அத்தியாயம் 11

Loading

வேலை முடிந்து ரோஷினி வீடு வந்து சேர்ந்தாள். அவள் வரும் போது சித்தப்பா சித்தி ரஞ்சித் மூவருமே இருந்தனர்.

“வீடு பார்த்தீங்களா? எதாவது பிடிச்சதா?” என்று கேட்டுக் கொண்டே அருகே வந்தாள்.

“பார்த்துருக்கோம் ரோஷி.. இப்ப போய் முகம் கழுவிட்டு ரெடியாகிட்டுவா”

“ரெடியா? எனக்கு வேலை இருக்கு சித்தி. நீங்க பார்த்து ஓகே சொன்னா போதும். நான் வேற…”

“அது இல்லமா.. நாம வேற இடத்துக்கு போறோம். நீ கிளம்பி வா போ”

புருவம் உயர்த்தி ஆச்சரியமாக பார்த்தவள் ரஞ்சித்தை பார்த்தாள். அவன் முகத்தில் கொஞ்சமும் வெளிச்சம் இல்லை. மிகவும் சோகமாக அதை மறைத்துக் கொண்டு அமர்ந்திருப்பது போல் இருந்தது.

‘ஏன் இப்படி இருக்கான்?’ என்று புரியாமல் பார்த்தவள் பாட்டியை பார்க்க “உன் கிட்ட சேலை இருந்தா கட்டிட்டு வா” என்றார்.

“சேலையா?”

“ஆமா.. உடனே கிளம்பு.. போ.. நாங்க உனக்காக தான் உட்கார்ந்து இருந்தோம்”

“என்ன நடக்குதுனு தெரியல.. இருந்தாலும்.. ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்றவள் அறைக்குள் செல்ல “நீ போய் சேலைய எடுத்து கட்ட வை. கதை எதுவும் பேசாம வேகமா கிளம்பனும்” என்று சித்தியை பாட்டி அனுப்பி வைத்தார்.

மலரும் உடனே எழுந்து சென்றார். ரோஷினி சேலையை தேட ஆரம்பிக்க “நான் எடுத்து தர்ரேன். நீ போய் முகத்த கழுவிட்டு வா” என்றவர் நல்ல சேலை ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

ரோஷினி வந்ததுமே அவளுக்கு சேலையும் கட்டி விட்டார்.

“என்ன அவசரம் சித்தி? எதுக்கு இந்த அலங்காரம்?”

“உன் அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம்”

“வாட்? என் கிட்ட சொல்லவே இல்ல. அவனுக்கு ஓகேவா?”

“பொண்ணே அவன் பார்த்தது தான்.. இந்த செயின மாட்டு” என்று அலங்காரத்தை தொடர்ந்தபடி பேசினார்.

“அவனா? அப்ப.. லவ்வரா?” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“ஆமா. திடீர்னு வந்து சொல்லுறான். அந்த பொண்ணு வீட்டுல வேற மாப்பிள்ளை பார்க்குறாங்களாம். இவனுக்கு உன்னை விட்டுட்டு கல்யாணம் பண்ண இஷ்டமில்லங்குறான். ஆனா அந்த பொண்ணு அவசரபடுத்துறா போல. குடும்பமா வந்து பேசுனு கேட்டுருக்கா. நாம தான் இங்க இருக்கோமே.. கையோட வேலைய முடிச்சுடலாம்னு கூப்பிடுறான். இதுவும் நல்லது தான? எத்தனை நாளுக்கு நீங்க தனியா இருப்பீங்க? கல்யாணம் நடந்தா குடும்ப அமைப்பு வந்துடும்.”

மலர் பேசிக் கொண்டே போக ரோஷினி மௌனமாக கிளம்பினாள். அன்று கேட்ட போது எதுவும் சொல்லவில்லையே? வேறு எதாவது காரணம் இருக்குமோ? சரி அவனுக்கு பிடித்தால் போதும் என்று மனதை தேற்றிக் கொண்டாள்.

அவள் கிளம்பி வெளியே வர, பாட்டியோடு எல்லோருமே கிளம்பினர்.

பாட்டிக்கு வர விருப்பமில்லை தான். ஆனால் மலர் கேட்ட போது மறுக்கவும் முடியவில்லை.

அதனால் அவர்களோடு ஒன்றாக கிளம்பினார். பாட்டியின் காரில் எல்லோரும் ஏறிக் கொண்டனர்.

கார் மிகவும் அமைதியாக இருந்தது. ரஞ்சித் காரோட்டியிடம் முகவரியை சொல்ல அவன் விசித்திரமாக பார்த்தான்.

“இந்த வீட்டுக்கா போகனும்?”

“ஆமாங்க. ஏன்?”

“இது நம்ம அம்மாவோட பையன் வீடுங்க” என்று கிளம்பும் போதே ஒரு குண்டை போட்டு விட்டு காரை எடுத்தார்.

எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்க அமுதா பாட்டி மட்டும் ஆராய்ச்சியாக பார்த்தார்.

“குமார் வீடா?” என்று பாட்டி கேட்க, “ஆமாமா.. அந்த வீட்டு அட்ரஸ் தான் தம்பி கொடுத்தாப்புல” என்றார் டிரைவர்.

“ரஞ்சித்.. அந்த பொண்ணு பேரென்ன?”

“சோபனா” என்றவனின் குரலில் என்ன இருந்தது என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.

“என் பேத்தி தான்” என்றவர் வேறு எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தார்.

சித்தப்பா சித்தி தான் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.

கார் பயணம் மிகவும் அசௌகரியமாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு கவலை என்றால் ரோஷினிக்கு ஒரு கவலை. சோபனா சத்ருகணனின் தங்கை. உள்ளம் என்னவோ செய்தது.

அடக்கடவுளே! சுற்றி சுற்றி அவனிடமே வருவது போல் இருந்தது. அவனது பாட்டி வீட்டில் தங்கி, அவனிடமே வேலை பார்த்து, இப்போது அவன் வீட்டுக்கு பெண் பார்க்க செல்கின்றனர்.

‘இவனுக்கு அந்த பொண்ணு தான் கிடைக்கனுமா?’ என்று நினைத்தவளுக்கு இதற்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

‘அவங்க பெரிய பணக்காரவங்க. நம்மல எதாவது பேசிட்டா என்ன பண்ணுறது?’ என்று கவலை கொண்டிருந்தார் மலர்.

அதே கவலை தான் ஆறுமுகத்திற்கும் இருந்தது. எதாவது தரக்குறைவாக பேசி விட்டால் பொறுமைகாக்க வேண்டும் என்று அப்போதே நினைத்துக் கொண்டார்.

ரஞ்சித்தோ பாட்டியோ எதுவும் பேசாமல் தங்களது யோசனைக்குள் மூழ்கி போயிருந்தனர்.

வீடும் வந்து விட்டது. பாட்டியின் காரை பார்த்ததும் உடனே கதவு திறக்கப்பட்டது. காருக்குள் இருந்தே வீட்டை பார்த்த ரஞ்சித் கஷ்டப்பட்டு உணர்வுகளை அடக்கினான்.

ரோஷினிக்கு இதயம் எகிறி குதித்தது.

‘கடவுளே.. எந்த பிரச்சனையும் வர கூடாதுபா’ என்று அவசரமாக கடவுளை துணைக்கு அழைத்தார் மலர்.

கார் நின்றதும் எல்லோருமே இறங்கினர்.

பாட்டியின் காரை பார்த்து விட்டு ஓடி வந்த சோபனா ரஞ்சித்தை பார்த்து விட்டு சட்டென நின்று விட்டாள்.

பாட்டி வந்தது தனக்கு பாதுகாப்பு என்று நினைத்து ஓடி வந்தவள் அதே காரில் மற்றவர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

உதட்டை கடித்தபடி ரஞ்சித்தை பார்க்க அவனும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பினான்.

“சோபிமா..”

“வாங்க பாட்டி.. வாங்க” என்று மற்றவர்களையும் வரவேற்றவள் ரோஷினியை தலை முதல் கால் வரை பார்த்தாள்.

பெரிய அலங்காரம் இல்லை என்றாலும் சேலையில் அழகாக இருந்தாள்.

‘இவளா இப்ப முக்கியம்? நம்ம வாழ்க்கைய பார்ப்போம்’ என்று நினைத்தவள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

“ம்மா.. வந்துட்டாங்க” என்று கூற, கௌசல்யா சற்று சலிப்புடன் தான் வெளியே வந்தார். ஆனால் அங்கு மாமியாரை பார்த்தும் விழி விரிந்தது.

“வாங்க அத்தை..” என்று அவசரமாக வரவேற்றவர் மற்றவர்களை பார்க்க “வந்தவங்கள உட்கார சொல்ல மாட்டியா?” என்று கேட்டார் அமுதா.

“உட்காருங்க.. உட்காருங்க.. நீங்க திடீர்னு வருவீங்கனு எதிர்பார்க்கல..”

எல்லோரும் அமர்ந்ததும் “எல்லோருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வா” என்று வேலைக்கார பெண்ணை ஏவினார் கௌசல்யா.

“நில்லுமா.. எனக்கு காபி வேணாம். சூடா பால மட்டும் காய்ச்சி எடுத்துட்டு வா. மத்த எல்லாருக்கும் காபி போடு” என்றதும் சமையல் பெண் தலையை ஆட்டிச் சென்றாள்.

“எங்க அவன்?”

“போன் பேசிட்டு இருக்கார் அத்த”

“அப்பாவ கூப்பிடு சோபி” என்று பேத்தியிடம் சொல்ல ரஞ்சித்தையே பார்த்திருந்தவள் உடனே தலையாட்டி விட்டு தந்தையை தேடிச் சென்றாள்.

“எப்படி இருக்கீங்க? என்னை பார்க்க கூட வர்ரது இல்ல”

“இல்ல அத்த.. வேலை இருந்தது அதான்”

“அதுக்காக? ஒரு நாள் கூட லீவ் இல்லாமலா வேலை பார்க்குறீங்க?”

பாட்டி மருமகளை பிடித்துக் கொள்ள கௌசல்யாவுக்கு கடுப்பாக இருந்தது.

வந்துருப்பவர்கள் முன்னால் இப்படி பேசுகிறாரே என்று.

“உங்க பையன்..” என்று அவசரமாக கணவனை மாட்டி விட்டார்.

குமாரவேல் வந்ததும் தாயை நலம் விசாரித்து மற்றவர்களை வரவேற்று முடிக்க சத்ருகணன் வந்து விட்டான்.

“வா கண்ணா.. வந்து உட்காரு.. சரியான நேரத்துக்கு தான் வந்துருக்க” என்று பேரனை அழைத்து அருகே அமர வைத்தார் அமுதா.

சத்ருகணன் பார்வை நொடியில் எல்லோரிடமும் சென்று வந்தது. முக்கியமாக சேலையில் இருந்த ரோஷினியிடம் இருமுறை சென்று வந்தது.

‘இவளுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்? சொந்தமா?’ என்ற கேள்வி மனதில் எழ வேறு எதையும் கேட்காமல் பார்த்திருந்தான்.

“சோபனா.. என்னனு சொல்லு.. ரஞ்சித் எங்கள கூட்டிட்டு வர்ரப்போ எதோ சொன்னான்.. என்ன விசயம்?”

பாட்டி பெரியவராக தானே முன் வந்து ஆரம்பிக்க மற்றவர்கள் அமைதிகாத்தனர்.

சோபனா ரஞ்சித்தை பார்த்து விட்டு “நானும் இவரும்.. லவ் பண்ணுறோம் பாட்டி” என்றாள் தலையை தொங்க போட்டுக் கொண்டு.

“எவ்வளவு நாளா?”

“ரெண்டு வருசமா”

“சரி அப்புறம்?”

“நேத்து அப்பா அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்குறத பத்தி பேசுனாங்க. எனக்கு இவர தான் பிடிச்சுருக்குனு சொன்னேன். நேர்ல கூட்டிட்டு வர சொன்னாங்க. அதான்…”

அப்படியே நிறுத்தி விட்டு நிமிர்ந்து பாட்டியை பார்த்தாள்.

“நீ என்னபா சொல்லுற?”

ரஞ்சித்தை கேட்க “உண்மை தான் பாட்டி. நாங்க லவ் பண்ணிட்டு தான் இருந்தோம்.” என்றான்.

“இனி பெத்தவங்க முடிவு. நீங்க என்ன செய்யலாம்னு இருக்கீங்க?” என்று மகன் மருமகளை கேட்க குமாரவேல் தொண்டையை கணைத்துக் கொண்டார்.

“நீயும் சோபியும் ஒரே கம்பெனில தான் வேலை பார்க்குறீங்களா?”

“ஆமாங்க”

“என்ன சம்பளம்?”

பதில் சொன்னான்.

“நீங்க?” என்று சித்தி சித்தப்பாவை பார்க்க “நான் இவன் அம்மாவோட தங்கச்சி சித்தி. இவரு என் வீட்டுக்கார். இவ ரஞ்சித் தங்கச்சி. ரோஷினி” என்று அறிமுகம் செய்து வைத்தார் மலர்.

“அண்ணனும் அண்ணியும் இறந்து போய் அஞ்சு வருசம் ஆகுது. அதுக்கப்புறம் புள்ளைங்க தானா தான் வளருறாங்க. ரஞ்சித் அப்பவே வேலை பார்த்துட்டு இருந்ததால தெரியல. ரோஷினி அப்ப தான் காலேஜ் சேர்ந்தா. இப்ப படிச்சு முடிச்சுட்டு வேலை செய்யுறா. இவங்களுக்கு இப்ப அம்மா அப்பா சித்தி சித்தப்பா எல்லாம் நாங்க தான். எங்க புள்ளைங்க தான்‌ ரெண்டு பேரும்” என்று ஆறுமுகம் சொல்ல மற்றவர்கள் புரிந்து கொண்டதாக தலையசைத்தனர்.

“சொத்து பத்து எல்லாம்?” என்று குமாரவேல் விசாரிக்க அதற்கு ஆறுமுகமே பதிலளித்தார்.

“உங்க அளவுக்கு வசதி எங்களுக்கு இல்ல தான். ஆனா பையன் தங்கமான பையன். எங்க வீட்டு புள்ளைங்குறதுக்காக சொல்லல.. உங்க அம்மா கிட்டயே கேட்டு பாருங்க. உங்க பொண்ண நல்லா வச்சுப்பான்.” என்று ஆறுமுகம் உறுதி கொடுக்க சோபனா எதிர்பார்ப்போடு தந்தையை பார்த்தாள்.

“இப்ப சொத்து பிரச்சனை இல்லைங்க. என்ன ஆளுங்கனு கூட இப்ப கவலை படல. ஆனா அப்பா அம்மா இல்லாத வீடு. என் பொண்ணு அங்க வந்தா அவள பார்த்துக்கவும் ஆள் வேணும்ல?” என்று முதல் முறையாக கௌசல்யா வாயைத்திறந்தார்.

பெற்றவராய் அவருக்கு அவரது கவலை. மாமியார் இல்லாத வீட்டுக்கு அனுப்பினால் மகள் தொல்லையில்லாமல் வாழ்வாள் என்று பலருக்கு எண்ணம் இருக்கிறது தான். ஆனால் வீட்டில் ஒரு பெண் துணை இல்லாமல் மகள் மட்டும் தனியாக அங்கிருந்து அவஸ்தை படுவதா? என்பது கௌசல்யாவின் எண்ணம்.

“அதுவும் உண்மை தான? நாளைக்கு மாசமான மாமியார்னு ஒருத்தர் இருந்தா தான பார்த்துக்க முடியும்? பெத்த பொண்ணுனு நாங்க பார்க்கலாம். ஆனா வாழுற வீட்டுல பார்க்கவும் ஆள் வேணும்ல?” என்று கேட்டார் பாட்டி.

“அதுனால என்னமா.. கல்யாணத்துக்கு அப்புறம் தேவையிருந்தா நானே பார்த்துக்கிறேன்” என்று மலர் முன் வந்தார்.

“உங்களுக்கு புள்ளை இருக்காமா?” என்று கௌசல்யா கேட்க “இருக்கான். ஒரே பையன். வெளி நாட்டுல மருமகளுக்கு வேலை கிடைச்சதுனு அவனும் அங்கயே வேலை தேடிட்டு போயிட்டான். வருசத்துல ஒரு தடவ வருவான்” என்றார் மலர்.

அப்படியே பேச்சு வேறு திசைக்கு மாறி விட சில நிமிடங்கள் எங்கெங்கோ பேச்சு சுற்றியது. சோபனாவிற்கு பதட்டத்தில் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது.

‘முக்கியமான விசயத்த பேசாம எங்க எங்கயோ சுத்துறாங்களே’ என்று பதட்டமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

பேச்சு சுற்றி முற்றி ரோஷினியிடம் வந்து நின்றது. வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமர்ந்திருந்தாள். அவளை பற்றி கேட்கும் போது பாட்டிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வந்தது.

சோபனாவை தவிர யாருமே பாட்டியின் காரில் இருந்து இவர்கள் இறங்கியதை பார்க்கவில்லை அல்லவா?

கிட்டத்தட்ட எல்லாம் புரிந்த போதும் பெண்ணை பெற்றவர்களால் சட்டென முடிவுக்கு வர முடியவில்லை.

“உன் கிட்ட எந்த குறையும் இல்லபா. ஆனா எங்களுக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுது” என்று குமாரவேல் கூற “எனக்கும் தான் சார்” என்றான் ரஞ்சித்.

ஆறுமுகம் எதோ சொல்ல வர “நான் பேசிக்கிறேன் சித்தப்பா” என்று அவரை தடுத்தான்.

“நாங்க விரும்புனது உண்மை. உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் ஆசை படுறேன். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு முதல்ல கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசைப்படுறேன். ரோஷினி இப்ப தான் படிப்பையே முடிச்சா. உடனே என் அவசரத்துக்காக அவள யாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கவும் முடியாது. இதெல்லாம் யோசிச்சுட்டு இருந்தேன். நீங்களே நேரம் தேவைப்படுதுனு சொல்லுறீங்க. பொறுமையாவே போகலாமே சார்? எங்களுக்கும் அவ்வளவு வயசாகிடல தான?”

ரஞ்சித் அமைதியான குரலில் தன் மனதிலிருந்தை விளக்க அங்கிருந்த இருவரை தவிர எல்லோருக்குமே அவன் பேச்சு பிடித்திருந்தது. பொறுப்பானவன் என்று எல்லோரும் நினைக்க மற்ற இருவருக்கும் காதில் புகை தான் வரவில்லை.

ஒன்று சோபனா.. தன்னை திருமணம் செய்வதை விட ரோஷினிக்கு திருமணம் செய்து வைப்பது தான் இவனுக்கு முக்கியமா? என் மேல் இவனுக்கு இருக்கும் காதல்அவ்வளவு தானா? என்று நொந்து வெந்து கொண்டிருந்தாள்.

அடுத்தது சத்ருகணன். வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாத மற்றொரு ஜீவன். நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டே இருந்தான்.  அவனுக்கு ரஞ்சித்தின் மீது பெரிய அபிப்பிராயம் எதுவும் இல்லை. அதனால் எல்லாவற்றையும் அலட்சியமாக கேட்டுக் கொண்டிருந்தான்.

கடைசியாக ரோஷினியின் திருமணத்தை எடுத்த போது சட்டென கவனம் கூடியது. அவளுக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பதாக ரஞ்சித் சொன்னதை பற்றி யோசித்தான்.

பாட்டி எல்லோருக்கும் ஒரு இடைவேளை வேண்டும் என்று காபியை கொண்டு வருமாறு அழைத்தார். உடனே எல்லோருக்கும் காபி வந்தது.

எல்லோரும் அதை குடித்தபடி தங்களுக்குள் யோசனையில் இருக்க மலரும் கௌசல்யாவும் குமாரவேலுவும் ஆறுமுகமும் பேசிக் கொண்டிருந்தனர்.

காபியை குடித்த சத்ருகணன் ரோஷினியை நன்றாக ஒரு முறை பார்த்தான். அவளது பார்வை தளைத்து இருந்தாலும் எதோ யோசனையில் இருப்பதாக தோன்றியது.

சத்ருகணன் பாட்டியின் அருகே சாய்ந்து அமர்ந்து கொண்டு “பாட்டி.. அவள எனக்கு பேசுங்க” என்றான் ரகசியமாக.

தொடரும்.

Leave a Reply