அத்தியாயம் 10
![]()
சோபனாவிற்கு பதட்டத்தில் வியர்த்து கொட்டியது. முதலில் ரஞ்சித்திடம் விசயத்தை சொல்லி விட்டு பிறகு மெதுவாக வீட்டில் காதல் விசயத்தை திறக்க நினைத்திருந்தாள்.
ஆனால் இப்படி அவசரமாக விசயம் வெளியே வந்து விடும் என்று எதிர்பார்க்கவில்லை. தாயின் பார்வை அவளை துளைத்தது.
கௌசல்யாவிற்கு மகளின் மீது பெருத்த ஏமாற்றம் என்று தெரியும். ஆனால் இப்போது அதை விட பெரிய பிரச்சனை ரஞ்சித் தான்.
அவனிடம் அவளது குடும்பத்தை பற்றிப் பொய் சொல்லி வைத்திருக்கிறாள். ரஞ்சித்தை விரும்பிய போது அவன் பணக்கார பெண்களிடம் ஒதுங்கிப்போவதை கண்டு தான் தன்னை பற்றிய உண்மையை மறைத்தாள்.
உண்மையில் ரஞ்சித்தும் கூட அதனால் தான் சோபனாவுடன் இயல்பாக பழகினான். ஆனால் எல்லாமே இப்போது இக்கட்டான நிலையில் வந்து நிற்கிறது.
அவனை பெற்றவர்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பில்லை. ரஞ்சித் நல்லவன். சத்ருகணனை விட நல்லவன். அவனை நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும்.
ஆனால் ரஞ்சித்துக்கு தன் குடும்பத்தை பிடிக்குமா? அந்த கேள்வி தான் பெரிதாக எழுந்து நின்றது.
“கடவுளே.. இப்படியா சோதிப்ப? இப்ப ரஞ்சித் கிட்ட என்ன சொல்லி வரச்சொல்லுவேன். அய்யோ..” என்று தலையை பிடித்துக் கொண்டாள்.
வேறு வழி இல்லை. வர வைக்க வேண்டும். இல்லை என்றால் விவரங்களை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் சத்ருகணன் தேடிப்போய் விடுவான். ரஞ்சித்தை அவன் என்ன செய்வான் என்றே கணிக்க முடியாது. வீட்டுக்கு வர வைப்பது தான் ரஞ்சித்துக்கு பாதுகாப்பு.
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க கைபேசி அழைத்தது. ரஞ்சித்தின் எண்ணை பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.
“இவன் ஏன் கூப்பிடுறான்? போச்சு.” என்று கையை உதறியவளுக்கு அதை எடுக்க மனம் வரவில்லை. அழைப்பு நின்று போனதும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள்.
ரஞ்சித்திடமிருந்து செய்தி வந்து விழுந்தது. இன்னும் இரண்டு நாள் விடுமுறையை தங்கைக்காக நீடித்திருப்பதாக சொல்லி இருந்தான்.
“இது வேறயா? அவளுக்காக என்னவும் செய்வான் இவன்” என்று எரிச்சலாக நினைத்தவளுக்கு சட்டென மனம் ஒரு முடிவுக்கு வந்தது.
“உன் தங்கச்சிக்காக என்னவும் செய்யுறல? அப்ப எனக்காக என்ன செய்வ? இது தான் சரியான நேரம். என்னை உண்மையா லவ் பண்ணா என்னோட பேக்ரவுண்ட் தெரிஞ்சும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கனும். அப்படி இல்லனு சொன்னா… சொல்லக்கூடாது. சொல்ல விட மாட்டேன்”
வீம்பாக ஒரு முடிவுக்கு வந்தவள் எப்படி பேசுவது என்று யோசிக்க ஆரம்பித்தாள். யோசனையில் எத்தனை மணி நேரம் கடந்ததோ? சமையல் செய்யும் பெண் வந்து கதவை தட்டினாள்.
“சாப்பாடு ரெடிமா” என்றதும் யோசனை கலைந்து கீழே வந்தாள்.
தாய் தந்தை இருவரும் இருக்க அமைதியாக வந்து அமர்ந்து கொண்டாள். தலையை உயர்த்தி பார்க்க முடியவில்லை. தட்டையே பார்த்தபடி சாப்பிட ஆரம்பித்தாள்.
அவர்களும் ஆளுக்கொரு யோசனையுடன் சாப்பிட்டு முடித்தனர்.
°°°°
சத்ருகணன் ரோஷினி பேசியதை நினைத்துக் கொண்டிருந்தான். பாட்டியின் வீட்டில் தங்கச் சொன்னால் முடியாது என்று மறுத்து விட்டாள்.
“இங்க நான் பேயிங் கெஸ்ட். இப்படியே காலம் முழுக்க என்னால வாழ முடியாது. எனக்குனு தனி வீடு தனி வாழ்க்கை இருக்கு சார். என் குடும்பம் இருக்கு. அதுக்காக நான் வாழனும். பாட்டி நல்லவங்க தான். ஆனா எனக்கு இது அடுத்தவங்க வீடு. என் வீடு இல்ல”
“ஆனா தனியா தங்குறது அவ்வளவு பாதுகாப்பு இல்ல ரோஷினி. உலகம் தெரியாத அப்பாவி இல்ல நீனு நினைக்கிறேன்”
“அக்கறைக்கு நன்றி. ஆனா அத நான் பார்த்துக்கிறேன்”
அமைதியான குரலில் சொன்னாலும் அது அவனை தள்ளி நிறுத்தி விட்டது. அவனுக்கு கோபமும் வந்து விட்டது.
உடனே ஹீட்டரை என்னவென்று பார்த்து விட்டு பாட்டியிடம் பேசி விட்டு கிளம்பி விட்டான். மறந்து கூட ரோஷினியின் பக்கம் திரும்பவில்லை. அவளும் எதுவுமே பேசவில்லை.
‘அக்கறைக்கு நன்றியாமே? என்ன செய்யுறானு பார்க்குறேன்’ என்று நினைத்தவன் வேறு வீடு பார்க்க விடாமல் அவளை தடுக்க நினைத்தான்.
°°°
ரோஷினி மெத்தையில் படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவோ எல்லாம் உடைந்தது போல் இருந்தது. ஆனால் எதுவும் உடையவில்லை.
சத்ருகணன் வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
இருவரும் எப்போதும் குடும்ப விசயத்தை பேசியது இல்லை. குடும்பத்துக்குள் நுழையும் அளவு இருவரும் நெருங்கவில்லை. காலையில் வேலைக்குச் சென்றால் மாலை தான் வருவாள். வந்ததும் எதாவது புதிதாக சமைக்க கற்றுக் கொள்வாள். சமையல் முடிந்து சாப்பிட்டு தூங்கும் முன்பு எதாவது திரைப்படத்தை பார்ப்பார்கள். பிறகு தூங்கிவிடுவார்கள்.
விடுமுறை நாட்களில் ரோஷினி தனியாகவே ஊரை பார்க்க சென்று விடுவாள். பாட்டியை பார்க்க யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் முன்பு நந்தியாக நிற்க அவளுக்கு விருப்பமில்லை.
இப்படித்தான் இந்த ஒரு மாதமும் கடந்தது. எப்போதாவது எங்காவது தான் குடும்ப விசயத்தை பகிர்ந்து கொள்வார்கள்.
இன்று அவள் வேறு வீடு பார்ப்பதை பற்றி பேசி விட்டு செல்ல பாட்டிக்கு வருத்தம் தான். ஆனால் உடனே மனதை மாற்றிக் கொண்டார்.
“என் சொந்த பேத்தி பேரனுங்களே தனியா இருக்க தான் ஆசைப்படுறாங்க. உனக்கும் இருக்கும்ல? பத்திரமான இடத்துல போய் இருந்தனா சரிதான்”
ரோஷினி உடனே புன்னகைத்து “கண்டிப்பா பாட்டி” என்றாள்.
“பக்கத்துலயே ஒரு நல்லா வீடா பார்த்தா நல்லா இருக்கும். அப்ப அப்ப நேர்லயும் பார்த்துக்கலாம்”
“இல்லனாலும் எனக்கு நேரம் கிடைச்சா வர்ரேன்”
“இப்படி தான் என் பேரனும் சொல்லுவான். ஆனா ஒவ்வொரு தடவையும் நான் தான் அவன கூப்பிடனும். முதல்ல அவனுக்கு கல்யாணத்த முடிக்கனும். அப்ப தான் அவன் பொண்டாட்டிய விட்டு இழுத்துட்டு வர வைக்க முடியும். சுகப்பிரியா நல்ல பொண்ணு. நான் சொன்னா கேட்பா. அவன் காத பிடிச்சு இழுத்துட்டு வானு சொன்னா கண்டிப்பா கூட்டிட்டு வந்துடுவா”
பேச்சோடு பேச்சாக சுகப்பிரியா யாரென்று வெளியே வந்து விட்டது.
‘சுகப்பிரியா சத்ருகணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணாக இருக்க வேண்டும்’ என்று மூளை சரியாக கணித்து விட ரோஷினிக்கு ஒரு நிமிடம் மூச்சு நின்று வந்தது.
‘ஏற்கனவே நிச்சயமானவனா?’ என்று நினைத்தவளுக்கு என்னவோ வருத்தமாக இருந்தது. ஆனால் சில நிமிடங்களில் தன்னையே தேற்றிக் கொண்டாள்.
‘யாரு யார கல்யாணம் பண்ணா நமக்கென்ன? ஜஸ்ட் பார்க்க அழகா இருந்தான். சைட் அடிச்சோம். கல்யாணம் பண்ணுனா.. நல்லா இருனு சொல்லிட்டு போக வேண்டியது தான்’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு சமாதானம் ஆகி விட்டாள்.
ஆனதாக தான் நினைத்தாள். ஆனால் இல்லை என்று சத்ருகணன் வந்ததும் புரிந்தது. அவனை பார்க்க விருப்பமில்லை. அதனால் தான் அங்கிருந்து நழுவினாள். ஆனால் அவன் விடவில்லையே. தேடி வந்து பேசும் போது அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
‘இவன் ஆஃபிஸ்ல பாஸ்னா? என் பர்ஸ்னல் வியத்துல நுழையுவானா? அக்கறைனா? அவன் கம்பெனில வேலை பார்க்குற அத்தனை பொண்ணுங்களையும் இங்க தங்க வச்சுடுவானா?’ என்று கோபம் கோபமாக வந்தது.
எதற்கு இப்படி சம்பந்தமில்லாமல் கோபப்படுகிறோம்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாலும் அவளால் இயல்பாய் இருக்கவே முடியவில்லை.
பேசி விட்டு இப்போது வருத்தப்பட்டாள். அந்த வருத்தத்துடனே பாதி இரவை கழித்து விட்டுத்தான் தூங்கவே ஆரம்பித்தாள்.
தொடரும்.

Sis whatsapp channel link kudunga please
https://whatsapp.com/channel/0029VaKn3j8J3jv4gccYPu2S