அத்தியாயம் 23
![]()
ரோஷினி காபியோடு வந்து நிற்க சத்ருகணன் இன்னும் மெத்தையில் படுத்தபடி கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.
“காபி” என்றவள் மேசையின் மீது வைத்து விட்டாள்.
“ஏன் கையில கொடுக்க மாட்டியா?”
“ஏன்? பல்லு விளக்குற பழக்கம் இல்லையா?” என்று திருப்பி கேட்டு வைத்தாள்.
அவள் கீழே சென்றதிலிருந்து இப்படியே தான் படுத்திருக்கிறான்.
“கேள்வி கேட்டா பதிலுக்கு கேள்வி கேட்குற நீ” என்று முறைத்தபடி எழுந்து சென்றான்.
ரோஷினி அவனை பற்றி கவலைபடாமல் கைபேசியை பார்த்தபடி தன்னுடைய காபியை குடித்து முடித்தாள்.
சத்ருகணன் வந்து அவளை உரசிக் கொண்டு அருகில் அமர்ந்தான்.
“என்ன பார்க்குற?” என்று கைபேசியை எட்டிப்பார்க்க “காண்ட்ராக்ட் பேப்பர்ஸ்” என்றாள்.
“என் பொண்டாட்டிக்கு ஆஃபிஸ் மேல எவ்வளவு அக்கறை! கல்யாணமான அடுத்த நாள் கூட வேலைய பார்க்குறா!”
“இதுக்கு நீங்க என் முதலாளிய தான் பாராட்டனும். மனசாட்சியே இல்லாம ஒரே மாசத்துல முடிக்க சொல்லி டார்கெட் ஃபிக்ஸ் பண்ணி வச்சுருக்காரு.”
பழியை தூக்கி அவன் மேல் போட்டு விட அப்போது தான் அவனுக்கும் நினைவு வந்தது. அவனது நெருக்கடியில் அவளுக்கும் வேலை இருக்கும் என்ற எண்ணம். ஆனால் இனி மாற்ற முடியாது. உதவ முன் வந்தான்.
“அது உன்னை வீடு தேட விட கூடாதுனு டைமிங் மாத்துனேன். ஆனா அன்னைக்கே கல்யாண பேச்சு வந்துடும்னு நினைக்கல”
அவனை ஆச்சரியமாக பார்த்தவள் சில நொடிகள் யோசித்து புரிந்து கொண்டாள்.
“வேலை நிறைய இருந்தா எனக்கு வீடு தேட நேரமிருக்காதுனா? ஆனா ஒன்னு தெரியுமா? என் சித்தி சித்தப்பா எல்லாரும் சேர்ந்து நான் தங்க வீடு பார்த்துட்டாங்க. ஒரே நாள்ல நான் கிளம்பி போயிருப்பேன்.”
“அடப்பாவி!”
“ஆனா அதுக்குள்ள கல்யாண பேச்சு வந்துடுச்சு. அதான் இங்கயே இருந்துட்டேன். ஆனா இப்ப நீங்க பண்ண வேலையால நான் எல்லா நேரமும் வேலை பின்னாடி சுத்துறேன்”
“சரி சரி.. இங்க கொடு. நான் பார்க்குறேன்.” என்று கைபேசியை வாங்கி பார்க்க ஆரம்பித்தான்.
முறைத்தபடி அவனிடம் கொடுத்து விட்டு அவளும் கீழே சென்று விட்டான்.
படித்து முடித்தவன் “எ..” என்று நிமிர்ந்து பார்த்து விட்டு ஆச்சரியமாய் சுற்றியம் பார்த்தான்.
‘எப்ப போனா இவ?’ என்று குழம்பிக் கொண்டிருக்க அவளது கைபேசியில் சுப்பிரியாவிடமிருந்து செய்தி வந்து விழுந்தது.
“டிஸ்டர்ப் பண்ணுறேன்னு கோச்சுக்கிறாதமா. நீ சொன்ன அத்தனையும் சரி பண்ணிட்டேன். எனக்கு எல்லாம் சரியா இருக்கு. உனக்கு எதாவது தோனுனா இன்னைக்குள்ள எப்படியாவது படிச்சு சொல்லிடு” என்று அனுப்பி வைத்திருந்தாள்.
பதில் அனுப்ப நினைத்தவன் சட்டென குரலை பதிவு செய்து பதிலாக அனுப்பி வைத்து விட்டான்.
சுப்ரியா அப்போது தான் அலுவலகம் வந்து சேர்ந்திருந்தாள். செய்தியை கேட்டவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. சத்ருகணனின் குரல்.
‘ஆத்தி.. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் நமக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சு கொன்னுடுவாங்க போலயே’ என்று பயந்து போனாள்.
“என்னகா.. ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?”
“இத கேளேன்” என்று என்று சத்ருகணன் பேசியதை போட்டுக்காட்டினாள்.
தனுஜா அதிர்ந்து போனாள்.
“பாஸ் வாய்ஸ்”
“மேடம் ஃபோன அவரு எடுத்து பார்த்து எனக்கு பதில் சொல்லிருக்காரு.”
“என்ன? என்ன?” என்று மற்றவர்களும் கேட்டு வர விசயம் அலுவலகம் முழுவதும் பரவியது.
“அவ வேலைய பாஸ் பார்த்து பதில் சொல்லுறாரு. வாழுறா போ” என்று சிரித்தபடி வயிறெரிந்தனர் சிலர்.
இது எதுவும் தெரியாமல் பதில் அனுப்பி விட்டு சத்ருகணன் குளிக்கச் சென்று விட்டான்.
மலர் அனைத்து சொந்தங்களோடும் வந்து விட காலை உணவு தடபுடலாக நடந்தது. அது முடிந்ததும் ரோஷினியின் ஊருக்கு கிளம்பினர். சத்ருகணன் காரை எடுக்கப்போக டிரைவரை ஓட்ட வைத்து விட்டனர்.
காருக்குள் இரண்டு ஜோடிகளோடு பாட்டி மட்டும் தான் இருந்தார். அதனால் பயணம் முழுவதும் அமைதியாக சென்றது.
ஊருக்குச் சென்று இறங்கியதும் ரஞ்சித்தும் ரோஷினியும் துள்ளி குதிக்காத குறையாக சொந்தங்களோடு ஒட்டிக் கொண்டனர். எல்லோருக்குமே இருவரையும் பிடித்திருந்தது.
இந்த அண்ணன் தங்கை கூட்டனி சந்தோசமாக நாளை கடத்த மற்றொரு கூட்டணி சற்று கடுப்பாக நேரத்தை கடத்தியது.
சத்ருகணனுக்கு ரோஷினியிடம் சுத்தமாக பேச முடியவில்லை. நாலாபக்கமிருந்தும் அவளுக்கு அழைப்பு வந்தது. திரும்பிச் சென்றதும் பேசிக்கொள்ளலாம் என விட்டு விட்டான்.
சோபனாவால் அப்படி விட முடியவில்லை. காலையில் பாட்டியில் ஆரம்பித்து எல்லோரும் அவளை ஒரு கை பார்த்து விட்டனர்.
பாட்டியின் வற்புறுத்தலில் தான் சோபனா ரஞ்சித்துக்கு காபி கலந்து கொண்டு சென்றாள். அவள் வந்த போது அவன் குளித்துக் கொண்டிருந்தான். அறையில் வாடிக்கிடந்த பூக்களை பார்த்து பெருமூச்சு விட்டு விட்டு எல்லாவற்றையும் சுத்தம் செய்து முடித்தாள்.
ரஞ்சித் வந்ததும் அவசரமாக “காபி குடி ரஞ்சித்” என்க “வேணாம்” என்று ஒரே வார்த்தையில் அவளது மனதை உடைத்து விட்டான்.
அதை தாங்கிக் கொண்டு “ஏன் வேணாம்? எப்பவும் குடிப்பல? உனக்கு பிடிச்ச மாதிரி தான் போட்டுருக்கேன்” என்று கேட்டாள்.
“வேணாம். தமிழ்ல தான சொல்லுறேன். வேற எதாவது மொழியில சொல்லனுமா?”
சோபனா அவனை பாவமாக பார்க்க அவன் அவளை பார்த்தால் தானே? கைபேசியை எடுத்து பேசிக் கொண்டே வெளியேறி விட்டான்.
அவனது கோபம் புரியத்தான் செய்தது. ஆனால் அவள் பக்கமும் நியாயம் இருக்கிறதே. அதை ஏன் புரிய மறுக்கிறான் என்று கோபமாக வந்தது.
அதே கோபத்தில் இருந்தவள் மலரிடம் அலட்சியமாக நடந்து கொண்டாள். அது போயும் போயும் சத்ருகணன் கண்ணிலா விழ வேண்டும்?
பிடித்து இழுத்துச் சென்று திட்ட ஆரம்பித்து விட்டான்.
“இப்ப என்னணா உன் பிரச்சனை?” என்று கோபமாக கேட்க “நீ பண்ணுறது எதுவும் சரியில்ல. அவங்க ரஞ்சித் ரோஷினிக்கு சித்தி. உனக்கு மாமியார். இப்படி அலட்சியமா பேசிட்டு வர்ர?” என்று முறைத்தான்.
“அவங்க ஒன்னும் மாமியார் இல்ல. ரஞ்சித் பேரன்ட்ஸ் எப்பவோ போயிட்டாங்க. இவங்க ஜஸ்ட் சொந்தகாரங்க அவ்வளவு தான்”
“யாரு சொந்தகாரவங்க?” என்று கேட்டுக் கொண்டு கௌசல்யா அருகே வந்து விட்டார்.
“ம்மா.. பாருமா இவன.. எதுக்கெடுத்தாலும் திட்டுறான்” என்று சோபனா முந்திக் கொள்ள சத்ருகணன் அவளை முறைத்தான்.
“இவ பண்ணுறது அப்படி. அத்தை கிட்ட எடுத்தெறிஞ்சு பேசுறா. கேட்டா அவங்க ஒன்னும் மாமியார் இல்லையாம். இந்த மாதிரி ஊருக்கு போனதும் பேசி வச்சா அங்க இருக்கவங்க இவள பத்தி என்ன நினைப்பாங்க? அங்க நான் மருமகன். என் மரியாதை போயிடும் போல இருக்கு. சொல்லி வைங்கமா”
“என்னடி நினைச்சுட்டு இருக்க? அவங்க தான் அம்மா அப்பா இடத்துல இருந்து கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க. அவங்கள மதிக்காம பேசுவியா? ஆசைப்பட்ட பையன கட்டி வச்சா ஒழுங்கா வாழ மாட்ட போல?” என்று கோபமாக கேட்க சோபனாவுக்கு பதில் வரவில்லை.
“நல்லா கேளுங்க. அவ்வளவு திமிரு இவளுக்கு. இதே மாதிரி ரோஷினி அம்மா கிட்ட நடந்துக்கிட்டா சும்மா இருப்பியா நீ?”
சோபனாவுக்கு சட்டென கோபம் வந்தது.
‘அந்த ரோஷினி என் அம்மாவ அலட்சியபடுத்துவாளாமா?’ என்று கோபம் வந்தது.
“அம்மா அவ மாமியார்”
“அது போல மலர் உனக்கு மாமியார். ஒழுங்கா பேசி பழகு.” என்று மிரட்ட யாரோ கௌசல்யாவை அழைத்து விட்டனர்.
“உன்னை அப்புறம் பார்த்துக்கிறேன்” என்று விட்டுச் செல்ல சத்ருகணனும் சென்று விட்டான்.
ரஞ்சித் அவளிடம் பேசவே இல்லை. ஊருக்கு கிளம்பும் போது கௌசல்யா நிறைய அறிவுரைகளை வழங்கி வைத்தார்.
இதோ இப்போது வரை அவளால் நிம்மதியாக சிரிக்க முடியவில்லை.
ரஞ்சித் சொந்தங்களோடு சந்தோசமாக இருக்க ரோஷினி மலரோடு வேலை பார்க்க சோபனா தான் தனியாக இருந்தாள்.
அந்த நாள் முடிந்து அடுத்த நாள் வந்தது. மாலை மலரிடம் பல அறிவுரைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் ஊர் திரும்பினர்.
வழியில் பாட்டியோடு பேசிக் கொண்டு ரோஷினி சந்தோசமாக வர சத்ருகணன் எதுவும் பேசவில்லை. ஆனால் சோபனாவுக்கு தான் கடுப்பாக இருந்தது. தன்னுடைய பாட்டியிடம் இவள் ஒட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சுகிறாளே என்று.
°°°
நாளை ரஞ்சித்தும் சோபனாவும் பெங்களூர் திரும்ப வேண்டும். விமானத்தில் செல்ல முடிவு. சத்ருகணனும் ரோஷினியும் காலையில் அவர்களது வீட்டிக்கு சென்று விடுவார்கள். அங்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு மாலை இவர்கள் கிளம்ப வேண்டும்.
சோபனா தன் உடைகளை எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். ரஞ்சித் அனைத்தையும் முடித்து விட்டு குளித்து விட்டு வெளியே வந்தான்.
சோபனா அவனை பார்க்க அவன் அவளை கண்டு கொள்ளாமல் போய் படுத்து விட்டான். சட்டென சோபனாவிற்கு கண்கள் கலங்கி விட்டது.
அவளை எந்த வேலையும் தனியாக செய்ய விட்டது இல்லை அவன். அலுவலக வேலையாக இருந்தால் கூட அவளருகே அமர்ந்து கொண்டு தானும் வேலை பார்ப்பான்.
இப்போது அவள் வேலை செய்யும் போது திரும்பியும் பார்க்காமல் சென்று படுத்து விட்டானே.
‘இவன எப்படி தான் சமாளிக்கிறது? ஊருக்கு போனதும் தான் எதாவது பண்ணனும்’ என்று யோசித்து விட்டு வேலையை செய்தாள்.
சத்ருகணன் அறையில் ரோஷினி நகைகளை எல்லாம் பத்திரபடுத்திக் கொண்டிருந்தாள். நாளை சத்ருகணனின் வீட்டுக்கு செல்ல வேண்டும்.
பெற்றோரோடு அவன் தங்குவது இல்லையே. தனி வீட்டில் தான் வாழ்க்கை.
பாட்டியிடம் சமையல் கற்றுக் கொண்டது இனி உதவும் என்று நினைத்தாள்.
எல்லாவற்றையும் அடுக்கி முடிக்க சத்ருகணன் அவளிடம் வந்து நின்றான்.
“எதாவது ஹெல்ப் வேணுமா?”
“வேணாம்”
“முடிச்சுட்டியா?”
“ம்ம்”
“அப்ப பேசலாமா?”
“எத பத்தி?”
“ரஞ்சித் சோபனா பத்தி”
பெட்டியை ஓரமாக தள்ளி வைத்தவள் “சொல்லுங்க” என்று நேராக பார்த்தாள்.
“ம்ம்.. அது வந்து….”
சங்கடமாக அவன் இழுக்க ரோஷினி ஆச்சரியமாக பார்த்தாள்.
“வந்து?”
“உன் அண்ணன் நல்லவன் தான்”
“என்னது?”
“ஆமா.. அது..”
“வெயிட்.. யார் நல்லவன்?”
“உன் அண்ணன்”
“என் உங்களுக்கு யாரு?”
“ஹான்! மாப்பிள்ளை”
“அப்புறம் அவன் இவன்னு சொல்லுறீங்க?”
“எங்களுக்கு கிட்டத்தட்ட ஒரே வயசு தான்”
“அதுக்கு?”
அவள் கேட்ட விதத்தில் சத்ருகணன் தான் இறங்கி வர வேண்டியிருந்தது.
“ஓகே.. மாப்பிள்ளை.. நல்லவர் போதுமா?”
“இது நல்லா இருக்கு. அப்புறம்?”
“அப்புறம்னா?”
“அண்ணன பத்தி எப்படி தெரிஞ்சுக்கிட்டீங்க?”
“அதுவா? நீ படுத்து தூங்குனதும் ரூம்ல இருக்கது பிடிக்காம மாடிக்கு போனேன். அங்க எனக்கு முன்னாடியே சோபனாவும் மாப்பிள்ளையும் இருந்தாங்க. சண்டை போட்டுட்டு. அப்ப தான் புரிஞ்சது. ரஞ்சித் மேல தப்பில்ல. சோபனா தான் எதோ பண்ணிருக்கானு”
“சரி.. அப்புறம்?”
“அத தான் உன் கிட்ட சொல்ல நினைச்சேன். நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். அதான் ஒரு சாரி சொல்லி சமாதானமா போயிடலாம்னு”
“ஓஹோ..”
“என்னமா? அதான் சாரி சொல்லிட்டேனே”
“நான் எதுக்கு கோபமா இருக்கேன்னே உங்களுக்கு புரியல.” என்று தோளை குலுக்கி வைத்தாள்.
“உன் அண்ணன திட்டுனதுக்கு தான?”
“அதுவும் கோபம் தான். ஆனா அது மட்டுமே இல்ல. இப்ப என்ன? நீங்க நினைச்ச அளவுக்கு ரஞ்சித் மோசமில்லனு தெரிஞ்சுக்கிட்டீங்க. என்ன சொன்னான்? எப்படி நல்லவன் தான்னு முடிவு பண்ணிங்க?”
“ரஞ்சித் லிவ் இன் இருக்க நினைக்கல. சோபனா தான் எதோ பண்ணி அவன் கூட ஒரே வீட்டுல இருக்கா. அவ்வளவு தான்”
“அப்போ அந்த லிவ் இன் இல்லனதும் என் அண்ணன் நல்லவனாகிட்டானா? ரெண்டு பேர் பிடிச்சுருந்து ஒரு விசயத்த செஞ்சா அது தப்பு கிடையாது. அப்படினா லிவ் இன் இருந்தா கூட தப்பு கிடையாது. உங்கள மாதிரியே எனக்கும் அவங்க எந்த விசயத்தையும் சொல்லல. எனக்கும் கோபம் வந்தது. ஆனா என் அண்ணன் சந்தோசத்துக்காக அந்த கோபத்த தூக்கி போட்டுட்டேன்.
அவனுக்கு அண்ணி மேல எதோ வருத்தம் போல. சரியா பேச மாட்டேங்குறான். ஆனா கல்யாணம் பண்ணதுல ரொம்ப சந்தோசமா தான் இருக்கான். அந்த சந்தோசத்த விட என் கிட்ட காதல் விசயத்த மறைச்சது எனக்கு பெருசா தெரியல. ஆனா..”
அவள் பேசுவதை பொறுமையாக கேட்டவன் “ஆனா?” என்று திருப்பிக் கேட்டான்.
“உங்களுக்கு உங்க தங்கச்சிய பத்தின அக்கறையே இல்ல. ஈகோ தான் நிறைய இருக்கு. அதான் எனக்கு பிடிக்கல” என்று வருத்தமாக சொன்னாள்.
“ஈகோ? நான் ஈகோ பார்க்குறேன்னு எத வச்சு சொல்லுற?”
“இன்னமும் உங்களுக்கு புரியலயா?”
“புரியல. நான் ஈகோ பார்க்கல ரோஷி.. அவங்க என் கிட்ட மறைச்ச கோபம் உனக்கு ஈகோவா தெரியுதா? உன்னால உன் அண்ணன மன்னிக்க முடிஞ்சது. என்னால முடியல. ரெண்டு பேரும் வேற வேற வழியில யோசிச்சோம். அவ்வளவு தான்”
“எந்த வழில யோசிச்சீங்க?”
“நாங்க சோபனாவ நம்பி அனுப்புனோம். அங்க நல்லபடியா பத்திரமா வேலை பார்ப்பா. பாதுகாப்பா இருப்பானு அனுப்புனோம். திடீர்னு ஒரு பையன் கூட ஒரே வீட்டுல வாழ்ந்துட்டு இருக்கத பார்த்தா கோபம் வராதா? எனக்கு உன் அண்ணன் மேல மட்டும் கோபம் இல்ல. சோபனா மேலயும் கோபம் தான். இப்படி நம்பிக்கைய உடைச்சுட்டாளேனு. ஆனா என் இடத்துல இருந்து பாரு. நான் உன் அண்ணனுக்கு சொல்லாம உன் கூட லிவ் இன் இருக்கேன்னு வை.. உன் அண்ணன் சும்மா இருப்பானா? அவனுக்கு என் மேல கோபம் வராதா? சண்டை போட மாட்டானா? அவங்க குடும்பத்த ஏமாத்தி லிவ் இன் பக்கம் போகலனு இப்ப எனக்கு தெரியும். ஆனா அப்போ நான் கோபப்படாம எப்படி இருக்க முடியும்? நீயே சொல்லேன்”
“ஓகே நான் உங்க வழிக்கு வர்ரேன். இப்ப நாம லவ் பண்ணிருக்கோம். நாம தான் ஒன்னா வாழவும் முடிவு பண்ணுறோம். அதுவும் என் அண்ணனுக்கோ என் குடும்பத்துக்கோ தெரியாம. ஒரு நாள் அவனுக்கு தெரியுது. வந்து கோபப்படுவான். கத்துவான். சண்டை போடுவான். உன்னை நம்புனேன். இப்படி ஏமாத்துறியேனு கேட்பான். காதலிச்சத மறைச்சத சொல்லி வருத்தப்படுவான். அடுத்து? அடுத்து என்ன?
நீ லவ் பண்ண பையன எனக்கு பிடிக்கல. அதுனால அவன அடிச்சு துரத்த போறேன்னு சொல்லுவானா? அப்படி அவன் அடிச்சு துரத்தும் போது நான் கதற மாட்டேனா? நான் அழுறதும் என் வாழ்க்கைக்காக கெஞ்சுறதையும் பார்க்க என் அண்ணனுக்கு சந்தோசமா இருக்குமா? அப்படி என்னை அழ வச்சு உங்கள பிரிச்சா அவன பத்தி நீங்க என்ன சார் நினைப்பீங்க? உயர்ந்த அண்ணன்னா? இல்ல கொடுமைக்காரன்னா? சொல்லுங்களேன்”
சத்ருகணனுக்கு இப்போது சற்று புரிந்தது. அதனால் பதில் சொல்லாமல் நின்றான். சொல்லவும் தேவையில்லை. ரோஷினி அவனை விடுவதாக இல்லை.
“அப்படி ஒரு காரியத்த தான என் அண்ணனுக்கு நீங்க பண்ண நினைச்சீங்க? உங்க தங்கச்சி எதோ ஒரு நாடகம் ஆடி என் அண்ணன் கூட வாழ்ந்துருக்காங்க. அவ்வளவு தூரம் அண்ணன் மேல அவங்க உயிர வச்சுருந்துருக்காங்க. அவங்களோட காதல பிரிச்சு.. என் கிட்ட நீ உண்மைய மறைச்சுட்ட. அதுனால அவன துரத்துறேன்னு அடிச்சு துரத்த நினைச்சீங்களே.. இதுக்கு பேரு ஈகோ இல்லாம?
ஆனா அது கூட பரவாயில்ல. அடுத்து ஒன்னு சொன்னீங்க பாரு.. அதையும் சும்மா சொன்னா உங்களுக்கு புரியாது. அதையும் உங்க சைட்ல இருந்தே விளக்குறேன்.
நாம தான் லவ் பண்ணி என் அண்ணன் பிரிச்சு விட பார்க்குறான்னே வைங்க. திடீர்னு உங்க தங்கச்சிய அவனுக்கு பிடிச்சுருச்சு. அதுனால போனா போகுது நீயும் என் தங்கச்சிய கட்டி வாழ்ந்துட்டு போ. நான் உன் தங்கச்சிய எடுத்துக்கிறேன்னு சொல்லிருந்தா?
இல்ல இது எப்படி இருக்கு? உங்க சுயலாபத்துக்காக உங்க தங்கச்சிய நீங்க என் அண்ணனுக்கு போனா போகுதுனு தூக்கி கொடுத்துருக்கீங்க. அதுல உங்க லாபம் மட்டும் தான் இருக்கு. உங்க தங்கச்சி சந்தோசமா வாழுவாங்குற எண்ணம் கொஞ்சம் கூட இல்ல.
சோபனா சந்தோசமா இருக்கனும்னு நினைச்சுருந்தா நீங்க அவங்க காதல எதிர்த்து இருக்க மாட்டீங்க. லிவ் இன் கதை தெரிஞ்ச நிமிஷமே சண்டை போட்டோ சத்தம் போட்டோ அவங்கள விசாரிச்சு விசயத்த தெரிஞ்சுட்டு வந்துருப்பீங்க. அதையும் மீறி உங்களுக்கு உங்க தங்கச்சி மேல உண்மையான அக்கறை இருந்திருந்தா… கூட பழகுறவன் யாரு? அவன் குடும்பம் என்ன? குணம் என்னனு தேடிருப்பீங்க.
எதுவும் பண்ணல. இதுல எதுவுமே பண்ணல தான? உங்க தங்கச்சி உங்க கிட்ட சொல்லாம ஒருத்தரோட வாழுறா. அவளா வந்து சொல்லுறப்போ அவன பிரிச்சு விட்டுரனும். அவ்வளவு தான் உங்க எண்ணம். ஒரு தடவ கூட சோபனாக்காக நீங்க ஏன் யோசிக்கவே இல்ல? என்ன அண்ணன் நீங்க? சோபனா பிடிச்சவனோட சந்தோசமா வாழனும்னு உங்களுக்கு தோணவே இல்லையா?
நல்ல வேளை எனக்கு இப்படி ஒரு அண்ணன் இல்ல. தன் சுயநலத்துக்காக தங்கச்சிய தூக்கி போடுற அண்ணன். நில்லுங்க. நீங்க என்ன சொல்லுவீங்கனு தெரியும். சுயநலம் இல்ல. என்னை உங்களுக்கு உண்மையா பிடிச்சுருந்தது அதான? அப்படி பிடிச்சுருந்தா அதுக்காக கூட உங்க தங்கச்சிய நீங்க விட்டுருக்க கூடாது.
ரோஷினிய நான் கட்டனும்ங்குற ஒரே காரணத்துக்காக உனக்கு சோபனாவ கொடுக்குறேன்னு சொல்ல மனசு வந்துருக்காது. நீங்க செஞ்சது தப்பு தான். அதுவும் நீங்க உங்க தங்கச்சிக்கு செஞ்சது பெரிய தப்பு. அத என்னால ஏத்துக்க முடியல. இதுக்கு மேல இத பேச வேணாம். நான் தூங்குறேன்”
அவனை பேச விடாமல் கொட்டி விட்டு வேகமாக சென்று படுத்து விட்டாள்.
தொடரும்.
