அத்தியாயம் 17

Loading

திருமண வேலைகள் ஆரம்பித்தது. மலரும் ஆறுமுகமும் ரோஷினியின் அத்தனை நகைகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

மற்ற ஏற்பாடுகளை முடித்து விட்டு மீண்டும் சென்னை வந்து விட்டனர்.

“இங்கயே நகைய மாத்திட்டு கல்யாண சேலையையும் எடுத்துக்கோங்க.. பத்திரிக்கையும் அடிக்க கொடுத்தா உடனே வந்துடும். வாங்கிட்டு போய் ஊர்ல எல்லாருக்கும் வச்சுடுங்க” என்று பாட்டி சொல்லியிருக்க அதுவே முடிவானது.

°°°

ரோஷினி அலுவலகத்தில் வேலையாக அமர்ந்திருந்தாள்.

“ரோஷ்.. ஒரு மேட்டர் கேள்வி பட்டேன்”

“என்னது?”

“பாஸுக்கு கல்யாணமாம்”

“நமக்கு போனஸ் தருவாரா?”

“சமத்து குட்டி.. நீ தான் நான் நினைச்சத அப்படியே கேட்குற” என்று சுப்ரியா கொஞ்ச தனுஜாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

“பொண்ணு யாரு? எப்ப கல்யாணம்னு கேட்க மாட்டீங்களா?”

“நமக்கு எது முக்கியமோ அத தான் தனு முதல்ல தெரிஞ்சுக்கனும்” என்று ரோஷினி சொல்ல “அப்படி சொல்லு” என்றாள் சுப்ரியா.

“போனஸ் பத்தி தெரியலமா”

“அப்ப பொண்ண பத்தி சொல்லு”

“அன்னைக்கு வந்தாளே.. அவளா தான் இருக்கும்னு நினைக்கிறேன்”

ரோஷினி கணினியில் கண்ணும் பேச்சில் கவனமும் வைத்திருந்தாள்.

“ஆனா எனக்கு அவள பிடிக்கவே இல்ல”

“நீயா கட்டிக்க போற?”

“இல்ல தான்”

“நானும் ஒன்னு சொல்லனும்” என்றாள் ரோஷினி.

“உனக்கும் கல்யாணமா?” என்று கேட்டு சுப்ரியா சிரிக்க “ஆமா” என்றாள்.

சிறு அதிர்வோடு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அடிப்பாவி..! சொல்லவே இல்ல.. மாப்பிள்ளை யாரு? எப்ப கல்யாணம்?”

“சொல்லுவேன். ஆனா கத்த கூடாது. மாப்பிள்ளை நம்ம பாஸ் தான். இன்விடேஷன் வந்ததும் கொடுக்குறேன். அது வரை யாருக்கும்…” என்றவள் வாயில் ஜிப் போட்டு காட்டினாள்

ஆனால் இருவருமே இமைக்க மறந்து பார்த்தனர்.

“உண்மையா? இல்ல ப்ரான்க்கா?” என்று தனுஜா அதிர்ச்சி விலகாமலே கேட்க “இன்விடேஷன் வரும் பாரு” என்றாள்.

“அப்ப அன்னைக்கு வந்தவ?”

“அவள அப்பவே துரத்திட்டேன். இன்னொரு விசயம் இருக்கு”

“என்னது?”

“பாஸுக்கு ஒரு தங்கச்சி இருக்கா தெரியுமா?”

“ஆமா.. ஆனா பார்த்தது இல்ல.. ஏன்?”

“என் அண்ணனுக்கும் அவளுக்கும் சேர்த்து தான் கல்யாணம். ரெண்டு கல்யாணமும் ஒரே மேடையில வைக்கிறதா ப்ளான்”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு “எங்கள வச்சு காமெடி எதுவும் பண்ணுறியா?” என்று கேட்டனர்.

“இல்லபா.. முன்னாடியே சொல்லலனா வருத்தப்படுவீங்கனு தான் சொன்னேன். இப்ப வேலைய பார்க்கலாம்”

நம்புவதா? வேண்டாமா? என்ற சந்தேகத்துடனே வேலையை தொடர்ந்தனர்.

மாலை வேலை முடியும் நேரம் சத்ருகணன் ரோஷினியை அழைத்தான்.

“ஹலோ சார்”

“வெயிட் பண்ணு.. சேர்ந்து போகலாம்”

“ஹான்? எங்க?

“சொன்னா தான் வருவியா?”

“கண்டிப்பா”

“உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?”

“சார் இன்னும் விசயம் வரல”

“பாட்டி தான் கூட்டிட்டு வரச்சொன்னாங்க. நேரா சாப்பிங் போயிட்டு டின்னர் முடிச்சுக்கலாம்னு”

“ஓஓ.. சித்தி சொன்னாங்க மறந்துட்டேன். ஓகே வொர்க் முடிச்சுக்கிறேன். போகலாம்”

“ப்பா!!! கம்பெனி மேல எவ்வளவு அக்கறை!!”

“உங்க வெற்றிக்கு பின்னாடி இருக்க வேண்டிய நான் பொறுப்பாவும் இருக்கனும்ல?” என்க சத்ருகணன் சிரித்து விட்டு அழைப்பை துண்டித்தான்.

வேலை முடிந்து எல்லோரும் கிளம்பி விட ரோஷினி வாசலுக்கு வந்தாள். சத்ருகணன் காரோடு வர சுற்றியிருப்பவர்களை பற்றிக் கவலையில்லாமல் ஏறிக் கிளம்பி விட்டாள்.

“சொல்லாம வர மாட்ட இல்ல? இப்படியே உன்னை கடத்திட்டு போனா என்ன செய்வ?” என்று சத்ருகணன் கேட்க “பாட்டிக்கு என்ன பதில் சொல்லுவீங்க?” என்று மறு கேள்வி கேட்டு வைத்தாள்.

“பாட்டிய வச்சு மிரட்டுற? கல்யாணம் முடியட்டும் பார்த்துக்கிறேன்” என்றவன் காரை ஓட்ட ரோஷினி வேறு பக்கம் திரும்பி புன்னகையை அடக்கிக் கொண்டாள்.

“இந்த பக்கம் பார்த்தே சிரிக்கலாம். தப்பில்ல”

சத்ருகணன் சிரித்துக் கொண்டே சொல்ல ரோஷினி உதட்டை கடித்துக் கொண்டு திரும்பாமல் இருந்து விட்டாள்.

இருவரும் வேறு எதுவும் பேசிக் கொள்ளாமல் நேராக சேலை எடுக்க வந்து சேர்ந்தனர். அங்கு மொத்த குடும்பமும் அவர்களுக்காக காத்திருந்தது.

எல்லோரும் ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டிருந்தனர்.

“இங்க வா ரோஷினி.. முதல்ல இந்த சேலைய பாரு. கல்யாண சேலைய அப்புறமா தான் பார்க்கனும். இப்ப இதுல எல்லா பங்சனுக்கும் உனக்கு பிடிச்சத எடு” என்று சொல்லி பாட்டி அருகே அமர வைத்துக் கொண்டார்.

நிறைய சேலைகள் குவிந்து இருக்க ஒவ்வொன்றாக சளைக்காமல் புரட்டி போட்டு தேவையானதை எல்லாம் எடுத்துக் கொண்டனர். சோபனாவும் அவளுக்கு வேண்டியவற்றை வாங்கி அடுக்கினாள்.

“எல்லாருக்கும் முடிஞ்சதா? முகூர்த்த சேலைய பார்க்கலாமா? அத முடிச்சுட்டு ஆம்பளைங்களுக்கு எடுப்போம்.” என்று பாட்டி கூற எல்லோரும் முகூர்த்தபுடவை பார்க்க சென்றனர்.

அதற்கென இருக்கும் புடவைகளை எடுத்து போட சொல்லி கேட்டனர்.

“மஞ்சள் தான் எங்க குடும்ப சம்பிரதாயப்படி கல்யாணத்தப்போ கட்டுவோம். ரெண்டு பேரும் மஞ்சள் கலர்லயே எடுங்க” என்று பாட்டி சொல்ல மறுத்து பேச முடியுமா என்ன?

“உங்களுக்கு இந்த மாதிரி எதாவது சம்பிரதாயம் இருக்கா?” என்று மலரிடம் கேட்க “அப்படி எதுவும் இல்லமா.. மஞ்சளே ரெண்டு பேருக்கும் எடுத்துடலாம்” என்றார் மலர்.

அதே நிறத்தில் புடவைகள் வர ஆரம்பித்தது. மணப்பெண்களை முன்னால் நிற்க வைத்து பிடித்ததை எடுக்கச் சொல்லிவிட்டார்கள்.

ஆறுமுகமும் குமாரவேலும் அவர்களுக்கு தேவையானதை வாங்க சென்று விட கௌசல்யாவும் மலரும் ஆளுக்கொரு சேலையை பார்த்து அபிப்பிராயம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

சோபனாவிற்கு சலிப்பாக இருந்தது. ரஞ்சித் வரவில்லை. திருமணத்திற்கு மொத்தமாய் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டான். அதனால் தனியாக சலித்துப்போய் இருக்க ரோஷினியும் சத்ருகணனும் ஒன்றாக அமர்ந்து சேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘என்னமோ லவ் மேரேஜ் மாதிரி ஒட்டிக்கிறாங்க.. லவ் மேரேஜ் பண்ணுற நானே இங்க தனியா இருக்கேன்’ என்று கடுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரோஷினி சேலைகளை அலசி ஒரு சேலையை எடுத்தாள்.

“இது நல்லா இருக்குல?” என்று கேட்டு எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க சோபனா சட்டென எழுந்து அந்த சேலையை தூக்கினாள்.

“ஆமா நல்லா இருக்கு.. எங்க வச்சு பார்ப்போம்” என்று கண்ணாடி முன்னால் சென்று தன் மீது போட்டுக் கொண்டாள்.

“ம்மா.. இது நல்லா இருக்காமா?” என்று கௌசல்யாவையும் கூப்பிட ரோஷினி அவளை பார்த்து விட்டு திரும்பி அடுத்த சேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

சத்ருகணன் தங்கையையும் வருங்கால மனைவியையும் மாறி மாறி பார்த்தான். ரோஷினி சாதாரணமாக தான் இருந்தாள். அதனால் அமைதியாகி விட்டான்.

அடுத்து ஒரு சேலையை எடுத்தாள்.

“இது கூட நல்லா இருக்கு பாருங்க” என்று சத்ருகணனிடம் காட்ட “அட.. இதுவும் நல்லா இருக்கே” என்று அதையும் பறித்தாள் சோபனா.

ரோஷினி சட்டென திரும்பிப் பார்த்து விட்டு அமைதியாகி விட்டாள்.

“இது ரெண்டுமே நல்லா இருக்குல? எத எடுக்கலாம்?” என்று பாட்டியிடமும் தாயிடமும் தன் மீது போட்டு காட்டினாள்.

அவர்கள் அதை ரோஷினியின் கையில் இருந்து பறித்ததை கவனிக்கவில்லை. வேறு சேலைகளில் கவனமாக இருக்க சத்ருகணன் மட்டுமே கவனித்து இருந்தான்.

“இன்னும் எடுத்துட்டு வர சொல்லிருக்கோம் மேடம். அது வரை டீ குடிங்க” என்று சேல்ஸ் மேன் சொல்ல ரோஷினி அமைதியாக தேநீரை குடிக்க ஆரம்பித்தாள்.

அங்கிருக்கும் வேறு எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லை. பாட்டியும் மலரும் எதெதோ எடுத்துக்காட்டினார்கள். ஆனால் அவளுக்கு பிடிக்கவே இல்லை. அமைதியாக மறுத்துக் கொண்டிருந்தாள்.

புது சேலைகளை மொத்தமாக எடுத்து வந்து போட அதில் பளிச்சென ஒரு சேலை ரோஷினியின் கவனத்தை கவர்ந்தது.

“வாவ்” என்று கையில் எடுத்தாள்.

அவள் கையிலிருப்பதை பார்த்து விட்டு சோபனா அருகே வர சத்ருகணன் சட்டென ரோஷினியிடமிருந்து அந்த சேலையை வாங்கி விட்டான்.

“இது உனக்கு பிடிச்சுருக்கா? அப்ப வைச்சு பாரு” என்றவன் உடனே அவளது தோளிலும் போட்டு விட்டான்.

அண்ணன் கையிலிருந்து பறிக்க முடியாமல் சோபனா தடுமாறி நின்று விட்டாள்.

“பாட்டி.. இது நல்லா இருக்கா பாருங்க” என்று பாட்டியை வேறு கூப்பிட்டு காட்ட அவருக்கும் பிடித்து விட்டது.

“ஓகே.. இது ரோஷினிக்கு.. நாம பில் போடனும்” என்று தனியாக வைக்க சொன்னவன் “நீ எடுத்துட்டியா?” என்று தங்கையிடம் திரும்பினான்.

“இதுல ஒன்ன எடு சோபி.. ரெண்டுமே நல்லா தான் இருக்கு” என்று கௌசல்யா சொல்ல வேண்டா வெறுப்பாகவே ஒன்றை தேர்வு செய்தாள்.

மணமகனுக்கான உடையும் தேர்வு செய்து முடிக்க எல்லோரும் கிளம்பினர்.

இரவு உணவை வெளியே சாப்பிடச் செல்ல சோபனா அமைதியாகவே இருந்தாள். அவளை பார்த்து விட்டு ரோஷினி புருவம் சுருக்கினாள்.

“அண்ணி.. ஏன் டல்லா இருக்கீங்க?” என்று கேட்டு விட “உன் வேலைய பார்க்குறியா?” என்று பட்டென சொல்லி விட்டாள்.

“நான் என்ன கேட்டேன்னு இவ்வளவு கோபம்? என் மேல வேற எதுவும் கோபமா?”

“உன் மேலயா? எனக்கெதுக்கு அந்த வேண்டாத வேலை?”

சோபனா வெடுக்கென சொல்லி விட்டு திரும்பிக் கொள்ள ரோஷினிக்கு ஒன்றும் புரியவில்லை.

சோபனாவோடு கலந்து பழக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட ஓரிரு வார்த்தை பேசியிருந்தாள். வருங்கால அண்ணி என்று.

இன்று சேலையை பறித்ததற்கு நியாயமாக ரோஷினி தான் கோபமாக இருக்க வேண்டும். ஆனால் சோபனா கோபமாக இருக்கிறாளே? என்ன பிரச்சனை இவளுக்கு?

ஒன்றும் புரியாமல் அமைதியாகி விட்டாள்.

தொடரும்.

Leave a Reply