அத்தியாயம் 12

Loading

அதிர்ச்சியோடு பார்வையை திருப்பிய பாட்டி பேரன் கருமமே கண்ணாக காபி குடிப்பதை பார்த்து விட்டு அதிசயத்து போனார்.

“யோசிச்சு தான்..”

“ஆமா. பேசுங்க”

“உங்கம்மா சாமியாடுவாடா”

“நீங்க வேப்பிலைய எடுங்க”

“விட்டா எங்கள சண்டை போட வச்சு வேடிக்கை பார்ப்ப போல?”

“எவ்வளவு நாள் தான் நீங்களே மாமியாரா இருப்பீங்க? சீக்கிரமா எங்கம்மாவயும் ஆக்கிடலாம்னு தான் சொல்லுறேன்”

“பிடிச்சுருக்கோ?”

“ஆமா.”

“அப்ப விடு பார்த்துக்கலாம்”

காபியை குடித்து முடிக்கும் வரை பொறுமை காத்து விட்டு பாட்டி பேச்சை ஆரம்பித்தார்.

“வந்ததுக்கு ஒருத்தர ஒருத்தர் நல்லபடியா தெரிஞ்சுக்கிட்டோம். ரஞ்சித்துக்கு ரோஷினி கல்யாணத்த பத்தி கவலை. இருக்கனும் தான். தங்கச்சிய அப்படியே விட்டுட்டு கல்யாணம் பண்ண யாருக்கும் மனசு வராது” என்றதும் எல்லோருமே அதை ஆமோதித்தனர்.

“ஒரு பெரிய மனுசியா ஒரு விசயம் சொல்லுறேன். அதுக்கு மேல நீங்க முடிவு பண்ணுங்க. நாம ஏன் ரோஷினிய கண்ணாவுக்கு கட்டி வைக்க கூடாது? ஒரே நேரத்துல ரெண்டு கல்யாணத்த வச்சுட்டா எல்லாம் சுமூகமா போயிடும்ல?”

“என்ன? அத்தை.. அதான் அவங்க சொல்லுறாங்களே.. ரோஷினி இப்ப தான் படிப்ப முடிச்சுருக்கா. கொஞ்ச நாள் போகனும்னு. அதுவும் இல்லாம.. சத்ராவுக்கு…”

அவசரமாக பேசிய மனைவியின் கையை தட்டி அமைதிபடுத்திய குமாரவேல் “எதையும் உடனே பேச வேணாம்மா. கொஞ்சம் ஆறப்போடுவோம்” என்றார்.

“சரிபா.. தோனுனத சொன்னேன். ஆறப்போட்டே பேசலாம்” என்று அமைதியாய் ஒதுங்கினார் பாட்டி.

அது வரை தரையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ரோஷினி பாட்டி பேசும் போது ஒரு நொடி அதிர்ந்து நிமிர்ந்தவள் சத்ருகணனின் பார்வையை கண்டு மீண்டும் குனிந்து விட்டாள். சத்ருகணன் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவளது அதிர்ச்சியும் உடனே குனிந்து விட்ட பதட்டமும்.

அதன் பிறகு பொதுவாகவே பேசி எல்லோரும் விடை பெற்றுக் கொள்ள பாட்டியும் அவர்களோடு கிளம்பி விட்டார்.

காரில் அவர்கள் கிளம்பியதும் கௌசல்யாவின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.

“என்னங்க இது? உங்கம்மா இப்படி சொல்லிட்டு போறாங்க? இவனுக்கு தான் என் அண்ணன் மகள பேசியிருக்கோமே… அவள விட்டுட்டு இந்த பொண்ண கட்டி வைக்க பார்க்குறாங்க.. என்ன இதெல்லாம்?”

“இப்ப ஏன் இவ்வளவு ஹைப் ஆகுற? தோனுச்சு சொன்னாங்க. முடிவ நாம தான எடுக்கனும்?”

“எனக்கு இதெல்லாம் தெரியாது. நான் என் அண்ணனுக்கு வாக்கு கொடுத்துட்டேன். சுகப்பிரியா தான் நம்ம வீட்டு மருமக சொல்லிட்டேன்”

“ஆமாமா.. சுகி அண்ணிய தான பல வருசமா பேசி வச்சுருக்கோம்? அவங்கள விட்டுட்டு ரஞ்சித் தங்கச்சிய எதுக்கு கல்யாணம் பண்ணனும்? அதுவும் இல்லாம அந்த பொண்ணு செம்ம வாயாடி. இங்க அமைதியா உட்கார்ந்துட்டு போறானு நம்பாதீங்க.”

பாட்டியின் யோசனையை கேட்டபோது அதிகமாய் அதிர்ந்தது என்னவோ சோபனா தான். ரோஷினி இந்த வீட்டு மருமகளா? கூடவே கூடாது என்று நினைத்தாள். அதனால் அவசர அவசரமாக தாயின் மனதில் தவறான எண்ணத்தை விதைக்க முயற்சித்தாள்.

“இப்படி அடுத்த பொண்ண பத்தி பேசாத சோபனா”

“ப்பா.. நிஜம்மா..”

“பேசாதனு சொன்னேன். உன் கிட்ட அந்த பொண்ண பத்தி நாங்க கேட்டோமா?”

“இல்லபா.. நான் அண்ணனுக்காக தான்…”

“என்ன அண்ணனுக்காக? எங்க மேல எல்லாம் ரொம்ப அக்கறை இருக்கவ தான் இப்படி லவ் பண்ணிட்டு வந்து நிக்க போறாளாக்கும்?” என்று கௌசல்யா மகள் முகத்தை பார்க்காமல் சொல்லி விட சோபனாவின் வாய் உடனே மூடிக் கொண்டது.

“நீ உன்னை பத்தி மட்டும் கவலைபடு. மத்தத நாங்க பார்த்துக்கிறோம்” என்ற குமாரவேல் மகனை பார்த்தார்.

சோபாவில் அமர்ந்து கைபேசியில் கண்ணை வைத்திருந்தான்.

“சதா..”

பார்வையை மட்டும் தான் உயர்த்தினான்.

“நீ எதுவுமே சொல்லலயே?” என்று கேட்க “எத பத்திபா?” என்று சாதாரணமாக கேட்டான்.

“ஏன் இப்படி பொறுப்பில்லாம பேசுற?”

“என் ஒபினியன்க்கு இங்க மரியாதையே இல்லையேபா. அம்மா அவங்களுக்கு பிடிச்ச பொண்ணு தான் மருமகளா வரனும்ங்குறாங்க. இவ அவளுக்கு பிடிக்காத பொண்ணு மருமகளா வந்துடுவாளோனு கண்டத பேசுறா. இதுல நடுவுல நான் என்ன சொல்லுறது? ஆனா ஒன்ன மறந்துட்டீங்க. தாலிய நான் தான் கட்டனும்.”

அசால்ட்டாக சொல்லி விட்டு அவன் திரும்பிக் கொள்ள இரு பெண்களுக்கும் பகீர் என்றது.

“இப்படி சொன்னா என்ன அர்த்தம்?” என்று கௌசல்யா கோபமாக கேட்க, “எனக்கு பிடிச்சா தான் கல்யாணம்னு அர்த்தம்மா” என்றான் விளக்கம் தரும் குரலில்.

“உனக்கு சுகப்பிரியாவ ஏன்டா பிடிக்கல?”

“எனக்கும் அவளுக்கும் செட் ஆகாதுமா”

“அப்படி என்ன செட் ஆகாது? அவ நல்ல பொண்ணு தான்”

“உங்களுக்கு அப்படி தோனுது” என்று தோளை குலுக்கிக் கொண்டான்.

“என்னடா? என்ன குறை கண்ட அவ கிட்ட?” என்று கௌசல்யா கோபமாக பேச “இப்ப ஏன் நீ இவ்வளவு டென்சன் ஆகுற?” என்று அதட்டினார் குமாரவேல்.

“நீங்க எல்லாத்துக்கும் பொறுமையா இருக்க சொல்லுங்க..” என்று கணவனிடம் பாய “இங்க பாரு.. உன்னை விட எனக்கு கோபம் அதிகம் வரும். உன் பிரஸ்ஸர் கூட கூடாதேனு பேசிட்டு இருக்கேன். அமைதியா பேசு” என்று மனைவியை அதட்டினார்.

“சதா.. ஏன் உனக்கு சுகப்பிரியாவ பிடிக்கல? காரணம் சொல்லு”

“அவளோட கேரக்டர் என் கூட செட் ஆகாதுனு சொல்லுறேன்”

“அப்படி என்ன கேரக்டர்?”

“ப்பா.. உங்கள பொறுத்தவரை நீங்க பெரியவங்க.. நாங்க எல்லாரும் சின்ன பிள்ளைங்க.. பாசத்த தவிர எதுவும் தெரியாது. ஆனா நாங்க கூட விளையாடி ஒன்னா வளர்ந்தவங்க. உங்கள விட நூறு மடங்கு அவள பத்தி எனக்கு நல்லா தெரியும். அவளோட கல்யாணமா? வாழ்க்கை நரகமாகிடும்.”

சோபனாவை தவிர மற்ற இருவருமே இதைக்கேட்டு அதிரத்தான் செய்தனர். ஆனால் சோபனாவுக்கு ரோஷினி அண்ணியாக வந்து விடக்கூடாது என்ற எண்ணம் தான் முதலில் இருந்தது.

“அப்படி என்ன செஞ்சா அவ? இவ்வளவு வெறுக்குற?” என்று கௌசல்யா புரியாமல் கேட்க “அதெல்லாம் சொல்ல முடியாது. வேணாம்னா வேணாம். அவ்வளவு தான். அவங்க வீட்டுல சொல்லி இனிமே இத பேச வேணாம்னு சொல்லுங்க” என்று முடித்தான்.

“அப்போ அவ வேணாம்னா? ரோஷினிய கட்டிக்க போறியா?” என்று சோபனா கோபமாக கேட்க சத்ருகணன் அவளை தீர்க்கமாக பார்த்தான்.

“அந்த ரோஷினிக்கு கல்யாணம் ஆனா தான் உன் காதலன் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுறான். அவளுக்கு கல்யாணம் ஆக ரெண்டு மூணு வருசம் ஆகும். ஆனா இங்க உன்னை நிறைய பேர் பொண்ணு கேட்டு வர்ராங்க. பெட்டர்.. ரஞ்சித்த கழட்டி விட்டுட்டு வேற ஒருத்தன கட்டிக்கிறியா?”

அவ்வளவு தான் சோபனாவிற்கு இதயமே நின்று விட்டது.

“நீ.. நீ என்ன இப்படி பேசுற?” அவள் பயந்து விட குமாரவேல் குறுக்கே வந்தார்.

“சோபனா.. ரூமுக்கு போ” என்று குமாரவேல் சொல்லி விட ஓடி விட்டாள்.

“நீ எதாவது வேலை இருந்தா போய் பாரு” என்று மகனையும் துரத்தி விட்டார்.

சூட்டோடு பேசப்பேச எங்கே போய் முடியும் என்றே தெரியாது. அதனால் ஆளுக்கொரு திசைக்கு துரத்தி விட்டு தானும் ஒரு பக்கம் சென்று விட்டர். கௌசல்யாவும் தனித்து விடப்பட அவரும் பொறுமையாய் யோசிக்க ஆரம்பித்தார்.

காரில் வீடு திரும்பியவர்கள் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ரஞ்சித்தும் ரோஷினியும் என்ன நினைக்கிறார்கள் என்றே யாருக்கும் புரியவில்லை.

வீடு சென்றதும் ரோஷினி சேலையை மாற்ற வேண்டும் என்று அறைக்குள் சென்று அடைந்து விட்டாள்.

“நாங்க ஹோட்டல் புக் பண்ணி இருக்கோம் பாட்டி. அங்க போகனும். ரோஷினிக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்துடுறேன். அவ செய்ய வேணாம்” என்று விட்டு ரஞ்சித் வெளியேறி விட்டான்.

மலரையும் ஆறுமுகத்தையும் அமர வைத்தார் பாட்டி.

“நான் சொன்னதுல உங்களுக்கு எதுவும் வருத்தமில்லையே?”

“ச்சே ச்சே அப்படிலாம் இல்லமா”

“என் பேரனுக்கு ரோஷினிய கட்டி வச்சா நல்லா இருக்கும்னு ஆசைப்பட்டேன். அதான் சொன்னேன். அந்த காலத்துல தான் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறத தடுப்பாங்க. நம்ம புள்ளைய நல்லா வச்சுக்கனும்னா நாமலும் வர்ரவள வச்சுக்கனும். நிறைய பிரச்சனை வரும்னு வேணாம்னு சொல்லிடுவாங்க. என் மாமியார் கூட அப்படி தான் சொன்னாங்க. ஆனா இப்ப காலம் மாறி போச்சுல..?”

“இதுல என்னமா இருக்கு? உங்க பேரனுக்கு கட்டி வைக்க நினைச்சதே பெருசு தான். ஆனா ரோஷினி என்ன நினைக்கிறானு தெரியனும்ல? அவ மனசுல என்னனு தெரியாம மேல பேச முடியாது”

மூவருமாக பேசிக் கொண்டிருக்க அறைக்குள் சிலையாக அமர்ந்திருந்தாள் ரோஷினி. சேலையை மாற்றும் எண்ணம் கூட வரவில்லை.

அடுத்தடுத்து பல அதிர்ச்சிகளை கேட்டு இதயமே வெடித்து விடும் போல் இருந்தது.

நேற்று தான் சத்ருகணனுக்கு சுகப்பிரியாவை திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இருப்பதாக பாட்டி சொன்னார். அதையே சற்று போராடி தான் ஜீரணித்தாள்.

அடுத்து சத்ருகணனே நேராக வந்து நின்று விட்டான். எவ்வளவு முயன்றும் அவளது ஏமாற்றத்தை கோபமாகவும் அலட்சியமாகவும் காட்டி விட்டாள். அதுவும் வருத்தமானது தான்.

போதாதென்று காலையில் அலுவலகத்தில் வேறு வந்து நின்று வைத்தான்.

‘இவன ஏன் தொடர்ந்து பார்க்குறோம்? கடவுளே’ என்று நொந்து கொண்டு அவனை தவிர்த்து விட்டாள். அதுவும் பளிச்சென தெரியாதது போலத்தான்.

‘ஒரு மாசமா கண்ணுலயே படாம இருந்துட்டு இப்ப ஏன் முன்னாடி முன்னாடி வந்து நிக்கிறான்?’ என்று சற்று எரிச்சலாக கூட இருந்தது.

முன்பாக இருந்தால் அவனை ரசித்திருக்கலாம். வேறு ஒருத்தியை திருமணம் செய்யபோகும் நபரை ரசிப்பதா? கொடுமை.

வேலையை விட்டு வீட்டுக்கு ஓடி வந்தால் அடுத்த திருப்பம்.

ரஞ்சித் காதலிப்பதாக சொன்னதே அதிர்ச்சி தான். தன்னிடம் சொல்லவில்லையே என்று கோபமாக தான் இருந்தது. ஆனால் அந்த கோபத்தை அப்போது ஒதுக்கி வைத்தாள். அண்ணனின் வாழ்வில் நடக்கப்போகும் முக்கியமான நிகழ்வு இது. தன் கோபத்தால் எதுவும் கெட்டு விடக்கூடாது என்று நினைத்தாள். அதனால் சந்தோசமாகவே கிளம்பிச் சென்றாள்.

ஆனால் அப்போதாவது விதி விட்டதா? ரஞ்சித் காதலித்த பெண் சத்ருகணனின் தங்கை சோபனா.

மீண்டும் ஒரு முறை அந்த தருணத்தை நினைத்து அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தாள்.

இது என்ன திருப்பம்? அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியாத திருப்பம் இது. அங்கே சென்றதிலிருந்தே சத்ருகணனை எதிர்பார்த்து தான் அமர்ந்திருந்தாள். அதனால் தான் அவன் வந்த போது எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க முடிந்தது.

ஆனால் பாட்டி போட்ட வெடி? அப்பா! நேராக தலையிலேயே வந்து வெடித்ததே. ரஞ்சித்தை அவளுக்கு தெரியும். ரோஷினிக்கு தான் முதலில் திருமணம் என்று உறுதியாகத்தான் இருந்தான்.

அவன் பேசும் போது பெருமையாகவும் அதே நேரம் என்னால் எதுவும் தள்ளிப்போக வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்றும் நினைத்திருந்தாள்.

வீட்டுக்கு சென்றதும் சொல்லிக் கொள்ளலாம் என்று காத்திருக்க பாட்டி இப்படியா கேட்பார்? அதுவும் சத்ருகணனுக்கு நிச்சயமான பெண்ணாக சுகப்பிரியா இருக்கும் போது?

“இந்த பாட்டி என்ன நினைச்சு கேட்டாங்க? அய்யோ.. தலையே சுத்துதே” என்று தலையை பிடித்துக் கொண்டு எல்லாவற்றையும் நினைத்து குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள்.

அவளது எண்ணத்தை கலைக்கும் விதமாக கைபேசி குரல் கொடுத்தது. சுப்பிரியா என்ற பெயர் ஒளிர அதை சுகப்பிரியா என்று படித்து விட்டு “இவளுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சது?” என்று புரியாமல் பார்த்தாள்.

எடுத்து காதில் வைக்க “ரோஷினி.. உனக்கு சில டீடைல்ஸ் மெயில் பண்ணிருக்கேன். அத பார்த்துட்டு சொல்லேன்” என்றதும் “மெயிலா?” என்று கேட்டாள்.

“ஆமா.. இப்ப தான் அனுப்புனேன். பாரு”

‘இவ எதுக்கு நமக்கு மெயில் பண்ணுறா?’ என்ற குழப்பத்தோடு பெயரை பார்க்க அது சுப்ரியா என்றிருந்தது.

‘ச்சை’ என்று தலையில் அடித்துக் கொண்டவள் “பார்க்குறேன்கா. இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன். நைட் பார்த்துட்டு கால் பண்ணுறேன்” என்று விட்டு வைத்தாள்.

“நமக்கு பைத்தியமே புடிச்சுடுச்சு.. கண்ணு தெரியாம பேர மாத்தி படிச்சுட்டு…” என்று தலையில் தட்டி விட்டு எழுந்து சேலையை மாற்றினாள்.

மீண்டும் கைபேசி ஒளிர “இப்ப யாரு?” என்று சலிப்பாக எடுத்தாள்.

தெரியாத எண்.

‘இருக்க டென்சன்ல எவன்டா இது?’ என்று எரிச்சலாக எடுத்து காதில் வைத்தாள்.

“ஹலோ.. ரோஷினி”

“ஆமா நீங்க?”

“சத்ருகணன்”

அதிர்ந்து போய் கைபேசியை காதிலிருந்து தள்ளி பிடித்தாள்.

‘சரியா கேட்டோமா? இல்ல அப்பாத கண்ணு தெரியாத மாதிரி இப்ப காது கேட்கலயா?’ என்று யோசித்தாள்.

“ஹலோ..” என்று சத்ருகணனின் குரல் கேட்க “என்ன… யார் பேசுறதுனு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

“வாட்?”

“சத்ருகணன் சார் தானா?”

“ஆமா”

மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

தொடரும்.

Leave a Reply