புயல் 4

Loading

புதிய அரண்மனைக்கு சென்றதும் எல்லோருக்குமே தனித்தனி அறைகள் கிடைத்தது. பொதுவான குளியல் அறையை தவிர, மற்ற அனைத்தும் தனி அறையாக இருக்க பலருக்கு சந்தோசம்.

அன்று காலையிலேயே எல்லோரையும் கிளப்பி விட்டான் புரூஸ். அன்று புது சரக்கு வரப்போகிறதாம். அதை பாதுகாக்க அனைவரும் செல்ல வேண்டும்.

ஏனென்றால் வரப்போகும் சரக்கின் மதிப்பு அவ்வளவு உயர்ந்தது. எல்லோரும் அவசரமாக கிளம்பி, கொடுத்த உணவை உண்டு விட்டு தயாராக காத்திருக்க, அனைவருக்கும் துப்பாக்கியை கொடுத்தனர்.

வெளியே போகும் நேரத்தில் மட்டும் தான் துப்பாக்கி எல்லோரின் கையிலும் கொடுக்கப்படும். மற்ற நேரங்களில் கொடுத்தால் பாதுகாப்பு அல்ல என்று புரூஸ் நினைத்தான்

துப்பாக்கியை வாங்கி பத்திரப்படுத்தி விட்டு எல்லோரும் வேலையை பார்க்க கிளம்பினர். ராக்கின் காரில் பெரிய துப்பாக்கிகளோடு இருவர் அமர்ந்து கொள்ள, அவரை சுற்றி இரண்டு காரில் ஆட்கள் புகுந்தனர்.

அடுத்ததாக மிச்சமிருந்த அனைவரும் பின்னால் இருந்த பெரிய வேனில் ஏறிக் கொண்டனர்.

அங்கிருந்து வேகமாக சென்று ஒரு இடத்தில் இறங்கினர். ராக்கும் சிலரும் உள்ளே சென்று விட்டு வெளியே வரும் வரை மற்றவர்களுக்கு பெரிதாக வேலை இல்லை.

ராக் திரும்பி வந்த போது ஒரு லாரியை அவரோடு அழைத்து வந்தார். அதோடு இரண்டு ட்ரக்குகள் மூடி வந்தது.

வேனில் இருந்த அனைவரையும் பிரித்து அந்த வாகனத்தில் ஏற்றினான் புரூஸ். எல்லோரும் ஏறியதும் ராக் கார் கிளம்ப பின்னால் அனைத்தும் கிளம்பியது.

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பெரிய பிரச்சனை இல்லை தான். அதன் பிறகு தான் ஆரம்பித்தது.

சில வாகனங்கள் அவர்களை துரத்த ஆரம்பித்தது. துப்பாக்கிச்சூடு நடந்தது. இரண்டு பக்கமும் சேதாரம் ஆனது.

ஆனாலும் ராக் சென்ற கார் எப்படியோ தப்பி ஓடி விட்டது. மிச்சமிருக்கும் வாகனத்தில் இருப்பவர்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டு ஓடி விட, ஒரு காரும் சரக்கு வந்த ட்ரக்குகளில் ஒன்றும் மிஞ்சியது.

வந்தவர்கள் இதை கைப்பற்றியதே போதும் என்று சந்தோசமாக நடு சாலையில் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

கைபேசியில் தகவல் கொடுத்தவனிடம் பேசி விட்டு, சில நிமிடங்கள் வரை கூடி கும்மாளமிட்டனர். சிலர் ட்ரக்கை திறந்து அதில் இருந்த போதை பொருளை உட்கொண்டு ஆனந்தத்தில் கழித்தனர்.

காருக்குள் காயத்தோடு மறைந்து கிடந்த புரூஸ், அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் பக்கம் காயமிருந்தாலும் ஆறு பேர் மிஞ்சியிருந்தனர். இவர்கள் பக்கம் செத்துப்போன சிலரை தவிர யாருமே இல்லை. எல்லோரும் ஓடி விட்டனர்.

ஒருவன் கையில் அடி பட்டு உயிரோடு இருந்தான். ஆனால் அவனும் மயக்கத்தில் கிடந்தான்.

புரூஸ் இப்போது தப்பிப்பதா? இல்லை பொருளை காப்பாற்றுவதா? என்ற கேள்வியோடு மறைந்து அமர்ந்திருந்தான்.

கொண்டாட்டத்தை ஒரு வாரு முடித்துக் கொண்டு இருவர் காரின் அருகே வர, சட்டென அடுத்தடுத்து கீழே விழுந்தனர்.

அவர்கள் விழுந்ததை பார்த்து மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

“டேய் போதை அதிகமாகிடுச்சா? எந்திரிங்கடா” என்று கத்தினர்.

விழுந்தவர்களிடமிருந்து பதில் இல்லை.

“இங்கயே தூங்குறானுங்க போல?” என்று சிரித்துக் கொண்டே ஒருவன் அருகே வர, அடுத்த நொடி அவனும் விழுந்தான்.

மற்ற மூவருக்கும் அப்போது தான் புரிந்தது. எங்கிருந்தோ பாய்ந்த தோட்டா மூவரை கொன்று விட்டது என்றது.

அவசரமாக தங்களது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சுற்றிலும் பார்க்க, அவர்கள் வந்த காரில் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறியது.

திரும்பிப் பார்த்து மூவரும் அதிர்ந்து நிற்க, விசில் சத்தம் கேட்டது.

சட்டென மூவரும் திரும்ப, ட்ரக் ஓட்டுனர் இருக்கையில் இருந்து ஜெய் எட்டிப் பார்த்தான்.

“எப்படி இருக்கு? உங்க செலிபிரேஷனுக்கு என்னால முடிஞ்ச வான வேடிக்கை” என்று சொல்லிக் கொண்டே ஜெய் இறங்க, ஒருவன் அவசரமாக அவனை சுட, அவனது குறி தவறியது. காரணம் அதற்கு முன்பே ஜெய் அவனது தலைக்கு குறிவைத்து புல்லட்டை இறக்கி விட்டான்.

மற்ற இருவரும் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நின்றனர்.

“மரியாதையா அந்த கன்ன கீழ போட்டுரு..” என்று ஜெய்யை மிரட்ட, ஜெய் வாய் விட்டு சிரித்தான்.

“என்னை பார்த்தா பயந்து நடுங்குறவன் மாதிரி தெரியுதா?” என்று கேட்டுக் கொண்டே அருகே சென்றான்.

“நீ யாருனு எங்களுக்கு தெரியாது.. எங்க வேலையில நீ தலையிடாத.. உனக்கு வேணும்னா இது பங்கு தர்ரோம்.. எடுத்துட்டு போ” என்று பேரம் பேசினர்.

ஜெய் யோசிப்பது போல் பாவனை செய்தான்.

“பங்கெல்லாம் வேணாம். எனக்கு முழுசா வேணும்.. கொடுத்துட்டு நீங்க ஓடுங்களேன்” என்று ஜெய் சொல்ல, ஒருவன் துப்பாக்கியை அழுத்தும் போது செத்து விழுந்தான்.

தனியாய் இருந்த ஒருவன் அதிரும் போதே, ஜெய் ஓடிச் சென்று அவன் கையிலிருந்த துப்பாக்கியை தட்டி விட்டு, அவன் கழுத்தில் ஏறி வளைத்து தரையில் கிடத்தி, முகத்தை தரையில் வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தான்.

புரூஸ் காரிலிருந்து மெல்ல இறங்கிக் கொண்டிருந்தான்.

புரூஸை பார்த்ததும் ஜெய்யின் முகத்தில் புன்னகை வந்தது.

“நீ தான் சுட்டதா? நல்ல வேளை நீயாச்சும் இருக்கியே” என்றவன் கீழே கிடந்தவனை துள்ள விடாமல் முட்டியால் அழுத்தி பிடித்தான்.

“அவன…”

“யாரோ இவனுங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிருக்காங்க. அவன் யாருனு தெரிஞ்சுக்காம இவன கொல்ல கூடாது” என்றவன் கீழே கிடந்தவன் பாக்கெட்டிலிருந்த கைபேசியை எடுத்து புரூஸிடம் தூக்கிப் போட்டு விட்டு, துப்பாக்கியால் ஓங்கி அடித்தான்.

அவன் உடனே மயங்கிப்போக, ஜெய் தூசியை தட்டிக் கொண்டு எழுந்தான்.

“நிறைய பேர் செத்துட்டாங்க.. ப்ச்ச்” என்றவன் அவசரமாக சென்று மற்ற யாராவது உயிரோடு இருக்கிறார்களா? என்று தேட, புரூஸ் மயங்கிக் கிடந்தவனை இழுத்துக் கொண்டு சென்று காரில் போட்டான்.

“ரெண்டு பேரு மயக்கத்துல கிடக்குறாங்க.. கார எடு.. நான் ட்ரக்கோட பின்னாடி வர்ரேன். ஓட்டிருவல?” என்று ஜெய் கேட்க, புரூஸ் தலையாட்டி வைத்தான்.

இருவரும் செத்துப்போன எதிரிகளிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, செத்துக்கிடந்த அவர்களது ஆட்களையும் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டனர்.

இவர்களை அனுப்பியவன் வந்து அவர்களை பார்த்துக் கொள்ளட்டும் என்று நடுசாலையில் விட்டு விட்டு சென்றனர்.

அரண்மனையில் ராக் சரக்கு கை விட்டு போன கோபத்தில் குதித்துக் கொண்டிருந்தான். திரும்பி வந்தவர்களில் புரூஸ் இல்லை என்பது வேறு அவனை மேலும் வெறியேற்றியது.

புரூஸ் மீது அவனுக்கு தனிப்பாசம் உண்டு. அதே இடத்திற்கு ஆட்களை அனுப்பி புரூஸை தேடச் சொல்லிக் கொண்டிருக்க, புரூஸ் அரை மயக்கத்தில் காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.

அதன் பின்னால் ட்ரக் வந்து சேர்ந்து விட்டது.

விசயத்தை விளக்கி விட்டு மயங்கிக் கிடந்த புரூஸுக்கு அவசரமாக வைத்தியம் பார்த்தனர்.

“நீ மட்டும் எப்படி உள்ள இருந்த?” என்று ராக் கேட்க, ஜெய் தலையை சொறிந்தான்.

“அது வந்து.. என்னை எதுவும் பண்ணிடாதீங்க பாஸ். பாதி வழில பாட்டு கேட்டுட்டே தூங்கிட்டேன். திடீர்னு எந்திரிச்சு பார்த்தா எல்லோரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. உடனே நானும் சண்டை போடலாம்னா என் துப்பாக்கிய காணோம். தேடி எடுக்குறதுக்குள்ள எல்லாரும் ஓடிட்டிங்க. எனக்கு உடனே ஓடத்தோணல.. சுட்டவன் யாருனு பார்த்து அவன கொன்னுட்டு ட்ரக்க எடுத்துட்டு வந்துடலாம்னு வெயிட் பண்ணேன். அப்ப தான் புரூஸும் வந்தான். வேலைய முடிச்சுட்டு வந்துட்டோம்.. இது.. அவனுங்க ஃபோன்.. அவனுங்கள்ள ஒருத்தன பிடிச்சுட்டு வந்துட்டோம். மயங்கி டிக்கில இருக்கான். யாரோ இன்ஃபார்ம் பண்ணிருக்காங்க. நீங்க விசாரிச்சுப்பீங்களேனு…”

தன்னிடமிருந்ததை மொத்தமாக ராக்கின் முன்பு கொட்ட, ராக்கிற்கு பெருமையாக இருந்தது. ஜெய்யிடம் இருக்கும் பிடிவாதத்தை அவன் முதல் நாளை உணர்ந்திருந்தான்.

செய் என்றால் செய்து முடிக்காமல் ஓயாத ரகம் அவன் என்று கணித்தது எவ்வளவு சரியாகி விட்டது. எல்லோரையும் போல் உயிருக்காக ஓடவில்லை. என்ன செய்ய முடியும் என்று பார்த்திருக்கிறான்.

“ரொம்ப பெருமையா இருக்கு ஜெய்.. உன்னை நான் எதுவும் பண்ண மாட்டேன். நீ என் ரெண்டு பெரிய சொத்த காப்பாத்தி கொடுத்துருக்க.. ஒன்னு சரக்கு.. இன்னொன்னு புரூஸ்.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. பணம் வேணுமா? இல்ல எதாவது பிராப்பர்ட்டி வேணுமா? என் கூட இருக்க எதாவது பொண்ணு வேணுமா? எது கேட்டாலும் இன்னைக்கு தர்ரேன்”

ராக் ஆனந்தமாக பேச ,ஜெய் அதிர்ச்சியில் சில நொடிகள் நின்று விட்டு, “எனக்கு பணம் தான் வேணும்” என்றான் பவ்யமாக.

ராக் சிரித்து விட்டு, “உனக்கு எவ்வளவு வேணுமோ கேட்டு வாங்கிக்கோ.. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று ராக் சொன்னதும் ஜெய் சிரித்துக் கொண்டான்.

புரூஸ் சரியானதும் ஜெய் சென்று பார்த்தான்.

“அன்னைக்கு நீ தான் என்னை காப்பாத்துன.. ஆனா பாஸ் நான் உன்னை காப்பாத்துனதா சொல்லுறாரு.. பட் தாங்க்ஸ் புரூஸ்”

ஜெய் சொல்ல புரூஸ் புன்னகையுடன் மறுப்பாக தலையசைத்தான்.

“நீ அவங்க நாலு பேர கொல்லலனா நம்மலால தப்பிச்சுருக்க முடியாது. நம்ம ரெண்டு பேரையும் ஈசியா கொன்னுட்டு எடுத்துட்டு போயிருப்பாங்க”

“மாட்டுனவன் இப்ப வரை எதுவும் வாயத்திறந்து சொல்லல.. நீ கேட்கனும் விட்டு வச்சுருக்காங்க”

“ஓ..”

“சீக்கிரமா சரியாகி வா..” என்று விட்டு ஜெய் எழ, “ஜெய்.. உன் கிட்ட பேசனும்” என்றான்.

ஜெய் அவனையே பார்க்க, “கதவை அடைச்சுட்டு வா” என்றான்.

உடனே ஜெய் கதவை அடைத்து விட்டு புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

“நீ யாரு ஜெய்?”

“இது என்ன கேள்வி? நான் ஜெய்..”

“இல்ல.. நீ நார்மல் மனுசங்க மாதிரி இல்ல..”

“பின்ன? பூதம் மாதிரி இருக்கனா? என்ன சொல்ல வர்ர?”

“நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் கொன்னுருக்கியா? அதாவது இந்த கேங்குக்கு வர்ரதுக்கு முன்னாடி.. யாரையாவது கொன்னுருக்கியா?”

திடீரென ஜெய்யின் உடல் இறுகியது. அவன் உதட்டை கடித்துக் கொண்டு தரையை பார்த்தான்.

“அப்போ கொன்னுருக்க இல்ல? இதுக்கு முன்னாடி நீ வெயிட்டரா வேலை பார்த்தது பொய் இல்ல?”

“நான் வெயிட்டர் தான்” என்று ஜெய் பெருமூச்சு விட்டான்.

“அப்ப யார கொன்ன?”

“ஏன் இப்படி கேட்குற?”

“முதல் ரெண்டு கொலையில யாரும் உன்னை மாதிரி இவ்வளவு கேசுவலா இருக்க மாட்டாங்க. அதுவும் உனக்கு எந்த பாஸ்ட்டும் இல்ல. நார்மல் மனுசனா இருந்துட்டு இவ்வளவு ஈசியா கொலை பண்ண மாட்டாங்க”

“ஆனா நான் கொலைங்கள இங்க வந்தப்புறம் பார்த்துருக்கேனே”

“இல்ல.. பார்க்குறது வேற.. கொல்லுறது வேற.. அந்த எஃபக்ட் உன் கிட்ட இல்ல.. உண்மைய சொல்லு.. யார கொன்ன?”

ஜெய் உதட்டைக்கடித்துக் கொண்டு தரையை பார்த்த வண்ணம் நின்றிருந்தான். அவனது போராட்டத்தை பார்த்துக் கொண்டு புரூஸ் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனுக்கு இன்று பதில் வேண்டும். திரும்பி வந்ததிலிருந்து அவன் தலைக்குள் இது மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.

துப்பாக்கியை பிடிக்கத்தெரியாத ஜெய் கஷ்டப்பட்டு பழகிக் கொண்டாலும், அதை வைத்து இது வரை அவன் யாரையும் காயப்படுத்தியது இல்லை. ஆனால் அன்று எதிரிகள் முன்பு தைரியமாக இறங்கிச் சென்றான்.

அவர்களது காரில் பெட்ரோல் பகுதியில் சுட்டு வாகனத்தை வெடிக்க வைத்து விட்டு அவன் சாதாரணமாக சிரித்தது, இன்னும் புரூஸ் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

“அ.. நீ யாரு கிட்டயும் சொல்லிடாத” என்று கேட்க, புரூஸ் அமைதியாக இருந்தான்.

“முதல் ரெண்டு… அதாவது முதல் கொலை.. நானா பண்ணல.. அதுவா நடந்துடுச்சு..”

“எப்போ?”

“என்னோட ஏழு வயசுல”

புரூஸ் நிமிர்ந்து அமர்ந்தான்.

“ஏழு வயசுலயா?”

ஜெய் தலையாட்டி வைத்தான்.

“எப்படி?”

“நான் ஒரு ஆசிரமத்துல வளர்ந்தேன். அங்க இருந்து ஸ்கூலுக்கு நடந்து தான் போயிட்டு வரனும். என் கூட ஃப்ரண்ட் யாரும் கிடையாது. எப்பவும் தனியா தான் போவேன். அன்னைக்கு போயிட்டு இருக்கப்போ..”

“போனப்போ?”

“ஒருத்தன் என்னை கடத்தினான்.. என் வாய மூடிட்டு தூக்கிட்டு போனான். நான் கத்த பார்த்தேன் முடியல.. அவன் கையை கடிச்சதும் என்னை கீழ விட்டுட்டான். நான் ஓடுனேன். தனி ரோட்டுல இருந்து மெயின் ரோட்டுக்கு வந்துட்டேன். அவன் ஓடி வந்து என்னை பிடிக்கவும், பயந்து அவன பிடிச்சு தள்ளி விட்டு கல்ல எடுத்து அடிச்சுட்டேன். அவன் தலையில ரத்தம் வரவும் பயமா போயிடுச்சு. திரும்பி ஓடும் போது, அவன் துரத்தவும் ரெண்டு பேரும் நடு ரோட்டுக்கு வந்துட்டோம். அவன் என்னை பிடிச்சப்போ வேகமாக உதறிட்டு திரும்புனா, என் கண்ணு முன்னாடி அவன ஒரு லாரி ஏத்திடுச்சு. அங்கயே என்னை பார்த்துட்டே செத்து போயிட்டான்”

புரூஸ் ஜெய்யின் முகத்தை இமைக்காமல் பார்த்தான். நடந்ததை எல்லாம் திரும்ப நினைத்து மனதை வருத்திக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் தெரிந்த பீதியை மறைக்க பார்க்க, அது புரூஸ் கண்ணை விட்டு மறையவில்லை.

“அப்போ நான் தான் அவன கொன்னுட்டேன்.. போலீஸ் பிடிக்க போகுதுனு பயந்து ஆசிரமத்துக்கு ஓடிட்டேன். யாருக்குமே என்ன நடந்துச்சுனு சொல்லல.. பல நாள் பைத்தியம் மாதிரி உட்கார்ந்து அழுதேன். யாரு கேட்டாலும் எதுவும் சொல்லல.. எனக்கு பேய் பிடிச்சுருக்குனு நினைச்சு எல்லாரும் என்னை விட்டு தள்ளி போயிட்டாங்க. நான் இது வரை யாருக்குமே இத சொல்லல”

“புரியுது.. ரெண்டாவது?”

“அது.. அது கொலை இல்ல.. ஆனா அப்ப இருந்து..”

“அப்ப இருந்து என்ன?”

ஜெய் சொன்ன பதிலில் புரூஸ் அதிர்ந்து எழுந்து விட்டான்.