அத்தியாயம் 27

Loading

இரவு ஆளுக்கொரு அறையில் தூங்கி எழுந்தனர். காலையில் விடிந்ததும் ரோஷினி எழுந்து வர ரஞ்சித்தும் வந்தான்.

“குட் மார்னிங்ணா”

“குட் மார்னிங். தூங்க வேண்டியது தான?”

“வரல. அவங்க தூங்கட்டும். நாம எதாவது செய்வோம். பசிக்குது”

“என்ன வேணும்னு சொல்லு. நான் பண்ணுறேன்”

“எதாச்சும் பண்ணு.”

“அவருக்கு என்ன பிடிக்கும்?”

“ஆஹான்! மாப்பிள்ளை கவனிப்பா?” என்று கேட்க சிரிப்புடன் தலையசைத்து வைத்தான்.

காலை உணவை சமைத்து முடித்த பின்பே இருவரும் எழுந்தனர்.

“அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் சமையல்ல அவார்ட் வாங்க போறீங்களா?” என்று கேட்டபடி சத்ருகணன் அமர “நீங்க தூங்குறதுல வாங்கும் போது நாங்களும் வாங்கலாம்” என்று வம்பிழுத்தாள் ரோஷினி.

“நீயாச்சும் பண்ண வேண்டியது தான? உன் வீட்டுக்கு கெஸ்டா வந்தும் என் பொண்டாட்டி தான் சமைக்கிறா” என்று சத்ருகணன் சோபனாவை கேட்க அவளுக்கு அது பிடிக்கவில்லை.

“நானா செய்ய சொன்னேன்?” என்று கேட்டு விட “நீ செஞ்சுருந்தா அவ உள்ள வந்துருக்க மாட்டா. நீ இல்லாம அண்ணன் மட்டும் தனியா சமைக்கிறானேனு வேலையில இறங்கிட்டா. இது உன் வீடுங்குற நினைப்பு உனக்கு இருந்துருக்கனும்” என்றான்.

“காலையிலயே கோபப்படனுமா? எங்களுக்கு தெரியும் செஞ்சோம். அவ்வளவு தான் விடுங்க” என்று ரோஷினி அதட்ட சத்ருகணன் அமைதியாகி விட்டான்.

சோபனாவுக்கு உணவை பார்க்கவே பிடிக்கவில்லை. இந்த மகாராணி சமைத்து போட்டு தான் அவள் சாப்பிட வேண்டுமா? அவளொன்றும் கேட்கவில்லையே? ரஞ்சித்தே நன்றாக தான் சமைப்பான். அவனே செய்யட்டும் என்று விடாமல் நடுவில் புகுந்து திட்டு வேறு வாங்கிக் கொடுக்கிறாள்.

கடுப்பாகவே இருந்தாலும் சாப்பிட வேண்டியிருந்தது. இல்லை என்றால் அதற்கும் சத்ருகணன் திட்டுவான்.

“இனிமே இவளுக்கும் சமையல் சொல்லிக் கொடு ரஞ்சித். அடுத்த தடவ நாங்க வந்தா இவ தான் சமைக்கனும். என் பொண்டாட்டிலாம் செய்ய மாட்டா சொல்லிட்டேன்” என்று சாப்பிட்டு முடிக்கும் போது சத்ருகணன் சொல்ல “அப்ப நீயும் ரோஷிக்கு ஹெல்ப் பண்ணனும். பரவாயில்லயா?” என்று சிரிப்போடு கேட்டு வைத்தான் ரஞ்சித்.

“அதெல்லாம் பண்ணுவாருணா. ஆஃபிஸ் வேலை முடிஞ்சதுனா ரெண்டு பேரும் சேர்ந்து தான் வீட்டு வேலை பார்ப்போம்.” என்று ரோஷினி பெருமையாக சொல்ல சோபனாவுக்கு வயிறு எரிவது போல் இருந்தது.

மூவரும் சிரித்து சிரித்து பேச சோபனாவுக்கு தனியாக இருப்பது போல் இருந்தது.

“ஸ்வீட் பண்ணேன். எடுத்துட்டு வரவா?” என்று ரோஷினி கேட்க “கொஞ்ச நேரமாகட்டும்” என்றான் சத்ருகணன்.

“அண்ணி.. உங்களுக்கு?” என்று கேட்க அவள் பதில் சொல்லும் முன் சத்ருகணன் பேசினான்.

“அவளும் இப்ப தான சாப்பிட்டா? அத விடு.. லன்ச்க்கு வெளிய போயிடலாம். வீட்டுல நீங்களே சமைக்க வேணாம்”

“அசைவம் செய்ய ஏற்பாடு பண்ணிட்டனே” என்று ரஞ்சித் கூற “அப்படினா உன் பொண்டாட்டிய வச்சு சமையல் பண்ணு. என் ரோஷினிய விட்டுரு” என்று கையைப்பிடித்துக் கொண்டான்.

சோபனாவை தவிர எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.

“சரி நீங்களே வச்சுக்கோங்க. நாங்களே செய்யுறோம்” என்றவன் உடனே வெளியே கிளம்பினான். தேவையானதை எல்லாம் வாங்க ரஞ்சித் கிளம்ப ரோஷினி மீண்டும் சமையலறைக்குச் சென்றாள்.

ஆனால் சில நிமிடங்களில் கணவன் அறைக்குள் இருந்து அழைத்ததும் அவனிடம் சென்று விட்டாள்.

சோபனா தனியாக சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

‘பெரிய மகாராணி…இந்தம்மா வேலை செஞ்சா அவனுக்கு கஷ்டமா இருக்காம்’ என்று நொடித்துக் கொண்டாள்.

வேலையை முடிக்கும் நேரம் ரோஷினி மீண்டும் வந்தாள். காலையில் செய்த இனிப்பை எடுத்து தட்டில் வைத்தாள்.

சோபனா வெளியேற “நில்லுங்க அண்ணி. நீங்களும் சாப்பிடுங்க” என்று தட்டை நீட்டினாள்.

“வேணாம்” என்றவள் உதட்டை சுளித்தபடி திரும்பிச் செல்ல ரோஷினி ஆச்சரியமாக பார்த்தாள்.

“கொஞ்சம் டேஸ்ட் பாருங்களேன்”

“அதான் வேணாங்குறேன்ல? சும்மா…” என்று எரிச்சலாக சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

ரோஷினி ஒரு நொடி யோசித்தாள். பிறகு தட்டை வைத்து விட்டு சோபனாவின் பின்னால் சென்றாள்.

சோபனா அவளை கேள்வியாக பார்க்க “உங்களுக்கு என்ன கோபம்?” என்று நேரடியாக கேட்டு வைத்தாள்.

இந்த கேள்வியை சோபனா எதிர்பார்க்கவில்லை என்றாலும் “கோபமா? எதுக்கு?” என்று திருப்பிக் கேட்டாள்.

“அத தான் நானும் கேட்குறேன். சொல்லுங்க. என்ன கோபம்?”

“என்ன பேசுறீங்க?” என்று வந்து நின்றான் சத்ருகணன்.

அவனை பார்த்ததும் முறைத்தபடி சோபனா திரும்பிக் கொள்ள “எனக்கு அண்ணி கிட்ட பேசனும்” என்றாள் ரோஷினி.

“என்னது?”

“நீங்க கீழ போங்க. நான் தனியா பேசனும். அண்ணன் வந்ததும் வாங்க”

அவனிருந்தால் தேவையில்லாமல் சோபனாவை திட்டத்தான் செய்வான் என்று துரத்த பார்த்தாள்.

“பார்ரா! எனக்குத்தெரியாம என்ன பேசப்போற?”

“நான் தான் சொல்லுறேன்ல?”

ரோஷினி அழுத்திச்சொல்ல சத்ருகணன் சோபனாவை பார்த்து வைத்தான். அவள் கோபத்தோடு நின்றிருந்தாள்.

“ஓகே” என்றதோடு வெளியேறி விட்டான். ரோஷினி எதையும் மறைக்கபோவது இல்லை. பேசி முடிக்கட்டும் என்று நினைத்தான்.

சோபனா தான் இதை அதிர்ச்சியோடு பார்த்தாள். சத்ருகணன் எவ்வளவு கோபக்காரன் என்று அவளுக்குத் தெரியும் . ஆனால் ரோஷினியின் ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு கிளம்பி விட்டானே?

அவளுக்கு பொறாமையாக இருந்தது. காதலித்த நாட்களில் ரஞ்சித்தும் அவளிடம் இப்படித்தான் நடந்து கொண்டான் என்பதை மறந்து விட்டாள்.

“சொல்லுங்க அண்ணி. உங்களுக்கு என் மேல என்ன கோபம்?”

“நான் தான் இல்லனு சொல்லுறேன்ல?” என்று எரிச்சலாக சொன்னவளுக்கு அவளை துரத்தி கதவை பூட்ட வேண்டும் போல் இருந்தது.

‘பெரிய ஜட்ஜ் கேள்வி கேட்க வந்துட்டா’ என்று எரிச்சலாக வந்தது.

“உங்களுக்கு என்னை பிடிக்காதுனு தெரியும் அண்ணி” என்று ரோஷினி பட்டென போட்டு உடைக்க சோபனா அதிர்ந்தாள்.

“சாக் ஆகாதீங்க. அண்ணன் தான் சொன்னான். ஆனா அவனுக்கே காரணம் தெரியல. அதான் உங்க கிட்டயே கேட்கனும்னு இருந்தேன். சொல்லுங்க. அப்படி என்ன செஞ்சேன் நான்?”

“நீ ஒன்னும் செய்யல. எனக்கு கோபமும் இல்ல. போதுமா?”

“அப்புறம் ஏன் எந்த நேரமும் என்னை முறைச்சுட்டே இருக்கீங்க? கல்யாணத்தப்பவே கவனிச்சேன். அதுனால தான் ரஞ்சித் கிட்டயும் கேட்டேன். எப்பவாது இத பத்தி கண்டிப்பா கேட்கனும்னு நினைச்சேன். சொல்லுங்க. அப்படி என்ன கோபம்? நியாயமா பார்த்தா நான் தான் கோபப்படனும் உங்க மேல”

பதில் தேடி திணறிக்கொண்டிருந்தவள் கடைசி வரியில் கடுப்பாகி விட்டாள்.

“நீ கோபப்படனுமா? எதுக்கு?”

“என் அண்ணன என் கிட்ட இருந்து பிரிச்சதுக்கு. என் கிட்ட பொய் சொல்ல வச்சதுக்கு”

எந்த பூச்சும் இல்லாமல் அவள் பேச சோபனாவிற்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.

“அவர்.. உங்க அண்ணன் சொல்லுறத தான் நானும் கேட்குறேன். உங்க மொத்த குடும்பத்தையும் ஏமாத்திட்டு என் கூட கண்காணாத ஒரு ஊர்ல வாழ வானு நான் உங்க அண்ணன கூப்பிட்டனா? இல்ல உங்க அண்ணன் தான் எனக்காக உங்க கிட்ட பொய் சொல்லிட்டு இருந்தாரா?”

ரோஷினி சோபனாவின் பதிலை எதிர்பார்க்க அவளுக்கு வார்த்தை வரவில்லை.

“பதில் சொல்லுங்க அண்ணி. நான் என்ன செஞ்சேன்னு இப்படி பிகேவ் பண்ணுறீங்க? நானும் எத்தனை தடவ நானாவே பேச ட்ரை பண்ணுறேன். எதிரி மாதிரி ட்ரீட் பண்ணுறீங்க? எவ்வளவு நேரம் பொறுப்பேன்னு நினைக்கிறீங்க? நான் என்ன செஞ்சேன்னு சொல்லுங்க. கோபம்னா அதையும் சொல்லுங்க.”

“ஆமா கோபம் தான். உன்னை எனக்குப் பிடிக்காது தான். போதுமா?

“ஏன் கோபம்? அதையும் சொல்லுங்க. கோபத்த மனசுல மட்டுமே சுமந்துட்டே இருக்கதால உங்களுக்கு என்ன கிடைக்கபோது? சொல்லுங்க. பேசி தீர்த்துடலாம். இன்னைக்கே இப்பவே”

“நீ ஒன்னும் தீர்க்க வேணாம். கிளம்பு”

“என் மேல இருக்க கோபத்த நான் தான் தீர்க்கனும். வேற யாரு வருவா? உண்மையிலயே காரணம்னு ஒன்னு இருக்கா இல்லையா?”

“நக்கலா?”

“அப்ப சொல்லுங்க”

“அப்படியா? கேட்டுக்க. எனக்கு உன் மேல பொறாமை. உனக்கு மட்டும் பாசத்த பொழியுற அண்ணனும் புருஷனும் கிடைச்சுருக்காங்க. எனக்கு திட்டிட்டே இருக்க அண்ணனும் பேசாத புருஷனும் கிடைச்சுருக்காங்க. என் இடத்துல யாரு இருந்தாலும் பொறாமை படத்தான் செய்வாங்க. தனக்கு கிடைக்காத அடுத்தவங்க மட்டும் அதிகமா அனுபவிச்சா பொறாமை வரும். அந்த உணர்வு இல்லாதவன் மனுசனே கிடையாது. ஏன் நீ பொறாமை பட்டதே இல்லையா? வந்துட்டா கேள்வி கேட்க. இத நீ எப்படி சரி பண்ணுறேன்னு நானும் பார்க்குறேன்.”

மளமளவென சோபனா கொட்டி விட்டு திரும்பிக் கொள்ள ரோஷினி விழிவிரிய நின்றிருந்தாள். சில நொடிகளுக்குப்பிறகு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

அதைக்கேட்டு சோபனாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

“ஏய்.. என்ன நக்கலா?”

“இல்ல இல்ல” என்று சிரித்து வைத்தாள்.

“நீங்க சொல்லுறத கேட்டா சிரிப்பா இருக்கு அண்ணி. பாசமா இருக்க அண்ணனா? யாரு ரஞ்சித்தா? நாங்க பெருசா சண்டை போட்டுக்காதத வச்சு சொல்லுறீங்க. ஆனா அந்த பாசக்காரன் அண்ணன் தான் அவன் வாழ்க்கையோட முக்கியமான விசயத்த என் கிட்ட ஒரு வருசமா மறைச்சு என்னை யாரோவாக்கிட்டான்”

முடிக்கும் போது உதட்டில் ஒரு வேதனை புன்னகை தோன்றியது.

“அம்மா அப்பா அண்ணன தவிர உலகத்த பத்தி எதுவுமே தெரியாம வளர்ந்தவ நான். அவங்க போனதும் மொத்த உலகமும் ரஞ்சித் மட்டும் தான் ஆகிடுச்சு. அவனுக்கும் நான் மட்டும் தான் ஒரே ஒரு உறவு. சுத்தி எத்தனை பேரு இருந்தாலும் எங்களுக்கு நாங்க மட்டும் தான் எல்லாம்னு நினைச்சுட்டு இருந்தேன். அதுக்கு தான் அவ்வளவு பெருசா ஏமாந்தேன். வாய் விட்டு கேட்டேன். யாரையாச்சும் லவ் பண்ணுறியானு. அப்ப கூட சொல்லல. கல்யாணம் விசயம் வரவும் உண்மை வருது. இல்லனா இன்னும் பல வருசம் மறைச்சுட்டே வாழ்ந்துருப்பீங்க தான?”

இதற்கு சோபனா என்ன சொல்வாள்? அவள் தானே சொல்லக்கூடாது என்று சொன்னதே? அவர்களது அலுவலகத்தில் கூட இருவரும் ஒரே இடத்தில் தங்கியிருப்பதாக தான் தெரியும். ஒரே வீட்டில் என்று தெரியாது. எங்கே விசயம் கசிந்தால் சத்ருகணன் வந்து பிரித்து விடுவானோ என்ற பயம். அதோடு ரஞ்சித்திடம் சொன்ன பொய்யும் தெரிந்து விடுமோ என்று தான் யாருக்குமே சொல்ல விடாமல் தடுத்தாள். இப்போது அதைத்தான் ரோஷினி கேட்கிறாள்.

“அவன் பாசக்கார அண்ணன் தான். ஆனா நம்பிக்கை தான் சட்டுனு போச்சு. காதல் விசயமாச்சும் அன்னைக்கு பொண்ணு பார்க்க வர்ரப்போ தெரிஞ்சது. ஆனா லிவ் இன் உங்க அண்ணன் சொல்லி தான் எனக்கு தெரியும். ஆக மொத்தம் அவன பத்தி எல்லாமே அடுத்தவங்க தான் வந்து சொல்லனும் எனக்கு. இத பார்த்து நீங்க பொறாமை வேற படுறீங்களா?”

முடிக்கும் போது அவள் சிரித்தபடி கேட்க சோபனா இமைக்க மறந்தாள்.

“பாசமான புருஷன் கிடைச்சது உங்களுக்கு தான் அண்ணி. சொந்த தங்கச்சி நம்மல மட்டுமே உலகமா நினைச்சுட்டு இருக்க தங்கச்சி கிட்டயே எல்லாத்தையும் மறைச்சு உங்க சந்தோசத்த மட்டும் நினைக்கிற அளவு பாசம். இதுக்காக நான் வேணா உங்க மேல பொறாமை படலாம்”

சோபனாவிற்கு இதைக்கேட்டு சந்தோசப்பட முடியவில்லை. என்னவோ குற்ற உணர்வு போல் மனதை அழுத்தியது.

“அப்புறம் உங்க அண்ணன்.. அவரு கிட்ட பாசம் இல்லனு யாரு சொன்னா? எனக்கு தெரிஞ்சு ரஞ்சித் அளவு பாசம் அவரு கிட்டயும் இருக்கு. உங்க மேல இருக்க பாசத்துல தான் அந்த சுகப்ரியாவ தூக்கி போட்டாரு. உங்கள அவ காயப்படுத்திட்டானு தான் உங்க தாய் மாமா குடும்பத்தையே ஒதுக்கிட்டாரு. இதுக்கும் மேல பாசம் வேணுமா? ரஞ்சித் மாதிரி அவருக்கு பேச வராது தான். ஒத்துக்கிறேன். அவருக்கு கோபமா தான் பேச வருது. அதுக்காக பாசமே இல்லனு எப்படி முடிவு பண்ணீங்க? அப்படி பாசம் இல்லாம இருந்திருந்தா உங்க லிவ் இன் கதைய எப்பவோ உங்க பேரன்ட்ஸ் கிட்ட சொல்லிருப்பாரு. நீங்களும் ரஞ்சித்த பிரிஞ்சு போயிருப்பீங்க.”

சோபனா தலை கவிழ்ந்து அமர்ந்து விட்டாள்.

“உங்களுக்கு கிடைச்சுருக்கது நல்ல அண்ணன், நல்ல ஹஸ்பண்ட் தான் அண்ணி. உங்களுக்காக எதையும் செய்யுறவங்க தான் ரெண்டு பேரும். நீங்களா தான் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. சரியா யோசிங்க. இன்னும் கோபம் தான்னா அதையும் பேசிடலாம். இப்ப இல்ல. இன்னொரு நாள் பேசலாம்” என்று முடித்து விட்டு வெளியே வர ஹாலில் சத்ருகணன் ரஞ்சித் இருவரும் இருந்தனர்.

பேசியது கேட்டிருக்கும் என்று புரிந்தாலும் “வாங்கியாச்சா? வந்தா சொல்ல வேண்டியது தான?” என்று கேட்டபடி பையை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று விட்டாள்.

சத்ருகணன் ரஞ்சித்தின் தோளில் தட்டி விட்டு மனைவியின் பின்னால் சென்றான்.

தொடரும்.

Leave a Reply