அத்தியாயம் 18
![]()
அன்று இரவு வீடு வந்து சேர்ந்ததும் ரோஷினி எடுத்து வந்த சேலைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் ரஞ்சித் அழைத்தான்.
“சொல்லுணா”
“சேலையெல்லாம் எடுத்தாச்சா?”
“ம்ம். ஏன் அண்ணி சொல்லலயா?”
“சொன்னா. இப்ப அதுக்கு கூப்பிடல.. நாளைக்கு நகை மாத்த போறதா சித்தி சொன்னாங்க. நான் பணம் போட்டு விடுறேன். உனக்கு பிடிச்சத எடுத்துக்க என்ன? சித்தப்பாவ கொடுக்க விடாத.”
“சரிணா”
“உனக்கு பிடிச்சத வாங்கிக்க.. காச பத்தி யோசிக்காத”
“ஓகே.. நாளைக்கு இன்விடேஷனும் அடிக்க கொடுக்க போறோம். உனக்கு எவ்வளவு வேணும்?”
“நிறைய பேர் வர மாட்டாங்க. ஆஃபிஸ் ஃப்ரண்ட்ஸ் தான்..”
“சரி கணக்க காலையில சொல்லு.. எனக்கு அது கூட தேவையில்ல. ஆஃபிஸ்ல எல்லாருக்கும் அவரே வச்சுடுவார். காலேஜ் ஃப்ரண்ட்ஸ் வர வாய்ப்பே இல்ல. சொன்னா போதும்”
“மாப்பிள்ளை சார் என்ன சொன்னாரு?”
“மாப்பிள்ளை சாரா?”
“அவரு மாப்பிள்ளை மட்டும் இல்லையே.. உனக்கு பாஸும் தான? அதான் சார்..”
“நேர்லயும் இப்படியே பேசி வைக்காத.. சிரிக்க போறாங்க.. அவர் உன் கிட்ட பேசனும்னு சொன்னாரு.. கால் பண்ணி பேசு”
“சரி பார்த்துக்கிறேன்” என்றவன் அடுத்து திருமண வேலைகளை பற்றி பேசிக் கொண்டே இருந்தான்.
மலர் உள்ளே வந்தார்.
“யார் கிட்ட பேசுற?”
“அண்ணன் தான்”
“இப்ப என்னவாம் அவனுக்கு?”
“ஹான்… சித்தி சித்தப்பாக்கு பக்கத்துல ஒரு மேடை போட்டுரலாமா? மூணு ஜோடியா இருக்கட்டும்னு சொல்லுறாரு.. என்ன போடுவோமா?”
“உனக்கு வாய் கூடி போச்சு” என்று அவள் தலையில் தட்டி விட்டு படுக்க தயாரானார்.
குடும்பம் என்றான பின்பு ஹோட்டலில் தங்க வேண்டாம் என்று பாட்டி சொல்ல இங்கேயே தங்கி விட்டனர்.
ரோஷினி சிரித்தபடி ரஞ்சித்திடம். பேசி விட்டு படுத்து விட்டாள்.
°°°
அடுத்த நாள் காலை எழுந்ததுமே தன் கைபேசியை எடுத்துப்பார்த்தாள் சோபனா. வெறுமையாய் இருந்ததை பார்த்து கண்கலங்கியது.
“காலையிலயே அழ வேணாம்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு ரஞ்சித்துக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினாள்.
பார்க்கவும் இல்லை. பார்த்தாலும் பதில் வரப்போவது இல்லை.
கடைசியாக அன்று தான் யார் என்ற உண்மையை சொன்ன போது பேசியது. அதன் பின் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. சோபனா அழைத்தாலும் எடுப்பதில்லை. குறுஞ்செய்திகளை படித்தாலும் பதில் தருவதில்லை.
எந்த கோபமாக இருந்தாலும் சோபனா அழைத்தால் அடுத்த நொடி எடுத்து பேசிவிடுவான். ஆனால் இப்போது?
நெஞ்சம் கனத்தது. கோபத்தில் இருக்கிறான். திருமணம் முடியட்டும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாலும் அவளால் வருந்தாமல் இருக்க முடியவில்லை.
நேற்று எடுத்த சேலைகளை படமாக அனுப்பி இருந்தாள். அதற்கு பதிலை எதிர்பார்த்து தான் ஏமாந்து அமர்ந்திருந்தாள்.
“இப்படி என் கிட்ட பேசாம இருக்கதுனா எதுக்கு இந்த கல்யாணம்?” என்று கோபமாக சண்டை போடத்தோன்றியது.
“சரி வேணாம்” என்று ஒரேடியாக சொல்லி விட்டால்? அதற்கு பயந்தே வாயை மூடிக் கொண்டிருந்தாள்.
அவனில்லாமல் சோபனாவால் வாழவே முடியாது. அவனுக்காக அவனையே பொறுத்துக் கொள்வது தான் நல்லது.
கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து வேலைகளை பார்த்தாள்.
சாப்பிட பிடிக்காமல் காபியை எடுக்க கீழே இறங்கினாள்.
“ம்மா.. இன்விடேஷன் அடிக்க கொடுக்க போறாங்களாம். நீங்க கூட போறீங்களா?” – சத்ருகணன்
“ஆமாடா. இங்க வேற எதுவும் வேலை இல்லை”
“அப்ப சரி.. ஆஃபிஸ்ல கொடுக்க தனியா அடிச்சுடுங்க.”
“சரிடா”
“ரோஷினி நகைய மாத்த போறாங்களாம். பாட்டி தாலியும் வாங்கலாம் இன்னைக்கு நல்ல நாள்னு சொல்லுறாங்க.”
“இன்னைக்கா? உங்கப்பா ஊருக்கு போயிருக்காரே..”
“அப்பா கிட்ட பேசுங்க. அவங்க மாத்தும் போதே வாங்கிட்டா ஒரே வேலை தான?”
இருவரும் பேசிக் கொண்டிருக்க சோபனா தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் காபியை கலந்தாள்.
ரஞ்சித் கலந்து கொடுக்கும் காபிக்கு மனம் ஏங்கியது. வெளியே சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள்.
“இன்விடேஷன் பார்த்தா ஃபோட்டோ அனுப்புங்கமா.. நானும் ரோஷினியும் செலக்ட் பண்ணி சொல்லுறோம்”
“சரிபா”
“இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா?” என்று சோபனா திடீரென வெடிக்க இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
“என்ன ஆச்சு உனக்கு? ஏன் கத்துற?”
“என்ன ஆச்சா? நல்லா பார்ஷியாலிட்டி பார்க்குறீங்க. நான் மட்டும் கல்யாணம் முடியுற வரை வேலைக்கு போகாம வீட்டுல இருக்கனும். அந்த ரோஷினி மட்டும் தினமும் ஆஃபிஸ் போறா? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?”
“லூசு மாதிரி பேசாத.. ரோஷினி இப்ப தான் வேலைக்கு சேர்ந்துருக்கா.. உள்ளூர்லயும் இருக்கா”
“அதுக்காக? அவ வேலைக்கு போகலாம். நான் போகக்கூடாதா? இப்பவே மருமகளுக்காக வக்காளத்து எல்லாம் வாங்குறீங்க? நான் கூட சுகி மேல தான் உங்களுக்கு பாசம்னு நினைச்சேனே” என்று கூறி வைக்க கௌசல்யா மகளை முறைத்தார்.
“வாய மூடுறியா?” என்று சத்ருகணன் அதட்ட “உண்மைய தான சொல்லுறேன். இதுக்கு பேரு தான ஓரவஞ்சனை.. நான் ஆஃபிஸ் போகக்கூடாது. வேலை பார்க்க கூடாதுனு சட்டம் போட்டுட்டு.. ரோஷினிய மட்டும் அனுப்புறீங்க? எந்த வகையில நியாயம் இது?” என்று எகிறினாள்
கௌசல்யா எதோ சொல்லப்போக “ம்மா.. நான் பேசுறேன் இவ கிட்ட. நீங்க வேலைய பாருங்க” என்றவன் தங்கையை கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு மடியேறினான்.
“காபி கொட்டிரும் விடுணா” என்று சோபனா பேசியதை அவன் கண்டு கொள்ளவில்லை.
கௌசல்யாவின் காதுகேளாத தூரம் வந்ததும் தான் கையை விட்டான்.
“இப்ப என்ன பிரச்சனை உனக்கு? எதுக்கு தேவையில்லாதத பேசிட்டு இருக்க?”
“என் வேலைய பத்தி பேசுனா அது தேவையில்லாததா?”
“சுகப்பிரியாவ பத்தி ஏன் பேசுற? ஏன் அவ அண்ணியா வரலனு வருத்தமா இருக்கா உனக்கு?”
“நான் ஒன்னும் அப்படி சொல்லலயே”
“பின்ன எதுக்கு அவ பேர எடுக்குற? இங்க பாரு.. உனக்கு ரோஷினிய பிடிக்காதுனு எனக்கு தெரியும். ஆனா அதுக்காக இப்படி சில்லியா பிகேவ் பண்ண.. பிச்சுடுவேன்”
“நான் எப்ப ரோஷினிய பிடிக்காதுனு சொன்னேன்.”
“பார்த்தேனே சேலை எடுத்தப்போ நடந்தத” என்று கோபமாக சொல்ல சோபனா சுதாரித்தாள்.
“இப்ப எதுக்கு தேவையில்லாம பேசுற? என்னை வேலைக்கு போகவிடாம தடுத்துட்டு அவள மட்டும் ஏன் போக விடுறனு தான கேட்டேன். அத விட்டுட்டு என்னென்னமோ பேசுற?”
“உன்னை போக விடனும்.. அவ்வளவு தான? சரி போ.. ஆனா அங்க போய் எங்க தங்குவ?” என்று கேட்க சட்டென பதறிய மனதை உடனே மறைத்துக் கொண்டு “வேற எங்க ஹாஸ்டல்ல தான்” என்றவள் காபியை குடிப்பது போல் மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
“அப்படியா? எந்த ஹாஸ்டல்ல? ஒரு வருசத்துக்கு முன்னாடி நீ தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு போனேன். அங்க சோபனானு ஒருத்தி இல்லவே இல்லனு சொல்லிட்டாங்களே”
சோபனாவிற்கு மனம் பதற ஆரம்பித்து விட்டது.
‘சமாளி சமாளி..’ என்று நினைத்தவள் “வேற ஹாஸ்டல்..” என்று ஆரம்பித்தாள்.
“அப்படியே போட்டேன்னா” என்று கையை ஓங்கியிருந்தான்.
சோபனா பயந்து விட “ஒரு வருசமா நீ எங்க இருக்கனு எனக்கு நல்லா தெரியும். இப்பவும் போய் அவன் கூட இருக்கனும்னு தான இப்படி சண்டை போடுற? கல்யாணம் பண்ணி வைக்கிறோம். அப்புறமா போய் இரு” என்றான் கோபமாக.
“இல்ல.. அப்படி எதுவும்..”
“பேசாத. அம்மா அப்பாவுக்கு விசயத்த சொல்ல வேணாம்னு அமைதியா இருக்கேன். ரோஷினி பத்தி பேசுன.. இத சொல்ல வேண்டியிருக்கும். இங்க பாரு.. எனக்கு அந்த ரஞ்சித்த சுத்தமா பிடிக்கல. அவனுக்கு உன்னை கட்டி வைக்கிறதே போனா போகுது ஒன்னா இருந்தீங்களேனு தான். ரோஷினி கூட என் கல்யாணம் நடக்கலனா உன் கல்யாணமும் நிக்கும். அத மனசுல வச்சு நடந்துக்க” என்று எச்சரித்து விட்டு சென்று விட்டான்.
சோபனா அதிர்ச்சியோடு அறைக்குள் வந்து விட்டாள்.
‘எல்லாமே தெரியுமா? எப்போ? எப்படி?’ என்று நினைத்தவளுக்கு கை உதறியது. அவள் செய்த தவறுகளுக்கெல்லாம் ஆதாரங்கள் அதுவாகவே உருவாகி இருக்கும் போலவே?
அந்த பக்கம் ரஞ்சித். குடும்பத்தை பற்றிய உண்மையை மறைத்ததற்கு இன்று வரை பேசவில்லை. இந்த பக்கம் சத்ருகணன். அவள் வீட்டில் பொய் சொல்லி விட்டு ரஞ்சித்தோடு ஒரே வீட்டில் வாழ்ந்ததை அறிந்து வைத்திருக்கிறான்.
தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள். எந்த பக்கமும் போக முடியாது. எதையும் சரி செய்ய முடியாது. திருமணம் நடக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும்.
ஆனால் சத்ருகணன் ரோஷினிக்காக பேசியது மட்டும் அவளுக்கு பிடிக்கவே இல்லை. அவர்கள் திருமணத்தை நிறுத்தினால் என்னுடையதையும் நிறுத்துவானாமே? அவ்வளவு முக்கியமா அவள்?
அவளுக்கு மட்டும் பாசமாக இருக்கும் அண்ணன். அவளுக்கென வக்காலத்து வாங்க கணவன். சோபனாவுக்கு மட்டும் பேசாத காதலன்.. கை ஓங்கும் அண்ணன்.
நினைக்கும் போதே ஆத்திரத்தில் முகம் சிவந்தது. கண் முன்னால் இருந்தால் ரோஷினியை அடித்திருப்பாள்.
‘நீ என்ன பெரிய இவளா? உனக்கு மட்டும் எல்லாரும் முக்கியத்துவம் கொடுக்குறாங்க. என்னை மதிக்க கூட மாட்டேங்குறாங்க’ என்று கேட்டு அவளை அறைய வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் இப்போது செய்ய முடியாது. அதற்கான நேரம் வரும். வராமல் போகாது. வரும் பொழுது ரோஷினி எதாவது செய்ய வேண்டும் என்று கறுவிக் கொண்டாள்.
தொடரும்.
