அத்தியாயம் 16
![]()
கிட்டத்தட்ட எல்லாமே முடிவானது.
“இனிமே நல்ல நாள் பார்த்தா போதும்” என்று பாட்டி சொல்ல சுற்றியிருந்த அனைவருக்குமே திருப்தியாக தான் இருந்தது.
தாய் தந்தையை சத்ருகணன் சரிகட்டியிருக்க எல்லாம் ஒரே நேரத்தில் பேசி முடித்து விட்டனர்.
ரஞ்சித் மட்டும் வேலை இருப்பதால் கிளம்பிச் சென்று விட்டான். சோபனாவை அனுப்ப மறுத்தனர்.
“கல்யாணம் முடியுற வரை நீ இங்க தான் இருக்கனும். வீட்டுல இருந்து வேலை பாரு. இல்லனா வேலைய விட்டுரு. கல்யாணத்துக்கு அப்புறம் வேற தேடிக்க. இல்லனா நம்ம கம்பெனில வேலை பாரு. ஆனா நீ போகக்கூடாது” என்று சத்ருகணன் திட்டவட்டமாக சொல்ல மற்ற யாருமே மறுத்துப் பேசவில்லை.
“என் வேலை பத்தி தெரியாம பேசாதணா.. நான் அங்க போய் தான் ஆகனும்” என்று எவ்வளவு சொல்லியும் சத்ருகணன் காதில் வாங்கவே இல்லை.
ரோஷினிக்கு கூட இதைக்கேட்டு பாவமாகத்தான் இருந்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டாள்.
சித்தி சித்தப்பா பேசி முடித்து விட்டு அடுத்த நாள் திருமண ஏற்பாட்டை கவனிக்க ஊர் திரும்பினர்.
திருமண நிச்சயம் திருமணம் எல்லாம் அடுத்த அடுத்த நாளே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவானதும் அனைத்தும் சென்னையில் தான் என்று முடிவானது.
ரஞ்சித் ரோஷினிக்கு இருக்கும் சொத்து மதிப்புகளை பற்றி வெளிப்படையாகவே சொல்லி விட்டனர். ரோஷினிக்கு அவளுடைய தாயின் நகைகளும் பாட்டி நகைகளும் இருந்தது. அதை மாற்றி செய்ய முடிவெடுத்தார் மலர்.
மற்ற சொத்துக்களை விற்கவோ மாற்றவோ யாருக்கும் விருப்பமில்லை.
“சொத்து மருமகன் பேர்ல இருந்தா என்ன? மருமக பேருல இருந்தா என்ன? எல்லாம் ஒரே குடும்பம் தான?” என்று பாட்டி சொல்லி விட மற்றவர்களும் விட்டு விட்டனர்.
திருமண செலவு மட்டும் பாதியை ரஞ்சித் ஏற்பதாக சொல்லி விட்டான். அனைத்தையும் இவர்களிடம் தள்ள அவனுக்கு விருப்பமில்லை.
பாட்டி முகூர்த்த நாள் குறிக்கும் வேலையை கையில் எடுத்துக் கொள்ள எல்லாம் சுமூகமானது.
இரவு பாட்டி சொல்ல சொல்ல ரோஷினி சமைத்துக் கொண்டிருந்தாள்.
“போற வீட்டுல சமைப்பனு சொல்லிக் கொடுத்தேன். ஆனா போற வீடு என் புள்ளை வீடாகும்னு நினைக்கல” என்று பாட்டி கூற “உங்க பேரனுக்கு சமைச்சு போட நீங்களே சொல்லிக் கொடுத்து அனுப்புறீங்க பாட்டி.. ஆனா அங்க சமையலுக்கு ஆள் இருக்குல?” என்று கேட்டாள்.
“இருக்கு தான். நீயும் செய். யாரு தடுப்பா?”
“ஒன்னு கேட்கவா? இது வரை ரெண்டு பேரும் குடும்ப விசயத்த பேசுனதே இல்ல. எப்படியும் கொஞ்ச நாள்ல கிளம்பிடுவேன்னு ஒதுங்கி இருந்தேன். இப்ப குடும்பத்த பத்தி தெரிஞ்சுக்கனும்ல?”
“அதுவும் சரி தான். எனக்கு உன்னை மாதிரி ஒரே ஒரு அண்ணன் கிடையாது. ரெண்டு அண்ணன் ஒரு தங்கச்சி. எல்லாரும் ஆளுக்கொரு இடத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். உங்க தாத்தா அப்பவே நல்லா படிச்சவரு. என்னை கூட்டிட்டு இங்க வந்துட்டாரு. இங்கயே செட்டிலும் ஆனோம். உன் மாமனார் பார்க்குறானே.. அந்த தொழில உன் தாத்தா தான் கைகாச போட்டு ஆரம்பிச்சாரு. ஆரம்பத்துல கஷ்டம் தான். போக போக தேறிட்டோம்.”
“ஓஹோ”
“குமாருக்கு முன்னாடி ரெட்டை பிள்ளைங்க.. பிறந்து இறந்து போச்சு. அப்புறம் அவன் பிறந்தான். அடுத்து வேற பிள்ளை தங்கல. நாங்களும் வாரிசுக்கு ஒரு மகன் இருக்கானேனு விட்டோம்.”
“அப்புறம்?”
“உங்க தாத்தா படிச்சதால அவனையும் நல்லா படிக்க வச்சாரு. படிச்சு டிகிரிய வாங்கிட்டு வருவான்னு பார்த்தா உன் அத்தைய கையோட கூட்டுட்டு வந்துட்டான்”
“வாவ்! லவ் மேரேஜ்ஜா?”
“ஆமா.. கௌசல்யா அப்ப ரொம்ப வாயாடுவா. சமைக்கிறது வீட்டு வேலை பார்க்குறது எதுவும் செய்ய முடியாதுனு சட்டமா பேசுவா. எனக்கும் அவளுக்கும் நிறைய சண்டை வரும்”
“மாமியார் மருமகனா சண்டை இருக்க தான செய்யும்? அப்புறம்?”
“நிறைய சண்டை சச்சரவுனு தான் போயிட்டு இருந்துச்சு. ரெண்டு புள்ளைங்களும் பிறந்துட்டாங்க. ஆனா கௌசல்யா ஒரு வீட்டு வேலையும் பழகல.. அப்புறம் கொஞ்ச வருசத்துல.. கண்ணனுக்கு பத்து வயசு.. உங்க தாத்தா தவறிட்டாரு. கொஞ்ச காலம் எதுலயும் மனசே ஒட்டல..”
“ரொம்ப வருத்தமா இருந்துருக்கும்ல?”
“கஷ்டம் தான். அவர் கைய பிடிச்சுட்டு தான இந்த ஊருக்கு சேர்ந்தேன். அவரே இல்லனா? மனசு விட்டுப்போய் இருக்கப்போ மறுபடியும் கௌசல்யா கூட சண்டை. குமார் ரொம்ப வருத்தப்பட்டான். அவனுக்காக கொஞ்சம் பொறுத்தேன். அப்புறம் முடியாம இந்த வீட்டுக்கு தனியா வந்துட்டேன்.”
“தனியாவே இருக்கது கஷ்டமா இல்லையா?”
“இருந்துச்சு தான். ஆனா அங்க இருந்து நான் எதையாவது பேசி பிரச்சனையாகி எல்லாருக்கும் மனக்கஷ்டத்த கொடுக்குறத விட எப்படியோ அடிச்சு பிடிச்சு நீங்களே வாழுங்கனு வந்துட்டேன்.”
“இத ஆஃப் பண்ணிடவா?” என்று கேட்டு அடுப்பை அணைத்தாள்.
“அங்க போனதும் எப்படியும் அவ கூட உனக்கு பிரச்சனை வரத்தான் செய்யும். மாமியார் குணமே அதான். அவ எதுவும் சொன்னா கொஞ்சம் பொறுத்து போயிடு. எல்லாம் சில காலம் தான். நடை தளர்ந்து போகும் போது அவளும் என்னை போல புரிஞ்சுக்குவா.”
ரோஷினி தலையாட்டி கேட்டுக் கொண்டாள்.
அடுத்த நாள் வேலைக்கு சென்று வீடு திரும்ப பாட்டி நல்ல நாள் பார்த்து வைத்து விட்டார்.
இன்னும் ஒரே மாதத்தில் திருமணம். வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டது.
கௌசல்யா பதட்டத்தோடு அறையை விட்டு வெளியே வந்தார். அப்போது தான் சத்ருகணனும் குமாரவேலும் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
“என்னங்க.. சுகி சூசைட் அட்டன் பண்ணிட்டாளாம்” என்று பதட்டத்தோடு சொல்ல இருவருமே அதிர்ச்சியோடு பார்த்தனர்.
“என்னமா.. என்ன நடந்தது? பதறாம சொல்லு” என்று குமாரவேல் கேட்க “நாம இந்த கல்யாண விசயத்த சொன்னதுல இருந்தே அழுதுட்டு இருந்துருக்கா. இன்னைக்கு தூக்கு போட போயிட்டாளாம்” என்றார் கண்கலங்க.
அவருடைய அண்ணன் மகள் அல்லவா? பாசம் தொண்டையை அடைத்தது.
“போச்சு.. இவ செத்து வைக்க போறா” என்று சோபனா தலையில் அடித்துக் கொள்ள “இப்படி அபசகுனமா பேசாதடி” என்று மகளை அதட்டினார் அன்னை.
“நாம என்னனு போய் பார்த்துட்டு வந்துடலாம்” என்று இருவரும் கிளம்ப “நானும் வர்ரேன்” என்றாள் சோபனா.
சத்ருகணன் எதோ யோசித்து விட்டு “நானும் வர்ரேன்” என்று கூறி முன்னால் நடந்தான்.
நான்கு பேருமே சுகப்பிரியாவின் வீட்டில் சென்று இறங்கினர்.
சுகப்பிரியாவின் பெற்றோர் ஆளுக்கொரு பக்கம் அழுது கொண்டிருக்க அவள் காலை கட்டி அதில் முகத்தை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளை விட்டு நகர பயந்து அமர்ந்திருந்தது புரிந்தது.
“என்னமா நீ? இப்படியா பண்ணுவ?” என்று எடுத்ததுமே கௌசல்யா கேட்க அவளிடம் கேவல் தான் வந்தது.
“என் மகளுக்கு எல்லாருமா சேர்ந்து ஆசை காட்டிட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே” என்று தாய் அழ “அத்த.. யாரு ஆசை காட்டுனது?” என்று சத்ருகணன் கோபமாக கேட்டான்.
“டேய்.. அமைதியா இரு” என்று எல்லாரும் அவனை அடக்கப் பார்க்க “நான் இங்க வந்ததே பேசி முடிக்க தான்” என்று அழுத்தமான குரலில் சொன்னான்.
“என்ன பேசனும்? எதுவும் வேணாம். போங்க. எனக்கு என் மக இருந்தா போதும்” என்று மீண்டும் பெற்றோர் பேச “கொஞ்சம் நிறுத்துறீங்களா?” என்று அதட்டினான்.
“நான் வந்தத பேசிக்கிறேன். இவ சூசைட் அட்டன் பண்ணா.. அப்படித்தான?”
“பின்ன நாங்க பொய் சொன்னோமா?”
“நீங்க பொய் சொல்ல வாய்ப்பில்லை அத்த.. ஆனா இவ சொல்லுவா.. ஆமா.. இவ சூசைட் பண்ணிக்க போனானு எப்ப பார்த்தீங்க?”
“காலையில காபி கொடுக்க வரும் போது..”
“சொல்லுங்க.. வரும் போது?”
“துணிய மேல மாட்டிட்டு இருந்தா” என்று அழுதார்.
ஆனால் அதை சத்ருகணன் கணக்கில் எடுக்கவில்லை.
“காலையிலனா? எப்ப? நாலு மணிக்கா?”
“இல்ல.. ஒரு.. ஏழு மணிக்கு”
“அதான நீங்க இவளுக்கு வழக்கமா காபி கொடுக்குற நேரம்?”
“இப்ப என்ன சொல்ல வர்ரீங்க அத்தான்? நான் சாகாம இருக்கது உங்களுக்கு கசக்குதா?? செத்துடட்டுமா?” என்று மெத்தையை விட்டு எழப்போக மற்றவர்கள் அவளை பிடிக்க “ஏய்” என்று குரலை உயர்த்தினான்.
எல்லாரும் திடுக்கிட்டு பார்க்க “உன் நடிப்ப இதோட நிறுத்திக்க.. இதுக்கு மேல போச்சு.. அப்புறம் அத்தை மாமாக்காக கூட பார்க்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
“நடிச்சனா? ஓஓ.. நான் சாகுறது உங்களுக்கு நடிப்பா? உங்கள கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி ஆசை காட்டி ஏமாத்தினது நீங்க எல்லாம் தான். நான் நடிக்கிறனா?”
“ஆமா.. நடிப்பு தான்.. எப்படி எப்படி? சாகப்போறவ.. நைட் முழுக்க விட்டுட்டு.. காலையில ஏழு மணிக்கு சரியா அத்தை காபி கொண்டு வர்ர நேரம் கதவ திறந்து போட்டுட்டு சாவாளா? பச்சையா தெரியல டிராமானு? இவங்க தான் உன் நடிப்புல விழ முடியும். நான் இல்ல. இதெல்லாம் பல வருசமா பார்த்துட்டு இருக்கேன் நான்.”
கௌசல்யா அது வரை சுகப்பிரியாவிற்காக வருத்தப்பட்டுக் கொண்டு தான் இருந்தார். மகன் சொன்னதை கேட்டதும் தான் அவருக்கு எதுவோ சரியில்லை என்று புரிந்தது.
“நான்..”
“பேசாத.. உன் பேச்ச கேட்க நான் வரல. இனிமே இந்த மாதிரி நடிச்சு கல்யாணத்த நிறுத்தனும்னு பார்க்காத. அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்”
“சரி அவ நடிச்சதாவே இருக்கட்டும். அதுக்கு என்ன செய்ய போற? எங்களுக்கு நம்பிக்கைய கொடுத்து ஏமாத்துன நீங்களும் ஒன்னும் நல்லது பண்ணிடலயே.. அப்புறம் என்ன?” என்று சுகப்பிரியாவின் தாய் கேட்க “உங்களுக்கு நம்பிக்கைய யாரு கொடுத்தா? நானா? இல்ல என் அப்பா அம்மாவா? யாருனு தெளிவா சொல்லுங்க” என்று கேட்டு வைத்தான்.
“நீங்க எல்லாரும் தான்”
“எப்படி? இவள கட்டிக்கிறேன்னு நான் சொன்னேனா? இல்ல இவ தான் என் வீட்டு மருமகனு என் அம்மா உங்களுக்கு வாக்கு கொடுத்தாங்களா? எதுவுமே இல்லயே.. ஜஸ்ட் பேசி வச்சாங்க. சுகப்பிரியாவ எனக்கு கல்யாணம் பண்ணி வச்சா நல்லா இருக்கும்னு நினைச்சாங்க. அவ்வளவு தான். வெறும் பேச்ச நீங்க பிராமிஸ்ஸா நினைச்சா? அது உங்க தப்பு”
“டேய்.. கொஞ்சம் அமைதியா இரு. இது கோபப்படுற நேரமில்ல. அமைதியா பேச வேண்டிய நேரம்” என்று குமாரவேல் மகனை தடுக்கப்பார்த்தார்.
“இல்லபா.. இதுக்கு மேல பொறுமையெல்லாம் எனக்கு கிடையாது. இன்னைக்கு இந்த நிமிஷம் இத முடிக்கிறேன்” என்றவன் சுகப்பிரியாவிடம் திரும்பினான்.
“இங்க பாரு.. இந்த கல்யாண பேச்சு பேசுன ஆறு மாசத்துல நான் என்னைக்காச்சும் உனக்கு நம்பிக்கை தர்ர மாதிரி நடந்துருக்கனா? சொல்லு”
பதிலே சொல்லாமல் அழுது வைத்தாள்.
“அப்படி எதுவும் நான் பண்ணது இல்ல. ஏன்னா எனக்கு உன்னை சுத்தமா பிடிக்காது. உன்னை என் அம்மாவுக்கு பிடிச்சுருக்கேனு தான் கொஞ்சமா பொறுத்து போனேன். இல்லனா உன் கேரக்டருக்கு என்னைக்கோ என் கிட்ட நல்லா வாங்கி கட்டி இருப்ப”
“இப்ப எதுக்கு அவ கிட்ட கத்துற? அதான் வேணாம்னு சொல்லிட்டல? போதும் கிளம்புங்க” என்று சுகப்பிரியாவின் தந்தை வர “அது எப்படி முடியும்? முழுசா முடிச்சுட்டே போறேன்” என்றான்.
“உங்க மகள எனக்கு பிடிக்கவே பிடிக்காது மாமா. இப்ப இல்ல. சின்ன வயசுல இருந்தே எனக்கு இவள பிடிக்காது. ஏன் தெரியுமா? சோபி.. சொல்லேன். ஏன் இவள எனக்கு பிடிக்காதுனு உனக்கு நல்லா தெரியும்ல? சொல்லு” என்று தங்கையை இழுத்து விட்டான்.
வந்ததிலிருந்து அமைதியாக வேடிக்கை பார்த்தவளுக்கு சட்டென வார்த்தை வரவில்லை. மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். உண்மையை சொல்லப்போனால் சோபனாவுக்கும் சுகப்பிரியாவை பிடிக்காது தான்.
“இங்க வா” என்றவன் தங்கையை கையை அருகே இழுத்து அவளது கழுத்து காயத்தை காட்டினான்.
“இந்த காயம் எப்படி வந்துச்சுனு உங்க யாருக்கும் மறந்துருக்காதுனு நினைக்கிறேன். ஜஸ்ட் மிஸ்ல அன்னைக்கு சோபி உயிர் போயிருக்கும். அதுக்கு காரணம் யாரு தெரியுமா? இதோ நீங்க பெத்த இவ தான்”
பல வருடங்களாக மறைத்து வைத்திருந்ததை பட்டென போட்டு உடைத்து விட்டான். அது வரை சுகப்பிரியாவின் கையை பிடித்துக் கொண்டிருந்த கௌசல்யா பட்டென விட்டு விட்டு எழுந்து விட்டார்.
“என்னடா சொல்லுற? இவளா?”
“ஆமாமா.. இவ தான் தள்ளி விட்டா.. அதுவும் ஒரு தடவ இல்ல.. ரெண்டு தடவ.. எல்லாரும் என்ன நினைச்சீங்க? பிள்ளைங்க விளையாடும் போது கீழ விழுந்து அடி பட்டு போச்சுனு நினைச்சீங்க. ஆனா நடந்ததே வேற..” என்றவன் சுகப்பிரியாவை வெறுப்போடு பார்த்தான்.
தலை நிமிர்த்த பயந்து போய் அமர்ந்திருந்தாள் அவள்.
“சோபி நீயும் சொல்லலயே..” என்று கௌசல்யா கேட்க “எங்கம்மா கேட்டீங்க?” என்று கேட்டவளுக்கு இன்றும் அந்த வேதனையை அனுபவித்தது போல் தொண்டை அடைத்தது.
“நல்லா கேளு.. எங்க கேட்டாங்க? அன்னைக்கு இவ போட்ட நாடகத்துல யாருமே உண்மை என்னனு தெரிஞ்சுக்க கூட வரலயே” என்று வெறுப்பை கொட்டினான்.
“தெளிவா சொல்லு சதா..”
“அன்னைக்கு இவங்க ரெண்டு பேரும் தான் விளையாடிட்டு இருந்தாங்க. சோபி நிறைய தடவ தோத்துருப்பா போல.. என்னை கூப்பிட்டு ஹெல்ப் கேட்டா. சொல்லிக் கொடுத்தேன். உடனே ஜெயிச்சுட்டா.. அது இந்த மகராணிக்கு பொறுக்கல.. காச்சு மூச்சுனு கத்துனா.. நான் சரிதான் போடினு கிளம்பிட்டேன். அதெப்புடி நீ ஜெயிக்கலாம்னு சோபிய கீழ தள்ளி விட்டா.. அத பார்த்துட்டு நான் திரும்பி வர்ரதுக்குள்ள சோபி தானாவே எழுந்துட்டா. என்னை ஏன் தள்ளி விட்டனு சோபி கேட்டதுக்கு நான் தான் ஜெயிக்கனும் நீ எப்படி ஜெயிக்கலாம்..? அப்படினு கத்தி மறுபடியும் பிடிச்சு தள்ளும் போது தான் கல்லுல விழுந்து கழுத்துல இவ்வளவு பெரிய காயம் வந்துச்சு”
சோபனாவின் கண்ணில் கண்ணீர் இறங்கி விட்டது.
“நான் பயந்து போய் ஓடி வந்து கடுப்புல அவள தள்ளி விட்டுட்டு சோபி தூக்குறேன்.. இவ.. நான் தள்ளுனப்ப விழவே இல்ல.. உங்கள கூப்பிடும் போது வேணும்னே தரையில அவளா விழுந்து அய்யோ அம்மானு கத்துறா.. அவ கத்துறதுல சோபிய விட எல்லாரு கவனமும் அவ பக்கம் தான் போச்சு. கழுத்துல காயம்பட்டு ரத்தம் கொட்ட சோபி கிடக்குறா.. ஆனா எல்லாரும் அழாத அழாதனு இந்த மகாராணிக்கு சமாதானம் பண்ணுறீங்க. அவ்வளவும் கேட்டுட்டு மறுபடியும் மறுபடியும் கத்திட்டே இருக்கா.. டிராமா அவ்வளவும் டிராமா”
சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்து போக சோபனாவுக்கு மீண்டும் கழுத்து வலிப்பது போல் இருந்தது.
“அன்னைக்கு மட்டும் சோபிக்கு எதாவது எக்குத்தப்பா நடந்துருக்கனும்.. இவள கொன்னுருப்பேன்”
சத்ருகணன் ஆவேசம் குறையாமல் பேச கௌசல்யா அழுத மகளை அணைத்துக் கொண்டார்.
“அந்த நிமிஷத்துல இருந்தே உங்க மகள எனக்கு பிடிக்காது மாமா. அத கூட தெரியாம சின்ன பிள்ளை கோபத்துல தள்ளிட்டானு மழுப்பலாம். போன வாரம் ஆஃபிஸ் வந்துருந்தீங்களே… அப்ப வந்த உங்க பொண்ணு என்ன செஞ்சா தெரியுமா?
ரஞ்சித்.. எங்க வீட்டு மாப்பிள்ளை.. அவரோட தங்கச்சி தான் ரோஷினி. நான் கட்டிக்க போறவ.. ஆனா இதெல்லாம் முடிவாகுறதுக்கு முன்னாடி நானும் அவளும் தனியா பேசிட்டு இருந்தோம். அத பார்த்த உங்க மக என்ன பண்ணி வச்சா தெரியுமா?
ரோஷினியோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் தேடிப்போய்.. ரோஷினி பல பசங்களோட சுத்துனவ.. அப்படி இப்படினு அசிங்கபடுத்தி இருக்கா.. அவள அப்படி பேச இவளுக்கு யாரு உரிமை கொடுத்தது? இதெல்லாம் சாம்பிள்.. இன்னும் நிறைய சொல்லுவேன். உங்களுக்காக தான் பொறுத்து போயிட்டு இருந்தேன். இப்ப சூசைட் டிராமாக்கு வந்துட்டா..
இங்க பார்.. நீ டிராமா போட்டாலும் சரி.. அழுது ஊரைக்கூட்டுனாலும் சரி.. உன்னை இந்த ஜென்மத்துல நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். உன்னால முடிஞ்சத பார்த்துக்க”
பேசி முடித்தவன் விருட்டென அறையை விட்டு வெளியேறி விட்டான். எதுவும் பேசாமல் மற்றவர்களும் வெளியேறியிருந்தனர்.
சோபனாவா? சுகப்பிரியாவா? என்று வந்தால் கௌசல்யாவிற்கு மகளை விட எதுவுமே பெரிதல்ல. அதனால் உடனே கிளம்பி விட்டனர்.
தொடரும்.
