அத்தியாயம் 4

Loading

வாங்கி வந்த பொருட்களை கொண்டு பாட்டியின் உதவியுடன் சமைத்து சாப்பிட்டு விட்டு படுத்த ரோஷினிக்கு தூக்கம் அடித்து போட்டது போல் வந்தது. நன்றாக தூங்கி எழுந்து அடுத்த நாளும் ஊரை சுற்றி வந்தாள்.

இரண்டு நாட்களும் ஊரை பற்றி அறிவதும் சமைத்து பழகுவதுமாக கடந்து விட வேலையில் சேரும் நாளும் வந்தது.

காலையில் சொன்ன நேரத்திற்கு முன்பே அலுவலகம் சென்று சேர்ந்து விட்டாள்.

‘நல்ல வேளை.. முன்னாடியே ஊர சுத்தி பார்த்ததால டிராஃபிக்ல மாட்டாம வந்துட்டேன்’ என்று தன்னை தானே பெருமையாய் நினைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

ரிசப்ஷனில் வேலைக்கான அனுமதி கடித்தத்தை கொடுத்து விசாரிக்க “செகண்ட் ஃப்ளோர் போங்க. அங்க மீட்டிங் ரூம்ல வெயிட் பண்ணுங்க” என்று அனுப்பி வைத்தாள்.

உடனே சென்று பார்க்க அவளுக்கு முன்பே இரண்டு பேர் இருந்தனர். எல்லோரும் அன்று வேலையில் சேர வந்தவர்கள். பல கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். அடுத்தடுத்து ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர்.

அந்த ஹால் முழுவதும் நிரம்பி விட சரியான நேரத்திற்கு வேலையை பற்றி பேச ஒருவர் வந்தார். டூரிஸம் பற்றி பேசி விட்டு அவர்களது நிறுவனத்தை பற்றிய விவரங்களை சொல்லி முடித்ததும் மற்றவர் வந்து அவர்களுடைய வேலை எப்படி இருக்கும் என்று விளக்கினார்.

அங்கிருந்தவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழு வாடிக்கையாளர்களிடம் பேசுவது போன்ற வேலைகளில் வர மற்ற குழு நிர்வாகத்தில் வந்தது.

ரோஷினி நிர்வாக குழுவில் வந்தாள். அவள் படித்திருப்பதும் அதற்கு தான். நிர்வாகத்தை பற்றிய வேலைகளை சொல்லிக் கொடுத்தனர்.

அது தான் அடுத்த ஒரு மாதத்திற்கும் நடந்தது. சிலர் சட்டென கற்றுக் கொள்ள சிலர் திணற சிலருக்கு சுத்தமாய் வரவில்லை. எல்லோரையும் தட்டிக் கொடுத்து சொல்லிக் கொடுத்தனர்.

ரோஷினி அலுவலகத்தில் எப்படி பொறுப்பாய் வேலையை கற்றுக் கொண்டாளோ அதே போல் தான் வீட்டில் பாட்டி சொல்லிக் கொடுக்கும் சமையலை பொறுப்பாய் கற்றுக் கொண்டாள்.

இங்கிருந்து தனி வீட்டுக்கு சென்றால் தானாய் சமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவளுக்கு. இரண்டையும் கற்றுக் கொள்வதில் நேரம் பறந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது சத்ருகணன் எண்ணம் வந்து போகும்.

‘அன்னைக்கு வந்தவன்.. அடுத்து எட்டிக் கூட பார்க்கல.. ஆஃபிஸ்ல கூட அவன பார்க்கவே முடியல.. என்ன பண்ணிட்டுருப்பான்? பாட்டி சொல்லுறத பார்த்தா அவனுக்கு கல்யாணம் ஆகி இருக்க வாய்ப்பில்ல. சுகப்பிரியா அவனுக்கு யாரு? தங்கச்சியா?’ என்ற கேள்விகள் அவளுக்குள் ஓடிக் கொண்டே தான் இருந்தது.

அந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதம் கடந்திருந்தது. வேலை நாள் போக மற்ற நாளெல்லாம் வெளியே தனியாய் அலைந்து வேண்டியதை வாங்கிக் கொள்வது அவளது வேலையாய் இருக்க பாட்டியும் அதற்கு தடை சொல்லவில்லை. ஆனால் இரவு எட்டு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்பது கட்டளை. அதற்குள் வேலையை முடித்து விட்டு ஓடி வந்து விடுவாள்.

இன்றும் வந்து முகம் கழுவி விட்டு பாட்டி சொன்ன பக்குவத்தில் மீன் குழம்பு வைத்துக் கொண்டிருந்தாள்.

“கொதிச்சு எண்ணெய் பிரிஞ்சு வரனும். அது வரை உட்கார வேண்டியது தான்”

“நாளைக்கு இதையே லன்ச்க்கு எடுத்துட்டு போகனும். நல்லா இருக்குமா?”

“பழைய மீன் குழம்பு நல்லா இருக்குமானு கேட்குற பாரு? நாளைக்கு சாப்பிட்டு பாரு உனக்கே தெரியும்”

“நீங்க சொன்னா சரி தான்”

“உன் அண்ணன் என்னைக்கு வர்ரான்?”

“நாளைக்கு நைட் கிளம்புறேன்னு சொன்னான். ஃப்ளைட்ல சீக்கிரம் வந்துடுவான்”

“இப்பவாச்சும் அவனுக்கு நேரம் கிடைச்சதே. ஆனா உன் அண்ணனுக்கு உன் மேல பாசம் தான். என் பேரன் பேத்தி ரெண்டும் தான் என்ன செய்யுதுங்கனே தெரியாது”

“உங்களுக்கு பேத்தி இருக்கா பாட்டி?”

“இருக்கா. கண்ணனுக்கு தங்கச்சி. அவளும் பெங்களூர்ல தான் வேலை செய்யுறா. வீட்டுக்கும் வர மாட்டா. ஃபோனும் பண்ண மாட்டா”

“ஓஹோ”

“கண்ணன் பக்கத்துல இருந்தே வர மாட்டான். சோபனா தூரமா போயிட்டு வர மாட்டா. ரெண்டும் பாட்டினு ஒருத்தி இருக்கதையே மறந்துடுச்சுங்க”

‘சோபனா! அப்ப சுகப்பிரியா யாரு?’ என்ற கேள்வி தோன்றினாலும் கேட்காமல் விட்டாள்.

அதே நேரம் சோபனா நகம் கடித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ரஞ்சித்தை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. அவளுடைய பொருளை அந்த ரோஷினி பறித்துக் கொள்வாளோ? என்ற பயம் அவளுக்கு.

‘லீவ் போட்டு தங்கச்சிய பார்க்க போறான். எனக்கும் தான் ஒரு மாடு அண்ணனா வந்து தொலைச்சுருக்கே.. உயிர வாங்குறதுக்கு’ என்று மனதில் வறுத்துக் கொட்டினாள்.

ரஞ்சித் நாளை ஊருக்கு கிளம்புவதாக சொன்னதிலிருந்து மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.

“நாளைக்கே போகனுமா? அதான் உன் தங்கச்சி பத்திரமா இருக்கானு தெரியும்ல? போய் பார்த்தே ஆகனுமா?”

“ஆமா சோபி.. அவள பார்த்து பல மாசம் ஆன மாதிரி இருக்குது”

“என்னை தனியா விட்டுட்டு உன் தங்கச்சிய தேடி போற.” என்றவளின் குரலில் பொறாமை வெளிப்படையாக தெரிய ரஞ்சித் சிரித்து வைத்தான்.

“ரொம்ப பொசசிவ் ஆகாத. அவ என் தங்கச்சி. நீ என் லவ்வர். ரெண்டும் வேற வேற”

“பார்க்குறேன்.. இந்த பாசம் எத்தனை நாளைக்குனு”

“ஏன்? இதுல எதுவும் மாறாது”

“அவளுக்கு கல்யாணம் நடந்து புருஷன் வந்துட்டா என்ன செய்வியாம்?”

“அப்பவும் அவ என் தங்கச்சி இல்லங்குறது மாறாதே.. அப்புறம் பாசம் எப்படி மாறும்?”

சிரித்துக் கொண்டே கேட்டவனை திட்ட முடியாமல் வாயை மூடிக் கொண்டாள். அவளுக்கு கிடைக்காத அண்ணன் பாசம் அந்த ரோஷினிக்கு கிடைக்கிறதே என்ற கோபம் அவளுள் கொழுந்து விட்டு எரிந்தது.

மறுநாள் இரவு ரஞ்சித் கிளம்பி விட சோபனா கோபத்தோடு அமர்ந்திருந்தாள்.

“பெரிய தங்கச்சி.. நாலு மாசம் பார்க்காம இருக்க முடியாதாம்” என்று எரிச்சலாக நினைக்கும் போதே கைபேசி அவளது அண்ணனின் பெயரை காட்டி அதிர வைத்தது.

“என்ன இவன் கூப்பிடுறான்?” என்று பதறியவள் அவசரமாக மூச்சை இழுத்து விட்டு விட்டு எடுத்து காதில் வைத்தாள்.

“ண்ணா”

“இன்னும் கொஞ்ச நேரத்துல கார் வரும். கிளம்பி ஊருக்கு வா”

“ஊருக்கா? ஏன்?”

“வந்து தெரிஞ்சுக்க.. உன் வீட்டு அட்ரஸ் கொடுத்துட்டேன். வந்துடு”

“வீட்டு.. நான் வெளிய இருக்கேன்”

“இந்த நேரத்துலயா?”

“இ.. இங்க ஒரு ஃப்ரண்டுக்கு பர்த்டே.. நைட் செலிபிரேட் பண்ணலாம்னு வந்தோம்”

“அப்ப அந்த அட்ரஸ கொடு”

“இல்ல.. நீ டிரைவர் நம்பர அனுப்பு. நானே சொல்லிக்கிறேன்”

“ஓகே” என்று வைத்து விட்டான்.

சோபனா கைபேசியை வெறித்துப்பார்த்தாள். ரஞ்சித் ரோஷினியோடு பேசும் போது கேட்டிருக்கிறாள். அடிக்கடி சிரித்துக் கொண்டே தான் பேசுவான். ஆனால் இவன்? முகத்தில் முள்ளை மட்டும் தான் கட்டவில்லை. அவ்வளவு கொடூரமாக பேசுகிறான்.

“எனக்கு மட்டும் ஏன் இப்படி அமையுது? ச்சை”

எரிச்சலோடு அமர்ந்திருக்க டிரைவரின் எண் வந்து விழுந்தது. இனி தாமதிக்க முடியாது. அவசர அவசரமாக. துணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

டிரைவரை வேறு இடத்தில் காத்திருக்க சொல்லி விட்டு டாக்ஸியில் சென்று சேர்ந்தாள்.

டிரைவர் எதையும் வெளியே சொல்பவன் இல்லை தான். அவனிடம் யாரும் கேட்க போவது இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையோடு கிளம்பிச் சென்றாள்.

காரில் ஏறியதும் சென்னை நோக்கி பயணம் ஆரம்பிக்க அவளுக்கு இதை ரஞ்சித்திடம் சொல்வதா? வேண்டாமா? என்று குழப்பமாக இருந்தது. ஆனாலும் கைபேசியில் செய்தி ஒன்றை அனுப்பி வைத்தாள்.

“தனியா இருக்க பிடிக்கல.. அதான் நானும் ரெண்டு நாள் லீவ் போட்டு அம்மா அப்பாவ பார்க்க போறேன். வந்ததும் சொல்லுறேன். டவர் கிடைக்காம பேசலனா கோச்சுக்காத” என்று அனுப்பி வைத்தாள்.

‘அவனும் சென்னையில தான் இருக்கான். பார்த்தா எதாவது நினைப்பானா? ஆனா நாம வீட்டுக்கு போயிட்டு உடனே கிளம்பிடனும். ரொம்ப தங்க கூடாது’ என்று நினைத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தாள்.

ஆனால் அங்கு காத்திருந்ததோ வாழ்நாள் பூட்டு.

தொடரும்.

Leave a Reply