன் வாங்கியிருக்கிறான். இன்னும் என்ன?

“இப்ப எனக்கு பணம் வேணும். வீடு எதுனு சொல்லுறீங்களா?”

கண்மணி எதையும் சொல்லாமல், பணம் கேட்க வந்தவள் போலவே விசாரித்தாள்.

“அவன் வீட்டுல இல்லையேமா.. எப்ப வருவான் போவான்னு சரியா சொல்ல முடியாது. எப்பவாவது தான் நானே அவன பார்ப்பேன். வெளிய போனா நடுராத்திரி தான் வருவான்”

“எதாவது ஒரு நேரம் வந்து பார்க்க முடியாதா?”

“நீ அவனுக்கு போன் பண்ணி பேசு”

“போன் எடுக்கல. அதான் தேடி வந்தேன்”

“எடுக்க மாட்டான் தான். வேணும்னா நாளைக்கு காலையில பதினோரு மணிக்கு மேல வா. அப்ப இருந்தாலும் இருப்பான்”

நாளை அவளுக்கு வேலை இருக்கிறது. வர முடியாது.

“வீடு எங்கனு சொல்லுங்க. அப்புறமா வந்து பார்த்துக்கிறேன்”

அவர் வீட்டை கீழிருந்தே காட்ட, பார்த்து விட்டுக் கிளம்பினாள்.

“நில்லுமா.. உன் பேரென்னனு சொல்லு. அவன பார்த்தா சொல்லி வைக்கிறேன்”

சொந்த பெயரை சொல்லாமல், “யாழினி” என்றாள்.

அதோடு கிளம்பியும் விட்டாள்.

*.*.*.*.*.*.

அமர் எரிந்து கொண்டிருந்த ராகேஷின் உடலை பார்த்தபடி நின்றிருந்தான். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட ராகேஷை போஸ்ட்மார்டம் செய்ய நினைக்க, பெரிய இடத்திலிருந்து உத்தரவு வந்தது. இதை அப்படியே விட வேண்டும் என்று.

அதனால் உடல் உடனே இறுதிச்சடங்குக்கு தாயாரானது. அமரின் குடும்பத்தில் இருந்த அவனது ஒரே ஒரு மாமா வந்தார். அவர் தான் கொல்லியும் வைத்து விட்டுச் சென்றார்.

க்ருணால் சர்மா ராகேஷின் உடலை மாமாவிடம் ஒப்படைத்ததோடு அகன்று விட்டார். மற்றவர்களும் தான். அமர் மட்டும் அங்கேயே நின்றிருந்தான்.

பிறகு கிளம்பியவன், நள்ளிரவு வீடு சென்று சேர்ந்தான்.

*.*.*.*.*.*.*.*.

“ப்ச்ச்” என்று சலித்துக் கொண்டான் அவன். காவல்துறையின் உடையில் மிடுக்கோடு இருந்தவன்.

சற்று முன்பு அவ்வளவு திட்டு வாங்கி இருந்தான். அதில் வந்த எரிச்சல் இன்னும் அவன் முகத்தில் மிச்சமிருந்தது.

“விடுங்க சார். நம்ம மேலையும் தப்பிருக்கு”

“அதான் நான் இவ்வளவு திட்டையும் வாங்கிட்டேன். சிலீண்டர் வெடிச்ச மாதிரி செட் பண்ண சொல்லி அனுப்புனா, சிலீண்டர் இல்லனு வாங்கிட்டு போய் செட் பண்ணிருக்கானுங்க. சரியான லூசுங்கள வச்சுட்டு..”

“நமக்கு என்ன தெரியும்? வந்த ஆர்டர பாஸ் மட்டும் தான பண்ணோம்?”

“அதுக்கு தான் பிடிச்சு கிழிச்சுட்டாரு. மனுசன் வாய்ல வர்ர வார்த்தை எல்லாம் காதுல கேட்க முடியல.”

“அந்த பாபு யாருனு தெரியுற வரை அவர் டென்ஷனா தான் சுத்துவார். அப்புறம் கூலாகிடுவார்”

“என்னது? புரியல?”

“இதான அவர் கூட நீங்க ஜாயின் பண்ண முதல் மிஷன். அதான் இப்படி ஃபீல் பண்ணுறீங்க. நான் ஏற்கனவே அவர் கூட வேலை பார்த்துருக்கேன். இப்போதைக்கு இப்படித்தான் இருப்பார். அப்புறம் சரியாகிடுவார்”

“என்னவோ போ.” என்றவன் தன் வேலையை பார்த்தான்.

அவர்களுக்கு வேலை கொடுத்தவன், தன்னுடைய அடுத்த டார்கெட்டிற்கு ஸ்கெட்ச் போட்டு வைக்க ஆரம்பித்திருந்தான்.

*.*.*.*.*.*.*.*.

கண்மணி வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் கடந்து விட்டது. வேலை நிறைய இருந்தாலும், அலுவலக சூழல் அவளுக்கு பிடித்திருந்தது. அதனால் நாட்களும் நன்றாகவே சென்றது.

அவ்வப்போது பாலமணி அழைத்து திருமணத்தை பற்றிப்பேசுவார். இல்லை என்றால் வேந்தனை பற்றி விசாரிப்பார்.

ஆனால் கண்மணி, எதற்கும் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டே இருந்தாள்.

அன்று வேலை முடிந்து கிளம்பியவளை நிறுத்தினான் வேந்தன்.

“இந்த வொர்க்க முடிச்சு கொடுக்கிறியா?”

“எனக்கு வேற வேலை இருக்கே. ரொம்ப முக்கியமா?” என்று கேட்டு வாங்கி பார்த்தாள்.

“நாளைக்கு முடிக்கனும். நானும் இத தான் பார்த்துட்டு இருக்கேன்” என்றதும், “ஓகே பண்ணலாம்” என்றவள் அமர்ந்து வேலையை பார்த்தாள்.

இரவு வரை நீண்ட வேலையை, ஒரு வழியாக முடித்துக் கொண்டு எழுந்தான்.

வேந்தனும் முடித்து விட்டு, “ஹப்பா.. நாளைக்கு அனுப்பிடலாம்” என்று பெருமூச்சு விட்டான்.

“ஓகே நான் கிளம்புறேன்” என்று கண்மணி கிளம்ப, “நான் உன்னை வீட்டுல விடவா?” என்று கேட்டான்.

அவனது பைக்கை நினைத்தவள், “வேண்டாம்.. நான் சாப்பிங் போயிட்டு தான் வீட்டுக்கு போகனும்” என்று விட்டு கிளம்பினாள்.

அதே போல் நடந்தே அருகே இருந்த சூப்பர் மார்கெட் சென்றவள், அலைந்து பொருட்களை வாங்கிக் கொண்டிருக்க, யாரோ அவளை பார்த்து விட்டு திரும்புவது போல் தோன்றியது.

கண்மணி திரும்பிப் பார்க்க யாரும் இல்லை. யோசனையுடன் வேலையை முடித்து விட்டு ஆட்டோவில் கிளம்பினாள்.

அவளது கெட்ட நேரமோ என்னவோ, ஆட்டோ நடு சாலையில் நின்று விட்டது. ஓட்டுநர் அவளை வேறு ஆட்டோ பிடிக்க சொல்லி விட,‌ சலிப்பாய் நடக்க ஆரம்பித்தாள்.

தூரத்தில் பேருந்து நிலையம் போன்று ஒன்று இருக்க அதை நோக்கி நடந்தவள், சட்டென நின்றாள்.

அங்கு அமர் நின்றிருந்தான்.

‘இவன் அமுதனா? இல்ல நம்ம கண்ணுக்கு அப்படித்தெரியுதா?’ என்ற சந்தேகத்தோடு அருகே சென்றாள்.

அவனருகே சென்று நின்று விட்ட போதும், அவளுக்கு பேச தயக்கம் தான். ரௌடி அடையாளம் அவளை தயங்க வைத்தது.

அவள் யோசனையோடு நிற்கும் போதே, ஆட்டோ ஒன்று வந்தது.

அமரும் கண்மணியும் ஒன்றாக கைகாட்டி நிறுத்தினர்.

கண்மணி ஏறப்போக “மேடம் ஜீ.. நான் தான் முதல்ல நிறுத்தினேன்” என்றான் அமர்.

கண்மணி பட்டென திரும்பிப் பார்த்தாள். அப்போது தான் இருவரும் ஒருவரை ஒருவர் நேராக பார்த்தனர்.

கண்மணி அவன் முகத்தை பார்த்தபடி நிற்க, அமர் ஆட்டோவில் ஏறப்போனான்.

சட்டென சுதாரித்தவள், அவனை தள்ளிக் கொண்டு உள்ளே ஏறி அமர்ந்து விட்டாள்.

அமர் அவளை முறைக்க, “எனக்கு அவசரம். நீங்க வேற ஆட்டோ பிடிங்க” என்றவள், ஆட்டோ காரனை கிளப்பச் சொன்னாள்.

அமர் அவளை முறைத்துப் பார்த்து விட்டு, எதுவுமே பேசாமல் நகரப்போக, கண்மணி அவன் கையைப்பிடித்து உள்ளே இழுத்துப் போட்டு விட்டாள்.

உடனே ஆட்டோவும் கிளம்பி விட்டது.

அவள் எதிர்பாராத நேரம் இழுத்ததில், தடுமாறி அவள் மீது விழப்போய் தவறி உள்ளே விழுந்தான். கால் வெளியே கிடக்க, ஆட்டோ கிளம்பியதை பார்த்து அவசரமாக உள்ளே இழுத்துக் கொண்டான்.

“மேடேம் ஜீ.. என்ன இது? என்னை ஏன் உள்ள இழுத்தீங்க?” என்று அமர் கேட்க, “எழுந்து நேரா உட்கார்” என்றாள் தமிழில்.

அமர் புரியாமல், “என்ன?” என்று கேட்டான்.

கண்மணி அவனை நேராக பார்த்தாள். அவனும் அவளை முறைத்தான். ஆனால் எல்லாம் இரண்டு வினாடி தான். அதற்கு மேல் அவளது பார்வையை சந்திக்க முடியாமல், திரும்பி நன்றாக அமர்ந்தான்.

‘மாட்டுனியா?’ என்று நினைத்தவள்,, எதுவும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை.

ஆட்டோ அவள் தங்கியிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றது.

அங்கு சென்று இறங்கியவள் அமரை பார்த்து, “பணத்த நீ கொடு” என்றாள்.

“என் கிட்ட காசு இல்ல”

“இப்ப மட்டும் தமிழ் நல்லா வருதே. நீ தான் கொடுக்கனும்” என்றவள், இறங்கிக் கொண்டாள்.

அமர் இருந்த பக்கம் வந்தவள், “ஓடியா போகுற? பார்த்துக்கிறேன் இரு” என்று விட்டு முணுமுணுத்து விட்டு சென்று விட்டாள்.

அமர் தலையில் கை வைக்க, “எங்க போகனும்?” என்று கேட்டான் ஆட்டோகாரன்.

அவன் வீடு இருக்கும் இடத்தை சொன்னவன், உடனே வேலனை அழைத்திருந்தான்.

“என்னடா?”

“இந்த கண்மணி இங்க என்ன பண்ணுறா?” என்று கேட்க, “கண்மணியா?” என்று அவன் அதிர்ந்தான்.

“அவ தான். இங்க வந்து உட்கார்ந்துருக்கா. இதுல என்னை வேற பார்த்துட்டா”

“தெரியாத மாதிரி நடிச்சுட்டு போக வேண்டியது தான?”

‘அதான் முடியலயே’ என்று நினைத்தவன், “இங்க எதுக்கு வந்தாளாம்?” என்று கேட்டான்.

“தெரியல. நான் அவள கவனிக்கவே இல்லயே”

“என்னமோ பார்த்துட்டா. இனி நானே பார்த்துக்கிறேன்” என்று விட்டு வைத்தான்.

வீடு சென்று சேர்ந்தவன், கண்மணியை எப்படி சமாளிப்பது? என்ற யோசனையுடன் தான் சுற்றினான்.

அவளை இங்கே இப்படி பார்ப்பான் என்று நினைக்கவே இல்லை. அந்த அதிர்ச்சியில் மாட்டிக் கொண்டான். இனி அவள் பார்வையில் படாமல் தப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

அவன் முடிவு செய்து என்ன செய்வது? கண்மணி அடுத்த நாள் காலை ஆறு மணிக்கே, அவனது வீட்டு வாசலில் நின்றாள்.

அழைப்பு மணியை அழுத்திக் கொண்டே இருக்க, தூக்க கலக்கத்தோடு எழுந்து வந்தவன், கதவின் வழியே அவளை பார்த்து அதிர்ந்து போனான்.

அழைப்பு மணியை அழுத்தி ஓய்ந்து போனவள், “இப்ப நீ கதவ திறக்கல.. கத்தி எல்லாரையும் கூப்பிட்டுருவேன்” என்றாள்.

பதறியடித்து கதவை திறந்தவன், அவளை உள்ளே இழுத்து வேகமாக கதவை பூட்டினான்.

“கதவ திறக்க இவ்வளவு நேரமா?” என்று கேட்க, “உஸ்ஸ்..” என்றான் அவன்.

“அமைதியா பேசு.. பக்கத்து வீட்டுக்காரன் வந்துடப்போறான்”

“ஏன்?”

“அது எதுக்கு உனக்கு?”

“அவன் கிட்டயும் கடன்‌ வாங்கி வச்சுருக்கியா?”

“உனக்கெப்புடி தெரியும்?”

“ஆல் டீடைல் ஐ நோ” என்றவள், வீட்டை சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

“இந்த குளிர்ல காலையில எந்திரிச்சு கிளம்பி வந்துருக்க? என் வீடு எப்படி தெரியும் உனக்கு?”

“எல்லாம் தெரியும். ஆனா அமுதன் உண்மையா? இல்ல அமரா?”

“அமர்..”

“பொய்”

“உண்மை.”

“அஹான்.. அப்ப நான் போய் வாசல்ல நின்னு, அமுதன்னு கத்தட்டுமா?”

உடனே முறைத்தவன், பிறகு நிதானித்தான்.

“இப்ப எதுக்கு வந்த?”

“என்னை ஏமாத்திட்டு வந்துருக்கியே.. ஏன்னு தெரிஞ்சுக்க வந்தேன்” என்றாள் நக்கலாக.

“ஏமாத்துனனா? உன்னையா?”

“மணமேடையில விட்டுட்டு ஓடி வந்ததுக்கு பேரு ஏமாத்துறது இல்லாம? வேற என்ன சார்?”

“ப்ச்ச்.. அதுக்கு இப்ப என்னங்குற?”

“ஏன் ஓடுன?”

“உன்னை கல்யாணம் பண்ணிக்க புடிக்கல. போதுமா?”

“அப்புறம் ஏன் முதல்ல சம்மதிச்ச?”

“உன் வீட்டுல கொடுத்த வரதட்சனைக்காக”

“வாட்?”

“அஞ்சு லட்சம் கொடுத்தீங்கள்ள? அதுக்காக தான். அத வாங்கிட்டு வந்து, இங்க இருக்க கடன பூராம் அடைச்சுட்டேன்.”

கண்மணி அவனை தீயாய் முறைத்தாள்.

“பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்க டிராமா பண்ணியா?”

“ஆமா..”

“டேய்..” என்றவள் அடிப்பது போல் அருகே வர, யாரோ கதவை தட்டினர்.

அமுதன் உடனே பதறி, அவள் வாயை மூடினான்.

“உஸ்ஸ்..” என்றவன், வெளியே வந்த சத்தத்தை கவனித்தான்.

கதவு மீண்டும் தட்டப்பட்டது.

“அமர்.. உள்ள தான இருக்க?” என்று குரல் வர, “போச்சு” என்றான்.

“உன்னால பக்கத்து வீட்டுக்காரன் வந்துட்டான்” என்று எரிச்சலாக அவளிடம் முணுமுணுத்தவன், அசையாமல் நின்றான்.

கண்மணி அவன் கையை விலக்கப்பார்க்க, அவன் விடவில்லை.

ஓங்கி அவன் காலில் மிதித்து விட்டாள். கத்துவதற்கு வாயைத்திறந்தவன், கத்தாமலே மூடிக் கொண்டு அவளை முறைத்துப்பார்த்தான்.

அவளும் சளைக்காமல் முறைக்க, கதவு மீண்டும் மீண்டும் தட்டப்பட்டது.

இனி சும்மா இருக்க முடியாது என்று முடிவு செய்தவன், கண்மணியை இழுத்துச் சென்று அறைக்குள் தள்ளி விட்டு, “சத்தம் போட்ட..” என்று மிரட்டி விட்டு, கதவை அடைத்து விட்டான்.

நேராக சென்று கதவை தூக்கத்தில் திறப்பது போல் திறக்க, பக்கத்து வீட்டுக்காரன் தான் நின்றிருந்தான்.

தூங்கும் போது எழுப்பியதற்காக அமர் கடுப்பாய் பேச, அவன் பணத்தை கேட்க, “அத இப்படி காலையில வந்து தான் கேட்கனுமா? இரு” என்று விட்டு கதவை அடைத்தான்.

விறுவிறுவென உள்ளே சென்றவன், கண்மணியின் கைப்பையை எடுத்தான். உள்ளே மூவாயிரம் பணம் வைத்திருந்தாள் அவள்.

அதை எடுத்து வந்து கொடுத்து விட்டு, “மிச்சத்த அப்புறமா தர்ரேன்” என்றதோடு கதவை பூட்டி விட்டான்.

கண்மணி இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“அது என் பணம்”

“திருப்பி தந்துடுவேன்” என்று அசால்ட்டாக சொன்னவனை கொலைவெறியோடு பார்த்தாள்.

“என்னை என்ன ஏடிஎம் மிஷன்னு நினைச்சியா? வரதட்சணை பணத்துக்காக கல்யாணம் பண்ண பார்த்துருக்க. ஆனா அதையும் பண்ணாம பணத்த தூக்கிட்டு ஓடிட்ட. இப்ப என் பேக்ல இருந்தத எடுத்து கொடுக்குற? மரியாதையா பணத்த திருப்பி வாங்கிக் கொடு. இல்லனா கத்தி அத்தனை பேரையும் எழுப்பி விட்டுருவேன்”

விரல் நீட்டி அவள் மிரட்ட, வேகமாக அருகே வந்து அவளது கையை பிடித்தவன், “அம்மா தாயே.. கத்திடாத. சம்பளம் வந்ததும் திருப்பி கொடுத்துடுறேன்” என்று கெஞ்சினான்.

“அஞ்சு லட்சத்தையுமா?”

“ஆமா”

“அவ்வளவு சம்பளம் வருதா உனக்கு?”

“அவ்வளவு எல்லாம் வராது. கொஞ்சம் கொஞ்சமா வரும். தர்ரேன்”

“எப்படி நம்புறது? மறுபடியும் ஓடிட்டனா?”

“அதுக்கு என்ன பண்ணனும்ங்குற?”

“எனக்கு நம்பிக்கை வர வை” என்றவள், முகத்தை அவனருகே கொண்டு சென்று கேட்டாள்.

தன் தலையை பின்னால் இழுத்தவன், “தள்ளி நின்னு பேசு” என்றான்.

“இப்படித்தான் பேசுவேன்” என்றவள் மேலும் அவனை நெருங்க, சலிப்போடு அவனே தள்ள நினைத்தான்.

இடையில் கிடந்த மேசையில் கால் இடித்துக் கொள்ள, “ஆஆ..” என்று தேய்த்துக் கொண்டான்.

“தேவை தான்.” என்றாள் கண்மணி சிரிப்போடு.

அவளது சிரிப்பில் முறைத்தவன், “ஒரு வயசுப்பையன் வீட்டுல இப்படி தனியா வந்து நிக்கிறியே.. நான் எதாச்சும் பண்ணிட்டா என்ன செய்வ?” என்று கேட்டான்.

“பண்ணுற அளவுக்கு உன்னை விடுவேன்னு நினைப்பா?”

“அவ்வளவு தைரியமா?” என்று கேட்டவன், சட்டென அவளருகே வந்து இடையை பிடித்து இழுத்தான்.

அவளை பயமுறுத்தி ஓட வைக்கும் முயற்சி தான். ஆனால் அவள் முதலில் அதிர்ந்து விட்டு, “இப்ப நீ எதாச்சும் பண்ணேன்னு வை.. உனக்கு வாரிசில்லாம ஆக்கி விட்டுருவேன்” என்று அமைதியாகவே சொல்லி வைத்தாள் கண்மணி.

அவளது நிதானத்தை பார்த்தவனுக்கு மெல்லிய புன்னகை மலர்ந்தது.

“வாரிசை நீயே பெத்துக்கொடுக்குற மாதிரி பண்ணட்டுமா?”

கண்மணி விழி இடுங்க அவனை முறைக்க, அந்த கண்ணின் பாவனை அவனுக்கு பிடித்திருந்தது.

அதை பார்த்தபடி அவள் இதழ் நோக்கி குனிய, அப்போதும் அசையாமல் நின்றாள். உடனே புன்னகைத்து அவளது மூக்கோடு மூக்கை உரசியவன், “இனிமே இங்க வராத” என்றான்.

“வந்தா?” என்று அவள் திமிராக கேட்க, “ரெண்டு பேருக்குமே சேதாரம் தான்” என்றான்.

“உனக்கு வேணா இருக்கும். ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு ஓடுறியே” என்றவள் உதடு வளைய சிரிக்க, அவளது உதடுகளை பார்த்தவன் தன்னிலை இழந்தான்.

அடுத்த நொடி அழுத்தமாக அவளிதழில் இதழ் பதிக்க, கண்மணி ஒரு நொடி அதிர்ந்தாள். ஆனால் அடுத்த நொடி கண்ணை மூடிக் கொண்டாள்.

அவளது சம்மதம் கிடைத்ததை கூட கவனிக்காமல், இதழில் புதைந்து போயிருந்தான் யாழமுதன்.

தொடரும்.

Leave a Reply