அத்தியாயம் 9

Loading

கார்த்திக்கைப் பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நிலவனுக்குத் தான், யாதவ்விடம் இருந்து அழைப்பு வந்தது. உடனே, அவன் எங்கோ சென்று விட்டான்.

ஜீவிதா வீட்டுக்குள் இருக்கப் பிடிக்காமல் வாசலில் தான் அமர்ந்து இருந்தாள். பலர் அவளை ஜாடையாக திட்டிச் சென்றனர். அதைக் காதில் வாங்கினாலும், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சேந்தன் வீட்டிற்கு வந்தார். ஜீவிதா அவரை நிமிர்ந்து பார்க்காமல், கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஜீவிதா.. உள்ள வா உன் கிட்டப் பேசனும்”

ஜீவிதா தலையை நிமிர்த்தி பார்த்தாளே தவிர, இடத்தை விட்டு எழவில்லை. அந்நேரம் அவருக்குப் பின்னால் கார்த்திக்கின் கார் வர, வேகமாக எழுந்து காரை நோக்கிச் சென்றாள்.

கார்த்திக் காரை விட்டு இறங்கும் முன், வேகமாக அவன் இருக்கும் பக்கம் சென்றாள்.

அவன் முறைப்பதை பொருட்ப்படுத்தாமல் “எப்படியும் வருவனு நினைச்சேன். வந்துட்ட” என்று புன்னகையோடு கூறினாள்.

“நான் நீ பண்ண காரியத்துக்கு காரணம் கேட்க வந்துருக்கேன்” என்று கார்த்திக் கோபம் குறையாமல் பேசினான்.

“இங்க பேச வேணாம். உனக்கு நான் காரணம் சொல்லுறேன். அதுக்கு நீயும் ஒரு வேலை பண்ணனும். இப்போ கார எடு” என்று கூறி விட்டு, காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கார்த்திக் உடனே காரை எடுத்து விட்டான். வாசலில் நின்றிருந்த சேந்தனிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஜீவிதா கிளம்பும் போதே, அவளது மனதை சேந்தன் நன்றாக புரிந்து இருக்க வேண்டும். ஆனால்?

காரில் அமர்ந்தவள் கண்ணாடியை ஏற்றி விடக் கூறினாள்.

“இப்போ உள் ஆளு ஷைலுவ எங்கயாவது வரச் சொல்ல முடியுமா?”

“என்ன? அவ எதுக்கு?”

“வரச் சொல்லுவியா மாட்டியா?”

“நீ பண்ணுறது ஒன்னுமே புரியல ஜீவி”

“புரியும் புரியும். பட் நான் அந்த ஷைலுவ பார்க்கனும். எங்கயாவது வரச் சொல்லு”

கார்த்திக் அப்போதே அவளை அழைத்து, எப்போதும் சந்திக்கும் கோவிலுக்கு வரச் சொன்னான். அவளும் வருவதாகக் கூறி விட்டாள்.

“நீயும் கோவிலுக்கு போ. அவ வரதுக்குள்ள உனக்கு எல்லாம் சொல்லிடுவேன்”

காரை கோவில் பக்கம் திருப்பினான்.

அதோடு நடந்ததை ஜீவிதா விளக்கமாக கூற ஆரம்பித்தாள். கடைசியாக யாதவ்வை அவளது நண்பர்களுடன் அனுப்பி வைத்ததை சொல்லி முடிக்க, ஷைலபுத்ரி வந்து விட்டாள்.

அவளது பேச்சில் அதிர்ச்சியில் இருந்த கார்த்திக் ஏதோ கேட்க வர, “ஸ்ஸ்.. நீ ஃப்ரண்டுனு தான் சொன்னேன். உன் ஆளு கிட்டப் போட்டுக் கொடுத்துடாத” என்று எச்சரித்தாள்.

ஷைலபுத்ரி கார்த்திக் பக்கத்தில் நின்றிருந்த ஜீவிதாவை, ஒரு பொறாமை கலந்த கோபத்தோடு பார்த்து வைத்தாள். கார்த்திக் அதிர்ச்சியை விட்டு வெளியே வருவதாகத் தெரியவில்லை. அதனால் ஜீவிதாவே பேசினாள்.

“ஹாய்.. நான் ஜீவிதா.. இவ்வளவு அனல் பறக்க பார்க்காதீங்க. நான் உங்க காதலன தூக்கிட்டுப் போக வரல. என்னோட ஒரு அருமையான ஃப்ரண்ட் கார்த்திக். அவனோட வருங்கால மனைவிய பார்க்கனும்னு கேட்டேன். அதான் கூட்டிட்டு வந்தான்”

ஜீவிதா பேச ஆரம்பித்த போது இருந்த கோபம், அவளது கடைசி வார்த்தையில் காணாமல் போய் விட்டது. கூடவே சற்று வெட்கம் வந்தது.

உடனே முகம் மலர சிரித்தவள், “என் பேரு ஷைலபுத்ரி” என்று கூறினாள்.

“க்யூட் வாய்ஸ்ங்க உங்களுக்கு. சும்மா சொல்லல. நிஜம்மா தான் சொல்லுறேன்.”

“தாங்க்ஸ்ங்க”

“கார்த்திக் நல்லவன்ங்க பத்திரமா பார்த்துக்கோங்க. நீயும் இவங்கள நல்லா பார்த்துக்கோ என்ன?”

ஜீவிதா இருவருக்கும் கூற, அப்போது தான் கார்த்திக் அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்தான்.

“அதெல்லாம் சிறப்பா பார்த்துப்பேன்” என்று கார்த்திக் கூற, ஷைலுவின் முகத்தில் சந்தோஷமும் வெட்கமும் போட்டி போட்டது.

“ஆனா, உங்கள பத்தி ஊருல என்னன்னவோ சொல்லுறாங்களே. யாதவ் மாமாவ….”

“அத பத்தி கவலையே படாதீங்க. எல்லாம் முடியும் போது சீக்கிரம் விசயம் விளங்கிடும். நீங்களும் தெரிஞ்சுப்பீங்க. அது வரை உங்க காதல கவனிங்க”

ஜீவிதா புன்னகை மாறாமல் கூறினாள். மூவரும் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டனர். அதன் பின் கார்த்திக் ஷைலு இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஜீவிதா கோவிலை சுற்றிப் பார்த்தாள்.

அங்கிருந்த பூசாரி அவளைத் தேடி வந்தார்.

“இந்தாமா பொண்ணு. நான் சொல்லுறது உனக்கு வித்தியாசமா இருக்கலாம். ஆனா, நீ இந்த ஊர விட்டுப் போறது நல்லதுனு எனக்குப்படுது”

பூசாரி சொன்னதை அதிர்ச்சியில்லாமல், புன்னகையோடு கேட்டுக் கொண்டாள்.

“அடுத்த மாசம் வரை இங்க இருக்கலாம்னு தான் லீவ் போட்டு இருக்கேன். இப்படி சொல்லுறீங்களே?”

“ஒரு மாசம் எல்லாம் இங்க இருக்காத மா. அது உன் உயிருக்கு பிரச்சனைய கொண்டு வரும்”

“தெரியும் சாமி. எனக்கும் மனசுல ஏதோ தப்பா தான் படுது. நாளைக்கு கிளம்பிடுவேன்” என்று கூறி விட்டு, அவரிடம் ஆசி வாங்கிக் கொண்டு வந்தாள்.

கார்த்திக்குடன் ஜீவிதா கிளம்ப, ஷைலு அவளது வீட்டை தேடிச் சென்றாள்.

“நீங்க இப்படி பேசி பழகுறது உங்க அண்ணனுக்குத் தெரியுமா?”

“ம்ம்.. சண்டை நாலு மாசமா தான் இருக்கு. நாங்க பல காலமா பேசிட்டு இருக்கோமே.. ஷைலு அண்ணன் கணிகன் தான், அண்ணனோட க்ளோஸ் ஃப்ரண்ட். பண்ணையில ஃபேக்டரில கணி வச்சது தான் சட்டமே”

“ஆடுங்க அடிச்சுக்கிட்டா என்னனு நீங்க ஒன்னு கூடிட்டீங்க?”

“அவங்களுக்கும் தெரியும். ஆனா, கண்டுக்காம இருக்காங்க. அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிட்டா இந்த பிரச்சனை முடிஞ்சுடும். நான் ஷைலுவ எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டா அவங்க சமாதானமா போயிடுவாங்க”

“பாரேன்..! உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணுறதுல என்ன பிரச்சனை? வயசு போயிட்டு இருக்கே”

“அவருக்கு இந்த ஊர விட்டு, சொத்த எல்லாம் விட்டுட்டு அவர் கூட வர்ர மாதிரி பொண்ணு வேணும். இதை எல்லாம் என் தலையில கட்டிட்டு, ஓட ரெடியா இருக்கார். சொத்து இல்லனா பொண்ணு இல்லனு சொல்லுறாங்க. அண்ணன் இறங்கி வரல. பாவம் அம்மாவும் மாமாவும்.”

“அதுவும் சரி தான? சொத்துக்காக கல்யாணம் பண்ணிக்குற பொண்ணு எவ்வளவு நல்லவளா இருப்பா?”

“நீ பொண்ணு தான? எதுவும் இல்லாம மாச சம்பளத்துல தான் வாழனும்னு சொன்னா ஏத்துப்பியா?”

“ஒய் நாட்? நானும் மாச சம்பளம் தான் வாங்குறேன். பட்…”

“பட்.. ?”

“எனக்கு சொத்து நிறைய இருக்கு.”

“சொத்தா? இந்த ஊருலயா?”

“இல்ல. இந்த ஊருல அப்படியே இருந்தாலும் அது என்னோடது இல்லையே. நான் சொன்னது என்னோடது”

“அப்படி என்ன வேலை பார்க்குற?”

தன் வேலையை பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். கார்த்திக் கவனமாக கேட்டுக் கொண்டான். நேராக வந்து அவளை வீட்டில் இறக்கி விட்டான்.

“ஓகே.. குட் நைட். இதுக்கு மேல என் மேல கோபமா இருக்க மாட்டனு நினைக்கிறேன்”

“இல்ல இல்ல”

“குட்.. முடிஞ்சா நாளைக்கு பார்க்கலாம்” என்று கையாட்டி விட்டு வீட்டுக்குள் சென்றாள்.

ஏதோ இடி விழுந்தது போல், ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து இருந்தனர். நறுமலர் தான் முதலில் ஜீவிதாவை கவனித்தாள்.

சுற்றியிருந்த எல்லோரையும் பார்த்து விட்டு, ஜீவிதா நேராக அறைக்குள் சென்று விட்டாள். வரும் வழியில் தேனீர் வாங்கி குடித்து விட்டு தான், கார்த்திக்குடன் பேசிக் கொண்டே வந்தாள். அதனால் இரவு உணவு அவளுக்குத் தேவைப்படாது.

அறைக்குள் அடைந்ததும், சேந்தன் அவளை அழைக்கச் சொன்னார். வள்ளியம்மை கதவைத் தட்ட, ஜீவிதா திறக்கவில்லை. தங்கமணியோ வாய்க்குள் எதையோ திட்டிக் கொண்டே இருந்தார்.

“விடுங்கமா. நாளைக்கு காலையில அக்கா கிட்டப் பேசிக்கலாம்” என்று நறுமலர் தான் அந்த சூழ்நிலையை சமாளித்தாள். நிலவன் வீட்டில் இல்லை.

அவன் யாதவ் சொன்னதை செய்யக் கிளம்பியிருந்தான்.

*.*.*.*.*.*.

ஜீவிதாவின் நண்பர்களுடன் ஹோட்டலில் தங்கி இருந்த யாதவ், பிரச்சனையை பற்றி மட்டுமே முழுவதுமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனிருந்த அறைக்கு மற்ற மூவரும் வந்தனர்.

“சாப்பிட்டீங்களா?” – தாரண்யா.

“இப்போ தான். நீங்க?”

“எல்லாருமே சாப்பிட்டோம்”

“எங்களுக்குப் பிரச்சனையப் பத்தி முழுசா சொல்லுறீங்களா?” – விபின்.

“உட்காருங்க” என்று எல்லோரையும் அமர வைத்தான்.

“உங்களுக்கு ஜீவிதா ஏன் இவ்வளவு நாள் குடும்பத்த விட்டு பிரிஞ்சு இருந்தாங்கனு தெரியுமா?” – யாதவ் கிருஷ்ணன்.

“இல்லயே” – நிதுலன்.

“அப்போ அத அவங்களே சொல்லட்டும்.‌ இப்போ நான் குறிப்பிட்ட விசயத்த மட்டும் சொல்லுறேன்”

“ம்ம்”

“செத்த மூணு பொண்ணுங்களுக்கும் மேலோட்டமா பார்த்தா, எந்த கனெக்ஷனும் இல்ல. அவங்க ஒரே ஊருங்குறத தவிர, எந்த பெரிய கனெக்ஷனும் கிடையாது. ஒன்னே ஒன்ன தவிர. அதாவது அந்த மூணு பொண்ணுங்களும், நான் கொடுத்த பணத்துல ஸ்கூல் படிச்சவங்க. அந்த ஒரு கனெக்ஷன் மட்டும் தான் இருந்தது. இத வச்சு முதல்ல ஜீவிதா என் மேல தான் சந்தேகப் பட்டாங்க.

அவங்க செத்ததும் என் இடத்துல.‌ எனக்கு சொந்தமான வீட்டுல இருக்க கிணத்துல போய் விழுந்து செத்தாங்க.‌ யாரா இருந்தாலும் என் மேல தான் சந்தேகப் படுவாங்க. அப்படி தான் ஊருக்குள்ள நிறைய பேருக்கு சந்தேகம். யாருக்கும் நேரடியா சொல்ல தைரியம் இல்ல.‌ ஆனா, ஜீவிதாக்கு தைரியம் இருந்துச்சு.

அவங்க இடத்துல இருந்து இத யோசிச்சு சொல்லுறேன். இந்த பிரச்சனை பார்க்க எவ்வளவு ஈசியா இருக்கோ, உண்மையாவே அவ்வளவு ஈசி இல்லனு அங்களுக்குத் தோனி இருக்கலாம். அதுனால மத்தவங்க மாதிரி என் மேல சந்தேகப் பட்டுட்டே, விசயத்த டீப்பா ஆராய்ச்சி பண்ணி இருப்பாங்க.

கிடச்ச ஆதாரமும் நேரா என்னை தான் கை காட்டும். நான் பணம் கொடுத்துப் படிக்க‌ வச்சதால, நான் அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன்னு சுலபமா என் பக்கம் கை காட்டிடலாம். அதையும் தாண்டி, தேடி ஜீவிதா உண்மைய கண்டு பிடிச்சுருக்கலாம்.

இப்போ உண்மையா நடந்தத சொல்லுறேன். இந்த மூணு பொண்ணுங்க கடைசி மூணு பேர். முதல் அஞ்சு பேரு வேற வேற ஊருல செத்துட்டாங்க. எல்லாமே வேற வேற இடத்துல செத்து, அந்த இடத்தோட முதலாளிய பிடிச்சு உள்ள போட்டுட்டாங்க.

பாவம் அந்த முதலாளிங்க. எந்த தப்பும் பண்ணாம கோர்ட் கேஸ்னு அலையுறாங்க. அப்படித் தான் இந்த ஊருலயும் நடந்தது. முதல் பொண்ணு செத்தப்போ பெத்தவங்களே அத தற்கொலை தான்னு அடிச்சு சொல்லிட்டாங்க. அதுனால அப்போ நான் தப்பிச்சுட்டேன்.

அடுத்த பொண்ணும் விழுகும் போது தான், எனக்கு வித்தியாசமா தெரிஞ்சது. அப்போவும் இந்த ஊருல இருக்கவங்களுக்கு என் மேல இருந்த நம்பிக்கை என் மேல சந்தேகப்பட விடல.

ஆனா, நான் இதுல வேற ஏதோ இருக்குனு யோசிச்சுத் தேட ஆரம்பிச்சேன். முதல்ல ஒரு பொண்ணு செத்தப்போவே, கிணத்து மேல பெரிய பாறைய மூடி மாதிரி போட்டு மூடி வச்சுட்டேன்.

ரெண்டாவது பொண்ணு செத்து உடம்ப எடுக்கும் போது, அந்த மூடி தூரமா கிடந்துச்சு. அந்த பொண்ணு இருந்த சைஸுக்கு அத தூக்கி இருக்கவே முடியாது. அப்படியே தூக்கி இருந்தாலும், தூரமா கொண்டு போய் போட்ருக்க முடியாது.

இங்க நிச்சயமா வேற யாரோ இருந்து இருக்காங்க. அந்த பொண்ணுங்க டிரஸ்ல இருந்த ரத்தம் வேற யோசிக்க வச்சது. முதல் பொண்ணு செத்தப்போ அந்த ரத்தத்த ஏதோ அழுகுனது கிணத்துல இருந்து ஒட்டி இருக்குனு நினைச்சுட்டோம். இரத்தம்னு நாங்க நினைக்கல. ஆனா இந்த பொண்ணு டிரஸ்ல ரத்தம் அப்பட்டமா தெரிஞ்சது.

குளிபாட்டும் போது காயம் எதுவும் இருக்கானு பார்க்க சொன்னேன். எந்த காயமும் இல்லனு சொல்லிட்டாங்க. அப்பவே எல்லாமே வித்தியாசமா தெரிய ஆரம்பிச்சது.

நான் என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் என்னனு தேட ஆரம்பிச்சோம். தூரமா ஒரு இடத்துல ரத்தமா இருக்க மாதிரி தெரிஞ்சது. அத தோண்டி பார்த்தா, ரெண்டு ஆடு தலைய வெட்டி புதச்சு இருந்தாங்க.

இதோட ரத்தம் தான் அந்த பொண்ணுங்க டிரஸ்ல இருந்து இருக்கனும். செத்த பொண்ணு ஆட்ட புதைக்க முடியாது இல்லையா? அப்போ வேற யாரோ இதெல்லாம் பக்காவா ப்ளான் பண்ணி பண்ணுறாங்கனு புரிஞ்சது.

ரெண்டு பொண்ணுங்களும் செத்த தேதிய கண்டு பிடிச்சு, அது போல வேற எங்கயும் நடந்து இருக்கானு தேடுனோம். இந்த ஊர சுத்தி ரெண்டு மூணு ஊருல இது போல அஞ்சு பொண்ணுங்க செத்துருக்காங்கனு தெரிஞ்சது.

செம்ம சாக் ஆகிடுச்சு. அந்த பொண்ண பெத்தவங்க கிட்ட விசாரிச்சா, வாயவே திறக்கல. எது எதுக்கோ செத்ததா ஊரே பேசுச்சு. கடைசியா சாகுறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுனு கேட்டோம். ஒரு வழியா எல்லாத்தையும் வாங்கி கணக்கு போட்டு, அடுத்து யார குறி வைப்பாங்க. எப்படி நடக்க போகுதுனு ஒரு கணக்கு போட்டு, அன்னைக்கு ரெடியா இருந்தோம்.

அந்த பொண்ணு மகிழினி தான்னு கண்டு பிடிச்சோம். அந்த பொண்ணு பைத்தியம் பிடிச்ச மாதிரி நடந்து வந்துட்டு இருந்துச்சு. நாங்களும் பாலோவ் பண்ணிட்டே வந்தோம். திடீர்னு ஓட ஆரம்பிச்சுடுச்சு.

நாங்க தேடி வரதுக்குள்ள, ஜீவிதாவ பார்த்துருக்கும் போல. வேற பாதையில ஓடிருச்சு. நாங்களும் நேரா கிணத்து பக்கத்துல போய் வெயிட் பண்ணோம். ரொம்ப நேரமா வரவே இல்ல. நடு ராத்திரி டிரெஸ் எல்லாம் ரத்தத்தோட வந்துச்சு.

என் ஃப்ரண்ட் இளா தான் முதல்ல பார்த்தான். அவன் எந்திருச்சு அந்த பொண்ணு பக்கத்துல போக, கையில இருந்த அரிவாள்ல வெட்டிருச்சு.

வலி தாங்க முடியாம அவன் அலறுனதும் சுத்தி தேடிக்கிட்டு இருந்த நாங்க அவன் கிட்ட ஓடுனோம். அந்த பொண்ணு உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட முகத்த கருப்பாக்கிட்டு கோரமா நின்னு இருந்துச்சு.

“என்ன சாக விடாம பண்ணீங்க உங்களயும் சேர்த்து காளிக்கு பலியா கொடுத்துடுவேன்” னு மிரட்டுச்சு. நாங்க என்ன பேசியும் கேட்கல. எங்கள அரிவாள வச்சு வெட்டிருவேன்னு மிரட்டிட்டே கிணத்துல ஏறி குதிச்சுடுச்சு.

இளா வேற ரத்தம் அதிகமா போனதுலயோ, இல்ல அந்த பொண்ணு கண்ணு முன்னாடி குதிச்சதுலயோ மயங்கிட்டான். நாங்க இறங்கி காப்பாத்திடலாம்னு பார்த்தா ரெண்டு நிமிஷம் கூட இல்ல அந்த பொண்ணு செத்து தண்ணில மிதக்க ஆரம்பிச்சுடுச்சு.

அந்த கெட்ட தண்ணியே அந்த பொண்ண கொண்ணு இருக்கும். எங்களுக்கு வேற வழி தெரியல. இளாவ ஹாஸ்பிடல் தூக்கிட்டுப் போயிட்டோம்.

காலையில வழக்கம் போல பொண்ண காணோம்னு தேடுனவங்க கிணத்துல தான் வந்து விழுந்துருப்பானு தேடி எடுத்துட்டுப் போனாங்க.

ஜீவிதாவ பார்க்கலனா அந்த பொண்ணு நேரா பாதையில ஓடிருக்கும். முடிஞ்ச வர பிடிச்சு எதாவது பண்ணி இருக்கலாம்னு ஜீவிதா மேல செம்ம கோபம் வந்துச்சு.

ஆனா ஜீவிதாவும் அத நினைச்சு வருத்தப்பட்டுத் தான், அந்த பொண்ணுக்கு நியாயம் தேடி தர நினைக்கிறாங்கனு தெரிஞ்சதும் கோபம் குறைஞ்சுடுச்சு.

எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியல. நாங்க ஒரு மாசமா தேடிக் கண்டு பிடிச்ச விசயத்த, ஜீவிதா ஒரே வாரத்துல கண்டு பிடிச்சுட்டாங்க. கணக்கு படி பார்த்தா, ஜீவிதாக்கும் இன்னேரம் தெரிஞ்சு இருக்கும். அடுத்த டார்கெட் அவங்க தான்னு.”

முழு நீள பேச்சையும், எந்த இடையூறும் செய்யாமல் மூவரும் கேட்டுக் கொண்டனர். பல கொலைகளை பார்த்தும் கேட்டும் இருப்பதால், இது அவர்களை பாதிக்கவில்லை. ஆனால் ஜீவிதாவிற்கு ஆபத்து எனும் போது உள்ளம் நடுங்கியது.

“அப்போ ஜீவிய கூட அந்த கிணத்துல தள்ள பார்ப்பாங்களா?” என்று தாரண்யா பயத்துடன் கேட்டாள்.

“தெரியல. எட்டு பேர போலவே இவங்களையும் கொன்னுடுவாங்களா, இல்ல வேற எதாவது செய்வாங்களானு தான் யோசிச்சுட்டு இருக்கேன். பட் இப்போதைக்கு அவங்க இந்த ஊருல இருக்கது சரி வராது. நிலா நாளைக்கு காலையில ஜீவிதா கிளம்பிடுவாங்கனு சொன்னான். கிளம்பிட்டா அவங்கள தடுக்கப் பார்க்கும் போது அந்த கொலைகாரனப் பிடிக்கலாம். இல்ல அவங்கள போக விட்டு, ஃபாலோவ் பண்ணா கூட நம்மலால கண்டு பிடிக்க முடியும்”

“இத செய்யுறது யாரு?”

“அது.. அத சொல்லனும்னா ஜீவிதாவோட கடந்த காலத்தையும் சேர்த்து சொல்லனும். நீங்க அவங்க கிட்டக் கேளுங்க. இப்போதைக்கு என் கிட்ட பாதி ப்ளான் தான் சொன்னாங்க. மீதி என்ன வச்சுருக்காங்கனு தெரியல”

“என்ன ப்ளான்? அந்த தெலுங்குல சொன்னாலே அதுவா?” – விபின்

“ம்ம்”

“உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?”

“ஹைதராபாத்ல தான் படிச்சேன். அங்க தான் வொர்க் பண்ணேன். அப்பாவோட ரிலேட்டிவ்ஸ் அங்க இருந்தாங்க. சோ தெலுங்கு நல்லா தெரியும். ஹிந்தி சப்ஜெக்ட் ‌சோ அதுவும் தெரியும்”

“ஜீவி இதெல்லாம் ஆசைப் பட்டு கத்துக்கிட்டா. ரூபா நோட்டுல இருக்க எல்லா மொழியையும் கத்துக்கனும்னு அவளுக்கு ஆசை” என்று தாரண்யா கூறினாள்.

“ஜீவி என்ன சொன்னா உங்க கிட்ட?” என்று நிதுலன் கேட்டான்.

“மத்த ஊருல நடந்த மாதிரியே இங்கயும் நடக்கட்டும். நீங்க அரஸ்ட் ஆகுற போல கிளம்பி போங்க. அதுக்கு நான் தான் காரணம்னு என்னை இந்த ஊர விட்டு அனுப்புவாங்க. அது தெரிஞ்சா கண்டிப்பா எவனா இருந்தாலும் வெளிய வருவான். அப்போ உங்க ஃப்ரண்ட்ஸ் வச்சு பிடிக்க பாருங்கனு சொன்னாங்க. ஆனா அவங்க உங்கள கடத்திட்டா என்ன பண்ணுறதுனு கேட்கப் போனேன். அத கேட்கவே விடாம அனுப்பிட்டாங்க”

மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இதுக்கு வேற சிலர இறக்கனும் போலயே” என்று நிதுலன் யோசிக்க, “புதுசா யாரும் ஊருக்குள்ள வந்தா விசயம் ஈசியா பரவிடும். ஜீவிதாவ ஊர விட்டு கூட்டிட்டு வந்தா, அவங்க மாட்டுவாங்க. மே பி இதான் ஜீவிதா ப்ளான்னு நினைக்கிறேன்” என்றான் யாதவ்.

இதை ஜீவிதா மிகத் தீவிரமாக வேறு கோணத்தில் நிறைவேற்றக் காத்திருந்தாள்.

தொடரும்.

Leave a Reply