அத்தியாயம் 7
![]()
ஜீவிதாவிற்கு யாதவ் கிருஷ்ணன் சொல்வதை நம்ப முடியவில்லை. அவனை அதிர்ச்சியோடுப் பார்த்தாள்.
“என்ன? அவங்களுக்கு பைத்தியம் தான். நம்ப முடியலயா?”
“முதல்ல பேய். இப்போ பைத்தியமா?”
“முதல்ல பேய்னு யாரு சொன்னது? அந்த பொண்ண பெத்தவங்க சொன்னாங்களா? ஊருக்குள்ள ஆயிரம் பேசுவாங்க. அதெல்லாம் கேட்டுட்டு, நம்பிட்டு இருந்தீங்கனா அதுக்கு நாங்களா பொறுப்பு?”
“அவங்களுக்கு பைத்தியம்னு நீங்க எப்படி சொல்லுறீங்க?”
“அந்த பொண்ணுங்களோட பெத்தவங்க சொன்னாங்க. உங்க வீட்டுக்குப் பக்கத்துல தான அந்த கடைசி பொண்ணு மகழினி செத்துப் போச்சு? அவங்க வீட்டுல தெளிவா கேட்டுட்டு அப்புறம் வந்து பேசுங்க”
ஜீவிதா தீவிர யோசனையில் அமர்ந்து விட, “பெத்தவங்களே பைத்தியம்னு சொல்லிட்டாங்க. இது தெரியாம இந்த பொண்ணு பேசுதுனு நீங்களும் கேட்டுட்டு இருக்கீங்க? கிளம்புங்க சார். உருப்படியா நாலு பேருக்கு புத்திமதி சொல்லி, பாடம் நடத்துங்க. இந்த மாதிரி அரை வேக்காடு ஆளுங்க எல்லாம் உருவாகாம இருக்கட்டும்” என்றான் யாதவ்.
ஜீவிதாவை இப்படிச் சொன்னது கார்த்திக்கிற்குப் பிடிக்கவில்லை. அவன் முகத்தில் அதிருப்தி தெரிந்தது. ஜீவிதா பொங்கும் கோபத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்.
அதற்குள், யாதவன் அந்த ஆசியரை வழியனுப்ப எழுந்து விட்டான். அங்கிருந்த மற்ற யாரும் கவனிக்காத ஒன்றை, ஜீவிதா கவனித்து விட்டாள். அவளது பார்வை யாதவ்வின் கண்ணை ஊடுருவியது. யாதவ் அவளை முறைத்து விட்டு, வேகமாக வீட்டுக்குள் சென்று விட்டான்.
“கார்த்திக்… உங்க அண்ணன்னு பார்க்குறேன். இல்லனா நடக்குறதே வேற” என்று ஜீவிதா பல்லை கடிக்க, “சாரி.. அண்ணா ஏதோ கோபத்துல அப்படி சொல்லிட்டார்” என்றான்.
“இந்த அரைவேக்காடு என்ன பண்ணுதுனு நாளைக்கு பார்க்கச் சொல்லு” என்று கூறி விட்டு, வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.
‘அந்த ஆசிரியரை அனுப்பியதும், யாதவ் முகத்தில் நிம்மதி வந்தது. தன்னை போல் அந்த ஆசிரியருக்கும், யாதவ்வின் மீது சந்தேகம் வந்திருக்க வேண்டும். அதற்காக தான் எதையோ வேகமாக பேசி துரத்தி விட்டான்.’ என்று நினைத்தாள்.
‘சந்தோசமா படுற? இரு நாளைக்கு உனக்கு பெரிய ஆப்பா வைக்குறேன்’ என்று நினைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
யாதவ்விற்கு கோபத்தில் முகம் சிவந்து போனது.
“அரைவேக்காடு… சார் முன்னாடி மானத்த வாங்கப் பார்க்குறா. இந்த ஊருக்குள்ள எனக்கு இருக்க மரியாதை எல்லாத்தையும், குழி தோண்டி புதச்சுடுவா போல. சார் என் பேர கூட அதிகமா சொல்ல மாட்டாரு. இப்படி பேசி வச்சா, நாளைக்கு என்னை தேடி உதவினு எப்படி வருவாரு? முட்டாள் முட்டாள். உனக்கு இருக்கு “
தனக்குத்தானே பேசி, ஜீவிதாவை திட்டி ஆறுதல் தேடிக் கொண்டான் யாதவ் கிருஷ்ணன்.
“மாமா வேற அடிக்கடி ஊர விட்டுப் போய் உசுர வாங்குறாரு.” என்று நினைத்தவன், பாலாஜியை அழைத்தான்.
“என்ன யாதவா?”
“உங்க தரிசனம் முடிஞ்சதா இல்லயா?”
“சிறப்பா முடிஞ்சது”
“அப்போ உடனே கிளம்பி இங்க வாங்க. செம்ம டென்சன் ஆகுது”
“ஏன்?”
“ப்ச்ச்… சேந்தனோட பொண்ணுனு ஒருத்தி புதுசா வந்து இருக்காளே. அவ பண்ணுற குழப்பம் தான்”
“அந்த பொண்ண முதல் முறை பார்க்கும் போதே நினைச்சேன். இந்த பொண்ணு கிட்ட ஏதோ இருக்குனு. ஆனா குழப்பம் பண்ணுற ஆளு இல்லனு தான் தோனுது”
“அவ பண்ணுறது எல்லாம் கடுப்பாகுது. இருக்கதெல்லாம் பத்தாதுனு இது வேற. நீங்க முதல்ல கிளம்பி வாங்க”
“வரேன்”
அழைப்பை துண்டித்து விட்டான்.
‘வந்து அஞ்சு நாள் ஆகல. அதுக்குள்ள எவ்வளவு கடுப்பேத்துறா’ என்று நினைத்துக் கொண்டான்.
‘இன்னும் இரண்டு நாளில் நறுமலர் வந்து விடுவாள். அதோடு இவள் கிளம்பிச் சென்று விட்டால் நிம்மதி.’ என்று நினைத்தான்.
*.*.*.*.*.*.
ஜீவிதா நேராக தங்களது வீட்டுக்குச் செல்லாமல், சுபாஷினியை தேடிச் சென்றாள்.
சமையலில் மும்முரமாக இருந்த சுபாஷினி, “உட்காரு ஜீவிதா இதோ வர்ரேன்” என்று குரல் கொடுத்தாள்.
“என்னக்கா பண்ணுறீங்க?”
“சமையல் தான். லன்ச். நீ சாப்டியா?”
“இன்னும் இல்ல. இப்ப தான் கார்த்திக் வீட்டுக்குப் போயிட்டு வரேன்”
“அங்க ஏன் போன?”
“கார்த்திக்கோட அண்ணன் கூட சண்டை போடத் தான்”
“அய்யய்யோ!”
“மொதல்ல அவரு மேல கொஞ்சமா தான் டவுட் இருந்துச்சு. இப்போ கன்ஃபார்மே ஆகிடுச்சு”
“எப்படி? என்ன நடந்துச்சு?”
“செத்த பொண்ணுங்க பைத்தியமாம். அதுங்க தானா போய் தான் கிணத்துல விழுந்துச்சுங்களாம்”
“நிஜம்மாவா?”
“அக்கா…”
“ஓகே.. சாரி சாரி.. மேல சொல்லு”
“அந்த பொண்ண பெத்தவங்களே அவங்களுக்கு பைத்தியம்னு சொல்லுறாங்க. நீ என்ன பேசுறது?னு நோஸ் கட் பண்ணி விட்டுட்டார் க்கா. ச்சே”
“ம்ம்.. நானும் அப்படித் தான் கேள்விபீ பட்டேன்”
“என்னது?”
“பேய் பிடிச்சு அந்த பொண்ணுங்க போய் கிணத்துல விழல. பைத்தியம் பிடிச்சுத் தான் விழுந்துச்சுங்கனு”
“அப்புறம் எப்படி டிரஸ் எல்லாம் ப்ளட் வரும்?”
“அது அந்த பொண்ணுங்க ரத்தம் இல்லயே. உடம்புல எங்கயும் காயம் இருக்காது. வெறும் ரத்தகறை மட்டும் தான் இருக்கும். அதுனால கிணத்துல எதாவது செத்து போன விலங்கோட ரத்தம் இருந்து பட்ருக்கலாம்னு சொல்லுறாங்க”
“அந்த மூஞ்சி கறுப்பானது?”
“அந்த கிணத்துல இருக்க அழுகுன தண்ணிய குடிச்சு அப்படி ஆகி இருக்கும்னு சொல்லுறாங்க”
“எப்படிலாம் மாத்தி மாத்தி பேசுறாங்க…? எப்பா…! முடியலடா சாமி”
“ஊருக்குள்ள, அந்த மூணு பொண்ணோட பெத்தவங்களும் ஒரே மாதிரி சொல்லும் போது, யாரு என்ன செய்ய முடியும்?”
“எனக்கென்னமோ பேய் பேர வச்சுட்டு எவனோ ஏமாத்துன மாதிரி, பைத்தியம்னு சொல்லி ஏமாத்த பார்க்குறாங்கனு தோனுது”
“இருக்கலாம். உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? வந்தமா உன் குடும்ப பிரச்சனைய பார்த்தோமா கிளம்பி போயிட்டே இருந்தமானு போக வேண்டியது தான?”
“ப்ச்ச்.. உங்களுக்கும் புரியல. நான் வர்ரதுக்கு முன்னாடி இதெல்லாம் நடந்து இருந்தா, நான் பெருசா பார்த்து இருக்க மாட்டேன். சொந்த பிரச்சனைய பார்த்துட்டுக் கிளம்பி இருப்பேன். ஆனா, அந்த பொண்ண உயிரோட கண்ணு முன்னாடி பார்த்தேன்க்கா. இன்னும் கண்ண விட்டு போகல அவ உருவம். அவள அப்பவே தேடி ஏன் கூட்டிட்டு வராம போனோம்னு கில்டியா இருக்கு.
சப்போஸ் அவ பைத்தியமா கூட இருந்தாலும், அவ கிட்ட பேசி கூட்டிட்டு வந்துருக்கலாம்னு தோனுது. பேய் பிசாசு எது அவள பிடிச்சு இழுத்தாலும், சண்ட போட்டாவது காப்பாத்தி இருக்கலாம். நான் மட்டும் சரியா வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்குறேன். என் கண்ணு முன்னாடி ஒரு பொண்ணு கிணத்துல விழுந்து தற்கொலை பண்ணிக்கிறானா?”
“உன் நிலைமை இப்போ புரியுது எனக்கு. நானும் அந்த மாதிரி பார்த்து இருந்தா, இப்படி தான் நினைச்சு இருப்பேன். ஆனா, என்ன பண்ணிட முடியும்? ஒருத்தர் என்னடானா.. முதல்ல செத்த பொண்ணு தான், பின்னாடி செத்த ரெண்டு பேரையும் கூப்பிட்டு போயிட்டானு சொல்லுறாங்க. மத்தவங்க பைத்தியம் பிடிச்சுடுச்சுனு சொல்லுறாங்க”
“அவங்க மூணு பேரும் ஃப்ரண்ட்ஸா?”
“இல்லயே.. முதல்ல செத்தவளும் கடைசியா செத்தவளும், காலேஜ்ல படிச்சுட்டு இருந்தவளுங்க. நடுல செத்தவ காலேஜ்ஜே போகல”
“இல்ல கா. இவங்க மூணு பேருக்கும் ஏதோ ஒரு கணெக்ஷன் இருக்கும். அத கண்டு பிடிக்கலனா நாலாவதா ஒருத்தி செத்து போவா”
“என்ன பண்ணி கண்டு பிடிக்கிறது அத? மூணு பேரு செத்த தேதியும் வேற வேற”
“என்ன தேதி?”
சுபாஷினி சொன்ன தேதி மாறி மாறி இருந்தது.
“ஒன்னும் சின்க் ஆகலையே?”
“அதான் யோசிக்கிறேன்”
ஜீவிதா யோசித்துக் கொண்டே சமையலறையை விட்டு வெளியே வந்தாள். சுபாஷினி சமையல் வேலைகளை முடிக்க ஆரம்பித்தாள்.
‘என்ன தேதியா இருக்கும்?’ என்று யோசித்தவளுக்கு திடீரென ஏதோ நியாபகம் வந்தது. அங்கு எங்காவது நாட்காட்டி இருக்கிறதா என்று தேடி எடுத்தாள். அதில் பார்த்தவள், “அக்கா.. இங்க வாங்க” என்று அவசரமாக அழைத்தாள்.
“என்ன என்ன?”
“எல்லாமே அம்மாவாசை க்கா” என்று ஜீவிதா சொன்னதுமே, சுபாஷினிக்கு பயமே வந்து விட்டது.
“கண்டிப்பா இது ஏதோ பலி கொடுக்குற கேஸ் தான். அக்கா… நீங்க இத யாருக்கும் சொல்லாதீங்க. நான் ஒரு முக்கியமான வேலை பார்க்கனும்” என்று கூறி விட்டு, வேகமாக வீட்டை நோக்கி ஓடி விட்டாள்.
அந்த நாட்காட்டியை பார்த்த சுபாஷினிக்கு நா வரண்டது. அந்த மூன்று பெண்களும் பலி கொடுக்கப்பட்டார்களா? அப்படியானால் தலையை வெட்டிக் கொண்டு இறந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி தானே பேசிக் கொள்வார்கள் பலியை பற்றி?
சுபாஷினிக்கு இதயம் தொண்டையில் வந்து துடிக்க, வேகமாகக் கணவனை அழைத்தாள். வீட்டில் தனியாக இருக்கக் கூடப் பயமாக இருந்தது. அவளது கணவனை அழைத்து நடந்ததைக் கூற, அவன் ஆறுதல் கூறி உடனே கிளம்பி வருவதாகக் கூறினான்.
வீட்டுக்குள் வந்த ஜீவிதா, தன் தன் மடிக்கணினியை கையில் எடுத்துக் கொண்டாள். அத்தனையும் விவரமாக பதிவு செய்து, மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்தாள்.
சந்தேகத்திற்குரிய ஆளாக அவள் குறிப்பிட்டிருந்த மூன்று பெயர்களில் நிலவனும் கணிகனும் இடம் பெறவில்லை. யாதவ் கிருஷ்ணனும், இளமாறனும், யாதவ்வின் மாமா பாலாஜியும், இடம் பெற்று இருந்தனர்.
மின்னஞ்சல் செல்வதற்காக மடிக்கணினியை வெளியே எடுத்துக் கொண்டு வந்தாள். நிலவன், யாரிடமோ கைபேசியில் பேசிக் கொண்டு வீட்டிற்கு பின்னால் நின்று இருந்தான்.
அவன் இவளை கவனிக்கவில்லை. அதற்குள் மின்னஞ்சல் போக வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்து விட்டது. மடிக்கணினியை மூடி வீட்டுக்குள் வைத்து விட்டாள்.
மீண்டும் வெளியே வர, “அக்கா.. நாளைக்கு நறு வராளாம்” என்று ஆனந்தமாகக் கூறினான் நிலவன். அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சிக்கு பதில், ஜீவிதா முகத்தில் எதோ புரியாத உணர்ச்சி தோன்றியது.
“என்னகா?”
“ஒன்னும் இல்ல. எத்தனை மணிக்கு வர்ரா?”
“எக்ஸாம் ஒரு மணிக்கு தான் முடியும். அடுத்த ரெண்டு மணி நேரத்துல இங்க இருப்பா”
“ம்ம்..”
ஜீவிதா வேறு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று விட்டாள்.
நாளை மொத்தமாக எல்லாம் முடிந்துவிடும். அதோடு, இந்த ஊருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுக் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அன்று இரவு தூக்கம் வராமல் பின் வாசலில் அமர்ந்து இருக்க, அவளது மின்னஞ்சலுக்கு பதில் வந்தது. நாளை மாலைக்குள் அவள் எதிர் பார்த்தது நடந்து விடும் என்று.
இதை அறியாத யாதவனும் அவனது நண்பர்களும், அன்று இரவு மிகப்பெரிய திட்டத்தைப் போட்டு வைத்திருந்தனர்.
அவர்களது திட்டம் ஜீவிதாவின் திட்டத்தை முறியடிக்குமா? அல்லது மாட்டிக் கொள்வார்களா?
இரவெல்லாம் தூங்காமல் விழித்து, திட்டத்தை முடித்து விட்டு விடியும் நேரம் தான், அந்த நண்பர்கள் குழு கலைந்தது.
காலையில் எழும் போதே, ஜீவிதாவின் மூளை இன்று நடக்கப் போவதை எடுத்து கூறியது. படுக்கையை விட்டு எழாமல் மணியைப் பார்த்தாள். எட்டை தாண்டி இருந்தது. அப்போதும் அவள் எழவில்லை. சில நிமிடங்கள் படுத்தே இருந்தாள்.
இந்த வீட்டை விட்டுப் போவதில் அவளுக்கு கவலை எதுவும் இருக்கிறதா? என்று யோசித்து பார்த்தாள். இல்லை. அப்படி எந்த உணர்வும் அவளுள் எழவில்லை. மாறாக ஒரு சந்தோசம் தோன்றியது.
பல நாள் வலிக்கு இன்று மருந்து போட்டு விடுவாள். அந்த மருந்து கசக்கும். எரிச்சலை கிளப்பும். ஏன் அதிகமான வலியைக் கூட உண்டாக்கும். ஆனால், அடுத்து அந்த வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
கட்டி வெளியேற்ற செய்யும் அறுவை சிகிச்சை, வலித்தாலும் தாங்கிக் கொள்வது போல், அவளும் எதையும் தாங்கத் தயாரானாள்.
எழுந்து முதலில் குளித்து விட்டு வந்தாள். அங்கும் இங்கும் வைத்திருந்த அவளது பொருட்களை, பெட்டியில் எடுத்து வைத்து விட்டாள். அவள் தன் உடமைகளை கலைக்கவில்லை தான். இருந்தாலும் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள், அங்கும் இங்கும் இருந்தது.
அதை எல்லாம் எடுத்து வைத்து விட்டு, பொறுமையாக வெளியே வந்தாள்.
நிலவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தங்கமணி முதலிலேயே சாப்பிட்டு விட்டார். ஆனால், அங்கு அமர்ந்து நிலவனிடம் எதோ பேசிக் கொண்டிருந்தார். ஜீவிதாவை பார்த்ததும் திட்டத் தோன்றியது. ஆனாலும் அவளை பார்த்து முகத்தை மட்டும் திருப்பிக் கொண்டார். காரணம் அவர் பேச்சில் இருந்தது.
“நறு வந்தா நீயே போய் கூட்டிட்டு வா. எங்கயும் போயிடாத. பிள்ள அங்க இருந்து பஸ்ல வந்து, இங்கயும் நடந்து வந்தா தாங்குவாளா? சொல்லுறது புரியுதா?” என்று தங்கமணி கேட்க, “சரி.. புரியுது.” என்றான் நிலவன்.
“சரி சரினு சொல்லிட்டு பைக்க எடுத்துட்டு போயிடாத.” என்று தங்கமணி அதட்டினார்.
ஜீவிதாவின் முகத்தில் புன்னகை வந்தது. தான் வந்த அன்றும் பைக் இருந்தது. நிலவனும் இருந்தான். ஆனால், அவளை கூப்பிட்டுச் செல்ல வந்தது கார்த்திக்.
கோபம் வரவில்லை. எதிர் பார்த்தது தானே என்று நினைத்துக் கொண்டாள். சாப்பிட அமர, வேகமாக ஓடி வந்து வள்ளியம்மை பரிமாறினார்.
இந்த ஒரு வாரமும் ஜீவிதாவிற்கு பார்த்துத் பார்த்து தான் பரிமாறுகிறார். ஆனால், அது ஜீவிதாவின் மனதில் ஒட்டவே இல்லை.
வழக்கம் போல் கடனே என்று உண்டு விட்டு எழுந்து கொண்டாள். நிலவன் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தான். மகளை பார்க்க சேந்தன் இரண்டு மணிக்கே வந்து விட்டார். இதையெல்லாம் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்து விட்டு, ஜீவிதா அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஊருக்கு வந்து விட்டதாக நறுமலரிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனே நிலவன் அவளை அழைத்து வரக் கிளம்பினான். வீட்டில் இருந்த எல்லாரும் வாசலுக்குச் செல்ல, ஜீவிதா அறையில் தன் கைபேசியை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
சில நிமிடங்களில் நிலவன் ஜீவிதாவை அழைத்தான். ஒரு பெருமூச்சோடு வெளியே வந்தாள். நிலவன் பக்கத்தில் பாட்டியின் அணைப்பில் ஒரு பெண் நின்று இருந்தாள்.
சுடிதார் அணிந்து ஒரு பக்கமாக துப்பட்டாவை போட்டு இருந்தாள். கிட்டத்தட்ட ஜீவிதாவின் உயரத்துக்கு இருந்தாள்.
“நறு… அக்கா” என்று நிலவன் கூறியதும் வேகமாக திரும்பிப் பார்த்தாள். அப்படியே தங்கமணியை உரித்து வைத்த முகம். ஆனால், அதில் வள்ளியம்மையின் சாயலும் இருந்தது.
ஜீவிதாவைப் பார்த்ததும், அவள் முகத்தில் பெரிய புன்னகை தோன்றியது.
“அக்கா…” என்று அழைத்துக் கொண்டே ஜீவிதாவை நோக்கி வேகமாக வர, ஜீவிதா கை நீட்டி அவளை அங்கேயே நிறுத்தினாள்.
தொடரும்.
