அத்தியாயம் 1
![]()
கலகலவென பேசிக் கொண்டே ஹாஸ்டலுக்குள் நுழைந்தனர் கல்லூரி மாணவிகள்.
“இன்னையோட எல்லாத்தையும் தொலைச்சு தூரம் போட்டுட்டு சந்தோசமா இருக்க போறேன்டி” என்று ஒருத்தி சொல்ல “நிஜம்மாவா சொல்லுற?” என்று கேட்டாள் வேறு ஒருத்தி.
“இதுல என்ன சந்தேகம்?”
“இல்ல.. இப்ப வச்ச செமஸ்டர்ல பாஸாகலனா திரும்ப இதெல்லாம் தேவைப்படும்ல?”
“அடிப்பாவி! உன் வாயில ஹார்பிக் ஊத்தி கழுவுடி.. நானே எப்படா முடிச்சு தலை முழுகுவேன்னு இருக்கேன். இவ சாபம் விட்டு மறுபடியும் படிக்க வச்சுடுவா போல இருக்கே” என்று கொதித்து எழுந்து கேட்டவளின் முதுகில் ஒன்று போட்டாள்.
தோழிகளின் விளையாட்டு பேச்சில் வழக்கம் போல் சிரித்துக் கொண்டு தன் வேலையை பார்த்தாள் சுகப்பிரியா.
“சுகி.. உன்னை கூப்பிட இன்னைக்கு ஆள் வருவாங்கள்ள?”
“ஆமா.. அதான் நேத்தே எல்லாம் பேக் பண்ணிட்டேன்”
“உனக்கு தான்டி கவலையே இல்ல. படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ண ரெடியா ஆளுருக்கு.”
பெரிதாய் பெரு மூச்சு விட “பார்த்து பார்த்து.. பில்டிங் மொத்தமும் பறந்துட போகுது” என்று வம்பிழுத்தாள் வேறு ஒருத்தி.
“நீ பாஸானாலும் இல்லனாலும் பெரிய இடத்து பையன கல்யாணம் பண்ணிட்டு போயிடுவ. எங்கள பாரு.. இத முடிச்சு ஒரு வேலைக்கு போனா தான் இப்ப இருக்க கல்யாண மார்க்கெட்ல எங்க பேரு கூட வரும்”
“ரொம்ப பொறாமை படாதீங்கடி.. எல்லாருக்கும் அம்சமான அத்தை மகன் அவள போல கிடைச்சுடுமா..? அதுக்கெல்லாம் கொஞ்சம் புண்ணியம் பண்ணிருக்கனும். நாம பாவிங்க.”
மூவரும் பேசிக் கொண்டிருக்க சுகப்பிரியா எதை பற்றியும் கவலைபடாமல் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்ப தயாரானாள்.
அவளது கைபேசிக்கு அழைப்பு வந்தது.
“ஏய் வந்துட்டாங்க போல.. எனக்கு இத தூக்கிட்டு போக ஹெல்ப் பண்ணுங்க” என்றதும் ஆளுக்கொன்றாக தூக்கிக் கொண்டனர்.
அதே நேரம் வெளியே பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது.
“ஹலோ சார்.. கார இப்படி பாதையில நிறுத்தி வச்சுருந்தா நாங்க எப்படி போறது? தள்ளி நிறுத்துங்க” என்று மிரட்டிக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
காருக்குள் இருந்தவர்களுக்கு காரை விட்டு இறங்கும் எண்ணமே இல்லை போலும். கண்ணாடியை மட்டும் இறக்கினர்.
“கார ஓரமா நிறுத்துங்க. நடந்து போறவங்களுக்கு பாதை வேணாமா?” என்று கேட்க “நாங்க இப்ப கிளம்பிடுவோமா. ஒரு ஆள கூட்டிட்டு போக வந்தோம்” என்றான் டிரைவர் சீட்டில் இருந்தவன்.
“எல்லாரும் அதுக்கு தான் வந்துருக்காங்க. உங்க கார் இங்க நிக்கிறதால எல்லாரும் சுத்தி சுத்தி போயிட்டு இருக்காங்க தெரியலயா?”
“ரெண்டே நிமிஷத்துல கிளம்பிடுவோம். பக்கத்துல எங்கயும். நிறுத்த முடியாது. சுத்தி எல்லா இடமும் கார் தான் இருக்கு…”
பேசிக் கொண்டிருக்கும் போதே ஹாஸ்டல் செக்யூரிட்டி வந்து விட்டார்.
“சார் பாதையில கார நிறுத்திருக்கீங்க. பின்னாடி நிறுத்துங்க” என்று சொல்ல “இத தான் தாத்தா நானும் சொல்லுறேன். அசைய மாட்டேங்குறாங்க” என்று கோபமாக பேசினாள்.
திடீரென காரின் பின் பக்க கதவு திறக்க ‘பின்னாடி எவனோ உட்கார்ந்துருக்கான்’ என்று புரிந்தது.
யாரென பார்க்கும் முன் “ரோஷ்.. என்ன இங்க நிக்கிற?” என்று கேட்டுக் கொண்டு வந்தாள் சுகப்பிரியா.
“இந்த கார…”
“எங்க கார் தான். என்னை கூப்பிட வந்தது”
“ஓஹோ.. சரி லக்கேஜ ஏத்துங்க” என்று விட்டு செக்யூரிட்டி தள்ளி நிற்க தோழிகள் எல்லோரும் பெட்டிகளை உள்ளே வைத்தனர்.
“அவ்வளவு சொல்லியும் அசையல பாருங்களேன்” என்று ரோஷினி முணுமுணுக்க “விடுமா.. இந்த புள்ள தான் வந்துடுச்சே” என்றார் செக்யூரிட்டி.
“ஆனா ரூல்ஸ் ரூல்ஸ் தான் தாத்தா. மத்தவங்களும் பிக் அப் பண்ண தான வந்துருக்காங்க? இவங்க மட்டும் என்ன ஸ்பெஷல்? ஃபாரின்ல எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ரூல்ஸ் பிரேக் பண்ண மாட்டாங்க. இங்க தான் பெரிய மனுசங்க எந்த ரூல்ஸ் வேணா பிரேக் பண்ணலாம்னு தலைக்கணம்”
“நாம ஒன்னும் சொல்ல முடியாது. நீ தள்ளி வா. அவங்க கிளம்பட்டும்”
இது எதுவும் சுகப்பிரியாவின் காதில் விழவில்லை என்றாலும் காரின் உள்ளே இருந்தவர்களின் காதில் நன்றாக விழுந்தது.
“கிளம்புறேன்..” என்ற சுகப்பிரியா மற்றவர்களிடம் சொல்லி விட்டு காரில் ஏறி விட்டாள். காரும் அடுத்த நொடி கிளம்பி விட்டது.
“நீங்க வருவீங்கனு எதிர் பார்க்கல.. தாங்க்ஸ்” என்று சுகப்பிரியா சந்தோசமாக பேச்சை ஆரம்பிக்க “அவ யாரு?” என்று கேட்டான் சத்ருகணன்.
“யார கேட்குறீங்க?”
“நீ வரும் போது இங்க இருந்தாளே”
“அதுவா.. அந்த பொண்ணு ரோஷினி. என் கூட படிச்ச பொண்ணு. காலேஜ் ஸ்டூடண்ட் ரெப்.”
கேட்டுக் கொண்டதற்கு அறிகுறியாக தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.
அதற்கு மேல் பேசாமல் சுகப்பிரியாவும் திரும்பிக் கொண்டாள். பயணம் மௌனமாக கடந்தது.
°°°
ரோஷினி தன் உடமைகளோடு ஊர் வந்து சேர்ந்தாள். டாக்ஸியை பிடித்து வீட்டுக்கு வந்தவளை வரவேற்றது பூட்டியிருந்த வீடு.
டாக்ஸிக்கு பணத்தை கொடுத்து விட்டு தன்னிடமிருந்த சாவியை கொண்டு கதவை திறந்தாள்.
வீட்டில் தூசி படிந்திருந்தது. தூசி நெடி தாங்காமல் முகத்தை சுருக்கியவள் “இத யாரையாச்சும் விட்டு கிளீன் பண்ண சொல்லனும்” என்றபடி உள்ளே சென்றாள்.
ஆனால் வீடு மொத்தமும் தூசி படிந்திருக்க அவளால் ஒரு நொடி கூட தும்மாமல் இருக்க முடியவில்லை.
“க்ளீன் பண்ணாம தங்க முடியாது போலருக்கே? என்ன செய்யலாம்?” என்று நடுவீட்டில் நின்று யோசித்துக் கொண்டிருக்க அவளது கைபேசி இசைக்க ஆரம்பித்தது.
ரஞ்சித் பெயரை பார்த்ததும் புன்னகை மலர காதில் வைத்தாள்.
“ஹலோ”
“ரோஷ்.. வீட்டுக்கு போயிட்டியா?”
“வந்துட்டேன். செம்ம டஸ்ட்ணா. ஆறுமாசமா க்ளீன் பண்ணாம விட்டது. உள்ள நுழைய முடியல”
“நீ ரெண்டு நாள் தான இருப்பனு க்ளீன் பண்ண சொல்லலடா.. நீ உன் பேக் எல்லாம் எடுத்துட்டு மலர் சித்தி வீட்டுக்கு போயிடுறியா?”
“அங்கயா?”
“ரெண்டு நாள் தானடா? அப்புறம் வேலைக்கு வேற ஹாஸ்டல்ல போய் சேர்ந்துடுவ”
“நோ அண்ணா.. நான் இனி ஹாஸ்டல்ல தங்குறதா இல்ல”
“என்ன சொல்லுற?”
“நான் வேற முடிவுல இருக்கேன். இத அப்புறமா பேசுவோம். இப்ப சித்தி வீட்டுக்கு தான் போகனும் போல. இங்க இருக்கது கஷ்டம். ரெண்டு நாளும் க்ளீன் பண்ணியே நான் நேரத்த ஓட்டனும் அப்புறம்”
“அப்ப நான் சித்திய ஆட்டோ அனுப்ப சொல்லுறேன். அது வரை அங்கயே இரு”
“ஓகே”
அழைப்பை துண்டித்ததும் மலருக்கு உடனே அழைத்து சொல்ல மலரும் சந்தோசமாக ஆட்டோவை அனுப்பி விட்டார்.
ரோஷினியும் சித்தியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
“நீ நேரா இங்கயே வந்துருக்கலாம்” என்று மலர் குறைபட “அண்ணா க்ளீன் பண்ணி வச்சுருப்பான்னு நினைச்சேன் சித்தி. அவன் இத சொல்லவே இல்ல. திரும்ப பேசட்டும் பார்த்துக்கிறேன் அவன” என்றாள்.
“சரி முகத்த கழுவிட்டு வா. டீ போட்டு வைக்கிறேன்” என்றவர் வேலையை பார்க்க ஆரம்பிக்க “சித்தப்பா எங்க?” என்று கேட்டாள்.
“அவர் ஊருல இல்ல. ஒரு வாரம் வேலை விசயமா ஆந்திரா வரை போயிருக்காரு.”
“அப்ப உங்களுக்கு துணை நான் எனக்கு துணை நீங்க” என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு முகம் கழுவ சென்றாள்.
ரோஷினி. தாய் தந்தை இறந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. அவளுடைய ஒரே அண்ணன் ரஞ்சித் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலையில் இருக்கிறான். ரோஷினி இந்த வருடத்தோடு படிப்பை முடித்து விட்டாள்.
அவளுக்கு பிடித்த டூரிஸம் படித்திருந்தாள். கல்லூரியில் வைத்த கேம்பஸ் இன்டர்வியூவில் வேலையும் கிடைத்து விட்டது. மிகப்பெரிய டூரிஸ்ட் நிறுவனம் அது. அங்கு வேலை கிடைத்ததே அவளுக்கு பெரிய ஆனந்தம். இன்னும் சில நாட்களில் அங்கு வேலைக்கு சேர வேண்டும். ஒரு மாதம் ட்ரைனியாக இருந்து விட்டால் வேலை நிரந்தரமாகி விடும்.
அதற்காக சென்னை செல்ல வேண்டும். ட்ரைனி பீரியட் முடிந்ததும் வேலை வேறு ஊருக்கு மாறலாம் என்று சொல்லியிருந்தனர். அதனால் ஹாஸ்டலில் தங்குவதற்கு அவளுக்கு விருப்பமில்லை.
ஹாஸ்டலில் தங்குவது அவளது வேலைக்கும் சரிவராது. எதாவது வீடு தான் பார்க்க வேண்டும். அதுவும் தற்காலிகமாக. வேலை சென்னையிலேயே இருந்து விட்டால் நிரந்தரமாக வீடு பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.
முகம் கழுவி வந்து தேநீரை குடித்துக் கொண்டே மலரிடம் விசயத்தை சொல்லி முடித்தாள்.
“அதுக்காக தெரியாத இடத்துல தனியா தங்குறது ரிஸ்க் இல்லையாமா?”
“அத தான் இப்ப யோசிச்சுட்டு இருக்கேன். எங்கயாவது பேயிங் கெஸ்ட்டா ஒரு மாசம் தங்குனா போதும். அப்புறம் அரேன்ஜ் பண்ணிக்கலாம்”
“உங்க சித்தப்பா கிட்ட கேட்டு பார்ப்போம் இரு” என்றவர் உடனே கணவருக்கு அழைத்து விசயத்தை கூறினார்.
“சென்னையில எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான். வேலை முடிஞ்சதும் கேட்டு சொல்லுறேன்” என்றார் சித்தப்பா ஆறுமுகம்.
இரவு உணவை இருவரும் சமைத்து சாப்பிட்டனர். ரோஷினி கல்லூரி கதைகளை எல்லாம் சொல்ல நேரம் பறந்து போனது.
“உங்கம்மா அப்பா இருந்துருந்தா இப்ப ரொம்ப சந்தோசபட்டுருப்பாங்க” என்ற மலருக்கு வருத்தமாக இருந்தது.
“அவங்க இப்பவும் இருப்பாங்க சித்தி. நானே தைரியமா இருக்கேன். நீங்க ரொம்ப எமோஷனலாகுறீங்களே?”
“சரி விடு. போனவங்க சாமியா இருந்து உங்க ரெண்டு பேரையும் பார்த்தா போதும்” என்று மனதை தேற்றிக் கொண்டார்.
இரவு தூங்கும் முன் ஆறுமுகம் அழைத்தார்.
“என் ஃப்ரண்ட் கிட்ட பேசிட்டேன். அவனுக்கு தெரிஞ்சவங்க வீடு இருக்காம். அங்க ஒரு வயசான அம்மா தனியா இருங்காங்களாம். அவங்க கூட ஒரு மாசம் தங்குறதுனா பிரச்சனை வராதுனு சொன்னான். வீடும் உங்க ஆஃபிஸுக்கு பக்கம் தான். ஆனா காசு மட்டும் சரியா கொடுக்கனும். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுனு சொல்லுறான். எனக்கு சரினு தோனுது. நீ என்னமா சொல்லுற?”
“எனக்கும் ஓகே தான் சித்தப்பா. பக்கத்துல இருந்தா போதும். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்”
“அப்ப சரினு சொல்லிடுறேன். நீ என்னைக்கு கிளம்பனும்?”
“அங்க வேலையில சேர நாள் இருக்கு. ஆனா முன்னாடியே போனா அக்கம் பக்கம் பழகிக்கலாம்”
“சரி எப்ப கிளம்புறீங்க? நான் இப்போ வர முடியாது. வேலை இருக்கு. சித்தி கூட போறியா? இல்ல உன் அண்ணன வர சொல்லவா?”
“அவன் வேலைய விட்டு வர மாட்டான். கேட்டு பார்க்குறேன்”
“அவன் வரலனா நாங்களே கிளம்பி போறோம். ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று மலர் சொல்லி விட பயணம் உறுதியானது.
மறுநாள் முழுவதும் திட்டம் போட்டு விட்டு அடுத்த நாள் சென்னை நோக்கி பயணித்தாள் ரோஷினி. அவளது வாழ்வின் புது அத்தியாங்களும் திறக்க காத்திருந்தன.
தொடரும்.
