அத்தியாயம் 26
![]()
அந்த வார இறுதியில் வேலைகளை ஒதுக்கி விட்டு ரோஷினியும் சத்ருகணனும், ரஞ்சித்தையும் சோபனாவையும் பார்க்கச் சென்றனர்.
வீட்டில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தி விட “போய் அவள நாலு தட்டு தட்டி என் கிட்ட ஒழுங்கா பேச சொல்லு கண்ணா” என்று பாட்டி அனுப்பி வைத்தார்.
கௌசல்யா மகளுக்கென நிறைய வாங்கி குவித்து விட்டார். காரில் அனைத்தையும் ஏற்றி விட்டு “பத்திரமா போயிட்டு வாங்க” என்று வழி அனுப்பி வைத்தார்.
சத்ருகணன் காரை ஓட்ட ரோஷினி பாடலை கேட்டபடி பயணத்தை ஆரம்பித்தாள். வேலை காரணமாக நிறைய நேரம் அவர்களுக்கு கிடைப்பதே இல்லை. அதனால் இந்த பயணம் இதமாக இருந்தது.
நிறைய பேசியபடி ஊர் சென்று சேர்ந்தனர். முன்பே சொல்லி விட்டதால் ரஞ்சித் அவர்களுக்காக காத்திருந்தான்.
ரோஷினியை பார்த்ததும் அவனது முகம் பூவாய் மலர்ந்தது.
“வாமா.. வாங்க மாப்பிள்ளை” என்று முறையாய் வரவேற்று அழைத்துச் சென்றான்.
சோபனா வீட்டுக்குள் தான் இருந்தாள். அவளுக்கு ரோஷினி இங்கே வருவது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் சத்ருகணனும் வருகிறானே. அதனால் அமைதி காக்கும்படி ஆனது.
இருக்கும் தலைவலியில் இனி அண்ணன் தங்கை கொஞ்சிக் கொள்ளும் கொடூரத்தை வேறு பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போதே அவளுக்கு தலை வெடித்தது.
சாதாரணமாக இருந்தால் எப்படியாவது ரஞ்சித்திடம் பேசி அவர்கள் வருவதை தடுத்து விடுவாள். ஆனால் இவன் தான் பேச மறுக்கிறானே. அவளுக்கு வெறும் செய்தியாகத்தான் இது வந்தது. அதில் என்னவென்று கருத்து சொல்ல?
மூவரும் கௌசல்யா கொடுத்தனுப்பிய பொருட்களோடு வந்து நிற்க “வாங்க வாங்க” என்று பெயருக்கு சிரித்து வரவேற்றாள்.
“நல்லா இருக்கீங்களா அண்ணி?” என்று ரோஷினி நலம் விசாரிக்க “நால்லாருக்கேன்மா” என்று வைத்தாள்.
வேறு எதையும் பேசினால் சத்ருகணனோ ரஞ்சித்தோ அவளை சும்மா விட மாட்டார்கள் என்ற எண்ணம் அடக்கி வாசிக்க சொன்னது.
“இதெல்லாம் அத்தை கொடுத்து விட்டாங்க” என்றதும் உடனே அதை வாங்கி பிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவளுக்கு அண்ணன் அண்ணியை விட அம்மா கொடுத்த பொருட்கள் தான் முக்கியம். இவர்களை பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. அதுவும் சத்ருகணன் ரோஷினிக்காக எதையும் செய்வான் என்ற நிலையில் இருப்பதை பார்க்கவே வெறுப்பாக இருந்தது.
“ஃப்ரஸ்ஸாகிக்கோங்க ரெண்டு பேரும். காபி போடுறேன். சேர்ந்து குடிக்கலாம்” என்று ரஞ்சித் சொல்ல ரோஷினி அவன் காட்டிய அறைக்குள் நுழைந்து கொண்டாள். சத்ருகணன் தங்கையை ஒரு நொடி பார்த்தான். அவளோ பொருட்களை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க சலிப்போடு ரோஷினியின் பின்னால் சென்று விட்டான்.
ரஞ்சித் காபி போட்டு முடிக்க இருவரும் வந்து விட்டனர். ரோஷினி வீட்டை ஆர்வமாக சுற்றிப்பார்த்தாள்.
“நல்லா இருக்குணா. வீடியோ கால்ல பெருசா தெரியல.” என்றவள் எல்லா இடங்களையும் பார்த்து விட்டு காபி குடிக்க அமர்ந்தாள்.
சோபனா இன்னும் இவர்களை கவனிக்காமல் இருக்க “சோபி” என்று சத்ருகணன் அழைத்தான்.
“ஹான்?”
“வந்து காபி குடி. இன்னும் ஏன் அதையே பார்த்துட்டு இருக்க?”
“நீங்க குடிங்க”
“ஏன் எங்களோட குடிச்சா என்ன? குறைஞ்சுடுவியா?”
ரோஷினியும் ரஞ்சித்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏன் இப்படி கோபப்படுகிறான் என்று இருவருக்கும் புரியவில்லை. ஆனால் சோபனாவுக்குத் தெரியும். அவள் வேண்டுமென்றே தவிர்க்கிறாள் என்று சத்ருகணனுக்கும் தெரியும்.
“வான்னு சொன்னேன்”
அவனது அதட்டலில் கையில் இருந்ததை வைத்து விட்டு உதட்டை சுளித்தபடி வந்து அமர்ந்தாள்.
“எதுக்கு கோச்சுட்டு நிக்கிற? நியாயமா நான் தான் கோபப்படனும்”
“ஏன்? உன் சொத்த எதுவும் புடுங்கிட்டேனா?” என்று சோபனா வெடுக்கென கேட்க ரோஷினிக்கு ‘அய்யோ!’ என்றிருந்தது.
சத்ருகணனும் பொறுமையாக பேசவில்லை. சோபனாவும் பொறுமையை மறந்து விட்டாள்.
“சொத்தெல்லாம் நீ புடுங்க வேணாம். அதுல உனக்கும் தான் உரிமை இருக்கு. ஆனா அத விட பெருசா ஒன்னு கொடுத்தோம். அத தான் தொலைச்சுட்ட”
சோபனா குழப்பத்துடன் பார்த்து வைத்தாள்.
“நம்பிக்கை. என்னோடது அம்மா அப்பாவோடது.. ஏன் ரஞ்சித் வச்ச நம்பிக்கைய கூட உடைச்சுட்ட. சொத்த விட அது ரொம்ப பெருசு தெரியுமா?”
சோபனா உதட்டை கடித்து பார்வையை தளர்த்தினாள். இதற்கு என்னவென்று பதில் சொல்வது?
“இப்படியா அம்மா உன்னை வளர்த்தாங்க? இல்ல அப்பா சொல்லிக் கொடுத்தாரா? யாருக்கு உண்மையா இருக்க பழக போற?”
“மாப்பிள்ளை..”
“பொறுங்க.. நாம போ வானே பேசலாம். ஆனா அதுக்கு முன்னாடி அவ கிட்ட பேசிடுறேன். இங்க நிமிர்ந்து பாரு சோபி. எங்க இருந்து வந்துச்சு இந்த ஏமாத்துற வேலை?”
“நான்.. ஒன்னும் ஏமாத்தல”
“அப்புறம்? வேற என்ன செஞ்ச?”
“லவ் பண்ணுறவர் கூட ஒரே வீட்டுல இருக்கது தப்பா? எங்க வாழ்க்கை. எங்க இஷ்டம்”
“அப்ப நானும் ஒரே வீட்டுல கல்யாணம் முடியாம ரோஷினி கூட வருசக்கணக்கா இருந்து அதையும் யாருக்குமே தெரியாம செஞ்சுருந்தா உனக்கு சந்தோசமா இருந்துருக்குமா?” என்று கேட்டு வைத்தான்.
தொண்டைக்குழி ஏறி இறங்கியது அவளுக்கு.
“இந்த விசயத்துல உங்க ரெண்டு பேர் மேலயும் தப்பிருக்கு. என்ன காரணமா இருந்தாலும் நீ ரோஷினி கிட்ட உண்மைய மறைச்சுருக்க கூடாது. அவளுக்குனு அப்ப இருந்த ஒரே சொந்தம் நீ மட்டும் தான் ரஞ்சித். அவ இடத்துல உன்னை வச்சு பாரேன். நீ எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கனு தெரியும். அதே தான் இவளுக்கும். மகள நம்பி வேலைக்கு அனுப்பி வச்ச என் அம்மா அப்பா இடத்துல யோசிங்க. அது அத விட பெரிய தப்பா தெரியும்.”
ரோஷினி சத்ருகணன் கையைப்பிடித்துக் கொண்டாள். பேசினால் நிச்சயமாக திட்டுவான் என்று தெரியும். ஆனால் இருவரின் முகத்தை பார்க்கும் போது அவளுக்கு பாவமாக தான் இருந்தது.
“நீங்க ரெண்டு பேரும் உங்களுக்குனு இருக்க உறவ உங்கள நம்புன உறவ ஏமாத்திருக்கீங்க. அதையும் தாண்டி தான் உங்கள மன்னிச்சு ஏத்துக்க பார்க்கிறோம். ஒரு வேளை உங்க அப்பா அம்மா உயிரோட இருந்திருந்தா அவங்களும் காயப்பட்டுருப்பாங்க.”
“புரியுது. பட்..அப்போ வேற வழி தெரியல” என்று ரஞ்சித் சமாளிக்க பார்த்தான்.
“எப்போ? என்ன வழி தெரியல?” என்று சத்ருகணன் கேட்க ரஞ்சித்துக்கு பதில் வரவில்லை.
சோபனா சொன்ன பொய்யை சொல்ல முடியாது. வேறு காரணத்தை தேடவும் முடியவில்லை.
“உங்க வாழ்க்கை. உங்க முடிவு. உங்க இஷ்டம். என்ன வேணா செய்ங்கனு விடுறதுக்கு யாருமில்லாமலா இந்த உலகத்துல வாழுறீங்க?”
“போதும் விடுங்களேன்” என்று ரோஷினி குறுக்கே வந்தாள்.
“சரிமா இத விட்டுறேன். ஆனா இவளுக்கு நம்ம மேல என்ன கோபம்னு தெரியனும். என்னமோ நாம இவள எதோ செஞ்சுட்ட மாதிரி முகத்த திருப்பிட்டு நிக்கிறா? சொல்லு சோபி. என்ன பண்ணோம் நாங்க? வீட்டுப்பொண்ணா எங்கள நீ வரவேற்கவும் இல்ல. ஆனா வந்துருக்கவங்க உன் சொந்த அண்ணன் அண்ணி. முகத்த பார்த்து பேசக்கூட பிடிக்காம திரும்பிக்கிற?”
“சாரி” என்றாள் சோபனா மெதுவாக.
அவளுக்கு இப்படி குற்றவாளியாக நிற்பது பிடிக்கவில்லை. ஆனால் பிடிபட்ட பிறகு எதுவும் செய்ய வழியில்லை. ரஞ்சித் அவளை காப்பாற்ற முயற்சித்தாலும் அவனையும் தான் அவள் ஏமாற்றி இருக்கிறாள். அவனுக்கும் இப்போது பேச முடியவில்லை.
“அதான் சாரி சொல்லிட்டாங்களே. கோபத்த விடுங்க” என்று ரோஷினி மீண்டும் இடையே வந்தாள்.
“இனிமே இப்படி எதையும் மறைக்காதணா. அண்ணி நீங்களும் எதுவா இருந்தாலும் சொல்லுங்க. உங்க குடும்பம் தான் இப்ப எனக்கும் குடும்பம். நாம பேசிக்காம வேற யாரு பேசுவா? ஃப்ரியா பேசுங்க. ஓகே?” என்று இருவரையும் பார்த்து கேட்க ரஞ்சித் தலையசைத்து வைத்தான்.
“இது சரி.. அது நல்லா இருக்குணா.. எப்ப வாங்குன?” என்று சுவற்றில் தொங்கிய அலங்காரத்தை காட்டி கேட்க பேச்சு திசை மாறியது.
சில நிமிடங்கள் மிக அமைதியாக பேசிக் கொண்டிருந்தனர்.
மதிய உணவுக்கு நான்கு பேருமே வெளியே சென்று விட்டனர். சோபனாவும் ரோஷினியை கண்டும் காணாமல் பேச்சில் கலந்து கொண்டதால் மதிய பொழுது இதமாக சென்றது.
இரவு உணவு ரோஷினியும் ரஞ்சித்தும் சமைக்க சோபனா உதவிக்கு நின்றாள். திருமணம் முடிந்ததிலிருந்து இன்று தான் ரஞ்சித் அதிகமாக சோபனாவிடம் பேசினான். காரணம் ரோஷினி. எப்போதும் அவளை பேச்சுக்குள் இழுத்தாள்.
ஆனாலும் சோபனாவின் மனதிலிருந்த பொறாமை கங்காக உள்ளே இருக்கத்தான் செய்தது. அதை ஊதி தீயாக்கும் வேலையும் நடந்தது.
தொடரும்.
