அத்தியாயம் 11
![]()
நன்றாய் உறங்கிக் கொண்டிருந்த கண்மணி, கரடுமுரடான பாதையில் வாகனம் குலுங்கவும் கண்களை சுருக்கினாள்.
மயக்கம் முழுதாய் தெளியவில்லை. ஆனால் எதோ வாகனத்தில் சென்று கொண்டிருப்பது மட்டும் புரிந்தது.
முகத்தை சுருக்கி கண்ணை திறந்தவளுக்கு, இருளில் ஒன்றும் விளங்கவில்லை. மீண்டும் இமைகளை மூடியவள், சில நொடிகள் அப்படியே இருந்தாள்.
மூளை வேகமாக விழித்துக் கொள்ள, தான் கடத்தப்பட்டது நினைவு வந்தது.
அதாவது யாரையோ பார்த்து ஓடியது, பிறகு எவனோ பிடித்து இழுத்தது வரை எல்லாம் நினைவில் வர, இதயம் படுவேகமாக துடிக்க ஆரம்பித்தது.
“அடப்பாவி அமுதா.. உனக்கு எவன்டா அமுதன்னு பேரு வச்சது? விசம்னு வச்சுருக்கனும். இப்படி கடத்த விட்டு வேடிக்கை பார்க்குறியே?” என்று தனக்குள் அவள் முணுமுணுக்க, “யாழமுதன்னு எங்கப்பா தான் பேரு வச்சாராம்” என்று பதில் வந்தது.
தூக்கிவாரிப்போட, துள்ளி விழுந்து கண்ணை திறந்தாள் கண்மணி. கடத்தியவன் உள்ளூர் ஆளாக தான் இருப்பான் என்று நினைத்து, அவள் தமிழில் முணங்கி வைத்தாள். ஆனால் அதற்கு பதில் தமிழில் வருகிறதே.
பயந்து போய் பார்த்தவளை கவனித்த அமுதன், காரின் உள் விளக்கை போட்டு விட்டு அவளை பார்த்து கண் சிமிட்டினான்.
ஒரு நொடி அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறோமா? என்ற சந்தேகம் வந்தது.
“யாழமுதன் தான?”
“அதுல என்னமா டவுட்டு? அமரா இருக்குமோனா?”
“நீ எப்படி?” என்றவள், இருக்கும் காரை ஒரு நிமிடம் பார்த்து விட்டு, ஒன்றுமே விளங்காமல் விழித்தாள்.
“அதெல்லாம் பெரிய டுவிஸ்ட்டு. இப்ப நீ டயர்டா இருப்ப.. தூங்கு. அப்புறமா சொல்லுறேன்”
“என்னடா நடக்குது?”
“நீ சேஃபா என் கூட இருக்க போதுமா? கொஞ்ச நேரம் தூங்கு. அப்புறம் உனக்கே எல்லாம் புரியும்”
அமுதன் விளக்கை அணைத்து விட, கண்மணிக்கு குழப்பம் தான் மிஞ்சியது. ஆனால் அமுதனை பார்த்ததும் மனம் அமைதியடைந்தது. பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது.
‘ஒரு வேளை கனவா இருக்குமோ?’ என்று யோசித்தவள், அவனை பார்த்தபடி கண்ணை மூடிக் கொண்டாள்.
தூக்கமும் அவள் முயற்சிக்காமலே வந்தது. நன்றாக உறங்கியவளை, அமுதன் எழுப்பினான்.
“எந்திரி.. சாப்பிடலாம்.”
கண்மணி இப்போதும் அவனை திருதிருவென பார்த்து வைத்தாள்.
அமுதனோ காரை விட்டிறங்கி, அவளையும் இறங்க வைத்து அழைத்துச் சென்றான்.
கழிவறை வரை அவளை அழைத்துச் சென்றவன், உள்ளே அனுப்பிவிட்டு வெளியே பாதுகாப்புக்கு நின்றாள்.
தண்ணீரில் முகத்தை கழுவி துப்பட்டாவில் துடைத்துக் கொண்டவளுக்கு, இப்போது தெளிவு பிறந்தது.
‘நாம மயக்கத்துல இருக்கும் போதே காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டானா? கிரேட் தான்’ என்று நினைத்துக் கொண்டு, பெருமையான புன்னகையுடன் வெளியே வந்தான்.
ஒரு மேசையில் அமர்ந்து, வேண்டியதை ஆர்டர் செய்தனர்.
“மணி என்ன?”
“பத்து”
“அதுக்குள்ள என்னை காப்பாத்திட்டியா? கிரேட் மேன்” என்று வெளிப்படையாக பாராட்ட, அமுதனுக்கு சிரிப்பு வர பார்த்தது. அடக்கிக் கொண்டான்.
“உஸ்ஸ்.. இங்க எதுவும் பேசாத” என்று வாயில் விரல் வைத்து காட்டினான்.
சுற்றியும் நிறைய ஆட்கள் இருப்பதால், அவளும் வாயை மூடிக் கொண்டாள்.
அவர்களுக்கான உணவு வர, அமைதியாகவே சாப்பிட்டு முடித்தனர்.
மீண்டும் காரில் ஏறியதும், “என்ன நடந்துச்சுனு சொல்லு” என்று ஆர்வமாக கேட்டாள் கண்மணி.
“அப்ப நீ கார் ஓட்டுறியா?”
“எனக்கு ரூட் தெரியாது”
“அப்ப பேசிட்டே என்னால வர முடியாது”
“ரொம்ப ஓவரா பண்ணாத”
“இப்ப கம்முனு வா.” என்றவன், வேறு எதுவும் பேசாமல் அவளது வீட்டிற்கு சென்றான்.
வாசலில் காரை நிறுத்தியவன், “உன் கூட தங்கியிருக்க பொண்ணு இப்பவும் இருக்குமா?” என்று கேட்டான்.
“இல்ல.. அவ நைட் டியூட்டி தான் பார்ப்பா”
“அப்ப சரி. வா..” என்று அவன் இறங்க, கண்மணி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
“ஹேய் நீ எங்க வர்ர?” என்று கேட்டபடி இறங்க, “உன் வீட்டுக்கு தான். எல்லாத்தையும் பேக் பண்ணனும். நீ பண்ணா லேட்டாகும். சோ வா” என்றவன், அவளை இழுத்துக் கொண்டு லிஃப்டில் நுழைந்தான்.
“எந்த ஃப்ளோர்?”
“நாலு”
பட்டனை அழுத்தியவன், அவள் கையை விடவில்லை.
கண்மணி தன்னிடமிருந்த சாவியில் கதவை திறந்து உள்ளே செல்ல, அமுதனும் உள்ளே சென்று கதவை அடைத்தான்.
கண்மணி கைபையை போட்டு விட்டு அவன் பக்கம் திரும்பி வாயை திறக்க, அவள் பேச நினைத்த வார்த்தைகள் எல்லாம் தொண்டையிலேயே நின்று போனது.
அமுதன் அவளை பேசவிடாமல் இதழை அடைத்திருந்தான்.
சில நிமிடங்களில் விலகியவன், “இனிமே நாம சந்தோசமா கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் கண்சிமிட்டலுடன்.
கண்மணி அமைதியாக அவனை பார்த்தாள்.
“ஓகே.. உன் ரூம் எது? எல்லாத்தையும் பேக் பண்ணலாம்”
கண்மணி அவனை முறைத்துப்பார்த்தாள்.
“இதுவா? அதுவா?” என்று கேட்க, “என்ன நடந்துச்சுனு சொல்லுவியா? மாட்டியா?” என்று பல்லைக்கடித்தபடி கேட்டாள்.
“எல்லாமே முடிஞ்சு போச்சு” என்று சந்தோசமாக கூறினான்.
“எது?”
“என் வேலை தான். இனி ஒழுங்கா போஸ்டிங்க வாங்கிட்டு, கல்யாணம் பண்ணிட்டு ஊர்ல செட்டில் ஆக வேண்டியது தான்”
“அந்த பாபுவ கண்டு பிடிச்சாச்சா?”
“அவன் செத்தே மூணு மணிநேரம் ஆகுது”
“வாட்?” என்று அதிர்ச்சியில் சத்தமிட்டவள், உடனே குரலை தணித்து, “செத்துட்டானா?” என்று கேட்டாள்.
“ஆமா என்கவுண்டர்”
“அப்போ.. என்னை கடத்துனது பாபுவா?”
“இல்ல”
“பின்ன?”
“சொன்னா அடிப்ப”
“அடிப்பேனா? என்ன உளருற?”
“அது வந்து.. உன்னை கடத்துனது என் ஆளுங்க தான்”
ஒரு நொடி தன் காதுகளை நம்ப முடியாமல் நின்றவள், அடுத்த நொடி எதை எடுத்து அடிப்பது? என்று தேட ஆரம்பித்தாள்.
“நோ கண்ணு.. பேச்சு போச்சா தான் இருக்கனும்” என்ற அமுதன் இரண்டடி பின்னால் செல்ல, சோபா குஷன் அவள் கண்ணில் விழுந்தது.
அவள் தூக்கி எறிய, அதுவும் சரியாக அமுதன் மேல் சென்று விழுந்தது. அவனும் உடனே அதை பிடித்தான்.
அடுத்தடுத்து தூக்கி எறிந்தவள், அழகுக்காக வைத்திருந்த ஃபோட்டோ ஸ்டாண்ட்டை தூக்க, அமுதன் பதறியடித்து அருகே வந்தான்.
“அய்யோ அத போட்டு உடைச்சுடாத” என்று பதறியவன், அவள் கையிலிருந்து பிடுங்கினான்.
உடனே அவனது கழுத்தை பிடித்தவள், “என்னை பயமுறுத்திட்டியேடா பாவி” என்றாள்.
அவள் கையை எடுத்து முத்தமிட்டவன், “சாரி..” என்றான்.
“அத தூக்கி குப்பையில போடு. நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? நாலு நாளா வீட்ட விட்டு வெளிய வரல. ஃபுட் டெலிவரி போடக்கூட பயந்துட்டு… பாவி”
அவனை மொத்து மொத்தென்று மொத்தி வைக்க, அமுதன் வாங்கிக் கொண்டான்.
“அடிச்சது போதும். கை வலிக்க போகுது” என்று கூறி அவள் கையை பிடித்தவன், “முதல்ல உன்னை அவனுங்க கடத்திட்டா என்ன செய்யுறதுனு தான் அலார்ட் பண்ணேன்” என்றான்.
“அவனுங்கனா? யாரு அது?”
“அது ஒரு லூசுப்பயலுக. அவனுங்க உன்னை டார்கெட் பண்ணுறாங்கனு தெரிஞ்சதும் தான், அவசரமா ப்ளான் பண்ணோம்”
“என்னை கடத்த சொன்னது அந்த பாபுவா?”
“அவன் இல்ல. ராயுடுனு வேற கேங்”
“அவனுங்க ஏன் என்னை கடத்தனும்?”
“பெரிய கதைமா.. பேக் பண்ணிட்டே பேசலாம். லேட் ஆகிடும்”
“எங்க போறோம்?”
“டெல்லி”
“அங்கயா? எதுக்கு?”
“நமக்கு அங்க தான் கல்யாணம். அப்படியே காஷ்மீர்ல ஹனிமூன்”
“நான் உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன்”
“இந்த பஞ்சாயத்த அப்புறம் பார்க்கலாம். இப்ப வா” என்றவன், அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.
பெட்டியை எடுத்து அவனே அவளது உடைகளை அடுக்க, “நீ எதுவும் சொல்லல” என்றாள் அடம்பிடிக்கும் குழந்தையாய்.
அவளது கன்னத்தில் தட்டியவன், “என்ன தெரியனும் கேளு” என்றான்.
“யாரு அந்த பாபு?”
“அவன நீ தெரிஞ்சு என்னமா செய்ய போற?”
“ஒரு ஆர்வம் தான். எல்லாருக்கும் இருக்குற ஆர்வம் தான். யாருனு சொல்லு”
“அப்படினா சஸ்பன்ஸா சொல்லுறேன்…”
அவனை மேலும் கீழும் பார்த்தவள், “சரி என்னை ஏன் அந்த கும்பல் கடத்துச்சு?” என்று கேட்டாள்.
“இங்க நிறைய கேங் இருக்கு கண்ணு. அதுல பாபு தான் எல்லாருக்கும் டாப். அவன யாரும் பார்த்ததே இல்ல. பத்து வருசத்துக்கு முன்னாடி, போலீஸ் பெருசா ப்ளான் போட்டு அவங்கள அழிக்க பார்த்துருக்கு. கிட்டத்தட்ட அழிச்சுடுச்சுனு தான் சொல்லனும்.
அதுக்கப்புறம் கொஞ்ச நாள் அடங்கி இருந்துருக்கானுங்க. ஆனா திடீர்னு, அந்த மிஷன்ல இருந்த போலீஸ் எல்லாம் வரிசையா சாக ஆரம்பிச்சுருக்காங்க. அப்ப தான் நான் டிரைனிங்ல ஜாயின் பண்ணியிருந்தேன்.
எல்லாருக்கும் என்ன நடக்குதுனு தெரியல. அழிச்ச கேங் எப்படியோ திரும்பி தலை தூக்கியிருக்கு. அதுவும் போலீஸ்குள்ளயே ஸ்பை வச்சு, போலீஸையே அழிச்சுட்டு இருக்கானுங்க.
என்னோட சீஃப்.. அதாவது எனக்கு ட்ரைனிங் கொடுத்தவரு.. இதுக்கு வேற திட்டம் போட்டார். ஸ்பைக்கு பதிலா நாமலும் இன்னொரு ஸ்பைய அவங்க கேங் குள்ள இறக்கனும்.
அதுக்காக சிலர செலக்ட் பண்ணாங்க. நாங்க எல்லாரும் தனித்தனியா அந்த கேங்ல ஜாயின் ஆனோம். எங்க போலீஸ் டிரைனிங்கயே முழுசா மறந்து முழு ரௌடி ஆனோம். அப்படித்தான் அந்த சிகரெட் பிடிக்கிற பழக்கம் கூட எனக்கு செட் பண்ணாங்க.
இத்தனை வருசமா அந்த பாபுவ தான் தேடுனோம். எங்க இருக்கான்னு தெரியல. யாரும் பார்த்தது இல்ல. பேசுனது இல்ல. ஒரு வேளை அப்படி ஒருத்தன் இல்லையோனு கூட டவுட் வந்துச்சு.
ஆனாலும், அவன் எங்கயோ இருக்கான்னு அப்ப அப்ப க்ளூ கிடைச்சது. என் கூட ஒருத்தன் இருப்பான். ராகேஷ். அவன் பாபுவ பார்த்துருக்கதா சொன்னான்.
அவன் டிரக்ஸ் யூஸ் பண்ணுவான். அந்த போதையில அவன் உளறவும், அவன் கூட ரொம்ப க்ளோஸா பழக ஆரம்பிச்சேன். அவன் வீட்டுல கேமரா எல்லாம் செட் பண்ணி வாட்ச் பண்ணி.. ரொம்ப க்ளோஸா வாட்ச் பண்ணேன்”
......
அந்த பாபுவை பற்றிய சிறு விவரம் கூட கிடைக்காததில், எல்லோருமே கடுப்பாக இருந்த நேரம் தான், ராகேஷ் உளறி வைத்தான்.
“பாபு பையா எவ்வளவு நல்ல மனுசர் தெரியுமா? அவரு கிட்ட வேலை செய்யுறது புண்ணியம். பார்க்கும் போது பிரம்மிச்சு போனேன்” என்று அவன் சொல்லி வைக்க, அது போதுமே அமுதனுக்கு?
ராகேஷ்ஷின் உற்ற நண்பன் ஆனான். அவனது போதை பழக்கத்தால், மேலும் மேலும் அவனை உளற வைத்துக் கொண்டே இருந்தான் அமுதன்.
கடைசியாக ராகேஷின் வீட்டை எரிக்கும் முன்பு, பாபு யார் என்று கேட்டு தெரிந்து கொண்டான்.
அதன் பிறகு தான் திட்டத்தை சிறப்பாக வகுத்தான்.
முதல்லில் ராகேஷின் வீட்டை கேமரா வழியாக நன்றாக பார்த்திருந்தவன், அந்த வீட்டை எரிக்கும் முன்பு கேமராக்களை அப்புறப்படுத்தினான்.
வீட்டில் சிலிண்டர் இல்லாததால், வாங்கி வரச் சொன்னான். அவனிடமிருந்த தேவையான தகவல்களை எல்லாம் திரட்டி முடித்தவன், போதை மருந்தை அளவுக்கு அதிகமாக ராகேஷின் உடலில் செலுத்தினான்.
அதிலேயே ராகேஷ் பாதி செத்துக் கொண்டிருக்க, சிலிண்டரை வெடிக்க வைக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் கொடுத்து விட்டான்.
வேலை கச்சிதமாக செய்து முடிந்த செய்தி வந்தது. அவனாகவே, ராகேஷ் வீட்டில் சிலிண்டர் இல்லை என்ற விசயத்தை எல்லோருக்கும் பரவ செய்தான். காவல் துறையினருக்கிடையேயும் கூட பேசி விசயத்தை கசிய வைத்தான். செய்தது காவல்துறையினர் என்று எல்லோரையும் நம்பவும் வைத்தான். விகாஸும் நம்பினான்.
அவனது அடுத்த திட்டப்படி, பாபுவின் கையாள் விகாஸை நேரில் பார்த்தான். ஆனால் விகாஸ் வேறு மாதிரி யோசிக்க, அமுதனும் தன் திட்டத்தை மாற்ற வேண்டியிருந்தது.
என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான், கண்மணியை கடத்த திட்டம் போட்டது ராயுடு குழு. அமரின் விவரங்களோடு, கண்மணியின் விவரங்கள் இணைந்தது. திட்டமும் மாறியது.
தொடரும்.
