அத்தியாயம் 2
![]()
அதிகாலை கண் விழிக்கும் போது கண்கள் எரிச்சலாக இருந்தது சத்ருகணனுக்கு. இரவு வெகுநேரம் கணினியின் முன்னால் அமர்ந்து வேலை செய்து விட்டு தாமதமாக தான் உறங்கியிருந்தான்.
இப்போது அடுத்த முக்கியமான வேலை இருக்கிறது. அதை பார்க்கச் செல்ல வேண்டும். எழுந்து முகம் கழுவியவன் தனது வழக்கமான உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தான்.
வீட்டில் யாரும் இல்லை. தனியாக தான் இருக்கிறான். பெற்றோரின் தொல்லை தாங்காமல் நான்கு வருடங்களாக இங்கு தங்கி இருக்கிறான்.
காலையில் சாப்பிடுவதற்கு ஓட்ஸ் கஞ்சியோடு காபியை அவனே போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தான்.
காபி உள்ளே செல்லும் போதே சமுக வலைதளங்களில் அவனது பார்வை வலம் வந்தது. அவனது நிறுவனத்திற்கான அனைத்து பின்னூட்டங்களும் அவன் பார்வைக்கு வந்து விடும்.
நல்லதோ கெட்டதோ அவன் கண்ணால் பார்த்து விட்டால் தான் திருப்தி.
அவன் வைத்துருப்பது டிராவல்ஸ் நிறுவனம். சுற்றுல்லாவின் அத்தனை அம்சங்களும் அவனது நிறுவனத்தால் நிறைவேற்றிக் கொடுக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்ல எந்த வெளிநாடு செல்வதாக இருந்தாலும் அவனது நிறுவனத்தின் ஏற்பாடுகள் தரமானதாக இருக்கும்.
தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் அவனது நிறுவனத்தின் வழியாக பயணித்துக் கொண்டிருந்தனர். இன்றைய செய்திகளை ஆராய்ந்தபடி காலை உணவை முடித்து விட்டான்.
வேலைக்கு கிளம்ப அவனது பாட்டியிடமிருந்து அழைப்பு வந்தது.
“கண்ணா”
“சொல்லுங்க பாட்டி”
“சாயந்தரம் வீட்டுக்கு வர்ரியா?”
“ஏன்?”
“எப்பவும் காரணம் சொன்னா தான் வருவியா?”
“காரணமில்லாம அங்க ஏன் வரனும்?”
“என்னை பார்க்க வரக்கூடாதா?”
“அது நானா வரனும்.”
“நீயா தான் வர மாட்டேங்குறியே”
“நீங்களும் தான் விட மாட்டீங்கிறீங்களே. மாசத்துக்கு ஒரு காரணம் புதுசா கண்டு பிடிச்சு என்னை கூப்பிடுறீங்க. இப்ப என்ன காரணம்?”
“இப்படி உன்னை பார்த்தா தான் உண்டு. சரி விசயத்த சொல்லுறேன். இங்க இருக்க ஃப்ரிட்ஜ் ரொம்ப பழசாகிடுச்சுனு சொன்னேன்ல? புதுசு வாங்கி இருக்கேன். வந்து கொஞ்சம் பாருடா கண்ணா..”
“போன தடவ வந்துப்போவே சொன்னேன் வாங்குங்கனு. வாங்கவே இல்ல. இப்ப என்ன வாங்கிருக்கீங்க?”
“நமக்கு வேண்டியவங்களோட பொண்ணு ஒன்னு பேயிங் கெஸ்ட்டா வந்து தங்கட்டுமானு கேட்டாங்க. நானும் சரினு சொல்லிட்டேன். அவளுக்காக தான்”
“பாட்டி.. இதென்ன பழக்கம்?”
“இப்ப ஏன் கோபப்படுற? வீட்டுல எல்லா நேரமும் தனியாவே இருக்கது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? தெரிஞ்ச பொண்ணு.. ஒரு மாசம் தங்க போறா. அந்த பொண்ணு கூட..”
“பாட்டி.. தெரிஞ்ச பொண்ணுனு விட்டு எதையாவது திருட்டிட்டு போயிட போறா.. கேர்ஃபுல்லா இருக்க மாட்டீங்களா?”
“டேய்.. தெரியாத பொண்ண பத்தி என்னடா பேசுற? அந்த பொண்ணு நல்லவ தான். அவங்க குடும்பமும் எனக்கு தெரியும். சும்மா கண்டத பேசாத”
“நான் அவ வர்ரத கெடுத்துடுவேன்னு உங்களுக்கு பயம்? சரி விடுங்க. எப்ப வர்ராளாம்?”
“நாளைக்கு”
“அப்ப நானும் நாளைக்கே வர்ரேன். அவ நல்லவளா இருந்தா தங்கலாம். இல்லனா நான் அடிச்சு துரத்திட்டு தான் விடுவேன். நீங்களே நினைச்சாலும் என்னை தடுக்க முடியாது” என்று கூறி விட்டு பாட்டியின் பேச்சை காதிலேயே வாங்காமல் வைத்து விட்டான்.
“எவளோ ஒருத்திய வீட்டுல தங்க வைக்கிறதா? யாருனு பார்க்குறேன்” என்று சந்தேகமாக நினைத்துக் கொண்டு வேலையை பார்க்க கிளம்பினான்.
இன்று வெளிநாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட வேண்டும். அவர்களது நாட்டில் அதிக ஹோட்டல்களை வைத்திருக்கும் நிறுவனத்தோடு சத்ருகணன் நிறுவனம் இணைந்து கொண்டால் மிகப்பெரிய லாபம் உண்டு.
அந்நாட்டுக்கு செல்ல விரும்பும் இந்திய மக்களை அவர்களது ஹோட்டலில் பல சலுகைகளோடு தங்க வைப்பதால் லாபம் இரண்டு பக்கமும் தானே?
பேச்சு வார்த்தை முடிந்து ஒப்பந்தம் உறுதியானதும் சத்ருகணனுக்கு நிம்மதியாக இருந்தது.
°°°
ரோஷினியும் மலரும் அந்த வீட்டின் முன்னால் பெட்டியோடு வந்து இறங்கினர்.
“தனி வீடா தான் இருக்கு. ஆனா வயசான ஆள் கூட உன்னை தங்க வச்சா நீ அதுக்கு சேவகம் செய்யனுமோனு தான் கொஞ்சம் கவலையா இருக்கு” என்று மலர் கூற “பார்த்துக்கலாம் சித்தி. எல்லாம் ஒரு மாசம் தான?” என்று கூறி விட்டு வீட்டை நெருங்கினர்.
உள்ளே இருந்த வாட்ச்மென் எட்டிப் பார்த்தார்.
“யார் நீங்க?”
“நான் ரோஷினி.. அமுதாம்மாவ பார்க்க வந்தோம்”
“உள்ள வாங்க” என்று கதவை திறந்து விட்டார்.
அந்நேரம் ஆறுமுகத்தின் நண்பரும் வந்து சேர்ந்தார்.
வந்தவர்களை நன்றாகவே வரவேற்றார் அமுதா.
“நீ தான் ரோஷினியாமா?”
“ஆமா மேம்”
“பரவாயில்ல பாட்டினே கூப்பிடுமா.”
“சரிங்க பாட்டி”
ஆறுமுகத்தின் நண்பர் விசயத்தை விளக்கமாக மீண்டும் சொல்ல “எனக்கு இவங்கப்பாவ தெரியும். நல்ல மனுசன்.. சீக்கிரமா போயிட்டாரு..” என்ற அமுதா அதன் பிறகு அதை பற்றி பேசவில்லை.
சில நிமிடங்கள் கழித்து ஆறுமுகத்தின் நண்பர் வேலை இருப்பதால் கிளம்பி விட்டார்.
“நான் நைட் பஸ்க்கு கிளம்பிடுவேன். இவள விட்டுட்டு போகத்தான் வந்தேன்” என்று மலர் பேசிக் கொண்டிருக்க வாசலில் கார் வந்து நின்றது. எல்லோரின் பார்வையும் வாசலுக்கு சென்றது.
‘இந்த கலர் கார் தான அன்னைக்கு ஹாஸ்டல்ல பார்த்தோம்?’ என்று ரோஷினி நினைக்கும் போதே காரை விட்டு இறங்கி வேகமாக படியேறினான் சத்ருகணன்.
‘வாவ்!’ என்று தன்னையறியாமல் தனக்குள் சொல்லிக் கொண்டாள் ரோஷினி.
“வா கண்ணா.. இது என் பேரன்” என்று மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பாட்டி.
சத்ருகணன் ரோஷினியை ஒரு நொடி பார்த்து விட்டு “ஃப்ரிட்ஜ் எங்க பாட்டி?” என்று அவளை கண்டு கொள்ளாதது போல் கேட்டு வைத்தான்.
“கிட்சன்ல இருக்குபா.. போய் பாரு” என்று அனுப்பி வைத்தார்.
மலரின் கண்கள் அவனை யோசனையோடு தொடர்வதை பாட்டி கவனித்து விட்டார்.
“இங்க எப்பவும் தனியா இருக்கனா.. அதுனால எதாவது தேவைனா இவன கூப்பிடுவேன். இவனும் உடனே வர மாட்டான். ரெண்டு நாளுக்கு முன்னாடி சொல்லி இப்ப வந்து நிக்கிறான். புதுசா ஃப்ரிட்ஜ் வாங்கி வச்சேன். பழசு வேலை செய்யல. வந்து பாருங்களேன்” என்று இருவரையும் அழைத்துச் சென்றார்.
சத்ருகணன் காதில் பேச்சு விழத்தான் செய்தது. கவனிக்காதது போல் வந்த வேலையை பார்த்தான்.
சரியாக எல்லாம் வேலை செய்கிறதா? என்று பார்த்துக் கொண்டிருக்க பாட்டியும் மலரும் உள்ளே வர ரோஷினி வாசலில் நின்று கொண்டாள்.
பாட்டி தன் கேள்விகளை கேட்க சத்ருகணன் பதில் சொல்ல மலரும் அவ்வப்போது பேசினார்.
ரோஷினி தான் அவனை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘நல்ல மாடல் மாதிரி இருக்கான்ல? இந்த ரஞ்சித்தும் தான் இருக்கானே.. சாப்பிட்டு சாப்பிட்டு தொப்பையோட.. இந்த மாதிரி சிக்ஸ்பேக் இல்லனாலும் தொப்பை வைக்காம இருக்கலாம்’ என்று தனக்குள் நினைத்தபடி நின்றவள் சத்ருகணன் வெளியே வரவும் தன்னிச்சையாக ஒரு அடி நகர்ந்து நின்றாள்.
ஆனால் அவள் நகர்ந்தது அவனுக்கு பிடிக்கவில்லையோ? இல்லை கவனிக்கவில்லையோ? அவன் நடுவில் நின்றான்.
“இப்படி பாதையில நின்னா மத்தவங்க எப்படி போறது? தள்ளி நிக்கிறது?” என்று கேட்க சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.
திரும்பி வாசலில் நின்றிருந்த காரை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
‘அந்த கார்க்குள்ள இருந்தவன் இவன் தானா?’ என்று நினைத்தவள் உடனே பதிலை யோசித்தாள்.
“நீங்க வர்ரீங்கனு நான் தள்ளி தான் நிக்கிறேன். நல்லா பாருங்க. எனக்கு வழிய மறிச்சு பழக்கமில்ல சார்” என்றாள் நக்கலை மறைத்தும் மறைக்காத குரலில்.
அவள் உடனே புரிந்து கொண்டு தன்னை கிண்டலடித்தது அவனுக்கு கடுப்பை தான் கிளப்பியது. அவன் வாயை திறக்கும் போது பாட்டி வந்து விட அவளிடம் வாக்குவாதம் செய்யாமல் கடந்து சென்றான்.
ரோஷினியின் கிண்டலான பார்வை அவனை தொடர்ந்தது. அந்த பார்வை அவனுக்கு பிடிக்கவில்லை. அவளை துரத்த நினைத்து வந்தவன் தான் முதல் ஆளாக கிளம்ப பார்த்தான்.
“நான் கிளம்புறேன் பாட்டி..” என்று கிளம்பியவனை பிடித்து நிறுத்திய பாட்டி “சொல்ல மறந்துட்டேன் கண்ணா.. ரோஷினி உன் கிட்ட உன் கம்பெனில தான் வேலையில சேர போறா. ரோஷினி.. அந்த கம்பெனி முதலாளியே இவன் தான்” என்று உடைத்தார்.
ரோஷினி அதிர மலருக்கு சந்தோசமும் நிம்மதியும் அப்போது தான் வந்தது. அந்த கம்பெனியை பற்றித்தான் ரோஷினி புகழ்ந்து தள்ளி இருந்தாளே. அந்த நிறுவன முதலாளியின் பாட்டியோடு தங்குகிறாள் என்றால் பாதுகாப்பாக தான் இருப்பாள். மலர் நிம்மதி பெருமூச்சு விட ரோஷினிக்கு பதட்டத்தில் மூச்சு தாறுமாறாக வந்தது.
“நீயாபா? முதலாளி சத்ருகணன்னு சொன்னதும் எதோ வயசானவங்கனு நினைச்சேன்.”
மலரின் பேச்சுக்கு தலையாட்டியவன் ரோஷினியை தான் ஆராய்ந்தான். அதிர்ச்சியோடு பார்வையை திருப்பியவள் எதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘வேலை போயிடும்னு பயமா?’ என்று நக்கலாக நினைத்துக் கொண்டவன் “அப்ப உங்கள நான் ஆஃபிஸ்ல பார்க்குறேன் ரோஷினி. வர்ரேன் பாட்டி” என்று கூறி வாசலை நோக்கி நடந்தான்.
திடீரென நின்று “பாட்டிக்கு ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு வந்தேன் . அத கொடுக்க மறந்துட்டேன். ரோஷினி.. அத வாங்கிக்கிறீங்களா? நான் உடனே கிளம்பனும்” என்றான்.
“போமா.. வாங்கிட்டுவா” என்று மலர் சொல்ல ரோஷினியும் நடந்தாள்.
‘தனியா பேச கூப்பிடுறானா?’ என்ற சந்தேகம் வந்தாலும் தைரியமாகவே சென்றாள்.
சத்ருகணன் உண்மையாகவே காரிலிருந்து பழங்களை எடுத்தான். அதை ரோஷினியிடம் நீட்ட உடனே வாங்கிக் கொண்டாள்.
“என்னைக்கு ஜாயின் பண்ணுறீங்க மிஸ் ரோஷினி?” என்று கேட்டவன் குரலில் கொஞ்சம் கூட நக்கல் இல்லை.
‘தப்பா எதுவும் நினைக்கிறமா?’ என்ற சந்தேகம் வந்தாலும் “ரெண்டு நாள்ல” என்றாள்.
“வாழ்த்துக்கள் ரோஷினி”
“நன்றி சார்.”
“எத்தனை பேருக்கு கிடைக்கும் முதலாளியே வாழ்த்து சொல்லுறது? இல்ல?”
“கிடைக்காது தான் சார். அந்த வாழ்த்து நிறைவேறனும்னு தான் நானும் நினைக்கிறேன். ஒரு முதலாளி வாழ்த்துன பொண்ணு தோத்துட கூடாது இல்லையா?”
‘இவளுக்கு வாய் ஜாஸ்தி.. இல்ல.. பேச்சுல கெட்டிக்காரி.. நீ விஷ் பண்ணி நான் தோத்தா உனக்கு அவமானம்னு சொல்லாம சொல்லுறா’ என்று நினைத்தவன் “ஓகே.. உள்ள கொண்டு போங்க” என்று விட்டு காரில் ஏறி கிளம்பி விட்டான்.
ரோஷினியும் உடனே பழங்களோடு உள்ளே வந்தாள்.
“இந்த பழத்த நறுக்கிட்டு வர்ரியாமா? மூணு பேருமா சாப்பிடுவோம்?” என்று பாட்டி கேட்க உடனே தலையாட்டி விட்டு சென்றாள்.
பழங்களை கழுவி நறுக்கி சாப்பிடும் போது அந்த வீட்டின் நபராக அவளால் உணர முடிந்தது.
மலருக்கு பூரண திருப்தி என்பதால் பத்திரங்கள் சொன்னதோடு இரவு கிளம்பிச் சென்று விட்டார்.
தொடரும்.
