காயமே 1

Loading

(கதையில வர்ர பெயர்கள் எல்லாம் தமிழ் பெயர்களா தான் இருக்கும். ஆனா முழுக்க முழுக்க ஒரு ஃபாரின் கல்ச்சர் கதை இது. “எனதாய் உளதொன்றே” கதையில சொன்ன அடுத்த மாஃபியா கதை இது. வேற நாட்டுல நம்ம பேரு வச்சுருக்காங்கனு கேட்காதீங்க. நன்றி)

அன்றைய நாள் மிக மோசமாக விடிந்தது விக்ராந்துக்கு. இரவு நிறைய நேரம் எனோ தூக்கமே வராமல் விழித்திருந்து காலையில் தான் சற்று உறங்கினான்.

அது பொறுக்காமல் கைபேசி அலறி அவனை எழுப்பி விட்டது. கண்ணை திறக்கமாலே எடுத்து காதில் வைத்தவனின் தலையில் இடி விழுந்தது போல் துள்ளி எழுந்தான்.

“வாட்? அவரெங்க?”

“கொண்டு வந்துட்டு இருக்கோம் பாஸ்” என்று பதில் வந்தது.

“ஓகே” என்றதும் அவன் வைத்து விட்டான்.

ஆனால் விக்ராந்தின் கண்கள் கலங்கி விட்டது.

அவனது உயிருக்கு உயிரான மாமனார் அவனை தூக்கி வளர்த்தவரும் அவர் தான். இறந்து விட்டார்.

நேற்றிலிருந்து எதுவோ சரியில்லை என்று தோன்றியதால், நூறு முறை அவர் சென்ற இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்தான்.

ஆனால் இப்போது? கண்கள் கலங்கி உள்ளம் வலித்தது. ஆறுதல் சொல்ல யாருமில்லை. இந்த அறையை தாண்டி விட்டால், அவனது கண்ணீரை மறைத்தே ஆக வேண்டும். அவனது பலவீனத்தை காட்ட முடியாது.

அதனால் சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தான். கண்ணீர் கடைசி மரியாதையாக இறந்தவருக்காக கண்ணை விட்டு வழிந்து விட்டது. சில நொடிகளில் அவரோடு கழித்த அத்தனை நிமிடங்களும் கண் முன்பு வந்து போனது. புறங்கையால் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

இதற்கு மேல் அமர்ந்திருக்க முடியாது என்று எழுந்தவன், முகத்தை தண்ணீர் ஊற்றி கழுவிக் கொண்டான். அந்த தண்ணீரோடு அவனது சோகம் கலைந்து போக அவனது முகம் பாறையைப்போல இறுகியது.

வேகமாக அறையை விட்டு வெளியேறியவன், இடது கையால் கைபேசியின் எண்ணை அழுத்தினான்.

விக்ராந்தின் நண்பன் அல்லது மெய்காப்பாளனின் எண்ணை அழுத்தினான்.

“விக்கி?” என்று தூக்க கலக்கத்தில் உத்திரன் குரல் கேட்டது.

“பாஸ் இஸ் நோ மோர் உத்திரா.. வேக் அப்”

துள்ளி குதித்து அவன் எழுவது இந்த பக்கம் கேட்டது.

“வாட்?” என்று அவன் அலற, “கெட் ரெடி.. இன்னும் பத்து நிமிஷத்துல இங்க இருந்து கிளம்புறோம்” என்று விட்டு வைத்து விட்டான்.

“ஷிட்… பாஸ்? பாஸுக்கு என்ன?” என்று யோசித்தவன், ஓடிச் சென்று தன் வழக்கமான கருப்பு உடையை எடுத்துக் கொண்டு, ஓடிச் சென்றான் குளித்து தயாராக.

“கார்ட்ஸ்!” என்று வாசலில் நின்ற விக்ராந்த் குரலை உயர்த்த, அவனது கம்பீரமான குரலை கேட்டு மளமளவென ஓடி வந்தனர்.

“பத்து நிமிஷத்துல கார் ரெடியா இருக்கனும்.. அண்ட்.. மத்தவங்கள எழுப்பி உடனே ரெடியாக சொல்லுங்க” என்றவன் அவர்கள் கலையும் முன்பே அந்த இடத்திலிருந்து உள்ளே சென்றான்.

“விக்கி?” என்று மெதுவாக எழுந்து வந்தார் ஒரு பெண்மணி.

அவரை பார்த்ததும் சட்டென நின்றான்.

“என்ன இந்த நேரத்துல? எதாவது பிரச்சனையா?” என்று கேட்டவருக்கு கிட்டத்த எழுபதை தாண்டிய வயது இருக்கும்.

வெளியே ஆட்கள் ஓடுவதும் விக்ராந்தின் குரலும் கேட்டு விட்டு தான் எழுந்து வந்தார்.

மணி அதிகாலை ஐந்தை தொட்டுக் கொண்டிருந்தது.

“கிரானி…” என்றவனுக்கு தொண்டை அடைப்பது போல் இருந்தது.

“என்ன? என்னாச்சு?” என்று கேட்டவரின் குரலில் பதட்டம்.

“அங்கிள்… அவரு… அவர கொன்னுட்டாங்க”

தொண்டை அடைக்கப்பார்க்க, விழுங்கிக் கொண்டு கம்பீரம் குறையாமல் சொல்லி விட்டான். ஆனால் கேட்டவர், தன் சுருங்கிப்போன விரல்களால் வாயை மூடிக் கொண்டவர், அதிர்ச்சியில் இமைக்க மறந்து அவனை பார்த்தார்.

“போன இடத்துல விசயம் எப்படியோ லீக் ஆகிடுச்சு போல.. ரிட்டன் வரும் போது அட்டாக் பண்ணி.. அங்கிள…”

அந்த மூதாட்டியின் கண்கள் மெல்ல கலங்க ஆரம்பித்தது. அவரது காதில் வேறு எதுவும் விழவில்லை. வெளியில் அவசரமாக ஆட்கள் ஓடும் சத்தம் விழவில்லை. முன்னால் பேசிக் கொண்டிருந்தவனின் குரல் கேட்கவில்லை.

மெல்ல திரும்பி நடந்தார். விக்ராந்த் அவரது முதுகை பார்த்தபடி நின்றான். அவர் நேராக சென்று அவரது அறைக்கு பக்கத்து அறையில் நுழைந்தார்.

அதில் பெரிய படத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்தவர், அங்கேயே சரிந்து அமர்ந்து விட்டார்.

அவர் கண்ணை விட்டு மறைந்ததும் விக்ராந்தின் முகத்தில் கோபம் பல மடங்கு அதிகமானது. இதை செய்தவனை உயிரோடு சிதைக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

மீண்டும் அறைக்குள் சென்றவன் கிளம்பி வெளியே வந்தான்.

உத்திரன் அவனுக்காக வாசலில் காத்திருக்க, அவனை பார்த்தும் பார்க்காமல் வேகமாக நடந்தான்.

“என்னாச்சு விக்கி?”

“அவர கொன்னுட்டாங்க. ரிட்டன் வர்ர நியூஸ் எப்படியோ லீக் ஆகி இருக்கு”

“அது எப்படி முடியும்? உள்ள எவனும் சொன்னானா?”

“டோன்ட் நோ”

காலில் அணிந்திருந்த சூ சத்தம் அந்த வீடு முழுவதும் எதிரொலிக்க வேகமாக நடந்தவன், உடனே காரில் ஏறினான்.

உத்திரன் முன் பக்கம் ஏறியதும், நான்கு கார்கள் அடுத்தடுத்து கிளம்பியது.

மணி ஐந்தை தொட்டு விட்டது. வானம் இன்னும் இருளை முழுதாக விலக்கவில்லை. ஆனால் வெளிச்சம் தெரிந்தது.

விக்ராந்தின் மூளை மிகத்தீவிரமாக வேலை செய்தது. செய்தது யார் என்று விசாரிக்க வேண்டும். அதற்கு முன்பு பத்திரமாக அவரது உடலை கொண்டு வந்து கடைசி காரியத்தை முடிக்க வேண்டும்.

உத்திரன் கைபேசியை எடுத்து பேசப்போக, “ஸ்டாப்.. நாம அவர நேர்ல பார்க்குற வரை எதுவும் செய்யாத” என்று தடுத்து விட்டான்.

உத்திரன் பெருமூச்சோடு அமைதியாகி விட்டான்.

கார் விர்ரென காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றது. முப்பது நிமிட பயணத்திற்கு பிறகு, எதிரில் வந்து கொண்டிருந்த ஐந்து காரும் நின்றது.

விக்ராந்துக்கு முன்பு அவனுடன் பாதுகாப்பாக வந்த எல்லோரும் இறங்கினர். எதிரில் இருந்த காரிலிருந்தும் ஆட்கள் இறங்கினர்.

உத்திரன் இறங்கி முன்னால் செல்ல, அவனை பார்த்து விட்டு ஒருவன் ஓடி வந்தான்.

“நாங்க.. நாங்க ரொம்ப ட்ரை பண்ணோம்” என்றவனின் கண்களில் கண்ணீர் கொட்டியது.

பின்னால் விக்கிராந்த் வர, சட்டென தலை குனிந்து ஓரமாக நகர்ந்து விட்டான்.

உத்திரனை தாண்டி விக்கிராந்த் செல்ல அவனும் பின் தொடர்ந்தான்.

காரில் ஒரு சீட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்தது குருநாதனின் உடல்.

பார்த்ததும் கண்ணீர் மீண்டும் வருவேன் என்று விக்ராந்தை பயமுறுத்தியது.

குருநாதனின் உடலில் மூன்று இடத்தில் குண்டடி பட்டிருந்தது. அதில் வந்த இரத்தம் மட்டும் இல்லை என்றால், அவர் கண்ணை மூடி உறங்கிக் கொண்டிருப்பதாகவே நினைத்திருப்பான்.

“விக்கி.. அடுத்து என்ன?” என்று உத்திரன் கேட்க பெமூச்சு விட்டவன், “இந்த காரோட நாம போகலாம். மத்த ஏற்பாட செய்ய சொல்லு” என்றவன் காரின் மறுபக்கம் ஏறி அமர்ந்து அமர்ந்து கொண்டான்.

ஒரு நாள் இப்படி கூட நடக்கும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடக்கிறது.

பயணம் மீண்டும் வீடு நோக்கி திரும்பியது. இந்த முறை உத்திரன் கைபேசியில் பேசிக் கொண்டே இருந்தான்.

வீட்டுக்கு சென்றதும் குருநாதனின் உடலை விக்ராந்த் தூக்கி வந்தான். அவரை அவரது அறைக்கே கொண்டு செல்ல, பாட்டி எழுந்து வந்து மருமகனின் கன்னத்தை தொட்டுப்பார்த்தார். சில்லிட்ட உடல் அவரை தடுமாற வைக்க, அவரோடு இருந்த பெண்கள் அவரை தாங்கிப் பிடித்தனர்.

வேலை மளமளவென நடந்தது. குருநாதனின் உடலை சுத்தம் செய்து காயங்களை அடைத்து இரத்தம் கொட்டுவதை நிறுத்தி விட்டு, அவருக்கு புது உடை அணிவிக்கப்பட்டது.

சவப்பெட்டியை தயாரிக்கச் சொல்லி உத்திரன் பேசிக் கொண்டிருக்க, விக்ராந்த் வெளியே வந்தான்.

“நானா எங்க?”

“வந்துட்டு இருக்காரு”

“அவரே எல்லாருக்கும் இன்ஃபார்ம் பண்ண சொல்லிடு. நான் ரூமுக்கு போயிட்டு வர்ரேன்” என்று விட்டு அறையை நோக்கிச் சென்று விட்டான்.

உத்திரன் சொன்னதை செய்து விட்டு தம்பியை அழைத்தான்.

“உதயா..”

“என்ன பிரோ இந்த நேரத்துல கூப்பிடுற?” என்று கேட்டவன் மணியை பார்த்தான்.

ஆறாகி இருக்க பொழுது நன்றாக விடிந்திருந்தது.

“பாஸ் இறந்துட்டாரு”

“வாட்!” என்று தம்பி அலற கைபேசியை தள்ளி பிடித்தான்.

“லுக்.. கொஞ்ச நேரத்துல கடைசி காரியம் ஆரம்பிக்கும். சீக்கிரமா கிளம்பி வா”

“ஓகே.. பட் என்னாச்சு?”

“சுட்டு கொன்னுட்டாங்க”

ஒரு நொடி அமைதிக்கு பிறகு, “ஓகே நீ அங்க இருக்க வேலைய பாரு.. ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு” என்று விட்டு வைத்தான்.

உத்திரனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தது. காவலுக்கு இருந்த பலரின் முகம் வாடியிருந்தது.

இது மாஃபியா கூட்டம் தான். இங்கே சாவு எந்த நேரம் எந்த உருவத்தில் வரும் என்று தெரியாது தான். ஆனால் அவர்களது தலைவரை இழந்ததை அவர்களால் அவ்வளவு சீக்கிரம் ஜீரணிக்க முடியவில்லை.

இனி எல்லாம் விக்ராந்த் கையிலா? நினைக்க சற்று நடுங்கியது. விக்ராந்த் மிக மிக பொல்லாதவன். அமைதியாகவே இருப்பான். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது பாய்ந்து சின்னாபின்னமாக்கி விடுவான்.

அவன் தலைவனால் பல எதிரிகளின் தூக்கம் தொலையும். ஆனால் இது அவர்களே இழுத்துக் கொண்ட வினை. குருநாதனை கொன்று அவனை தலைவனாக்கி விட்டார்கள்.

குருநாதனின் உடல் வைக்கப்படும் இடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பெட்டியும் படமும் வைக்கப்பட்டு அவரது உடல் வைக்கப்பட, எல்லோரும் வரிசையாக கருப்பு நிற உடையில் வர ஆரம்பித்தனர்.

அதே போன்ற உடையில் சத்தமில்லாமல் சற்று தள்ளி நின்றிருந்தான் விக்ராந்த். மலர் வளையத்தை வைத்து விட்டு எல்லோரும் அகன்றனர்.

முதலில் தொழிலில் முக்கியமானவர்கள் வந்து விடை பெற, அதன் பிறகு வந்தது எல்லாம் மாஃபியா கும்பல்.

அவர்கள் எல்லாம் உடனே கிளம்பவில்லை. வளையத்தை வைத்து விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

இன்னும் சிலர் வர வேண்டும். அவர்கள் வந்ததும் உடலை தூக்கிச் சென்று புதைக்க வேண்டும்.

வந்தவர்களை எல்லாம் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். இந்த கூட்டத்தில் இருக்கும் எவனோ ஒருவன் செய்த வேலை தான் இது. யாரென்று கண்டுபிடித்தால் அவனுக்கு கடைசி காரியம் ஒன்று நடக்காமலே கதையை முடிக்க வேண்டும் என்று கறுவிக் கொண்டான்.

பெண்கள் ஒரு பக்கம் பாட்டிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, விக்ராந்த் பெருமூச்சு விட்டான்.

அந்த நேரம் ஒரு கார் வழுக்கிக் கொண்டு வாசலில் வந்து நின்றது. விக்ராந்த் வாசலை கவனிக்காமல் இறந்து போனவரின் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

காரை விட்டு இறங்கியவளை பார்த்து உத்திரனின் கண்கள் அகலமாக விரிந்தது.

இரண்டெட்டில் விக்கிராந்தை அடைந்து அவனை இடித்தான்.

விக்ராந்த் புருவம் சுருங்க திரும்ப, வாசலை காட்டினான்.

கருப்பு நிறை உடை.. கழுத்திலிருந்து கால் வரை மறைத்திருக்க தலை முடி அலையலையாக தோளில் புரண்டது. கருப்பு நிற கண்ணாடி கண்ணை மறைக்க, அணிந்திருந்த ஹீல்ஸ் சத்த மெழுப்ப நடந்து வந்தாள் சேஷா.

முகத்தில் ஒரு உணர்வும் இல்லாமல் வந்தவள், தன் கண்ணாடியை ஒரு கையால் கழட்டி விட்டு வேகமாக சென்று தந்தையை பார்த்தாள்.

அவள் முகத்தில் வருத்தமும் இல்லை. சந்தோசமும் இல்லை. வெறுமென ஒரு பார்வை. அவளுக்கு பின்னால் வந்தவன் மலர் வளையத்தை நீட்ட, வாங்கி வைத்து விட்டு இரண்டு நொடி அவர் முகத்தை பார்த்தாள்.

பிறகு திரும்பி மற்றவர்களை பார்த்தாள்.

ஒவ்வொரின் முகமும் ஒவ்வொரு உணர்ச்சியை காட்ட, யாரையும் கண்டு கொள்ளாமல் உத்திரனிடம் பார்வையை திருப்பினாள்.

அதுவரை அவளை பார்த்த அதிர்ச்சியில் இருந்தவன், அவள் பார்த்ததும் முறைத்து விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். அவனது கோபத்தில் அவளுக்கு சிரிப்பு வரும் போல் இருந்தது.

ஆனால் அடுத்த நொடி பார்வை விக்ராந்திடம் விழ, அந்த சிரிப்பு காணாமல் போனது.

விக்ராந்த் பாக்கெட்டில் கைவிட்டு நின்று கொண்டு அவளை இமைக்காமல் பார்த்திருந்தான். அவள் வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. வந்தவளை கண்டு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், இப்போது உணர்வே இல்லாமல் அவளை படிக்க முயற்சித்தான்.

என்றும் போல் இன்றும் அவனால் அவளை கணிக்க முடியவில்லை.

அடுத்தடுத்த ஆட்கள் வர, சேஷா அங்கிருந்து நகர்ந்து விக்ராந்தின் மறுபக்கம் சென்று நின்று கொண்டாள்.

அவளை ஏனென்று யார் கேட்க முடியும்? விக்ராந்தால் கூட அது முடியாதே.

அங்கிருந்த அனைவரும் சேஷாவை பார்த்து அதிர்ந்து ஒன்றும் புரியாமல் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க உத்திரன், “எல்லாம் வந்தாச்சு” என்றான் ரகசியமாக.

சில நிமிடங்களுக்கு பிறகு பெட்டியில் வைத்து குருநாதனை தோளில் சுமந்து சென்றனர். அதில் விக்ராந்தும் உத்திரனும் இருந்தனர்.

அவர்களது குடும்பத்தினரை புதைத்த இடத்தின் அருகே அவருக்கு ஏற்கனவே குழி தோண்டப்பட்டிருக்க, எல்லா வித சடங்கும் முடிந்து பெட்டியை உள்ளே வைத்து புதைத்து விட்டனர்.

பாட்டி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க, விக்ராந்த் இரும்பாய் இறுகி நின்றிருந்தான். சேஷா மட்டும் எந்த உணர்வும் இல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

காரியம் முடிந்ததும் எல்லோரையும் கிளம்பச் சொன்னான் விக்ராந்த்.

“மூணு நாள்ல மீட்டிங் இருக்கும். எல்லாரும் அங்க வந்து உங்களுக்கு தேவையானத கேளுங்க. இப்ப கிளம்புங்க” என்றதும் உத்திரன் முன் வந்து எல்லோரையும் வழியனுப்ப ஆரம்பித்தான்.

விக்ராந்த் அதுவரை அமைதியாக இருந்தது போதும் என்று, சேஷாவின் கையைப்பிடித்து இழுத்துச் கொண்டு மாடிக்கு ஏறினான்.

இன்னும் விருந்தினர்கள் மொத்தமாக செல்லவில்லை என்பதால், அவனது இழுப்புக்கு சேஷா சென்றாள்.

மாடி மொத்தமும் காலியாக இருந்த போதும், அவளை அவனது அறைக்கு இழுத்து வந்து உள்ளே தள்ளினான்.

அவள் தடுமாறி நின்று அவனை முறைத்துப் பார்க்க, கதவை அடைத்தவன் அவளை எரிப்பது போல் பார்த்தான்.

“எதுக்கு வந்த? எதுக்குடி வந்த?” என்று அவன் கோபமாக பல்லைக்கடித்து கேட்க, சேஷா தன் காலில் இருந்த ஹீல்ஸை முதலில் கழட்டி விட்டு சாவதானமாக நின்றாள்.

“போனவ அந்த பக்கமே செத்துருக்க வேண்டியது தான? எதுக்கு திரும்பி வந்த?” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் அவள் நடக்க, அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

அவள் கையைப்பிடித்து இழுத்தவன், சுவற்றில் சாய்த்து கழுத்தைப்பிடித்தான்.

“கேட்டா பதில் சொல்லு..” என்று பேசியவனின் குரல் அவளுக்கு மட்டும் தான் கேட்கும் அளவில் இருந்தது.

அவனும் அவ்வளவு நெருக்கத்தில் இருக்க, அவள் கையை தட்டி விடப்பார்த்தாள். அவன் அசராமல் நின்றான்.

“கைய எடு விக்ராந்த்”

“பதில் சொல்லு”

அவன் அசர மாட்டான் என்று புரிய, அவளது இதழ்களில் கிண்டலாக ஒரு சிரிப்பு படர்ந்தது.

“என் அப்பா செத்துருக்காரு.. வந்து பார்க்க கூடாதா?” என்று கேட்டவள் போலியாக ஆச்சரியப்பட, அவனுக்கு அவளை கொன்று விட்டாள் என்ன என்று தான் தோன்றியது.

“இத வேற யாரு கிட்டயாச்சும் சொல்லு.. நம்புவாங்க.. என் கிட்ட சொல்லாத.. முதல்ல உனக்கு யாரு இந்த விசயத்த சொன்னது?”

அவன் கோபம் குறையாமல் பொங்கிக் கொண்டிருக்க, அவளோ சாவதானமாக அவனது கையை விலக்கி விட்டு கழுத்தை தடவினாள்.

“நீ சொல்லாம விட்டா எனக்கு தெரியாதுனு நினைப்பா?”

“நீ அவர பார்க்க கூட தகுதி இல்லாதவ.. உனக்கு ஏன்டி சொல்லனும்?”

“நீ சொல்லனும்னு நினைச்சா கூட என்னை ரீச் பண்ண முடியாதுல விக்ராந்த்? அத மறந்துட்டேன் பாரேன்.. பட் ஓகே.. அதான் சரியான நேரத்துக்கு வந்துட்டேனே”

“யூ.. ஒழுங்கா சொல்லிடு எதுக்கு வந்த?”

“அத சொல்லாம போக மாட்டேன்.. பட் தள்ளி நின்னு பேசு.. இரிட்டேட் ஆகுது” என்றவளின் முகத்தில் தோன்றிய அறுவெறுப்பு, பல வருடங்களுக்கு முன்பே அவள் உடைத்த இதயத்தை மீண்டும் உடைத்தது.

ஆனால் அப்போது இருந்த விக்ராந்த் இந்த வார்த்தை தாங்காமல் அவள் இருக்கும் பக்கம் கூட வராமல் ஓடினான். இப்போது இருப்பது அவனில்லை. அது அவளுக்கு தெரியாதல்லவா? காட்ட முடிவு செய்து விட்டான்.

இருவருக்கும் இடையே இருந்த கொஞ்ச நஞ்ச இடைவெளியையும் துரத்தி, அவளோடு தன்னை ஒட்டிக் கொண்டான்.

அவள் அதிர்ச்சியில் விழி விரிய பார்க்கும் போது, பரமதிருப்தியாக இருந்தது.

‘எப்பவும் அதே மாதிரி இருப்பேன்னு நினைப்பா? நான் யாருனு காட்டுறேன் இருடி’ என்று உள்ளே கறுவிக் கொண்டான்.

“ஹேய்…”

அவள் அதிர்ச்சியோடு அவனை தள்ள பார்க்க முடியவில்லை. அவன் நெஞ்சில் கைவைத்தவள் முயற்சித்து தோற்றதும் கையை எடுக்க மறந்தாள்.

“ஓ மை டியர் வொயிஃப்.. இன்னும் என்னை நீ பழைய விக்ராந்தாவே நினைச்சுட்டு இருக்கியா? நீ சொன்னதும் உடனே செய்வேன்னு நினைக்கிறியா? தப்பு கணக்கு போடுறியே சேஷா..”

கேலியாக வளைந்த உதட்டோடு அவன் உதிர்த்த சொற்கள், அவளை வெறியேற்ற ஆரம்பித்தது. ஆனால் அவனிடம் உணர்வை காட்டினால் அனைத்தும் வீணாக தான் முடியும். இது அனுபவத்தால் உணர்ந்த உண்மை.

நீண்ட பெருமூச்சை எடுத்தவள், நெஞ்சில் இருந்த கைகளை உயர்த்தி அவனது தோளில் மாலையாக போட்டுக் கொண்டாள்.

“நானும் அதே பழைய சேஷா இல்ல விக்ராந்த்.. சாரி சாரி.. டியர் ஹஸ்பண்ட்.. இந்த விளையாட்டு எனக்கும் இப்போ ரொம்ப நல்லா தெரியும்” என்று புருவம் உயர்த்தி கண் சிமிட்டினாள்.

அவனது முகத்தில் இருந்த கேலி மறைந்து கோபம் வந்தது. அவளை பிடித்து தள்ள வேண்டும் என்று கைகள் பரபரக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அவன் உணரும் முன்பே, “கம் இன்” என்று அவள் பதில் சொல்லி விட்டாள்.

“விக்கி.. நான் இங்கயே….”

சொல்ல வந்ததை பாதியில் விழுங்கி அதிர்ந்து நின்றாள் மானசி. இருவரும் இருந்த நிலை அவளது இதயத்தை பலமாக தாக்கியது.

உள்ளே வந்தவளை பற்றிக்கவலை இல்லாமல் சேஷா அவளது கணவனை கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்க, விக்ராந்த் தான் அவசரமாக அவளது கையை விலக்கி விட்டு விலகினான்.

ஒரு நொடி நிதானித்தான். நடந்தது புரிய வேண்டுமல்லவா?

கதவு சத்தம் கேட்டு அவன் சுதாரிப்பதற்குள் சேஷா பதில் சொல்ல, இருவரும் விலகும் முன்பே மானசி வந்து விட்டாள். அவர்கள் நிற்கும் நிலையை பார்த்தும் விட்டாள். என்னவோ பிடித்தும் இருந்தது. பிடிக்காமலும் இருந்தது.

மானசியின் அதிர்ச்சியை பார்த்தவன், சட்டென பழைய இரும்பு நிலைக்குச் சென்றான்.

“என்ன மானசி?”

“ஹான்.. ஒன்னுமில்ல” என்றவள், பதிலுக்கு காத்திராமல் வேகமாக வெளியேறி விட்டாள்.

கதவு அடைத்ததும் சேஷாவை பார்த்தான். இன்னும் சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தாள்.

“அறிவில்லயா? எதுக்கு பதில் சொன்ன?”

சேஷா தோளை குலுக்க, அவனுக்கு கோபம் வந்தது.

உடனே எதோ பேசப்போனவன் கைபேசி ஒலிக்க, உத்திரன் பெயரை பார்த்து விட்டு ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டான்.

“உன்னை வந்து பேசிக்கிறேன்” என்றவன் கதவுக்கு நடக்க, “ஹேய்..” என்று சிரிப்போடு அவனை தடுத்து நிறுத்தினாள்.

அவன் அவளை திரும்பி முறைக்க, உடனே சரணடைவது போல் கையை தூக்கினாள்.

“ஒரு ஃப்ரண்ட்லி சஜ்ஜஸன்… சட்டைய சரி பண்ணிக்கோ.. பொண்டாட்டிய பார்த்ததுல என்னென்ன நடந்ததோனு……”

மிச்சத்தை சொல்லாமல் விட, சட்டையை குனிந்து பார்த்தான். அவளோடு ஒட்டிக் கொண்டு நின்றதில் சட்டை கலைந்து தான் இருந்தது.

டையை கழட்டி எறிந்தவன், கோட்டையும் கழட்டி போட்டு விட்டு இரண்டு பட்டன்களை திறந்து விட்டான்.

கை பட்டனை கழட்டி விட்டு இரண்டு கையையும் மடித்து விட, இப்போது சரியாக இருந்தது. கசங்கியிருந்தது கண்ணில் படாமல் மறைந்து விட்டது.

கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டவன், அவளை பார்க்காமல் வெளியேறி விட, சேஷா சன்னமாக சிரித்துக் கொண்டாள்.