அத்தியாயம் 14
![]()
ரோஷினி பதட்டத்துடன் வெளியே பார்த்துக் கொண்டிருக்க “என்ன பதில காணோம்?” என்று கேட்டான் சத்ருகணன்.
உடனே சுதாரித்தவள் “யோசிக்கிறேன்” என்றாள்.
“பதில் கிடைச்சதா?”
“ஒரு கேள்வி தான் கிடைச்சது. உங்களுக்கு சுகப்பிரியாவ நிச்சயம் பண்ணிருக்கதா பாட்டி சொன்னாங்களே.. அது என்னாச்சுனு யோசிக்கிறேன்”
சில நொடிகள் அவனிடம் பேச்சில்லை.
“வீட்டுல முடிவு பண்ணது அது. அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்று தோளை குலுக்கினான்.
“எப்படி நம்புறது? நீங்க தான அவள பிக் அப் பண்ண ஹாஸ்டலுக்கே வந்தீங்க?”
“அது தான் அவள நான் கடைசியா பார்த்ததுனு சொன்னா நம்புவியா?”
ரோஷினி அமைதிகாக்க “ஓகே.. உனக்கு என்னை பிடிச்சுருக்கா இல்லையானு மட்டும் சொல்லு. சுகப்பிரியா விசயத்துல உனக்கு குழப்பம் இருந்தா.. இப்பவே சொல்லுறேன். எனக்கு அவள கல்யாணம் பண்ணிக்க எந்த விருப்பமும் இல்ல. இதுக்கு மேல என்னால விளக்கம் கொடுக்க முடியாது” என்றான்.
ரோஷினி எதுவும் பேசவில்லை. கார் அலுவலகத்தில் நுழைந்து பார்கிங் சென்றது.
காரை நிறுத்தியதுமே “நீங்க முதல்ல போங்க. நான் அப்புறமா வர்ரேன்” என்றாள்.
“நீ..” என்று ஆரம்பிக்கும் போதே யாரோ கதவை தட்டுவது கேட்டது.
இருவரும் திரும்பிப் பார்க்க சுகப்பிரியா நின்றிருந்தாள்.
அடுத்த நொடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சத்ருகணன் உடனே காரை விட்டு இறங்கினான்.
“ஹாய்…” என்று முகமெல்லாம் சிரிப்போடு சுகப்பிரியா பேச “நீ இங்க என்ன பண்ணுற?” என்று கேட்டான் முகம் இறுக.
“அப்பா உங்கள பார்க்கனும்னு வந்தாரு. நானும் கூட வந்தேன். உள்ள தான் இருக்காங்க”
“அப்ப உன் அப்பா கூட இல்லாம நீ ஏன் இங்க வந்த?”
“உங்க கார பார்த்தேன்.. அதான்..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ரோஷினி காரை விட்டு இறங்கினாள்.
அவளை பார்த்ததும் சுகப்பிரியா அதிர்ந்து பிறகு தீயாய் முறைத்து உடனே பார்வையை மாற்றிக் கொண்டாள்.
“ஹேய்.. ரோஷினி” என்று இல்லாத சந்தோசத்தை இழுத்து வைத்து ஆச்சரியப்பட “ஹாய்” என்றாள் ரோஷினி.
“நீ எப்படி அத்தான் கூட?”
“ஒன்னா வந்தோம்” என்றவள் சத்ருகணனை பார்க்க “ஓகே உள்ள போகலாம்” என்றவன் காரை பூட்டி விட்டு நடந்தான்.
சுகப்பிரியா அவன் பின்னால் போக ரோஷினி கையைக்கட்டிக் கொண்டு நின்றாள்.
ரோஷினி வரவில்லை என்று தெரிந்து சத்ருகணன் திரும்பிப் பார்க்க ரோஷினி தலைசாய்த்து பார்த்தபடி அப்படியே நின்றாள். அவனோடு ஒன்றாக வர மாட்டேன் என்று சொல்லி விட்டாளே. பிறகும் வருவாளா என்ன?
‘குயின் ஆஃப் பிரின்சிபல்ஸ்’ என்று கடுப்பாக நினைத்துக் கொண்டவன் அதற்கு மேல் நிற்காமல் சென்று விட்டான்.
ரோஷினி தன் இடத்திற்கு சென்று அமர அவள் பின்னால் வந்து சேர்ந்தாள் சுப்ரியா.
“ஹேய்.. பாஸ பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு பார்த்தியா?” என்று ரகசியமாக கேட்க ரோஷினி ஒரு நொடி வேலை செய்வதை நிறுத்தி விட்டு “சீனியர் மேடம்.. இப்ப அந்த பொண்ணு முக்கியமா? இல்ல இந்த பிரப்போஷல் முக்கியமா?” என்று கேட்டாள்.
“நமக்கு இதான் முக்கியம்”
“அப்ப வேலைய பாருங்க. கதைய பின்னாடி பேசிக்கலாம்” என்றவள் வேலையை கவனித்தாள்.
வேலை கிட்டத்தட்ட முடிந்து விட பிரிண்டர் பக்கத்தில் நின்றிருந்தாள் ரோஷினி. ஒவ்வொரு காகிதமாக அவள் பார்த்துக் கொண்டிருக்க அவள் தோளை தட்டினாள் சுகப்பிரியா.
“ரோஷ்.. நீ இங்கயா வேலை பார்க்குற?”
“ஆமா..”
“என்ன வேலை?”
ஐடி கார்டை தூக்கி காண்பித்தாள்.
“தனியா இருக்க? உன் கூட யாரும் இல்லையா?” என்று கேட்க “அவங்க தான் என் டீம் மெட்ஸ்” என்று சுப்ரியாவையும் தனுஜாவையும் காட்டினாள்.
“அவங்களா? ஒரு ஹாய் சொல்லிட்டு வர்ரேன்” என்று செல்ல ரோஷினி புருவம் சுருக்கி பார்த்தாள்.
‘இவ எதுக்கு அவங்களுக்கு ஹாய் சொல்லனும்?’ என்று யோசித்தவள் பிரிண்ட் எடுத்த காகிதங்களை எடுத்துக் கொண்டு பின்னால் சென்றாள்.
“ஹாய்..” என்று இருவரிடமும் சென்று பேச சுப்ரியாவும் தனுஜாவும் சிறு அதிர்ச்சியோடு பதில் சொன்னார்கள்.
“நான் ரோஷினியோட ஒரே காலேஜ்ல படிச்ச பொண்ணு.. ரோஷினி உங்கள ஃப்ரண்ட்னு சொன்னா.. அதான் ஹாய் சொல்லலாம்னு வந்தேன்”
“ஓ…! எங்களுக்கு தெரியாதே..”
“ரோஷினி சொல்லிருக்க மாட்டா.. எப்பவும் இப்படித்தான் எல்லாத்தையும் மறைச்சுடுவா” என்று சுகப்பிரியா சிரித்துக் கொண்டே சொல்ல ரோஷினிக்கு எதுவோ சரியாகபடவில்லை.
‘இந்த பொண்ணு கூட நாம அவ்வளவு பழகுனது இல்லையே? ரொம்ப பேசுறாளே?’ என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“எங்க காலேஜ்ல ரோஷினி ரொம்ப ஃபேமஸ். ஆனா அதெல்லாம் காட்டிக்கவே மாட்டா. ஸ்டுடண்ட் ரெப் இவ.”
“அப்படியா?” என்ற சந்தேகத்துடன் தனுஜா பார்க்க ரோஷினி தலையை தான் மேலும் கீழும் ஆட்டி வைத்தாள்.
“அது மட்டுமா? இவள சைட் அடிக்காத பசங்களே இல்லனு சொல்லலாம்.. அவ்வளவு தூரம் பசங்க மத்தில இவ ஃபேமஸ். ரொம்ப அழகான பொண்ணு கிடைச்சா யாரு தான் சைட் அடிக்காம இருப்பாங்க? ஆனா யாரு கூட கமிட் ஆனானு தான் சொல்லவே இல்ல.. ரோஷி.. இப்பவாவது சொல்லேன். யாரு கூட தான் கடைசியில கமிட் ஆன? மகேஷா? இல்ல ஆதவ்வா?”
ரோஷினி அதிர்ச்சியில் பேச்சற்று நிற்க “சும்மா சொல்லு.. நம்ம ஃப்ரண்ட்ஸ் தான? காலேஜே முடிஞ்சு போச்சு.. இப்ப யாரு உன் பின்னாடி சுத்துறது? எனக்கு தான் இந்த மாதிரி லவ் பண்ண கொடுத்து வைக்கல.. ஆனா எனக்கு சத்ரு அத்தான் இருக்கார். அவர ஏற்கனவே கல்யாணம் பண்ணுறதா பேசிட்டாங்க. ஆனா நீ சுதந்திரமா சுத்துன தான?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
ரோஷினியின் அதிர்ச்சியெல்லாம் விலகி விட ஒரே நக்கலான சிரிப்பு வந்தது அவளது முகத்தில்.
“சோ.. காலேஜ்ல பசங்க எல்லாரும் என் பின்னாடி சுத்துனாங்க இல்லையா?” என்று கேட்டு வைத்தாள்.
“அது தான் காலேஜ்க்கே தெரியுமே? ஏன் இவங்க யாருக்கும் நீ சொல்லலயா? இதெல்லாம் பெருமையான விசயம் ரோஷினி.. இல்லையா?” என்று தனுஜாவை கேட்க தனுஜா எதுவும் செய்யாமல் வெறுமையாய் ஒரு பார்வை பார்த்தாள்.
“ஆமா ஆமா.. பெருமையான விசயம் தான்.. ஆனா கடைசியா நான் யாரு கூட கமிட் ஆனேன்னு தெரியனும் உனக்கு? அதான?”
“ஆமா.. சொல்லாமலே போயிட்டியே.. யாருனு சொல்லு”
“சொல்லுறேன். சொல்லுறது என்ன? சீக்கிரமே கல்யாண பத்திரிக்கையோட வர்ரேன். இப்ப ஒரு சின்ன வேலை இருக்கு. உன் அத்தான் ரூம்க்கு தான் போறேன். கூட வர்ரியா?”
“என்ன வேலை?” என்று கேட்டவள் முகத்தில் இருந்த போலி சிரிப்பு மறைந்து விட “வா.. இந்த பேப்பர்ஸ கொடுக்கனும்.” என்றவள் முன்னால் நடந்தாள்.
சுகப்பிரியா உடனே பின்னால் ஓடினாள்.
“இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கு? என்னமோ ரோஷினி பல பசங்களோட சுத்துனாங்குற மாதிரி சொல்லிட்டு போகுது” என்று சுப்ரியா கேட்க “அதுல உங்களுக்கு சந்தேகம் வேறயா? அத தான் சொல்லுது. ஆனா இவளுக்கு ரோஷினி மேல என்ன கோபம்னு தெரியல. வரட்டும் கேட்போம்” என்றாள் தனுஜா.
ரோஷினிக்கும் எல்லாம் தெளிவாக புரிந்ததால் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.
‘உன் அத்தானா? அவர் எனக்கு மாப்பிள்ளைடி.. என் இமேஜ டேமேஜ் பண்ணனுமா? இரு நான் உன்னை டேமேஜ் பண்ணுறேன்’ என்று நினைத்தவள் சத்ருகணன் அறையின் வாசலுக்கு வந்து நின்றாள்.
கதவை தட்ட உள்ளே இருந்து குரல் வந்தது. ரோஷினி முன்னால் வர சுகப்பிரியா பின்னால் வந்தாள்.
“நீ உங்கப்பா கூட கிளம்பலயா? “
“என் கிட்ட பேசனும்னு இருந்தா. இருக்கட்டும். முக்கியமான விசயம் பேசனும் இருக்கட்டும்.” – ரோஷினி.
சத்ருகணன் இருவரையும் பார்த்து விட்டு அமைதியாக இருந்தான்.
“இந்த பிரப்போஷல முடிச்சுட்டேன். இதுல எதாவது மிஸ்டேக் இருந்தா பார்த்து சொல்லுறீங்களா? ஈவ்னிங் குள்ள கரெக்ஷன் பார்த்துக்கிறேன்” என்று நீட்டினாள்.
ஒற்றை புருவத்தை ஏற்றியபடி அதை வாங்கியவன் உடனே படிக்க ஆரம்பித்தான். சுகப்பிரியா இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
அவளுக்கு என்னவோ இருவரும் நெருக்கமாக இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் தான் ரோஷினியை பற்றிய புரளியை கிளப்பி விட்டு சத்ருகணன் தனக்கு சொந்தம் என்று புரிய வைக்க நினைத்தாள்.
இருவரும் ஒன்றாக அலுவலகம் வருவது எத்தனையோ பேரின் சந்தேகத்தை கிளப்பி இருக்கும் அல்லவா? அதை வேறு ஒரு புரளியை வைத்து அடக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் விளைவு வேறு விதமாக திரும்பியது.
சத்ருகணன் வேலை சம்பந்தமாக பேச. ரோஷினியும் பேச சுகப்பிரியா அங்கே வெறுமென நின்றிருந்தாள்.
பேசி முடித்ததும் “ஓகே.. முடிச்சுடுறேன்” என்ற ரோஷினி சுகப்பிரியாவை ஒரு பார்வை பார்த்து விட்டு “கார்ல ஒன்னு கேட்டீங்களே.. அதுல எனக்கு சம்மதம். மிச்சத்த ஈவ்னிங் பேசலாம்” என்றாள்.
“வாட்? திரும்ப சொல்லு.. கார்ல?” என்று சத்ருகணன் அதிர்ச்சியோடு கேட்க “எஸ்.. என் அண்ணன் சம்மதிச்சுட்டா நானும் உங்கள கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன். அண்ணன் கிட்ட பேசிட்டு ஈவ்னிங்… நானே உங்களுக்கு கால் பண்ணி சொல்லுறேன்” என்றாள்.
அதே வேகத்தோடு சுகப்பிரியாவின் பக்கம் திரும்பியவள் “நான் காலேஜ்ல ஃபேமஸா.. பல பசங்க என் பின்னாடி சுத்துனாங்களா.. அதுல நான் எத்தனை பேர் கூட சுத்துனேன்… கடைசியா இப்ப எவன் கூட கடலை போடுறேன்னு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுன என் அருமை நண்பி சுகப்பிரியா… நல்லா கேட்டுக்கோ.. உன் அத்தை பையன் இவர்.. இவர எனக்கு நேத்தே நிச்சயமாகிட்டாரு. நான் தான் சம்மதிக்கலாமா வேணாமானு குழப்பத்துல இருந்தேன். இப்ப அதுவும் முடிஞ்சது. எங்க கல்யாணம் நடந்தா முதல் பத்திரிக்கை உனக்கு தான். என்ன?” என்றவள் சத்ருகணனை பார்த்து குறும்பாக சிரித்து விட்டு வெளியேறி விட்டாள்.
தொடரும்.
