அத்தியாயம் 15

Loading

ரோஷினி சென்று விட சுகப்பிரியாவிற்கு அதிர்ச்சியில் உள்ளம் படபடத்தது.

“என்ன சொல்லிட்டு போறா?” என்று சுகப்பிரியா அதிர்ச்சி தாங்காமல் கேட்க “அதான் சொன்னாளே.. பத்திரிக்கை தாய் மாமா முறைக்கு உங்க வீட்டுக்கு தான் முதல்ல வைப்போம். இப்ப கிளம்பு. இனி இங்க வராத” என்று முகத்தில் அடித்தது போல் பேசி வைத்தான் சத்ருகணன்.

சுகப்பிரியாவிற்கு கண்கலங்கி விட்டது. என்ன நடக்கவே கூடாது என்று நினைத்தாளோ அது அவள் கண் முன்பே நடந்து விட்டது.

அவளது கண்ணீரை கண்டு சத்ருகணன் இறங்காமல் போக வேகமாக வெளியேறி இருந்தாள்.

ரோஷினி வந்து அமர்ந்ததும் தனுஜா அவளை பிடித்தாள்.

“யாரு இந்த பொண்ணு? நிஜம்மாவே உன் ஃப்ரண்டா?”

“இல்ல.. ஜஸ்ட் தெரியும் அவ்வளவு தான்”

“அதான பார்த்தேன். ஃப்ரண்ட்னு சொல்லிட்டு எவ்வளவு மட்டமா பேசுறா.. இடியட்”

“அவளுக்கு அப்படி என்ன உன் மேல கோபம்?” என்று சுப்ரியா கேட்க “அதை இப்ப சொன்னா உங்களுக்கு புரியாது. கொஞ்ச நாள் போகட்டும். நீங்களே தெரிஞ்சுப்பீங்க. இப்ப வேலைய பார்ப்போம். மேனேஜர் பார்த்தா கத்த போறாரு” என்றதும் வேலையை கவனித்தனர்.

சுகப்பிரியாவை அனுப்பி விட்டு ரோஷினி சொன்னதை எல்லாம் நினைத்து பார்த்தான்.

‘சோ.. இந்த லூசு ரோஷினிய எதோ சொல்லியிருக்கா. அதுக்காக வந்து அவ முன்னாடியே சம்மதம் சொல்லிட்டு போறா. அதுவும் அண்ணன் கிட்ட கேட்க சொல்லி’ என்று யோசித்தவன் உடனே கைபேசியை எடுத்து சோபனாவை அழைத்தான்.

“ஹலோ”

“ரஞ்சித் நம்பர் கொடு”

“ஏன்..? எதுக்கு? என்ன பேசனும்?” என்று அவள் பதட்டமாக கேட்க “நீ ரஞ்சித்தா? உன் கிட்ட சொல்ல? நம்பர கொடு” என்றான்.

“இல்ல.. என்ன செய்ய போற?”

“சோபனா..”

“நோட் பண்ணிக்க” என்றவள் உடனே எண்ணை கொடுத்தாள்.

வாங்கியதும் எதுவும் சொல்லாமல் துண்டித்து விட்டான்.

அடுத்ததாக ரஞ்சித்தை அழைத்தான்.

“ஹலோ..?”

“நான் சத்ருகணன் பேசுறேன்”

ஒரு நொடிக்கு பிறகு “சொல்லுங்க” என்றான் ரஞ்சித்.

“மீட் பண்ணனும்”

“எங்க?”

“ஈவ்னிங் ஆஃபிஸ்ல?”

“எனக்கு நைட் ஃப்ளைட். நான் திரும்ப வேலைக்கு போகனும்”

சத்ருகணன் யோசித்து விட்டு “அப்ப லன்ச்ல மீட் பண்ணலாம். நான் அட்ரஸ் அனுப்புறேன்” என்று விட்டு வைத்து விட்டான்.

சொன்னது போல் வேலையை முடித்து விட்டு சத்ருகணன் செல்ல ரஞ்சித்தும் வந்து விட்டான்.

அது ஏசி அறை. அங்கு க்ளைண்ட் சிலரை தான் அழைத்து வந்து விருந்துண்ண வைத்திருக்கிறான். இப்போது அதே இடத்தில் வைத்து தான் ரஞ்சித்திடம் பேச ஆரம்பித்தான்.

பெயருக்கு ஆர்டர் கொடுத்த உணவுகள் வந்து விட்டது. இருவருமே அதை சாப்பிடவில்லை.

“என்ன பேசனும்?” என்று ரஞ்சித் ஆரம்பித்தான்.

“ஓபனா சொல்லுறேன். எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல”

ரஞ்சித் அமைதியாக இருந்தான்.

“உனக்கு என் தங்கச்சிய கட்டி வைக்கிறதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்ல. ஆனா…”

சற்று நிறுத்தியவன் “ரோஷினிய எனக்கு பிடிச்சுருக்கு. ரொம்ப!” என்றான்.

எல்லாவற்றுக்கும் ரஞ்சித்திடம் எந்த மாறுதல்களும் இல்லை. அதை கவனித்தும் கவனிக்காமல் தன் பேச்சை தொடர்ந்தான்.

“உன் தங்கச்சி கல்யாணம் நடந்தா தான் என் தங்கச்சிய நீ கட்டிக்க முடியும்னு சொன்னல?”

“ஆமா”

“அதுக்கு இது தான் ஒரே வழி. உன் தங்கச்சிய எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்”

ரஞ்சித் ஒரு நொடி யோசித்து விட்டு சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான்.

“நான் ரோஷினி கிட்ட பேசிட்டு சொல்லுறேன்”

“ரோஷினி சரினு சொல்லிட்டா”

“இருக்காது” என்றான் சாதாரணமாக.

அழுத்திச் சொல்லவில்லை. ஆனால் அவன் சொன்ன குரலில் நம்பிக்கை நிறைந்து இருந்தது.

“ரியலி? காலையில அவ சரினு சொன்னதால தான் உன் கிட்ட வந்து பேசிட்டு இருக்கேன்”

“அவ பிடிச்சுருக்கத வேணா சொல்லிருப்பா. கல்யாணத்துக்கு முழு சம்மதம் சொல்லிருக்க மாட்டா. என் கிட்ட பேசாம அவ முடிவு பண்ண மாட்டா” என்றவன் தட்டில் இருந்ததை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான்.

சத்ருகணனுக்கு கோபத்தில் தாடை இறுகியது. சொன்னாளே..! அண்ணனின் சம்மதம் வேண்டும் என்று சொன்னாளே. அதனால் தானே இங்க வந்து பேசிக் கொண்டிருக்கிறான்.

இவனுக்கு ரோஷினியின் மீது எவ்வளவு நம்பிக்கை! இதே போல் சோபனா இருப்பாளா? மாட்டாள். குடும்பத்துக்கே தெரியாமல் இவனோடு மறைத்து வாழ்ந்தவளாயிற்றே.

ரஞ்சித்தின் மீது பொறாமை கூட வந்தது. ரோஷினியும் சோபனாவும் அவன் மீது மிகுந்த அன்பை வைத்திருப்பதை கண்டு.

“உனக்கு உன் தங்கச்சி மேல நிறைய நம்பிக்கை இல்ல?”

ரஞ்சித் மௌனம் காத்தான்.

“சொந்த தங்கச்சினா மட்டும் இவ்வளவு பாதுகாப்பு தேவைப்படுது. அடுத்தவன் தங்கச்சினா லிவ் இன் தேவைப்படுது இல்ல?”

ரஞ்சித் சிறு அதிர்வோடு பார்த்தான்.

“எதுவுமே தெரியாதுனு நினைப்பா? எல்லாம் தெரியும்” என்றான் சத்ருகணன் வெறுப்பாக.

ரஞ்சித்தின் முகம் ஒரு நொடி மாறி பிறகு இயல்பானது.

“நடந்தத பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல. உங்க வீட்டுல டைம் கேட்டாங்க. அது முடிஞ்சதும் உங்க முடிவ சொல்லுங்க.” என்றவன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.

சத்ருகணனும் உணவில் கை வைத்தான். சில நொடிகளுக்கு பிறகு “ரோஷினி கிட்ட பேசிட்டு எனக்கு நாளைக்குள்ள பதில் வரனும்” என்றான்.

“ஓகே மச்சான்”

ரஞ்சித் சொன்னதும் சத்ருகணன் சட்டென முறைக்க அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தான்.

“வெயிட்.. நான் உன்னை பிடிக்கலனு சொன்னது ஆச்சரியமா இல்லையா?”

“எல்லாம் ஏற்கனவே தெரிஞ்சது தான். உன் சம்மதம் இல்லாம பாட்டி கூட அந்த கல்யாண பேச்ச எடுத்துருக்க முடியாதுனு தெரியும்.”

“இன்னொன்னும் தெரிஞ்சுக்க. உன்னை அன்னைக்கு வர வச்சதே அடிச்சு துரத்த‌ தான். ஆனா ரோஷினி இருந்ததால தப்பிச்சுட்ட.” என்றதும் ரஞ்சித்தின் கண்ணில் ஆச்சரியம் வந்தது.

‘இவனுக்கு ரோஷினிய அவ்வளவு பிடிக்குமா?’ என்று நினைத்தவன் “ரோஷினிய எப்ப பார்த்த?” என்று கேட்டான்.

“அது உனக்கு தேவையில்லாதது”

“சரிங்க மாப்பிள்ளை”

“வாட்?”

“தங்கச்சிய கல்யாணம் பண்ணா மாப்பிள்ளை தான?” என்று கேட்டு விட்டு சிரித்தபடி பணத்தை எடுத்து பில்லுக்கு வைத்தான்.

இதற்கு முறைக்க முடியாமல் சத்ருகணன் தான் அடங்க வேண்டியிருந்தது. மௌனமாக வேலையை முடித்து விட்டு வெளியே வந்தனர்.

“நீயே கால் பண்ணுற”

“பார்க்கலாம்” என்றதோடு நிறுத்திக் கொண்டான் ரஞ்சித்

பிறகு இருவரும் ஆளுக்கொரு பாதையில் பிரிந்து சென்றனர்.

°°°

ஒரு வழியாக வேலை முடிந்தது. ரோஷினிக்கு நிம்மதியாக இருந்தது. அவர்களது முதல் முயற்சி ஆரம்பமாகி விட்டது.

“நீ இந்த டீம் லக்கி சாம் ரோஷ். நீ வந்ததும் எல்லாம் சரியா போகுது” என்று சுப்ரியா கூற “அப்ப சம்பளத்துல பாதிய எனக்கு கொடுங்க” என்று கேட்டு சிரித்தாள்.

“ஆளப்பாரு.. ஆசையப்பாரு” என்று ஆளுக்கொரு பக்கம் அவளை இடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டனர்.

அலுவலகம் விட்டு வெளியே வர ரஞ்சித் வாசலில் நின்றிருந்தான்.

“என்னணா? வந்தா கால் பண்ண வேண்டியது தான?”

“இப்ப தான் வந்தேன். வா கிளம்பலாம்” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு நேராய் சிற்றுண்டி சாப்பிடச் சென்றான்.

அவளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து விட்டு “உனக்கு என் மேல கோபமா?” என்று கேட்டான்.

ரோஷினி மேலும் கீழும் தலையசைத்தாள்.

“நான் கேட்டு கூட நீ சொல்லல தான?”

“எனக்குனு ரீசன் இருக்குடா. சொல்லவே கூடாதுனு இல்ல”

“சரி.. இத நானே கொஞ்சமா கெஸ் பண்ணேன் தான். இப்ப என்ன செய்யலாம்?”

“நீயே சொல்லு”

“அண்ணிய மறந்துடுணா.. அவங்க நமக்கு செட் ஆக மாட்டாங்க”

“ரோஷினி.. என்ன இப்படி சொல்லுற?” என்று அவன் அதிர்ந்து பார்க்க ரோஷினி சிரித்து விட்டாள்.

“ஹா ஹா.. உன் மூஞ்சி ஏன் இப்படி போகுது?”

“மறந்துடுனு சொன்னா? சந்தோசமா பட முடியும்? ஏன்டா? உனக்கு என் மேல தான கோபம்? அத ஏன் சோபனா கிட்ட காட்டுற?”

“அய்ய.. ணா.. காதலிச்சா மூளை ஒழுங்காவே வேலை செய்யாதுனு சொல்லுவாங்க. இப்ப அத நூறு சதவீதம் நம்புறேன். நான் மறந்துடுனு சொன்னேன். ஆனா அதுக்கு முன்னாடி அண்ணினு ஒரு வார்த்தைய சேர்த்து சொன்னேன். அத கவனிக்கலயா நீ?” என்று சலித்துக் கொண்டாள்.

“ஓஹ்…”

“ரொம்ப கஷ்டம் போ. எனக்கு அவங்க ஓகே தான். பார்க்க அழகா இருக்காங்க. நீ வேற உயிரயே வச்சுருக்க. கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழுவீங்கனா அதுவே போதும். நமக்கு நாம தான பார்த்துக்கனும். சித்தி சித்தப்பாவும் சரினு தான் சொல்லுறாங்க. சோ கவலையே படாத சோபனா அண்ணி உனக்கு தான்”

“இத பேசிட்ட.. உன் கல்யாணம் எப்படி? உன்னை இப்படியே விட்டுட்டு கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னேனே”

“ஏன்ணா அடம் பிடிக்குற? நீ கல்யாணம் பண்ணா அண்ணி வருவாங்க. அண்ணி அம்மா மாதிரி. அவங்க வந்தப்புறம் எனக்கு அம்மா அப்பாவா நீங்க இருந்து கல்யாணம் பண்ணி வைக்க மாட்டீங்களா? கடமைய கழிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணுவியா?”

“ஏய் என்ன இப்படி பேசுற?”

“நியாயமா தான கேட்குறேன்? கல்யாணம் ஆகிட்டா என்ன அம்போனு விட்டுருவியா? அப்பவும் நான் உன் தங்கச்சி தான? அப்புறமா கல்யாணம் பண்ணா ஆகாதாமா?”

“உனக்கு புரியல ரோஷ்.. நான் அங்க கல்யாணம் பண்ணி குடும்பமா வாழும் போது என் தங்கச்சி இங்க தனியா வாழுறது நல்லா இருக்காது. முதல்ல உனக்கு தான் கல்யாணம் பண்ணனும். நீ சந்தோசமா இருக்கத பார்த்தா தான் நானும் நிம்மதியா இருக்க முடியும்”

“பைத்தியம் தெளிஞ்சா தான் கல்யாணம். கல்யாணம் நடந்தா தான் பைத்தியம் தெளியும் கதையா போச்சு. சரி இப்ப என்ன பண்ணலாம்?”

“சோபனா அண்ணன் கிட்ட பேசுனேன்”

“என்னவாம்?”

“உனக்கு அவர புடிச்சுருக்குனு சொன்னார்”

“உண்மை தான்”

“என்ன இப்படி சட்டுனு ஒத்துக்கிட்ட?”

“வெட்கப்படுவேன்னு நினைச்சியா?” என்று கேட்டு சிரித்து விட்டாள்.

“நிஜம்மாவே பிடிச்சுருக்கா?”

“ஆமாணா.. அவர பிடிக்காம இருக்க என்ன காரணம் இருக்கு? அவர் கிட்ட பேசிப்பார்த்தேன். நல்லவர். முக்கியமா அண்ணியோட அண்ணன். என்னோட பாஸ் வேற. சந்தோசமா கல்யாணம் பண்ணிக்கலாம்”

“அப்ப உனக்கு சம்மதம்..? பின்னாடி ஃபீல் பண்ண மாட்டீயே?”

“மாட்டேன். நீ சோபனா அண்ணி கூட சந்தோசமா வாழ்ந்தா நானும் அவங்க அண்ணன் கூட சந்தோசமா வாழுவேன். நீ அண்ணிய எதாச்சும் பண்ணா தான் அவர் வந்து என்னை எதாவது பண்ணுவார். அதுனால நீ என் வாழ்க்கைக்காக சந்தோசமா வாழு.. ஓகே?”

கண் சிமிட்டி கேட்ட தங்கையின் தலையை பிடித்து ஆட்டினான்.

“திடீர்னு வளர்ந்துட்ட” என்றவனுக்கு உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைக்க ரோஷினிக்கும் கண்கலங்கும் போல இருந்தது.

இதை எல்லாம் அவர்களது பெற்றோர்கள் பேசி முடிக்க வேண்டியது. ஒரு பெருமூச்சில் உணர்வுகளை தள்ளி வைத்தாள்.

அப்போதே சித்தி சித்தப்பாவிடம் விசயத்தை சொல்ல வீடு பார்ப்பதை மறந்து விட்டு பாட்டியிடம் வந்து விசயத்தை கூறினர்.

தொடரும்.

Leave a Reply