அத்தியாயம் 22

Loading

சோபனா தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்ததுமே சத்ருகணன் அங்கிருந்து வேகமாக கீழே வந்து விட்டான். இதற்கு மேலும் நின்று கேட்க அவனுக்கு தைரியமில்லை.

ரஞ்சித் பேசியது காதில் தீயை கொட்டியது போல் இருந்தது. அவன் நினைத்திருந்தால் உண்மையை அப்போதே உடைத்து சோபனாவின் முகத்திரையை கிழித்து காட்டியிருக்கலாம்.

இவ்வளவு பொய் சொன்னவள் எனக்கு வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டு போயிருந்தால் அவன் மீது தவறு எதுவும் இருக்காது.

ஆனால் ரஞ்சித் அவளுடைய சொந்த அண்ணனிடம் கூட அவளை விட்டுக் கொடுக்கவில்லை. அவள் அத்தனை பொய் சொல்லியும் அவளை காதலித்து கரம் பற்றி விட்டான்.

என்னவோ திடீரென ரஞ்சித் உயர்ந்தவனாகவும் தான் இறங்கிப்போனவனாகவும் உணர்ந்தான் சத்ருகணன்.

அவனுடைய அண்ணனின் மீது ரோஷினிக்கு இருக்கும் கர்வம் இப்போது புரிந்தது. சேர்ந்து வாழ்ந்தாலும் கூட அவன் அண்ணன் தவறானவன் அல்ல என்பதை எவ்வளவு திமிராக சொன்னாள்?

மீண்டும் அறைக்கு வந்து மனைவியை பார்த்தான். களைப்பில் நிம்மதியாக உறங்கி இருந்தாள். அவளிடம் இனி எந்த முகத்தை வைத்து உண்மையை சொல்வது?

பெருமூச்சோடு உடையை மாற்றிக் கொண்டு அவள் அருகே வந்து படுத்துக் கொண்டான்.

ரஞ்சித்திடம் இவ்வளவு பொய்யை சொல்லி சோபனா சென்றதற்கு காரணம்? தெரியவில்லை. தெரிந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

சத்ருகணன் கீழே வந்து விட சோபனா அழுது மயங்கி விழுந்திருந்தாள்.

ரஞ்சித் பதறி விட்டான்.

“ஏய்.. சோபி.. என்னாச்சு?” என்று எழுப்ப அவளிடம் அசைவில்லை.

காலையிலிருந்து இருந்த பதட்டமெல்லாம் சேர்த்து இப்போது மயங்கிக் கிடந்தாள்.

சட்டென அவளை தூக்கிக் கொண்டவன் கீழே வந்தான். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க யாரையும் தொந்தரவு செய்யவில்லை.

அறைக்குள் சென்று தண்ணீரை தெளித்து அவளை எழுப்பினான். சோபனா கண்திறந்து பார்க்க “இத குடி'” என்று பாலை நீட்டினான்.

மறுக்காமல் குடித்து முடித்தாள்.

“படுத்து தூங்கு” என்றவன் அவள் முகத்தை பார்த்து விட்டு கீழே பாயை விரித்து படுத்து விட்டான்.

சோபனாவிற்கு மீண்டும் கண்ணீர் வந்தது. ஆனால் இனி பேச தெம்பில்லை. ஓய்ந்து போனவள் கண்ணை மூடிக் கொள்ள தூக்கம் தன்னால் வந்தது.

°°°

அடுத்த நாள்…

காலையில் மிக சீக்கிரமே எழுந்து விட்டாள் ரோஷினி.

பாட்டி வேறு நேற்றே சொல்லி இருந்தார். காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து கீழே வர வேண்டும் என்று.

அதனால் தூக்கம் கலைந்ததும் எழுந்து திரும்பிப் பார்த்தாள்.

சத்ருகணன் அசையாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

நேற்றைய பேச்சு நினைவு வந்தது. கூடவே கோபமும் வந்தது.

‘எப்படி இப்படி இருக்காரு இவரு? சொந்த தங்கச்சி.. ஆசைப்பட்டவன கட்டி வைக்கிறதுக்கு இவருக்கு ஒரு ஆதாயம் வேணுமா? நான் இல்லனா அவங்க கல்யாணம் நடந்துருக்காதாமே? அப்படினா? நடக்காம அவங்க தங்கச்சி கஷ்டப்படுறத பார்க்க இவருக்கு சந்தோசமா இருக்குமா? இதுல அவங்க ஒன்னா லிவ் இன்ல இருந்துருக்காங்கனு தெரிஞ்சும் பிரிச்சு வைக்க பார்த்துருக்காரு. சரியான சுயநலம் பிடிச்சவரு’ என்று மனதில் வறுத்து எடுத்த படி குளித்தாள்.

‘பாவம் அண்ணி. அவங்களுக்கு இப்படி ஒரு அண்ணன். பாசமே இல்லாத அண்ணன். தங்கச்சி ஒருத்தர் மேல ஆசைப்பட்டா தான் என்ன? அவன் கெட்டவனா இருந்தா அடிச்சு துரத்தி தங்கச்சிய காப்பாத்தலாம். ரஞ்சித் ரொம்ப நல்லவன். ஒருநாள் கூட அண்ணிய கஷ்டப்படுத்த மாட்டான். அவன விட்டு ஈகோ காக பிரிச்சு அழ விடனும்னு நினைக்கிற இவர மாதிரி அண்ணன் கிடைக்க அண்ணி பாவம் தான் பண்ணி இருக்கனும்’

மனதில் பாராட்டு சொற்பொழிவை முடித்து குளித்து முடித்தாள்.

உள்ளேயே சேலையை கட்டி முடித்து வர தண்ணீர் சத்தத்தில் சத்ருகணன் எழுந்திருந்தான். அவனை பார்த்ததும் முறைத்து விட்டு வெடுக்கென சென்று தலையை வார ஆரம்பித்தாள் ரோஷினி

‘முதல் நாள் காலையிலயே நல்ல ஆரம்பம்’ என்று அவன் நினைக்க ‘ஆளப்பாரு.. என் அண்ணன்லாம் இப்படி இருந்தா கல்ல தூக்கி போட்டு தலைய உடைச்சுருப்பேன்’ என்று ரோஷினி தனக்குள்ளேயே திட்டிக் கொண்டிருந்தாள்.

“ரோஷ்..”

பதில் சொல்லாமல் நின்றாள்.

“உன்னை தான்மா” என்றவன் அருகே வந்து நின்றான்.

“கேட்குது” என்றாள் வெடுக்கென.

“இன்னுமும் கோபமா?”

“இப்ப என்ன வேணும்?”

“கேட்டா தருவியா?”

“முடியாது”

“ஏன் இப்படி காலையிலயே சூடா இருக்க?” என்று கேட்டவன் அவளை அணைக்க பட்டென கையை தட்டி விட்டு “தள்ளி நில்லுங்க. நான் கீழ விளக்கேத்தனும். குளிக்காம பக்கத்துல வந்துட்டு” என்று கடுங்கோபமாக முறைத்தாள்.

“அடியே! நேத்து எதாவது நடந்துருந்தா தான் குளிக்காம பக்கத்துல வர்ர கணக்கு செல்லும். அதான் ஒன்னுமே நடக்கலயே?”

“இதெல்லாம் நல்லா பேசுங்க. சொந்த தங்கச்சி வாழ்க்கையில உங்க ஈகோவ காட்டி விளையாட பாருங்க” என்று எரிச்சலாக சொன்னவள் “பாட்டி சீக்கிரம் கீழ வர சொன்னாங்க. தள்ளுங்க” என்றவள் அவன் முன்பே தயாராகி கதவை திறந்து வெளியேறி விட்டாள்.

‘ஈகோ வா!’ என்று அவன் தான் புரியாமல் அதிர்ந்து நின்றான்.

‘நான் எதுக்கு அவ வாழ்க்கையில ஈகோ காட்டுறேன்?’ என்று புரியாமல் பார்த்தான்.

ரோஷினி கீழே வர பாட்டி சீக்கிரமே எழுந்து அவளுக்காக காத்திருந்தார். அவளை பார்த்ததும் அவரது முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“தெரியும் நீ சீக்கிரம் எந்திரிச்சு வந்துடுவனு. இந்த சோபனாவ வர சொன்னேன். அவள காணோம் பாரு”

“விடுங்க பாட்டி. டிஸ்டர்ப் பண்ண வேணாம்”

“காலையில விளக்க ஏத்தி வைக்கிறது நல்லது ரோஷினி. சரி நீ வா. அவள அவ அம்மா சொல்லிக் கொடுத்து வளர்த்து விட்டுருந்தா செய்வா. அவ அம்மா மாதிரியே எட்டு மணி வரை தூங்க பழக்கி விட்டுருக்கா” என்று மருமகளை குறை சொல்லி விட்டு ரோஷினியை அழைத்து விளக்கேற்ற வைத்தார்.

சொன்னதை எல்லாம் செய்து முடித்து விட்டு வெளியே வர கௌசல்யா எழுந்து வந்து விட்டார்.

“அத்த..”

“எங்க உன் மக?”

“இன்னும் எந்திரிக்கல போல” என்று கௌசல்யா மேலே பார்க்க “போய் எழுப்பு” என்றார் பாட்டி.

கௌசல்யா அதிர “என்ன? போய் எழுப்பு. ஒழுங்கா சொல்லி கொடுத்து வளர்த்திருந்தா அவளா வந்துருப்பா. சொல்லல இல்ல? இப்ப போய் கதவ தட்டு போ” என்று அதட்டினார்.

கௌசல்யாவிற்கு மருமகள் முன்பு ஒரு மாதிரியானது. ஆனால் வேறு வழி இல்லை. நேற்று அத்தனை முறை சொல்லியும் சோபனா வரவில்லையே. ஆனால் இவர்கள் சொன்னது எதுவும் அவள் காதில் விழவே இல்லை. பயத்தில் இருந்தவளுக்கு உலகமே மறந்து தான் போனது.

இப்போது கௌசல்யா கதவை தட்டினார். உள்ளே மருமகனும் இருக்கிறான். அவ்வளவு சங்கடமாக இருந்தது அவருக்கு.

கதவை தட்டியதும் ரஞ்சித் தான் வந்து திறந்தான்.

“அத்த..”

“சோபிய கொஞ்சம் கீழ அனுப்பி வைங்க மாப்பிள்ளை..” என்றவர் அவன் தலையாட்டியதும் உடனே அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

மகளை மனதில் அர்ச்சித்துக் கொண்டு.

சோபனா நன்றாக உறங்கிக் கொண்டிருக்க ரஞ்சித் அருகே சென்றான்.

“சோபனா.. எந்திரி” என்று எழுப்ப அவளிடம் அசைவே இல்லை.

இவள் இப்படி எழ மாட்டாள். தூக்கத்திலிருந்து எழுப்ப அவன் போராட வேண்டும். ஆனால் இப்போது அதை செய்ய பிடிக்கவில்லை.

தன் கைபேசியை எடுத்தவன் அலாரத்தை சத்தமாக வைத்தான். சோபனாவின் தூக்கத்தை அது கலைத்தது.

“ப்ச்ச்.. இத ஆஃப் பண்ணு” என்று சோபனா கண்ணை திறக்காமலே கத்தினாள்.

பதில் சொல்லாமல் நின்றான். சில நிமிடங்களில் தூக்கம் பறக்க எழுந்து விட்டாள்.

எழுந்ததும் எதோ பேசப்போக “உன் அம்மா உன்னை கீழ கூப்பிட்டாங்க” என்றான்.

“எதுக்கு?”

ரஞ்சித் தோளை குலுக்க சோபனா தரையில் இறங்கினாள்.

அப்படியே கதவை நோக்கி நடக்க “இப்படியே போவியா? குளிச்சு வேற மாத்திட்டு போ” என்றான்.

சோபனா புரியாமல் பார்க்க ரஞ்சித் எனக்கென்ன? என்று மீண்டும் படுத்து கண்ணை மூடிக் கொண்டான்.

சோபனா அவளாகவே மூளையை கசக்கி யோசித்து விட்டு கடைசியில் சுடிதாரை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து விட்டு வெளியே வர ரஞ்சித் இன்னும் பாயில் படுத்திருந்தான். இரவு பேசியது எல்லாம் மூளையில் அழியாமல் இருந்தது.

அதுவும் சத்ருகணன் பேசியதாக ரஞ்சித் சொன்னதை அவளால் மறக்க முடியவில்லை.

‘இத அவன கேட்காம விட மாட்டேன்.’ என்று நினைத்துக் கொண்டு கீழே வந்தாள்.

அவளை முறைத்தபடி கௌசல்யா விளக்கேற்ற வைத்தார்.

“அத்தனை தடவ சொன்னேன் சீக்கிரமா எந்திரிச்சு வானு”

“ம்மா.. தூங்கிட்டேன். அதான் வந்துட்டேன்ல?”

“உன் பாட்டி என்னை திட்டுறாங்க. கிச்சன்ல இருக்காங்க போ” என்று அனுப்பி வைத்தார்.

சோபனா உள்ளே செல்ல ரோஷினி காபி கலந்து கொண்டிருந்தாள்.

“இப்ப தான் எந்திரிச்சியா?” என்று பாட்டி முறைக்க சோபனா சிரித்து சமாளித்தாள்.

“குட் மார்னிங் அண்ணி” என்று ரோஷினி சந்தோசமாக பேச சோபனாவிற்கு கடுப்பாக இருந்தது.

ஆனால் பாட்டியின் முன்னால் கோபமாக பேச முடியாது.

“குட் மார்னிங்” என்று வாய்க்குள் சொல்லி விட்டு பாட்டியின் பக்கம் திரும்பி விட்டாள்.

“அவனுக்கு போய் கொடுத்துட்டு சீக்கிரமா வா. காலை சாப்பாட்டுக்கு உன் வீட்டுல இருந்து வந்துடுவாங்க”

ரோஷினி தலையாட்டி விட்டு சத்ருகணனுக்கும் தனக்கும் காபியை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டாள்.

“நீ என்ன நிக்கிற? உன் புருஷன் என்ன குடிப்பான்?”

“காபி தான்”

“அப்ப போடு. போட்டு எடுத்துட்டு போ”

“சபையல்காரக்காவ காணோம்”

“ஏன் உன் புருஷனுக்கு நீயே செய்ய மாட்டியோ?”

“செய்வேனே”

“அப்ப போடு” என்றதும் சோபனா வேலையை ஆரம்பித்தாள்.

தொடரும்.

Leave a Reply