அத்தியாயம் 8
![]()
சத்ருகணன் பார்த்த பார்வைக்கு சோபனாவால் பதில் சொல்ல முடியவில்லை. தன் பார்வையை தளைத்துக் கொள்ள கௌசல்யா அதிர்ச்சியுடன் மகளை பார்த்தார்.
“சோபி.. நீ யாரையும் லவ் பண்ணுறியா?”
தாயின் அதிர்ச்சியான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் உதட்டை கடித்தாள்.
“இப்ப ஏன் இவ்வளவு டென்சனா கேட்குற? அப்படி லவ் பண்ணா எந்த தப்பும் இல்ல. பையன் நல்லவனா இருந்தா போதும். பேசாம இரு” என்று மனைவியை அதட்டி விட்டு மகளை பார்த்தார் குமாரவேல்.
மகளை பேச வைக்கும் முயற்சி அது. யார் எவரென தெரிந்தால் அல்லவா அடுத்து யோசிக்க முடியும்?
“சோபி.. இது உண்மையா?” என்று கேட்க கண்கலங்க தலையை மட்டும் ஆட்டினாள்.
எதற்கு கண்கள் கலங்குகிறது என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் என்னவோ அழுது விட வேண்டும் என்று தான் தோன்றியது.
“யாரு அது? உன் கூட வேலை பார்க்குறவனா?”
இதற்கும் தலையாட்டினாள்.
“அவன இங்க கூப்பிடு பேசனும்” என்றான் சத்ருகணன் இடையில் புகுந்து.
மீண்டும் ஒரு முறை தூக்கி வாரிப்போட நிமிர்ந்தாள் சோபனா.
‘ரஞ்சித்த கூப்பிடுறதா? அவனுக்கு நான் யாருனே தெரியாதே’ என்று பதட்டமானாள்.
“அது தான் நல்லது. அந்த பையன கூப்பிடு. பேசி பார்க்கலாம்.” என்ற குமாரவேல் கண்கலங்கிய மகளை தேற்றப் பார்த்தார்.
கௌசல்யாவிற்கு என்னவோ போல் இருந்தது. மகள் எதோ நம்பிக்கையை உடைத்தது போல் மனம் வலித்தது. சட்டென குமாரவேலை போல பேச முடியவில்லை. மௌனமாக அமர்ந்திருந்தார்.
“அவன் நம்பர் சொல்லு” என்று சத்ருகணன் தன் கைபேசியை எடுத்துக் கொண்டு கேட்க சோபனாவிற்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
“சொல்லு” என்று மீண்டும் கேட்க “வே.. வேணாம்.. நானே பேசிட்டு செல்லுறேன்” என்று பயத்தோடு தந்தையை பார்த்தாள்.
“ஓகே விடு. நீயே பேசு. ஆனா நாளைக்கு காலையில வரை தான் நேரம். அதுக்குள்ள அந்த பையன பத்தி எனக்கு முழு விவரமும் தெரியனும். இல்லனா அவனே நேர்ல வரனும். இந்த அளவுக்காச்சும் எங்க பேச்ச கேட்பனு நினைக்கிறேன். இப்ப போ”
தந்தை சொன்னதும் சோபனா தாயை ஒரு நொடி பார்த்து விட்டு உடனே அங்கிருந்து ஓடியிருந்தாள்.
குமாரவேல் பெருமூச்சு விட்டார். அவராலும் நம்ப முடியவில்லை தான். ஆனால் விசயத்தை உடனே சரி செய்ய வேண்டிய கடமையும் இருந்ததே.
“உனக்கு ஏற்கனவே தெரியுமாடா?” என்று கௌசல்யா கேட்க சத்ருகணன் தலையாட்டினான்.
“எங்க கிட்ட சொல்லவே இல்லயே”
“அவளா சொல்லுவானு நினைச்சேன்”
“உனக்கு எப்படி தெரியும்? எங்க பார்த்த?”
“எல்லாத்தையும் அவளே சொல்லட்டும்மா. நான் கிளம்புறேன்”
“இருடா. இப்ப எங்க கிளம்புற?”
“பாட்டிய பார்க்க போறேன்.”
“உன் பாட்டி மேல உனக்கு ரொம்ப தான் அக்கறை” என்று கௌசல்யா நொடித்துக் கொள்ள “உங்க மாமியார் மருமக சண்டைக்காக நான் பாட்டிய பார்க்காம இருக்க முடியாது.” என்றவன் எழுந்து நின்றான்.
“அம்மா ஹீட்டர் சரியா வேலை செய்யலனு சொன்னாங்க. அதையும் என்னனு பார்த்துட்டு வா” என்று குமாரவேல் சொல்ல தலையாட்டி விட்டு கிளம்பினான்.
மனதில் தங்கை செய்த காரியம் மிகவும் உறுத்தியது.
பெங்களூரில் வேலையில் சேர்ந்த போது ஹாஸ்டலில் தான் தங்க வைத்தனர். சில மாதங்களாக மகள் சரியாக பேசுவது இல்லை என்று கௌசல்யா வருத்தப்பட சத்ருகணனே தங்கையை தேடிக் கிளம்பி இருந்தான்.
அப்போதுதான் தெரிந்தது. சோபனா ஹாஸ்டலை விட்டு எப்போதோ சென்று விட்டாள் என்று கூறி விட்டனர்.
முதலில் சற்று பயம் தான். ஆனால் உடனே சுதாரித்து வேலை செய்யும் இடத்திற்குச் சென்றான். அங்கு ரஞ்சித்தோடு அவளை பார்த்து விட்டான்.
ஊர் சுற்றி விட்டு இருவரும் ஒன்றாக வீட்டுக்கு செல்லும் வரை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அதே வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்த போது அவன் அடைந்த அதிர்ச்சியை விட வேதனை தான் அதிகம்.
தன்னுடைய தங்கையா இப்படி? காதலித்தால் கூட தவறில்லை தான். ஆனால் திருமணமே செய்யாமல் ஒருவனோடு ஒரே வீட்டில் குடும்பத்திற்கு தெரியாமல் வாழ்கிறாள் என்றால்?
அன்றிலிருந்து தங்கையிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தான். அவன் நினைத்தால் கையும் களவுமாக பிடித்து ரஞ்சித்தை அடித்து தங்கையை இழுத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் தங்களை மதிக்காதவளை அப்படி இழுத்து வந்தால் மட்டும்?
மீண்டும் கட்டவிழ்த்து ஓடத்தான் துடிப்பாள். அதை விட விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று நினைத்தான். தலைக்கு மேல் போய் விட்டது. போகும் வரை போகட்டும். தானாக வரும் போது பார்க்கலாம் என்று காத்திருக்க இதோ திருமண பேச்சு வந்து விட்டது.
அந்த ரஞ்சித்தின் மீது என்னவோ கொலை வெறி தான் வந்தது. அடுத்த வீட்டு பெண்ணோடு பெற்றோருக்கே தெரியாமல் வாழ்கிறானே? இவனை எல்லாம் என்ன செய்யலாம்? கையில் கிடைத்தால் அடித்து உதைக்கும் வெறி தான் மிச்சமிருந்தது.
சோபனாவை பற்றிய எண்ணத்துடனே பாட்டி வீட்டுக்கு சென்று காரை நிறுத்த உள்ளே இருந்து அழகாக சிரிப்பு சத்தம் கேட்டது.
சட்டென இருந்த அழுத்தம் எல்லாம் பறந்து போக ஆர்வமாக இறங்கி உள்ளே சென்றான்.
பழைய படம் ஒன்று ஓட அதை பார்த்துக் கொண்டு பாட்டியோடு ரோஷினியும் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்த காட்சியே சத்ருகணனுக்கு அமைதியை தந்தது.
“பாட்டி” என்று அழைத்ததும் உடனே இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
சத்ருகணனை பார்த்ததுமே ரோஷினி சட்டென எழுந்து விட அவனுக்கு அது பிடிக்கவில்லை.
‘இதென்ன ஆஃபிஸா? எந்திரிச்சு நிக்கிறா?’ என்று சிறு எரிச்சல் வந்தாலும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே வந்தான்.
“வா கண்ணா.. இப்ப தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். நான் கூப்பிட்டா தான் வரனும்னு இருக்க”
“நீங்களும் சரியா மாசத்துக்கு ஒருக்கா கூப்பிடுறீங்களே.” என்றவன் அங்கிருந்து நழுவ பார்த்த ரோஷினியை கவனித்து விட்டான்.
“ரோஷினி.. தண்ணி கிடைக்குமா?” என்று கேட்க சட்டென நின்றவள் உடனே தலையாட்டி விட்டுச் சென்றாள்.
“இப்ப ஹீட்டர் என்னாச்சுனு பார்க்கலாமா?”
“அதுக்கு அவசரமில்லை. இப்படி உட்காரு” என்று அமர வைத்தவர் “ரோஷினி வேற வீடு பார்க்கனும்னு சொல்லுறா. பக்கத்துல பாதுகாப்பான வீடு எதாவது உனக்கு தெரிஞ்சா சொல்லு” என்றார்.
“வீடா? ஏன் இங்க இருக்கதுக்கு என்ன?”
“இங்க ஒரு மாசம் மட்டும் தான்னு சொல்லித்தான் வந்தா. இப்ப ஒரு மாசம் முடிஞ்சதே”
“அதுனால என்ன? இதுக்கு மேல இருக்க கூடானு பாண்ட் பேப்பர்ல சைன் எதுவும் வாங்கிட்டீங்களா?”
“அப்படி இல்லடா. அவ போக ஆசைப்படுறா. அதுவும் நல்லது தான? தனியா அவளுக்குனு வாழனும்ல? இங்க இருக்கதால என்னை பார்க்க வர்ரவங்க முன்னாடி அவ நிக்க கூட மாட்டேங்குறா. அவளோட ஃப்ரண்டுனு யாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர முடியாது. தனியா இருந்தா அவளோட அண்ணன் கூட அவளோட தங்குவான்”
‘ஓஓ.. இவளுக்கு அண்ணன் வேற இருக்கானா?’ என்று நினைத்தவனுக்கு அவள் தனியாக வீடு பார்ப்பது மட்டும் என்னவோ பிடிக்கவே இல்லை. தங்கை ஒருத்தி தனியாக இருந்து செய்த காரியம் போல் இவளும் செய்வாளோ? என்ற பயம்.
“அவ உனக்கு யாரு? அவ என்ன செஞ்சா உனக்கென்ன?” என்று கேட்ட மூளையை பற்றிய கவலை அவனுக்கு இல்லை.
“நான் வேணா சொல்லி பார்க்குறேன் பாட்டி.”
“சொல்லிப்பாரு. ஆனா போகனும்னு நினைக்கிற புள்ளைய புடிச்சு வைக்கவும் மனசு வரல. என் சொந்த பேத்தி பேரனுக்கே என் கூட இருக்க பிடிக்கல. ரோஷினிய எப்படி என் கூட வச்சுருக்கது?”
“கேப்ல எங்கள குத்துறீங்க? நான் அவ கிட்ட பேசுறேன் இருங்க”
“டேய் நீ பாஸ்னு அதட்டாத”
“பாட்டி” என்று அழுத்தி சொல்லி முறைத்து விட்டு ரோஷினியை தேடிச் சென்றாள்.
தண்ணீரை எடுக்க போனவள் வெளியே வரவே இல்லை.
“ஹலோ.. தண்ணி கேட்டேனே?” என்று கேட்டுக் கொண்டே சத்ருகணன் உள்ளே வர “ஹால்ல உங்க முன்னாடியே இருந்ததே பார்க்கலயா?” என்று கேட்டு வைத்தாள்.
கவனித்தான் தான். ஆனால் அவளிடம் ஆரம்பிக்க எதாவது வேண்டுமே.
“நான் உன் கிட்ட தான கேட்டேன்?”
“இது ஆஃபிஸ் இல்ல சார்.. நான் உங்களுக்கு சர்வ் பண்ணனும்னு இல்ல. முன்னாடி இருக்கத நீங்களே எடுத்து குடிக்கலாம்”
அவளது பேச்சில் உதாசினம் அப்பட்டமாக தெரிய ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று தான் யோசித்தான்.
“சோ நான் கேட்டா தண்ணி கூட கொடுக்க மாட்ட? ஏன்?”
ரோஷினி அவனை புரியாமல் பார்த்து விட்டு “இப்ப இங்க ஏன் வந்தீங்க?” என்று கேட்டு வைத்தாள்.
“என் கேள்விக்கு இது பதில் இல்லையே?”
“பதில் சொல்ல விருப்பமில்லனு நினைச்சுக்கோங்க.” என்றவள் விருட்டென அங்கிருந்து நகர “ரோஷினி” என்று அதட்டலோடு நிறுத்தினான்.
அவளது கால்கள் உடனே நின்று விட்டது. அதை கண்டு அவளுக்கே கடுப்பு தான்.
“உன் கோபம் என்னனு எனக்கு புரியல. ஆனா நீ வேற வீடு பார்க்குறதா பாட்டி சொன்னாங்க. அத பேச தான் வந்தேன்”
“அத பத்தி நீங்க என்ன பேசுறது?”
“ரோஷினி.. உனக்கு எதுலயோ கோபம்னு தெரியுது. அதுக்காக எல்லாத்துக்கும் எடுத்தெறிஞ்சு பேசனும்னு இல்ல. பாட்டி பாதுகாப்பான வீடு எதுவும் பக்கத்துல இருந்தா சொல்லுனு கேட்டாங்க. அத தான் பேச வந்தேன்”
ஒரு நொடி அமைதியாக இருந்தவள் “அப்படி எதாவது தெரியுமா?” என்று இறங்கிய குரலில் கேட்டாள்.
“இருக்கு.. ஒன்னே ஒன்னு.”
“எங்க?”
“இங்க! இந்த வீடு மட்டும் தான்!”
ரோஷினி ஒரு நொடி தரையை பார்த்து விட்டு மறுப்பாக தலையசைத்தாள்.
தொடரும்.
