அத்தியாயம் 19
![]()
திருமண வேலைகள் நிற்காமல் நடந்து கொண்டிருக்க திருமண பத்திரிக்கை வந்து விட்டது.
அச்சடித்த பத்திரிக்கை எல்லாம் அலுவலகத்தில் வந்து சேர ரோஷினியை அழைத்தான் சத்ருகணன்.
“இன்விடேஷன எல்லாம் நீயே கொடுத்துடுறியா?”
“நானா?”
“ஆமா.”
ரோஷினி தயங்க “என்னாச்சு?” என்று கேட்டான்.
“நீங்க சொல்லாம நானா போய் கொடுத்தா என்ன நினைப்பாங்க?”
“இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லுற?”
“முதல்ல நீங்க கல்யாண விசயத்த சொல்லுங்க. அப்புறம் நான் கொடுக்குறேன். அப்ப கொஞ்சம் ஈசியா இருக்கும்”
“ஓகே” என்றவன் அவளை அனுப்பி விட்டு சில நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்தான்.
எல்லோரின் கவனத்தையும் திருப்பி விசயத்தை கூறினான். எல்லோரும் வாழ்த்து சொல்லி கை தட்டினர்.
“ஓகே தாங்க்யூ.. இன்விடேஷன் வந்துடுச்சு. எல்லாருக்கும் நானே கொடுக்கலாம் தான். ஆனா இப்ப நான் வெளிய போக வேண்டியது இருக்கு. அதுனால என்னோட வருங்கால மனைவி கொடுப்பாங்க” என்றதும் ஆளாளுக்கு யாரென்று தேட சுப்ரியாவும் தனுஜாவும் ரோஷினியை பார்த்தனர்.
“இங்க வா” என்றதும் ரோஷினி அவனருகே சென்று நின்றாள்.
“இவங்க தான் என்னோட வருங்கால மனைவி ரோஷினி” என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்ய பலர் அதிர்ந்து தான் போனார்கள்.
“இவங்க அண்ணனுக்கும் என் தங்கச்சி கூட கல்யாணம். எனக்கு இவங்க கூட. ரெண்டு கல்யாணமும் ஒரே நேரத்துல தான் நடக்கும். எதாவது கிஃப்ட் வாங்குனா ரெண்டா வாங்கிடுங்க. இப்ப இவங்க இன்வைட் பண்ணுவாங்க. கண்டிப்பா குடும்பத்தோட வந்துடுங்க.” என்றவன் ரோஷினியின் தோளில் தட்டி புன்னகைத்து விட்டு கிளம்பி விட்டான்.
ரோஷினியை எல்லோரும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க அழைப்பிதழை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுப்பதற்கு தனுஜாவும் சுப்ரியாவும் உதவிக்கு வந்தனர்.
ரோஷினி எல்லோருக்குமே கொடுத்து அவர்கள் சொன்ன வாழ்த்தையும் வாங்கிக் கொண்டாள்.
“இது லவ் மேரேஜா? அரேன்ஜ்ட் மேரேஜா?” என்ற கேள்விக்கு “அரேன்ஜ்ட் தான்” என்று விட்டாள்.
“நீங்க சொந்தமா?”
“எப்படி இது நடந்துச்சு?”
“எங்க கிட்ட சொல்லவே இல்லயே நீ”
“அப்ப நிச்சயம் பண்ணிட்டு தான் இங்க வேலைக்கு வந்தியா?”
ஏகப்பட்ட கேள்விகள். எதற்கும் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பலோடு கடந்து விட்டாள்.
அலுவலகமே அவளை சற்று மரியாதையோடு நடத்த கூச்சமாக இருந்தது.
“இதெல்லாம் நீ பழகி தான் ஆகனும் மேடம். பாஸோட பொண்டாட்டினா சும்மாவா?” என்று தனுஜா கூற “ஏங்க பாஸ் மேடம்.. எதாச்சும் ஹெல்ப் வேணுமா?” என்று கேட்டாள் சுப்ரியா.
“அக்கா.. ரெண்டு பேரும் நல்லா வாங்க போறீங்க” என்று ரோஷினி முறைக்க “பின்ன? பாஸ் மேடம் ஆச்சே வேலைய விட்டு தூக்கிட்டா என்ன பண்ணுறது?” என்று பயந்தது போல் பேசினர்.
“ரொம்ப தான் பண்ணுறீங்க”
“அப்ப இது நிஜம்மாவே அரேன்ஜ்ட் மேரேஜ் தானா?”
“ஆமா. ஏன்?”
“பாஸ பார்த்தா அப்படி தெரியலயே.. லவ் பண்ணுற மாதிரி தெரியுதே”
“அப்படினு உங்களுக்கு யாரு சொன்னா?”
“என்னோட ஏழாவது அறிவு”
“என் எட்டாவது அறிவு உங்க ரெண்டு பேரையும் நல்லா திட்ட சொல்லுது. பேசாம வேலைய பாருங்ககா”
“முதலாளி அம்மா போய் வேலை செய்யலாமா? வேணும்னா நாங்க..”
“அக்கா..”
“சரிமா சரி..” என்று சிரித்துக் கொண்டே வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
°°°
திருமண மண்டபம் நிறைய ஆரம்பித்தது. இன்று மாலை தான் நிச்சயதார்த்தம். நாளை திருமணம்.
நெருங்கிய சொந்தங்களை மட்டும் தான் நிச்சயதார்த்திற்கு அழைத்திருந்தனர். மற்ற எல்லோரும் திருமணத்திற்கு தான் வருவார்கள்.
ரோஷினியும் சோபனாவும் ஆளுக்கொரு இடத்தில் தயாராகி மண்டபத்தை வந்து அடைந்தனர்.
இருபக்க குடும்பமும் இருக்க பெற்றோர்கள் இடத்தில் மலரும் ஆறுமுகமும் அமர்ந்து சடங்கு செய்தனர். எதையும் நினைக்காமல் வேலை ஓடிக் கொண்டே இருந்தது.
நிச்சயதார்த்தம் முடிந்ததும் புகைப்படங்கள் எடுப்பதற்கு ஜோடிகளை தனியாக அழைத்துச் சென்று விட்டனர். விருந்தினர்கள் சாப்பிட்டு முடிக்க வெளியூரை சேர்ந்தவர்கள் தங்க வைக்கும் ஏற்பாடுகளை மற்றவர்கள் கவனித்துக் கொண்டனர்.
பாட்டியும் அங்கே இங்கே என்று வேலை செய்ய அலைந்து கொண்டே இருந்தார்.
இரண்டு ஜோடிகளின் புகைப்படங்களும் தனித்தனியாக எடுத்து முடித்து நால்வரையும் ஒன்றாக புகைப்படம் எடுத்தனர்.
சத்ருகணன் ரோஷினி ஜோடி சந்தோசமாக அந்த தருணத்தை அனுபவித்துக் கொண்டிருக்க மற்ற ஜோடி சந்தோசமாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தது.
“லேடிஸ் நடுவுல நில்லுங்க.. நீங்க சைட்ல நில்லுங்க” என்று புகைப்பட கலைஞர் சொல்ல ரோஷினி சோபனாவின் அருகே வந்து நின்று கொண்டாள்.
சோபனாவிற்கு எரிச்சலாக வந்தது. ரோஷினியோடு நிற்கவே பிடிக்கவில்லை. ஆனால் அதை காட்டவும் முடியாதே. வேண்டாவெறுப்பாக நிற்க படமெடுக்க வேண்டியவன் சிரிக்க சொல்லி உயிரை வாங்கினான்.
இதற்கே உள்ளம் கொந்தளித்துப்போயிருக்க அடுத்ததாக பெண்களை மட்டுமே வைத்து பல படங்களை எடுத்து தள்ளி சோபனாவின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டான்.
சத்ருகணன் பார்வையும் ரஞ்சித்தின் பார்வையும் ரோஷினியிடம் தான் இருந்தது.
சத்ருகணன் மனைவியை காதலாக பார்த்தான். ரஞ்சித் தங்கையின் மீது இருந்த பாசத்தால் அன்புடன் பார்த்தான். தங்கை திருமணம் செய்து கொள்ளப்போகிறாள் என்பது அவனை அவ்வளவு தூரம் பாதித்து இருந்தது.
சிறு பெண்.. படித்து முடித்து ஒழுங்காக உலகத்தை பார்க்கவில்லை. உடனே திருமணம் செய்கிறாள். யாரால்? அவனால் அல்லவா?
சத்ருகணன் நல்லவன் தான். வெளிப்படையானவன் கூட. உன்னை பிடிக்கவே இல்லை என்று அவன் வெளிப்படையாக சொன்னது ரஞ்சித்துக்கு திருப்தியாக தான் இருந்தது. உள்ளே ஒன்றை வைத்து வெளியே வேசம் போடும் நபர்களை விட சத்ருகணன் எவ்வளவோ உயர்ந்தவன்.
அதோடு அவனுக்கு ரோஷினியை மிகவும் பிடித்திருக்கிறது. அவன் பார்வையில் ரோஷினியின் மீதான அன்பை உணர முடிந்தது. சத்ருகணனை விட சிறந்த ஜோடி கிடைக்காது தான். ஆனால் தங்கையின் வயது?
சத்ருகணனுக்கும் ரஞ்சித்துக்கும் ஒரே வயது தான். ஆனால் சோபனாவிட விட ரோஷினி சிறியவள்.
முதலில் எல்லாம் சரியென்று தோன்றியது. யோசிக்க யோசிக்க தேவையில்லாத கவலைகள் மனதை வந்து அடைத்தது. அதில் எதை சரிசெய்தால் மனம் நிம்மதி கிடைக்கும் என்று அவனுக்கே தெரியவில்லை.
“சார்.. சிரிங்க” என்று கேட்டதும் உதட்டை இழுத்து வைத்தான்.
பெண்களின் புகைப்படங்கள் முடிந்ததும் அண்ணன் தங்கையாக நிற்க வைத்து எடுத்தனர். சத்ருகணன் சந்தோசமாக தான் நின்றான். சோபனா தான் ரோஷினியும் ரஞ்சித்தும் சிரிப்பதை பார்த்து எரிந்து கொண்டே நின்றாள்.
புகைப்பட நேரம் ஒருவழியாக முடிவுக்கு வர கடைசியாக குடும்பத்தோடு எடுத்து முடித்தனர்.
எல்லோரும் மண்டபத்தை விட்டு கிளம்ப ஆரம்பித்தனர்.
காலையில் வந்தால் போதும். ஆனால் எல்லோரும் ஒரே வீட்டில் தங்க முடியாது அல்லவா? சத்ருகணன் வீட்டுக்கு அருகே இருந்த கெஸ்ட் ஹவுஸில் தங்க ஏற்பாடு. பாட்டி வீட்டுக்குச் சென்று மண்டபத்துக்கு வருவது மிகவும் தாமதமாகும் என்று இந்த முடிவுக்கு வந்திருந்தனர்.
ரோஷினியோடு அவள் குடும்பத்தை விட்டு வர சத்ருகணனே கிளம்பி விட்டான்.
எல்லோரும் இருக்கும் போது அடிக்கடி பரிமாறப்படும் ரகசிய பார்வையில் ரோஷினி வானில் பறந்து கொண்டிருந்தாள். அதே நிலமை தான் சத்ருகணனுக்கும்.
கெஸ்ட் ஹவுஸ் வந்ததும் காரை நிறுத்தியவன் எல்லோரும் இறங்கியதும் ரோஷினியின் கையைப்பிடித்துக் கொண்டான்.
மலரும் ஆறுமுகமும் திரும்பிப் பார்க்க “பேசிட்டு வரட்டும் வாங்க” என்று அழைத்துச் சென்றான் ரஞ்சித்.
“நைட் நேரத்துல என்ன பேச போறாங்க? நாளைக்கு பேசக்கூடாதா?” என்று மலர் கவலைப்பட்டாலும் உள்ளே சென்று விட்டார்.
“கைய விடுங்க.. சித்தி பார்த்துட்டு போறாங்க” என்று ரோஷினி பதறிக் கொண்டிருக்க “அவங்க தான் உள்ள போயிட்டாங்கள்ள? அப்புறம் என்ன?” என்றான் அவன்.
“அதுக்காக? இப்படியா? வாசல்ல நின்னுட்டு.. கிளம்பலயா? காலையில சீக்கிரம் எந்திரிக்கனும்”
“நோ.. எனக்கு இப்ப உன்னை பார்க்கனும் போல இருந்துச்சு.. சோ பார்த்துட்டு தான் போவேன்”
வெட்கம் வந்து விட அவசரமாக வேறு பக்கம் பார்த்தாள்.
“ஹலோ.. என்ன அங்க பார்க்குற? இங்க பாரு” என்று சத்ருகணன் சீண்ட “நான் ஒன்னும் பார்க்கனும்னு நினைக்கலயே.. நீங்க தான் கேட்டீங்க. பார்த்துட்டா கிளம்புங்க” என்றாள்.
“ஓஹோ.. அப்ப உனக்கு என்னை பார்க்க வேணாம்?”
ரோஷினி அண்ணாந்து வானத்தை பார்த்து வைத்தாள்.
“என் முகத்த பார்க்க மாட்ட அப்படித்தான?” என்று கேட்டு நெருங்க உடனே கையை காட்டி நிறுத்தினாள்.
“நில்லுங்க.. வாசல்ல நிக்கிறோம்.. எங்க இருந்தாவது அண்ணன் பார்த்துட்டு இருந்தா மானம் போயிடும்” என்று தடுக்க சட்டென சத்ருகணனின் முகம் மாறியது.
“உங்கண்ணனுக்கு வேற வேலையில்லயா? நம்மல ஏன் நோட்டம் விடனும்? இன்டீஷன்ட் பிகேவியர்”
“ஹலோ சார்.. எங்கண்ணன் உங்க வீட்டு மாப்பிள்ளை.. மரியாதை முக்கியம் சார்” என்று சிரித்துக் கொண்டே சொல்ல சத்ருகணனுக்கு கடுப்பாக இருந்தது.
“அது ஒன்னு தான் கேடு” என்று முணுமுணுக்க ரோஷினியின் காதில் விழுந்து விட்டது.
“என்ன சொன்னீங்க?”
“ஒன்னுமில்ல.. நீ போய் தூங்கு”
“மாட்டேன்.. அது ஒன்னு தான் கேடுனா? என்ன அர்த்தம்?” என்று கேட்டவள் முகத்தில் சற்று முன்பு வரை இருந்த சிரிப்பு காணாமல் போயிருந்தது.
“உங்கண்ணன் நம்மல எங்க இருந்தாவது பார்த்துட்டு இருப்பான்னு சொல்லுற.. அப்ப என்ன மரியாதை வேண்டியிருக்கு?”
“என்ன இப்படி பேசுறீங்க? நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல. நாளைக்கு தாலி கட்டுனப்புறம் நாம எப்படி இருந்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க. இப்ப வாசல்ல நின்னு பேசிட்டு இருக்கோம். அண்ணன் சித்தி சித்தப்பா.. உள்ள இருக்க சொந்தக்காரவங்க யாராவது ஒருத்தர் கவனிச்சுட்டு தான் இருப்பாங்க. அத சொன்னா மரியாதை இல்லாம பேசுறீங்க?”
“நல்லா சட்டம் பேசுற.. இது மட்டும் உன் கிட்ட மாறவே இல்ல” என்று சத்ருகணன் பேச்சை திருப்ப பார்க்க ரோஷினிக்கு விட்டுவிட மனமில்லை. அவளுடைய அண்ணனை மரியாதை இல்லாமல் பேசுகிறானே? தன் கணவனாகவே இருக்கட்டும். ரஞ்சித் சத்ருகணனை எவ்வளவு மரியாதையாக பேசுவான்! தங்கையின் கணவன் என்ற மரியாதை அதிகம் இருக்கும். அதே தானே சத்ருகணனும் ரஞ்சித்துக்கு கொடுக்க வேண்டும்? மரியாதை இல்லாமல் பேசுவது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
“பேச்ச மாத்தாதீங்க.. அது ஒன்னு தான் கேடுனா? அவ்வளவு தூரம் அவர் மேல உங்களுக்கு என்ன கோபம்? உண்மைய சொல்லனும்னா.. அண்ணனால தான் நம்ம கல்யாணமே நடக்குது.. அவர் உங்க வீட்டு மாப்பிள்ளை. இனிமே மரியாதை இல்லாம பேசாதீங்க”
“இங்க பாரு.. இப்ப எதுக்கு அவன பத்தி பேசி மூட் ஸ்பாயில் பண்ணுற? கொஞ்ச நேரம் உன் கிட்ட பேச வந்தா ஒரேடியா அண்ணன் புராணம் படிக்குற?”
“புராணமா? அவர உங்களுக்கு பிடிக்காதா?”
“ஆமா பிடிக்காது”
“அப்ப பிடிக்காதவங்களுக்கு ஏன் உங்க வீட்டு பொண்ண கட்டி வைக்கிறீங்க?”
“உனக்காக தான்.. உன்னை கல்யாணம் பண்ண தோணலனா உன் அண்ணனுக்கு என் தங்கச்சிய கட்டியே வச்சுருக்க மாட்டேன்”
ஒரு நொடி கட்டுக்கடங்காமல் வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு “ஏன்?” என்று கேட்டாள்.
“எனக்கு உன்னை..”
“நான் அத கேட்கல.. என் அண்ணன ஏன் பிடிக்கல? என்ன பண்ணாரு அவரு உங்கள?”
“அதெல்லாம் சொன்னா நீயே உங்கண்ணன வெறுத்துடுவ.. விட்டுரு”
“முடியாது. எனக்கு காரணம் வேணும். அவரு கிட்ட என்ன குறைய கண்டீங்க? சொல்லுங்க.. எந்த குறைய பார்த்து இவ்வளவு வெறுக்குறீங்க?”
“சொன்னா கேளு.. அதெல்லாம் தெரிஞ்சா தாங்க மாட்ட. லேட்டாகிடுச்சு.. போய் தூங்கு”
அவனை வெறித்துப் பார்த்தாள். ஏனென்று தெரியாமல் மனம் உடைந்தது. எனோ அவன் பல படிகள் தாழ்ந்து விட்டது போல் தோன்றியது.
“நாளைக்கு பேசலாம்..” என்றவன் காரை திறக்க “நில்லுங்க.. நாளைக்கு இந்த கல்யாணம் நடக்கனும். அதுவும் நல்லபடியா நடக்கனும். அதுல மட்டும் எதாவது நடந்துச்சு? சும்மா இருக்க மாட்டேன். கல்யாணம் முடியட்டும். அப்புறம் பேசிக்கிறேன்” என்றவள் விருட்டென உள்ளே சென்று விட்டாள்.
ஏன் இப்படி பேசுகிறாள்? என்று புரியாமல் அவன் தான் குழப்பத்துடன் கிளம்பிச் சென்றான்.
வீட்டுக்குள் வந்தவள் யாரிடமும் பேசாமல் நேராக அவளுக்கு கொடுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கே சில உறவின பெண்கள் இருக்க “பேசி முடிச்சாச்சா? இல்ல நாளைக்கு கொஞ்சம் மிச்சம் வச்சுட்டீங்களா?” என்று சிரிப்போடு கேட்டனர்.
“நாளைக்கு பேச நேரமிருக்காதுனு தான இன்னைக்கே பேசிட்டாங்க” என்று மற்றவள் சொல்ல எல்லோருமே சிரித்து விட்டனர்.
சாதாரணமாக இருந்திருந்தால் இதைக்கேட்டு ரோஷினி வெட்கப்பட்டு இருப்பாள். இல்லை பதிலுக்கு எதாவது பேசி இருப்பாள். ஆனால் இப்போது மனம் கொந்தளித்துக் கொண்டிருக்க ரசிக்க முடியவில்லை. சேலையை மாற்றுவதற்காக சென்று விட்டாள்.
மலர் எல்லோரையும் தூங்கும் படி அதட்ட உடனே படுத்து விட்டனர். சேலையை மாற்றி விட்டு வந்த ரோஷினியும் உடனே படுத்து போர்வையை போர்த்திக் கொள்ள “நல்லா தூங்குமா.. நாளைக்கு தூங்க நேரமிருக்காது” என்று அவளை கிண்டலடித்து விட்டே எல்லோரும் உறங்க ஆரம்பித்தனர்.
ரோஷினியும் கண்ணை மூடி அசையாமல் படுத்திருந்தாள். தூக்கம் வரவில்லை. சத்ருகணன் பேசியது தான் நினைவில் இருந்தது.
‘என்னை கல்யாணம் பண்ணனும்னு அண்ணன பிடிக்கலனா கூட பரவாயில்லனு தங்கச்சி கட்டி வைக்கிறாரா? இத என்ன லவ்னு எடுத்துக்கனுமா? அந்த அளவு முட்டாளா நான்? இல்ல டீன் ஏஜ்ல இருக்கனா? என்ன நினைச்சுட்டு இருக்காரு?’ என்று நினைத்தவளுக்கு மனம் பொறுக்கவில்லை.
அரைகுறையாக உறங்கி காலையில் வேகமாக எழுந்து தயாராக ஆரம்பித்து விட்டாள்.
அலங்காரம் மண்டபத்தில் வைத்து தான் செய்ய வேண்டும். ரோஷினிக்கும் சோபனாவிற்கும் ஒரே நேரத்தில் தான் அலங்காரம் செய்ய ஆட்களை வரவழைத்திருந்தனர்.
எல்லோரும் கிளம்பி வர தாமதமாகும் என்று ஆறுமுகத்துடன் முதலில் மணப்பெண்ணை மண்டபம் அனுப்பி விட்டனர். கூடவே சில பெண்களும் உதவிக்கு கிளம்பினர்.
ரோஷினி எழுந்திலிருந்து எதுவும் பேசவில்லை. நேற்றைய விசயத்தை மறந்து விட்டு இன்றைய சந்தோசத்தில் கலந்து கொள்ள தான் நினைக்கிறாள். அது சற்று சிரமமாக இருந்தது.
மண்டபம் வந்ததுமே சோபனா இருந்த அறைக்கே சென்று விட்டாள்.
அங்கு சோபனாவை பார்த்ததும் மனதில் ஒரு வலி வந்தது. அதன் காரணம் அவள் மட்டுமே அறிவாள்.
“அண்ணி..” என்று புன்னகைக்க சோபனா பெயருக்கு உதட்டை இழுத்து வைத்தாள்.
சோபனாவின் கண்களும் சிவந்து போயிருந்தது. ரோஷினியை போலவே. இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததன் விளைவு.
தொடரும்.
