அத்தியாயம் 24
![]()
அடுத்த நாள்..
காலையிலேயே சத்துருகணனையும் ரோஷினியையும் அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர்.
அங்கு சமையலுக்கு ஆட்கள் யாரும் இல்லை. அதனால் பொருட்களும் பெரிதாக இல்லை.
“எல்லாம் நீ தான் வாங்கனும். பார்த்து வாங்கு” என்று ரோஷினியிடம் பாட்டி சொல்ல தலையாட்டிக் கொண்டாள்.
மாலை வரை அங்கே இருந்து விட்டு ரஞ்சித்தும் சோபனாவும் அவளது பெற்றோரோடு கிளம்பினர்.
பாட்டி அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.
விமான பயணம் முழுவதும் அமைதியாக போக டாக்ஸியில் ஏறி அமர்ந்த பிறகு தான் சோபனாவிற்கு திக்கென்றது.
அந்த வீட்டில் தானே அவளது பொருட்களும் இருக்கிறது? அதை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? பயத்தில் குப்பென வியர்த்து விட்டது.
ரஞ்சித்திடம் சொல்லலாம் என்றால் மற்றவர்களும் அருகே தான் இருந்தனர். பயந்து போய் அமர்ந்திருந்தவளுக்கு அடுத்து எதையும் யோசிக்க முடியவில்லை.
எதாவது பொய் சொல்லி சமாளிக்க நினைத்து அவள் யோசித்துக் கொண்டிருக்க கார் வேறு பக்கம் சென்றது.
‘இந்த பக்கம் ஏன் போறோம்?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீடு வந்து விட்டது.
எல்லோரும் இறங்கிக் கொண்டனர்.
“இந்த அப்பார்ட்மெண்ட்ல தானா?” என்று கேட்க ரஞ்சித் தலையசைத்தான்.
சில நிமிடங்களில் எல்லோரும் வீட்டுக்குள் இருந்தனர். வீட்டை பார்த்ததும் தான் சோபனாவுக்கு மூச்சு சீரானது.
‘தப்பிச்சுட்டோம்’ என்று நினைத்தவள் உடனே மறுபடியும் பயந்தாள். எல்லோரும் அந்த வீட்டை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தனர்.
‘அந்த வீட்டுல இருந்து எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டானா?’ என்று பயந்து ரஞ்சித்தை பார்க்க அவன் வீட்டை எல்லோருக்கும் காட்டும் வேலையில் இருந்தான்.
அவசரமாக அவளே கண்களால் தேடி அவளது பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து நிம்மதி அடைந்தாள்.
“முதல்ல இருந்தது சின்ன இடம். நான் மட்டும் இருந்ததுக்கு ஓகே. ஆனா இப்ப எல்லாரும் வந்து போகனும்னு இத பார்த்தேன். அதான் கல்யாணத்துக்கு அங்க வர்ரதுக்கு முன்னாடி இங்க எல்லாத்தையும் மாத்திட்டு வந்துட்டேன். அவசரத்துல முடிஞ்ச வரை செட் பண்ணி வச்சுருக்கேன். இனி தான் சரி பண்ணனும்”
“இருக்கட்டும் மாப்பிள்ளை. இனி நீங்களும் சோபனாவும் சேர்ந்து பார்த்துக்கோங்க.” என்றார் குமாரவேல்.
“உன் திங்க்ஸ் எல்லாம் போய் ஹாஸ்டல்ல எடுக்கனும்ல?” என்று கௌசல்யா கேட்க மீண்டும் ஒரு முறை அதிர்ந்தாள்.
‘எந்த ஹாஸ்டலுக்கு இப்ப போறது?’ என்று அவள் பதற “ஹாஸ்டல காலி பண்ணியாச்சு அத்த. அவ ஃப்ரண்ட் கிட்ட சொல்லி எல்லாத்தையும் அவ வீட்டுக்கு எடுத்துட்டு போக சொல்லிட்டா. கல்யாணம் முடிஞ்சதும் வந்து வாங்கிக்கிறேன்னு சொல்லிருந்தோம். இப்போ அவ வீட்டுல இருக்கத வாங்கி வச்சுட்டா போதும். நாளைக்கு தான் போகனும்” என்றான் ரஞ்சித் கோர்வையாக.
சோபனாவிற்கு மீண்டும் மூச்சு சீராக வந்தது.
அவன் சொன்னதை கேட்டு விட்டு கௌசல்யா தலையாட்டி வைத்தார்.
“நீ சொல்லவே இல்லயேடி” என்று கௌசல்யா மகளை இடிக்க அவளுக்கே தெரியாதே. அதனால் சிரித்து சமாளித்தாள். திருமணம் பேசியதிலிருந்து ரஞ்சித் அவளிடம் பேசவே இல்லையே. அவனாகவே எல்லாம் செய்து முடித்து விட்டான். அதை பெற்றோரிடம் சொல்ல முடியாமல் கழண்டு கொண்டாள்.
அக்கம் பக்கத்தை பார்ப்பது பேசுவது என்று நேரம் பறந்தது. வெளியிலேயே சாப்பிட்டு விட்டு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொண்டு மீண்டும் தம்பதிகளை வீட்டில் விட்டு விட்டு பெற்றோர்கள் கிளம்பி விட்டனர்.
கௌசல்யா மகளின் காதில் பல அறிவுரைகளை அள்ளி வழங்கி விட்டு தான் சென்றார். ஆனால் அதை கேட்பதை விட சோபனாவுக்கு ரஞ்சித்திடம் பேசுவது தான் முக்கியமாக இருந்தது.
அவர்களை அனுப்பியதும் ரஞ்சித்திடம் திரும்பினாள்.
“தாங்க்ஸ்”
“எதுக்கு?”
“அம்மா கிட்ட சமாளிச்சதுக்கு”
“உன் கூட சேர்ந்து நானும் பொய் சொல்ல கத்துக்கிட்டேன். அதுவும் சந்தேகமே வராத மாதிரி. நல்லா இருந்ததுல?” என்று நக்கலாக சிரித்தபடி கேட்டு வைத்தான்.
சோபனாவின் முகம் சட்டென விழுந்து விட்டது.
“நான் வேணும்னு சொல்லல.. உன்னை அப்ரோச் பண்ண எனக்கு வேற வழி தெரியல”
“அதுனால உன் பொய்ய மன்னிச்சுடனுமா?”
“புரிஞ்சுக்கோ ரஞ்சித். நீ பணக்கார பொண்ணுங்கள எல்லாம் ஒதுக்கி வச்ச. எதோ தப்பானவங்கள பார்க்குற மாதிரி பார்த்த. நானும் அப்படி தான்னு தெரிஞ்சா என் கிட்ட பேசிருக்க கூட மாட்ட. எனக்கு வேற வழி தெரியல”
“நான் ஏன் பணக்கார பொண்ணுங்கள ஒதுக்கி வச்சேன்னு உனக்கு தெரியும் தான?”
சோபனா உதட்டை கடித்தாள். அவளிடம் ஒரு முறை சொல்லி இருந்தான். ரஞ்சித் கல்லூரி காதல் கதை.
ரஞ்சித்தை காதலிப்பதாக பின்னால் சுற்றிய ஒருத்தி பெரிய பணக்காரி தான். ரஞ்சித் ஒப்புக் கொள்ளும் வரை பின்னால் சுற்றியவள் ஒப்புக் கொண்டதும் அவனை காலடியில் கிடத்தப்பார்த்தாள்.
அவனது உடையை அவன் பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் குறை சொன்னாள். அவளை போல பணத்தை வாரி இறைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். இல்லை என்றால் சண்டை பிடித்தாள். அவனை அளவுக்கு மீறி செலவு செய்ய வைத்தாள். செய்யாவிட்டால் பிச்சைக்காரன் போல் பார்த்து வைத்தாள்.
நாளுக்கு நாள் அவளது மட்டம் தட்டும் பழக்கம் அதிகரிக்க காதல் கரைய ஆரம்பித்தது. நிறைய சண்டைகள் வந்தது. கடைசியாக அவளது வாழ்வுமுறைக்கு தான் சரி வர மாட்டோம் என்று புரிந்ததும் பிரிந்து விட்டான்.
அவளும் அழுது கண்ணீர் வடித்து பார்த்து விட்டு கடைசியாக விட்டு விட்டாள்.
இனி பணக்கார பெண்களின் பக்கம் தலை வைப்பது இல்லை என்று அவன் முடிவு செய்த போது அவனுக்கு வெறும் இருபது வயது தான். பெற்றோர்களை இழந்து வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்து வயதின் முதிர்வை அடைந்த பின் கூட அந்த முடிவை அவன் மாற்றிக்கொண்டதே இல்லை.
பட்டதே போதும் என்று விலகி இருந்தான். அதனால தான் சோபனா அவனை நெருங்க வழி தெரியாமல் பொய் சொல்லி இருந்தாள்.
அவன் கேட்டதுக்கு பதில் சொல்ல முடியாமல் சோபனா நிற்க “இந்த விசயத்த நான் சொன்னப்போ கூட நீ என் கிட்ட உண்மைய சொல்லிருக்கலாம் சோபனா. நான் அப்படி இல்ல. பணக்காரவங்கள்ள நல்லவங்களும் இருக்காங்கனு நீ சொல்லிருந்தா முதல்ல கோபப்பட்டுட்டு அப்புறம் சமாதானம் ஆகிருப்பேன். ஆனா உனக்கு ஒரு நெருக்கடி வர்ர வரைக்கும் மறைச்சுட்ட. இப்ப கல்யாண விசயம் வரலனா இன்னமும் மறைச்சுட்டு தான இருப்ப? உனக்கு பணம் இருக்கா? இல்லையாங்குறது என் பிரச்சனை இல்லை. ஒரு வருசமா ஒரே வீட்டுல இருந்தோம். அதுல ஒவ்வொரு நாளும் நீ என்னை ஏமாத்திட்டு இருந்துருக்கனு நினைக்கிறது எவ்வளவு வலிக்குது தெரியுமா? இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது? போடி” என்று விட்டு சென்று விட்டான்.
சோபனாவிற்கு கண்கலங்கியது. அவள் பணக்காரி என்பதற்காக அவன் கோபப்படவில்லை. அவனிடம் உண்மையை சொல்லி இருக்கலாம். இப்போது சொன்னது போல் அப்போதே செல்லி இருந்தால் திருமணமாவது சந்தோசத்தோடு நடந்திருக்கும். இப்படி மனதை வருத்தி கடமையாக நடந்திருக்காது.
ரஞ்சித் அதன் பின்பு எதுவும் பேசவில்லை. வேலை இருப்பதாக மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
இப்போது பேசுவதை விட சற்று பொறுமை காப்பது மேல் என்று தோன்ற வீட்டை ஒதுங்க வைக்கும் வேலையில் இறங்கினாள் சோபனா.
இன்னொரு தம்பதியும் தங்களுக்கு கிடைத்த தனிமையில் ஆளுக்கொரு பக்கமாக நின்றிருந்தனர். ரோஷினி சமையலறையில் நின்று பாட்டி சொன்னதில் எதையெல்லாம் வாங்குவது என்று எழுதி வைத்துக் கொண்டிருந்தாள்.
சத்தமில்லாமல் வந்த சத்ருகணன் அவளை தன் பக்கம் திருப்பி தூக்கி விட்டான்.
பயந்து போய் “என்.. என்ன பண்ணுறீங்க?” என்று பதறினாள்.
“பார்த்தா தெரியல?”
“எதுக்கு இப்படி தூக்கிட்டு போறீங்க?”
“வேற எதுக்கு குடும்பம் நடத்த தான்” என்று அவன் பட்டென சொல்ல ரோஷினிக்கு அதிர்ச்சியில் வாயடைத்தது. அறைக்கு தூக்கி வந்தவன் தான் மெத்தையில் அமர்ந்து அவளை மடியில் வைத்துக் கொண்டான்.
“நானும் காலையில இருந்து பார்க்குறேன். கண்டுக்கவே மாட்டேங்குற?”
“இப்ப என்ன உங்கள கவனிக்கனுமா?’
உடனே எழுந்து நின்று அவனை மேலும் கீழும் பார்த்தாள்.
“நல்லா கவனிச்சு பார்த்துட்டேன். இந்த ஹேர்ஸ்டைல் தான் கொஞ்சம் நல்லா இல்ல. மாத்திடுங்க. அவ்வளவு தான? நான் போறேன்”
“அடிங்க..” என்று அவன் எட்டிப் பிடிக்க அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு துள்ளி ஓட ஆரம்பித்தாள்.
“ஒழுங்கா வந்துடு. நான் பிடிச்சனா விபரீதமாகிடும்”
“நோ.. பிடிச்சுக்கோங்க” என்று சிரிப்போடு அவனை சீண்டி விட்டு ஓடினாள்.
சில நொடிகளில் அவள் சிக்கிக் கொள்ள அணைத்து பிடித்துக் கொண்டான்.
“ஓடவா செய்யுற?” என்று கேட்டவன் அவளுக்கு குறுகுறுப்பு மூட்ட “ஓடி விளையாடுறது உடம்புக்கு நல்லது சார்” என்றாள் நெளிந்தபடி.
“அப்படியா? அப்ப நாம மட்டுமா விளையாடுறது? நம்ம கூட ஓடி விளையாட ஒரு ஆள ரெடி பண்ணிடுவோம்” என்றவன் அவள் இதழ்களை சிறை பிடிக்க கண்ணை மூடி அவனோடு இணைந்தாள்.
தொடரும்.
