அத்தியாயம் 10

Loading

ஐஸ்கிரீம் கடை ஒன்றில் நின்றிருந்தாள் கண்மணி. இன்று வார விடுமுறை. வெளியே சுற்ற வேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் மழை அவளை தடுத்து விட்டது.

வீட்டில் இருக்கவும்‌ பிடிக்காமல், வெளியே செல்லவும் முடியாமல் போக, நேராக அருகே இருந்த இந்த கடைக்கு வந்து விட்டாள்.

மழை காரணமாக கூட்டம் எதுவும் இல்லை. இரண்டு வகை ஐஸ்கிரீம்களை வாங்கிக் கொண்டு வந்து, மேசையில் அமர்ந்து கொண்டாள்.

‘இத அம்மா பார்த்தா திட்டியே சாவடிச்சுடுவாங்க.’ என்று நினைத்துக் கொண்டே இருக்க, அதே நேரம் பாலமணியிடமிருந்து அழைப்பு வந்தது.

“ம்மா.. உங்களுக்கு நூறு ஆயுசுமா. இப்ப தான் நினைச்சேன்”

“நினைச்சுயா? திட்டுனியா?”

“நீங்க என்னை திட்டுறத நினைச்சேன்.”

“அப்படி என்ன பண்ணிட்டு இருக்க?”

“ஐஸ்கிரீம் சாப்பிட வந்தேன்”

“ஆரம்பிச்சுட்டியா? தனியா இருக்க கண்மணி.. ஐஸ் சாப்பிட்டு சளி பிடிச்சா யாரு பார்ப்பா?” என்று ஆரம்பித்தவர், அவள் ஒரு டப்பாவை காலி செய்யும் வரை அறிவுரைகளை வழங்கி முடித்தார்.

“ம்ம்” கொட்டி கேட்டுக் கொண்டாலும், சாப்பிடுவதை அவள் நிறுத்தவில்லை.

ஒன்றை காலி செய்து அடுத்ததையும் எடுக்க, அவள் முன்னால் யாரோ வந்து அமர்ந்தனர்.

சட்டென நிமிர்ந்து பார்த்தவள், யாழ்வேந்தனை பார்த்ததும் புன்கைத்தாள்.

அவள் சாப்பிடாமல் வைத்திருந்த ஐஸை அவன் பார்க்க, உடனே அள்ளி வாயில் திணித்து விட்டாள்.

அவளது வேகத்தை பார்த்து சிரித்தவன், தனக்கு வாங்க எழுந்து சென்றான்.

கண்மணி அன்னையுடம் பேசி முடித்தும் வந்தான்.

“ரெண்டு ஐஸ்.. மழை நேரத்துல சாப்பிடுறியே? காய்ச்சல் வந்துட போகுது”

“இப்ப தான் எங்கம்மா பேசி முடிச்சாங்க. நீங்களும் ஆரம்பிக்காதீங்க”

“அக்கறையில சொன்னா சலிப்பா இருக்கா உனக்கு?”

“அக்கறையே படாதீங்க சார். ஆசை பட்டத சாப்பிட முடியாம தடுக்குற அந்த அக்கறை எனக்கு வேணாம்”

சலிப்பாக சொன்னபடி சாப்பிட்டாள். இருவரும் அலுவலக விசயங்களை பேசிக் கொண்டிருக்க, அவர்களை தூரமாய் நின்று பார்த்தான் ஒருவன்.

‘இவ அமர் லவ்வர் இல்லயா? வேற எவன் கூடவோ சுத்துறா?’ என்று குழம்பியவன், அவர்களை புகைப்படம் எடுத்து யாருக்கோ அனுப்பினான்.

“கூட இருக்கது யாரு?”

“தெரியல. அமர் கூட இவள பார்க்கவே முடியல”

“இருக்கட்டும். விடாம வாட்ச் பண்ணு. நான் சொல்லுற நேரம் தூக்கிடு” என்று கட்டளை வந்தது.

அவனும் கண்மணியை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

“நீங்க என்ன இந்த பக்கம்?” என்று கண்மணி கேட்க, “ஃப்ர்ண்ட பார்க்க வந்தேன். நீ உள்ள உட்கார்ந்துருந்தனு வந்துட்டேன். இங்க தான இருக்க நீ?” என்றான்.

“ஆமா.. பக்கம் தான்”

“மழையில எப்படி வந்த?”

“கொடை பிடிச்சு தான்”

“நக்கலு?”

“நிஜம்மாவே கொடை பிடிச்சு தான் சார் வந்தேன்”

கண்மணி சாப்பிட்டு முடிக்க, வேந்தன் இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவனுக்காக அமர்ந்திருந்தாள்.

“வேலையெல்லாம் பிடிச்சுருக்கா?”

“ம்ம்.. நாட் பேட்”

“முதல்ல எங்க வேலை பார்த்த?”

“எங்க ஊர்ல..” என்றவள் நிறுவனத்தின் பெயரை சொல்லி, வேலையையும் சொன்னாள்.

“ஆமா.. ரெஸியூம்ல படிச்சேன். நல்ல வேலை தான? ஏன் விட்ட?”

“கல்யாணம் பண்ணுறதுக்காக. வேற ஊர்ல செட்டில் ஆகனும்னு விட்டேன்.”

“கல்யாணம் தான் நடக்கலல? அந்த பையன் என்ன ஆனான்னு எதாவது தெரிஞ்சதா?”

“அவன் என்ன ஆனா என்ன? நான் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறேன்”

“வாட்? அதுக்குள்ளயா? யாரு அவன்?”

“எங்கம்மா மாப்பிள்ளை பார்த்து வச்சுட்டாங்க. அவன் என் கூட இங்க வந்து தங்குனா மட்டும் போதும்னு சொல்லிட்டேன். மறுபடியும் வேலைய எல்லாம் விட முடியாது”

வேந்தனுக்கு சற்று வருத்தம் தான். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

கண்மணி கிளம்பி விட, வேந்தனும் வேறு பக்கம் நடந்தான். அவனது நண்பனை பார்க்க, “என்னடா? முகம் டல்லா இருக்கே?” என்று விசாரித்தான்.

“ஒன்னுமில்ல” என்று சமாளித்து விட்டு கிளம்பி விட்டான்.

அவன் மனதில் கண்மணியின் மீது ஈர்ப்பு இருந்தது. ஆனால் கண்மணியின் மனதில் அப்படி எதுவும் இல்லை போலும்.

மனம் வருந்த வீடு வந்தவனுக்கு, அவனுடைய அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது.

அவரிடம் பேசியவன், தன் விருப்பத்தை சொல்லி விட்டான்.

“அந்த பொண்ணு தமிழா?”

“ம்ம்..”

“அப்ப பேசி பாரு வேந்தா.. ஒரு வேளை அந்த பொண்ணுக்கும் உன்னை பிடிக்கலாம்ல?”

“வீட்டுல பார்த்த மாப்பிள்ளைக்கு சரினு சொல்லிட்டாளாம்”

“அதுனால என்ன? கல்யாணமா நடந்து முடிஞ்சது? பேசிப்பாரு.. மனசு மாறுனா நல்லது தான?”

“நான் கேட்டு அவ பிடிக்கலனு சொல்லிட்டா, அப்புறம் அவ முகத்த பார்க்கவே சங்கடம் ஆகிடும்மா”

“என்ன நீ அந்த காலத்துல பேசுற மாதிரி பேசுற? இப்பலாம் யாரும் பிடிச்சுருக்குனு சொல்லுறதுக்காக இவ்வளவு யோசிக்க மாட்டாங்க. கேளு. பிடிக்கலனு சொல்லிட்டா உடனே மறந்துடு. அவ்வளவு தான்”

மகனுக்கு தைரியம் சொல்லி விட்டு வைத்து விட்டார். யாழ்வேந்தனும், அவளிடம் எப்படிப் பேசுவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

......

நாட்கள் பறந்து ஓடிக் கொண்டிருக்க, கண்மணிக்கு அன்று வேலை முடிந்து வரும் போது, யாரோ பின் தொடரும் உணர்வு.

நான்கு நாட்களாக இதே தான் தோன்றுகிறது. ஆனால் யார் என்று விளங்கவில்லை.

இது நிச்சயமாக நல்லதல்ல என்று புரிந்தாலும், என்ன செய்வது என்று தெரியவில்லை. முடிந்தவரை எச்சரிக்கையுடன் இருந்தாள்‌

டாக்ஸியில் செல்ல நினைத்தவள், அதை விடுத்து நேராக பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றாள்.

மக்கள் அதிகமாக இருக்கும் பகுதி தான் அவளுக்கு நல்லது.

கூட்டத்தோடு கலந்து நிற்கும் போது சற்று தைரியம் வர, அமுதனின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

இத்தனை நாளும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவன் வேலையில் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து அமைதி காத்தாள்.

“ஹலோ..”

“உன் முன்னாடி ஆட்டோ வந்து நிக்கும். உடனே ஏறு” என்று அவன் முடித்த இரண்டாவது நொடி, ஆட்டோ வந்தது.

முன்னால் நின்றதுமே எதுவும் பேசாமல் ஏறி விட்டாள். உள்ளே அமுதன் இருந்தான். அவனை பார்த்ததும் தான் சற்று நிம்மதி வந்தது.

அமுதன் எதுவும் பேசாததால், அவளும் அமைதியாக இருந்தாள்.

ஆட்டோ ஒரு இடத்தில் அவர்களை இறக்கி விட்டுச் சென்றது.

“நீ அங்க எப்படி?”

“உன்னை ஒருத்தன் ஃபாலோவ் பண்ணிட்டு வந்துட்டு இருந்தான்”

“எனக்கும் ஃபீல் ஆச்சு. ஆனா யாருனு தெரியல”

“எனக்குத் தெரியும்”

“இதுனால உன் வேலையில பிரச்சனை வருமா?”

“அவங்க தேடுறது அமரோட லவ்வர”

“எதே லவ்வரா?”

மற்றதை விட்டு அவள் இதை கேட்க, அமுதனுக்கு சிரிப்பு வந்தது.

“அப்படித்தான் நினைச்சுருக்காங்க”

“உன்னை போய் நான் லவ் பண்ணுறதா? எங்க அவனுங்க? இப்படி நினைச்சதுக்கே அவங்க மண்டைய உடைக்கிறேன்”

“பாவத்த அறியாம நினைச்சுட்டாங்க விடு”

“அவங்கள அப்புறம் பார்த்துக்கிறேன். எங்க என் பணம்? திருப்பி தர்ரேன்னு சொல்லிட்டு தரவே இல்ல”

“தரும்போது வட்டியோட வாங்கிக்கோ கண்ணு”

“கண்ண நோண்ட போறேன் மறுபடியும் கண்ணுனு சொன்னேனா”

“நம்ம பஞ்சாயத்த இன்னொரு நாள் வச்சுக்கலாம். இப்ப விசயத்த கேளு.. உன்னை ஃபாலோவ் பண்ணுறவங்க ஒரு நாள் உன்னை கடத்தலாம்”

“எதே? என்ன அசால்ட்டா சொல்லுற?”

“உஸ்ஸ்… சொல்லுறத அமைதியா கேளு.. கடத்தலாம் என்ன கடத்துவாங்க. அப்படி கடத்துனா அவங்க கூட சைலண்டா போயிடு”

கண்மணிக்கு, அவன் தலையை எதை வைத்து உடைத்தால் சரியாக இருக்கும் என்ற யோசனை தான் வந்தது.

தீயாய் முறைத்தாள்.

“போயிட்டு..?”

“நீ போ மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்”

“சார் பெரிய ஹீரோ.. வந்து காப்பாத்திடுவாரு..”

“அதே தான். நான் தான் இந்த கதையில ஹீரோ”

“அப்ப நான் ஹீரோயினா? வில்லன் யாராம்?”

“உன் கூட ஐஸ்கிரீம் சாப்பிட்டானே.. அவன் தான்”

“ஐஸ்கிரீமா?” என்று புரியாமல் பார்த்தவளுக்கு, சட்டென நினைவு வந்தது.

“வேந்தன் சாரா? ஹேய் அவர் பேரு கூட யாழ் வேந்தன் தான். நீ செட்டாவ மாட்டனா, பேசாம அவர கல்யாணம் பண்ணிக்கலாம். கம்பெனி எம்டி வேற. சம்பளம் பயங்கரமா இருக்கும். போலீஸ் உன்னை கட்டுறத விட அவர் பெட்டர்ல?”

“பேசுவடி பேசுவ.. இந்த பேச்சுக்கு நானே உன்னை கடத்திட்டு போய் கட்டி வச்சு உதைக்கனும். போனா போகுதுனு விடுறேன்”

“அவர் கூட ஐஸ்கிரீம் சாப்பிட்டது உனக்கெப்புடி தெரியும்?”

“எல்லாம் தெரியும்.” என்றவன் குரலில் பொறாமை அப்பட்டமாக வழிந்தது.

“ரொம்ப கோவப்படாத. நான் தனியா தான் சாப்பிடப்போனேன். அவர் கடைசி நேரத்துல வந்து உட்கார்ந்தார்”

“அதென்ன அவன் அவர். நான் அவன்?”

“தாலி கட்டாம ஓடுனவனுக்கு இம்புட்டு தான் மரியாதை”

அவளை முறைத்து விட்டு, “இனி இப்படி ஊர் சுத்தாத. எப்ப வேணா கடத்துவாங்க.” என்றான்.

“அதுக்காக வேலைக்கு போக வேணாமா?”

“போ போ. கடத்தி கொண்டு போனாலும் பார்த்துக்கலாம்”

அவனை மேலும் கீழும் பார்த்தாலும், அவளுக்கு பயமாகத்தான் இருந்தது.

“நிஜம்மாவே கடத்துவாங்களா?”

“கண்டிப்பா.. ஆனா நீ முரண்டு பண்ணாம, பயந்த பொண்ணு மாதிரி நடி போதும்.”

“முரண்டு பண்ணா?”

“என் மேல இருக்க கோபத்த உன் மேல தான் காட்டுவாங்க”

“என்னடா இப்படி பயமுறுத்துற?”

“‌இதான் நடக்கும்னு முன்னாடியே தெரிஞ்சா பிரிப்பேர்டா இருப்பனு சொல்லுறேன். அப்புறம் முடிஞ்ச வரை சேஃபாவும் இருப்பல?”

என்ன தான் கண்மணி சரிக்கு சரியாக பேசினாலும், மனம் அதிர்ந்து தான் போயிருந்தது. கடத்துவார்கள் என்ற விசயம் சாதாரணம் அல்லவே.

இப்போது பயத்தில் கண் கலங்கும் போல் இருக்க, அமுதன் சுற்றியும் பார்த்தான். பெரிதாக ஆட்களே இல்லை. உடனே கண்மணியை அணைத்துக் கொண்டான்.

“அழாதடா.. நான் இருப்பேன்”

“பேசாம நான் என் ஊருக்கே போறேன்”

“நீ எங்க போனாலும் வருவாங்க. இங்க பிரச்சனைய முடிச்சுட்டு ரெண்டு பேரும் ஒன்னாவே போகலாம். சரியா?”

இப்போதே கண்மணிக்கு எதுவும் பேச முடியவில்லை. பயத்தில் முகம் வெளிறிப்போயிருந்தது. அழுகையும் வந்தது. அழுகையை விழுங்கி தொண்டை விதத்தில் சில நிமிடம் மௌனமாக நின்றாள். சில நிமிடங்கள் அவன் அணைப்பில் இருந்து விட்டு விலகினாள்.

அவர்கள் வந்த ஆட்டோ மீண்டும் வர, அதிலேயே ஏறிச் சென்று கண்மணியை அவளது வீட்டில் விட்டு விட்டு கிளம்பி விட்டான்.

நான்கு நாட்களாக, கண்மணிக்கு பயத்தில் வீட்டை விட்டு வெளியேறக்கூட விருப்பம் இல்லை.

ஆனால் வேலையில் தொடர்ந்து விடுப்பு எடுப்பது முடியாத காரியம். அதனால் மனதை தேற்றிக் கொண்டு, அன்று அலுவலகம் சென்றாள்.

டாக்ஸியோ ஆட்டோவோ இல்லாமல், பேருந்தில் சென்று சேர்ந்தாள். யாரை பார்த்தாலும் பயம் தான். ஆனால் முகத்தில் காட்டாமல் இருந்து கொண்டாள்.

வேலை அறைகுறையாக நடந்து முடிய, வேந்தன் அவளை நிறுத்தினான்.

“இந்த வொர்க்க முடிச்சுட்டு போகலாம்” என்க, அவளால் மறுக்க முடியவில்லை.

வேலை முடியும் போது, மாலை மறைந்து இரவு வந்திருந்தது. இனி தனியாக எப்படி வீடு செல்வது?

பயம் மனதை கவ்வ அலுவலகத்திலிருந்து வெளியேற, “கண்மணி..” என்று வேந்தன் நிறுத்தினான்.

“ரொம்ப லேட்டாகிடுச்சு. நான் உன்னை டிராப் பண்ணவா?” என்று கேட்டான்.

தனியாக செல்ல பயமாக இருந்ததால், உடனே தலையை ஆட்டி விட்டாள்.

வேந்தனும், இன்று தான் தன் விருப்பம் பற்றி அவளிடம் பேச நினைத்திருந்தான். அதனால் அவளை வீட்டில் விட்டு, அங்கு வைத்து பேசுவது. இல்லை என்றால், போகும் வழியில் எங்காவது சாப்பிட்டுக் கொண்டே பேசுவது. இரண்டு திட்டங்களும் வைத்திருந்தான்.

அவள் தலையாட்டியதும் மனம் துள்ள, “இங்கயே இரு.. நான் பைக் எடுத்துட்டு வர்ரேன்” என்று சென்றான்.

பயத்துடன் அவள் இங்கும் அங்குமாக பார்க்க, இருளில் ஒருவன் பதுங்கி பதுங்கி வருவது தெரிந்தது.

ஒரு நிமிடம் இதயம் நின்று துடிக்க, உடனே திரும்பி வேந்தன் சென்ற திசை பக்கம் வேகமாக நடந்தாள். அலுவலகத்தில் இருந்த பார்க்கிங் பக்கம் நுழையும் முன், இருட்டில் இருந்து வெளிவந்த ஒருவன் அவள் முகத்தில் மயக்க மருந்தை அடித்து, மயங்க வைத்து தூக்கிக் கொண்டு சென்று விட்டான்.

தொடரும்.

Leave a Reply