அத்தியாயம் 13

Loading

“ஹலோ?” என்று மீண்டும் சத்ருகணன் அழைக்க “சொல்லுங்க சார்” என்று அவசரமாக குரலை வெளியே எடுத்து வந்தாள் ரோஷினி.

“உன் அண்ணன் கிட்ட பேசனும். நம்பர் சொல்லு”

“எதுக்கு?”

“தெரிஞ்சா தான் சொல்லுவியா?”

“ஆமா”

“சோபனா விசயமா பேசனும். சொல்லுறியா?”

“அப்ப உங்க தங்கச்சி கிட்டயே நம்பர் வாங்கி இருக்கலாமே?”

“ரோஷினி.. நிறைய கேள்வி கேட்குற நீ”

“கேள்வியே கேட்காம நீங்க சொல்லுறதெல்லாம் செய்யுறதுக்கு இது ஆஃபிஸ் ஹவர்ஸ் இல்ல சார்”

வேண்டுமென்றே வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள். என்னவோ இவனிடம் மட்டும் பணிந்து போக கூடாது என்பதில் தீவிரமாக இருந்தாள்.

“இப்ப நம்பர் தர முடியுமா? முடியாதா?”

“என் நம்பர் எப்படி எடுத்தீங்கனு சொல்லுங்க தர்ரேன்”

“தரவே வேணாம்.” என்றவன் பட்டென வைத்து விட கைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

“சரி தான் போயா.. கேட்டதுமே கொடுக்கனுமா? பாஸ்னா ஆஃபிஸ்ல.. வீட்டுல அதிகாரம் பண்ணுவாராமா?” என்று உதட்டை சுளித்தவள் கைபேசியை போட்டு விட்டு வெளியே சென்றாள்.

அப்போது தான் ரஞ்சித் உணவை வாங்கி வந்து கொடுத்தான்.

“இத சாப்பிடு. நாங்க ஹோட்டலுக்கு கிளம்புறோம்” என்று கூறி விட்டு மூவரும் கிளம்பி விட்டனர்.

ரோஷினி பாட்டியோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டாள். எப்போதும் சாப்பாட்டு நேரம் அமைதியாக தான் இருக்கும். பேசிக் கொண்டே சாப்பிட்டால் விக்கிக் கொள்ளும் என்பது பாட்டியின் கண்டிப்பு.

சாப்பிட்டு முடித்ததும் அமர்ந்து தொலைகாட்சியை உயிர்ப்பிக்க “எனக்கு வேலை இருக்கு. நீங்க பாருங்க” என்று நகர்ந்தாள் ரோஷினி.

“ரோஷினி நில்லு..”

உடனே நின்றாள்.

“என் மேல எதுவும் கோபம்னா நேரா பேசு”

“கோபமா?”

“பின்ன வேலை இருக்குனு போனா என்ன அர்த்தம்”

“வேலை தான் இருக்கு பாட்டி. நிறைய வேலை இருக்கு. அதையும் நாளைக்குள்ள முடிக்கனும். அத தான் பார்க்க போறேன்”

“ஒரு வேளை நான் அங்க பேசுனதுல என் மேல கோபமிருந்தா சொல்லிடு”

உதட்டை கடித்தவள் “கோபம் எல்லாம் இல்ல பாட்டி.. கொஞ்சம் சாக் ஆகிட்டேன் அவ்வளவு தான்” என்றாள் அமைதியான குரலில்.

“இங்க வா..” என்று அருகே அழைத்தவர் “நான் சொன்னதுல உனக்கு வருத்தம் எதுவும் இருக்கா?” என்று கேட்டார்.

பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

“உன்னை கேட்காம சொல்லிட்டேன்னு கோபமா?”

“இல்ல பாட்டி. உங்களுக்கு தோனுனத சொன்னீங்க. அவ்வளவு தான? ஆனா ஒன்ன மறந்துட்டீங்க. உங்க பேரனுக்கு ஏற்கனவே பொண்ணு பார்த்துருக்கதா சொன்னீங்களே”

பாட்டி அவளை கூர்ந்து பார்க்க கைபேசி அலறி வைத்தது.

“உன் போன் தான்.” என்றதும் அறைக்குள் ஓடிச் சென்று எடுத்தாள்.

சுப்பிரியாவிடம் பேசியபடி மடிக்கணினியை திறந்து வைத்துக் கொண்டு அவள் அமர்ந்து விட பாட்டி அவளை எட்டிப் பார்த்து விட்டு தொலைகாட்சி பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டார்.

சுப்ரியா தனுஜாவோடு சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்க ரஞ்சித் அழைத்தான்.

“ஹலோ”

“ரோஷினி.. சாப்பிட்டியா?”

“கொஞ்சம் பிசியா இருக்கேன் அப்புறம் பேசுணா”

“ஹேய்.. என் மேல எதுவும் கோபமா?”

“என்ன ஆளாளுக்கு இப்படியே கேட்குறீங்க? எனக்கு இப்ப வேலை இருக்கு. என் டீம் மெட்ஸ் வெயிட் பண்ணுறாங்க. பை” என்று கூறி விட்டு உடனே வைத்து விட்டாள்.

அதன் பிறகு வேலையை மட்டும் தான் கவனித்தாள். வேலை முடிந்து படுத்த நொடி தூங்கி விட்டாள்.

மறுநாள் எழும் போதே களைப்பாக இருந்தது. மெத்தையை விட்டு எழாமல் சில நிமிடங்கள் படுத்திருந்தாள். நேற்று நடந்த எல்லாமே நினைவுக்கு வந்தது.

“இத்தனை வருசத்துல பல திருப்பங்கள ஒரே நாள்ல பார்த்தது நேத்து மட்டும் தான்” என்று பெருமூச்சு விட்டவள் எழுந்து கொண்டாள்.

வழக்கமான வேலைகளில் நேரம் பறந்தது.

“பாட்டி.. சித்தி ஃபோன் பண்ணாங்க. நேத்து வீடு பார்த்தத பத்தி பேசவே மறந்துட்டோம். அதுல ஒரு வீடு பிடிச்சுருந்ததாம். வேலை முடிஞ்சதும் நேரா அவங்கள போய் பார்த்து பேசிட்டு வரலாம்னு சொன்னாங்க. ஈவ்னிங் அவங்களோட சாப்பிட்டு லேட்டா தான் வருவேன்”

“சரிமா.. பார்த்து போயிட்டு வா” என்றதற்கு மேல் அவர் எதுவும் சொல்லவில்லை. இனி தனி வீடு எதற்கு? என்று தோன்றினாலும் எதுவும் முடிவாகாத போது அமைதியாக இருப்பதே நலம் என்று இருந்து விட்டார்.

தன் பையை எடுத்துக் கொண்டு வெளியே வர சத்ருகணன் நின்றிருந்தான். பார்த்ததும் ஒரு நொடி பயந்து பின் வாங்கியவள் பிறகு முறைத்துப் பார்த்தாள்.

“தள்ளுங்க சார்” என்றவள் அவனை சுற்றிக் கொண்டு செல்ல பார்க்க “எங்க கிளம்பிட்ட?” என்று கேட்டான்.

பதில் சொல்லாமல் அவள் போகப்பார்க்க கையை நீட்டி வழி மறித்தான்.

“கேள்வி கேட்குறேன்ல?”

“நானும் பதில் சொல்லாம போறேன்ல?”

அவளும் முறைக்க அவனும் முறைத்தான்.

“கண்ணா.. என்னபா இந்த நேரத்துல?” என்று கேட்டபடி பாட்டி வந்து சேர்ந்தார்.

“இத கொடுக்க வந்தேன்” என்றவன் ஒரு பையை வைத்து விட்டு “அப்படியே ரோஷினிய கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்” என்றான்.

“எங்க?” என்று ரோஷினி கோபமாக கேட்க “நீ எங்க கிளம்பிருக்கியோ அங்க தான்” என்றான்.

“எனக்கு வழி தெரியும்” என்றவள் விலகி நடக்க “வர்ரேன் பாட்டி” என்றவன் அவள் பின்னால் சென்றான்.

“பிடிவாதக்காரன்” என்று சலிப்பாக சொல்லி விட்டு பாட்டி அகன்று விட்டார்.

ரோஷினி செருப்பை மாட்டிக் கொண்டு நடக்க “ரோஷினி.. கார்ல ஏறு” என்றான்.

“நோ தாங்க்ஸ்”

“ஆஃபிஸ் தான போற? நான் டிராப் பண்ணுறேன்”

சட்டென நின்று அவனை கூர்ந்து பார்த்தாள்.

“என்ன?”

“தெரிஞ்சு தான் பேசுறீங்களா?”

“எத சொல்லுற?”

“நீங்க பாஸ். நான் ஸ்டாஃப். ஒன்னா கார்ல போய் இறங்குனா என்ன நடக்கும் தெரியுமா?”

“என்ன நடக்கும்?”

“என்னை அசிங்கமா பேசுவாங்க” என்று பட்டென சொல்லி விட்டாள்.

உடனே விசயத்தை புரிந்து கொண்டான்.

“லுக் எனக்கு உன் கிட்ட பேசனும். அதுக்காக தான் கார்ல போகலாம்னு சொல்லுறேன். உன்னை பார்க்கிங்ல விடுறேன். தனியா போயிக்கோ என்ன?”

“என்ன பேசனும்?”

சத்ருகணன் காரை காட்ட அதற்கு மேல் மறுக்காமல் ஏறி அமர்ந்து விட்டாள். உள்ளே கார் பளபளவென இருந்தது. அது கண்ணை கவர்ந்தாலும் அவளது கவனம் சத்ருகணன் மீது இருந்தது.

“என்ன சார் பேசனும்?” என்று மீண்டும் கேட்க “உன் அண்ணன் கல்யாணத்த பத்தி பேசனும்.” என்றான்.

“ஏன் உங்க தங்கச்சி கல்யாணம் இல்லையா?”

“ரெண்டும் தான். ஆனா உன் அண்ணன் கல்யாணம் பண்ணுறதுக்கு தான இப்ப பிரச்சனை வந்துருக்கு?”

“சோ?” என்றவள் என்ன வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள்.

“சோ? என்ன தெரியாத மாதிரி கேட்குற?”

“அதுக்கு என்ன பண்ண சொல்லுறீங்க? உங்க வீட்டுலயும் தான டைம் கேட்டாங்க. அதே டைம்ம என் அண்ணனும் கேட்டாரு. அப்புறம் என்ன?”

“உன் அண்ணன் அதுக்கு மட்டும் டைம் கேட்கல.. உனக்கு கல்யாணம் ஆகனும்னு…”

“அதுல என்ன தப்பிருக்கு? உங்க தங்கச்சிக்கு முன்னாடி நீங்க பண்ணிக்குவீங்களா? பண்ண மாட்டீங்க தான?”

“அதே தான். இப்ப என் தங்கச்சிக்கு கல்யாணம் நடந்தா தான் நானும் பண்ண முடியும்.”

“ஓஹோ.. உங்க கல்யாணத்துல இப்ப தடையா இருக்கோம் அதான?”

“ஆமா”

“விடுங்க. உங்க வீட்டுல இருந்து கல்யாண பேச்ச கொண்டு வந்தா அதுல நான் தடையா இருக்க மாட்டேன். ஐ மீன்.. என் அண்ணனுக்கும் உங்க தங்கச்சிக்கும்.. கல்யாணம் கண்டிப்பா நடக்கும்”

சிவப்பு விளக்கை பார்த்து விட்டு காரை நிறுத்தியவன் ரோஷினியை திரும்பிப் பார்த்தான்.

“தடையா இருக்க மாட்டனா? எப்படி?”

“அது எதுக்கு சார் கேட்குறீங்க? எப்படியோ உங்க பிரச்சனை முடிஞ்சது தான?”

“இல்லயே.. நீ இன்னும் சரியா சொல்லலயே. தடையா இருக்க மாட்டனா? என்ன செய்வ? கல்யாணம் பண்ணிக்குவியா?”

“தெரியல” என்று தோளை குலுக்கினாள் சிவப்பு விளக்கை பார்த்தபடி.

“இது பதிலா?”

“இப்ப இதான் பதில்.. வேற பதில் என் கிட்ட இல்ல”

சிவப்பு மஞ்சளுக்கு மாற “பாட்டி சொன்னத பத்தி என்ன நினைக்கிற?” என்று கேட்டான்.

அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள். அவளது அதிர்ச்சியை கண்டு புன்னகைத்தவன் “உனக்கு ஒன்னு தெரியுமா? எனக்கு அந்த ஐடியா பிடிச்சுருக்கு” என்று கூறி கண் சிமிட்டினான்.

பதறி ரோஷினி பார்வையை திருப்ப விளக்கு பச்சைக்கு மாறியது. காரும் புறப்பட்டது. ரோஷினியின் இதயம் படபடவென அடித்துக் கொண்டு பதட்டமானது.

தொடரும்.

Leave a Reply