அத்தியாயம் 29

Loading

ரோஷினியும் சத்ருகணனும் சமைத்து முடித்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் சோபனாவை சாப்பிட அழைத்தாள்.

“சூடா இருக்கும் போதே சாப்பிட்டுடலாம். ஈவ்னிங் நாங்களும் கிளம்பனும். இப்பவே சாப்பிட்டா டிராவல்ல ஈசியா இருக்கும்”

சோபனா பதில் சொல்லாமல் வந்து விட ரஞ்சித்தையும் அழைத்து அமர வைத்தாள்.

“உங்க அண்ணன் பண்ண கூத்துல சிக்கன் ஓவர் குக் ஆகிடுச்சு. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்றபடி வைக்க “என்ன பழிய என் மேல போடுற? கோழியோட தப்பு அது” என்றான் சத்ருகணன்.

“ஆமா.. உட்காருங்க முதல்ல” என்றவள் தானும் அமர்ந்தாள்.

சோபனா பேச நினைக்க சத்ருகணனின் கைபேசி இசைத்தது. சாப்பிட்டபடியே அவன் பேச அவனுக்கு தொந்தரவு தராமல் எல்லோரும் அமைதியாக சாப்பிட்டு முடித்து விட்டனர்.

சில மணி நேரத்தில் ஊருக்கு கிளம்பிய தங்கையின் கையைப்பிடித்துக் கொண்டான் ரஞ்சித்.

“சாரிமா” என்க ரோஷினி புன்னகைத்தாள்.

இதே தான் அன்றும் செய்தாள். அப்போது மன்னித்து விட்டதாக தான் நினைத்தான். அவளுக்குள் இவ்வளவு காயம் இருக்கும் என்று கவனிக்காமல் விட்டு விட்டான்.

“விடுணா.. எல்லாம் முடிஞ்சு போச்சு. அண்ணிய பார்த்துக்க. நீ பேசலனு அவங்களுக்கு ரொம்ப வருத்தம். என்ன கோபமா இருந்தாலும் பேசி தீர்த்துடு.”

“இல்லனா தீர்த்துட்டு கூட பேசலாம். என்னை மாதிரி” என்று சத்ருகணன் ரோஷினியிடம் முணுமுணுக்க அதிர்ந்து திரும்பி முறைத்து வைத்தாள்.

“நான் வேணா ஐடியா கொடுக்கவா?” என்று சத்ருகணன் புருவம் உயர்த்தி கேட்க “ஒரு ஆணியும் புடுங்க வேணாம். கிளம்பலாம். லேட்டாகிடும்.” என்று அவனை பிடித்து தள்ளி விட்டாள்.

“வர்ரோம் அண்ணி. எதுவும்னா நேராவே பேசுங்க. மனசுக்குள்ளயே இருந்தா எதுக்குமே முடிவு கிடைக்காது. அண்ணன் கிட்டயும் பேசுங்க. கொஞ்சம் நல்லவன் தான் அவனும். ரீச் ஆகிட்டு ஃபோன் பண்ணுறோம். ஓகே? பை”

கையாட்டி விட்டு அவள் காரில் ஏறிக் கொள்ள அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் நின்றிருந்தனர்.

ரஞ்சித் தங்கைக்காக வாங்கிய பொருட்களை காரில் ஏற்றி விட்டு திரும்ப “உன் தங்கச்சி சொல்ல வேணாம்னு சொல்லுறா. இருந்தாலும் சொல்லுறேன். அவ கூடவும் எனக்கு சண்டை தான். ஆனா பேசிலாம் தீர்க்கல. தலைகீழ் தான். டைம் வேஸ்ட் பண்ணாம என்ஜாய் பண்ணு மேன். முதல்ல அப்பா ஆகுறனா? மாமா ஆகுறனானு பார்க்க வெயிட்டிங்” என்று கூறி அதிர்ந்து நின்றவனை கண்டு கொள்ளாமல் காரில் ஏறி விட்டான்.

இருவருக்கும் கையாட்டி விட்டு கிளம்பிச் சென்று விட சோபனாவிற்கு பெருமூச்சு வந்தது.

ரோஷினியை அவள் உருவகப்படுத்தியது ஒன்று. ஆனால் ரோஷினி வேறு விதமாக இருக்கிறாள்.

இனி வேறு கோணத்திலும் பார்க்க பழக வேண்டும் போலும்!

இரவு சோபனா படுத்திருக்க ரஞ்சித் அறைக்குள் வந்தான். காதில் சத்ருகணன் வார்த்தை ஒலித்தது.

‘பேசி தான் தீர்க்கனும்னா நடக்காது போலயே.. அவன் ரூட்டையே எடுத்தா என்ன? மலையேறுனாலும் மச்சான் தயவு கண்டிப்பா வேணும்.’

“என்ன நிக்கிற?” என்று அவன் முகத்தை பார்த்து விட்டு சோபனா எழுந்து விட “யோசிக்கிறேன்” என்றான்.

இத்தனை நாட்களில் இன்று தான் அவளது கேள்விக்கு சரியாக பதில் சொல்லி இருக்கிறான்.

“எத பத்தி?”

“உன் அண்ணன் ஒன்னு சொன்னான். அத பத்தி”

“என்னை திட்டுனதா?” என்று கேட்டவளின் குரல் உள்ளே போனது.

அதை கவனித்தாலும் கவனிக்காதது போல் “இல்ல. போகும் போது ஒன்னு சொன்னான். அது சரி வருமானு யோசிக்கிறேன்” என்றான்.

“மறுபடியுமா? என்ன சொன்னான்?”

“பேசி தீர்க்க முடியலனா தீர்த்துட்டு பேசுறது பெஸ்ட்னு சொன்னான்”

“ஹான்?”

சோபனா புரியாமல் பார்க்க ரஞ்சித் அவள் முகத்தை இரு கைகளில் ஏந்தினான்.

“எனக்கும் அந்த ஐடியா ரொம்ப பிடிச்சுருக்கு” என்றவன் இதழ்களில் முத்தமிட அதிர்ந்து பார்த்தாள்.

பிறகு தான் சத்ருகணன் சொன்னது விளங்கியது அவளுக்கு. அண்ணனின் மீது நன்றி வந்தது. அடுத்த நொடி அது மறந்து கணவன் மீது காதல் வர கண்ணை மூடிக் கொண்டு அவனோடு கலந்தாள்.

°°°

“இப்ப தான் மயக்கத்துல இருந்து கண் முழிச்ச மாதிரி இருக்கு..” என்று புலம்பிக் கொண்டே காபியை உள்ளே இறக்கினாள் சுப்ரியா.

தனுஜா ஒரு பக்கம் நாற்காலியில் சாய்ந்து தேனீரை குடித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் அதே எண்ணம் தான்.

ரோஷினி மட்டும் அமைதியாக இருவரையும் வேடிக்கை பார்த்தாள்.

“இவ்வளவு வேலை இருக்கும்னு எதிர்பார்க்கல. ஆனா கடைசியில நம்ம பாஸ் ஜெயிச்சுட்டாருல? இப்ப தான் நிம்மதியா இருக்கு”

அவர்களது விளம்பரங்கள் இனி பெரிய தொலைகாட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும். அதற்கான வேலைகளில் தான் எல்லோரும் ஓய்ந்து போயிருந்தனர்.

“எல்லாம் நல்லபடியா தொடங்கிருக்கு. இனி இத மெயிண்டைன் பண்ணுறதுல தான் இருக்கு நம்ம வேலை” என்று ரோஷினி சொல்ல சுப்ரியாவும் தலையாட்டிக் கொண்டாள்.

“பட் இவ்வளவு தூரம் வேலை இருக்கும்னு நினைக்கல. நாம மூணு பேர் மட்டுமில்லாம இன்னும் ரெண்டு பேர் இருந்தா வேலை சீக்கிரம் முடிஞ்சுருக்கும்” என்று தனுஜா சொல்ல சுப்ரியா ரோஷினியை பார்த்தாள்.

“நீ பாஸ் கிட்ட சொல்லேன். இன்னும் ரெண்டு பேர நம்ம டீம்ல போட சொல்லி”

“சொல்லுறேன்”

“உன் குடும்ப விசயத்த பேசவே கூடாதுனு நினைச்சேன். இருந்தாலும் கேட்குறேன். இவ்வளவு தூரம் எங்களோட அலையுறியே உன் மாமியார் எதுவும் கேட்கலயா? இல்ல உங்க கம்பெனி வளர்ச்சிக்கு தானனு கண்டுக்காம இருக்காங்களா?”

“அதெல்லாம் இல்லகா. நாங்க தனியா தான் இருக்கோம்.”

“தனியாவா?”

“ஆமா. இந்த ரெண்டு மாசமா நாங்க தனியா தான் இருக்கோம். அதுனால பெருசா எதுவும் பிரச்சனை இல்ல”

“அப்ப வீட்டுல நீ தான் வேலை செய்வியா?”

“ஆமா. அவரும் செய்வாரு. சோ பழகிடுச்சு”

“வேலைக்கு ஆள் வைக்கலயா?” – தனுஜா.

“அதெல்லாம் தோணல. நாங்களே செஞ்சுக்கிறோம்.”

தலையாட்டி வைத்ததோடு வேறு எதையும் கேட்கவில்லை. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. தன் குடும்ப விவரங்களை ரோஷினியும் அவர்களிடம் சொல்லவில்லை. அவர்களும் மூக்கை நுழைத்து கேட்கவும் இல்லை. அதைப்பற்றி பேச நேரம் கிடைக்கவில்லை என்பதும் முக்கிய காரணம்.

வேலை ஒரு மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்க அது இரண்டு மாதங்களை முழுங்கியிருந்தது.

இன்னும் சத்ருகணனுக்கு வேலை மிச்சம் இருக்கிறது. அதனால் தேன்நிலவு பயணத்தை தள்ளி வைத்திருந்தனர்.

இன்று வேலை முடிந்ததும் முதலில் வீட்டுக்கு சென்று விட்டாள். சில நாட்களாக வீட்டில் சமைக்க நேரம் கிடைக்காததால் இன்று சமைக்கும் வேலையில் இறங்கினாள். இடையிலேயே பாட்டி, அண்ணன், சித்தி என்று எல்லோரிடமும் பேசி முடித்தாள்.

அவளது வேலை முடிய சத்ருகணன் வந்து சேர்ந்தான்.

“போய் ஃப்ரஸ்ஸாகிட்டு வாங்க. ஒன்னா சாப்பிடலாம்”

“நீ செஞ்சியா? ஏன் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான?”

“சீக்கிரமே வந்துட்டேன். அதான் பண்ணேன்.”

“ஓகே இரு வர்ரேன்” என்று விட்டு சென்றவன் பத்து நிமிடத்தில் கீழே வந்து விட்டான்.

இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்தனர்.

“ரோஷீ…” என்று சத்ருகணன் அவளை அணைத்துக் கொண்டு அமர “என்னவாம் ரோஷீக்கு?” என்று கேட்டாள்.

“இன்னைக்கு மீட்டிங் நல்லபடியா முடிச்சுருக்கேன். பாராட்ட மாட்டியா?”

“அதுக்கு எல்லாம் பிரிப்பேர் பண்ணி கொடுத்தது நான். எனக்கு தான் பாராட்டு வரனும்”

“பண்ணிட்டா போச்சு” என்றவன் அவளை புகழ்ந்து கொண்டே ஒவ்வொரு வார்த்தைக்கும் முத்தமிட ஆரம்பித்தான்.

ரோஷினி வெட்கத்தோடு அதை எல்லாம் பெருமையாக வாங்கிக் கொண்டாள்.

“இவ்வளவு கொடுத்தேன்ல? கொஞ்சூண்டு உழைச்ச எனக்கும் கொடுக்கலாம்ல?” என்று கேட்டு வாங்கிக் கொண்டு அவளது மடியில் படுத்துக் கொண்டான்.

“நாளைக்கு பாட்டிய பார்க்க போகனும். நீங்களும் வர்ரீங்களா?”

“நான் வரலமா.. நீயே போயிட்டு வா. நான் வேணும்னா தனியா போய் பார்த்துக்கிறேன்”

அவனது பதிலைக்கேட்டு அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

வேலையின் நடுவே ஒருநாள் ரோஷினி அவனை பாட்டியிடம் அழைத்துச் சென்று விட்டாள்.

அன்று கிடைத்தது அவனுக்கு பெரிய பாடம்.

“இவளயும் உன்னை மாதிரி வேலை பின்னாடி அலைய வச்சுட்டு இருக்கியா? ஏன்டா நீ பார்த்தா ஆகாதா? இங்க இருந்தத விட ரொம்ப இளைச்சு போயிட்டா. பேசாம ரோஷினி இங்க கொண்டு வந்து விட்டுரு. நானாச்சும் அவள கவனிப்பேன்” என்று ஆரம்பித்து பேரனை வறுத்தெடுத்து விட்டுத்தான் அனுப்பி வைத்தார்.

அதிலிருந்து ரோஷினியோடு சென்று திட்டு வாங்காமல் தப்பித்துக் கொள்ளவே பார்த்தான்.

கௌசல்யாவிற்கு கூட வருத்தம் தான். மருமகளும் இப்படி வேலையால் அலைகிறாளே என்று. அவரும் தன்னோடு வந்து தங்கும் படி கேட்டுப் பார்த்தார்.

சத்ருகணன் கூட ஒருவகையில் சம்மதித்தான். ஆனால் ரோஷினி சம்மதிக்கவில்லை.

“அங்க போய் இருக்கது பிரச்சனை இல்ல. ஆனா நடு ராத்திரி வீட்டுக்கு வந்தாலும் சத்தமில்லாம படுத்து தூங்கிடுறீங்க. காலையில எவ்வளவு சீக்கிரமா வேணும்னாலும் எந்திரிச்சு கிளம்புறீங்க. நீங்க என்ன செய்யுறீங்க? எங்க போறீங்கனு எல்லாம் எனக்குத்தெரியும். ஆனா அங்க இருந்தா அத்தை நிப்பாட்டி கேள்வி கேட்பாங்க. மாமா விசாரிப்பாரு. நின்னு நின்னு பதில் சொல்லிட்டே இருந்தா உங்க வேலை கெடும். இங்க இருக்க மாதிரி போயிட்டு வந்துட்டு இருக்க முடியாது. வீட்டு வேலை என்ன பெரிய வேலை? சமைக்க பிடிக்கலனா வெளிய வாங்கிடுறோம். துவைக்கிறது, சுத்தம் பண்ணுறது எல்லாம் லீவ் நாள்ல செஞ்சுடுறேன். அவ்வளவு தான். அங்க அதெல்லாம் முடியாது. மருமகளா நானும் அத்தைக்கு ஹெல்ப் பண்ணனும். மகனா நீங்களும் பொறுப்பா நடக்கனும். இதெல்லாம் இப்ப நம்மலால முடியுமா?”

அவ்வளவு தான் அதற்கு மேல் அந்த பேச்சே வரவில்லை. இருவரும் தங்களது வீட்டிலேயே இருந்து கொண்டனர்.

“பாட்டி திட்டாம நான் பார்த்துக்கிறேன்”

“ஒன்னும் வேணாம். நீ போய் பார்த்துட்டு வா. நான் டைம் கிடைச்சதும் போயிக்கிறேன்” என்று முடித்து விட்டான்.

தொடரும்.

Leave a Reply