அத்தியாயம் 25

Loading

திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது. இரண்டு தம்பதிகளும் அவர்களது வாழ்வை கவனத்தினர். அன்றாட வேலைகள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க சோபனா மட்டும் ரஞ்சித்தை மலையிறக்கும் முயற்சியில் இருந்தாள்.

ரஞ்சித் அவளிடம் பேசினாலும் மன்னிப்பதற்கோ மறப்பதற்கோ தயாராக இல்லை. இருவரும் திருமணத்திற்கு முன்பு இருந்தது போல் காலையில் ஒன்றாக வேலைக்கு கிளம்பிச் சென்று மாலையில் வந்து சமைத்து சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவதை வேலையாக வைத்திருந்தனர்.

ரஞ்சித்துக்கு சோபனா மீது இருந்த கோபம் குறைய ஆரம்பித்து அவளது வருத்தம் பாதித்தது. ஆனால் அவனால் எதையும் மன்னிக்க முடியவில்லை.

இன்றும் சமைத்தபடி ரோஷினியோடு கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

“ஆமாணா.. நாளையில இருந்து வேலை ஹெவியா இருக்கும். நானே நேரம் கிடைச்சா உனக்கு கால் பண்ணுறேன்”

“சரிமா. ஆனா நீயே தான் பார்க்கனுமா? உன் வீட்டுக்காரு பார்க்க மாட்டாரா?”

“ஏன் மாட்டாரு? எல்லா ஃபைலயும் வீட்டுல உட்கார வச்சு பார்க்க வச்சுட்டு தான் விடுவேன். ஆஃபிஸ்ல தான் அவர் பாஸ். வீட்டுல நான் தான் பாஸ்”

அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தது அவனுக்கு.

“சரிங்க பாஸம்மா.. வேலைய பாரு. லேட்டாச்சு. குட் நைட்”

“ஓகேணா குட் நைட். அண்ணிக்கும் சொல்லிடு” என்று விட்டு வைத்து விட்டாள்.

ரஞ்சித் சிரிப்போடு கைபேசியை வைத்து விட்டு உணவை மேசையில் அடுக்கினான். சோபனா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘எவ்வளவு சந்தோசமா பேசி சிரிக்கிறான்?’ என்று பொறாமையாக இருந்தது.

அவளது எண்ணத்தை முகத்தை பார்த்தே தெரிந்து கொண்ட ரஞ்சித் ஒன்றுமே சொல்லவில்லை.

இங்கு ரோஷினியும் உணவுகளை அடுக்கி விட்டு கணவனை பார்த்தாள். அவன் கணினிக்குள் தலையை விடாத குறையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு நொடி யோசித்தவள் “சாப்பிட வாங்க” என்று அழைத்தாள்.

“ஒரு நிமிஷம்” என்றவன் உடனே ஓடி வந்தான்.

மனைவியின் சமையல் அவ்வளவு பிடிக்கும் அவனுக்கு. இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்தனர்.

“இன்னும் வேலை இருக்குமா. நீ உன் வேலைய பாரு.. நான் தூங்குறதுக்கு லேட் ஆகும்” என்று விட்டு சத்ருகணன் தன் வேலையில் மூழ்கி விட்டான்.

வேலையை பற்றித் தெரிந்ததால் ரோஷினியும் வேலையை பார்த்தாள். நள்ளிரவு நேரம் தான் அவளது வேலை முடிந்தது. உடலை முறுக்கி வலியை போக்கியபடி திரும்பிப் பார்த்தாள்.

சத்ருகணன் இன்னும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

“முடிஞ்சதா? எதாவது ஹெல்ப் வேணுமா?” என்று கேட்க “வேணாம். நீ தூங்கு” என்றான்.

“சாப்பிட எதாவது கொண்டு வரவா?”

“இப்ப சாப்பிட்டா செரிக்காதுடா.”

“சரி முடிச்சுட்டு படுங்க” என்றதோடு படுத்து உறங்கி விட்டாள்.

அடுத்த நாள் முதல் வேலை தலைக்கு மேல் இருந்தது.

ரோஷினியின் குழு முன்னின்று விளம்பரம் எடுக்கும் வேலையை கவனித்தனர். அதனால் முழு நேரமும் அவளுக்கு வேலை இருந்தது. வீட்டில் சமைக்கவும் நேரமில்லாமல் போக வெளியே வாங்கி சாப்பிட்டுக் கொண்டனர் இருவரும்.

வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்க சூட்டிங் முடிந்து ரோஷினி வீடு திரும்பினாள்.

இன்று தான் சற்று சீக்கிரமே வர முடிந்தது. நன்றாக குளித்து முடித்து விட்டு வர, பாட்டியிடயிருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுங்க பாட்டி”

“என்ன சொல்ல? உன்னை திட்டனும்னு தான் கூப்பிட்டேன். அவன் கூட சேர்ந்து நீயும் என்னை பார்க்க வர்ரது இல்ல. ஃபோனும் நான் தான் போடனுமா?”

எடுத்ததுமே அவர் கோபமாக பேச “இல்ல பாட்டி.. நான் தான் சொன்னேன்ல? சூட்டிங் வேலை நிறைய இருக்குனு. இன்னைக்கு தான் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வந்துருக்கேன். சமைக்குறதா அப்படியே படுத்து தூங்குறதானு தெரியல. ரொம்ப டயர்டா இருக்கு” என்று சமாதானம் செய்தாள்.

“என்னமோ போ. சோபனாவ கேட்டாலும் வேலை வேலைங்குறா. நீயும் வேலை வேலைங்குற. அடுத்த வாரமாச்சும் வரனும் என்ன?”

“கண்டிப்பா. வேலைய முடிச்சதும் ஓடி வந்துடுறேன்”

“சரி சரி. வெறும் வயித்துல தூங்காத. எதாவது சாப்பிட்டு படு. அவன் எப்ப வருவான்?”

“அவரு வர ரொம்ப லேட் ஆகும்”

“சரி கதவ பூட்டிட்டு பத்திரமா இரு” என்று கூறி விட்டு மேலும் சில அறிவுரைகளோடு வைத்து விட்டார்.

பசிக்கு இருந்ததை செய்து சாப்பிட்டு விட்டு படுத்து விட்டாள் ரோஷினி. கணவன் வந்ததும் தெரியவில்லை. அருகில் உறங்கியதும் தெரியவில்லை. அடுத்த நாள் காலையில் தான் எழுந்து பார்த்தாள்.

கணவனை பார்த்து புன்னகைத்து விட்டு மணியை பார்த்தாள்.

‘இன்னைக்கும் சமைக்க வழி இருக்காது’ என்று நினைத்தபடி எழ சத்ருகணன் அவளை தடுத்தான்.

“எங்க போற?”

“டைம் ஆச்சு. எந்திரிச்சு வேலைய பார்க்க வேண்டியது தான்”

“எனக்கு ஒரு வேலையும் இல்ல. உனக்கு இருக்கா?”

“மதியம் தான் முக்கியமான வேலை. சூட்டிங் வீடியோ எடிட்டிங் எல்லாம் பார்க்க வர சொன்னாங்க”

“அப்போ போயிக்கலாம்” என்றவன் மனைவியை அணைத்து முத்தமிட ஆரம்பித்திருந்தான்.

மீண்டும் ஒரு முறை தூங்கி எழுந்து மதிய உணவை வெளியே வாங்கி சாப்பிட்டு விட்டு கணவன் அருகே அமர்ந்திருந்தாள் ரோஷினி. வேலை இருந்தாலும் செல்ல பிடிக்கவில்லை. சுப்ரியாவை பார்க்க சொல்லி விட்டு கணவனை உரசிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

சத்ருகணன் கையிலிருந்ததை போட்டு விட்டு “என்ன மேடம்? கொஞ்சல் பலம்மா இருக்கு?” என்று கேட்டான்.

“வாரம் முழுக்க வேலை பின்னாடி ஓடி உட்கார்ந்து பேசக்கூட நேரம் இல்லாம போச்சே நமக்கு. அதான்..”

“ஓஹோ.. அப்ப ஒன்னு பண்ணலாமா? ஹனிமூன் போகலாமா?”

“வேலைய விட்டுட்டா?”

“என்னை விட பொறுப்பா இருக்கா என் பொண்டாட்டி.. பெருமையா இருக்கு போ” என்று அவளது மூக்கைப்பிடித்து ஆட்டி சிரிக்க அவளும் சிரித்து வைத்தாள்.

“ஆனா நிஜம்மாவே இப்ப இத விட்டுட்டு போக முடியாது தான?”

“ஆமா. முடிஞ்சதும் போகலாம். எப்படியும் இந்த மாசம் முழுக்க ஓடிடும். அடுத்த மாசம் போகலாம். எங்க போகலாம்னு யோசிச்சு வை”

“நாம மட்டுமா?”

“ஏன்? ஹனிமூன்க்கு நாலு பேர சேர்த்து கூட்டிட்டு போகனுமா?”

“இல்ல.. அண்ணா அண்ணிய சொல்லுறேன். அவங்களும் எங்கயும் போகலயே”

“அவங்க என்ன ப்ளான்ல இருக்காங்கனு தெரியலயே. லீவ் கிடைக்கும்னா சேர்த்தே ப்ளான் பண்ணலாம்”

“உங்களுக்கு ஒன்னும் டிஸ்டர்பா இருக்காதே?”

“அவங்களும் நியூ மேரிட் கப்பில் தான? சோ நோ ப்ராப்ளம்” என்று கண்ணடித்து வைத்தான்.

ரோஷினி சிரிப்போடு அவன் தோளில் நன்றாக சாய்ந்து கொண்டாள்.

“நீயே கேட்டு எந்த இடம்னு டிசைட் பண்ணி சொல்லு. நான் மத்த அரேஜ்மண்ட்ஸ முடிச்சுடுறேன்”

ரோஷினி தலையாட்டி விட்டு சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

“எனக்கு பதில் சொல்லுங்களேன்”

“கேளுங்களேன்”

“உங்க தங்கச்சி கிட்ட லாஸ்ட்டா எப்ப பேசுனீங்க?” என்று கேட்டு வைத்தாள்.

இதை எதிர்பார்க்காமல் ஒரு நொடி விழித்தான். கேள்வி புரிந்தாலும் பதில் இல்லை.

“லாஸ்ட்டானா?”

“எப்ப பேசுனீங்க?”

“நம்ம கல்யாணத்தப்போ.. ஊருக்கு போனமே அப்போ பேசுனது”

“அதுக்கப்புறம் நீங்க பேசவே இல்லயா? ஏன்?”

“நாங்க உன்னை மாதிரி அடிக்கடி பேசிக்கிற டைப் கிடையாது. எப்பவாது தான் கால் பண்ணி பேசுவோம்”

“ஆனா அப்பவும் இப்பவும் ஒன்னா?”

சத்ருகணன் அவளை கேள்வியாக பார்த்தான்.

“அப்போ நீங்க ஜஸ்ட் அண்ணா தங்கச்சி. இப்ப உங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிருக்கு. நீங்களும் கல்யாணம் பண்ணிருக்கீங்க. உங்க தங்கச்சி நல்லா இருக்காங்களானு விசாரிக்கனும்ல? அத்தையும் மாமாவும் கண்டிப்பா கேட்பாங்க. ஆனா நீங்களும் கேட்கனும்ல?”

“அப்படிங்குற?”

“ஆமா. நான் தினமும் ரஞ்சித் கிட்ட பேசிட்டு இருப்பேன். இப்ப கொஞ்ச நாளா வேலையில பேசாம இருக்கது என்னவோ மாதிரி இருக்கு. ஆனா உங்களுக்கு ஏன் தோணவே இல்ல?”

“உங்கள போல பாசத்த பொழியுற அண்ணன் தங்கச்சியா நாங்க இல்லனு நினைக்கிறேன்.”

“பாசத்த பொழியனும்னு இல்ல. ஜஸ்ட் கேட்கலாம்ல? இன்னுமே அவங்க மேல இருந்த கோபம் போகலயா?”

“அது தான் ரீசன். இன்னும் கோபம் போகல”

“பாவம் அவங்களுக்கு என்ன பிரச்சனையோ? இப்ப தான் கல்யாணம் முடிஞ்சு போச்சே. இன்னும் ஏன் இழுத்து பிடிச்சு கோபத்த காட்டுறீங்க?”

“இல்ல ரோஷீ.. உனக்கு புரியல. நான் முதல்ல கோபத்துல திட்டுனேன் தான். அப்போ ரெண்டு பேரு மேலயும் தப்பிருக்குனு ரெண்டு பேரையுமே தான் திட்ட தோணுச்சு. ஆனா உண்மை தெரிஞ்சதும் சோபனாவ நினைச்சா ரொம்ப ஏமாற்றமா இருக்கு. அவள இப்படியா நாங்க வளர்த்தோம்? காதலிக்கிறது தப்பில்ல தான். அவளோட காலேஜ் லவ்வ நான் பிரிச்சு விட்டுட்டேன்னு அவளுக்கு கோபம். ஆனா அந்த வயசுல லவ் தேவையில்ல. படிப்பு தான் தேவை. அதான் செஞ்சேன். ஆனா இப்ப ரஞ்சித்த லவ் பண்ணிருந்தா நேரடியா சொல்லிருக்கலாம். எப்படியும் ஒரு நல்ல முடிவு தான் வந்துருக்கும்”

“அதான் முடிஞ்சதே?”

“அது இல்ல. அவ ரஞ்சித்த ஏமாத்திருக்கா. பொய் சொல்லியிருக்கா. ரஞ்சித்துக்கு பணக்கார பொண்ணுங்கள பிடிக்காதுங்குறதுக்காக தன்னை மாத்தி காட்டுன வரை சரி. ஆனா அதே பொய்ய வச்சு அவன் கூடயே போய் தங்குறது? நீ சொல்லு.. ரஞ்சித் மாதிரி ஏமாந்திருந்தா மத்த எவனாச்சும் சும்மா விடுவானா? ஏற்கனவே பணக்கார பொண்ணுங்க இப்படினு அவனுக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கு. நீயும் அதே தான்டி பொய் சொல்லுற ஏமாத்துக்காரினு விட்டுட்டு போயிருந்தா? இவ என்ன செஞ்சுருப்பா?”

“அண்ணன் அப்படி விட்டுர மாட்டான். பட் பொய் சொன்னது தப்பு தான்”

“லவ் பண்ணுறவங்க பொய் சொல்லுறது எல்லாம் சாதாரணம். ஆனா அந்த பொய் இந்த அளவுக்கு போயிருக்க வேணாம். ரஞ்சித் இடத்துல இருந்து யோசிச்சா வருத்தமாவும் இருக்கு. அவளுக்காக தான் உன் கிட்ட கூட விசயத்த சொல்லாம இருந்துருப்பான். இவ அவனயே ஏமாத்திட்டு வாழ்ந்துருக்கா. எப்படி அவன் மன்னிச்சான்னு தெரியல. ஆனா எனக்கு இப்படி காதலிக்கிறவனயே ஏமாத்துற மாதிரி வளர்த்துட்டோமேனு ரொம்ப வருத்தம். நான் பேசுனா கண்டிப்பா திட்டிருவேன்.”

“அதுக்காக கோபத்த சுமந்துட்டே வாழ முடியாதுல? ஒரு தடவ வெளிப்படையா பேசி முடிச்சுடுங்களேன். அப்புறம் நார்மலாகிடும்”

“பார்க்கலாம். ஆனா இப்ப தோணல.”

“தோணனும். எத்தனை நாள் இப்படியே போறது? ஒன்னு பண்ணலாம். இந்த வாரக்கடைசியில எனக்கு வேலை இல்ல. உங்களுக்கு வேலை இருந்தாலும் ஒதுக்கி வைக்கிறீங்க. நாம பெங்களூர் போறோம். அங்கயே எல்லாம் பேசிட்டு வந்துடுவோம். அப்புறமா வேலை முடிச்சதும் ஹனிமூன் ப்ளான் பண்ணிக்கலாம். ஓகே?”

“எனக்கு..”

“ஓகே?” என்று அழுத்திக் கேட்க “இதுக்கு மேல மறுத்தா சோறு போட மாட்ட. அதுனால ஓகே” என்று வருத்தமாக சொல்லி வைத்தான்.

அவனது வருத்தத்தை பார்த்து சிரித்தபடி அவனோடு மேலும் இழைந்து கொண்டாள்.

தொடரும்.

Leave a Reply